நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி விட்டது.
திரைப்படத்துறை வெகுஜன கலையாக வெற்றிக் கண்டதால் அதன் வியாபாரம் முக்கிய உந்துசக்தியாக பல தரப்பினரை அத்துறைக்குள் இழுத்து விட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் திரைக் கலைஞர்கள் தவிர, தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், திரையரங்கு முதலாளிகள், திரையரங்கு நிர்வாகிகள், வேலையாட்கள் என பல நூறு பேர் திரைப்படங்களையே தங்கள் தொழிலாக ஆக்கிக் கொண்டனர். திரைப்படத்துறை என்பது திரையில் மின்னும் நட்சத்திரங்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் மட்டுமல்லாது அவர்களுக்குப் பின்னால் இயங்கும் பல நூறு அடிமட்ட தொழிலாளிகளையும் இணைத்தே இயங்கும் மாபெரும் தொழிற்சாலையாகும். ஆகவே, இன்றைய நவீன வாழ்வியலை இலக்கியமாக படைக்க முயலும் எழுத்தாளனைத் திரைப்படத்துறை பலவிதங்களிலும் கவர்ந்தும் சிந்திக்க வைத்தும் உணர்வுபூர்வமாக சீண்டியும் எழுத்தாளனுக்குச் கச்சாப் பொருளாகப் பயன்படுகின்றது.

ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சிந்தாளு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்கள் தமிழ் நவீன நாவல் கலையின் அரிய முயற்சிகளாக அமைந்தவை. அவை சினிமா எனும் கவர்ச்சியைப் பயனீட்டாளராகவும் உற்பத்தியாளராகவும் இருவேறு கோணங்களில் அணுகி விமர்சித்தவை. அதன் தொடர்சியாக பெருமாள் முருகன் எழுதியிருக்கும் ‘நிழல் முற்றம்’ நாவல், திரைப்படத்தை வியாபார விளைப்பொருளாக கொண்டு ஜீவனம் நடத்தும் அடிமட்ட மக்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதன் ஊடாக மனித மனங்களின் சுயநலத்தையும் எளியோரைத் தயங்காது சுரண்டும் ஆதிக்க குணத்தையும் காட்டுகின்றது.
திரைப்படத்துறை என்பது வெளித்தோற்றத்தில் கலையாம்சம் நிறைந்த ஒரு துறையாக இருந்தாலும் அதை முன்னின்று நகர்த்துவோர் பெரும் வியாபாரிகளாவர். இலாபத்தை மட்டுமே முதல் நோக்கமாக கொண்டு இயங்கும் அவர்களின் வியாபார நுணுக்கங்களில் உழைப்புச் சுரண்டலும் உள்ளடங்கும். திரைப்பட துறையின் மேல் மட்டங்களில் மட்டுமின்றி அடிநிலை வரை சுரண்டலுக்குள்ளாவோர் நிறைந்துள்ளனர். ‘நிழல் முற்றம்’ நாவல் ஒரு சிறுநகரில் இயங்கும் விஜயா தியேட்டர் எனும் ‘படக்கொட்டாய்’ ஐ மையமாக கொண்டுள்ளது. ஆயினும் திரைப்படம் எனும் வெளிச்சத்தைப் பொருட்படுத்தாமல் அதன் இருண்ட நிழல் விழும் பகுதிகளை இந்நாவல் காட்டுகின்றது.
‘நிழல் முற்றம்’ எனும் தலைப்பு இந்நாவலின் மொத்த உள்ளடக்கத்தின் குறியீடு. ஆதரவற்று சுற்றித்திரியும் விடலைகளுக்கு இரண்டு வேலை உணவும் சொற்ப உல்லாசத்தையும் கொடுத்து உடலுழைப்பைக் கோரும் ஒரு தற்காலிக இடம் எனும் பொருளில் இத்தலைப்பு மிகச் சரியாக பொருந்தி போகின்றது. அந்தத் திரையரங்கின் முதலாளி பூசாரியப்பன், முன்னர் சில்லரை வியாபாரங்கள் தொடங்கி பெருவியாபாரங்கள் வரை செய்து பணம் ஈட்டிய ஒரு வியாபாரி. ஆனால் சினிமா நாட்டமோ கலை ஆர்வமோ அற்றவர். பொதுவில் கூசாமல் ஆபாச வசைகளைக் கொட்டிக் கொண்டிருப்பவர். அதன் காரணமாகவே தன் சொந்த அரங்கிலும், அவர் ஒரு திரைப்படத்தைக் கூட முழுமையாகப் பார்த்ததில்லை. கதவோரம் நின்று படங்களின் சில்மிச முன்னோட்டத்தை மட்டும் பார்த்து அவர் நிறைவடைந்து கொள்கிறார். அதைவிட அவர் அந்தத் திரையரங்கைத் தொடங்கிய கதை சுவாரஸ்யமானது.
ஒரு நிர்வாகியின் மேற்பார்வையில் இயங்கும் அந்தத் திரையரங்கில் டிக்கெட் கிழிப்பது, சைக்கில் அடுக்கி காவல் இருப்பது, சோடா பாட்டில், சிற்றூண்டிகள் விற்பது என பல வேலைகளைக் குறைந்த ஊதியத்திற்கும் கமிஷன் லாபத்திற்கும் பதின்ம வயதினரே செய்கின்றனர். சக்திவேலன், கணேசன், மணி, பூதன், நடேசன், விசுவன் என ஐந்தாறு பதின்ம வயது இளையோர் வேலை செய்யும் இடமாக விஜயா தியேட்டர் விளங்குகின்றது. ‘நிழல் முற்றம்’ குடும்பம் அற்ற அந்த இளையோரின் வாழ்க்கையை மையப்படுத்திய ஒரு நாவல். தவிர பலகாரக் கடை போட்டிருக்கும் கிழவி, பீடா கடைகார், தேநீர் கடை வைத்திருக்கும் மலையாளி, திரையரங்க மேனஜர், முதிய காவலாளி, தன் வாடிக்கையாளர்களுடன் திரையரங்குக்கு வரும் பாலியல் தொழிலாளி கருவாச்சி, திரைப்பட ரீல் சுருள்களை ஒவ்வொரு தியேட்டராக எடுத்துச் சென்று அலைந்து கொண்டிருக்கும் ‘படத்துக்காரன்’ போன்ற பல உதிரி மனிதர்களின் வாழ்க்கையும் விஜயா தியேட்டருடனேயே பிணைந்துள்ளது.
அச்சிறுவர்களை அங்கு கொண்டு வைத்திருப்பவர் அந்தத் திரையரங்கை ஒட்டி வியாபாரம் நடத்தப்படும் சோடா கடை முதலாளி. அவரும் திரையரங்க முதலாளியை ஒத்த குணம் உடையவர்தான். வியாபார லாபம் ஒன்றையே குறியாக கொண்டவர். அந்தச் சிறுவர்கள் சில நேரங்களில் சோடா கடையிலும் சில நேரங்களில் திரையரங்கிலும் மாறி மாறி வேலை செய்கின்றனர். முதலாளிகளுக்குள் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம் அது. அச்சிறுவர்கள் இரவில் திரையரங்கின் ஏதாவது ஒரு மூலையில் சுருண்டு படுத்து இரவைக் கடந்துவிடுகின்றனர். குடும்ப அரவணைப்போ ஆதரவோ இல்லாமல் பக்கத்து கிராமங்களிலிருந்து வாழும் வழிதேடி நகருக்கு வந்த அச்சிறுவர்கள், சிறுவர்களுக்கான வாழ்க்கையை முற்றாக தொலைத்து புகை, மது, கஞ்சா என எந்தக் கட்டுப்பாடுமின்றி வாழ்கின்றனர். தங்களின் சம்பளத்தில் ஒரு வேலையாவது வயிறு நிறைய உண்பதும் பீடிக்கோ, கஞ்சாவுக்கோ பணத்தைச் செலவிடுவதிலும் அவர்களின் வாழ்க்கை நகர்கின்றது. குடும்ப உறவுகளில் அவர்கள் அனுபவம் கசப்பானது. சின்ன சின்ன திருட்டுகளைச் சாகசம் போல செய்வதில் அவர்கள் மகிழ்கிறார்கள். மூரட்டுத்தனமும் அசாத்திய துணிச்சலும் கொண்டே அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றனர்.
இச்சிறுவர்களில் நடேசன் சற்றே நிதானமானவனாகவும் அன்பானவனாகவும் இருக்கிறான். சக்திவேலனை வேறொரு திரையரங்கத்திலிருந்து விஜயா அரங்கிற்குக் கூட்டிவந்தவன் அவன்தான். அந்த நட்பின் காரணமாக அக்கூட்டத்தில் சக்திவேலனும் நடேசனும் மட்டும் இணையாக சுற்றிவருகின்றனர். துடுக்குத்தனமும் உளக்கொந்தளிப்பும் கொண்ட சக்திவேலனுக்கு நடேசனின் துணை பெரிதும் உதவுகிறது.
சக்திவேலனின் தந்தை ஒரு தொழுநோயாளி என்பதை அவன் மற்றவர்களிடம் மறைத்தே வைத்திருக்கிறான். அதை ஒரு அவமானமாக மற்றவர்கள் நினைப்பார்கள் என்பதைவிட அந்த நோயின் காரணமாக தன்னையும் மற்றவர்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்ற அச்சமே அவனைப் பெரிதும் தடுக்கின்றது. அவரிடமிருந்து விலகியிருக்கவே அவன் பல இடங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றான். ஆயினும் அவன் செல்லும் இடமெல்லாம் தேடிச் சென்று அவர் தன் அன்பைப் பொழிந்தாலும் அவனின் வெறுப்பையே எதிர்கொள்கிறார்.
நடேசனும் தன்னைத் தேடி வரும் பாட்டியைக் கடுமையாக திட்டி விரட்டுகிறான். சில நேரங்களில் அவன் தன் பாட்டியை நினைத்துக் கொண்டாலும் அவர் பணம் கேட்கும் தருணத்தில் கடும் சீற்றம் கொள்கின்றான். இவர்களின் உலகம் மிக வெளிப்படையானது. ஒளிவு மறைவு இல்லாதது. உணர்ச்சிக் கொந்தளிப்பும் ஆவேசமும் நிறைந்தது. பொது சமூகத்தில் சிறுவர்களுக்கு ஆதரவாக இருக்கும் குடும்பம் இவர்களுக்குச் சுமையாகவும் வெறுப்பூட்டுவதாகவுமாக இருக்கிறது.
அச்சிறுவர்களுக்கு வாழ வழி செய்து கொடுத்திருக்கும் திருப்தியும் பெருமிதமும் சோடா கடை காரருக்கு எப்போதும் இருக்கின்றது. அந்தப் பெருமிதமே அவர்கள் மேல் அத்துமீறல்களைச் செய்ய வைக்கின்றது. அவர்களைத் தன் உரிமை பொருள் போல பயன்படுத்த அவர் எந்தக் குற்றவுணர்வும் கொள்வதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் சோடா கடை முதலாளி தன் சொந்தப் பிரச்சனையைத் தீர்க்கத் தீட்டும் திட்டத்திற்கு இச்சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். மிக லாவகமாக தன் மகன் அந்த ரகளையில் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும் அவர் அச்சிறுவர்களை பரோட்டாவிற்கும் சாராயத்திற்கும் ஆசை காட்டி சிக்க வைக்கின்றார். அதில் நடேசன் பலியாகின்றான். முதலாளியின் உள்நோக்கம் எதுவும் புரியாத அந்தச் சிறுவர்கள் அவர் தரும் பரோட்டாவுக்கும் சாராயத்துக்கும் ஆசைப்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
நடேசனை இழந்த சக்தி தன் தனிமையை மேலும் உணர்கின்றான். கஞ்சா பழக்கத்திற்கு மேலும் அடிமையாகி எப்போதும் மயக்க நிலையில் இருக்கின்றான். அப்போது சோடாக் கடையில் ஒரு திருட்டு சம்பவம் நடக்கிறது. சக்தியின் காலணி திருட்டை ஒரு சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியாக வரவேற்று அந்தச் செருப்புகளைத் தானே எடுத்துக் கொண்ட அவர் தன் கடையில் நடந்த திருட்டுக்கும் சக்திதான் காரணமாக இருப்பான் என நினைக்கிறார். ஆகவே அவனைத் தாறுமாறாக வசை பாடித் தாக்குகிறார். பிறகு அந்தத் திரையரங்கின் முதிய காவலாளியின் மேல் சந்தேகப்பட்டு ஈவு இரக்கம் இன்றி அவரை அடித்து விரட்டுகிறார்.
அதற்கு மேல் சக்திக்கு அங்கிருக்க விருப்பம் இல்லாமல் போகின்றது. ஆனால் அவனை சோடாக் கடைக்காரரிடமிருந்து விலகிச் செல்ல நினைத்தாலும் ஏதோ ஒரு மனத்தடை அவனைத் தடுக்கின்றது. அவன் என்ன முடிவு எடுத்திருப்பான், அதன் விளைவு என்பது சொல்லப்படவில்லை. ஆனால் அதை வாசகன் அனுமானித்துக் கொள்ள எல்லா வாய்ப்பும் உண்டு.
விஜயா தியேட்டரை மையமாக கொண்டு இயங்கும் இச்சிறு சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்ல பெருமாள் முருகன் இந்நாவலில் மொழி சார்ந்தோ காட்சி சார்ந்தோ எந்தச் சமரசமும் செய்து கொள்ளவில்லை. சமூகத்தில் கெட்ட வார்த்தைகள் என ஒதுக்கப்படும் சொற்கள் அதே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இம்மக்களின் உரையாடலில் சகஜமாக புழங்குவதை ஒர் எதிர்விணையாகவே பார்க்க முடிகின்றது.
அதே போல காட்சி சித்தரிப்பில் துள்ளிய விவரணைகள் சேர்த்தே கதையை நகர்த்தியுள்ளார். எடுத்துக்காட்டாக,
//….பூதனும் சத்தியும் கம்பிப் பெட்டிகளில் சோடாவை எடுத்து அடுக்கினார்கள். கூட்டம் நிறைவதைக் கண்டு சக்திவேல், ஒரு டஜன் பெட்டியிலும் அரை டஜன் பெட்டிகள் இரண்டிலும் அடுக்கிக் கொண்டான். ஒரு பக்கத் தோளில் ஒரு டஜன் பெட்டியை வைத்துக் கொண்டு கையில் அரை டஜன் பெட்டியைத் தூக்கிக் கொள்வான். அடிக்கடி ஓடி வர முடியாது. கடை நீளவாக்கில் ஒரு பஸ்ஸைப்போல இருந்தது. மூலையில் மிஷின், கேஸ் கம்பம் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து சுருண்டு வளைந்து ஒயர்கள் மிஷினில் வந்து பொருந்தின. மிஷினில் மூன்று பாட்டில்களை வைத்துச் சுற்றலாம், முத்து கலர் பாட்டில்களை வைத்துச் சுற்றி குண்டடைத்துக் கொண்டிருந்தான்….//
ஆனால், கதையின் உச்சமான இடங்களில் மிகப் பெரிய இடைவெளியை விட்டு விட்டு எழுத்தாளர் ஒதுங்கிக் கொள்வது வாசிப்பில் கனம் சேர்ப்பதோடு வாசகனின் கற்பனையைப் பல திசைகளுக்குக் கொண்டு செல்கிறது. எடுத்துக்காட்டாக, நாவலின் முதல் அத்தியாத்தை எந்தக் கதாப்பாத்திரத்தோடும் தொடர்புப்படுத்தாமல் விட்டிருப்பதைக் கூறலாம். அதே போல பல இடங்களில் காட்சிகளை விரிவாக விளக்குபவர் நடேசனுக்கு என்ன ஆனது என்பதை முற்றிலும் தவிர்த்திருக்கிறார். அவ்வாறான இடைவெளி கதையில் அதீத அழுத்தம் சேர்க்கிறது.
உதாரணமாக, இந்நாவலின் தொடக்கம் பசியிலும் கிட்டத்தட்ட மரணத்தின் வாசலிலும் நிற்கும். ஒரு மனிதனின் வதையைச் சித்தரிப்பதோடு முடிந்துவிடுகின்றது. அந்த மனிதன் இதே திரையரங்க வாசலில்தான் கிடக்கின்றான். ஆனால் அவன் யார் என்பது விளக்கப்படவில்லை. நாவலை வாசித்து முடித்தவுடன் அந்த மனிதன் சக்திதானோ என்ற எண்ணம் எழுகின்றது. ஆனால், சற்றே கூர்ந்து கவனித்தால் அவன் சக்தியாகவோ காணமல் போன நடேசனாகவோ அல்லது பூதனாகவோ கூட இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. தன் மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கி போராடிக் கொண்டிருக்கும் அவன் யாரோ ஒரு முதலாளியால் சுரண்டப்பட்டு, சுற்றத்தாலும் கைவிடப்பட்ட ஒரு மனிதன்தான் என்ற திறப்பு கிடைக்கும் போது மொத்த நாவலுமே சமூக சுரண்டலின் குறியீடாகிவிடுகின்றது. இந்நாவலின் முழு வீச்சையும் அதன் வழி புரிந்து கொள்ள முடிகின்றது.
நவீன தமிழ் நாவல்கள் பல முகங்கள் கொண்டவை. அவற்றின் தொழில்நுட்பமும் பல வகையானது. விவசாய மக்கள், நகர்புற தொழிலாளர்கள், அக்ரஹாரங்கள், கூலி தொழிலாளிகள், சிறுபான்மையினர், பாலியல்தொழிகலாளிகள், புறநகர் ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்படுவோர் என பல தரப்பு மக்களையும் முன்னிருத்தி அவர்களின் வாழ்க்கையையும் சமூக சிக்கல்களையும் அவை தீவிரமாக பேசுகின்றன. அவ்வாறான அழுத்தமான யதார்த்தவியல் நாவல்களின் வரிசை நீளமானது. தனித்துவமான கதை களத்தாலும் வெளிப்படையான கதை கூறல் முறையாலும் பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ நாவலும் அந்த வரிசையில் இடம்பெருகின்றது.
