
2016 ஆம் ஆண்டு வாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் விதி சமைப்பவர் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஒரு துறைக்குள் தனியொரு மனிதராகத் தளராத ஊக்கத்தால் மாற்றங்களையும் பங்களிப்பையும் கொண்டு வரும் முன்னோடிகளைப் பற்றிய மிக முக்கியமான கட்டுரை அது. அந்தக் கட்டுரையையொட்டி எழுத்தாளர் ம. நவீன் மலேசியாவில் அப்படி விதி சமைப்பவர் எனும் பதத்துக்கு எல்லா வகையிலும் பொருந்திப் போகக்கூடியவராகத் தேர்வு வாரிய மேனாள் அதிகாரி பி. எம். மூர்த்தியை அடையாளம் காட்டிப் பதிவொன்றை எழுதியிருந்தார். அந்தப் பதிவில் நவீன தமிழ் இலக்கியத்தைத் தமிழ்க் கல்விச்சூழலில் கொண்டு சேர்ப்பதற்கு மூர்த்தி மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அளிக்கப்பட்ட நெருக்குதல்களின் காரணமாக மூர்த்தி தன்னார்வப் பணி ஓய்வைப் பெற்றிருந்த சூழலில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
அதற்கு முன்பு வரை நான் அறிந்து வைத்திருந்த பி. எம். மூர்த்தி என்பவர் தமிழ் பொதுத் தேர்வு வினாத்தாட்களுக்குள் மாற்றங்களைக் கொண்டுவந்து திருத்தியமைப்பவராகவே பதிவாகியிருந்தார். ஆண்டுக்கொரு முறை தேர்வு வாரியக் கூட்டம் முடிந்து திரும்பும் இடைநிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியரின் கையில் மாற்றங்கள் கண்ட தமிழ்த் தேர்வுத்தாள் அல்லது தேர்வு வழிகாட்டிக் கையேடு, இலக்கிய வழிகாட்டி நூல் இப்படி ஏதாவது ஒரு நூல் நிச்சயமாக இருக்கும். இந்தப் பணிகளின் பின்னணியிலும் இருப்பவர் பி. எம். மூர்த்தியே என்பதையும் ஆசிரியரின் வாயிலாக அறிந்து வைத்திருந்தேன். ஆனால், தமிழ்த் தேர்வு, கல்விச்சூழலுக்குள் அவர் கொண்டு வந்திருந்த மாற்றங்களையும் பங்களிப்பைப் பற்றியும் விதி சமைப்பவர் கட்டுரையின் வாயிலாகவே முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. அதிலும், கல்விச்சூழலுக்குள் மூர்த்தி கொண்டு வந்திருந்த மாற்றங்களின் பலனை அனுபவித்த மாணவர்களில் ஒருவனாக அவரின் பங்களிப்பை இன்னுமே அணுக்கமாகவே என்னால் உணர முடிந்தது. பின்னாளில், ஆசிரியராக அவருடைய தேர்வு வாரியப்பணிகள் குறித்து நேரில் அறிந்து கொண்ட போது வியப்புணர்வும் பணிவுமே மேலோங்கியது.
மலேசியத் தமிழ்க் கல்விச் சூழலுக்கு மூர்த்தி அளித்திருக்கும் பங்களிப்பை, இலக்கியக் கல்விக்கு அளித்திருக்கும் மாற்றங்கள், தேர்வு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள் என இரண்டு அடிப்படைகளில் வகுத்துக் கொள்ளலாம். 1998 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரையில் மலேசியத் தேர்வு வாரியத்தில் தமிழ் பிரிவு அதிகாரியாகத் தொடங்கி உதவி இயக்குநர் வரையிலான பொறுப்புகளை பி. எம். மூர்த்தி ஏற்றிருந்தார். 1998 ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த போதிலும் முதல் ஓராண்டுக்குத் தேர்வு வாரியத்தின் பணிகளைக் கற்றுக் கொள்ளும் இளநிலை அதிகாரியாகவே மூர்த்தி செயற்பட்டிருக்கிறார். அந்த ஓராண்டு பயிற்சி காலக்கட்டத்தில்தான் தேர்வு சேமிப்பறையில் இருந்த கேள்வித்தாட்களைப் பார்வையிடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. பின்னாளில், தேர்வுதாளில் அவர் கொண்டு வந்த பல மாற்றங்களுக்கான உந்துதலை அங்கிருந்துதான் அவர் பெற்றிருக்கக்கூடும்.

1999 ஆம் ஆண்டு தேர்வு வாரிய ஆண்டு கூட்டத்தில் தமிழ் பிரிவு அதிகாரியாகப் பங்கேற்றப் போதுதான் எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடம் தேர்வுப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் இருப்பதை பி. எம். மூர்த்தி அறிகிறார். 1956 ஆம் ஆண்டு தொடங்கி தேர்வுப்பட்டியலில் இருந்து வந்த பாடம் நீக்கப்படும் அபாயத்தை எட்டியிருப்பது அவருக்குள் பெருத்த சோர்வை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் எடுத்துப் பயில முன்வராததற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சியை முன்னெடுக்கும் பொருட்டு நாடு தழுவிய தமிழாசிரியர்கள், தமிழ்மொழி உதவி இயக்குநர்கள் அடங்கிய தேசிய எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய நடவடிக்கைக் குழுவைத் தோற்றுவித்தார்.
தமிழ் இலக்கியப் பாடத்துக்கான முறையான பாட நூல்கள், தேர்வு வழிகாட்டிக் கையேடுகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்மை என பல போதாமைகளைக் கண்டறிகிறார். அவர் கண்டறிந்த போதாமைகளைச் சரிசெய்வதிலே அவருடைய அதற்கடுத்த பணியாண்டுகள் கழிந்தன. முதலாவதாக தமிழ் இலக்கியப் பாடத்தை எடுத்துப் பயில்வதற்கான பரப்புரையை வானொலி, நாளிதழ்கள் ஆகிய ஊடகங்களின் வாயிலாக மேற்கொண்டார். தமிழர்கள் அதிகம் ஒன்றுகூடும் தைப்பூசத் திருநாளின் போது இலக்கியப்பாடம் எடுப்பதன் அவசியம் தாங்கிய ஒருலட்சம் துண்டுபிரசுரங்களை அவர் தம் குழுவினரின் வாயிலாக வினியோகம் செய்தார். அதற்கடுத்ததாக, எஸ்.பி.எம் பொதுத் தேர்வில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடங்களைப் போலவே இலக்கியப்பாடத்துக்கும் தேவையான இலவசப் பாடநூல்களைப் பெற்றுத் தரும் முயற்சியைத் தொடங்கினார். அதற்கு முன்னர் வரை, ஓய்வு பெற்ற தமிழாசிரியரகள், தமிழார்வலர்கள், தமிழாசிரியர்கள் சிலரின் முயற்சியால் புத்தகங்கள் தருவிக்கப்பட்டுப் பள்ளி அட்டவணைக்கு வெளியேத்தான் இலக்கிய வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு பதிப்பு மட்டுமே கண்டிருக்கும் புத்தகங்கள், தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் என மாணவர்களுக்குப் புத்தகங்களைப் பெற்றுத்தருவதொன்றும் எளிதான பணியாகவும் இருக்கவில்லை. அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற முன்னூற்று ஐம்பதாயிரம் நிதியுதவியைக் கொண்டு தமிழ் இலக்கியப் பாட நூல்களான நாவல், நாடகம் ஆகிய நூல்கள் முறையே ஐந்தாயிரம் படிகள் வீதம் தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. அதற்கடுத்ததாக, மலாய் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களின் உட்கூறாகவே இருந்து வந்த இலக்கியக்கூறுகளைத் தமிழிலும் கொண்டு வரும் முயற்சியை பி. எம். மூர்த்தி தொடங்கினார். அதன்படி, மற்ற மொழிப் பாடங்களில் இருந்த பொதுவான இலக்கியக்கூறுகளோடு மரபு கவிதைகளையும் உள்ளடக்கிய கவிதைப் பூங்கொத்து எனும் நூலைக் கவிஞர் சீனி நைனா முகம்மது தயாரித்து தந்தார். அந்த நூல் உமா பதிப்பகத்தின் வாயிலாக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. அடுத்ததாக, நூல்களை நாடு முழுமையிலும் இருக்கும் இடைநிலைப்பள்ளிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைத் தன்னுடைய குழுவினரின் வாயிலாக மூர்த்தி மேற்கொண்டார்.

மாநிலம் வாரியாக இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப நூல்களைப் பிரித்தடுக்கி முத்திரை இடும் பணியைத் தன்னுடைய நண்பர்கள் விரிவுரைஞர் குணசீலன், சேகரன் ஆகியோரின் வாயிலாகச் செய்தார். அப்படிப் பிரித்தடுக்கப்பட்ட நூல்கள் ஆசிரியர்கள் மற்றும் மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர் வாயிலாக மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. அப்படி அளிக்கப்பட்ட நூல்கள் மாணவர்களுக்குக் கிடைக்கப்பெற்றுவிட்டதை உறுதி செய்ய மாணவர் ஒப்புதல் கடிதமொன்றும் தயாரிக்கப்பட்டது. அவ்வாறாக, மாணவர்களும் ஆசிரியர்களும் நூல்களைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலாகக் கையெடுத்திட்ட பாரங்களைப் பின்னாளில் அவரைக் காணச் சென்றிருந்தபோது என்னிடம் காட்டினார். தேர்வு வாரியப் பணியின் வாயிலாக அவர் செய்த பணிகள் என அவருடைய பங்களிப்பைச் சுருக்கிவிட முடியாதென்பதற்கான அடையாளமாகவே என்னால் அதனைக் காண முடிந்தது. முறையான கட்டமைப்பு, நிதி வினியோகம் ஆகியவற்றின் வாயிலாக கல்வி அமைச்சுப் பள்ளிகளில் செய்யும் முறையைத் தன்னுடைய பணி வரையறைகளுக்கு அப்பால் மூர்த்தி தன்னுடைய தேர்ந்த இலக்கிய நண்பர்களின் வாயிலாகச் செய்திருக்கிறார் என்றே என்னால் உணர முடிந்தது.
இவ்வாறாக தேசிய எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய நடவடிக்கைக் குழுவின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட படிப்படியான முயற்சிகள் மெல்ல பயனளிக்கத் தொடங்கியது. முன்னூற்று இருபதாக இருந்த எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப்பாட மாணவர்களின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு நான்காயிரத்து ஐந்நூறாக அதிகரித்தது. தேர்வுக்குரிய மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சி ஒருபுறமிருக்க தமிழ் இலக்கியப்பாடத்தின் உள்ளடக்கம், தேர்வு முறையிலும் மாற்றங்களை பி. எம். மூர்த்தி கொண்டு வந்தார். கடைநிலை மாணவர்களும் தமிழ் இலக்கியப்பாடத்தைத் துணிந்து எடுக்கும் பொருட்டுத் தேர்வுத்தாளில் அதிகமும் சிறிய மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் கொண்டுவரப்பட்டன. அத்துடன், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகளும் தேர்வுத்தாளில் இடம்பெற்றது. அது வரையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. வரதராசனார், அகிலன் ஆகியோர் எழுதிய முற்போக்கு இலக்கிய நாவல்களே தேர்வுக்குரிய நாவல்களாக இருந்து வந்தன. முதல் முறையாக, மலேசிய எழுத்தாளர் ஐ. இளவழகு எழுதிய ‘இலட்சியப் பயணம்’ நாவலைத் தேர்வுக்குரிய நாவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாவலைத் தேர்வு செய்தது தொடங்கி தேர்வுக்குரிய வகையில் திருத்தங்கள் மேற்கொண்டது வரையில் பி. எம் மூர்த்தி முக்கிய பங்காற்றினார். 2008 ஆம் ஆண்டு மலேசியா முழுவதும் உள்ள தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் கற்பிக்கும் ஆசிரியர்களின் வளர்ச்சிக்காக ‘இலக்கியகம்’ வழி பயிற்சிகள், கருத்தரங்குகள், சிறுவர் மற்றும் இளையோர் சிறுகதை எழுதும் போட்டிகள் என பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. எஸ். ராமகிருஷ்ணன் போன்ற தமிழின் முதன்மையான படைப்பாளிகளை அழைத்து வந்து பட்டறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு மலேசியக் கல்வி அமைச்சு எஸ். பி. எம் தேர்வில் பத்துப்பாட உச்சவரம்பை அறிவித்தது. இந்த முடிவினால், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களால் தமிழ் அல்லது தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டில் ஒரு பாடத்தை மட்டுமே எடுத்துப் பயிலும் சூழல் ஏற்பட்டது. அந்தச் சூழலால் ஏற்படும் பாதகங்களை ஒட்டியும் அப்போதைய மலேசிய நலவாழ்வுத்துறை அமைச்சர் தான்ஸ்ரீ சுப்ரமணியத்துக்கு விரிவான விளக்கங்கள் தயாரித்து அளித்து அமைச்சரவையில் பாட வரம்பு விலக்கு பெறவும் பி. எம் மூர்த்தியும் அவருடைய நண்பர்களுமே பின்னணியிலிருந்தனர். அவரும் அவருடைய நண்பர்களும் தயாரித்தளித்த விளக்கத்தைக் கொண்டே 10 + 2 எனும் நடைமுறையைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியது. பத்து கட்டாயப் பாடங்களுடன் கூடுதலாக இரண்டு தேர்வுப்பாடங்களையும் எடுத்துப் பயிலும் நடைமுறையால் தமிழ் இலக்கியப் பாடத்தை மீண்டுமொரு முறை தேர்வுபட்டியலிலிருந்து காணாமற்போகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். அரசின் புதிய நடைமுறை குறித்து ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் தான் ஸ்ரீ சுப்ரமணியம் இலக்கியகம் அமைப்புக்கு இருநூறாயிரம் நிதியுதவியை அறிவித்தார். அப்போதுதான் தவழத் தொடங்கியிருந்த இலக்கியக அமைப்பை வலுப்படுத்தவும் தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தவும் அவரளித்த பணம் இன்றியமையாததாக இருந்ததை அவருடன் இருந்த நண்பர்கள் சுட்டிக்காட்டவே செய்தனர். ஆனாலும், இரண்டாவது முறையாகவும் புதிய கலைத்திட்டத்தின்படி மாற்றம் கண்டிருக்கும் இலக்கிய நூல்களையே வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கும் முடிவையே மூர்த்தி எடுத்தார். அதனால், அவருடைய நண்பர்கள் சிலருடன் உள்ளூர மனத்தாங்கல் உருவாகவே செய்தது. ஆனாலும், பாட நூல்களைத் தரும் முடிவில் மூர்த்தி உறுதியாக இருந்தார். இப்படியாக, எஸ்.பி. எம் தமிழ் இலக்கியப் பாடத்துக்குள் நிகழ்ந்த மாற்றங்களால் 2018 ஆம் ஆண்டு தொடங்கி மற்ற தேர்வுக்குரிய பாடங்களைப் போலவே இலக்கியப்பாடத்துக்கும் தேவையான பாடநூல்களைப் பாடநூல் பிரிவே இலவசமாகத் தரும் நடைமுறை சாத்தியமாகியது.
அதே காலக்கட்டத்தில் மற்ற பொதுத்தேர்வுகளிலும் படைப்பிலக்கியப் பகுதியைச் செம்மைப்படுத்தும் பணியையும் மூர்த்தி செயற்படுத்தினார். தொடக்கப்பள்ளிப் பொதுத்தேர்வாக இருந்த யூ. பி. எஸ். ஆர் தேர்வில் படைப்பிலக்கியப் பகுதி 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலும் மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு தொடங்கி தமிழ் கருத்துணர்தல் தேர்வுத்தாளில் சிறுவர் சிறுகதைகட்டாயப்பகுதியாக ஆக்கப்பட்டது. அதனை போலவே, கட்டுரைத்தாளிலும் படங்களை ஒட்டிக் கதை எழுதும் கேள்வியும் இடம்பெறத் தொடங்கியது. கேள்வித்தாளின் வடிவமைப்பும் மாணவர்களின் உளவியலுக்கேற்றதாக கேலிச்சித்திரத் துணுக்குகள், கருத்துப்படங்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. தேர்வுத்தாளுக்குள் அவர் கொண்டு வந்திருந்த மாற்றங்கள் பள்ளி கற்றல் கற்பித்தல் சூழலை மாற்றியமைத்தது. பள்ளிகளில் மாணவர்களுக்குச் சிறுவர் சிறுகதை எழுதும் பட்டறைகள், வழிகாட்டி கையேடுகள் அளிக்கப்படத் தொடங்கின.

அவர் கொண்டு வந்த படைப்பிலக்கிய அறிமுகத்தால் தூண்டுதல் பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். தமிழ்ப்பள்ளியின் ஒட்டுமொத்த தரத்தை மதிப்பீடும் கருவியாக யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மாறியிருந்த சூழலில்தான் படைப்பிலக்கியப் பகுதி தேர்வுத்தாளில் அறிமுகமாகியிருந்தது. நல்ல தேர்வு முடிவுகளை ஈட்டும் அழுத்தத்தில் தொடர் கூடுதல் வகுப்புகள், வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடந்து கொண்டிருந்த சூழலில்தான் நான் உட்பட பல தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தேர்வை எதிர்கொண்டோம். மனனம் செய்தும் தொடர் பயிற்சியினாலுமே தேர்வுத்தாட்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பள்ளிகளில் கற்றுத்தரப்பட்டன. அந்தச் சூழலில் படைப்பிலக்கிய அறிமுகம் மெல்ல தேர்வுத்தாளை மாணவர்களுடன் உரையாடச் செய்தது எனலாம். என்னுடைய யூ. பி. எஸ். ஆர் தமிழ்த் கட்டுரைத்தாளில் வெளிவந்த கேலிச்சித்திரப் படம் இன்றளவும் நினைவில் இருக்கிறது. மரக்கிளையில் தொங்கி கொண்டிருக்கும் கூட்டிலிருந்து வெளியேறி தேனீக்கள் பறந்து கொண்டிருந்தன. மூர்க்கமாய்ப் படையெடுத்துக் கொண்டிருக்கும் தேனீக்களின் முன்னால் நண்பனின் மிதிவண்டியைக் கண்டு பதறிப் போன சிறுவனின் கேலிச்சித்திரமும் உரையாடலும் அமைந்திருந்தது. அந்தப் படத்தை ஒட்டி எண்பது சொற்களுக்கு மிகாமல் கதையொன்று எழுதும் படி கேள்வி அமைந்திருந்தது. அப்படியான சூழலை எதிர்கொண்ட நிகர்வாழ்வு அனுபவங்களே கதையைத் தானாக நகர்த்திக் கொண்டு சென்றது. தேர்வறையிலிருந்து வெளியேறி தேர்வச்சம் நீங்கியப்பின் அந்தக் கதைப் போக்கின் சாத்தியங்கள் குறித்து நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது என்னுடைய நினைவில் இருக்கிறது.
மேலும், 2005க்கு முன்னர் வரை இருந்த தமிழ்த்தேர்வுத்தாட்கள் மொழியால் தமிழில் இருந்தாலும் உள்ளடக்கத்தால் அதிகமும் பொதுவான செய்திகளையும் தகவல்களையும் கொண்டதாகவே இருந்தது. அதனையும் 70 விழுக்காடு தமிழ்ப் பண்பாடு சார்ந்ததாகவும் 30 விழுக்காடு மலேசியா, பொதுத்தன்மை கொண்டதாகவும் மாற்றியமைத்தார். அந்த 70 விழுக்காடு கேள்விகளின் உள்ளடக்கத்திலும் தமிழறிஞர்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும் என்ற அறிவிப்பும் வெளியீடப்பட்டது. அவ்வாறாகத்தான், தமிழுக்குப் பாடாற்றிய உ. வே. சாமிநாதய்யர், கி. ஆ. பெ விசுவநாதம், மலேசியத் தமிழறிஞர்கள் அ. பு. திருமாலனார் போன்றோர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
மூர்த்தி மேற்கொண்ட பணிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது அதற்காக அவர் கண்ட நெருக்குதல்களையும் எதிர்ப்புகளையும் சேர்த்தேதான் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. 2005ஆம் ஆண்டு யூ. பி. எஸ். ஆர் தமிழ்க் கட்டுரைத்தாளில் கொண்டு வரப்பட்ட பேச்சு நடையிலான உரையாடலுடன் கூடிய கேலிச்சித்திரப் பகுதி தமிழார்வலர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. உரையாடல் பகுதியில் அமைந்திருக்கும் பேச்சு நடை கொச்சை மொழிப் பயன்பாட்டுக்கு வித்திடுமெனத் தனித்தமிழ் பற்றாளர்களும் தமிழாசிரியர்களுமே எதிர்ப்பு தெரிவித்தனர். பேராக் மாநிலத் தலைமையாசிரியர் மன்றத்தினர் கட்டுரைப் பிரிவுப் பகுதியைத் தங்கள் மாநில மாணவர்கள் எழுதுவதிலிருந்து விலக்களிக்குமாறு கோரிக்கையையும் விடுத்தனர். அவர் மீதான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான கூட்டத்தையும் சில தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. தன்னுடைய அரசு பொறுப்பைத் தற்காப்பதில் மட்டுமே மூர்த்தி குறியாக இருந்திருப்பார் என்றால் நெருக்கடிகளின் முன்னால் பணிந்துதான் போயிருக்க வேண்டும். ஆனாலும், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தேர்வுத்தாளில் கொண்டுவரப்பட்ட பேச்சு நடை கொச்சையாக இல்லையென்பதை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மேலும், புனைவில் இயல்புத்தன்மையை உருவாக்க பேச்சு நடையே முக்கியமானதென்பதையும் எடுத்துரைத்தார். அவ்வாறே தனித்தமிழ் அமைப்புகளாலும் ஆர்வலர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட கவிஞர் சீனி நைனா முகம்மது வாயிலாகத் தன்னுடைய நன்னோக்கத்தையும் தெளிவுப்படுத்தினார். இப்படியான இடர்களைக் கடந்தே தேர்வுத்தாட்களில் சிறுகதைக்கான பாதை மெல்ல உருவாகி வந்தது.
மூர்த்தி தேர்வுத்தாட்களில் கொண்டு வந்த மாற்றங்கள் தனியொரு மனிதரால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கவில்லை. தன்னுடைய சிந்தனையைச் செயல் வடிவம் காணச் செய்ய தேர்ந்த தமிழாசிரியர்களையும் அதிகாரிகளையும் மூர்த்தி தொடர்ந்து அடையாளம் கண்டு ஊக்குவித்தே வந்தார். அப்படி அவரால் ஊக்கம் பெற்ற தமிழாசிரியர்களில் ஒருவர்தான் என்னுடைய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர் குமாரி ராதா. ஆண்டுக்கொரு முறை தேர்வுத்தாள் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் ஆசிரியர் கொண்டு வரும் மாதிரித் தேர்வுத்தாள், வழிகாட்டிக் கையேடு மீது ஆர்வம் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் பதற்றமும் இருக்கும். தேர்வுத்தாளில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் உடனடியாக ஒருவிதமான அச்சத்தையே அளிக்கக்கூடியதாகவே இருந்தது. அது வரையில் கேள்விகளுக்குப் பதிலளிக்க பழகிய முறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் புள்ளிகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளாக ஆசிரியர்களுக்குப் பயன்படலாம் என்ற அச்சம்தான் அதற்கான காரணம். ஆனால், என்னுடைய இடைநிலைப்பள்ளியின் இறுதியாண்டில் தேர்வில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பலவும் தேர்வு குறித்த பயத்தைக் குறைப்பதாகவே இருந்தது. 2011ஆம் ஆண்டு வரையில் இருந்த எஸ்.பி.எம் தமிழ் கருத்துணர்தல் தாளில் புறவயக்கேள்விகளே அதிகமும் இருந்தன. 2011ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட தாளில் அகவயக்கேள்விகள் அதிகமும் இடம்பெற்றிருந்தன. அதற்கு முன்னர் வரை அகவயக்கேள்விகளுக்கான தேர்வுகள் ஒன்றே போன்ற வாக்கியங்களில் சிற்சில மாற்றங்களுடன் குழப்புகின்ற வகையில் இருந்தன. மெல்லிய கயிற்றின் மீது நடப்பதைப் போல வாக்கியங்களுக்குள் இருக்கும் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டறிந்து சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், புதிய தேர்வுத்தாளில் கேலிச்சித்திரத்துணுக்கு அல்லது கருத்துப்படத்தையொட்டியக் கேள்விகள் அகவயக்கேள்விகளுக்கு மாற்றாக இடம்பெற்றிருந்தன. கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பற்றிய புரிதலைச் சோதிக்கும் வகையிலே கேள்விகள் இருந்தன.
அத்துடன் மாதிரிக் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகளும் சினிமா, சமூகச்சூழல் எனப் பலவகையிலும் தற்காலச் சூழலுடன் பொருந்திப் போகக்கூடியதாகவும் ஆர்வமூட்டக்கூடியதாகவும் இருந்தது. அத்துடன், பொதுவாகவே இடைநிலைப்பள்ளித் தமிழ்ப் பாட வழிகாட்டிக் கருத்தரங்குகளில் தவிர்க்கப்பட வேண்டிய கட்டுரை தேர்வாக சிறுகதையை ஆசிரியர்கள் குறிப்பிடுவர். ஏனென்றால், வழக்கமாகக் கட்டுரைகளை மதிப்பிட பயன்படுத்தப்படும் கருத்துகள், வாக்கிய அமைப்பு என்ற மதிப்பிட்டுக் கருவிகளின் வழியாகச் சிறுகதையை மதிப்பிட முடியாது. அத்துடன், சிறுகதையை எழுதும் முறையைக் கற்பிப்பதென்பது மாணவர்களின் கற்பனையாற்றலையும் வளப்படுத்தும் பயிற்சியும் சேர்த்தே அளிப்பதாகும். இந்தக் காரணங்களால் சிறுகதை பகுதியை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டிய பிரிவாகவே ஆசிரியர்கள் குறிப்பிடுவர். ஆனால், அந்தச் சூழலும் மெல்ல மாற்றம் கண்டது. என்னுடைய தமிழாசிரியர் குமாரி ராதா தேர்வில் சிறுகதைப் பகுதியைத் தெரிவு செய்வதற்கான அனுமதியை வழங்கினார். அது வரையில் தேர்வில் மற்றொரு பிரிவாகக் கடந்து சென்ற சிறுகதையைத் துணிவுடன் தேர்வு செய்தோம். ஒரு படத்தின் மொத்தத் திரைக்கதையையும் சுருக்கி எழுதுவது, ஒரு ஊரில் எனக் கதையைத் தொடங்குவதென நிகர்வாழ்வில் அறிமுகமாகியிருந்த கதைகளையே முதலில் பலரும் தேர்வில் எழுதத் தொடங்கினார்கள். தேர்வு முடிவுகளைக் கையளிக்கும் போது சிறுகதையின் அபத்தங்களை வேடிக்கையாகவே ஆசிரியர் சுட்டிக்காட்டினார். அதோடு, தேர்வு வாரியம் தந்திருந்த மாதிரிச் சிறுகதைகளை வாசிக்கும் பயிற்சி தரப்பட்டது. மெல்ல, சிறுகதைக்கான கட்டமைப்பு, உரையாடல் என ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டுக் கதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டன. சிறுகதை எனும் இலக்கிய வடிவத்தின் அடிப்படையான வடிவப் பயிற்சியையும் அதன் மீதான ஆர்வமும் அப்படித்தான் எழுந்தது. அந்தத் தொடர் பயிற்சியினால்தான், 2012 ஆம் ஆண்டு பகாங் மாநிலம் தழுவிய சிறுகதைப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசினை வென்றேன்.
பொதுத்தேர்வுகளில் சிறுகதை அறிமுகம் கண்டதும் ஆசிரியர்களுக்குச் சிறுகதை குறித்து விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நன்னெறிக்கதைகள், கருத்துகள் அடிப்படையில் கல்விச்சூழலில் கதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் நவீனச்சிறுகதை வடிவத்தை ஆசிரியர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிக்கலை முன்னரே எழுத்தாளர்களாகவும் அறியப்பட்டிருந்த ஆசிரியர்களான ம. நவீன், கே. பாலமுருகன், விஸ்வநாதன் போன்றோரின் வாயிலாக நேர் செய்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த ‘சிறுகதை ஒரு சமையல் குறிப்பு’ எனும் சிறுகதை நுட்பங்களை விளக்கும் கட்டுரையைக் கொண்டு ஆசிரியர்களுக்குச் சிறுகதை குறித்து விளக்கமளித்தார். எழுத்தாளர்களின் வாயிலாகவே, மாணவர்களுக்கும் சிறுகதை வழிகாட்டிக் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் வழியே, ஆசிரியர்களிலும் சிறுகதை எழுதும் ஆற்றல் கண்டறியப்பட்டது. மேலும், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தங்களுக்கான இலக்கிய வாசல்களையும் கண்டடைந்தனர்.
அப்படியாக, கல்விசூழலில் மூர்த்தி மேற்கொண்ட படைப்பிலக்கிய அறிமுகத்தால் தங்களுக்கான இலக்கிய வாசல்களை ஒரு புதிய தலைமுறை கண்டு கொண்டது. அந்தத் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளியாக வல்லினம் விருது பெறும் பி. எம் மூர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
