“பாக்கறதுக்கு இது கலவை மாதிரியே தெரியலையே மேஸ்திரி. மாரியாத்த கோயில்ல ஊத்தறதுக்கு கூழு கரைச்சி வச்ச மாதிரி இருக்குது. இதை வச்சி எப்படி பூச்சுவேலை செய்வீங்க? சிமெண்ட் வேணாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ஜெயலட்சுமி.
அவள் தன் கையில் வைத்திருந்த குச்சியை பக்கத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் விட்டுத் துழாவினாள். தொட்டியில் வேப்பம்பட்டை, ஈச்சம்பட்டை, கற்றாழை, கடுக்காய், தயிர் என எதைஎதையோ போட்டு ஒரு வாரமாக ஊறவைத்து நசுக்கி நசுக்கி எடுத்த சாறு நிறைந்திருந்தது.

“இது சிமெண்ட்ட வச்சி செய்யற ரிப்பேர் வேலை கெடையாதும்மா. அந்தக் காலத்து ஆளுங்க பயன்படுத்திய கலவைமுறை இது. பழைய கட்டடங்களுக்கு இந்த மாதிரியான கலவையைக் கலந்து பூசினாதான் உங்க சரோஜா மேடம் கேக்கற மாதிரி பழமை மாறாம இருக்கும். உறுதியாவும் இருக்கும்” என்று சாமியப்பன் மேஸ்திரி சொன்னார். மறு கணம் சாரத்தில் நின்றிருந்த தம் ஆட்கள் பக்கம் திரும்பி “அவசரப்படாதீங்கடா. கலவை கொஞ்சம் கொஞ்சமா விரிசல்ல போவட்டும். ஊற ஊற ஊத்திகிட்டே இருங்க” என்று சொல்லிவிட்டு ஜெயலட்சுமியின் பக்கம் திரும்பினார். அவள் கையிலிருந்த குச்சி இன்னும் கலவையைக் கலக்கிக்கொண்டே இருந்தது.
“இது ரொம்ப சிடுக்கான வேலைம்மா. இதுக்கு ஆகற செலவுல இதே மாதிரி புதுசாவே ஒரு கட்டடம் கட்டிடலாம். சரோஜா மேடம் ஏன் இந்தப் பழைய வீட்டுமேல இவ்வளவு அக்கறை காட்டுறாங்க?”
“அது ஒரு பெரிய கதை மேஸ்திரி. இது அவுங்க பூர்வீக வீடு. அவுங்க பாட்டியுடைய பாட்டி வாழ்ந்த வீடு. நூறு நூத்தியம்பது வருஷத்துக்கு முன்னால யாரோ ஒரு சாமியாரு இமயமலையிலேர்ந்து ராமேஸ்வரத்துக்கு நடந்தே வந்தாராம். ஒரு ரெண்டு நாளு அவரை இந்தத் திண்ணையில தங்க வச்சி அந்தப் பாட்டி சாப்பாடு போட்டாங்களாம். அவரு பொறப்பட்டு போன பிறகு பாட்டியுடைய வாழ்க்கையில பெரிய பெரிய மாற்றம்லாம் உருவாயிடுச்சி. வீடு, வயல், தோட்டம்னு அவுங்க நினைச்சே பார்க்காத அளவுக்கு வசதி வந்து சேர்ந்திடுச்சி”
”அப்புறம்?”
“அந்தப் பாட்டி சாகற நேரத்துல தன் பொண்ணுகிட்ட இதை வெறும் வீடா நெனைக்காத. நம்ம குலதெய்வம் வாழற கோயில்னு நெனைச்சிக்கோ. அந்த சாமியார் ஞாபகமா இது என்னென்னைக்கும் இப்படியே இருக்கணும்னு சொல்லிட்டு செத்துட்டாங்க. அதுக்குப் பிறகு அந்தப் பரம்பரையில யாருமே அந்த வார்த்தையை மீறலை. அதே பக்தியும் மரியாதையும்தான் சரோஜா அக்கா மனசுலயும் ஓடுது”
ஜெயலட்சுமி அந்த வீட்டுத் திண்ணையின் பக்கம் பார்த்தாள். அந்தத் திண்ணையில் ஒரு பெரியவர் கால்நீட்டிப் படுத்திருக்கும் உருவத்தை ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். பழைய வீடு என்றாலும் அந்த வீட்டில் மின்சார விளக்கு வசதி இருந்தது. தினமும் பொழுது சாய்ந்ததும் அந்த வீட்டுக்குள் சென்று எல்லா விளக்குகளையும் எரியவைப்பதுதான் அவளுடைய முதல் வேலை. பிறகு நடுவீட்டில் உள்ள மாடத்தில் வெண்கல விளக்கை ஏற்றவேண்டும்.
“தீட்டு நாள்ல உள்ள போவக்கூடாது, புரியுதா? அந்த மாதிரியான சமயத்துல எங்கிட்ட வந்து சொல்லு. நானே போய் ஏத்துவேன். இல்லைன்னா வேற ஏற்பாடு செய்யலாம்”
சரோஜா அக்கா நல்ல மனநிலையில் இருக்கும்போது நன்றாக சிரிக்கச்சிரிக்கப் பேசுவாள். தன்னோடு கடைகளுக்கும் கோயிலுக்கும் அழைத்துச் செல்வாள். காற்று வாங்க கடற்கரைக்குச் செல்லும்போது கூட அழைத்துச் செல்வாள். அங்கு விற்கும் சுண்டல், முறுக்கு, பஜ்ஜி எல்லாம் வாங்கிக் கொடுப்பாள். ஆனால் அவளுடைய மன நிலை எப்போது, எப்படி மாறும் என்பதை யாராலும் ஊகித்துச் சொல்லமுடியாது. காற்று வீசும் பக்கமாக பட்டம் திரும்புகிறமாதிரி திரும்பிவிடும். மாறிவிட்டால் எரிந்து விழுந்து வார்த்தைகளால் குதறியெடுத்துவிடுவாள்.
சரோஜா அக்காவின் கணவரும் மூன்று பெண் பிள்ளைகளும் பிரான்ஸில் இருக்கிறார்கள். அவளுடைய அனல்கக்கும் வார்த்தைகளில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பாண்டிச்சேரி பக்கமே வருவதில்லை. வந்தாலும் ஒரு வாரம் பத்து நாட்களிலேயே மூட்டை கட்டிக்கொண்டு பறந்துபோய் விடுவார்கள்.
”எங்க மூனு பேருக்கும் டீ கிடைக்குமாம்மா?” என்று கேட்டார் மேஸ்திரி. “வெளியில போய் குடிச்சிட்டு வரலாம். ஆனா நடந்துபோய் நடந்து திரும்பறதுக்குள்ள நேரம் ஓடிடும்”
“டீ குடிக்கறீங்களான்னு நானே கேட்டிருக்கணும். ஏதோ பேச்சுல மறந்துட்டேன். வெளியில போவவேணாம். இருங்க. ஒரு அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்தாரேன்.”
தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்றாள் ஜெயலட்சுமி. சமையலறைக்குச் சென்று டீ போடத் தொடங்கும்போதுதான் மதிய உணவுக்கான சமையல் வேலை பாதிக்கும் மேல் பாக்கியிருப்பதை உணர்ந்தாள். தனித்தனி தட்டுகளில் நறுக்கிவைத்த காய்கறிகள் அப்படி அப்படியே இருந்தன. ஊறவைத்த அரிசியும் பருப்பும் தனித்தனி பாத்திரங்களில் இருந்தன.
சரோஜா அக்கா வீட்டில் இருந்தால் “அங்க என்னடி இவ்ளோ நேரம் பேச்சு. இத்தனை வேலை சமையல் அறையில பாக்கியிருக்கறது தெரியலையா?” என்று சத்தம் போட்டிருப்பாள். பொதுவாக சரோஜா அக்காவின் கேள்விகளுக்கு ஜெயலட்சுமி நீளமான பதில்களையோ காரணங்களையோ ஒருபோதும் சொன்னதில்லை. ஒன்றிரண்டு தருணங்களில் விளக்கம் சொல்லத் தொடங்கியதுமே அவள் குரல் ஓங்கிவிடுவதை அவள் கண்டிருக்கிறாள். “இங்க பாரு, எங்கிட்ட எதுத்து பேசற வேலை வச்சிக்காத. உங்க அம்மா மூஞ்சிக்காக பார்க்கறேன். உன்னால நான் இங்க வாழலை. என்னாலதான் நீ இங்க காலை ஊனி நிக்கிற. அது மனசுல இருக்கட்டும்” என்று கறாராகச் சொல்லி உரையாடலைத் துண்டித்துவிடுவாள்.
சரோஜா அக்காவின் வார்த்தைகள் ஊசியைப் போல நெஞ்சில் தைப்பவை. அந்த வேதனையிலிருந்து விடுபடுவது எளிதான விஷயமல்ல. எங்காவது தனியாக உட்கார்ந்துதான் அழவேண்டும். ஆனால் அந்தப் பெரிய வீட்டில் அதற்குக் கூட தனியாக ஓர் இடமில்லை. இரவில் படுத்து உறங்கப் போகும்வரை காத்திருந்து, போர்வையைப் போர்த்திக்கொண்டு அதுவரை அடக்கிவைத்திருந்த அழுகையை அழுது தீர்க்கவேண்டும்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சரோஜா அக்கா வீட்டுக்கு வந்த புதிதில் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் செல்லும் பழக்கம் இருந்தது. அப்போது அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பவேண்டும் என எல்லாவற்றையும் நெஞ்சில் அடக்கிவைத்திருப்பாள் ஜெயலட்சுமி. ஆனால் அம்மாவையும் நான்கு தங்கைகளையும் பார்த்ததும் அடுத்த கணமே எல்லாம் ஆவியாகிவிடும். அவள் நெஞ்சிலிருந்து ஒரு சொல் கூட எழுந்து வராது. கிணற்றில் விழுந்த கல்லென ஆழ்நெஞ்சத்துக்குச் சென்று தங்கிவிடும்.
“ஏன்டி உன் மூஞ்சில மலர்ச்சியே இல்லை? நல்லா இருக்கியா? அந்த அக்கா வீட்டுல ஏதாச்சிம் பிரச்சினையா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. நான் நல்லாதான் இருக்கேன்”
“உன்னை ஏதாவது திட்டினீங்களா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. எனக்கென்னமா குறை? மகாராணி மாதிரி நான் நல்லாதாம்மா இருக்கேன்”
அதற்குமேல் அம்மா எதுவும் கேட்பதில்லை. ஜெயலட்சுமியும் எந்தப் பதிலையும் சொல்வதற்கு முற்படுவதுமில்லை.
ஜெயலட்சுமியின் அம்மாவழிப் பாட்டியும் சரோஜா அக்காவின் அம்மாவழிப் பாட்டியும் பெரியப்பா சித்தப்பா பிள்ளைகளாக எப்போதோ ஒரு காலத்தில் ஒரு கூரையின் கீழே வளர்ந்தவர்கள். காலத்தின் கைகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் தூக்கி வீசிவிட்டதால் அவர்களுடைய வாழ்க்கையின் வடிவங்கள் மாறிவிட்டன.
ஏதோ ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்த சமயத்தில் மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் உறவுமுறை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடியனார்கள். அப்போதுதான் ஜெயலட்சுமியின் அம்மா சரோஜா அக்காவை அடையாளம் கண்டுபிடித்து அருகில் சென்று பேசினாள். அக்காவின் பேச்சும் மிடுக்கும் ஜெயலட்சுமியின் அம்மாவுக்குப் பிடித்துவிட்டன.
தன்னை பாண்டிச்சேரியிலேயே பெரிய பியுட்டிசியன் என்றும் ஈஸ்வரன் கோவில் தெருவில் பெரிய கடை வைத்திருப்பதாகவும் ஆறு பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து வேலைக்கு வைத்திருப்பதாகவும் சொல்லிப் பெருமையடித்துக்கொண்டாள் சரோஜா அக்கா. திருமணம், பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம் என எல்லாவிதமான மங்கல விசேஷங்களிலும் பெண்களுக்கு ஒப்பனை செய்யும் ஒப்பந்தம் தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டே இருப்பதாகவும் சொல்லிக்கொண்டாள்.
சரோஜா அக்காவுடைய தற்பெருமைச் சொற்களில் மயங்கிய ஜெயலட்சுமியின் அம்மா, துயரக்கடலிலிருந்து தன்னை மீட்கவந்த மீட்பரென்றே அவளை நினைத்துவிட்டாள். ஜெயலட்சுமியை அவளிடம் ஒப்படைத்துவிட்டால் தன் பாரம் ஓரளவு குறைந்துவிடும் என நினைத்து ஆறுதல் கொண்டாள்.
அடுத்த கணமே சரோஜா அக்காவிடம் சென்று “இவதான் என் பெரிய பொண்ணு. இவளுக்கு கீழ இன்னும் நாலு பொண்ணுங்க இருக்குதும்மா. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கா இவ. சுறுசுறுப்பான புத்தி. ஒரு அக்கா ஸ்தானத்துல இருந்து, இவளுக்கு ஒரு தொழிலைக் கத்துக் குடுத்து ஒரு நல்ல வழியைக் காட்டினா போதும். அந்த நன்றியை என்னென்னைக்கும் நான் மறக்கமாட்டேன்” என்று கண்ணீர் விட்டு முறையிட்டாள்.
அம்மாவின் கண்ணீருக்குக் கரைந்த சரோஜா அக்கா மண்டபத்திலிருந்து பாண்டிச்சேரிக்குத் திரும்பியபோது ஜெயலட்சுமியையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். ஜெயலட்சுமியும் தன் வாழ்க்கையில் அந்தச் சந்திப்பு பெரியதொரு திருப்புமுனையாக இருக்கப்போகிறது என நினைத்துவிட்டாள். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகுதான் எல்லாமே தப்புக்கணக்கு என்பது புரிந்தது.
பெரிய வீடு. சரோஜா அக்காவும் அவளுடைய அம்மாவும் தனியே இருந்தார்கள். தொடக்கத்தில் பல மாதங்கள் அந்த வீட்டில் சம்பளமில்லாத பணிப்பெண்ணாகவும் சமையல்காரியாகவும் மட்டுமே அவள் அவர்களால் நடத்தப்பட்டாள். ஒருநாள் கூட ஜெயலட்சுமியை அழகு நிலையத்துக்கு அழைத்துச் செல்லவே இல்லை.
ஜெயலட்சுமி மீண்டும் மீண்டும் வற்புறுத்தத் தொடங்கிய பிறகுதான் அவளை அழகு நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தாள் அக்கா. கற்றுக்கொள்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்த ஜெயலட்சுமி ஒருசில மாதங்களிலேயே எல்லா சூட்சுமங்களையும் அறிந்துகொண்டாள். அங்கிருந்த பிற பணியாளர்களோடு எளிதாக நெருங்கி நட்பைச் சம்பாதித்துக்கொண்டாள். படிப்படியாக எல்லாம் கற்றுத் தேறி, ஒருநாள் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஒப்பனையாளர்கள் குழுவில் அவளும் ஒருத்தியாக இணைத்துக்கொள்ளப்பட்டாள்.
ஒப்பனை வேலைக்குச் செல்லும் சமயங்களில் ஜெயலட்சுமியால் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. நேரம் நெருக்கடியாக இருந்தது. சரோஜா அக்காவுடைய அம்மாவின் பராமரிப்புப்பணி, சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்டவேலை என ஓடிக்கொண்டே இருக்கமுடியவில்லை. சுழலில் சிக்கிக்கொண்டது போலத் தவித்தாள்.
ஒருநாள் “என்னால முடியலைக்கா. ரொம்ப கஷ்டமா இருக்குது. மண்டபத்துக்குப் போய்வந்துட்டு வீட்டு வேலையை பார்க்க தெம்பில்லைக்கா” என்று சரோஜா அக்காவிடம் கண்ணீர் விட்டாள்.
“முடியலைன்னா உங்க வளவனூருக்கே ஓடிப் போயிடுடி. இந்த வீட்டுல உனக்கு ஒரு நிமிஷம் கூட இடம் கிடையாது. இந்த வீட்டைப் பார்த்துக்கணும்னுதான் உன்னை அழைச்சி வந்தேன். போனா போவுதுன்னுதான் மேக்கப் போடற விஷயத்தைக் கத்துக்க ஒரு வாய்ப்பு குடுத்தேன். உன்னை வளர்த்து தூக்கி நிறுத்தணும்னு எனக்கு எந்தத் தலையெழுத்தும் கிடையாது” என்று கண்டிப்பான குரலில் சொன்னாள் சரோஜா அக்கா.
அக்கணத்தில் துணியில்லாமல் பல பேர் முன்னிலையில் நிற்க நேர்ந்தவளாகத் தன்னை உணர்ந்து மனம் கூசினாள் ஜெயலட்சுமி. இனி, ஒருபோதும் தன் வேலைச்சுமையைப்பற்றி அவளிடம் பேசக்கூடாது என்று நினைத்துக்கொண்டாள். அதையும் மீறி இரண்டுமூன்று முறை தன் நிலையை அவளுக்குப் புரியவைக்க முயற்சி செய்துபார்த்தாள். சரோஜா அக்காவோ தன் முடிவில் உறுதியாக இருந்தாள். “இங்க பாரு. எனக்கு என் வீடும் எங்க அம்மாவும்தான் முக்கியம். எல்லாத்தையும் பார்த்துகிட்டு இந்த தொழிலையும் கத்துக்க விருப்பமிருந்தா நீ இங்க இருக்கலாம். இல்லைன்னா, நீ இப்பவே உன் மூட்டையை தூக்கிகிட்டு கெளம்பலாம்” என்று கறாராகச் சொல்லிவிட்டாள்.
ஜெயலட்சுமிக்கு வீட்டு வேலைகளைச் செய்வதில் எந்த வெறுப்பும் இல்லை. இருட்டில் கிடந்த தன்னுடைய வாழ்வில் ஒளியேற்ற அழைத்து வந்தவர்களுக்கு, அது மட்டுமே தன்னால் திருப்பிச் செய்யமுடிந்த ஒரே உதவி என்கிற எண்ணமே அவளுக்குள் இருந்தது. ஒரு தொழிலைப் பழகி தனித்தன்மையோடு காலூன்றி நிற்பவர்களுக்கு மட்டுமே வாழ்க்கையில் ஒரே ஒரு அடியாவது முன்னேறிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்கிற எண்ணமும் அவளிடம் இருந்தது. ஆனால் உடலில் உருவாகும் அதீத களைப்பு பல நேரங்களில் அவளைச் செயலற்றவளாக நிற்க வைத்துவிடுகிறது. ஆனால் சரோஜா அக்காவிடம் அதை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க அவளால் முடியவில்லை.
ஒரு தட்டில் மூன்று தம்ளர்களில் டீயை நிரப்பி எடுத்துக்கொண்டு சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தாள் ஜெயலட்சுமி. பின்கதவு வழியாக தோட்டத்தைக் கடந்து மதிலோரமாக இருந்த பழைய வீட்டுக்கு வந்தாள். ஒருவர் கலவைச்சட்டியை வைத்துக்கொண்டு நின்றிருக்க சாமியப்பன் மேஸ்திரியும் இன்னொருவரும் கவனமாக கரண்டியால் விரிசலான இடங்களில் சொட்டுச்சொட்டாக கலவையை விழச்செய்து பூசிக்கொண்டிருந்தனர்.
“வாங்க. வாங்க. டீ ரெடி”
மேஸ்திரி விரிசலிலிருந்து வழிந்து வெளியேறும் சாற்றை லாவகமாக கரண்டியாலேயே வழித்து உள்ளே அனுப்பி பட் பட் என்று பக்குவமாகத் தட்டிச் சரிப்படுத்தினார். அவள் கண்முன்னாலேயே ஒரு விரிசல் மறைந்ததைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“தட்டித் தட்டி இந்த வீட்டையே தாஜ்மகாலாக்கிடுவீங்க போல. பெரிய வித்தைக்காரருதான் நீங்க”
“உங்க கையில ஒரு வித்தை இருக்கறமாதிரி எங்க கையிலயும் ஒரு வித்தை”
“நல்லாதான் பேசறீங்க. வாங்க. வந்து டீ குடிச்சிட்டு வேலையைப் பாருங்க”
“நமக்கு மேல ஒரு பெரிய வித்தைக்காரன் உக்காந்துகிட்டு நம்மயெல்லாம் வேடிக்கை பார்க்கறான். அவன் செய்யற வித்தை ரொம்ப பெரிசு. குடிசையை கோபுரமாக்குவான். கோபுரத்தை குடிசையாக்குவான்.”
“அது சரி மேஸ்திரி. ஆனா எல்லாக் குடிசையும் கோபுரமா ஆகறதில்லையே”
மேஸ்திரி ஒரு கணம் பேசாமல் சாரத்திலிருந்து இறங்கிவந்து டீத்தம்ளரை எடுத்தார்.
“அததுக்கும் ஒரு யோகம் வேணும்மா. அதை அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். தலையெழுத்துன்னும் சொல்லலாம்.”
ஜெயலட்சுமி சிரித்தாள். “எந்தப் பதிலும் இல்லைன்னா, இப்படி கடைசியில தலையெழுத்துல கொண்டுவந்து முடிக்கறதுதான் பதிலா?” என்று கேட்டாள்.
“நீ வயசுல ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கற. இதையெல்லாம் புரிஞ்சிக்க இன்னும் கொஞ்சம் அனுபவம் வேணும். நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன். நல்லா யோசிச்சிப் பார்த்துட்டு பதில் சொல்லு.”
“என்ன மேஸ்திரி, புதிர் போடறீங்க?”
”இந்த வீட்டை நூறு நூத்தியம்பது வருஷத்துக்கு முன்னால கட்டியிருக்காங்க. இதைக் கட்டற சமயத்துல, இந்தத் தெருவுல ஒரு பத்து இருபது வீடுங்களாவது கட்டியிருப்பாங்க இல்லையா?”
“ஆமாம்”
“அதெல்லாம் இன்னைக்கு இருந்த இடம் தெரியாம மண்ணோடு மண்ணா போயிடுச்சி. ஆனா இந்த வீடு மட்டும் இன்னைக்கும் இங்க நிக்குது. இதை யோகம்னு சொல்றதா, தலையெழுத்துன்னு சொல்றதா?”
மேஸ்திரியின் கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கிய நேரத்தில் வீட்டு முகப்பிலிருந்து யாரோ அழைப்புமணியை அழுத்திய ஓசை கேட்டது. ”நீங்க டீயை குடிச்சிட்டு வேலையைப் பாருங்க. யாரோ பெல் அடிக்கிறாங்க. போய் பார்த்துட்டு வரேன்” என்றபடி வேகவேகமாகச் சென்று பின்வாசல் வழியாகவே அறைகளைக் கடந்து கதவைத் திறந்தாள் ஜெயலட்சுமி.
நடுவயதைக் கடந்த இரு பெண்மணிகள் நின்றிருந்தனர். படிக்கட்டை ஒட்டி ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. கதவைத் திறந்த ஜெயலட்சுமியைப் பார்த்ததும் “சரோஜா மேடம் இருக்காங்களா? ஒரு நிமிஷம் பார்த்துப் பேசணும்” என்றனர். ஒரு பெண்மணி தன் கைப்பையைத் திறந்து மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்ட முகவரி அட்டையை அவளிடம் கொடுத்தார்.
அட்டையின் மீது பார்வையைப் படரவிட்டபடி “மேக்கப் விஷயமாவா?” என்று கேட்டாள் ஜெயலட்சுமி.
“ஆமா”
“மேடம் பியூட்டி பார்லருக்குப் போயிருக்காங்க. இன்னும் வரலை”
“அங்க பார்த்துட்டுத்தான் இங்க வரோம். வீட்டுக்குப் புறப்பட்டுப் போயிட்டதா அங்க இருந்தவங்க சொன்னாங்க. அவுங்கதான் இந்த வீட்டு அட்ரஸ கொடுத்தாங்க”
“அப்படியா? சரி, வாங்க மேடம். உள்ள வந்து உக்காருங்க. அப்ப வர நேரமாத்தான் இருக்கும்”
இருவரையும் வரவேற்பறையில் அமரவைத்தாள் ஜெயலட்சுமி. உள்ளேயிருந்து செய்தித்தாளை எடுத்துவந்து அவர்கள் முன் வைத்தாள்.
“நீங்க?”
“நான் அவுங்க அசிஸ்டெண்ட். அவுங்களுடைய பியுட்டிசியன் க்ரூப்லதான் இருக்கேன். ப்ரோக்ராம் போவும்போது கூட போவேன். மத்தபடி இங்க வீட்டுல இருப்பேன்”
அப்போது வீட்டின் உள்ளறையிலிருந்து மணியோசை கேட்டது. “ஒரு நிமிஷம். பாட்டி கூப்பிடறாங்க. என்னன்னு கேட்டுட்டு வரேன். நீங்க உக்காருங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் திரும்பினாள் ஜெயலட்சுமி.
“யாருடி வந்திருக்காங்க?” என்று கேட்டாள் பாட்டி.
“தெரியலை பாட்டி. புதுசா இருக்காங்க. மேக்கப் விஷயமா பேசறதுக்கு வந்திருக்காங்க போல. அக்காவைக் கேட்டாங்க. வரக்கூடிய நேரம்னு சொல்லி உக்காரவச்சிருக்கேன்” என்றாள் ஜெயலட்சுமி.
“ஒரு நிமிஷம். என்னைப் புடிச்சிக்கோ. பாத்ரூம் போகணும்டி”
கட்டிலிலிருந்து மெல்ல எழுந்தவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து நடக்கவைத்து கழிப்பறைக்குச் சென்றாள். பிறகு அங்கேயே காத்திருந்து அவளை மீண்டும் நடத்தி அழைத்துவந்து கட்டில் மீது அமரவைத்தாள்.
“நீ ஒன்னும் முந்திரிக்கொட்டை மாதிரி அவுங்ககிட்ட பிசினெஸ் பேசாத. எல்லாத்தயும் அவ வந்து பேசுவா. புரியுதா?” என்று அதட்டும் குரலில் சொன்னாள் பாட்டி.
”சரி பாட்டி”
ஜெயலட்சுமி மீண்டும் கூடத்துக்கு வந்தாள். இரண்டு கண்ணாடித் தம்ளர்களின் தண்ணீரை நிரப்பி எடுத்துவந்து அவர்கள் முன்னால் வைத்தாள். “வர நேரம்தான். நீங்க தண்ணி சாப்பிடுங்க மேடம்” என்று புன்னகைத்தாள்.
“ஒரு நிமிஷம் அவுங்களுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்றீங்களா? ப்ளீஸ். ரொம்ப நேரம் எங்களால காத்திருக்கமுடியாது. இன்னும் வேறவேற வேலைகள் பாக்கியிருக்குது”
ஜெயலட்சுமி கைப்பேசி வழியாக அழைப்பதை பெரும்பாலும் சரோஜா அக்கா விரும்புவதில்லை. “அப்படி என்னடி அவசரம்? நான் வரவரைக்கும் கொஞ்சம் பொறுமையா காத்திருக்கமுடியாதா?” என்று பலமுறை எரிந்துவிழுந்திருக்கிறாள். அதை நினைத்து அவள் சற்றே தயக்கத்துடன் அவர்களைப் பார்த்தாள்.
“ஏன், உங்ககிட்ட செல் இல்லையா? வேணும்னா என் செல்லுலேர்ந்து கூப்புடுங்க” என்றபடி தன் கைப்பேசியை நீட்டினார் ஒருவர்.
“உள்ள வச்சிருக்கேன் மேடம். இருங்க. பேசிப் பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் ஜெயலட்சுமி.
சமையல் மேடையில் காய்கறிக்கூடைக்குப் பக்கத்தில் வைத்திருந்த கைப்பேசியை எடுத்து அக்கா என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த எண்ணை அழைத்தாள். ஆறேழு மணியோசைக்குப் பிறகு சரோஜா அக்கா ”என்னடி?” என அதட்டும் குரலில் பேசினாள். தொடர்ந்து “அம்மாவுக்கு டீ போட்டுக் குடுத்தியா?” என்று கேட்டாள். அதைத் தொடர்ந்து “வீட்டு வேலை ஒழுங்கா நடக்குதா?” ”கரண்ட் பில் கட்டிட்டு வான்னு பணம் கொடுத்துட்டு வந்தனே, கட்டிட்டியா?” “அந்தப் பழனிசாமி தென்னைமட்டைகளை வந்து எடுத்துட்டுப் போனானா?” என ஏராளமான கேள்விகள். ஜெயலட்சுமியைப் பேசவிடாமல் அவளே பேசினாள். எல்லாவற்றுக்கும் “ம்க்கா” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் ஜெயலட்சுமி.
“சரி, நீ எதுக்குக் கூப்ட்ட? அதைச் சொல்லு?”
“யாரோ உங்களைப் புக் பண்றதுக்காக கஸ்டமர்ஸ் வந்திருக்காங்க. பெரிய பார்ட்டின்னு நெனைக்கறேன். கார்ல வந்திருக்காங்க”
“வீட்டுக்குத்தான் வந்திட்டிருக்கேன். இங்க முருகா தியேட்டர் சிக்னல்ல நிக்கறேன். ஏகப்பட்ட ட்ராஃபிக். சீக்கிரமா வந்துருவேன்னு சொல்லி பேச்சு கொடுத்துட்டிரு. பத்து நிமிஷத்துல வரேன்”
“சரிக்கா”
“இருஇரு. மொபைல அவுங்ககிட்ட குடு. நானே ஒரு வார்த்தை பேசிடறேன்”
கைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக கூடத்துக்கு வந்தாள் ஜெயலட்சுமி. “அக்கா லைன்ல இருக்காங்க மேடம். உங்ககிட்ட பேசணுமாம்” என்றபடி வயதில் மூத்த பெண்மணியிடம் கொடுத்தாள். அவர் “ஹலோ” என்று ஆரம்பித்ததுமே மறுமுனையில் அக்கா மறுமுனையில் “இதோ வீட்டுக்குத்தான் வந்துட்டிருக்கேன் மேடம். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்” என்று பதில் சொல்வது எல்லோருக்குமே கேட்டது.
பத்து நிமிஷங்களில் அக்கா ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள். ஹார்ன் சத்தம் கேட்டதும் ஜெயலட்சுமி ஓடி கதவைத் திறந்துவிட்டாள். நிறுத்தப்பட்ட ஸ்கூட்டியை உருட்டி எடுத்துவந்து வீட்டின் ஓரமாக இருந்த வாதுமை மரத்தின் நிழலில் நிறுத்தினாள். வண்டியின் முன்பக்கம் மாட்டியிருந்த பையை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.
அதற்குள் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டிருந்தனர்.
“சாரிங்க மேடம். ஜிப்மர் பக்கத்துல ஒரு கஸ்டமரைப் பார்க்க போயிருந்தேன். திரும்பி வரும்போது முருகா தியேட்டர் சிக்னல்ல மாட்டிகிட்டேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சி”
“பரவாயில்லை. நம்ம ஊருல யாரைக் கேட்டாலும் பெஸ்ட் பியுட்டிசியனா உங்க பேரைத்தான் சொல்றாங்க. அதனாலதான் அட்ரஸ் வாங்கி உங்க கடைக்குப் போனோம். அப்புறம் அங்கேர்ந்து அட்ரஸ் வாங்கி இங்க வீட்டுக்கு வந்தோம்”
”சாரி. சாரி. உங்க விசேஷம் எந்த மாசத்துல, எந்தத் தேதில வருதுன்னு சொல்லுங்க?”
“அந்த மாதிரியான விசேஷமில்லை மேடம். இது வேற மாதிரி”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க”
“சுத்தி வளைக்காம நான் நேரிடையா விஷயத்துக்கு வரேன் மேடம். எங்க அம்மாவுக்கு கொஞ்சம் லங்க்ஸ் ப்ராப்ளெம் உண்டு. ஏழெட்டு வருஷமா நம்மூரு ஜிப்மர்லதான் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டிருந்தாங்க. போன வாரம் திடீர்னு முடியாம போயிட்டுது. ஆஸ்பத்திரியில நாலைஞ்சி நாளா வெண்டிலேட்டர்ல வச்சிருந்தாங்க. இன்னைக்கு காலையில தவறிட்டாங்க.”
“ஸோ ஸேட். சாரி மேடம்”
“இந்த முறை ஆஸ்பத்திரிலேர்ந்து திரும்பமாட்டோம்னு அவுங்களுக்கு ஏதோ உள்ளுணர்வுல தெரிஞ்சிருக்கும் போல. அதனால சேர்க்கிற அன்னைக்கே எங்களா கூப்ட்டு ஒரு விஷயம் சொன்னாங்க. சாவுக்கு வீட்டுக்கு வர்ரவங்க பார்க்கறபோது தனக்கு திருமணக்கோலத்துல அலங்காரம் பண்ணி நாற்காலியில உக்காரவைக்கணும். உயிரில்லாத உடலா இருந்தாலும் ஊர்மக்கள் பார்வையில அந்தத் திருமணக்கோலத்தோடு தெரியறமாதிரி செய்யணும்ன்னு சொன்னாங்க. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போறவங்ககிட்ட விவாதம் வேணாம்ன்னு நெனச்சி சரிம்மா, உங்க விருப்பப்படியே கோலாகலமா செய்றோம்மான்னு சொல்லி அனுப்பி வைச்சோம்”
அதற்கு மேல் அந்தப் பெண்மணியால் எதுவும் பேச முடியவில்லை. தன் கைப்பையைத் திறந்து கைக்குட்டையை எடுத்து தன்னை மீறி கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ஒருகணம் நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினார்.
கூடத்திலேயே நின்றிருந்த ஜெயலட்சுமி வேகமாக சமையலறைக்குச் சென்று ஒரு தம்ளர் குளிர்ந்த தண்ணீரை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தார். அவரும் அதைக் கைநீட்டி வாங்கி இரண்டு மிடறுகள் பருகினார்.
“அதான் மேடம் விஷயம். நீங்க வந்து அம்மாவுக்கு கல்யாணப்பொண்ணு மேக்கப் போடணும். உங்ககிட்ட டைம் வாங்கிட்டுதான் நாங்க மார்ச்சுரிக்குப் போய் அம்மா உடலை வாங்கிட்டு வீட்டுக்குப் போகணும்”
சரோஜா அக்கா “தயவுசெஞ்சி நீங்க தப்பா எடுத்துக்க வேணாம். நீங்க வேற யாரையாவது பார்த்துக்குங்க. எனக்கு இதைச் செய்ய மனசு வரலை” என்று தடுமாறித் தடுமாறிச் சொல்லி முடித்தாள்.
“அப்படி சொல்லாதீங்க மேடம். நாங்க பல இடங்கள்ல விசாரிச்சிட்டு உங்ககிட்ட வந்திருக்கோம். நீங்கதான் பெஸ்ட் பியுட்டிசியன். நீங்களே இப்படி சொன்னா, நாங்க வேற எங்க போகமுடியும்?”
“சாரி, எனக்கு என்னமோ இதுல விருப்பமில்லை. தயவுசெஞ்சி என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க”
“நீங்க வழக்கமா வாங்கறதைவிட கூடுதலாவே பேமெண்ட் கொடுக்கறோம். வாழற காலத்துல எதையும் வாயைத் தெறந்து கேக்காதவங்க எங்க அம்மா. அந்த அளவுக்கு வைராக்கியம் உள்ளவங்க. கடைசி காலத்துல இப்படி கேட்டுவைப்பாங்கன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. நாங்க உங்களைத்தான் நம்பியிருக்கோம். தயவுசெஞ்சி முடியாதுன்னு சொல்லாதீங்க”
சரோஜா அக்கா எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு நிமிடம் தரையையே பார்த்தபடி இருந்தாள். பிறகு மெதுவாக எழுந்து நின்று இரு பெண்மணிகளையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். “ப்ளீஸ் மேடம். என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க” என்று சொன்னாள்.
ஒரு கணம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுடைய விழியோரங்களில் கசிந்திருந்த கண்ணீர்த்துளி கன்னத்தில் இறங்கி வழிந்தது. புறப்படுவதற்காக பெருமூச்சோடு எழுந்தனர்.
அதுவரை வாசலை ஒட்டி நின்றிருந்த ஜெயலட்சுமிக்கு அந்தக் காட்சியைப் பார்க்கப்பார்க்க வேதனையாக இருந்தது. சட்டென ஒரு அடி முன்னால் வந்து சரோஜா அக்காவைப் பார்த்து “அவுங்களைப் பார்க்க பாவமா இருக்குதுக்கா. ரெண்டு பேரும் இவ்ளோ எறங்கிவந்து கேக்கறபோது, ஏங்க்கா முடியாதுன்னு சொல்றீங்க? நீங்க மனசு வச்சா முடியாதா?” என்று அவர்களுக்காக பரிந்து பேசினாள்.
சரோஜா அக்கா ஜெயலட்சுமியைச் சுட்டெரித்து விடுவதைப்போலப் பார்த்தாள். “பேசாம போடி உள்ள.” என்று அடங்கிய குரலில் அழுத்தமாகச் சொன்னாள்.
அதைக் காதிலேயே வாங்காதவள்போல ஜெயலட்சுமி ”வாங்கக்கா, எல்லாரும் க்ரூப்பா போய் செஞ்சி குடுத்துட்டு வரலாம். ஒரு உயிர் ஆசைப்பட்டத செஞ்சோம்ங்கற புண்ணியமாவது கெடைக்கும்” என்று கெஞ்சுவதுபோலச் சொன்னாள்.
ஜெயலட்சுமியின் பேச்சை சரோஜா அக்காவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பற்களைக் கடித்தபடி “உனக்கு புண்ணியத்துமேல அந்த அளவுக்கு ஆசை இருந்தா, நீ போடி. உனக்குத்தான் எல்லா வித்தையும் தெரியுமில்ல. நீயே தனியா போய் எல்லாத்தயும் செஞ்சி குடுடி. போ” என்று வாசல் பக்கம் கையைக் காட்டினாள்.
சரோஜா அக்காவின் நின்ற கோலத்தைப் பார்த்து ஒருகணம் திகைத்தாள் ஜெயலட்சுமி. அவளுடைய சொற்களை ஜெயலட்சுமியின் மனம் தாமதமாகவே உள்வாங்கிப் புரிந்துகொண்டது.
அக்கணத்தில் ஜெயலட்சுமிக்குள்ளும் ஒரு வேகம் பொங்கியெழுந்தது. சரோஜா அக்காவின் பக்கம் திரும்பாமலேயே அந்தப் பெண்மணிகளைப் பார்த்து “வாங்க மேடம். நான் வந்து செஞ்சி குடுக்கறேன். கவலைப்படாதீங்க” என்று கூறியபடி இரண்டடி முன்னால் நடந்தாள். தம் விருப்பத்தை நிறைவேற்ற, எதிர்பாராத திசையிலிருந்து ஓர் உதவிக்கரம் நீண்டதை நினைத்து மனம் நெகிழ்ந்தவர்களாக இரு பெண்மணிகளும் எழுந்து அவளோடு கூடத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.
“நில்லுடி” என்று அதட்டலாக எழுந்தது சரோஜா அக்காவின் குரல். ஜெயலட்சுமி ஒருகணம் நின்று யாரையோ பார்ப்பதுபோல அவளைத் திரும்பிப் பார்த்தாள்.
“என் வார்த்தையை மீறிப் போற நாய்க்கு இனிமேல இந்த வீட்டுல இடம் கெடையாது. ஒழுங்குமரியாதையா ஒன் மூட்டையையும் தூக்கிகிட்டு ஓடிடு”
கட்டுப்படுத்தமுடியாத கோபத்தோடு கூச்சலிட்டாள் சரோஜா அக்கா.
ஒரு கணம் நின்று அவள் முகத்தைப் பார்த்த ஜெயலட்சுமி, மறுகணமே வேகவேகமாக வீட்டுக்குள் சென்று சமையலறையை ஒட்டிய அறைக்குள் கொடியில் தொங்கிய தன் துணிமணிகளை வாரி ஒரு பெட்டிக்குள் அழுத்தி மூடி எடுத்துக்கொண்டு திரும்பினாள்.
திகைப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்த இரு பெண்மணிகளையும் பார்த்து “வாங்க போவலாம்” என்றாள். விழியோரம் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அவர்கள் திரும்பினார்கள். வாசலை நோக்கி நான்கு அடி வேகமாக நடந்த ஜெயலட்சுமி ஒரு கணம் நின்று மூத்த பெண்மணியிடம் “மேடம், மேக்கப் போட எங்கிட்ட எந்தப் பொருளும் இல்லை. எல்லாச் சாமான்களும் கடையிலதான் புதுசா வாங்கணும்” என்றாள். “அது ஒன்னும் பிரச்சினை இல்லைம்மா. நீ கடையைக் காட்டு. நாம தேவையானதை வாங்கிட்டு போவலாம்” என்றார் அவர்.
இரு பெண்மணிகளும் முன்னால் வேகமாக நடக்க, அவர்களுக்குப் பின்னால் சென்றாள் ஜெயலட்சுமி.
