‘மாதொருபாகன்’ நாவல் பிறழ் உறவு கொண்ட மனித மனத்தைக் கூர்மையாக ஆராய்கிறது. பிறழ் உறவு சமூகத்தின் நெறி முறைகள், மரபுகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. எது சரி, எது தவறு என்ற விவாதத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் நம்மை நாமே நம்முடைய சொந்த நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனைச் செய்யத் தூண்டுகிறது.

‘மாதொருபாகன்’ நாவலின் பின்னணி பாலியல் ஒழுக்க மீறல் மற்றும் காலகாலமாக உள்ள சமூக மரபுகளைப் பற்றிக் கேள்வி எழுப்புபவையாக அமைந்திருக்கிறது. ஆழுள்ளத்தின் அதிர்வுகள் மூலம் துன்பப்படும் ஒரு பெண்ணின் அசாதாரண முடிவுகளைப் பிண்ணி இருப்பதாக நாவல் முடிகிறது. சமூகத்தில் உள்ள இரட்டை நெறி, பாலின சமமின்மை மற்றும் பெண்ணின் உடல் மன சுதந்திரம் பற்றிய குறைவான புரிதல் ஏற்படும்போது அவர்கள் மீதான பாலியல் ஒழுக்கம் சம்பந்தமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நீண்ட காலமாக சமூகக் கட்டுப்பாடுகளும், எதிர்பார்ப்புகளும் பெண்களின் மீது கற்பு, ஒழுக்கம் என்ற விழுமியங்களைக் கட்டமைத்து வைத்துள்ளன. அந்த விழுமியங்களைத் தக்க வைத்தலுக்கும் விடுபடுதலுக்குமான ஊடாட்டமே நாவலின் முடிவு.
திருச்செங்கோடு மலையில் நடைபெறும் நோம்பித் திருவிழா ஒன்றில், குழந்தை வரம் வேண்டி, குழந்தை இல்லாத பெண்கள் ஒரு நாள் மட்டும் பிற ஆண்களுடன் உறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இது ஒரு பழமையான நம்பிக்கையாகவும், வேறு வழியில்லை என்ற நிலையில் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும் கருதப்படுகிறது. இந்தச் செயல் ஒரு சடங்காக பார்க்கப்படுவதோடு, கடவுளின் அருளைப் பெற உதவும் என்றும் நம்பப்படுகிறது. பல வழிகளில் முயன்றும் பலனளிக்காத நிலையில், பொன்னாவின் பெற்றோர் இதை இறுதியான நம்பிக்கையாகக் கருதுகின்றனர். சமூகத்தில் ஏற்படும் அவமானம் என்பது நச்சுக்காற்றில் மூச்சுத் திணறி இறப்பதற்கு ஒப்பானதல்லவா.
‘மாதொருபாகன்’ நாவலில் ஆரம்பமும் முடிவும் பூவரச மரத்தில் அமைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. மண்ணையும் மனைவி பொன்னாவையும் கட்டி ஆள்பவன் தான் குடியானவன் காளி. இயல்பாகவே ஆணாதிக்க சிந்தனையும் தன்னுடமை உணர்வின் வெளிப்பாடாக தளர்வடையாதக் குணங்களின் ஆட்டத்தை அவன் தொடர்ந்து பொன்னாவிடம் விளையாடிய வண்ணம் இருக்கிறான். பொன்னாவைத் தாங்கிப் பிடிக்கும் கணவனாக இருந்தாலும் அதைத் தக்க வைக்க அவன் பெறும் பாடுப்படுகிறான். பொன்னாவின் மீதுள்ள உடல் இச்சை, காமம் இதெல்லாம் மட்டும் போதுமா ஒரு பெண்ணை இறுதி வரை தன் பிடியில் நிறுத்த. யாருடைய மலட்டுத் தன்மையால் (இயலாமையினால்) குழந்தை பிறக்கவில்லை என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தில் மறைந்து பதுங்கி விளையாடுகிறான் காளி. வாரிசு இல்லாததால் அனைவரின் கேள்விகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ள காளி தான் உருவாக்கிய தொண்டுபட்டியை விட்டு வெளியே வரத் தயங்குகிறான்.
காளி இரண்டாம் மணமும் வேண்டாம் என மறுக்கிறான். அதற்கான காரணங்களை உடனுக்குடன் அவன் மனம் கண்டறியத் தவறவில்லை. முதலில் பொன்னாவின் மீதுள்ள அன்புதான் காரணம் என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும், அதில் வேறொரு சிக்கலும் புதைந்து கிடப்பதை உணர்கிறான். மீண்டும் செய்யும் திருமணத்திலும் பிள்ளை பிறக்கவில்லை என்றால் எத்தனை வெட்ட வெளிச்சமாகி யார் மீது கோளாரு என அறியவரும் என்று தயங்குகிறான். ஆனால், பிடியைத் தளர்த்தாமல் பொன்னாவின் வேதனைகளில் அவ்வப்போது விளையாடிப் பார்க்கிறான்.
பொன்னாவின் பாத்திரம் மெது மெதுவாக நாவலில் வலுவாகிச் சூழலை வலுவிழக்கச் செய்கிறது. பொன்னாவின் மனம் ஒரு பத்து வயது சிறுமியை ஒத்தது. விளையாடுவது, கவலைகளிலிருந்து விடுபடுவது, மனத்தைத் தொடர் வித்தைகளால் புதுபித்துக் கொண்டே இருப்பது. பொன்னா ஒழுக்கம் என்று வறையறுக்கப்பட்ட சூத்திரங்களில் பொருந்த முடிகிறதா என்பதே கேள்வி.
அவள் உள்ளுக்குள் உடைந்து, சிதைந்து, முற்றிலும், இனி முடியாது, என்ற பேரழிவிற்கு உள்ளாகும் போதே நோம்பிக்குப் போக தயாராகிறாள். பொன்னா எப்படி நிஜ பொன்னாக தன்னை உருவகித்துக் கொள்கிறாள். துணையில்லாமல் இருளில் பயணிக்கும் பொன்னா ஒரு ஆணைத் தேடிச் செல்லவில்லை. அவள் தேடிச் செல்வதெல்லாம் தன் துயரை, குழந்தையில்லா நிலையைப் போக்கவல்ல, தன்னை உடல் குறையற்றவள் என்று நிரூபிக்கும் ஒரு இடம் அல்லது சந்தர்ப்பம். அவளுக்குத் தேவைப்படுவது ஒரு ஆணிடமிருந்து வெளியிடப்படும் விந்து. அதுவும் நிச்சயமற்றது தான். முடிவு எதுவும் தெரியாமலே சாதகமற்ற நிலையில் தான் காய்களைக் காளியும் பென்னாவும் நகர்த்துகிறார்கள்.
பொன்னா காளியை, குடுப்பத்தின் மொத்த மகிழ்ச்சியையும் காக்க, தனக்கும் தன் கணவனுக்கும் சமூகத்தால் ஏற்படும் அசிங்கத்தைத் துடைக்க தன் கணவனின் காதலையும் துறந்து, காரியமாற்ற துணிகிறாள். தான் மட்டும் உரிமை கொண்ட உடல், காமம் இன்று சாமி என்று அழைக்கப்படும் வேறொருவருடன் இணையும் தருணங்களைக் காளி எவ்வாறு கடந்துச் செல்வான்? தத்தெடுக்கும் குழந்தை வேண்டாமென்று கூறும் இருவருக்கும், பொன்னா வேறொரு ஆணுடன் கூடிப் பெறும் குழந்தையை எப்படி காளி தன் குழந்தையென்று சொல்லிக் கொள்வான்? ஒரு வேலை பொன்னா வேறு ஒரு ஆணின் இணைவிற்குப் பிறகு கருவுற்றால், அது காளிக்கு மலடன் என்ற பட்டத்தை அதிகாரபூர்வமாக கொடுப்பதென்று ஆகாதா. குழந்தை இல்லாக் காரணத்தில் யாரென்ற இரகசியத்தை உடைத்தப் பிறகு இருவரும் சேர்ந்து காப்பாற்றி கொண்டு வந்த தாழி உடைப்படும் போது, குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த ஒருமையான மனம் எத்தனை பாடுபடும்? என ஏராளமான கேள்விகள் அவளைச் சிதைக்கிறது. இருவரின் குடும்ப வாழ்விலுல்ல நிம்மதியையும், சுபிட்சத்தையும் சூரையாடிவிட்டு, சமூகம் கட்டமைத்திருக்கும் சடங்குப்பூர்வமான சுயமரியாதையைத் தக்க வைத்து கொள்ளும் நாடகமாகத்தான் அது அமையும் என்பதையும் அவள் அறியாமல் இல்லை. இறுதியாக காளி நாவலில் உடைந்து நொருங்கும் காட்சியைக் கடந்து போவது அசாதாரணமானது.
நாவலில் மிக முக்கியக் கதாபாத்திரமாக வரும் நல்லையன், காளியின் சித்தப்பா ஒரு முற்போக்குச் சிந்தனைவாதி, ஊர் மக்களோடு கருத்து முரண்பட்டு நிற்பவர். வாழ்வைச் சிதைத்துத் தரம் தாழ்த்தும் எதையும் தன்னுடைய புத்தி சாதுரியத்தால் வெட்டி வீசக் கூடியவர். குற்ற உணர்ச்சியைத் தூண்டி தன் மீதுள்ள சுயமரியாதையை இழக்க செய்து நடைப்பிணமாக்கும் சமூகத்தின் கட்டமைப்புக்களைத் தான் காளியின் சித்தப்பா தொடர்ந்து கடந்து சென்று கொண்டிருக்கிறார். சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகிறார், யாருடைய குற்றச்சாட்டுக்களுக்கும் செவி சாய்ப்பதில்லை. தான் நினைத்ததையே செயல்படுத்துகிறார். திருமண வாழ்வு, குழந்தை, குடும்பம், வாரிசு என்று சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் எந்தக் கட்டமைக்குள்ளும் சிக்காமல் , விலகல் காட்டி, திட்டவட்டமான மனோபாவத்துடன் எதிர்த்து செயல்படக்கூடியவராக கதையில் நடுநிலையாக வருபவரும் தொடர்ந்து அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறார்.
அவர் தான். ஆச்சரியம் தான். ஆனால் எல்லா காலகட்டங்களிலும் நல்லையன் போல சுய சிந்தனையுடைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தொன்று தொட்டு அனைவரும் வழக்கமாக செய்வதிலிருந்து விலகியிருந்து வாழ்வை அதன் போக்கில் இரசிக்க எத்தனை மனத்தெளிவு தேவைப்படுகிறது. அதைத் தான் காளியும் பொன்னாவும் விரும்புகிறார்கள். சித்தப்பா வருகையின் போதெல்லாம் துவண்ட அவர்களின் மனம் ஆறுதலடைகிறது. பிறகு சிந்தனை தெளிவற்றவர்களாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் பழைய நிலைக்கே திரும்புவதும் வாடிக்கையாகிறது.
குழந்தை வேண்டுமென்று எண்ணம் கொள்வது வேறு, குழந்தை கட்டாயம் கிடைத்தே தீர வேண்டுமென்று சிந்தனைக்கு ஒரு சமூகத்தால் தூண்டப்பட்டு அந்த இடத்திற்குத் துரத்தப்படுவது கூட்டு வன்முறை. நாவலில் வரக் கூடிய காளி பிள்ளை இல்லாக் காரணத்தால் இரண்டாவது மணம் செய்து கொண்டு சுதந்திரமாக வேறு ஒரு பெண்ணின் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பொன்னா மரபு சார்ந்தும் நம்பிக்கை சார்ந்தும் வேறு ஓர் ஆணுடன் சேர்ந்து கருவுற்றாள் அது பாலியல் ஒழுக்க சீர்குலைவு என்று கணவனால் இறுதியில் குற்றம் புரிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.
மனித வாழ்க்கை மிகப் பெரிய சூதாட்டம். கிடைப்பதும் கிடைக்காமல் போவதும், வேண்டுமென்று மல்லுக் கட்டுவதும், பின்பு அதிலிருந்து சற்று விலகி நிற்பதும் போன்ற நிலையற்ற பயணம் தான் மனித வாழ்க்கை. திருமணம் என்ற கட்டமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஆணும் பெண்ணும் அதிலிருக்கும் அமைப்புகளின் விதிகளைக் கடைப்பிடித்தும் தக்க வைத்துக் கொள்வதிலும் அதன் பின்னால் ஓடுவதிலும் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
பிள்ளை ஈன்றெடுப்பு என்பது, மரியாதையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது, கௌரவத்தின் சின்னமாக, ஆண்மையின் குரலாக, சொத்தின் வாரிசாக, கணவன் மனைவி உறவை ஆழமாக்கும் கருவியாக, சமூக அந்தஸ்துக்கு அஸ்திவாரம் அமைக்க, மனித சாதனையின் முடிச்சாக, தாம்பத்திய உறவின் வெற்றியாக, குடும்ப உறவுகளை வலுப்படுத்த, மனிதர்களுக்குக் குழந்தைப்பேறு தேவைப்படுகிறது என்ற காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமூகம் கட்டமைத்த அமைப்பு முறையில் மிகத் தீவிரமாக மாட்டிக் கொள்ளும் காளியும் பொன்னாவும் அந்தச் சுழலில் தன்னை எல்லா விதங்களிலும் இழக்கிறார்கள். மனம் குழம்புகிறது, குழந்தை பெறும் சூதாட்டத்தில் உயிரையும் பணையம் வைக்கிறார்கள். மூதாதையர்கள் வாங்கி வந்த சாபங்களையெல்லாம் துடைத்தொழிக்கிறார்கள். மொத்த உடற்கசப்பையும் பொன்னா விரும்பி ஏற்கிறாள். வேண்டுதல் அனைத்தையும் சோர்வின்றி நிறைவேற்றுகிறார்கள். பொன்னா தன் இயலாமையின் புண்களை, ரணத்தைச் சத்தமில்லாமலும் பல நேரம் சீன்டியவர்களை பிராண்டியும் குதறுகிறாள். குழந்தையின்மையின் பெறும் போராட்டத்திலிருந்து சுய கௌரவத்தை, மகிழ்ச்சியை, தன்னை மீட்டெடுக்க நாடிய இறுதி வழி தான் நோம்பிக்குச் செல்ல முடிவெடுக்கும் தருணம்.
காளியின் சம்மதத்தை வாங்கி விட்டதாக பொன்னா நினைத்துக் கொள்கிறாள். அவள் போகும் போது இருந்த இறுகிய நோக்கம் மெல்ல மெல்ல தளர்வடைகிறது. ஏற்கனவே தான் காதலித்த ஆணுடன் உறவாட ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. அவனுடன் கூடினாலும் இரட்டிப்பு மகிழ்ச்சிக் கைக்கூடலாம். பரிட்சயமற்ற முகங்கள் சூழ தெரியாத திசையில் இருட்டில் பயணதில் அவள் முன்னாள் விரும்பியவனுடன் உறவாடினாலும் அவளின் ஒழுக்கம் கேள்விக் குறியாகப் போவதில்லை. ஆனால் அவனை நிராகரிக்கிறாள். காளியின் முகத்தை நினைவுப்படுத்தும் அத்தனையும் அவள் நிராகரிக்கிறாள். ஏனென்றால் அவள் அந்த இரவு சாமியிடம் வேண்டி நிற்பது துன்பப்படும் ஆன்மாவின் மீட்சியை, தன்மையின் ஆழத்தின் ரணங்களை ஆற்றும் கைகளை மட்டும் தான்.
பொன்னா காளிக்குச் செய்தது காளி நினைப்பதுப் போல் துரோகம் அன்று. அவளுடைய நகர்வு தன்னை இழந்து காளியை மீட்பதே. அவள் சந்திக்கும் இறுதி சாமியின் உறவைக் கூடுதலுக்கு முன் இயல்பாக்க முயற்சி செய்கிறாள்.
எனவே அச்சடங்கை எந்த எதிர்பார்ப்புமற்ற கூடலாக அமைக்க முயல்கிறாள். உணர்ச்சி பெருக்கின் வழி காதலை, வரவேற்கிறாள். இந்தச் சடங்கில் குறைந்த பட்சம் அவள் கட்டாயம் கருத்தரிக்க வேண்டுமென்று நிர்பந்தம் இருக்காது. இரு உயிர்கள் ஓருயிராகும் இயற்கையின் விளையாட்டுக்கே திரும்பலாம். ஒப்பந்தமற்ற, அமைப்பு முறையில்லாத, நிர்பந்தமற்ற தன்மீட்சி என்பது எத்தனை பெரிய கொடை. அதில்தான் பொன்னா நனைய எத்தனிக்கிறாள். அவள் அறிவாள், மறுநாள் அவள் திரும்ப வேண்டிய இடங்கள் முட்பாதையால் அமைக்கப்பட்டிருக்குமென. ஆனால் அன்றைய இரவு அவளுடையது. முழுக்க ழுழுக்க அவள் வாழ நினைக்கும் வாழ்வு. அந்த இரவில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடுவது நிச்சயம். அந்த ஆண் பொன்னா திருமணம் செய்து கொண்டவனள்ள. ஆனாலும் சமூகம் தொடர்ந்து கேட்கிறது. பிள்ளை இல்லையா என. இந்த இரவு பொன்னாவுக்குத் தேவையானது அவளைக் கருவுரச் செய்யும் ஒரு ஆணின் விந்து. இத்தனை நாளும் தனக்கும் அது தான் வேண்டும் என்று நினைத்திருந்தாள். முகம் தெரியாத ஒரு ஆணைப் பார்த்தவுடன் தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அனைத்துக் கட்டுக்களும் அவிழ்ந்து விழுகிறது. அவள் அவனோடு ஒன்டிக் கொள்கிறாள். சமூக அமைப்பின் பிடியில் சிக்கிக் கொண்டு பாரம் தாளாத மனம் அவளுள் அண்டி அமிழ்கிறது. அவள் விட்டு வந்த தடங்களை அவள் தன்னுள் மறைக்கிறாள். அவள் மனம் அரவணைப்பையும், அன்பையும் தன் புடவைக்குள் இருளோடு சேர்த்து அவனையும் போர்த்த முயல்கிறது.
ஆண்கள் ஒழுக்க நிலையிலிருந்து விலகும் போது அது சுதந்திரம் குறித்த ‘பொதுவானது’ எனக் கருதும் சமூகம் பெண்கள் அதே செயல்களை வேறு நோக்கத்திற்காக செய்யும் போது ஒழுக்க சீர் கேடு அல்லது பிறழ் ஒழுக்கம் எனக் கூறப்படுவதையே கேள்வி எழுப்புகிறார் நாவலாசிரியர் பெருமாள் முருகன். சமூக கட்டமைப்புக்குள் பிறழ் ஒழுக்கம் நிகழும் போது அதை ஐதிகமென்றும், நம்பிக்கையென்றும், சாமியென்றும், நடைமுறையென்றும் கற்பிக்கப்படுகிறது. அதை அங்கீகரிப்பதை அம்மா, அப்பா, மாமியார், அண்ணன் அனைவரும் ஆதரிக்கிறார்கள். சமூகத்தில் சத்தமின்றி இரவுக்குள் எழுப்பப்படும் கனத்த ஓசைகள் காற்றில் திசை தெரியாமல் கரைந்து போகிறது. மனிதன் இக்கட்டான காலங்களைக் கடக்க முயற்சி செய்யும்போது சாதகமான சூழலை அவனே கட்டமைக்கிறான் பிறகு அதை வழக்கத்திலும் அமர்த்துகிறான். அது அறமற்றதாக இருப்பினும் அவன் தாங்கிக் கொள்ள முடியாத பாரமாக இருந்தால் அந்தப் பழியை, பாரத்தை இறைவனிடம் சுமத்தவும் தயக்கம் காட்டுவதில்லை.
காளிக்கு இரண்டாவது மணம் புரிய ஆலோசிக்கும் அவனுடைய தாயும், சமூகமும் பொன்னாவுக்கு இரண்டாம் திருமணம் செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை. கதையின் காலம் 1947இல் நடப்பாதாக சித்தரிக்கப்பட்டாலும் பெரும்பாலான காலக்கட்டங்களில் ஆண்களுக்கு வழங்கப்படும் பாலியல் சுதந்திரம் பெண்களுக்குக் கிடைக்கப் பெறுவதில்லை. பாலியல் ஒழுக்கமென்பது பாலின பாகுபாடின்றி ஒரே அளவில் மதிப்பிடப்பட வேண்டும். சமூகப் பாரபட்சம், ஆணாதிக்கச் சிந்தனை, கலாச்சார மரபுகள் இவையனைத்துமே நாவலில் பிரித்து ஆராயப்பட்டிருக்கிறது.
குழந்தைப் பேறு இல்லாததால் ஏற்படும் சமூக அழுத்தம், குழந்தை இல்லாதது அக்காலக்கட்டத்திலும் ஒரு பெரிய சமூக குறையாகவும் அவமானமாகவும் கருதப்பட்டிருக்கிறது. பொன்னாவுக்குக் குழந்தைப் பெறும் எண்ணம் எவ்வளவு ஆழமாகவும் தீவிரமாகவும் வேரூன்றி இருந்தது என்றால் கடைசியில் வெறுமையின் நிர்வாணத்தைச் சுமந்துக் கொண்டு தன்னையே இழக்க தயார் ஆகிறாள் .
ஆணின் கர்வம் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளும் ஆட்பட்டக் காளி, தன் அம்மாவின் முடிவை ஏற்றுக் கொள்வதில் பெரும் தயக்கம் காட்டுகிறான். பொன்னாவின் உடலில் உதிரத்தில் வேற்று மனிதனின் கலப்பு கொஞ்சமும் இருக்கக் கூடாது என நினைக்கிறான். பொன்னா எல்லாமுமாக அவனுள்ளே கலந்து கிடக்கிறாள். அவனுக்காகவே வாழ வேண்டும் என நினைக்கும் காளி இறுதியில் உண்மை தெரிந்து நடை பிணமாகிறான். தன்னை மீறி சென்ற பொன்னாவுக்கு எது உட்சப்பட்ச வலியைக் கொடுக்கும் எனத் தீர்மானிக்கிறான். தன்னை மாய்த்துக் கொள்வதே சிறந்த வழியென்று கண்டறிகிறான்.
இந்த இடத்திற்குப் பொன்னாவை நகர்த்திச் செல்வது அந்தச் சமூகத்தில் வாழும் மக்கள் தான். அவர்களுடைய தாம்பத்யத்தின் தனிமையின் மீதும் புனிதத்தின் மீது அவள் செய்யும் படையெடுப்பு என்றே தோன்றியது. அவை சுபாவமாகவே தேக அடையாளத்தால் பிணைக்கப்பட்டுள்ளன.
பெண்களைக் குற்றம் சாட்ட, வேதனைகளைத் தாங்கிக் கொள்ள மட்டும் பயன்படுத்தும் சமூகக் கட்டமைப்பில் பெண்கள் வேறு எப்படித் தமது சுயங்களைக் காட்டுவது? சுதந்திரம் என்பது கேட்டுப் பெறப்படுவது இல்லை எனில் பெண்கள் உடல் சார்ந்த சுதந்திரத்தைத் தாங்களே கையில் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது என்ற கேள்வியும் வருகிறது.
ஆண்களைக் கொண்டே பெண்களின் தேவைகளை அளவிடும் அறியாமை, ஆண்கள் குடும்பக் கட்டமைப்பைக் கெடாமல் வைத்திருக்க முயல்வதன் மூலமாகவும் குடும்பச் சொத்து தவறிப் போய் விடக்கூடாது என்ற கருத்தியலின் மூலமாகவும் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
ஒழுக்கமற்ற சிந்தனை உடையவளா பொன்னா? சமூகத்தின் தொடர் சீண்டல்கள், அவமதிப்புகள், பிள்ளை இல்லாதது சமூகக் குற்றமாகப் பார்க்கப் பட்டக் காலம். பொன்னாவின் வாழ்வு மொத்த சமூகத்தின் கேள்விகளுக்கும் பதிலாக மாறுகிறது. எதை செய்தாவது பிள்ளை பெற வேண்டும் என்று சக மனிதர்களால் மெல்ல மெல்ல நகர்த்தப்படுகிறாள். கணவனும் மனைவியும் சங்கமித்து வாழக் கூடிய உறவை விட சமூகம் குடும்பதின் அமைப்பை, பந்தத்தை அழிக்க கூடிய சம்பிரதாயங்கள் தான் நாவல் முழுக்க நிறுவப்பட்டிருக்கிறது. எதற்காக எது என்ற அடிப்படை நோக்கம் செயல் இழந்துப் போகிறது. மனிதன் அமைப்புக்குள் வாழ்பவன் தானா அல்லது அதை எப்போதும் உடைத் தெறிபவனா? இரண்டு தருணங்களையும் நாவலாசிரியர் இயல்பாகவே காளி, பொன்னா மற்றும் சித்தப்பா பாத்திரங்களில் மெய்பித்துக் காட்டுகிறார்.
அறியப்படாத தன்மையே ‘மாதொருபாகன்’ நாவலில் கட்டமைக்கப்படுகின்றது. பெண்களுக்குத் தமது புத்தியால் தம் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அதிகார மையங்களைக் கீழறுக்கும் ஆற்றல் உள்ளது. இங்கே சமூக அமைப்பு என்பது அறம் மற்றும் நீதி, நியாய உணர்வுகளையோ ஊழ்வினைக் கோட்பாடுகளையோ தாண்டியும் செயல்படும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. சமுதாய சூழலில் மனிதர்கள் சிக்கி, கட்டமைப்புக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்படி நிகழும் ஒவ்வொரு முறையும் அதனுடன் சேர்ந்து இரகசியமாக அழிவது மனிதமும் அறமும் தான்.
