மூர்த்தியும் நானும்

சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான் உறவு. ஆத்ம நணர்கள் என்று யாருமில்லை.

1992இல் நான் மூர்த்தியை முதலில் சந்தித்தேன். நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாகப் பணி செய்துகொண்டிருந்த கெப்போங், எடின்பரோ தமிழ்ப்பள்ளிக்கு அவர் வந்து சேர்ந்தார். வந்த ஒரு சில நாள்களிலேயே  அவருக்கும் எனக்கும் ‘கிளிக்’ ஆகிவிட்டது. அதற்குக் காரணம் இருந்ததாக நாங்கள் இருவருமே அப்போது யோசிக்கவில்லை. ஆனால் இப்போது சிந்தித்தால் ஒரு சில காரணங்கள் இருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.

முதல் காரணம் நாங்கள் இருவருமே தொடக்கநிலை கல்வியை ஆங்கிலப் பள்ளியில் முடித்தவர்கள். அங்கே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அனுபவங்களைப் பெற்றிருந்தோம். கற்பித்த ஆசிரியர்களிடம் கொண்டிருந்த உறவு, கற்பிக்கப்பட்ட முறை, சிந்திக்கும் விதம், படித்த நூல்கள் குறிப்பாக கதைப்புத்தகங்கள், கல்வியின்பால் காட்டிய அக்கறை ஆகியவற்றை குறித்துப் பகிர்ந்துகொண்ட போது எங்களுக்குள் ஒரு நெருக்கம் பிறந்தது.

இரண்டாவது காரணம் நாங்கள் இருவருமே தோட்டப்புறத்தில் வளர்ந்தவர்கள். ஆனால் இதில் எங்களுக்குள் வேறுபாடு இருந்தது. ‘யுனிட்டி இன் டைவர்சிட்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல எங்களுக்குள் வேற்றுமையில் ஒற்றுமை இருந்தது. மூர்த்தி தோட்டப்புறத்து வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்தவர். பெற்றோருக்கு உதவ கித்தா தோப்புக்குச் சென்றது, நண்பர்களுடன் காட்டுக் கனிகளையும் கிழங்குகளையும் உண்டது, தோட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சில்லறை வேலைகள் செய்து சம்பாதித்தது, ஆற்றில் அணைகட்டி மீன்  பிடித்தது, குட்டையில் குளித்தது என்று தோட்டப்புறத்து வாழ்க்கைக்கே உரித்தான நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் ரசித்து ருசித்து தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். என்னுடைய சிறுவயது வாழ்க்கை இதற்கு நேர்மாறானது. மூர்த்தி பெற்ற அனுபவங்கள் எனக்குக் கிடைத்ததில்லை. தோட்டத்தில்தான் வீடு என்றாலும், “தோட்டத்துப் பையன்களோட சேர்ந்து ஆட்டம்போட்ட, கால வெட்டீடுவேன்” என்ற  என் தந்தையின் ஆணைக்கு உட்பட்டு வீட்டுக்குள்ளேயே வளர்ந்தவன் நான். இக்கட்டுரையின் தொடக்கத்தில் “நான் ஒரு தனிமை விரும்பி” என்று சொன்னேனே, அதற்கு இதுவும் ஒரு காரணம். மூர்த்தி தம்முடைய அனுபவங்களைச் சொல்லும்போது நான் ஏக்கத்தோடு கேட்பேன். ரசிப்பேன்.

மூர்த்திக்கும் எனக்கும் இன்னொரு வகையில் வேற்றுமையில் ஒற்றுமை இருந்தது. அவர் பேசிக்கொண்டே இருப்பார். நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். இருவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வும் உண்டு. அவர் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களைப் பற்றியும் ரசிக்கும் விதத்தில் பேசுவதில் வல்லவர். நானோ அவர் சொல்கின்றவற்றை அறிந்திருந்தாலும் அறியாதவன் போல் கேட்டுக் கொண்டிருப்பதில் வல்லவன். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரை பயணம் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். இங்குத் தொடங்கும் அவருடைய பேச்சு அங்குச் சென்றடையும் வரை ஓயாது. நான் “உம்” கொட்டுவதோடு சரி. இது போதாதா எங்கள் நட்பு உறுதிபட.

மூர்த்திக்கும் எனக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் ஒன்றாகப் பணி செய்த காலத்தைச் சொல்லலாம். எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய காலத்தில் நங்கள் இருவரும் முன்னெடுத்து நடத்தியவைப் பல. பள்ளியில் ஒரு நூல்நிலையம் அமைத்தோம். அதை ஆசிரியர் அறையாகப் பயன்படுத்த வகை செய்தோம். நூல்நிலையத்தின் முன்னால் இருந்த இடத்தைச் சபைகூடுதலுக்கான இடமாக்கி அதன் முன்புறம் ஒரு மேடையை உருவாக்கினோம். அது போக பள்ளியின் ஒரே நீண்ட கட்டடத்தை மண்டபமாக மாற்றி அமைத்து அங்கேயும் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு மேடை அமைத்தோம். பள்ளியில் ஒரு கேளிக்கைச் சந்தை நடத்தி நிதி திரட்டினோம். பள்ளியில் ‘ரேடியோ எடின்பரா’ என்ற பெயரில் பள்ளி அளவிலான வானொலி ஒலிபரப்பைத் தொடங்கி பள்ளி ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்கினோம். ‘முயல்’ என்ற பெயரில் பள்ளியின் முதல் சஞ்சிகையை வெளியிட்டோம். இப்படிப் பல செயல்கள். மேற்கூறிய அனைத்துக்கும் பெரும்பாலும் மூர்த்தியிடம்தான் திட்டம் பிறக்கும். என்னுடைய ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் நாடுவார். இருவரும் இணைந்து செயலில் இறங்குவோம்.

என் அளவில் மூர்த்தி நட்புக்கு இலக்கணமாக விளங்கியுள்ளார். ஒன்றாக பணிபுரிந்த காலத்திலேயே என்னுடைய எழுத்தாற்றலை அறிந்துகொண்டிருந்த அவர் பின்னர் தேர்வு வாரியத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கியதும் என்னைப் ‘பணிக்குழு உறுப்பினனாக’ பணியாற்ற அழைத்தார். அங்குச் சென்றதும் தமிழ்க் கேள்வித் தாளில் இடம்பெறும் கதைகள் எழுதுவதற்கு எனக்கு முக்கியத்துவம் வழங்கத் தொடங்கினார். அதைத் தலைமேற்கொண்டு பல சிறுகதைகள் எழுதினேன். அது போக சில வேளைகளில் பிற பணிக்குழு உறுப்பினர்கள் எழுதும் கதைகளில் தேவையான மாற்றங்களைச் செய்ய வைத்தார். இன்றளவும் கதை எழுதுதல் தொடர்பாக நாங்கள் கலந்துகொள்ளும் எல்லா கூட்டங்களிலும் என்னுடைய சிறுகதை எழுதும் ஆற்றலை வெகுவாகப் பாராட்டிப் பேசுவார்.

என்னை எழுத்தாளனாக்கியதில் மூர்த்திக்கு பெரும் பங்குண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நான் ஆசிரியர் தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற போது, நான் அவரிடம் எழுதிக் கொடுத்து, சோதனைத் தாள்களில் வெளிவந்தது போக மீதமிருந்த அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தாம் சேகரித்து வைத்திருப்பதாகக் கூறி அவற்றை என்னிடம் ஒப்படைத்தார். என்னிடம் எதையும் சேகரித்து வைக்கும் பழக்கம் இல்லை. நான் ஒரு தொலைக்காட்சி நடிகன். நான் நடித்து ஏறக்குறைய இருபது நாடகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு நாடகத்தின் பிரதிகூட என்னிடமில்லை. அப்படிப்பட்ட எனக்கு, மூர்த்தி சேகரித்து கொடுத்த சிறுகதைகள் தேடக் கிடைக்காத பெரும் பொக்கிஷமாக உள்ளன.

மூர்த்தி பணி ஓய்வு பெற்ற பிறகு என்னைச் சந்தித்ந்தார்.

“உன்னை உலகறிந்த எழுதாளனாக நான் பார்க்க வேண்டும். இறைவன் எல்லாருக்கும் எல்லா ஆற்றல்களையும் கொடுப்பதில்லை. உன்னிடம் கதையெழுதும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். அதுவும் உன்னைப் போல் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. அந்த ஆற்றலை வீணாக்கிவிடாதே” என்றார்.

சொன்னதோடு மட்டுமின்றி அதற்ககான ஒரு திட்டத்தையும் முன்வைத்தார்.

“தமிழில் சிறுவர்களுக்கான துப்பறியும் நாவல்கள் மிக அரிது. அவற்றை எழுதி வெளியிடுவதை நம் பணியாக்குவோம்.” என்றார்.

மூர்த்தியின் ஆலோசனையின் பேரில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னை வளர்த்துவிட வேண்டும் என்ற அவருடைய அந்தத் தன்னலமற்ற எண்ணம் வேறு யாருக்கு வரும்?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...