ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள்.

நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின் தற்கொலையும் அதற்கு அவன் மனைவி பொன்னாதான் காரணம் என்பதை ஆரம்பத்தில் அறிந்து கொண்டே நாவல் முழுக்க பயணிக்கிறோம். ஆண்கள் இரு மனைவியோடு சமூகத்தில் சேர்ந்து வாழ்வது போலவே பொன்னா என்ற பெண் இரகசியமாக இரு ஆண்களோடு சேர்ந்து வாழ்கிறாள். காளியோடு மிக நெருக்கமாக காதலுடன் இருந்தவள் பொன்னா. அவள் துரோகம் செய்ததை அவனால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. எதிலும் நேர்த்தியைத் தேடும் அவன் மனம் வாழ்வின் சிக்கலான அத்தருணத்தால் கொதிப்படைகிறது.

குழந்தையில்லாதக் குறையைத் தீர்க்கவே பொன்னா அவ்வாறு செய்கிறாள். நாவலில் வரும் ஒவ்வொரு மாந்தர்களின் செயல்கள் வழியாக பொன்னாவின் நியாயம் சொல்லப்படுகிறது. அது குறித்து யாருக்கும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உள்ளது. பொன்னாவின் அம்மா வல்லாயியும் காளியின் அம்மா சிராயியும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அதைத் தெளிவுப்படுத்திவிடும். நாகரீகத்தின் வளர்ச்சி காளி தற்கொலைக்குக் காரணமாக பேசிக் கொள்ளும் வல்லாயியும் சிராயியும் எந்தப் பகுதியிலும் பொன்னா செய்ததைத் தவறாகவே கருதவில்லை. காளியின் தற்கொலையால் பாதிப்படைந்த பொன்னா மட்டும் மனம் போன போக்கில் நடந்து போகிறாள். தன்னைத் தானே வருத்தியும் கொள்கிறாள். பொன்னாவின் உயிரைப் பாதுகாப்பது சிராயிக்கும், வல்லாயிக்கும் மட்டுமே மிகப் பெரிய சவாலாக உள்ளது.

காளியின் மலடன் என்ற பெயரைப் போக்கவே பொன்னா இன்னொருவனுடன் கூடுகிறாள். அதனாலேயே இறந்துபோன காளி எங்கும் அவள் கண்களுக்குத் தென்படுகிறான்; வழி நடத்துகிறான்; ஆவியாக வந்து போகிறான், அப்போதெல்லாம் பொன்னா மீதான எந்த வெறுப்பையும் கக்காதவனாகவே இருக்கிறான். அவளோடு அன்பான முறையிலேயே உடலுறவும் கொள்கிறான். காளி இறந்தப் பின் தேவனாகி தன்னை மன்னித்ததாகவே பொன்னாவின் ஆழ்மனதில் கருதுகிறாள். பொன்னாவைப் பழித் தீர்க்க தன்னை அழித்து கொள்ளும் காளி குறித்து அவளுக்கு நினைவில் இல்லை. இறந்தப் பின் அவன் மன்னிக்கும் தேவனாகிவிடுகிறான். மனம் அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் சமாதானங்கள் அவளைத் தொடர்ந்து வாழ வைக்கிறது.

பொன்னா கர்ப்பம் தரித்ததும் சொந்த பந்தம், அக்கம் பக்கம் என்று வீடே திருவிழாக் கோலம் காண்கிறது. அம்மா வீட்டு சீரும் வண்டிக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்து விடுகிறது. பொன்னாவுக்குத் தேவையானதை ஒன்று விடாமல் சுற்றியுள்ளவர்கள் பார்த்து பார்த்து செய்கின்றனர். இதற்காகவே வழித்தவறினாலும் பாதகமில்லை, தாயாகி விட வேண்டும் என்றே பொன்னாவின் மன ஓட்டம் செல்கிறது.

நல்லையன் என்பவரின் வருகை கதையோடு ஒட்டாமல் தனிக் கிளையாகத் தெரிந்தாலும் கதையின் குறியீடாகப் பார்க்கக்கூடிய சுவாரசியமான கதாப்பாத்திரம்.  நல்லையனின் தம்பி சொத்துக்காக அவனது மனைவியையே அண்ணன் நல்லையனை மயக்க அனுப்பி வைக்கிறார். ஆனால் எதோ ஒரு விதியால் மயக்கப் போனவளே நல்லையனிடம் மயங்கி விட்டாள்.  அதைத் தொடர்ந்து அவள் அனுபவிக்கும் இன்னல்களை விரைவாக வாசித்து விடக்கூடியவையாக ஆசிரியர் எழுதியுள்ளார்.

இட்டேரியைக் குறித்து பொன்னாவும் பணிப்பெண் வெங்காவும் பேசிக்கொள்ளும் பகுதி நாவலில் முக்கியமான பகுதியாக எடுத்து கொள்ளலாம். உயிர்வேலிக்கு நடுவே செல்லும் மண் வழிப்பாதை எங்கே சென்று முடிவுறும் என்பதை அறிய இருவரும் ஆவல் கொண்டுள்ளார்கள்.  அந்த ஆவல் நம்மையும் பொன்னாவின் முடிவை நோக்கி பயணிக்கத் தூண்டி விட்டது.

ஆலவாயன் என்பதன் பொருள் அறிய வாசகன் இறுதி எல்லை வரை ஓட வேண்டும். கதையோட்டத்தில் எங்குமே நம்மால் ஆலவாயனைக் கண்டு கொள்ள முடியாது. அங்குள்ள மக்கள் வட்டார மொழி வழக்கை இயல்பாக பேசிக் கடக்கிறார்கள். பலருக்கும் இந்த நாவலின் பயன்படுத்தப்பட்ட பேச்சு மொழி அருவருப்பைத் தரக் கூடும். இந்த நாவலில் குறிப்பிட்ட மக்கள் அவ்வாறு தான் பேசிக் கொள்வார்கள் என்று அறிந்துகொண்டால் அம்மொழி நாவலுக்கு வலு சேர்க்கும்.

***

காளியின் தற்கொலையை வைத்து ‘ஆலவாயனை’ அறிமுகம் செய்த பெருமாள் முருகன், காளியின் தற்கொலைத் தடுத்து நிறுத்தப்பட்டதால் ‘அர்த்தநாரியை’ அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

‘ஆலாவாயனும்’ ‘அர்த்தநாரியும்’ காளியை வைத்து இருவேறு நாவல்களாக தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டையும் வாசித்து ஒப்பீடு செய்ய முடியும். ‘ஆலவாயனில்’ நிறைய கதாபாத்திரங்கள் வண்டி கட்டிக்கொண்டு பொன்னாவைத் தாங்கும். ஆனால் ‘அர்த்தநாரியில்’ கண்கண்ட தெய்வமாக கணவன் காளி உயிர்த்தெழுதலால் குறைவானக் கதாபாத்திரங்களுடன் ஓர் எல்லையோடு பொன்னாவை நெருங்குகிறார்கள்.

காளியின் மனைவி பொன்னா வேறொரு ஆணோடு குழந்தையில்லாதக் குறையைப் போக்க உடலுறவில் ஈடுபட்டு, வயிற்றிலும் கருவைச் சுமக்கிறாள். உண்மையை அறிந்த அவளின் கணவன் காளியின் கொந்தளிப்பின் ஓட்டம் ‘அர்த்தநாரி’.

‘ஆலவாயனின்’ காளி நிம்மதியாக இறந்து போய் விடுகிறான். அவன் மனைவி பொன்னா காளியை நினைத்து தினம் தினம் வேதனைப் படுகிறாள். ‘அர்த்தநாரியில்’ காளியின் தற்கொலை முயற்சியை அம்மா சிராயி முறியடித்து விடுகிறாள். இனி பூவரச மரத்தில் தொங்க மாட்டேன் எனக் காளியும் சத்தியம் செய்து விடுகிறான். அதனாலேயே அவன் தினம் தினம் நடை பிணமாகவே வாழ்கிறான். அவனின் அந்தப் பிண வாழ்க்கையே ‘அர்த்தனாரியின்’ முகம். சனிப் பிணம் துணைப் பிணம் கேட்கும் என்பது போலவே மரணத்தின் வாசல் வரை எட்டிப் பார்த்து விட்டு வந்த காளி, பொன்னாவையும் தன்னோடு சேர்த்து உணர்ச்சியில்லாமல் பிணமாகவே ஆக்கிவிடுகிறான். நாவல் முழுக்க அந்தக் கர்ப்பிணியின் ஓலம். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பொன்னாவைத் தடம் மாறவைத்து விடுகிறது.

‘அர்த்தநாரியை’ வாசித்த போது அகலிகையும் நினைவுக்கு வந்தாள். ராமபிரான் பாதம் பட்டு கல்லாகிப் போனவள் சாபவிமோசனம் பெற்று மீண்டும் மனித உருவத்தை எடுத்தாள். அவளின் கணவன் கௌதம முனிவனும் மன்னித்து ஏற்றுக் கொண்டான். ஆனால் காளி பொன்னாவை ஏற்றுக் கொள்ளாமல் தினம் தினம் மௌனத்துடனே சபிக்கிறான்.  ‘ஆலவாயானிலும்’ ‘அர்த்தநாரியிலும்’, கணவன் காளி இருந்தும் இல்லாமல் போன போதும்  பொன்னா ஒரே மாதிரியே துயரடைந்திருக்கிறாள்.

காளி தன் இயற்கை குறைப்பாட்டை நினைத்து நினைத்து தன்னைத் தானே வருத்திக் கொள்கிறான். அதனாலேயே அதிகம் குடிக்கிறான்.

‘ஆலவாயனில்’ சித்தப்பா நல்லயனை ஒரு குறியீடாக பார்க்கலாம். ‘அர்த்தநாரியில்’ அவர் பல அநீதி கதைகளை எடுத்து விடுகிறார். ஒவ்வொரு நீதி கதைக்கும் நிகராக அநீதி கதையை அவர் வைத்திருக்கிறார். எதார்த்த வாழ்வையும், வாழ்வின் எதார்த்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார். காளியின் தற்கொலையில் தொடங்கும் ‘ஆலவாயனில்’, நல்லையன் தன் தம்பி சொத்துக்காக அவன் மனைவியை அனுப்பியதையும், வந்தவள் இவரிடமே மயங்கி விட்ட கதையைச் சிராயிடம் சொல்கிறார். ஆனால் ‘அர்த்தநாரியில்’ அதே கதையை முன்னுரையுடன் மட்டுமே காளியுடன் சொல்லி முடித்து கொள்கிறார்.

மங்கூரு மஞ்சாமி கோயிலுக்குப் பூவடி எடுத்து பயணம் போகிற கூட்டத்தோடு நல்லையனோடு காளியும் இணைந்து கொள்கிறான். பெரிய மூட்டையை (சுமையை) எல்லாம் தூக்கிக் கொண்டு வருவதற்குப் பெயர் நடைப்பயணம் இல்லை. அதற்கு வீட்டீலே உட்கார்ந்து இருந்திருக்கலாமே என உண்மையான பாத யாத்திரை மற்றும் நடைப்பயணம் குறித்த புரிதலுடன் காளியிடம் விளக்கிக் கூறுகிறார் நல்லையன்.

ஒவ்வொருவரிடமும் நெருங்கவும் பேசவும் தயங்கி பதற்றமாக நிற்கிறான் காளி. “அவனுங்களும் மனுசங்கதானடா பயா” என்று சிரித்தப்படி நல்லையன் நுழைந்து விடுகிறார். “ எப்படி தாத்தா தெரியாதவங்களோட…” எனக் காளி தயங்கினால், “தெரியாதவங்க எப்பத் தெரிஞ்சவங்களாவறது?” என்று கேட்கும் நல்லையனுக்குப் போகும் இடமெல்லாம் பெருத்த வரவேற்புதான். எல்லாவற்றிற்கும் மேலாக “அரணாத் துணியோட சாமியப் பாத்தா நாமளும் அப்படிதான் நிக்கோணும்…” என்று பேச்சு வர நல்லையன் “அட இன்னமேலா அராணாத் துணியோட நிக்கப் போறம். இப்பவே அப்படித்தான். இதுக்கு மேல இதயும் உருவனா உருவட்டும் வா” என்கிறார்.  நடைமுறை அறிந்த மனிதர்!

நல்லயனே அடக்கி வாசிக்கும் தாத்தய்யன் ஆண்டு தோறும் நடைப்பயணத்தில் கலந்து கொள்கிறார். ஒவ்வொரு கதைக்கும் ஒர் எதிர்க்கதை இருப்பதாக நல்லையன் சொல்வதைத் தாத்தய்யன் ஏற்றுக் கொள்கிறார். “ நாம எத ஒழுங்குன்னு வெச்சிருக்கறமோ அதுக்கு எதிரானது ஒன்னும் எப்பவும் இருக்கும்….” “ இதே மாதிரிதான் எல்லாத்துலயும். ஒன்ன விதிச்சா அத மீறவும் வழி இருக்கும். விதிச்சது பளிச்சுனு தெரியும். மீறறது அடக்கமா மறவா இருக்கும்” தாத்தைய்யன் சொன்னதைக் கேட்டு காளி மட்டும் யோசித்து கொண்டிருக்கவில்லை. வாசகனும் அந்த வரிகளை வாசித்தப் பின் யோசித்துக் கொண்டிருப்பான்.

இரு நாவல்களிலும் குழந்தை பிறந்தப் பிறகு பொன்னா நெருங்கும்போது பெருநோம்பியில் சந்தித்த முகமும், கேட்டக் குரலும் நினைவுக்கு வந்தன. கணவன் காளி இருக்கிறானோ, இறந்தானோ பொன்னாவுக்குக் குழந்தையைப் பார்த்த போது அதைக் கொடுத்தவனே நினைவில் எழுகிறான். இதற்காகத்தான் காளி பொன்னாவை எற்றுக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறான் போல.

பெருமாள் முருகன் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் இயல்பாக இயங்குபவை. நாடகத்தனமும், கதை மொழியிலிருந்து கட்டுரை மொழிக்கு வழித்தவறுவதில்லை. பக்குவப்பட்ட எழுத்தாளரால் மட்டுமே இவ்வாறான நாவல்களை எழுத முடியும். நல்லையன் கதாபாத்திரம் இந்த இரு நாவல்களில் தேவையில்லாத இடைச்செருகல் போல தெரிந்தாலும் நல்லையனை நாவலிலிருந்து நீக்கி விட்டால் ‘ஆலவாயன்’ மற்றும் ‘அர்த்தநாரியும்’ அர்த்தமற்றதாகி விடும். நல்லையனே இந்த நாவலின் கதாபாத்திரத்தின் நியாய அநியாயத்தை நிர்ணயம் செய்து நமக்கு எடுத்துரைக்கும் ஒரே நீதிபதி. அவர் போக்கிலே போனால் நாவலின் ஆன்மாவை அறிய முடியும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...