
உலக இலக்கிய வாசகர்கள் அறிந்து வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் குறிப்பிடத்தக்கவர். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன. போலிஷ், ஜெர்மன், செக் போன்ற உலக மொழிகளிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இவரது புனைவுகள் மொழியாக்கம் கண்டு வாசிக்கப்படுகின்றன. எழுத்தாளராக மட்டுமல்லாது கவிஞராகவும் ஆய்வறிஞராகவும் அறியப்படும் பெருமாள்முருகனிடம் இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக எடுக்கப்பட்டது. ‘மாதொருபாகன்’ சர்ச்சைகளை வைத்தே அவரது பல நேர்காணல்களை வாசிக்கக் கிடைக்கும் சூழலில் வல்லினம் மேற்கொண்டுள்ள இந்த நேர்காணல் அவரது படைப்புலகை விரிவான தளத்தில் ஆராய்கிறது. பெருமாள்முருகனின் ஆளுமை குறித்த ஓர் ஒட்டுமொத்த வடிவத்தை வழங்க முயல்கிறது.
எந்தப் புள்ளியில் இருந்து நீங்கள் உங்களை எழுத்தாளராக அடையாளம் கண்டு கொண்டீர்கள்?
பெருமாள்முருகன்: எட்டு ஒன்பது வயதில் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்த டிரான்சிஸ்டர் மூலம் எழுதும் தூண்டுதல் பெற்றேன். அஞ்சல் அட்டையில் சிறுசிறு பாடல்கள் எழுதி வாரம் ஒருமுறை எங்கள் ஊருக்கு வரும் அஞ்சல்காரர் மூலம் அனுப்புவேன். அப்போது ‘எழுத்தாளர்’ என்னும் வகைமை இருப்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. பாடப்புத்தகத்தில் வாசித்த மரபுக் கவிதைகளின் சந்தத்தில் புதிய சொற்களைப் போட்டு எழுதும் பழக்கம் உயர்நிலைப் பள்ளி நாட்களில் வந்தது. அவற்றைக் கவனித்த என் தமிழாசிரியர் வழியாகக் கவிதைப் போட்டிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவெளி பற்றிய ஒவ்வாமை கொண்ட என் மனநிலையை அப்போட்டிப் பங்கேற்பு சற்றே மாற்றியது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது பாரதியார் நூற்றாண்டு வந்தது. அதையொட்டி எங்கள் கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அது கொடுத்த பரவசம் பெரிது. அதுதான் எழுத்தாளனாக என்னை அடையாளம் கண்டுகொண்ட உணர்வுப்பூர்வமான தருணம் என்று நினைக்கிறேன். அப்போதிருந்து என் எதிர்காலம் இலக்கியத்தோடானது என்று தோன்ற ஆரம்பித்தது.
இந்த பதில் உங்கள் இளமை காலத்தை அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அது குறித்து கூறமுடியுமா?
பெருமாள்முருகன்: என் முன்னோர்கள் உழவர்கள். மேட்டாங்காட்டு வேளாண்மை. என் தாத்தாவுக்குப் பதினொரு ஏக்கர் நிலம் இருந்தது. மூன்று மகன்களுக்கும் ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பகிர்ந்து கொடுத்துவிட்டுத் தமக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டிருந்தார். நிலத்திற்குள்ளேயே குடியிருந்தோம். மூன்று ஏக்கர் நிலத்தில் இரவுபகல் பாடுபட்டாலும் குடும்பம் வயிறாரச் சாப்பிட முடியாது. அதனால் என் அப்பா சிறிய சோடாக்கடை நடத்தினார். வீட்டிலேயே சோடாவும் கலரும் தயாரித்து வாரச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று காலை முதல் மாலை வரை விற்பனை செய்து வருவார். வாரம் மூன்று சந்தைக்குப் போவார். சந்தைக்குச் செல்வதற்கு முந்தைய நாள் இரவு சோடா கலர் தயாரிக்கக் குடும்பமே வேலை செய்வோம்.
ஆடுமாடுகள் வைத்திருந்தோம். அவற்றின் தீவனத்திற்கு ஏற்ற வகையில் பயிர் செய்வோம். நிலம், ஆடுமாடுகளின் பொறுப்பு அம்மாவுக்கு. அம்மா எல்லா வேலைகளும் செய்வார். ஏர் உழுவது, ஏற்றம் இறைப்பது உட்பட. அம்மா, அப்பா, அண்ணன், நான் என நால்வர் கொண்ட குடும்பம். நிலத்திலும் சோடாக்கடையிலும் நால்வருமே வேலை செய்வோம். என் தந்தைக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனால் குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள். இவற்றுக்கு இடையே நானும் அண்ணனும் பள்ளிக்குச் சென்றோம். காமராசர் கொண்டு வந்த இலவச மதிய உணவுத் திட்டத்தால் பயன் பெற்றவன் நான். அப்போது கோதுமைச் சோறு போடுவார்கள். வாசனை பிடிக்காவிட்டாலும் சூடாக இருப்பதால் சாப்பிடுவோம். என் தாய்தந்தை உட்பட முன்னோர்கள் எல்லோருமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். கல்வி வாசனை பெற்ற முதல் தலைமுறை நான்.
சிறுவயதிலேயே வாசிப்பில் எனக்குப் பேரார்வம் இருந்தது. பாடப்புத்தகத்தைத் தவிர வாசிக்க வேறேதும் கிடைக்காது. வாரச் சந்தையில் பொட்டலம் கட்டி வரும் பத்திரிகைத் தாள்களைச் சேகரித்து வாசிப்பேன். என் பாட்டி, சித்தி இருவர், அம்மா என நால்வருமே பொட்டலத் தாள்களை எனக்காகச் சேகரித்துத் தருவார்கள். ஆனந்த விகடன், குமுதம், ராணி உள்ளிட்ட வார இதழ்களின் பக்கங்களை அப்படித்தான் வாசித்தேன். ஒரு கதையின் பாதி இருந்தாலும் வாசிப்பேன். சிலவற்றில் முதல் இருக்கும்; முடிவு இருக்காது. சிலவற்றில் முடிவு இருக்கும்; முதல் இருக்காது. சிலவற்றில் முதலும் முடிவும் இருக்காது; நடு இருக்கும். விடுபட்ட பகுதிகளைக் கற்பனை செய்வது பிடித்தமான விஷயம். என் பெரியம்மா வீடு நகரத்தில் இருந்தது. அங்கே சில பத்திரிகைகள் கிடைக்கும். பள்ளி விடுமுறையில் அவற்றை வாசிக்கவே அங்கே செல்வேன். என் பதினான்காம் வயதில் என் தந்தை ஒரு திரையரங்கில் சோடாக்கடை வைத்தார். அப்போது சில பத்திரிகைகளை விலைக்கு வாங்கும் அளவு என் கையில் காசு புரள ஆரம்பித்தது. அப்போதுதான் மாவட்டக் கிளை நூலகமும் எனக்கு அறிமுகம் ஆயிற்று. அதன் பின் என் வாசிப்புக்கு ஓரளவு தீனி கிடைத்தது.
பொதுவாகவே கல்வியாளர்களுக்கு இலக்கியம் தூரம் எனும் விமர்சனங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு கல்வியாளரான நீங்கள் இலக்கியத்தில் ஈடுபட்டபோது அதற்கு உடனடியான கவனம் கிடைத்ததா?
பெருமாள்முருகன்: நான் கல்வியாளராக இருந்து இலக்கியத்திற்கு வந்தவன் அல்ல. எழுத்துக்கு இலக்கியக் கல்வி உதவும் என்று அத்துறைக்கு வந்தவன். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல் பாடம் எடுத்துப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதும் எழுத்தாளனாக என்னை உணர்ந்ததால் இலக்கியக் கல்வியை நாடிச் சென்றேன். பொறியியல் படிக்கத்தான் என் ஆசிரியர்கள் வழிகாட்டினர். அதில் எனக்கு ஈடுபாடில்லை என்றதால் அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யச் சொன்னார்கள். எல்லோருடைய எதிர்ப்பையும் கடந்து இலக்கியக் கல்வி பயிலச் சேர்ந்தேன். கல்லூரியில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் கூட என் ஆர்வத்தை மெச்சவில்லை. ஏதோ பித்துப் பிடித்து வந்து சேர்ந்திருப்பதாகக் கருதினார்கள். சக மாணவர்கள் எனக்குப் புத்தி பிசகு என்று நினைத்தார்கள். எனக்கு இலக்கியப் பித்துப் பிடித்துத்தான் இருந்தது. அதைக் கொண்டு எல்லாவற்றையும் கடந்தேன். கல்வி நிறுவனங்களில் நவீன இலக்கிய ஆர்வம் உடைய ஆசிரியர்கள், மாணவர்களுடன் என் நட்பு அமைந்தது. நிறுவனத்திற்கு வெளியே இயங்கிய நவீன இலக்கிய உலகத்தோடும் பரிச்சயம் கொண்டேன். ஆகவே கல்விக்கும் எழுத்துக்கும் இயைபைக் காண முடிந்தது. ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் வைக்கக் கூடாது என்பார்கள். நான் அப்படித்தான் வைத்திருந்தேன். ஆறும் வளம்; சேறும் வளம். இரண்டும் எனக்கு உதவின. பிறர் கவனம் பற்றிச் சிறுவயது முதலே கவலை ஏதுமில்லை. என் முதல் நாவல் ஏறுவெயில் (1991) வெளியான போது எம்.பில். மாணவன் நான். மு.வரதராசனாரின் நாவல்களுக்குப் பழகியிருந்த கல்வித்துறை என் நாவலைக் கண்டு முகம் சுளித்தது மட்டுமல்ல, முகத்தையே திருப்பிக் கொண்டது.
பெருமாள்முருகன்: என் மாணவர்கள் எல்லோரும் முதல்தலைமுறையாக உயர்கல்வி வாசலை எட்டியவர்கள். அவர்களுக்கு இலக்கிய வாசனையை உணர்த்துவதே என் முதல் வேலை. வகுப்புகளில் நூல்களை அறிமுகப்படுத்துவேன். அவர்களுக்கு அது போதாது. என்னிடம் இருந்த நூல்களில் முதல் வாசிப்புக்கு உகந்தவை என்று கிட்டத்தட்ட நூறு நூல்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவற்றை மாணவர்களுக்கு வழங்குவேன். கிட்டத்தட்ட ஒரு நூலகச் செயல்பாடு போலக் குறிப்பேட்டில் பெயர் எழுதிக் கொண்டு நூலைக் கொடுப்பேன். கால அவகாசமும் உண்டு. வாசித்த நூல் பற்றி ஒருபக்கத்திற்குத் தம் கருத்தை எழுதி வர வேண்டும் என்பதும் நிபந்தனை. அப்படி வாசிப்புக்குள் வந்த என் மாணவர்கள் பலர்.
இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றையும் மாணவர்கள் பங்களிப்போடு நடத்தியது உண்டு. நிறுவனத்திற்குள் இச்செயல்பாடுகளுக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்ட போது வெளியில் முயற்சிகளைத் தொடர்ந்தேன். கூடு என்னும் அமைப்பைத் தொடங்கி என் வீட்டு மொட்டைமாடியில் மாதந்தோறும் கூட்டம் நடத்தினோம். அதன் வழியாக என் மாணவர்கள் பலர் எழுத்தாளர்களாகவும் உருவாயினர். சிலர் நூல்கள் வெளியிட்டுள்ளனர். நன்றாக எழுத முடிந்தவர்கள் கூட மேலெழுந்து வர முடியவில்லை. முதல் தலைமுறையில் கற்றவர்களுக்கே உரிய வாழ்நிலைப் பிரச்சினை அவர்களை ஒரு எல்லையோடு நிறுத்திவிடுகிறது. சாதியும் நானும், எங்கள் ஐயா ஆகிய நூல்கள் என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள். அவை நல்ல கவனம் பெற்றன. என்னாலும் அவ்வளவுதான் முடிந்தது. இவற்றையும் தவிர்த்திருந்தால் இன்னும் சில நூல்களை எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. எனினும் எத்தனையோ மாணவர்களுக்கு வாசிப்பு ருசியைக் காட்டியதில் நிறைவு பெறுகிறேன்.

உங்கள் இலக்கிய ஆசிரியராக யாரைச் சொல்வீர்கள். அதாவது குறிப்பிட்ட இலக்கிய ஆளுமையின் முகாமில் இருந்து வந்தவரா நீங்கள்?
பெருமாள் முருகன்: அப்படி ஓர் ஆளுமையைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இளங்கலை பயிலும்போது ஓர் ஆசிரியர் மூலமாகத் தி. ஜானகிராமன் நாவல்கள் அறிமுகமாயின. முதுகலை பயிலும் போது நவீன இலக்கிய வாசிப்புக்கு என்னை ஆற்றுப்படுத்திய ஆசிரியர் மூலம் க.நா.சு., சி.சு.செல்லப்பா முதலியோர் அறிமுகமாயினர். அக்காலத்துச் சிற்றிதழ்கள் பலவற்றையும் வாசித்தேன். பிறகு ஆய்வுப் படிப்புக்காகச் சென்னை வந்தபோது மார்க்சிய லெனினிய இயக்கத் தோழர்களின் செயல்பாட்டில் இணைந்தேன். பா.செயப்பிரகாசம் பொறுப்பாசிரியராக இருந்த ‘மனஓசை’ இதழில் நிறைய எழுதினேன். இலக்கியம் பற்றிய பார்வையில் பா.செ.வைவிட அவ்விதழ் ஆசிரியர் குழுவில் இயங்கிய சுரேஷ் என்கிற சீனிவாசனின் பார்வையோடு என்னால் இணக்கம் கொள்ள முடிந்தது. அப்போது சுகுமாரனோடும் தொடர்பு ஏற்பட்டது. பா.செயப்பிரகாசம், சுரேஷ், சுகுமாரன் மூவரையும் கல்வி வளாகத்திற்கு வெளியே என் ஆசிரியர்களாகக் குறிப்பிட்டுச் சொல்வது என் வழக்கம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் இலக்கியப் பார்வையும் வேறு வேறு. ஒருவரை வரித்துக் கொள்ளும் மரபுக்கு எதிரானது என் மனநிலை. அது இயல்பாகவே அமைந்திருந்தது.
நவீன இலக்கியம் என்பதை நீங்கள் எப்படி வரையறை செய்கிறீர்கள்?
பெருமாள்முருகன்: விழுமியங்களை வலியுறுத்துவது மரபிலக்கியம். விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும் விழுமிய மீறல்களைக் கவனம் எடுத்துப் பரிசீலிப்பதும் நவீன இலக்கியம் என்பது என் எளிய புரிதல்.
உங்கள் இலக்கிய வாழ்க்கை கவிதைகளிலிருந்து தொடங்குவதை அறிகிறோம். ஆகவே இன்றைய தமிழ் கவிதைகளின் போக்குகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்.
பெருமாள்முருகன்: என் எழுத்து வாழ்க்கை கவிதையில் தொடங்கியதாலோ என்னவோ இன்றைக்கு வரைக்கும் அது என்னை விடவில்லை. அல்லது நான் அதை விடவில்லை என்றும் சொல்லலாம். இப்போது எனக்காக எழுதிக் கொள்கிறேன். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் அவ்வப்போது அப்படி எழுதிய கவிதைகளைச் சமீபத்தில் வாசித்த போது சிலவற்றை வெளியிடலாம் என்று தோன்றி இதழ்களுக்குக் கொடுத்தேன். காலச்சுவடு, உயிர் எழுத்து, உயிர்மை ஆகிய மூன்று முக்கியமான இலக்கிய இதழ்களில் இந்த மாதம் (அக்டோபர் 2025) இருபது கவிதைகளுக்கு மேல் வெளியாகியிருக்கின்றன. கவிமனதை இழக்கவில்லை என்னும் நம்பிக்கை தோன்றி உற்சாகம் தந்திருக்கிறது.
கவிதையின் மேலுள்ள ஈடுபாட்டால் தொடர்ந்து வாசித்தும் வருகிறேன். சிறுகதை, நாவல்களை விடவும் கவிதைகளை வாசிப்பது எனக்குப் பிடித்தமானது. அவற்றை விளக்கிப் பேசுவதும் எழுதுவதும் சுகமானது. அப்படி நான் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட ‘கவிதை மாமருந்து’ நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் கவிதையின் போக்கு பெருமளவு மாறியிருக்கிறது. உவமை, படிமம், உருவகம், குறியீடு முதலிய கவிதைக் கூறுகள் பின்னுக்குப் போய்விட்டன. எதையும் நேரடியாகச் சொல்லும் முறை வழக்குப் பெற்றிருக்கிறது. அன்றாட வாழ்வின் கணங்கள் கவிதையில் கூடுதலாக இடம்பெறுகின்றன. சாதியும் அரசியலும் கவிதைகளில் தயக்கமில்லாமல் பேசும் பொருளாகியுள்ளன. நவீன வாழ்வின் கொண்டாட்டத் தருணங்களுக்குக் கவிதையில் இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் கவிதைக்கு வாசகப் பரப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் மொழியைப் பயன்படுத்துவதில் இந்தத் தலைமுறைக்கு இருக்கும் தெளிவின்மை என்று கருதுகிறேன். ஆனால் உலக அளவில் எல்லா மொழிகளிலும் கவிதைக்கு வாசகர் இல்லை என்கிறார்கள். கவிதை நூல்களை வெளியிடப் பதிப்பகங்கள் விரும்புவதில்லை. பொதுத்தளத்தில் வைத்தும் இப்பிரச்சினையைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
தங்கள் கதைகளில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை அதிகம் பதிவாகிறது. அவர்களின் வாழ்வை நீங்கள் நெருக்கமாக அறிந்துள்ளீர்களா?
பெருமாள்முருகன்: கொஞ்சம் நிலம் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். சோற்றுக்கு அலைந்த வாழ்க்கைதான். என் பால்யத்தில் கொங்கு நாட்டு மேட்டுக்காட்டு வாழ்க்கை விளிம்பு நிலை வாழ்க்கைதான். அங்கே வாழ்ந்த பிற சாதியாரோடும் எனக்கு நெருக்க்ம் உண்டு. திரையரங்கில் என் தந்தை கடை நடத்தியதால் அந்த வாழ்க்கையும் தெரியும். கல்லூரி ஆசிரியரான பிறகு என் மாணவர்கள் எல்லோரும் விளிம்பு நிலைக் குடும்பங்களில் இருந்து வருபவர்களாக இருந்தார்கள். இப்போதும் என் கிராமத்தோடு நெருங்கித்தான் இருக்கிறேன். அங்கிருக்கும் வாழ்வின் கூறுகளை எல்லாம் அறிகிறேன். இப்படி என் வாழ்வு முழுவதும் விளிம்பு நிலை மக்களோடுதான். அவர்கள் வாழ்நிலையையும் மனநிலையையும் என்னால் எளிதாகப் படிக்க முடியும்.
வளர்ப்புப் பிராணிகள் குறித்த கதைகளை அதிகம் எழுதியுள்ளீர்கள். அவற்றின் மீது உங்கள் நெருக்கம் எத்தகையது?
பெருமாள்முருகன்: வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவனாக வளர்ப்பு விலங்குகளோடே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. செம்மறிகளும் வெள்ளாடுகளும் எப்போதும் எங்கள் பட்டியில் உண்டு. மாடோ எருமையோ இல்லாமல் கட்டுத்தறி ஒருநாளும் இருந்ததில்லை. நாயும் பூனையும் எங்கள் வாழ்க்கைத் துணைகள். இவ்வரிசையில் கோழியும் உண்டு. இவற்றோடு இயைந்த வாழ்வே எனது. நடுத்தர வாழ்க்கை பழக்கமான பிறகு வீட்டு விலங்காக வளர்க்கும் முறையும் பழகியிருக்கிறது. வளர்ப்பு விலங்குகள் மனித உறவுகளில் செலுத்தும் தாக்கத்தை இழை பிரித்துப் பார்க்கும் வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. அத்தகைய கதைகளை எழுதுகிறேன்.
மாதொரு பாகன் நாவலுக்கு நிகழ்ந்த நெருக்கடிகள் இன்று பெருமாள் முருகனின் புனைவுக்கான அக, புற உலகை எவ்வாறு கட்டமைத்துள்ளது?
பெருமாள்முருகன்: அதை இன்னும் சரிவர என்னால் பகுத்துச் சொல்ல முடியவில்லை. புறவுலகத்தை அச்சத்தோடு காண்கிறேன். முடிந்தவரைக்கும் அந்தத் தொடர்பை அறுத்துக்கொள்ளப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. அதற்கேற்பவே அகவுலக மாற்றமும் நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். எப்படி என்பதில் எனக்குத் தெளிவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஓரளவு சொல்ல முடியுமோ என்னவோ.
அச்சூழலை உங்கள் குடும்பத்தில் எவ்வாறு எதிர்க்கொண்டனர்? வேலையிடத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டனவா?
பெருமாள்முருகன்: ஆம். எல்லாத் திசைகளில் இருந்தும் நெருக்குதல் வந்தது. எப்படி எப்படியோ சமாளித்து மீண்டோம். அதைப் பற்றிப் பேசினால் அந்த மனநிலைக்குள் மீண்டும் செல்ல வேண்டி வரும் என்னும் பயத்தால் தவிர்த்து வருகிறேன். அவற்றைப் பொதுவெளியில் பேச இன்னும் கால அவகாசம் தேவை.
ஆழுள்ளத்தில் துன்பப்படும் ஒரு பெண்ணின் அசாதாரண முடிவுகளைப் பின்னி இருப்பதாக மாதொருபாகன் நாவல் முடிகிறது. சுதந்திரம், விடுபடுதலே என்றாலும் நாவலின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் முன்பே முடிவு செய்தீர்களா? கதையின் போக்கில் முடிவு மாற்றப்பட்டதா?
பெருமாள் முருகன்: பெரும்பாலும் முடிவு உட்பட நாவலின் முழுவடிவம் மனதில் உருவான பிறகே எழுதுவது என் வழக்கம். எழுதிச் செல்கையில் மாற்றங்கள், சேர்க்கைகள் எல்லாம் நேரும். முன்கூட்டிய தீர்மானங்கள் மாறிப் போவதும் உண்டு. மாதொருபாகனைப் பொருத்தவரை இந்த முடிவு ஏற்கனவே என் மனதில் இருந்ததுதான். திருவிழாக் கூட்டத்தில் பொன்னாவின் நடவடிக்கைகளை விவரிக்கும் அத்தியாயம் வரும்போது அதை எப்படித் தொடங்குவது என்று குழப்பமாயிற்று. அவள் எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டால் தான் அச்சூழலை எதிர்கொள்ள முடியும். எதைப் பிடித்துக் கொண்டு விடுபடுவாள் என்பது பிடிபடவில்லை. ஏதேதோ வரிகளை எழுதிப் பார்த்தேன். ஒன்றுமே சரியாக வரவில்லை.
அடுத்தடுத்த வரிகளுக்கு இழுத்துச் செல்லும் வலுக் கொண்டதாக முதல் வரி அமைய வேண்டும். அது பிடிபடவில்லை. ஆகவே எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஒருமாதத்துக்கும் மேல் அதுவே என் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஒரு நள்ளிரவுத் தூக்கத்தில் ‘பெருங்கூட்டத்திற்குள் தனியாக நின்றிருந்தாள் பொன்னா’ என்றொரு வரி உதித்தது. ஆம், அதை ‘உதித்தது’ என்றுதான் சொல்ல வேண்டும். பெருங்கூட்டம், தனிமை என்னும் முரண் கொண்ட வரி அது. அத்தியாயத்தின் அடுத்த வரிகளை மேற்செலுத்தும் வரியாக அமைந்தது. அவ்விரவில் அவ்வரியைக் கொண்டு இருபத்திகள் எழுதினேன். அடுத்த நாள் முழுவதையும் எழுதி முடித்தேன். அந்த வரியைச் சாதாரணமாகக் கருதவில்லை. பெரிய திறப்பைப் பொன்னாவுக்குக் கொடுத்த வரி எப்படிச் சாதாரணமாக இருக்க முடியும்?
மாதொருபாகன் நாவலில் வரும் பாலியல் ஒழுக்க மீறல் மற்றும் காலகாலமாக சமூக மரபுகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பெருமாள்முருகன்: ஒழுக்க விதிகளை உருவாக்கி வைத்திருக்கும் சமூகமரபு, மீறல்களுக்கும் ஓரிடத்தை ஒதுக்கியிருக்கிறது. கொண்டாட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்கள், பண்டிகைகள் அப்படியானவை. திருவிழா என்பது வெறுமனே கடவுள் வழிபாட்டுக்கானது மட்டுமல்ல. அதற்குள் பல்வேறு பரிமாணங்கள் செயல்படுகின்றன. திருவிழாவுக்கும் பெருஞ்சந்தைக்கும் தொடர்புண்டு. விவசாயக் கருவிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவற்றை வாங்குவதற்குத் திருவிழாவை எதிர்பார்த்திருப்பார்கள். ஒழுக்கம் சார்ந்தும் பலவகை மீறல்கள் நடக்கும். காதலர்கள் கூட அங்கே வழியிருக்கும். பிறழ்வுகள் நடக்கும். போதை வஸ்துக்கள் தாராளமாகப் புழங்கும். திருவிழா முடிந்த பிறகு எல்லாம் மறந்தது போலச் சமூகமே ஒழுக்க விதிக்குள் மீண்டும் புகுந்துவிடும். அவை நடந்த சுவடுகளையே சமூகம் மறந்துவிட்டதாகத் தோன்றும்.
தமிழ் இலக்கணத்தில் விதியும் உண்டு; விதிவிலக்கும் உண்டு. குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய விதிகளை எல்லாம் சொல்லிவிட்டு அதன் பின்பகுதியில் விதிவிலக்குகளைச் சொல்லும். சிலசமயம் நூலில் இறுதியில் விதிவிலக்குகள் அமையும். புறனடை நூற்பாக்கள் எனப் பெயர் வழங்கும். மிகப் பரவலாக அறிந்த ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே’ என்பது ஒரு புறனடை நூற்பாத்தான். ‘ஒழிபியல்’ என்பது போல விதிவிலக்குகளை, நெகிழ்வுகளைச் சொல்லத் தனி இயலையே வைப்பதும் உண்டு. இந்தக் கூறு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் செயல்படுவதைக் காணலாம். விதிகளையே வற்புறுத்துபவர்கள் விதிவிலக்கும் ஒருவகை விதிதான் என்பது மறந்துவிடுகிறார்கள்.
நவீனச் சமூகமும் மீறல்களுக்கு உரிய இடமளிப்பதைக் காண்கிறேன். வேறு வழியில்லாத போது அவற்றை ஏற்றுப் பொதுவிதிக்குள் கொண்டு வந்து விடுவதும் நடக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்து வசிக்கும் தொழிலாளர்களின் பாலியல் தேவை நிறைவேற அரசே மீறல் வழிகளை உருவாக்கி வைத்திருப்பதைச் சில நாடுகளில் கண்டிருக்கிறேன். போதைக்கும் சூதுக்கும் எல்லைக்குட்பட்ட அளவில் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். விழுமியங்களிலும் அப்படித்தான். மீறல் மனித இயல்பு. அதையும் உள்ளடக்கியே சமூகமரபு தொடர்ந்து வருகிறது.
பெருமாள்முருகன்: ஆம். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. எழுதுவது மட்டுமே எழுத்தாளரின் வேலை, அதைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்ல எந்த முயற்சியையும் எழுத்தாளர் செய்யக் கூடாது என்னும் கருத்தை வலுவாகக் கொண்டிருந்த தலைமுறையின் தொடர்ச்சி நான். என் இயல்புக்கும் அப்படி இருப்பது பொருந்தியது. என் எழுத்தே எனக்குப் போதுமான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. இந்தச் சர்ச்சை ஏற்பட்டு என்னை வெளியில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. நீரில் முகம் மறைத்துக் கிடக்கும் மீன் தரையில் விழுந்தது போலத்தான். வெளிச்சத்தில் நிற்கிறேன் என்பதை மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கண்கூசும் வெளிச்சம் என்பதும் இதற்கு நிறைய விலை கொடுத்திருக்கிறேன் என்பதும் தெரியாது. எனக்குள் ததும்பும் அச்சமும் வேதனையும் மிகப் பெரிது.
மாதொருபாகன் சர்ச்சை உருவாகும் முன்னரே என் மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. நான்காவது நாவல் மொழிபெயர்ப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆங்கில வாசகர்களுக்கு என் எழுத்து ஓரளவு அறிமுகமாகியிருந்தது. சர்ச்சைக்குப் பிறகு வாசகப் பரப்பு கூடியது. என் நூல்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டன. அதனால் என் படைப்புலகைப் பற்றிய ஒட்டுமொத்தச் சித்திரம் உருவாயிற்று. சர்ச்சையால் கிடைக்கும் கவனம் படைப்பு வலு இல்லையேல் சட்டென்று அடங்கிவிடும். அப்படி நேர்ந்த எழுத்தாளர்கள் தமிழிலும் ஆங்கிலம் உட்படப் பிறமொழிகளிலும் பலர் இருக்கின்றனர். சர்ச்சையைக் கடந்து என் படைப்புகளின் வலு என்னைப் பரவலாகக் கொண்டு சேர்க்கிறது. சர்ச்சையைப் பற்றி ஏதும் அறியாத ஐஸ்லாந்து மொழிக்கும் என் நாவல்கள் சென்றிருக்கின்றன; நல்ல கவனம் பெற்றிருக்கின்றன.

இன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் வாசிக்கப்படுகிறீர்கள். இன்று நீங்கள் அடைந்துள்ள வாசகர் பரப்பு உங்கள் எழுத்தில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதா?
பெருமாள்முருகன்: அப்படித் தோன்றவில்லை. நான் ஏற்கனவே எழுதியவற்றின் மொழிபெயர்ப்புகளால் வாசகப் பரப்பு விரிந்திருக்கிறது. ஆகவே வாசகப் பரப்பை மனதில் கொண்டு எழுத்தில் மாற்றம் செய்யும் தேவையில்லை. ஆனால் ‘மாதொருபாகன்’ சர்ச்சை தான் என் எழுத்தைப் பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஊர், சாதி, கடவுள் பற்றியெல்லாம் எழுதும்போது எச்சரிக்கை மணி எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பூனாச்சி, கழிமுகம், நெடுநேரம் ஆகிய நாவல்களில் ‘அசுரலோகம்’ என்பதைக் களமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். அந்தப் பின்னணி பெயரளவுக்குத்தான் எனினும் நண்பர்களும் வாசகர்களும் அதைத் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள். ஒருகுழப்பம் எனக்குள் இருக்கிறது. அது எப்படி எப்படியெல்லாம் படைப்பில் வெளிப்படுகிறது என்று தெரியவில்லை. படைப்புக்கு எதிராக வன்முறையை முன்வைக்கும் சமூகத்தைப் பார்த்து அச்சப்படாமல் இருக்க முடியவில்லை.
மொழிபெயர்ப்புகளின் தரம் பற்றி உங்கள் கருத்து. தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தலில் உள்ள சிக்கல்கள் என்ன?
பெருமாள்முருகன்: ஆங்கில மொழிபெயர்ப்பின் தரம் பற்றி நான் பெரிதாகச் சொல்ல முடியாது. அந்தளவு ஆங்கில மொழியில் புலமை கொண்டவன் அல்ல. பிற மொழிகளில் வருபவற்றை எப்படி என்னால் மதிப்பிட முடியும்? வாசகர்களின் கருத்துக்களைக் கொண்டு சிலவற்றைத் தீர்மானிக்க முடிகிறது. ஆங்கிலத்திலிருந்து என் படைப்புகளை மொழிபெயர்த்தவர்கள் எல்லோரும் தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கறிந்தவர்கள். ஆகவே தரம் கூடியவை என்று உறுதியாகச் சொல்ல முடியும். மாதொருபாகன் நாவலை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்தனர். அதைப் பற்றி வாசகர்கள் பல புகார்களைச் சொன்னார்கள். இப்போது தமிழில் இருந்து நேரடியாகப் பெயர்த்துப் புதுப்பதிப்பு வந்திருக்கிறது.
பொதுவான மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் என் படைப்புகளுக்கும் இருக்கின்றன. குறிப்பாக என் வட்டார மொழியைப் புரிந்துகொள்வதில் மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. என்னிடம் உரையாடியும் ஐயங்களைத் தொகுத்துக் கேட்டும் மொழிபெயர்க்கிறார்கள். அப்படியும் பிழைகள் நேர்ந்துவிடுகின்றன. என் மொழியில் ‘காடு’ என்பது பெரும்பாலும் வேளாண் நிலத்தையே குறிக்கும். மேட்டுக்காடு என்றால் வானம் பார்த்த பூமி. வயக்காடு என்றால் நீர் வளம் மிக்க நிலம். இந்த நுட்பம் புரியாமல் காடு என்று நான் எழுதுவதை forest என மொழிபெயர்த்தோர் உண்டு.
தமிழ் மொழிக்கென்று இருக்கும் தனித்தன்மைகளை மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வர முடிந்ததில்லை. தமிழில் ‘மங்கல வழக்கு’ உண்டு. சுடுகாட்டைக் கானக்காடு என்று சொல்வதுண்டு. விஷம் கொண்ட நாகப்பாம்பை நல்ல பாம்பு என்போம். பொதுவாகப் பாம்பையே ‘பெரிய சீவன்’ என்று எங்கள் பகுதியில் சொல்வோம். சாவு நடந்துவிட்டால் ‘பெரிய காரியம் ஆயிருச்சு’ என்போம். அமங்கலமான ஒன்றை மங்கலமாக மாற்றிச் சொல்லும் வழக்கு இது. தீக்குழியைப் பூக்குழி என்பதும் தீ மிதித்தலைப் பூ மிதித்தல் என்பதும் மங்கல வழக்குத்தான். அதை இன்னொரு மொழியில் எப்படிக் கொண்டுவர முடியும்? ‘பூக்குழி’ நாவல் தலைப்பை நேரடியாக ஆங்கிலத்தில் Pyre என்று மொழிபெயர்க்க வேண்டியாயிற்று. மலையாளத்தில் ‘சிதாக்னி’ ஆயிற்று. வேறென்ன செய்ய முடியும்?
தமிழர் உணவு, உடை, சடங்குகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை மொழிபெயர்ப்பதிலும் சிக்கல் உண்டு. அவற்றை ஏதோ ஒருவகையில் சமாளித்துத்தான் மொழிபெயர்க்கிறார்கள். பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகளிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் என்னும் பொதுக் கருத்தில் வைத்து விவாதிக்கத் தக்கவை.
தமிழ் வாசகர்கள் – பிற நாட்டு வாசகர்களிடம் நீங்கள் காணும் அடிப்படை வித்தியாசங்கள் என்ன?
பெருமாள்முருகன்: தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் தம் வாழ்வனுபவத்தோடு என் படைப்புகளைப் பொருத்திப் பார்க்கிறார்கள். பிற நாட்டு வாசகர்கள் பெரும்பாலும் புதிய அனுபவத்தைப் பெறுவதாகச் சொல்கிறார்கள். தம் அனுபவத்தோடு இயைத்துக் கொள்ளவும் புதிய அனுபவத்தை வழங்கவும் படைப்புகள் பயன்படுவது பொதுவானது அல்லவா? பிரெஞ்சு மொழியில் மாதொருபாகனைப் படித்த ஒருவர் அவர்கள் நாட்டு விவசாயச் சமூகத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டதாகச் சொன்னார். களமும் தட்பவெப்பமும் வேறு வேறாக இருப்பினும் ஒப்புமைக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் கடந்து சமூக விழுமியங்களைப் பரிசீலிக்கும் படைப்புகளோடு எல்லோருக்கும் ஒத்திசைவு உருவாகும் அல்லவா?
அர்த்தநாரியின் காளி பிழைத்து விடுகிறான். ஆலவாயனில் தூக்குப் போட்டுக் கொள்கிறான். காளி இருந்தாலும், இறந்தாலும் பொன்னாவிற்கு ஏற்படும் மன வேதனையில் எந்த மாற்றமும் இல்லை. அதைத் தெளிவுப்படுத்துவதற்குத்தான் இரு நாவல்களாகப் பிரித்து வெளியிட்டு விட்டீர்களா?
பெருமாள்முருகன்: உங்கள் வாசிப்பு எனக்குப் புதிய திறப்பைத் தருகிறது. நல்லது. வாசகக் கேள்விகளே அப்படி இருநாவல்களை எழுதத் தூண்டின. காளியின் இருப்பில் பொன்னா அனுபவிக்கும் வேதனைக்கும் இல்லாமல் போனால் அனுபவிக்கும் வேதனைக்கும் வேறுபாடு உண்டு. அவன் இருப்பு அவள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுயமாகச் செயல்படுவதைத் தடுக்கிறது. அவன் இல்லை என்றானவுடன் பொன்னாவும் மாமியாரும் நிலம், நிர்வாகம் எல்லாவற்றையும் கையிலெடுத்துச் செயல்படுகிறார்கள். பெண்கள் சுயமாகச் செயல்படுவதற்கான வெளி ஆண் இருப்பில் கிடைப்பதில்லை. அர்த்தநாரியில் அவன் யாத்திரை சென்று திரும்பி வரும் சில நாட்களுக்குள் பொன்னாவும் அவன் அம்மாவும் செய்திருக்கும் சிறுமாற்றங்களைக்கூட அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத தன்னகங்காரம் வெளிப்படும். வேதனை இருப்பினும் சுயசெயல்பாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியம். அதைப் பிடித்துவிட முயன்றேன். ஈருடல் ஓருயிராக இருக்கும் இணையின் பாடுகளையும் கொண்டு வரப் பார்த்தேன். என் எண்ணம் எதுவாக இருப்பினும் அதையெல்லாம் மீறி வாசிப்பு பலவற்றைக் கண்டுபிடிக்கிறது என்பது மகிழ்ச்சி. அதுதான் இலக்கியத்தின் இயல்பு.
நிழல்முற்றம் நாவலின் மைய பாத்திரம் இளையோராக இருந்தாலும், அது இளையோர் நாவல் எனும் எல்லைகளை தாண்டிச் செல்கிறது என்ற கருத்து உள்ளது. இளையோர் நாவல் என்பது எவ்வகையானதாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
பெருமாள் முருகன்: இளையோரைப் பற்றி எழுதினால் அது இளையோர் இலக்கியம் ஆகிவிடாது. இளையோரின் உலகத்தை அவர்களின் பார்வையில் இருந்து எழுத வேண்டும். நிழல்முற்றம் இளையோரைப் பற்றிய எழுத்து; அடிநிலையில் வாழும் இளையோரின் கோணத்தைப் பற்ற முயன்ற எழுத்து. தமிழில் இளையோர் இலக்கியம் என்னும் வகைமை உருவாகவில்லை. ஆகவே மாதிரிகள் நம்மிடம் இல்லை. முந்தைய தலைமுறை கொண்டிருக்கும் விழுமியப் பார்வைகளை இளைய தலைமுறையின் மேல் ஏற்ற முயல்வதை விட்டு இளையோர் பார்வையில் ஒவ்வொன்றையும் கண்டு விவரிப்பதாக இருக்க வேண்டும். அது தமிழ்ச் சமூகத்தில் இப்போது சாத்தியமில்லை. விழுமியம் பற்றிய ஊசலாட்டக் காலம் இது. இதைக் கடந்த பிறகு சாத்தியமாகலாம்.
உங்கள் நாவல்களில் தமிழ் கிராம வாழ்க்கை மிகுந்த நம்பகத்தன்மையுடன் வெளிப்படுகிறது. பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஓர் எழுத்தாளராகவும், அதன் அடக்குமுறைகளை விமர்சிக்கும் ஒருவராகவும் நீங்கள் எவ்வாறு சமநிலை பாதுகாத்தீர்கள்?
பெருமாள்முருகன்: பிறந்து வளர்ந்து வாழும் பகுதி கிராமம்தான். உயர்கல்வியின் பொருட்டு சென்னையில் எட்டாண்டுகள் வசித்தேன். மாதொருபாகன் பிரச்சினையின் போது இடமாறுதலில் மீண்டும் சென்னையில் இரண்டாண்டுகள் வசித்தேன். மற்றபடி நான் அறிந்தவை திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல் ஆகிய சிறுநகரங்கள்தான். அவை சற்றே அளவில் பெரிய கிராமங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என் வாழ்க்கை முழுக்கக் கிராமம் சார்ந்தே கழிந்திருப்பதால் அதன் கூறுகளே என்னுள் படிந்திருக்கின்றன. அவ்வாழ்விலிருந்து மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி ஒருபோதும் விலகவில்லை.
1996ஆம் ஆண்டு எனக்கு அரசு கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போது சென்னையில் வசித்தேன். என் மனைவிக்குக் குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்தார். 23-08-1996 வெள்ளியன்று அஞ்சலில் ஆணையை அனுப்பிய தகவல் அறிந்து 24-08-1996 சனி காலை எட்டு மணிக்கெல்லாம் அஞ்சலகம் சென்றுவிட்டேன். கட்டுப் பிரித்து என் கைக்கு ஆணைக் கடிதம் பத்து மணிக்குக் கிடைத்தது. உடனே பேருந்தேறி என் மாமனார் வீடிருந்த ராணிப்பேட்டைக்குப் பிற்பகலில் சென்றேன். தகவல் அறிந்து மனைவியும் மாமனார் மாமியாரும் மகிழ்ந்தார்கள். குழந்தைகளோடு சில மணி நேரம் கழித்துவிட்டு இரவில் பேருந்தேறி எங்கள் ஊருக்கு வந்தேன். நான்கைந்து பேருந்துகள் மாறி வந்த நீண்ட பயணம். கிட்டத்தட்டப் பன்னிரண்டு மணி நேரம். முதன்மைச் சாலையில் இறங்கி எங்கள் ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று சேர்ந்தேன். என்னைக் கண்டதும் என் அப்பா ‘ஊரே வெதைக்குது. நம்ம காடு மட்டும் சும்மா கெடக்குது’ என்று ஆக்ரோசமாகச் சத்தம் போட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து வேலை கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்லிப் பணியாணையை நீட்டினேன். ‘நானென்ன படிச்சா பாக்கப் போறன்?’ என்றவர் அதைக் கையில் வாங்கவில்லை. மீண்டும் விதைப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். மழை ஈரம் போய்விட்டால் விதைக்க முடியாது. பருவம் தப்பிவிடும். அன்று முழுவதும் அங்கே இங்கே அலைந்து டிராக்டரைத் தேடினேன். ஊரெங்கும் விதைப்பு முசுவாக நடந்து கொண்டிருந்ததால் வண்டி கிடைக்கவில்லை. ஒருவர் மாலையில் வருவதாகச் சொன்னார். அவரை நம்பி நானும் அம்மாவும் மூன்று ஏக்கர் நிலத்தில் சோளம் விதைத்தோம். அம்மா அள்ளிக் கொடுக்கக் கொடுக்க நான் விதைத்தேன். இரவு எட்டு மணிக்கு வந்த டிராக்டர் விளக்கு வெளிச்சத்தில் இரண்டு உழவு போட்டு முடிக்கப் பத்து மணிக்கு மேலாயிற்று. அதன் பின் தூங்கி விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து புறப்பட்டு மூன்றரை மணி நேரம் பயணம் செய்து ஆத்தூர் சென்று பணியில் சேர்ந்தேன்.
இந்தப் புராணத்தைச் சொல்லக் காரணம் என் குடும்பத்தின் விவசாய மனநிலை எப்படிப்பட்டது என்பதை விளக்கத்தான். எங்கள் பரம்பரையில், எங்கள் ஊரில் முதன்முதலாக அரசுப்பணி பெற்றவன் நான். அதுவும் மதிப்பு மிக்க கல்லூரி ஆசிரியர் பணி. என் அம்மாவுக்கு அதன் முக்கியத்துவம் எதுவும் தெரியவில்லை. பிறகு போகப் போகத்தான் புரிந்துகொண்டார். அந்த மனநிலையில் பாதியாவது எனக்கும் இருக்கும்தானே?
ஆனால் முறைசார் கல்வியும் வெளியில் நான் கற்ற மார்க்சியமும் நவீனப் பார்வையை எனக்குக் கொடுத்தன. கிராம வாழ்வை உள்ளிருந்து காணவும் புறத்திருந்து பார்க்கவும் எனக்கு வாய்த்தமைக்குக் காரணம் விவசாய மனநிலையும் கல்வியும் என்றுதான் கருதுகிறேன். நான் சொல்வதுண்டு, வேளாண்மை, ஆடுமாடுகள் பற்றிய என் அறிவுக்கு இருநூறு ஆண்டுக்கும் மேலான அனுபவம் உண்டு. என் தாத்தா பாட்டி அவர்கள் தாத்தா பாட்டி காலத்து அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்துள்ளனர். அப்படியானால் நான் ஐந்தாம் தலைமுறை. என் முன்னோர் அனுபவங்களை எல்லாம் என்னுடையதாக்கும் உடலுழைப்பும் சுயபார்வையும் கொண்டவன் நான். ஆகவே நம்பகத்தன்மை இயல்பாக வந்துவிடுகிறது. சுயபார்வை என் கல்வியிலிருந்து கிடைத்தது. இரண்டையும் இயைத்தும் முரணியும் காண்பதில் எனக்குப் பிரச்சினை இல்லை.

நெடுநேரம் நாவலில் நகரம், கிராமம் என இரண்டு வெவ்வேறு இடத்தின் வாழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலால் நிகழும் மாற்றங்களை ஆரோக்கியமானதாக பார்க்கிறீர்களா?
பெருமாள்முருகன்: ஆம். மிகவும் ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன். பழமையின் எல்லாக் கூறுகளும் போற்றுதலுக்கு உரியவை அல்ல. வேளாண்மையை வாழ்வியல் என்று சொல்லிப் புனிதப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. இரவும் பகலும் இடைவிடாத உழைப்பைக் கோரும் மிகக் கஷ்டமான வாழ்வியல் அது. மனிதருக்கும் ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் நேரம் வேண்டாமா? புனிதப்படுத்துபவர்களை ஒருமாதம் விவசாயம் செய்யச் சொல்லி விட வேண்டும். பிறகு அவர்கள் கருத்து மாறிவிடும். நவீனம் எத்தனையோ விடுதலையை மனிதருக்குக் கொடுத்திருக்கிறது. உழைப்பிலிருந்தும் விடுதலை கொடுத்திருக்கிறது. நவீன வாழ்வில் பிரச்சினையே இல்லையா என்றால் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ஒப்பீட்டளவில் பழைய காலத்தை விடவும் குறைவுதான் என்றே கருதுகிறேன். மேலும் நிலவுடைமை மதிப்பீடுகளில் இருந்து கிடைக்கும் விடுதலையின் மகிமையை உணர்ந்தவர்களே அறிவர். ஆகவே நவீன காலத்தை ஆரோக்கியமாகத்தான் காண்கிறேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் இன்னும் நவீன மனிதனாக வாழ்ந்திருக்கலாமே என்னும் ஏக்கம் எனக்குண்டு.
கழிமுகம் நாவலில் அனைவரது பெயருக்குப் பின்னும் ‘சுரர்’ என பெயர் வைக்க என்ன காரணம்? அனைவரும் ஒன்றென காட்டும் முயற்சியா அல்லது சாதிப்பெயரைத் தவிர்க்க அவ்வாறான அடைமொழியா?
பெருமாள்முருகன்: மாதொருபாகன் நாவல் பிரச்சினைக்குப் பிறகு பூனாச்சி நாவலை எழுதும்போது சாதி, இடம், பெயர் ஆகியவற்றைத் தவிர்த்து எப்படி எழுதுவது என்னும் குழப்பம் எனக்கிருந்தது. அப்போது பெரியாரின் கருத்தியல் எனக்கு உதவியது. புராணக் கதைகள் எல்லாமே தேவாசுரப் போராட்டத்தை விவரிப்பவை; தேவர்கள் ஆரியர்கள், அசுரர்கள் திராவிடர்கள். இராமயணத்தில் வரும் கிஷ்கிந்தை குரங்குகள் வாழும் நாடு. அது தமிழ்நாடுதான். கடலைக் கடந்து சென்றால் இருக்கும் இலங்கை அரக்கர்கள் வாழும் நாடு. குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் சித்திரிக்கப்பட்டவர்கள் திராவிடர்கள். இந்த அடிப்படையில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் குறுங்காப்பியத்தைப் பாரதிதாசன் எழுதினார். இராவண காவியத்தைப் புலவர் குழந்தை எழுதினார். இந்த வாசிப்பு சரியோ இல்லையோ, அதிலிருந்து கிளைத்த படைப்பு மரபு ஒன்றிருக்கிறது. அதில் ஒருதுளியைத் தொட்டு என் மாந்தர்கள் எல்லாம் அசுரர்கள் என்றும் என் கதை நடப்பது அசுரலோகத்தில் என்றும் கொண்டேன். பாத்திரங்களுக்கு அசுரப் பெயர் கொடுத்தேன். அவர்கள் கடவுள்களை அசுரர்களிடம் இருந்து எடுத்தேன். அது எழுதுவதில் இருந்த என் மனத்தடையைப் போக்கியது. பூனாச்சி, கழிமுகம், நெடுநேரம் ஆகியவற்றை அப்படி எழுதினேன். இப்போது மனநிலை மாற்றம் வந்திருக்கிறது. ஆகவே அசுரலோகத்தைத் தொடர்வேன் என்று சொல்ல முடியாது.
கழிமுகம் நாவல் தற்கால வாழ்க்கையின் மீதான விமர்சனங்களைப் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது. அந்த விமர்சனங்களும் நேரடியாக இல்லாமல் ஒன்றைப் பற்றிய மிகைச்சித்திரம் வாயிலாக முன்வைக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன?
பெருமாள்முருகன்: உயர்வு நவிற்சி என்பது இலக்கிய உத்திகளில் ஒன்றுதானே? அது இந்த நாவலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் கையாண்டேன். தமிழ்நாட்டுப் பெற்றோர் மனநிலை, கல்விச் சூழல், நவீன வாழ்க்கை ஆகியவற்றின் மீது எனக்கிருக்கும் பெருங்கோபத்தைப் பகடியாகச் சொன்னால் படைப்புக்கான உத்வேகம் கிடைக்கும் என்றும் பட்டது. உயர்வு நவிற்சிக்கும் பகடிக்கும் நல்ல இணக்கம் உண்டு. பாலுள் நெய் போல ஒன்றுக்குள் ஒன்று அப்படி இயைந்து நிற்கும். எழுதும்போது கிடைத்த பரவசத்திலும் அதை உணர்ந்தேன்.
மற்றபடி இங்கிருக்கும் கல்விச்சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இதை மிகைச்சித்திரம் என்றே சொல்ல முடியாது. எதார்த்தமே இப்படித்தான் இருக்கிறது. அதைத் தனித்து உணர்த்துவதற்காக ஒருசிட்டிகை உப்போ சர்க்கரையோ கூட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்நாவலில் வரும் கடிவாளப் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். பல கல்லூரிகளில் மாணவர்களுக்குக் கடிவாளம் இருக்கிறது. அறிவுரை, அச்சுறுத்தல், தண்டனை முதலியவை மூலமாக அரூபக் கடிவாளத்தைப் பூட்டியிருக்கிறார்கள். அதைத் தம் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்துதான் பெற்றோர் தம் பிள்ளைகளை அத்தகைய கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். அரூபத்தை ரூபமாக்கிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்.
நீங்கள் இயற்றிய கீர்த்தனைகளுக்கு டி.எம் கிருஷ்ணா இசையமைத்துப் பாடியிருக்கிறார். தெய்வ வழிபாடு போன்ற மரபார்ந்த வடிவங்களில் இல்லாமல் இயற்கை, எளிய மக்கள் வாழ்வு என கீர்த்தனைகள் அமைந்திருந்தன. கருநாடகச் சங்கீதம் மற்றும் கீர்த்தனை வடிவத்தின் மீதான ஆர்வம் எப்படி தோன்றியது?
பெருமாள்முருகன்: கர்னாடக இசை கேட்டுப் பழகிய காதுகள் என்னுடையவை. சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு வந்த டிரான்சிஸ்டரில் திருச்சி, கோவை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்பது வழக்கம். அன்று வேறு பொழுதுபோக்கு வாய்ப்புகள் இல்லை என்பதாலோ என்னவோ வானொலியின் மேல் அப்படி ஈர்ப்பு இருந்தது. இரவில் இறுதி நிகழ்ச்சியாகக் கர்னாடக இசை நிகழ்ச்சி வரும். இரவு பத்து மணி முதல் பதினொன்று வரைக்கும் அல்லது ஒன்பதரை முதல் பதினொன்று வரைக்கும். மாட்டுக் கொட்டகையில்தான் என் படுக்கை. கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு இசை நிகழ்ச்சியைக் கேட்பேன். அப்படியே தூங்கியும் போவேன். இடையில் எழுந்தால் டிரான்சிஸ்டர் கொர்கொர் என்று வெறும் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அந்தச் சத்தம் தான் வரும். என் அம்மா பார்த்தால் ‘நிறுத்தீட்டுத் தூங்க மாட்டியா?’ என்று திட்டுவார். பேட்டரி செல் விலை அதிகம். அந்தக் கவலை அம்மாவுக்கு. மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம், எம்.எஸ்., தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட ஏராளமான பாடகர்களின் நிகழ்ச்சியைக் கேட்டிருக்கிறேன். மதுரை சோமுவின் குருநாதர் சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் கச்சேரிகளைக்கூடக் கேட்டிருக்கிறேன். அந்தப் பெயர்கள் எல்லாம் வானொலி மூலமாக அறிமுகம் ஆயின. அவர்கள் பாடும் தமிழ்ப் பாடல்களில் எனக்கு விருப்பம் அதிகம். இசை நுட்பம் தெரியவில்லை என்றாலும் கேட்டுக் கேட்டுக் கீர்த்தனை வடிவம் பழக்கமாயிற்று. பிற்காலத்தில் கேசட்டுகள் மூலம் விருப்பமான பாடகர்களைக் கேட்டேன். அப்படியே தொடர்ந்தது.
உ.வே.சாமிநாதையரின் நூல்களைப் படித்தபோது கீர்த்தனைகள் பற்றி விரிவாக அறிந்தேன். இசைக் கலைஞர்கள் சிலரைப் பற்றி அவர் விரிவாக எழுதியிருக்கிறார். பல கீர்த்தனைகளைத் தம் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். ‘கீர்த்தனை இலக்கியம்’ என்னும் ஒருவகைப் பகுப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் இருப்பதையும் அறிந்தேன். உ.வே.சாமிநாதையரின் உறவினரும் அவர் தந்தையாரின் குருவுமான கனம் கிருஷ்ணையரின் பல கீர்த்தனைகள் உ.வே.சா. மூலமாகவே நமக்குக் கிடைக்கின்றன. தமிழ்க் கீர்த்தனைகளையும் அவற்றின் வடிவத்தையும் அறிந்திருந்தாலும் எழுதத் தோன்றியதில்லை.
மாதொருபாகன் பிரச்சினைக்குப் பிறகு 2016இல் டி.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் இயல்புகள் எனக்குப் பிடித்திருந்தன. அவரது தூண்டுதலால் கீர்த்தனை எழுதத் தொடங்கினேன். பக்திக்கு ஏராளமான கீர்த்தனைகள் இருக்கின்றன, கர்னாடக சங்கீதத்தில் வேறு விஷயங்களும் வர வேண்டும், நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள், பக்தியற்ற ஆன்மீக அனுபவத்தையும் எழுதுங்கள் என்று சொன்னார். சோதனை முயற்சியாக எழுதினேன். அவருக்குப் பிடித்திருந்தன. வடிவம் சரியாக இருக்கிறது, சொற்கள் அழகாக வந்து விழுகின்றன, தாராளமாகப் பாடலாம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். கொங்கு வட்டாரச் சொற்கள் இயல்பாக வந்து சேர்ந்தால் அப்படியே போடுங்கள், பாடலாம் என்றும் சொன்னார். இத்தனை சுதந்திரம் கிடைக்கும்போது எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
இயற்கையைப் பற்றித்தான் முதலில் எழுதினேன். ‘இட்டேரி மேலே ஏகாந்தமாய் நின்றிருக்கும் பனையே’ என்று எழுதிய கீர்த்தனையைக் காம்போஜி ராகத்தில் கிருஷ்ணா பாடினார். ‘திருமாலின் விஸ்வரூபக் காட்சியை வருணிப்பதற்கு நிகரானது இது’ என்று சொன்னார். அவர் கச்சேரிகளில் பாடப் பாட என் எழுதும் ஆர்வமும் கூடிற்று. சிலசமயம் அவர் கேட்டதற்கு இணங்கவும் சிலவற்றை எழுதியிருக்கிறேன். அவர் கர்னாடக இசைக்கலைஞர் மட்டுமல்ல; செயல்பாட்டாளரும்கூட. ஆகவே எல்லாவற்றையும் தாராளமாகப் பாடுகிறார். கூட்டுச் செயல்பாடாக இது தொடர்கிறது.

தமிழகத்தைத் தவிர பிற நாடுகளில் எழுதப்படும் தமிழ் இலக்கியங்களை வாசித்துள்ளீர்களா?
பெருமாள்முருகன்: ஈழத்துப் படைப்புகளைப் பெரிதும் வாசித்திருக்கிறேன். என் இளமைக் காலத்தில் அங்கிருந்து பெருகி வந்த கவிதை அலை ஆட்கொண்டிருக்கிறது. க.கைலாசபதி, கா.சிவத்தம்பி முதலிய விமர்சன ஆளுமைகள் ஈழ இலக்கியத்தை நன்றாகவே அறிமுகப்படுத்தினார்கள். கே.டானியல், எஸ்.பொன்னுத்துரை, செ.கணேசலிங்கன் உள்ளிட்டோரின் நாவல்கள் எளிதாகத் தமிழ்நாட்டில் கிடைத்தன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொடர்ந்து வாசிக்கிறேன். சிங்கப்பூர், மலேசியா எழுத்துக்களை அவ்வளவாக வாசித்ததில்லை. அவை நவீன இலக்கியத்தோடு நெருக்கமாக இல்லையோ என்றொரு ஐயம் எனக்குண்டு. இப்போது பொதுநீரோட்டத்தில் இயையும் வகையில் அங்கிருந்தும் படைப்புகள் வருவதைக் கவனிக்கிறேன். கொஞ்சம் வாசிக்கிறேன். இன்னும் வாசிக்க வேண்டும்.
மலேசியாவில் நடைபெறும் GTLF இலக்கிய விழாவில் 2019-ல் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவ்வகையில் அந்த வாய்ப்பு குறித்தும் அதன் அனுபவம் குறித்தும் சொல்லுங்கள்.
பெருமாள்முருகன்: என் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானதால் கிடைத்த வாய்ப்பு அது. குறிப்பாக அப்போது வெளியாகியிருந்த ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் கிடைத்திருந்த வரவேற்பு முக்கியமான காரணம். அதை முன்வைத்து ‘மாதொருபாகன்’ சர்ச்சை தொடர்பாகவும் பேசும் அமர்வில் பங்கேற்றேன். மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான எடின் கூ (Eddin Khoo) என் அமர்வின் ஒருங்கிணைப்பாளர். என் நூல்களை வாசித்து நல்ல தயாரிப்போடு வந்திருந்தார். ஒருமணி நேரம். அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். தமிழ் அறிந்தோரும் ஓரளவு இருந்தனர். பத்தாண்டுகளுக்கு மேல் நடந்து கொண்டிருந்த அவ்விழாவில் தமிழ்நாட்டிலிருந்து முதன்முதலில் பங்கேற்ற எழுத்தாளர் நான் தான் என்று நினைக்கிறேன்.
நானும் காலச்சுவடு கண்ணனும் வந்திருந்தோம். தமக்கு என்று இருந்த அமர்வில் பங்கேற்றதோடு என் அமர்வில் மொழிபெயர்ப்பாளராகவும் கண்ணன் செயல்பட்டார். நான்கு நாட்கள் பினாங்கிலும் திரும்பும்போது ஒருநாள் கோலாலம்பூரிலும் தங்கினோம். எங்கள் ஊரிலிருந்து சிலர் அக்காலத்தில் பினாங்குக்குப் புலம் பெயர்ந்து சென்றிருந்தனர். திரும்பி வந்த சிலரைப் ‘பினாங்குக்காரர்’ என்று அடையாளப்படுத்துவது உண்டு. ஆகவே அந்நகரைப் பார்ப்பதில் விருப்பம் இருந்தது. இலக்கிய விழாவில் எனக்கும் கண்ணனுக்கும் அமர்வுகள் இருந்தன. அவற்றைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்தினோம். எழுத்தாளர்களோடு அளவளாவும் பிற அமர்வுகளில் பார்வையாளர்களாகப் பங்கேற்கவும் செய்தோம். அதனால் அதிகம் வெளியே செல்ல முடியவில்லை.
அங்கிருந்த எல்லா இரவுகளிலும் வெளியே சென்று சாப்பிட்டோம். தெருக்களில் சிறுசிறு மதுபான விடுதிகள். எளிய உணவுகள். அவற்றில் இரண்டு மூன்று மணி நேரத்தைச் செலவிட்டது மறக்க முடியாத நினைவு. தமிழர்கள் கணிசமாக அங்கே வந்து அருந்தி உண்டு கொண்டிருந்தனர். முதியோர் சிலரிடம் அறிமுகமானோம். தமிழ்நாட்டு அரசியலில் அவர்களுக்கு நாட்டம். அதைப் பற்றி நிறையக் கேட்டனர். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ‘இனப்பாசம்’ ஓர் இணைவை ஏற்படுத்தியது. அவர்கள் எல்லோரும் நன்றாக ஆங்கிலம் பேசினர். ஆனால் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னார்கள். மலேயாக்காரர்களைப் பற்றிக் கேலியும் கிண்டலுமாகப் பேசினார்கள். ஊர் நினைவுகள் அவர்களுக்குள் பசுமையாக இருந்தன.
திரும்பும் போது கோலாலம்பூரில் ஓர் இரவு தங்கினோம். கண்ணனுக்குத் தெரிந்த ஆங்கிலப் பதிப்பாளர் லிண்டா ஓயேஷ் (Linda Oyez) நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகி ஒரே கடையை இருவரும் பகிர்ந்து கொள்ளும் புரிந்துணர்வு கொண்டிருந்தனர். ராமன் கிருஷ்ணன் என்னும் தமிழர் நடத்திக் கொண்டிருந்த புத்தகக் கடைக்கு அன்று பகலில் சென்றோம். ஆங்கில நூல்களும் தமிழ் நூல்களும் விற்கும் சிறுகடை. முத்தம்மாள் பழனிசாமி எழுதிய ‘நாடு விட்டு நாடு’ நூல் பிரதி ஒன்றே ஒன்று இருந்தது. தமிழினி பதிப்பகம் ஒருபதிப்போடு நிறுத்திவிட்டது. ஆகவே தமிழ்நாட்டில் பிரதி கிடைப்பதில்லை. ஏற்கனவே என்னிடம் பிரதி இருந்த போதும் அப்பிரதியை வாங்கினேன். இந்தியப் பணத்தை ஒப்பிட்டால் மூன்று மடங்கு விலை. எனினும் அந்நூல் பிரதியை விட மனமில்லை.
அன்று இரவு ஒரு விருந்து. பிராங்க்பர்ட் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் துணைத் தலைவர் கிளௌடியா கைசர் (Claudia Kaiser) அந்த விருந்து கொடுத்தார். குறிப்பிட்டவர்களை மட்டுமே அழைத்திருந்தார். பல ஆண்டுகளாகப் பிராங்க்பர்ட் கண்காட்சிக்குக் கண்ணன் செல்வதாலும் நான் போயிருந்த ஒருமுறை அவருடன் அறிமுகம் இருந்ததாலும் எங்களுக்காகவே அவ்விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். விருந்தும் அளவளாவலும் மகிழ்ச்சி கொடுத்தன.
தங்கிய நாட்கள் குறைவு. அதனால் வெளியே செல்லும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. மலேசிய கிராமங்களைப் பார்க்கவும் ‘நாடு விட்டு நாடு’ நூலில் அவர் எழுதியிருக்கும் தோட்டங்களைக் காணவும் எனக்கு ஆசைதான். அவகாசம் இல்லை. கோலாலம்பூரிலிருந்து பினாங்கு சென்ற விமானத்தில் இருந்து பாமாயிலுக்கு மூலமான பனைத் தோட்டங்களைக் கண்டேன். எங்கெங்கும் பனைகளே. மலேசியாவின் இயற்கைக் காட்சியாக அதுவே மனதில் நிற்கிறது. ஐரோப்பிய நாடுகளில் கண்ட நகரங்களைப் போலவே மலேசிய நகரங்களும் தோன்றின.
இங்கு வந்தபோது மலேசியாவில் தமிழ் இலக்கியம் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்ள முயன்றீர்களா?
பெருமாள்முருகன்: மலேசியாவில் தமிழ் இலக்கியம் இருப்பதை ஏற்கனவே நன்றாக அறிவேன். காலச்சுவடு இதழ் ஆலோசகராக இருந்த எழுத்தாளர் சை. பீர் முகம்மதுவைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். என் வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவர் படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். மலேசியாவைக் களமாகக் கொண்டவை தானே ப. சிங்காரத்தின் நாவல்கள்? அவை 1990களில் மறுவாசிப்புக்கு உள்ளாயின. கு. அழகிரிசாமிக்கும் மலேசியாவிற்குமான தொடர்பையும் அறிவேன்.
முத்தம்மாள் பழனிசாமி எழுதிய ‘நாடு விட்டு நாடு’ நூல் எனக்கு மிகவும் பிடித்த தன்வரலாறு. தமிழில் வந்த தன்வரலாற்று நூல் வரிசையில் முக்கிய இடம்பெறத் தக்கது. அதைப் பற்றிப் பல இடங்களில் பேசியிருக்கிறேன். மலேசியா வந்த போது அவரைச் சந்திக்க விரும்பினேன். அவர் இருப்பிடம் வெகுதூரம் என்பதால் அந்த எண்ணம் கைகூடவில்லை. அவர் வயது முதிர்ந்த நிலையில் இருந்தார். தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் இறந்த போது அந்நூலைப் பற்றி விரிவாக எழுதி என் அஞ்சலியைச் செலுத்தினேன்.
மலேசியத் தமிழரான சரஸ் மாணிக்கம் ஆங்கிலத்தில் எழுதுபவர். ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில்தான் அறிமுகம் ஆனார். அதன் பின் பலமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. காமன்வெல்த் பரிசு பெற்ற சிறுகதையை எழுதியவர். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தம் வேர்களைக் கொண்டவர். அவரது ‘My Mother Pattu’ சிறுகதைத் தொகுப்புக் கதைகளை ஒரு தேவையை ஒட்டி வாசித்தேன். ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவல் சர்சைக்கு உள்ளான போது எழுத்துரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அவர் எழுத்துக்களையும் வாசித்து வருகிறேன். வல்லினம் இதழையும் தொடர்ந்து வாசிக்கிறேன். அதன் வழியாகவும் மலேசிய இலக்கியம் பற்றி அறிகிறேன். மலேசிய இலக்கியப் பரப்பு முழுவதையும் அறியும் ஆவல் இருக்கிறது. காலம் கைகூட வேண்டும்.
பிற நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்பு எதுவும் என்னை அழைப்பதில்லை. அழைத்த சந்தர்ப்பத்திலும் சர்ச்சை உருவாகித் தவிர்க்க வேண்டியதாயிற்று. என் நூல் வெளியீடு தொடர்பாகவோ எழுத்தாளர் முகாம் உள்ளிட்ட காரணங்களுக்காகவோ வேறு வாய்ப்புக்கள் மூலமாகப் பிற நாடுகளுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் சில என்னை அழைத்துப் பேசச் சொல்வதுண்டு. தனிநபர்கள் அன்போடு விருந்தோம்புவர். தமிழ்ச் சங்கம் போன்றவை பழமையின் பிடியில் இருப்பதாக உணர்கிறேன். அவர்களுக்கு நவீன இலக்கியம் என்றால் ஒவ்வாமை. அதுவும் என் எழுத்துக்களைப் பார்த்து அச்சம். ஆகவே நான் மலேசியா வந்த போது தமிழ் அமைப்புகளோ எழுத்தாளர்களோ என்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதுவும் மாதொருபாகன் சர்ச்சை அனைவர் நினைவிலும் அலையடித்துக் கொண்டிருந்த காலம் அது. நானாக யாரையும் வலிந்து சந்திக்கவும் முயலவில்லை.

இன்று பல முன்னணி எழுத்தாளர்களும் தங்களுக்கான சுய பதிப்பகம் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. உங்களுக்கு அப்படியான திட்டம் ஏதும் உண்டா?
பெருமாள்முருகன்: அப்படியேதும் திட்டமில்லை. என் முதல் நூல் வெளியீடு முதற்கொண்டு இப்போது வரை என் நூல்களின் பதிப்பு வரலாற்றைப் பேசுவதே சுவையானதாக அமையும். சுயமாகத் தொடங்கிய பதிப்பகம் மூலம் தான் என் முதல் நான்கு நூல்கள் வெளியாயின. பிறகு பல்வேறு பதிப்பகங்கள். 2004இல் காலச்சுவடு பதிப்பகத்தில் முதன்முதலாக என் நூல் ஒன்று வெளியாயிற்று. தொடர்ந்து காலச்சுவடு மூலமே பெரும்பான்மையான நூல்கள் வந்தன. 2016க்குப் பிறகு எல்லா நூல்களையுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.
என் இயல்புக்குப் பெரிதும் பொருந்தும் பதிப்பகமாகக் காலச்சுவடு இருக்கிறது. உரிமைத் தொகை பற்றிப் பிரச்சினை ஏதுமில்லை. எழுத்தாளருக்கு உரிய மதிப்பை வழங்குகிறது. நூல்களை நான் எதிர்பார்க்கும் வகையில் தயாரிக்கிறது. அட்டை உள்ளிட என் ஆலோசனைகளையும் கேட்டுச் செய்கிறது. எந்தத் தகவலையும் கொடுப்பதில் மிகுந்த வெளிப்படைத் தன்மை கொண்டிருக்கிறது. விற்பனை சார்ந்து பெருமுனைப்போடு இயங்குகிறது. உரிமைத்தொகையைச் சரியாக வழங்குகிறது. எழுத்தாளருக்கும் வாசகருக்குமான வெளியை உருவாக்கித் தருகிறது. பிற மொழிகளுக்குப் படைப்புகளைக் கொண்டு செல்லும் முயற்சியில் முன்னிற்கிறது. நூல் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறது. எழுத்தாளருக்கு வேறென்ன வேண்டும்? இப்படிப் பதிப்பகம் அமைவது பெரிய விஷயம். எனக்கு அமைந்திருக்கிறது. ஆகவே சுயபதிப்பகம் தொடங்கும் எண்ணம் ஏதும் எனக்கில்லை.
இணையம் போன்ற நவீன வாசிப்பு வசதிகள் இல்லாத பெருமாள்முருகனுக்கும் முழுதும் இணையம் வழி இயங்கும் இக்கால கட்டப் பெருமாள்முருகனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்கின்றதா?
பெருமாள்முருகன்: எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு படைப்பை அச்சில் காண்பதற்கான காத்திருப்பும் ஏக்கமும் இன்றைய பெருமாள்முருகனுக்கு இல்லை என்பது ஆசுவாசமாக இருக்கிறது. அங்கீகாரம் பெற்றுவிட்டதால் மட்டும் பிரசுர வாய்ப்பு கிடைக்கிறது என்பதல்ல. இணைய வசதிதான் வெளியீட்டு வாய்ப்புகளைப் பெருக்கியிருக்கிறது. 2015இல் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எதிர்கொள்ள இணையம் பெருமளவு பயன்பட்டது. பழைய பெருமாள்முருகன் கிணற்றுத்தவளை; இன்றைய பெருமாள்முருகன் கடல் மீன். மற்றபடி அன்றைக்கு அப்படி இருந்தேன், இன்று அப்படியில்லையே என்று புலம்பும் மனநிலை எனக்கில்லை.
இலக்கியத்துறையில் பெயர் நிலைத்தவர்கள் திரைப்படத் துறைக்குச் செல்வது இயல்பாக நடப்பது. உங்களுக்கு அப்படியான வாய்ப்புகள் வந்துள்ளனவா?
பெருமாள்முருகன்: நிறையத் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டவன் நான். பள்ளிப் பருவத்தில் திரைப்பாடலாசிரியர் ஆகும் கனவு இருந்தது. உயர்கல்விக்குச் சென்னைக்குச் சென்று சில ஆண்டுகள் வசித்த போது திரைத்துறை சார்ந்த கனவுகள் முடிவுக்கு வந்தன. திரைப்படத்துறை கலையும் தொழிலும் இணைந்தது. பெருமுதலீடுகளே அதை இயக்குகின்றன. பிறரை நயந்தும் புகழ்ந்தும் பிழைக்க வேண்டிய நிலைதான் அத்துறையில் நிலவுகின்றது. இதை நாகரிகமான மொழியில் சொல்கிறேன். அது என் இயல்புக்குப் பொருந்தாத துறை என்று எப்போதோ தோன்றிவிட்டது. என் படைப்புகள் பிரசுரமான காலத்தில் இருந்து திரைத்துறையைச் சார்ந்த பலர் அணுகியுள்ளனர்; பேசியுள்ளனர். ஆயிரம் பேசினால் ஒன்று நடக்கக் கூடும். எனக்கு அந்தப் பொறுமை கிடையாது. பலருடைய கூட்டில் இயங்குவதும் எனக்குச் சாத்தியமில்லை.
அப்படியும் சமீப காலத்தில் சிலவற்றில் பங்கு பெறும் சூழல் உருவாயிற்று. ‘வறுகறி’ என்னும் என் சிறுகதை ‘சேத்துமான்’ எனத் திரைப்படம் ஆயிற்று. அதற்கு உரையாடல் எழுதியது நல்ல அனுபவம். அதே இயக்குநர் ‘பூக்குழி’ நாவலை இப்போது படமாக்கியிருக்கிறார். அதற்கும் எழுதியிருக்கிறேன். வேறு சில படைப்புகளும் படமாகியுள்ளன. அவற்றுக்கும் பங்களித்திருக்கிறேன். பல வாய்ப்புகளை என் இயல்பு காரணமாக மறுத்திருக்கிறேன். என்னால் ஒருபோதும் திரைத்துறை சார்ந்து முழுமையாக இயங்க இயலாது என்கிற தெளிவு இருக்கிறது.
பெருமாள்முருகன்: எழுத்துக்கான கருக்கள் வாழ்பனுவபத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஒன்றும் இல்லாமையில் இருந்து எத்தனையோ புதையல்கள். அவற்றிலிருந்து ஒன்றை எப்படித் தேர்வு செய்கிறேன் என்னும் முறைப்பாட்டை அத்தனை எளிதாக விளக்க முடிவதில்லை. ஒருகருவுக்கு மனம் முழுவடிவம் கொடுத்துவிட்டால் அதுவே எழுதச் சொல்லித் தூண்டும். பல்லாண்டு காலம் ஊறிக் கிடக்கும் ஒன்றை எழுத இன்னும் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லும். அவசரப்பட்டு எழுதத் தொடங்கினால் சொற்பின்னல் உருவாகாமல் பின்வாங்க நேரும். அந்தந்தச் சமயத்து மனநிலை ஒருகருவைத் தேர்ந்து கொள்ள உதவும். எதேச்சையாக ஒருவரைச் சந்தித்த போது சில சம்பவங்கள் நினைவிலாடிச் சட்டென எழுதச் சொல்லும். ஒன்றை எழுதினால் அதனுடன் இயைபுடையவை வரிசை கட்டி வந்து நிற்கும். சமூகத்தின் அசைவியக்கங்களும் தூண்டுதலுக்குக் காரணமாகும். என்னைப் புனரமைத்துக் கொள்ளவும் ஒன்றை எழுதும் நிர்ப்பந்தம் உருவாகும். இப்படிப் பலப்பல.
‘கழிமுகம்’ நாவல் உருவான விதத்தை ஒருசான்றுக்காகச் சொல்கிறேன். கல்வி தொடர்பாக நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பேசியும் வந்திருக்கிறேன். என் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒருதுறை அது. என் மன அவசத்தைக் கட்டுரைகளால் தீர்க்க முடியவில்லை. புனைவின் மூலமே அதிலிருந்து வெளிவர முடியும் என்று தோன்றியது. என் பிள்ளைகள் படித்த அனுபவம், என் மாணவர்களைக் கண்ட அனுபவம் எல்லாம் கூடி நின்றன. எனக்குள் பெருங்கோபம் கனன்றது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசிக்கையில் ‘கடிவாளம்’ என்னும் படிமம் மனதில் தோன்றியது. அதை விரிவாக்கிய போது எள்ளல் தொனியில் எழுதும் முடிவை அடைந்தேன். அது நாவல் சிறப்பாக உருவாகக் காரணமாயிற்று. ‘கழிமுகம்’ நாவல் போதாமையிலிருந்து உருவான கரு என்று சொல்வேன். இப்படித்தான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கும்.
எழுதுவதற்கான நேரம் எனக்குத் திருப்தி தரும் வகையில் இன்னும் அமையவில்லை. குடும்பம், வேலை, பொறுப்புகள் எல்லாம் என் எழுதும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்கின்றன. காலை நேரம் எழுதப் பிடித்தமானது. மாலை நேரம் என் மனம் பொதுவாகவே பதற்றத்தில் இருக்கும். அதைப் போக்கிக் கொள்ள எழுத உட்கார்வேன் அல்லது வெளியில் எங்காவது சென்று வருவேன். என் பிள்ளைகள் பத்துப் பன்னிரண்டு வயது வரும்வரை நள்ளிரவில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் மகனைத் தூங்க வைக்க அவனுடன் நானும் படுத்து உறங்குவேன். இரவு ஒருமணி வாக்கில் எழுந்து இரண்டு மணி நேரம் எழுதுவேன். இப்போது காலை நேரத்தில் மட்டுமே எழுதுகிறேன். அதைத் தக்க வைத்துக்கொள்ளவே பாடாக இருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முழுநேரமும் என்வசம் ஆகும் என்று எதிர்பார்த்திருக்கிறேன். அறுபதை எட்டிவிட்டதால் உடல் வலிமை பற்றிய அச்சம் ஒருபுறம் இருக்கிறது. சரி, நீர்வழிப் படூஉம் புணை போலப் போக வேண்டியதுதான்.
பயணம் நிறையத்தான். 2016இன் இறுதியில் தொடங்கிய பயணம் நீண்டு கொண்டேயிருக்கிறது. குடும்ப வேலைகளால் இந்த ஆண்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டுக்கான பயணம் இப்போதே திட்டத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பயணத்தை மனம் மிகவும் விரும்புகிறது. பல காரணங்கள். படைப்பு சார்ந்த சிந்தனை பயணத்தில் கூடும். வாசகச் சந்திப்பு பெரும் உத்வேகம் தரும். வெவ்வேறு நிலப்பரப்பும் வாழ்வியல் விழுமியங்களும் பரவசத்தையும் அறிதலையும் கொடுக்கும். பயணம் என் படைப்புணர்வை ஒருபோதும் குலைத்ததில்லை; மிகுவிக்கவே செய்கிறது. அதனால் பயண வாய்ப்புகளை முடிந்தவரை தவிர்ப்பதில்லை.
