மூர்த்தி எனும் சிறுவன்

‘தொலைந்தது எதுவென்றே

தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்…’

என்ற யுவனின் இந்தக் கவிதை வரியைத் தொடக்கத்தில் வாசிக்கும்போதெல்லாம் நிலையற்ற தேடலின்மை, இலக்கற்ற வாழ்க்கை, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என சில நேரங்களில் எனக்குள் எழும் எண்ணங்களே நினைவில் வருவதுண்டு. எதை தேடிப் பயணிக்கின்றோம், எதை அடைகின்றோம், இதற்கிடையில் எழும் சவால்களைக் கண்டு துவண்டு போகுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம் வாழ்க்கையை நிறங்களற்றதாக மாற்றிவிடுகின்றது. ஆனால், இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு உணர்த்தி, நம்மைத் தொடர்ந்து செயல்பட வைப்பது நாம் வாசிக்கும் நூல்களும் நம்முடன் வாழும் ஆளுமைகளும்தான். நவீன வாழ்க்கையில் சிதறிக்கிடக்கும் மனநிலையை இழுத்துப்பிடித்து கோர்த்து முடிப்பது அவ்வாறான மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்தான். அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஒருவர்தான் பி. எம். மூர்த்தி.

மலேசியாவில் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தைப் பள்ளி மாணவர்களுக்கிடையிலும் இளைஞர்களுக்கிடையிலும் நிலைபெறச் செய்ய போராடி வெற்றியடைந்தவர்தான் பி. எம். மூர்த்தி. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் பங்களிக்கும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விருதான வல்லினம் விருது இவ்வாண்டு பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு பி. எம். மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நேர்காணலின்போது, அவர் பொது வாழ்க்கையில் ஆற்றிய பங்கினை, மேற்கொண்ட முயற்சியை உணர்வுப்பூர்வமாக என்னுடன் பகிர்ந்து கொண்டார். அச்செயல்களை உய்த்துணரும்போதே அவருக்குள் எழுந்த உற்சாகம் எனக்குள்ளும் பாய்ந்தது. வாழ்க்கையில் எழும் சிறு சிறு இடர்களையும் கண்டு துவண்டு போகும் எனக்கு அவரின் ஆற்றல் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

பி. எம். மூர்த்தி அவர்கள் தமது சிறுவயதிலிருந்தே பொது பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். 1970இல், தமது 10 வயதில் அவருக்குள் முளைத்த அம்முயற்சிதான் இன்று வேரூன்றி விருட்சமாக மாறியுள்ளது. இந்த நேர்காணலின்போது ஒரு 10 வயதான சிறுவனுக்குள் இருக்கும் உற்சாகமும் ஆற்றலும் துருதுருப்பும் எங்கும் குன்றாமல் மூர்த்தி அவர்களின் பேச்சில் நான் கண்டேன். அந்தச் சிறுவனுக்குரிய உற்சாகமும் ஆற்றலும் துருதுருப்பும்தான் மூர்த்தி அவர்களைத் தொடர்ந்து இயக்கி, செயலாற்ற வைத்துள்ளது என்பதனை என்னால் உணர முடிந்தது.

ஒரு சமூகத்தில் தனித்து நின்று செயலாற்றும் ஒருவரின் மீது ஏற்றப்படும் அழுத்தம் என்பது மிக மூர்க்கமானது, சவாலுக்குரியது. அவ்வழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், அதனை மன தைரியத்துடனும் செயலூக்கத்துடனும் கடக்கும் ஒருவரால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து பெருஞ்செயல்களைச் செய்ய இயலும். அவ்வகையில், மூர்த்தி அவர்கள் சமூகத்தில் தனித்து நிற்பதற்குக் காரணமாக இருப்பது அவரின் செயலூக்கம்தான். தமது இளமை பருவத்திலிருந்தே தனது கல்விக்காகவும் தன்னைச் சூழ்ந்துள்ளவர்களின் கல்விக்காகவும் செயலாற்றியவர் மூர்த்தி.

1977ஆம் ஆண்டு, தமது 17வது வயதில் தான் வசித்த தோட்டத்தில் நூலகம் அமைப்பதே அவரின் முதல் பொது பணியாக இருந்துள்ளது. அந்த 17வது வயதில் நூலகம் அமைத்ததோடு அந்நூலகத்திற்கான நூல்களையும், பொருட்களையும் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் தேடி அலைந்து, சுங்கை பொங்கோ தோட்டத்தில் உள்ள பிள்ளைகளுக்குக் கல்வி கற்பதற்கான இட வசதியை உருவாக்கித் தந்தார். அதே உற்சாகத்துடன், 1979இல் தமது இளமை பருவத்தில் ‘குமுரா’ என்ற இயக்கத்தை அமைத்து, 4 தோட்டத்து மாணவர்களுக்கு மோட்டரிலே சென்று பாடம் கற்பித்தார். இளமை பருவத்தில் துளிர்விட்டிருந்த அச்செயல்கள்தான் பின்னர் அவரை எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் நிலைத்து நிற்பதற்காகப் போராட வைத்தது.

1998ஆம் ஆண்டு தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய மூர்த்தி 1999ஆம் ஆண்டு தொடங்கி எஸ். பி. எம் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தைப்பூசத்தின்போது துண்டு பிரசுரம் வழங்குதல், தேர்வு வழிகாட்டி நூல் தயாரித்தல், இலவச இலக்கிய பாடநூல் திட்டம் என பல முயற்சிகளை மேற்கொண்ட இவரின் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், மூர்த்தி அப்புகார்களைக் கண்டு அஞ்சாமல், துவண்டு போகாமல் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டார். மறைமுகமாக வந்த எதிர்வினைகள் அனைத்தையும் கண்டு தமது இலக்கிலிருந்து பின்வாங்காமல் அவ்வெதிர்வினைகளை அறிவூப்பூர்வமாகக் களைத்து 2000ஆம் ஆண்டில் ‘இலக்கியகம்’ எனும் அமைப்பின் வழி மேலும் மும்முரமாக செயலாற்றினார். அவருடைய இச்செயலூக்கம் இன்றைய தலைமுறையினருக்கும், எதிர்க்காலத்து தலைமுறையினருக்கும் கட்டாயம் ஒரு முன்னுதரணமாக விளங்கும்.

இலக்கோடு செயலாற்றும் இளைஞர்கள் மூர்த்தி அவர்களை முன்னுதாரணமாக கொண்டு கண்டிப்பாகச் செயலாற்றலாம். இன்றைய காலக்கட்டத்தில் இளையோர்கள் பலர் இலக்கோடு பயணித்தாலும், அந்த இலக்கை விரைவில் அடையவே எண்ணங்கொள்கின்றனர். இதனால், அவர்களுடைய இலக்கை அடையும் பாதையில் எழும் எதிர்வினைகளைக் கண்டு விரைவில் துவண்டு போய் விடுகின்றனர். அதோடு, அவர்கள் நினைத்த இலக்கைக் குறுகிய நேரத்தில் அடைய இயலாமல் போனால், அச்செயலிலிருந்து விரைவில் தங்களைத் துண்டித்துக் கொள்ளும் பழகத்தையும் காண முடிகிறது. ஆனால், மூர்த்தி அவர்களின் ஊக்கத்தை ஒரு கணம் உணரும்போது நமக்குள் எழுகின்ற எதிர்வினைகள்கூட உற்சாகமாகவும் விவேகமாகவும் மாறிவிடும்.  எந்தவொரு வெற்றியாக இருந்தாலும் அதனை நாம் விரைவில் அடையப்போவதில்லை; நம் இலக்கில் தீவிரமாகவும் ஊக்கத்துடனும் செயலாற்றினால் அதற்கான பலன் நம்மைக் கண்டிப்பாக வந்தடையும் என்பதை மூர்த்தியின் வாழ்க்கை பயணத்தின் வழி நாம் உணர்ந்திடலாம்.

தொடர்ந்து, மூர்த்தியின் பொது செயல்பாடுகளில் என்னைக் கவர்ந்த மற்றொரு பகுதி அவரின் கூட்டு முயற்சி. ஒரு சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர கூட்டு முயற்சியென்பது மிக அவசியம். தனி நபரால் கொண்டு வர முடியாத மாற்றத்தைக் கண்டிப்பாகக் கூட்டு முயற்சிகள் கொண்டு வரும். அக்கூட்டு முயற்சிக்குத் தேவை ஒரு விவேகமான வழிகாட்டிதான். மூர்த்தி ஒரு குழுவமைத்து அதற்குச் சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார். மூர்த்தி தமது பால்யக் காலத்திலிருந்தே குழுவோடு செயலாற்றும் ஒருவர். குழு அமைத்து, அதற்கு வழிகாட்டியாகவும் இருந்து பல நல்ல மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டு வந்துள்ளார். உதாரணமாக, ‘குமுரா’ எனும் இயக்கத்தின் வழி தோட்டத்து பிள்ளைகளுக்கு மத்தியில் கல்வியின் அவசியத்தை உணர வைத்தார். அதோடு, எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத்தை மலேசியாவில் நிலைநாட்ட 1999ஆம் ஆண்டில் ‘eagle lit’, 2000ஆம் ஆண்டில் ‘இலக்கியகம்’ எனும் குழுக்களின் அமைப்பின் வழி வெற்றியடைந்தார்.  

1986ஆம் ஆண்டு ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய மூர்த்தி அவர்கள் மாணவர்களுக்குத் தேவைபடும் நூல்கள், எழுதுகோல்களை வாங்க பெற்றோர்களிடம் சிறுக சிறுக பணம் திரட்டினார். அதற்காக அவர் கூட்டறவு நிதி சங்கத்தின் கிளை ஒன்றை ரெஞ்சோக் தோட்டத்தில் உருவாக்கினார். நம்மால் தனியாளாகச் செய்து முடிக்க இயலாத எத்தனையோ நற்செயல்களைக் கூட்டு முயற்சியின் வழி நாம் செய்து நன்மையடைய இயலும் என்பதற்குச் சான்றாக மூர்த்தியின் செயல்கள் அமைகின்றது.

கூட்டத்தோடு செயல்படுத்தப்படும் எல்லாம் முயற்சியும் வெற்றியடைவதில்லை. சரியான நோக்கமும் இலக்கும் தலைமைத்துவமும் வழிகாட்டலும் மட்டுமே கூட்டு முயற்சிக்குப் பலனைக் கொடுக்கும். அதோடு, மூர்த்தி அவர்கள் தன்னலமின்றி, தமது குழுவில் உள்ள மற்றவர்களின் ஆளுமையைக் கண்டடைந்து அவர்களுக்கான பணிகளைக் கொடுத்து பொதுவில் அவர்களை உயர்த்தி மகிழ்ச்சியடையும் மனம் கொண்டவர். தானும் உயர்ந்து மற்றவரையும் உயர்த்தி அழகு பார்ப்பவர் மூர்த்தி. தனிமை, சுயநலம், அதிகாரத்துவம் என மழிந்து கிடக்கும் இவ்வுலகில் மூர்த்தி போன்றோரின் ஆளுமை நமக்குக் குழு முயற்சியோடு மனிதநேயத்தையும் உணர வைக்கின்றது.

மேலும், தொடக்கத்தில் நான் குறிப்பிட்டது போல மூர்த்தி அவர்களுக்குள் இயங்கும் சிறுவனின் துருதுருப்பையும் உற்சாகத்தையும் மூர்த்தி அவர்களின் சிந்தனையிலும் காணலாம். வாழ்க்கையின் இன்னல்களை, உச்சத்தை உணர்ந்திடாத சிறுவனிடம் அவனின் ஆசைகளைக் கேட்டால், அவன் எல்லைகளைத் தொட இயலாத ஆசைகளையும் கனவுகளையும்தான் கூறுவான். சில பிள்ளைகள் அந்த எல்லையில்லா ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் சிறகை வைத்து அதன் உச்சத்தை அடைகின்றனர்; சிலர் காலப் போக்கில் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இந்த இரண்டு ரகத்தில் மூர்த்தி முதல் ரகத்தைச் சேர்ந்த சிறுவனின் எண்ணத்தைக் கொண்டவர் என்றே கூறலாம்.

மூர்த்தி அமைத்த நூலகம்

தமது 17வது வயதில் அவர் வசித்த சுங்கை பொங்கோ தோட்டத்தில் உள்ள மெனஜர் “உனக்கு என்ன வேண்டும்?” என கேட்டதற்கு நூல்நிலையம் வேண்டும் என்று கூறியவர் மூர்த்தி. அந்த வயதில் நாம் எதை வேண்டுமென்றாலும் கேட்டிருக்கலாம் ஆனால், நூல்நிலையம் தன் கல்விக்கு மட்டுமல்ல மற்ற தோட்டத்து பிள்ளைகளின் கல்விக்கும் உதவும் என்ற நோக்கில் அவர் நூல்நிலையம் கேட்டது அவரின் உயர்வெண்ணத்தை உணர்த்துகின்றது. அதோடு, எஸ்.பி.எம் இலக்கிய பாடத்தைத் தேர்வு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த அவர் ‘300 முதல் 3000’ எனும் திட்டத்தை முடித்த பின்னரே, 3000 முதல் 5000 மாணவர்கள் அப்பாடத்தைக் கற்க வேண்டும் என எண்ணங்கொண்டு செயலாற்றினார். அவருடைய இந்த எண்ணத்திற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்து வெற்றியுடம் அடைந்தார். தேர்வு பாடத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய இடத்தில் இருந்த தமிழ் இலக்கியப் பாடம், 5000 மாணவர்களால் தேர்வு பாடமாகக் கற்கப்பட்டது. இது ஓர் எளிதான செயல் அல்ல. ஆனால், இச்செயல் சாத்தியப்பட்டதற்குக் காரணம் அவரின் செயலாற்றலும் உயர்ந்த சிந்தனையும்தான். நம்மிடம் உயர்ந்த சிந்தனையோடு அதனை அடைவதற்கான செயலூக்கமும் இருந்தால் கண்டிப்பாக நாமும் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

பணி ஓய்வுக்குப் பின்னர்கூட மூர்த்தியின் செயல்கள் ஓயவில்லை. 2020ஆம் ஆண்டு PMM Publications எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கான தொடர் நாவலை அச்சிடும் முயற்சியில் மூர்த்தி இறங்கினார். ஆனால், கோவிட் காலகட்டத்தினால் அந்நூல்களை விற்க இயலவில்லை. பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விற்க முனைந்தபோது மூர்த்தியால் பள்ளியில் வியாபாரம் செய்ய இயலவில்லை. ஆக, நூல்களை இலவசமாகவே பள்ளிகளுக்குத் தந்தார். வியாபாரியாகத் தோல்வியடைந்தாலும் சிறுவர்களுக்கான தொடர் நாவலை அச்சிட்டு வெளியிடும் முயற்சியை அவர் நிறுத்தாமல் அதற்கான செயலில் தொடர்ந்து காட்டாறு போல் ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றர்.

பி.எம். மூர்த்தி தமது பொது வாழ்க்கையில் ஆற்றிய ஒவ்வொரு செயல்களும் மகத்தானவை. அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இருந்த அடிப்படை வசதிகளைக் கொண்டே அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு தமது இலக்கை அடைந்துள்ளார். 20 வயதில் ‘சுங்கை பொங்கோ நூல்நிலையம்’ என எழுதும்போது அவர் கண்களில் இருந்த உற்சாகம், இன்னும் அவரின் விழிகளில் உள்ளது. அந்த உற்சாகமும், துருதுருப்பும், ஊக்கமும்தான் அவரை இன்னும் உயிர்ப்பாக வைத்திருந்து கல்விச் சூழலில் மாற்றத்தைக் கொண்டு வர வைத்தது. அந்தச் செயல்களை உய்த்துணரும்போதே நாமும் செயலூக்கத்தோடு செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...