மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால் அவர் கவனமும் தவறிவிட்டது. திருவிழா தொடங்கியதில் இருந்து தன் மினிடோரை வீட்டருகிலேயே நிறுத்தி வைத்திருந்தவன் அவசர வேலை சட்டென்று நினைவுக்கு வந்ததைப் போல எழுந்து வீட்டுக்குள் போய்க் கறுப்பு வேட்டி துண்டை அவிழ்த்தெறிந்து விட்டுப் பேண்ட் சட்டையோடு வெளியே வந்தான். ஒருநொடி தாமதிக்காமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சின்ன வேலையாகப் பக்கத்தில் போக வேண்டும் என்றாலும் மினிடோரைத்தான் எடுப்பான். இருசக்கர வண்டி எக்ஸெல் இருக்கிறது. அதைத் தொட மாட்டான். மினிடோர் படபடவென்று துடிக்கும் சத்தம் கேட்டுக் கழிப்பறைக்குள் இருந்து அவசரமாக வெளியே வந்த சரசம்மா அவனருகே போவதற்குள் வண்டி வேகமெடுத்துச் சாலைக்குப் போய்விட்டது. குலுங்கிச் செல்லும் வண்டியின் பின்புறம் கண்ணிலிருந்து மறையும் வரை அப்படியே நின்றார்.

திருவிழா முடிந்து இரண்டு நாட்களும் கோயிலில் பின்வேலைகள் இருந்தன. இன்று நடக்கும் ஊர்க்கூட்டத்தோடு எல்லாம் சுபமாகும். திருவிழா நாட்களில் வாடிக்கையான பாரத்திற்குக்கூடப் போகவில்லை. வேறு வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தான். எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை மட்டும் கைப்பேசி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தான். வேலையில் அவன் கருத்தாக இருக்கிறான் என்பதில் சரசம்மாவுக்குப் பெருநிறைவு. அவனைப் பற்றி மனம் முழுக்க நம்பிக்கை பரவியிருந்தாலும் ஒரு ஓரத்தில் சிறிதாக அச்சமும் இருந்தது. அது தேவையில்லை என்று நிம்மதி கொண்டார். தொழிலைக் கவனித்துக் கொள்வதை விடவும் திருவிழா நாட்களில் அவன் நடத்தையைப் பார்த்துப் பெருமை பிடிபடவில்லை.
ஒன்பது நாட்களும் அப்பனைப் போலவே இடுப்பில் கறுப்பு வேட்டியும் மேலே துண்டுமாய் அவருக்கு உதவியாய் எல்லாம் செய்தான். ‘ராமசாமி மவனும் சளச்சவனில்ல’ என்று அப்பன் காதுபடவே கோயிலுக்கு வருவோர் சொன்னார்கள். பரம்பரை வழியில் அவர் பூசாரி வேலை செய்யும் செங்குன்னிக் கருப்பண்ணசாமிக்குப் படையலாக வரும் கறுப்பு வேட்டிகள் ஏராளம். புதிதின் மொடமொடப்புப் போக ஒருமுறை அலசி இரும்புப் பெட்டிக்குள் சரசம்மா அடுக்கி வைத்திருந்தார். வீட்டில் எங்கும் கறுப்பு வேட்டிதான். கரித்துணி, சாணி வழிக்கும் துணி, வண்டி துடைக்கும் துணி எல்லாம் கறுப்பு வேட்டிதான். லேசாக வெளுத்துப் போனால் அதை ராமசாமி கட்ட மாட்டார். புதுமெருகு குலையாத வேட்டிகள் அடுக்கிக் கிடக்கும்போது வெளுத்தவை கைத்துணிக்குத்தான் போகும்.
சரசம்மா திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்த போது பொட்டிப் பணமும் புதுச்சேலைகளும் கொண்டு வந்த அந்தக் கால இரும்புப் பெட்டி அது. பாகைக் கரைத்து ஊற்றிய மாதிரி நீல வண்ணம். நான்கு மூலையிலும் சிவப்புப் பூங்கொத்துக்கள். ரொம்பவும் அழகான பெட்டி. ஓராள் ஏறி நின்றாலும் ஒடுங்கலோ வளைதலோ இல்லாத வலுவான இரும்பு. வெகுகாலம் அதில் தம் துணிகளை மட்டுமே வைத்திருந்தார். உடைமைகள் கூடி பெரிய பீரோ ஒன்று வாங்கிய பிறகு இரும்புப்பெட்டி ஓரத்திற்குப் போய்விட்டது. நிறம் மங்கியிருந்தாலும் பெயிண்ட் போகவில்லை. துருவும் ஏறவில்லை. கறுப்பு வேட்டிக்கு என்று அதை ஒதுக்கினார். பிதுங்கி வழிந்த அதிலிருந்து வேளைக்கு ஒரு புதுவேட்டி எடுத்துப் பிரகாசு கட்டினான்.
மாசிமாதப் பின்பனிக் குளிர் உறைத்தாலும் தினமும் இருமுறை பச்சைத் தண்ணீரில் குளித்தான். ஈர வேட்டியை அப்படியே குளியலறையில் போட்டுவிட்டு வந்தும் சரசம்மா கோபித்துக் கொள்ளவில்லை. சாமிக்குச் செய்யும் பக்தியோடு அவ்வப்போது அலசிக் காய வைத்தார். அவனிடம் வந்திருக்கும் மாற்றத்திற்கு எல்லாம் செங்குன்னியாரே காரணம் என்று தோன்றியது. ‘அய்யா… செங்குன்னிக் கருப்பையா… இப்பிடியே எல்லாத்தையும் நல்லா நடத்திரய்யா… காலகாலமா உனக்குப் பூச போடற குடும்பம் தழச்சு ஓங்கி வரோணும். இந்த வருசத்துக்குள்ள நல்ல காரியத்தையும் முடிச்சுக் குடுத்திரய்யா’ என்று கோயில் பக்கம் போகும் போதெல்லாம் இருகையையும் தலைக்கு மேலுயர்த்தி வேண்டிக் கொண்டார்.
பிரகாசுக்குக் கூச்சம் அதிகம். நெஞ்சுக்கூட்டை வெளிக்காட்ட மாட்டான். அவன் வயதுப் பையன்கள் ஊர்க்கிணற்றில் நீச்சல் அடிக்க அழைத்தாலும் போவதில்லை. ”அவனுக்குப் பொம்பளையாட்டம் மாரு தடிச்சிருக்குதுடா. அதான் நெஞ்சக் காட்ட மாட்டீங்கறான்” என்று பையன்கள் கேலி செய்வார்கள். பதின்மூன்று பதினான்கு வயதில் அவனுக்கு மார் லேசாகத் தடித்தது உண்மைதான். அதை மறைத்துக் கொண்டு பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்தான். அப்போது பனியன் போடும் பழக்கமும் இல்லை. தடித்த அவன் மாரைப் பிடித்துப் பையன்கள் கிள்ளி வைத்திருக்கிறார்கள். பெரிய வகுப்புப் பையன்களும் இடைவேளை நேரத்தில் இதற்காகவே அவன் வகுப்புக்கு வந்து ஆளுக்கொரு கிள்ளு கிள்ளிவிட்டுப் போவார்களாம். தடித்த கூச்சத்தோடு கிள்ளின் வலியும் பொறுக்க முடியவில்லை. பள்ளிக்குப் போகவே மாட்டேன் என்று அவன் வீட்டிலேயே அடைந்து கிடந்த போது விசாரித்து விவரம் அறிந்தார் சரசம்மா. கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு அழுதபடியே துளித்துளியாகச் சொன்னான்.
”இதெல்லாம் ஒன்னுமில்லய்யா. ஒவ்வொருத்தருக்கு வர்றதுதான். செரியாப் போயிரும்” என்று தேற்றி வட்டித்த பானையோட்டைக் கரியடுப்பில் மென்சூடாக்கி மார்க்காம்பைச் சுற்றித் தடித்த பகுதியில் ஒத்தடம் கொடுக்கப் போனார். சட்டையைக் கழற்றி மாரைக் காட்ட மறுத்தான். ”தாயறியாத எடமுண்டா? தகப்பனறியாத தடமுண்டா?” என்று சொல்லிச் சட்டையைக் கழற்ற வைத்தார். இருகைகளால் நெஞ்சைக் குறுக்காகக் கட்டியதை விடுவித்துப் பார்த்தார். தானாகத் தடித்ததை விடவும் பையன்கள் கிள்ளிய வீக்கம் நன்றாகத் தெரிந்தது. ”இப்பிடியா கிள்ளி வெப்பாங்க? ஒவ்வொருத்தனையும் ஓங்கி அறைய வேண்டாமா? கிள்ளு வாங்கிக்கிட்டுச் சும்மாவா இருந்த? போயி உங்கொம்மா மொலயப் புடிச்சுக் கிள்ளுங்கடான்னு சொல்லீருக்கலாமுல்ல? இப்பிடியா அழுதுக்கிட்டு வருவ?” என்று அவனையும் சேர்த்துத் திட்டிக்கொண்டு ஒத்தடம் கொடுத்தார். பையன்கள் கூடிக் கும்பலாகச் சூழ்ந்து கிள்ளும் காட்சியை அம்மாவுக்கு விளக்க முயலவில்லை அவன். பானையோட்டு வைத்தியம் பலன் கொடுத்தது. ஒத்தடம் கொடுக்க அம்மாவை ஒருநாள் அனுமதித்தவன் அடுத்த நாள் தானாகவே கொடுத்துக் கொண்டான். ஒருவாரத்தில் மார் சுப்பென்று வற்றியது. பிறகும் பள்ளிக்குப் போக விரும்பாமல் சில நாட்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். வற்புறுத்தி அனுப்ப வேண்டியதாயிற்று.
அதிலிருந்து பனியன் போட்டுக்கொள்ளத் தொடங்கினான். வீட்டில் சட்டையைக் கழற்றினாலும் பனியன் போட்டுக் கொண்டிருப்பான். கைப்பனியன்தான். காலுக்கு இப்போதைய பையன்கள் போல அரைடவுசரோ முக்கால் டவுசரோ போடும் பழக்கமும் இல்லை. பாதம் மறைத்துத் தரையைக் கூட்டிச் செல்லும்படி லுங்கியைக் கட்டியிருப்பான். வீட்டுக்கு யாராவது வந்தால் உடனே முழுக்கைச் சட்டையைப் போட்டுக் கொள்வான். சிறுகளம் போல விரிந்திருக்கும் காரைவாசலுக்குச் சிமிட்டி அட்டை போட்ட பந்தலுண்டு. பந்தல் மேல் ஏறும்படி சங்குக்கொடியை வளர்த்ததும் அவன் தான். கொடியோடி அட்டை முழுக்க மூடி நீல நிறச் சங்குப்பூகளால் நிறைந்திருக்கிறது. வாசலைக் கடந்து குளியலறையும் கழிப்பறையும் தனித்தனிக் கதவு போட்டுக் கட்டியிருந்தார்கள். அங்கே போவதென்றாலும் பனியனைக் கழற்ற மாட்டான். குளிக்கப் போகும்போது மாற்றுத்துணிகளையும் எடுத்துக் கொள்வான். உள்ளேயே மாற்றிக் கொண்டுதான் வெளிவருவான். எதையாவது மறந்துவிட்டால் அம்மாவை அழைத்து எடுத்து வரச் சொல்லிக் கத்துவான். அப்போதுதான் இவனுக்கு இப்படி ஒருகுரலா என்று தெரியும். பழைய பாத்திரம் வாங்க வருபவன் ஓட்டை விழுந்த பித்தளை அண்டாவைச் சாக்கில் போடும் முன் ஒடுக்குவதற்காகக் கல்லில் ஓங்கி அடிக்கும் போது வரும் சத்தம் போன்ற குரல்.
”ஆம்பளப் பையன் பனியன் போடாத வெளியில வந்தா காக்காயா கொத்திக்கிட்டுப் போயிரும்? கொமுரிப்பிள்ளையாட்டம் இவன் பண்ற அழிம்பு தாங்க முடியில” என்று திட்டிக்கொண்டே பனியனையோ துண்டையோ சரசம்மா கொண்டு போய்க் கொடுப்பார். ”நாளைக்கு ஒருத்தி வந்தா அவகிட்ட அவுத்துக் காட்டாதயா போயிருவ?” என்பதை முனகலாகச் சொல்வார். அவனுக்குக் கேட்டிருக்குமோ என்னவோ குனிந்த தலையைத் தூக்காமல் இமைகளை மட்டும் மேலேற்றி அம்மாவைப் பார்ப்பான். என்ன திட்டினாலும் பதில் வார்த்தை வராது. திருவிழா தொடங்கியதும் அந்தக் கூச்சம் எல்லாம் எங்கே போயிற்றென்று தெரியவில்லை. இடுப்பில் கறுப்பு வேட்டி; மேலில் கறுப்புத் துண்டு. அவ்வளவுதான். நடக்கும்போது எப்போதை விடவும் கூடுதலாகத் தலைகுனிந்து ஊர்ந்து செல்கிறான். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்புவதில்லை. இவன் எப்படி நான்கு பேரிடம் பேசி மினிடோருக்குப் பாரம், சவாரி எல்லாம் பிடிக்கிறான் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
வழக்கமாகக் கோயில் திருவிழாவின் போது ராமசாமி தம் உதவிக்கென்று மைத்துனர் பழனியை வரவழைத்துக் கொள்வார். சரசம்மாவின் தம்பி. சரசு திருமணமாகி வரும்போது ராமசாமி சின்னப் பூசாரி. முழுப் பொறுப்பை ராமசாமி எடுத்த வருசத்தில் இருந்து பழனி வருகிறார். வருமானத்தில் கொஞ்சம் கிள்ளியெடுத்து மைத்துனருக்குக் கொடுப்பது வழக்கம். மச்சானிடம் பணம் வாங்க முதலில் தயங்கிய பழனி போகப் போக மறுக்கவில்லை. அவருக்கும் திருமணம், குழந்தைகள் என்று குடும்பம் பெருத்துவிட்டது. எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பத்து நாள் இங்கே வந்து சும்மா இருக்க முடியாது. வெளிவேலைக்குப் போனால் கிடைப்பதை விடவும் கூடுதலாகவே ராமசாமி கொடுப்பார்.
இந்த வருசம் பழனி வரவில்லை. அவரை வர வேண்டாம் என்று ராமசாமியே சொல்லிவிட்டார். இரண்டு மூன்று வருசமாகவே உதவிக்கு வரும்படி பிரகாசைக் கேட்டார்கள். அவன் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக் கொண்டிருந்தான். ராமசாமி அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். நீரிழிவு நோயும் இருந்தது. இருவேளைப் பச்சைத் தண்ணீர்க் குளியலும் உடலுக்குச் சேரவில்லை. சில விசேஷ பூசைகளின் போது அவரால் முடியாமல் தடுமாறுவதையும் கண்டார்கள். சின்னப் பூசாரியாகப் பிரகாசை நியமித்துவிட்டால் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வான். ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லாத போது பிரகாசை அழைத்துக் கொள்ளலாம். திருவிழா முடிந்ததும் கணக்கு வழக்கு பார்க்கும் ஊர்க்கூட்டத்தில் பிரகாசுக்குப் பொறுப்புக் கொடுத்து ஊதியமும் நிர்ணயம் செய்துவிடலாம் என்று நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதற்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். பழனி வரவில்லை என்றால் பிரகாசு வந்துதானே ஆக வேண்டும்?
இந்த வருசம் பிரகாசும் மறுக்கவில்லை. கோயில் தொடர்பான வேலைகளுக்கு மட்டும் மினிடோரை எடுத்துச் சென்றான். அவற்றுக்கும் கணக்குப் போட்டு அவ்வப்போதே பணம் வாங்கிக் கொண்டான். அப்போதும் வேட்டியும் துண்டும்தான். பூசாரிக்கு உரிய களையும் பாந்தமும் வந்திருந்தன. துண்டை அகல விரித்து இருபுறம் அகண்ட மாலை போலாக்கி மார்பை மூடியிருந்தான். நெகுநெகுவென்று கரும்பாறை போலிருந்த பரந்த முதுகை ஊர்ப்பெண்கள் வெறித்துப் பார்ப்பதைக் கண்டு சரசம்மாவுக்குப் பெருமையாக இருந்தது. ‘எவளுக்குக் குடுத்து வெச்சிருக்குதோ?’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். தன் கண்ணே பட்டுவிடும் என்று தோன்றியதால் கோயில் வேலை முடித்துச் சாமத்திற்கு வந்தாலும் வாசலிலேயே மகனை நிற்க வைத்து ஒருகற்பூரத் துணுக்கைக் கொளுத்திக் காட்டி எச்சிலைத் துப்பச் செய்து கண்ணேறு கழித்துத்தான் வீட்டுக்குள் விட்டார். அப்போது மட்டும் மெலிதாக ஒரு கோணச்சிரிப்பைக் காட்டுவான். அது கேலியா ஏற்பா என்று சரசம்மாவுக்குத் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் சரி, ஏதும் திருகல் செய்யாமல் கோயில் வேலைகளில் ஈடுபட்ட அவன் போக்கு நிறைவு தந்தது. கோயில் வேலைக்குக் கச்சிதமாகப் பொருந்திவிடுவான் என்று தோன்றியது. அவரறிய அவனிடம் கெட்ட பழக்கம் ஏதுமில்லை. ஓட்டுநர் வேலை செய்யும் பையன்கள் எதையாவது வாயில் போட்டு அதக்கியபடியே இருப்பதும் சந்தர்ப்பம் கிடைத்தால் டாஸ்மாக் போவதும் வழக்கம். தன் மகனும் அப்படியாகி விடுவானோ என்னும் பயம் அதிகம். அவன் துணிகளைத் துவைக்கும்போது சட்டை, ஜட்டிப் பைகளைத் துழாவி ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று பயத்தோடு பரிசோதிப்பார். இதுவரைக்கும் சிறுதுணுக்குக் கூடக் கிடைத்ததில்லை. வேலை முடிந்து அவன் எந்நேரம் வீட்டுக்கு வந்தாலும் அருகில் நெருங்கிப் போய் அவனறியாமல் மோப்பம் பிடிப்பார். சாமிக்கு வரும் படையல் பொருட்களில் இருக்கும் பிராந்திப் பாட்டிலை வீட்டுக்குக் கொண்டு வந்து அவ்வப்போது இரவில் ராமசாமி குடிப்பார். அந்த வாசனை மிதக்கும் உதடுகளைச் சரசம்மா அறிவார். பிரகாசு மீது வேர்வை நாற்றம் தவிர வேறேதும் வந்ததில்லை. பூசாரி வீட்டுப் பெருமையைக் காப்பாற்றி விடுவான் என்னும் நம்பிக்கை இருந்தது.
திருவிழாவுக்குப் பூச்சாட்டியது முதல் சரசம்மாவுக்கும் இடைவிடாத வேலைகள். பூசாரி வீடு என்றால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். நாலாப்புறம் இருந்தும் கண்கள் சிமிட்டாமல் இந்த வீட்டையே கவனித்துக் கொண்டிருக்கும். இணுக்கு குறைபட்டாலும் ‘என்ன இப்பிடி?’ என்று ஓர் இழுப்புடன் யாரிடம் இருந்தாவது குரல் வரும். அதற்குச் சமாதானம் சொல்லி முடியாது. செங்குன்னியார் ஆங்காரச் சாமி. எந்தச் சிறுபிசகையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். திறந்து உருட்டி விழித்திருக்கும் கண்களால் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பார். எந்நேரமும் ஓங்கியிருக்கும் வாளால் எதையும் அழித்துவிடுவார். பூசாரியே வாய்த்துணி கட்டித்தான் பூசை செய்ய வேண்டும். ஆங்காரத்தைக் கட்டுப்படுத்த மாதாமாதம் ஒரு கோழிச்சேவலாவது படையல் தேவை. வேண்டுதல் வைத்து பலி கொண்டு யாராவது வருவார்கள். யாரும் வரவில்லை என்றால் பொதுப்பணத்தில் சேவல் வாங்கி வந்து அறுப்பது வழக்கம். செங்குன்னியார் ரத்தம் உறிஞ்சி எஞ்சிய பலிச்சேவலின் சக்கைக் கறியைச் சமைத்துத் தின்ற மறுநாள் வீடு முழுக்கச் சுத்தம் செய்து சாணி போட்டு வழிக்கும் வேலையும் சரசம்மாவுக்கு உண்டு.
திருமணம், தெரட்டி, சாவு வீடுகளுக்குப் போனால் தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாது. தீட்டுச்சோறு ஆகாது. ஊரில் எந்த வீட்டிலும் எதுவும் வாங்க முடியாது. அந்த வீட்டுப் பெண்கள் விலக்காகி இருக்கிறார்களா என்பது தெரியாது. ஒவ்வொருவரிடமும் கேட்க முடியாது. விலக்கானவர்கள் சுத்தபத்தமாகத் தீட்டைக் கழித்தார்களா என்று தெரியாது. உள்ளூரிலேயே இப்படித்தான் என்றால் வெளியூர்ப் பயணத்தை யோசிக்கவே முடியாது. ரொம்பவும் அவசியம் என்றால் தான் சரசம்மா போவார். போன கையோடு திரும்பிவிடுவார். ஒருநாளும் அயல்வீட்டில் தங்கியதில்லை. பூசாரி வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த நாள் முதல் பெற்ற தாய் வீடும் அயல்தான். ராமசாமிக்கும் அதுதான் விதி. ‘ஐயோ… செங்குன்னி ஊட்டுக்காரங்க’ என்று சொல்லிச் சனமே எல்லாவற்றையும் மறுத்துவிடும். எத்தனையோ இடங்களுக்குப் போய்ச் சோற்று மணத்தை மட்டும் பிடித்துக்கொண்டு வெறும்வயிற்றோடு திரும்பியிருக்கிறார்கள். ”சோத்துக்கா போறம்? சனத்துக்குத் தலகாட்டத்தான் போறம்” என்று சமாதானம் வேறு.
திருமணமாகி இந்த வீட்டுக்குச் சரசம்மா வந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருசமாகிவிட்டது. அப்போது மாமனார் பூசாரி. ஒரு அடைமழை நாளில் செங்குன்னியார் பூசையைத் தவிர்க்கக் கூடாது என்று ஓலைக்குடையைப் பிடித்துக்கொண்டு போனார். ஊருக்கு வெளியே ஏரிக்கரையில் சடைக் கொப்புகள் தொங்கும் செங்குன்னி மரத்தடியில் முழங்கால் உயரச் சுவர்களுக்கு நடுவே கூரையற்ற வெளியில் ஒற்றை ஆளாகக் கருங்கல் சொரூபமாய் நின்றிருக்கும் கருப்பன் பூசையை முடித்துவிட்டுத் திரும்பும்போது மின்னல் தாக்கி மாமனார் இறந்து போனார். ஓலைக்குடை எரிந்த சாம்பல் தண்ணீரில் கரைந்து போயிருந்தது. ”நல்ல சாவு. கைகாலுத் தெடமா இருக்கறப்பவே செங்குன்னி கூப்பிட்டுக்கிட்டாரு” என்று ஊரே சொல்லிற்று. அவருக்குப் பிறகு ராமசாமி பொறுப்பெடுத்துக் கொண்டார். அதிலிருந்து முப்பது வருசத்துக்கும் மேலாக முடிந்த வரைக்கும் தன்னெஞ்சறியக் குறையில்லாமல் அனைத்தையும் சரசம்மா நடத்தி வருகிறார்.
வெளிவேலைக்குப் போனால் தம்மையறியாமல் எவரையாவது தொடவோ எதையாவது குடிக்கவோ நேர்ந்துவிடலாம். அதனால் இரண்டு வெள்ளாடுகளை வாங்கி மேய்க்கும் வேலையைத் தொடங்கினார். பிறகு செம்மறி ஆடுகள் வாங்கிப் பட்டியாகப் பெருகியது. இப்போது ஆடும் குட்டியுமாய் முப்பது உருப்படிகள் இருக்கின்றன. ஆடுகள் இருந்தால் எங்கே போயும் தங்க முடியாது. அரைநாளுக்கு மேல் இருக்க முடியாது. தானாகவே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு அது. ஆம்பளை ஏதாவது பிசகினாலும் கண்டுகொள்வார் இல்லை. பொம்பளை மேல் எல்லாக் கண்ணும் ஊர்ந்து திரியும். இன்னும் இருக்கும் குறைகாலத்தையும் அப்படியே நடத்திக் கொண்டு போய்விட வேண்டும் என்பதுதான் ஆசை. தன் உடல் தெம்போடு இருக்கும் போதே மகனுக்கு ஒருத்தியைப் பார்த்துக் கட்டி வைத்து அவளுக்கும் எல்லாவற்றையும் பழக்கிவிட்டால் போதும். இரண்டு கடமையையும் ஒருசேர நிறைவேற்றி நிம்மதி கொள்ளலாம்.
பிரகாசுக்குப் பின் பிறந்த திவ்யாவைக் கட்டிக் கொடுத்து நான்கு வருசமாகிவிட்டது. இரண்டு பிள்ளைகள் பெற்றுவிட்டாள். அவள் திருமணம் முடிந்த கையோடு பிரகாசுக்குப் பார்க்க ஆரம்பித்தும் ஒன்றும் கூடி வரவில்லை. கடந்த ஆவணியில் இருபத்தேழு முடிந்து இருபத்தெட்டு தொடங்கிவிட்டது. பருவம் கடந்துவிடுமோ என்று சரசம்மாவுக்குப் பயம். இந்த வயதில் இருக்கும் உடல் மெருகு முப்பதுக்குப் பிறகு குலைந்துவிடும். தலையில் ஒன்றிரண்டாகத் தொடங்கியிருக்கும் பித்தநரை கூடும். முகத்தில் முதிர்ச்சி கூடி பெரிய ஆள் போலத் தோற்றம் தெரியும். வயது வித்தியாசம் அதிகம் என்று காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள். ஒருகாலத்தில் பையன்களுக்கே பதினேழு பதினெட்டிலே திருமணம் நடத்திய சாதி. இப்போது பையன்களுக்கு இருபத்தைந்து என்று எப்படியோ நிர்ணயம் ஆகியிருக்கிறது. இருபத்தைந்து கடந்துவிட்டால் எல்லோரும் ஒருமாதிரி விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பதில் சொல்லி முடிவதில்லை.
”அவனுக்குன்னு இன்னமேலா ஒருத்தி பொறக்கப் போறா? பொறந்து வளந்து எங்கயோ இருக்கறவளக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் காலம் எடுக்குது. பாக்கலாம். கண்டுபுடிக்காதயா போயிருவம்? தனக்குப் பூச பண்ற குடும்பத்துக்கு அந்தச் செங்குன்னியாரு ஒதவி பண்ணாதயா போயிருவாரு. எப்பக் கைகாட்டி உடோணும்னு அவருக்குத் தெரியும்” என்று பொதுவாகச் சொல்லித்தான் ஊர் வாயை அடைத்துக் கொண்டிருந்தார் சரசம்மா.
பெண் கேட்ட இடத்தில் எல்லாம் ”பையன் என்ன படிச்சிருக்கறான்?” என்பதுதான் முதல் கேள்வி. செய்யும் வேலையை விட, வருமானத்தை விடப் படிப்பு முக்கியமாகிவிட்டது. பத்தாம் வகுப்பு தேறாதவன் அவன். பையன்களின் கிள்ளுக்குப் பயந்து சில நாள் வீட்டிலிருந்த போதே படிப்பில் நாட்டம் விட்டுப் போயிற்று. ஒன்பதாம் வகுப்பைக் கடந்து பத்தை எட்டினான். தாண்ட முடியவில்லை. விட்ட பாடங்களை எடுத்து எழுதவும் மறுத்துவிட்டான். படிப்பில் அப்படி ஒரு கசப்பு. ஏதேதோ வேலைக்குச் சென்று பார்த்து நான்கைந்து வருசம் வீணாயிற்று. எதுவும் பிடிபடாமல் திரிந்து எப்படியோ கடைசியில் ஓட்டுநரானான். மூன்று வருசம் சம்பள வேலைக்குப் போனான். பாதிப் பணம் கையிலிருந்து போட்டு மீதத்தைப் பைனான்சில் தவணைக் கடன் பெற்றுச் சொந்தமாக மினிடோர் வண்டி ஒன்று வாங்கிக் கொடுத்ததும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
கடனும் முடிகிற நிலையில் இருக்கிறது. தவணை போக மீதத்தைச் சேமிப்பில் வைத்திருக்கிறான். திருமணம், இரு குழந்தைப் பேறு, நோம்பிச் சீர், காதுகுத்துச் சீர் என்று மகளுக்குச் செய்ததும் மினிடோர் வாங்கக் கொடுத்ததும் போகச் சேமிப்பு என்று சரசம்மாவிடம் ஏதுமில்லை. வரவு செலவில் ராமசாமி தலையிடுபவர் அல்ல. கோயில் என்றாலும் கூலி வேலை என்றாலும் கைக்கு வருவதை அப்படியே சரசம்மாவிடம் கைமாற்றிக் கொடுத்துவிடுவார். பிரகாசிடமிருந்து செலவுக்கென்று ஏதும் வாங்குவதில்லை. வீட்டுச் செலவைத் தாங்கள் பார்த்துக்கொண்டு திருமணத்திற்கு அவன் சேமிக்கட்டும் என்று விட்டார்கள். அவன் சேமிப்பில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை. மண்டபம் பார்த்து மேளம் வைத்து முந்நூறு நானூறு பேருக்குச் சாப்பாடு போடும் அளவு சேமிப்பு வைத்திருப்பான் என்பது சரசம்மாவின் எண்ணம். அது போதும். ஐந்து அல்லது ஏழு பவுனில் தாலிக்கொடி போடுவது சரசம்மா பொறுப்பு. பவுன் விற்கிற விலையில் அதற்கே தடுமாற்றம். முடியவில்லை என்றால் தன் தாலிக்கொடியைக் கழற்றிக் கொடுத்துவிடலாம் என்னும் திட்டம் மனதில் இருக்கிறது.
வண்டியோட்டம் பிரச்சினையில்லை. நிரந்தர வாடிக்கையாளர் சிலரைப் பிடித்து வைத்திருக்கிறான். காட்டு வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வது காலை ஆறரைக்கே தொடங்கிவிடும். ஊரிலிருந்து நாலு காடு தாண்டி வேலை என்றாலும் யாரும் நடந்து செல்வதில்லை. மினிடோரில் பத்துப் பதினைந்து பேரை ஒருசேர ஏற்றிக் கொண்டு போய்க் காட்டுக்கரையில் இறக்குவான். ஏழு மணிக்கு எல்லோரும் காட்டுக்குள் இறங்கிவிடுவார்கள். நடந்தால் ஒவ்வொருவராக வந்து சேரத் தாமதம் ஆகும். அதனால் இந்த வண்டி ஏற்பாடு காட்டுக்காரர்களுக்கும் வசதியாக இருக்கிறது. அதுபோல நகரத்தில் பார வாடிக்கைகளும் உண்டு. புதிதாக அழைப்பவர்களும் அனேகம். நாளுக்குக் குறைந்தது ஆயிரம் சம்பாதித்து விடுவான். டீசல், வண்டித் தேய்மானம், சொந்தச் செலவு எல்லாம் போக ஆயிரம்.
படிப்பு இல்லை என்றால் என்ன, தொழில் இருக்கிறது. அப்புறம் பரம்பரையாக வரும் கோயில் பூசை இருக்கிறது. தட்டில் விழும் பணம் பூசாரிக்குச் சொந்தம். செங்குன்னியார் மூன்று குலங்களுக்குத் தெய்வம். குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் இந்த ஊரில் மட்டுமல்ல, பத்துப் பதினைந்து ஊர்களில் பரவிக் கிடக்கிறார்கள். குழந்தைக்கு மொட்டையடிப்பது, காதுகுத்து என்று மாதத்திற்கு ஒருவராவது வருவார்கள். செங்குன்னியாருக்கு உகந்த நாள் செவ்வாய். அது வார நாளாக இருப்பதால் கிடாவெட்டு பெரும்பாலும் இருக்காது. ஒருகுடும்பம் வந்து கோழி அறுத்துப் பூசை செய்வது அவ்வப்போது நடக்கும். திருவிழாவின் போதுதான் கிடாவெட்டு. செங்குன்னியாருக்கு உகந்த நாளைச் செவ்வாயிலிருந்து ஞாயிற்றுக்கு மாற்றலாம் என்று முயன்று பார்த்தார்கள். கொட்டமுத்தில் கோடு பார்த்த போதும் ஆள் மேல் இறங்கிச் சாமியாடும் போதும் கேட்டுப் பார்த்தார்கள். பூசாரியே வருசம் ஒருமுறை பூவாக்கு போட்டுப் பார்க்கிறார். எதற்கும் செங்குன்னியார் அனுமதி தரவில்லை.
தினமும் மாலையில் விளக்குப் போடும் வேலை உண்டு. ராமசாமி இருந்தால் அவரே போய் விளக்குப் போட்டுவிட்டு வருவார். அவர் இல்லாவிட்டால் சரசம்மாவுக்குத்தான் அந்த வேலை. ஆள் வந்தாலும் வராவிட்டாலும் செவ்வாயில் பூசை போட வேண்டும். அதற்கு ஊர்ப்பணம் ஒதுக்கீடு உண்டு. அன்றைக்கு முழுநாள் கோயிலில் இருக்க வேண்டும் என்பதால் வேறு வேலைக்குப் போக முடியாது. பிற நாட்களில் வருமானம் இருக்காது என்றாலும் திருவிழாவின் ஒன்பது நாட்களிலும் சேர்த்து ஐம்பது அறுபதாயிரத்தைத் தாண்டும். ஊர் கொடுக்கும் வருசக்கூலியும் உண்டு. சொந்த வீடும் இருக்கிறது.
குறையேதும் இல்லை என்பதால் பெண் கொடுக்க நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்ற சரசம்மாவின் எதிர்பார்ப்பு ஓரிரு இடங்களில் பெண் விசாரித்த போதே பொசுக்கென்று போயிற்று. அவனை விடவும் பெண்கள் அதிகம் படித்திருந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்புக்குக் கீழ் படித்த பெண்களே இல்லை என்று தெரிந்தது. ‘இந்த மடையன் பன்னிரண்டு வரைக்குமாவது படித்துத் தொலைந்திருக்கலாம்’ என்று கோபம் வந்தது. சரி, படிப்புகூடப் பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டு கொடுக்க ஒருசில குடும்பம் தயாரானாலும் பெண்கள் ஒரே தலையசைப்பில் மறுத்து ஒதுக்கினார்கள். எல்லோரும் ஒரேமாதிரி ‘பூசாரியூடு எனக்கு ஆவாது’ என்றார்கள். ‘சாணி போட்டு ஊடு வழிச்சே எங்காலம் போயிரும். எனக்காவாது’ என்று ஒருத்தி சொன்னாளாம். ‘மாசத்துல மூனு நாளு பொறவாசல்ல படுக்கறதெல்லாம் என்னால முடியாது’ என்றாளாம் ஒருத்தி. பெண்களின் பெற்றோரும் ‘நல்லது கெட்டதுன்னு அசலூருக்குப் போவாத புடிக்காத… அவசரம் ஆத்தரத்துக்கு ஓட்டல் கடையில திங்காத கிங்காத காலம் பூராம் எப்படி எம்பிள்ள இருப்பா?’ என்று கேட்டார்கள்.
பெண் கொண்டு வரும் தானாவதிகளுக்குக் கொடுத்த பணத்திற்குக் கணக்கில்லை. ஒரு ஜாதகக் குறிப்பைக் கொண்டு வந்து நீட்டினால் நூறு, இருநூறு. பொருத்தம் இருக்கிறது என்று தெரிந்தால் போய் முதல் பேச்சு நடத்த ஐந்நூறு, ஆயிரம். தானாவதிக்கு இரைத்த பணத்தை வைத்திருந்தாலே ஒரு திருமணத்தை நடத்தியிருக்கலாம். இப்போதும் பிரகாசு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் செலவு என்றால் அது ஒன்றுதான். எல்லாம் ஒத்து வந்த போதும் ‘செங்குன்னி கோயில் பூசாரி வீடு’ என்னும் தகவல் தெரிந்ததும் அப்படியே முடிந்து கிணற்றில் போட்ட கல் போலாகிவிடும். சரசம்மாவின் பெண் விசாரிப்புக்கு அளவில்லை. தெரிந்தவர் தெரியாதவர் என்னும் பேதமில்லாமல் யாரைப் பார்த்தாலும் மகனுக்குப் பெண் விசாரிக்கத் தொடங்கிவிடுவார். அதனாலேயே சரசம்மாவிடம் பேச்சுக் கொடுக்கத் தயங்குவார்கள். செங்குன்னியார் பார்வை பிரகாசு மீது எப்போதுதான் படுமோ என்று ஏங்காத நாளில்லை. அதை நினைத்துவிட்டால் இரவுத் தூக்கமும் ஓடிவிடும். பூசாரி வீடு என்னும் அடையாளத்தை மாற்ற வழியில்லை. அதை ஏற்றுக்கொண்டு வரும் ஒருபெண்ணைச் செங்குன்னியார்தான் காட்ட வேண்டும்.
‘எம்மனசறிய உனக்கு எந்தக் கொறையாச்சும் வெச்சிருக்கறமா? இன்னமே வெக்கப் போறமா? தெரிஞ்சும் தெரியாத எதுனா இருந்தாலும் மாப்புக் குடுத்து ஒரு பொண்ணக் காட்டிக் குடுக்க மாட்டியா நீ?’ என்பதுதான் சரசம்மாவின் ஒரே வேண்டுதல்.
திருவிழாக் களைப்பெல்லாம் தீரட்டும் என்று இரண்டு நாள் பொறுத்துத்தான் ஊர்க்கூட்டம் வைத்திருந்தார்கள். கோயிலுக்குக் காணிக்கையாக வந்த தேங்காய்க் குலைகள், நுங்குக் குலைகள், சேவல்கள், ஆட்டுக்குட்டிகள், எருமைக்கன்றுகள் எல்லாவற்றையும் பொதுவில் ஏலம் விடுவது காலை பத்து மணிக்குத் தொடங்கி நடந்தது. அதன்பின் சாப்பாட்டுக்குக் கொஞ்ச நேரம். பிறகு கணக்கு வழக்குகள். தொழிலாளிகளுக்கு வருசக்கூலி கொடுக்கும் வேலை தொடங்க அடிச்சாயும் நேரமாயிற்று. அது முடிந்து மீதமுள்ள சாமிபணத்தை மாதவட்டிக்கு ஏலம் விடுவார்கள். பணத் தேவையுள்ளவர்கள் மிகுதி என்பதால் கூட்டமும் அதிகமாக இருந்தது. வட்டி எவ்வளவு என்றாலும் ஏலம் கூறி எடுப்பார்கள். எட்டு வட்டி, பத்து வட்டி எல்லாம் சாதாரணம். ‘அவசரத்து ஆவுது. வட்டி அதிகமுன்னாலும் சாமிக்குத்தான குடுக்கறம்’ என்பார்கள். எப்படியோ கோயிலுக்குப் பணம் சேர்ந்து கொண்டிருக்கிறது. கோயிலை ஒட்டி அரசுவேம்பு வளர்த்துத் திருமண மண்டபம் கட்டலாம் எனத் திட்டம். செங்குன்னியார் அனுமதி கொடுத்தால் கான்கிரீட் கூரை போட்டுக் கட்டிடம் கட்டலாம்.
பின்னிப் பிணையல் போட்ட பாம்புகளாய் வேர்கள் ஓடிய செங்குன்னியின் அடியில் ஐந்தாறு நாற்காலிகளில் கோயில் நிர்வாகக் குழுவினர் உட்கார்ந்திருந்தனர். அங்கங்கே கிடந்த கற்களில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் கூட்டம் பண ஏலம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. விசிறிவிட்ட அண்டங்காக்கைகள் போல இருசக்கர வாகனங்கள் இரைந்து கிடந்தன. ஏலம் முடிய முடிய ஒவ்வொன்றாகப் பறந்துவிடும்.
அதுவரைக்கும் பிரகாசு வந்து சேரவில்லை. ராமசாமியும் சரசம்மாவும் பதற்றத்தோடு நின்றார்கள். கைப்பேசியில் பலமுறை அழைத்துப் பார்த்தாயிற்று. சிலசமயம் ‘அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது’ என்று குரல் வந்தது. ஓரிரு முறை மணியடித்தாலும் அவன் எடுக்கவில்லை. பூசாரிப் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்ளும் போது வருசக்கூலியை அதிகப்படுத்திக் கேட்கும்படி ராமசாமிக்குச் சரசம்மா சொல்லியிருந்தார். அதையும் மாதாமாதம் எனப் பிரித்துப் பணம் ஏலம் விடும் அமாவாசை நாளில் கொடுத்தால் நல்லது என்று கேட்கவும் எண்ணம். பூசை நாளை ஞாயிற்றுக்கு மாற்ற இன்னொரு முறை பூவாக்கு கேட்கச் சொல்லலாம் என்றும் திட்டம். எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது. அவன் வரவில்லை என்றால் சொல்லச் சமாதானமும் பிடிபடவில்லை. ஊர் சொல்லியும் வரவில்லை என்று குற்றம் சுமத்தவும் செய்யலாம். பழைய காலமாக இருந்தால் தண்டம் விதிப்பார்கள். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. என்ன சொல்வார்களோ என்று தெரியவில்லை. சரசம்மாவின் கண் கோயிலுக்கு வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தது.
தொழிலாளிகளை ஒவ்வொருவராக அழைத்து வருசக்கூலியைக் கொடுக்கும் வேலை தொடங்கிய சமயத்தில் தூரத்தில் மினிடோரின் சத்தம் கேட்டது. நெடுஞ்சாலையில் ஓடும் பல வாகனங்களுக்கு இடையிலும் இந்த வண்டியின் சத்தத்தை அறியும் அளவு சரசம்மாவுக்குப் பழகியிருந்தது. கூலி கொடுப்பதில் மேளக்காரர்களோடு ஏதோ வாக்குவாதம். அந்தச் சத்தத்துக்கு இடையே பிரகாசு வந்து ராமசாமிக்குப் பின்னால் நின்ற பையன்களோடு சேர்ந்து கொண்டான். பத்துப் பதினொரு நாட்களாகக் கறுப்பு வேட்டி துண்டில் அவனைப் பார்த்துப் பழகியிருந்ததால் இப்போது பேண்ட், முழுக்கைச் சட்டையுடன் அடையாளம் தெரியாத யாரோ போலத் தெரிந்தது. பெண்கள் குறைவாகத்தான் இருந்தனர். ஏலத்தில் எடுக்கும் பணத்தைப் புருசனிடம் இருந்து உடனே பறித்துக் காப்பாற்றிக் கொள்ள வந்த பெண்கள். அவர்களோடு நின்றிருந்த சரசம்மாவைப் பார்க்க அவன் திரும்பவில்லை. சரி, வந்துவிட்டதே போதும், மிச்சத்தை ராமசாமி பார்த்துக் கொள்வார் என நிம்மதியோடு பக்கத்தில் இருந்த பெண்களுடன் சரசம்மா பேச ஆரம்பித்துவிட்டார்.
நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த நிர்வாகக் குழு ஆட்களைப் பிரகாசு பார்த்தான். உடன்பங்காளியில் பெரியப்பா முறையாகும் ஒருவர் இருந்தார். மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். எல்லோருமே அவனுக்கு மாமன் முறையாகும் குலத்துக்காரர்கள். பக்கத்து ஊரைச் சேர்ந்த மேலக்காட்டுக்காரரை நன்றாகத் தெரிந்தது. அவர் மகளைப் பெண் கேட்டுப் பேச்சு நடந்தபோது அறிந்திருந்தான். இன்னொருவர் சிங்காரம். அவர் ஊர் கொஞ்ச தூரம். தானாவதி வேலையும் செய்வார். ‘காசுபணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போவும். எஞ்செலவுக்குத்தான் வாங்கிக்குவன். நம்மாளுகளுக்கு எதோ என்னாலான நல்ல காரியம் செய்யலாமுன்னுதான் இதுல எறங்குனன்’ என்று தன் சேவை மனப்பான்மையைத் தானே சிலாகித்துப் பேசுவார். அவருக்கு அவன் கொடுத்த பணம் சில ஆயிரம் இருக்கும். இன்னொருவர் பெயர் தெரியவில்லை. ஆள் அடையாளம் தெரிந்தது. அவர் சொந்தத்தில் ஒருபெண் பார்த்த நினைவு இருந்தது.
இன்னும் ஒன்றிரண்டு பேரின் முகம் தெரியுமே தவிர யார் என்ன என்பதெல்லாம் தெரியவில்லை. திருவிழா நாட்களில் அவ்வப்போது வந்து ஏதாவது அதிகாரம் செய்வார்கள். நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர் என்று கெத்துக் காட்டுவார்கள். அப்படித் தெரிந்திருந்தது. மற்ற தொழிலாளிகளைப் போன்றவர் அல்ல பூசாரி. ஒரே சாதிக்காரர். அதனால் பணிந்து பேச வேண்டியதில்லை. எதையும் சத்தமாகக் கேட்கலாம். வாதடலாம். கூட்டத்திலிருந்து பங்காளிகளோ சொந்தக்காரர்களோ ஆதரவாக வரவும் வாய்ப்பிருக்கிறது. மரியாதைக்கும் குறைவிருக்காது. பூசாரிக்குரிய மதிப்பு குறையாமல் புத்தம் புதிய சில்வர் தாம்பாளத்தில் பழங்கள் வேட்டி சேலை எல்லாம் இருக்க அவற்றின் மேல் பணக்கட்டு ஒன்றை எடுத்து வைத்து ராமசாமியிடம் நீட்டினார்கள். எதுவும் பேசாமல் தாம்பாளத்தைக் கையில் வாங்கிக் கொண்டார்.
எல்லோரிடமும் கேட்பது போலச் ”சந்தோசமா?” என்றார் சிங்காரம். ”அதுக்கென்ன கொற? செங்குன்னியாரு காலடியில இருக்கறவனுக்குக் கொற வெப்பாரா? ஆனா…” என்று சொல்லி லேசாக இழுத்து வருசக் கூலியைக் கூட்ட வேண்டும் என்பதைத் தன் முதல் கோரிக்கையாக முன்வைத்தார் ராமசாமி. எவ்வளவு வேண்டும் என்று சொல்லாவிட்டாலும் அதைப் பற்றிக் குழுவினரிடம் கசமுசாவென்று பேச்சு வந்தது. கூட்டத்திலிருந்தும் குரல்கள் வந்தன. வருசக்கூலியைக் கூட்டித் தருவது பற்றிக் கொஞ்ச நேரம் விவாதம் நடந்தது. சிலர் ‘கொடுக்கலாம்’ என்றார்கள். சிலர் ‘இதுவே அதிகம்’ என்றார்கள். யார்யார் என்னென்ன சொல்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தார் சரசம்மா. ‘இது வருமானம் உள்ள வேலதான? மணியாட்டித் தட்ட நீட்டுனாக் காசு. பேருக்குக் குடுக்கற சம்பளத்துல என்ன ஏத்தம்?’ என்று சிலர் பேசும்போது கோபமாக வந்தது. கூட்டத்தில் பெண்கள் பேச அனுமதி இருந்தால் அவர்களை எல்லாம் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. இவர்களிடம் ரொம்பவும் கெஞ்சக் கூடாது, கொடுத்தால் கொடுக்கட்டும், இல்லாவிட்டால் செங்குன்னியாருக்குச் செய்த கடனாக இருக்கட்டும் என்று நினைத்தார். யாருக்கும் பதில் சொல்லாமல் முடிவாக வரட்டும் பார்க்கலாம் என்று ராமசாமியும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த விவாதம் முடியாது போலிருந்தது. ‘அட அஞ்சோ பத்தோ போட்டுக் குடுத்துப் பிரச்சினைய முடியுங்கப்பா. எவ்வளவு நேரமா நிக்கறது?’ என்று ஒருவர் கூட்டத்திலிருந்து கத்தினார். பணம் ஏலம் எடுக்க வந்த பலரும் அதே மனநிலையில்தான் இருந்தனர். நாற்காலியில் இருந்த பெரியப்பன் சட்டென்று ”சின்னப் பூசாரிகிட்ட ஒருவார்த்த கேளுங்கப்பா” என்று சொல்லிப் பிரகாசின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அவரோடு பெரிய பிரச்சினை ஏதுமில்லை என்றாலும் தம் பக்கம் பேசுவார் என்று பிரகாசு நினைக்கவில்லை. அவர் சொன்னதைச் சிலர் ஆமோதித்தனர். கூட்டத்தின் கண்கள் முழுக்கப் பிரகாசின் மேல் விழுந்தன. உடன் நின்ற பையன்கள் அவனைப் பிடித்து முன்னே தள்ளினர். ராமசாமிக்கு அருகில் வந்து நின்ற அவன் தலை குனிந்திருந்தது. ஏதும் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசனையில் இருப்பவனாய்த் தெரிந்தான்.
“செரி, சின்னப் பூசாரி… நீ என்ன சொல்ற?” என்று குழுவில் இருந்த மேலக்காட்டுக்காரர் கேட்டார்.
அவர் குரலில் லேசான ஏளனம் தொனித்த மாதிரி தெரிந்தது. என்ன சொல்வானோ என்று சரசம்மா பரபரப்போடு அவனையே பார்த்தார். குறைந்த தொகையைக் கேட்டுவிடுவானோ என்றிருந்தது. வெளியே கிளம்பிப் போகாமல் இருந்தால் விவரம் சொல்லியிருக்கலாம். போனவன் நேராகக் கூட்டத்துக்குத்தான் வந்திருக்கிறான். பிரகாசு மெல்லத் தலை நிமிர்த்தினான்.
“பூசாரி வேல எனக்கு வேண்டாம்” என்றான்.
அவன் குரல் முனகுவது போல வந்ததாலோ என்னவோ குழுவார்க்குக் கேட்கவில்லை. தானாவதி சிங்காரம் எழுந்து நின்று ‘அவன் என்னமோ சொல்றான். பேசாத இருங்க’ என்று கத்திச் சொல்லிச் சத்தத்தைக் கட்டுப்படுத்தினார். அமைதிக்கு நடுவே மீண்டும் பிரகாசு தெளிவான குரலில் சொன்னான்.
“இந்தப் பூசாரி வேல எனக்கு வேண்டாம்.”
ராமசாமி அதிர்ந்து அவனைப் பார்த்தார். பெண்கள் பக்கமிருந்து சாமியாடி போல ஓடிவந்த சரசம்மா “என்னடா பேசற? நாலு பேருத்துக்கு முன்னாடி என்ன பேசறதுன்னு இல்ல” என்று சத்தமிட்டு அவன் கன்னத்தில் அறைந்தார். “தப்புன்னு சொல்லு… தப்புன்னு சொல்லு” என்று மீண்டும் மீண்டும் சொன்னார். அறையை வாங்கிக் கொண்டு அப்படியே நின்றான். அம்மாவின் முகத்தைப் பார்க்கவில்லை.
“ஏம்மா… தோளுக்கு மேல வளந்த பையன நாலு பேருத்துக்கு முன்னால நீ இப்பிடி அடிக்கலமா… பேசாத போம்மா” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் விரட்டினார்.
சரசம்மா அசரவில்லை.
“சின்னப்பையன்… எதோ தெரியாத சொல்லீட்டான். அவன் செய்வான். இந்த வருசமே எல்லா வேலயும் அவந்தான் எடுத்துச் செஞ்சான். அவுங்கப்பந்தான் ஒதவியா இருந்தாரு” என்று தயவுச் சொற்களைக் குழுவைப் பார்த்துச் சொன்னார்.
“நாங்க பேசிக்கறம். நீ போயி அந்தப் பக்கம் நில்லும்மா” என்று தானாவதி சிங்காரம் விரட்டினார். சரசம்மா குரல் உள்ளடங்க ராமசாமி பக்கம் நகர்ந்து நின்றார்.
“நீ சொல்லுப்பா. செங்குன்னியாருக்குப் பரம்பரையா பூச பண்றது உங்க குடும்பந்தான். அது சுத்துப்பட்டு எட்டுப் பத்து ஊருல இருக்கற சாதிசனம் எல்லாருத்துக்கும் தெரியும். இப்ப வேண்டான்னு சொன்னா… எப்பிடி?” என்று குழுவிலிருந்து ஒருவர் கேட்டார்.
“கூலி ஏத்தலீன்னு பையனுக்குக் கோவம். இன்னக்கி இருக்கற வெலவாசிக்கு கட்டுப்படி ஆவோணுமில்ல. எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு கேட்டுப் பாத்து ஏத்தீரலாம்…” என்றார் தானாவதி சிங்காரம்.
“கூலிப் பிரச்சின எதும் இல்ல. எனக்கு வேண்டாம்” என்றான் பிரகாசு. அவன் குரலில் அழுத்தம் இருந்தது.
“பரம்பரயா வர்ற கவுரவும்டா தம்பி இது” என்றார் ஒருவர்.
“கவுரவம் எனக்கு வேண்டாம். பூச பண்ற பரம்பர எங்கப்பனோட முடிஞ்சு போச்சுன்னு நெனச்சுக்குங்க. இது சந்ததி இல்லாத பரம்பரைன்னா என்ன செய்வீங்களோ, அதச் செய்யுங்க” என்று பத்து வார்த்தை கூடுதலாகப் பேசினான் பிரகாசு. யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் குரலில் சத்தம் இருந்தது.
“என்னப்பா… இப்பிடிச் சொல்றான்?”
அவர் உடனிருந்த மற்றவர்களைப் பார்த்தார்.
“என்ன காரணமுன்னு கேளுங்க. எதுனாலும் நிவர்த்தி பண்ணீரலாம்.”
“அப்பிடி எதுன்னா சொன்னாப் பரவால்ல. எடுத்தொடன வேண்டாமுன்னு சொல்றான்னா… நாமெல்லாம் மயிரு புடுங்கவா இங்க வந்து உக்காந்திருக்கறம்?” என்று மேலக்காட்டுக்காரர் கோபத்தோடு சொன்னார்.
குனிந்தபடியே இமையை உயர்த்தி அவரைப் பார்த்த பிரகாசு பின் தாழ்த்திக் கொண்டான். பெரிய பிரச்சினை ஆகிவிடும் போலிருந்ததால் சரசம்மாவும் ராமசாமியும் அவனருகில் வந்து குசுகுசுவென்று ஏதோ சொல்லிச் சமாதானப்படுத்த முயன்றார்கள். அவன் தலை நிமிரவில்லை.
“தம்பி… ராமசாமி மவனே… இது சாமி குத்தமாயிரும். காரணத்தச் சொல்லு நீ… நிவர்த்தி பண்ணீரலாம்” என்றார் இன்னொருவர்.
அதற்கு மேலும் ஏதும் சொல்லாமல் இருக்க முடியாது என்று பிரகாசுக்குத் தோன்றியது.
“மினிடோரு ஓட்டறவனால சுத்தபத்தமா இருக்க முடியுமா?” என்று கேட்டான்.
‘எந்த வேல செஞ்சா என்ன? இருக்கணும்னா இருக்கலாம்” என்றார் பெரியப்பா.
“எனக்குக் கஷ்டம். செங்குன்னியார ஏமாத்த முடியாது” என்றான் பிரகாசு.
“உம்மேல ஒருத்தரும் ஒருசொல்லும் கொற சொல்லுல தம்பி… இப்ப இருக்கற மாதிரி இரு போதும்” என்றார் ஒருவர்.
“எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியுங்களா?” என்றான் பிரகாசு.
“என்னடா பெரிய பேச்சு பேசற? நானும் உங்கப்பனும் முப்பது வருசத்துக்கு மேல எல்லாத்தயும் புடிச்சுக்கிட்டுத்தான இருக்கறம்” என்று சரசம்மா எகிறிக்கொண்டு வந்தார். அவர் கையைப் பற்றி அமைதிப்படுத்தி நிறுத்தினார் ராமசாமி.
“நான் வெளிநாட்டுக்கு வேலக்கிப் போலாம்னு இருக்கறன். எனக்கு ஒத்து வராதுங்க” என்று சொல்லிவிட்டுத் தரையைப் பார்த்தான் பிரகாசு. அம்மாவை அவன் கண்டு கொள்ளவே இல்லை.
“போற வரைக்கும் பாருப்பா… போறது உறுதியாச்சுனா அப்ப என்ன செய்யறதுன்னு பேசிக்கலாம். கூலிய ஏத்தித் தர்றோம்” என்றார் சிங்காரம்.
“இல்லீங்க… ஒத்து வராதுங்க” என்று அழுத்தினான் பிரகாசு.
“எடுத்துக்கலீன்னா ஊர்க்கட்டுப்பாடு போடுங்க. அப்ப வழிக்கு வருவான்” என்று கூட்டத்திலிருந்து குரல் வந்தது. சொன்னவனைப் பார்க்காமலே தினேஷ் என்பதை ஊகித்தான். அவனோடு சிறுவயது வழக்கு உண்டு. அப்போது பேச்சை நிறுத்தியது இப்போது வரைக்கும் தொடர்கிறது.
“இந்தக் காலத்துல ஊர்க்கட்டுப்பாடு போட்டா நெலைக்குமாப்பா… போலீசுக்குப் போனா நம்மள நாலு பேரக் கொண்டோயி உள்ள வெச்சிருவான்” என்று பெரியப்பன் சொன்னார்.
“ஆளம்பு போவக் கூடாது, வரக் கூடாது, தண்ணிகிண்ணி பொழங்கக் கூடாதுன்னு இப்பெல்லாம் கட்டுப்பாடு போட முடியாது. அதெல்லாம் நம்ம கையில இல்ல” என்றார் ஒருவர் ஏக்கத்துடன்.
“வேண்ணா இந்தப் பையனுக்கு ஆரும் பொண்ணு குடுக்கக் கூடாதுன்னு சாதிசனத்துக்குச் சொல்லீரலாம். இப்பப் பொண்ணுப் பாத்துக்கிட்டுத்தான இருக்கறாங்க?” என்று கேட்டார் மேலக்காட்டார்.
ஓரடி முன்னால் வந்த பிரகாசு அவரை நேரடியாகப் பார்த்தான். பிறகு சொன்னான்.
“செரி, அதயும் இதயும் பேசி என்னத்துக்கு ஆவுது? பூசாரிப் பையனக் கட்டிக்கன்னு சொல்லி உங்க பொண்ணுகிட்டப் பேசிக் கலியாணம் பண்ணி வைங்க… செங்குன்னியாருக்குக் காலம் பூராப் பூச செய்யறன்.”
தொங்கிய செங்குன்னி மரக்கிளைகள் தொட்டில்களைப் போலக் காற்றில் அசைந்தாடின.
