நான் அறிந்த பி.எம்.மூர்த்தி

2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது.

“இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார்.

“ஆம்” என்றேன்.

தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அவர் பெயர் சேகரன் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால், தேர்வு வாரியம் என்றால் என்ன என்பது எனக்கு அப்போது தெரியாது. அவர் கல்வி அமைச்சின் உயரதிகாரி என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டேன்.

“தேர்வு வாரியம் யூ.பி.எஸ்.ஆரில் அறிமுகம் செய்துள்ள படைப்பிலக்கியம் குறித்த குழப்பம் மலேசியா முழுக்க இருக்கும்போது மிகச்சரியான வழிகாட்டியாக நீங்கள் தயாரித்துள்ள இந்த நூல் உள்ளது,” என்றார்.

2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். அவ்வாண்டுதான் யூ.பி.எஸ்.ஆரில் தொடர்ப்படத்தை ஒட்டி கதை எழுத வேண்டும் எனும் புதிய முறையும் அறிமுகமாகியிருந்தது. வரிசைகிரகமாக இருந்த படங்களைக் கொண்டு கதை எழுதும் முறையும் படத்தின் உள்ளடக்கமும் மாணவர்களுக்கு எளிமையாகப் புரிந்ததால் ஒருவாராக மாணவர்கள் அவற்றை செய்து முடித்தனர். மறுவருடம் (2006) வெளிவந்த படத்தைக் கண்டு ஆசிரியர்கள் சிலர் திணறிப்போயிருந்தனர், அது தொடர்ப்படமாக இருந்தாலும் அதுவரை அவர்கள் சிந்திக்காத கதைக்கரு.

ஒரு சிறுவனை அவன் குடும்பத்தினர் தனியாக வீட்டில் விட்டு, நிகழ்ச்சி ஒன்றுக்கு புறப்பட்டுச் செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. கதை எழுதும் தூண்டல் மட்டுமே அதில் இருந்தது. மாணவர்கள் தங்கள் கற்பனையைக் கொண்டே கதையை எழுதி முடிக்க வேண்டும். சோதனை முடிந்தவுடன் மாணவர்கள் மத்தியில் புலம்பல்; ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர். கேள்வித் தாளைத் தயாரித்தவரைப் பள்ளியே கரித்துக் கொட்டியது.

எனக்கு அந்தப் படம் சுவாரசியமாக இருந்தது. அந்தப் படத்தைக் கொண்டு எத்தனை விதமான கதைகள் எழுதலாம் என கற்பனை விரிந்தது. நான் ஆறாம் ஆண்டு பயின்றபோது அப்படியான கதை எழுதும் முறை இல்லாதது குறித்து ஏக்கமாகவும் இருந்தது.

நான் அப்போது படிநிலை 1 மாணவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தேன். எனவே மூத்த ஆசிரியர்களிடம் அது குறித்து அதிகம் விவாதிக்க முடியவில்லை. ஆனால் பலவருடம் தமிழ்மொழி போதனை அனுபவம் உள்ள அவர்களுக்கு அப்படம் ஏன் சவாலாக உள்ளது என்பது எனக்குப் புரியாமல் இருந்தது.

2007 ஆம் ஆண்டு, என்னை ஆறாம் ஆண்டு ஆசிரியராக நியமித்தது பள்ளி நிர்வாகம். எனவே நான் மாணவர்களுக்கு முந்தைய ஈராண்டு படங்களை வைத்து சிறுகதை எழுதும் உத்தியைப் போதித்தேன். நானே சில தொடர் படங்களைக் கரும்பலகையில் வரைந்து கதை எழுத வைத்தேன். ஆனால் அவ்வருட யூ.பி.எஸ்.ஆர் தாளில் இருந்த படத்தைக் கண்டவுடன் எனக்கே பேரிடி. இம்முறை தனிப்படம் வந்திருந்தது. இரண்டு சிறுவர்கள் மீன் பிடிக்கும் காட்சி. பின்னால் ஒருவன் குளவிக்கூட்டைக் களைத்துவிட்டு ஓடுகிறான்.

தேர்வுத்தாளைத் தயாரித்தவர்கள் இம்முறை என் சாபத்தையும் வாங்கி கட்டிக்கொண்டனர். என்னால் அப்படத்துக்கு உடனடியாக ஒரு கதையை உருவாக்க முடிந்தது. ஆனால் மாணவர்களுக்கு மட்டுமல்ல பிற ஆசிரியர்களுக்கும் அந்தப் படத்தை ஒட்டி சிறுகதை எழுதுவது சிரமம் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். ஒருவரியைக்கூட நகர்த்த முடியாமல் தவித்தனர். மீண்டும் மீண்டும் அவர்கள் அறிவு நன்னெறி பண்புகளைச் சொல்லும் கதை முடிவை நோக்கியே ஓடியது. புனைவு எனும் கலை எல்லோருக்கும் சாத்தியமல்ல என்பதை அறிந்துகொண்டது அப்போதுதான். மொழி ஆளுமையும் இலக்கண அறிவும் புனைவுக்கு துணை செய்யும் உபரி பாகம் மட்டுமே; கற்பனையே அதன் அடிநாதம். அந்தக் கற்பனை குறைபாடே ஆசிரியர்கள் பதற்றத்திற்குக் காரணம் என அறிந்தேன்.  எனவே மாணவர்கள் மத்தியில் கற்பனைத் திறனை உருவாக்க பல்வேறு படங்களையும் அதை ஒட்டிய மாதிரி சிறுகதைகளையும் கொண்ட நூலை உருவாக்கத் திட்டமிட்டேன். தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு அப்படி ஒரு நூலை உருவாக்கினேன். ஓவியர் சந்துருவின் உதவியுடன் படங்களை உருவாக்கி அதற்கு நானே 80 சொற்களில் சிறுகதைகள் எழுதினேன்.

அந்தப் புத்தகம்தான் சேகரன் கையில் இருந்தது. நான் என் பள்ளிக்காகத் தயாரித்த நூல் பலராலும் நகலெடுக்கப்பட்டு நாடு முழுவதும் பல்லாயிரம் மாணவர்களுக்கு பயனளித்ததை உணர்ந்து மகிழ்ந்தேன். சேகரன் அவர்களிடம் இருந்தது அப்படி ஒரு நகல். அவர் என்னிடம் பேசியபோது குறிப்பிட்ட பெயர்தான் பி.எம்.மூர்த்தி.

***

மிக விரைவிலேயே பி. எம். மூர்த்தி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தேர்வு வாரியம் மாற்றம் செய்திருந்த படைப்பிலக்கியம் குறித்த விளக்கங்களை வழங்க அவரே பள்ளிகளுக்கு நேரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்படி என் பள்ளிக்கும் வருகையளித்தார்.

சுமாரான உயரம். அறிவின் ஆளுமை எவ்வண்ணத்தையும் ஒளிர வைக்கக்கூடியது. எனவே அவர் பிரகாசிக்கும் கருமையில் இருந்தார்.  இறுதியாக நடந்த யூ.பி.எஸ்.ஆரில் படைப்பிலக்கியப் பகுதிக்கு வந்த படம் நாடு முழுவதும் பல ஆசிரியர்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கியிருந்ததால் அவர்களைத் தெளிவுபடுத்தும் பொறுப்பை அவரே ஏற்றிருந்தார். அதன் அடிப்படையில் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார் எனப் புரிந்தது. நான் தயாரித்த மாணவர்களுக்கான சிறுகதை நூல் குறித்து பாராட்டியே பட்டறையைத் தொடக்கினார்.

மூர்த்தி அவர்கள் வழங்கிய பயிற்சி மிகச் சுவாரசியமானது, ஏராளமான எடுத்துக்காட்டுகள், சிறுகதைகளின் பல்வேறு நுட்பங்கள், இயக்கவூட்டு படங்களில் இருந்து உதாரணங்கள் என உற்சாகம் குன்றாமல் நகர்த்தினார். கல்வி அமைச்சில் ஓர் அதிகாரி சிறுவர் புனைவுலகம் குறித்த இத்தனை புரிதலுடன் இருப்பது எனக்கே வியப்பாக இருந்தது. ஆனால் இவ்வாற்றல் ஒருவருக்குத் தொழில் பயிற்சியால் அமைந்திருக்காது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அவ்வாற்றலைத் திரட்டிக்கொள்ள உழைத்துள்ளார் என்பது புரிந்தது. மூர்த்தி அவர்களுடன் விரிவாக உரையாடும் ஒரு தினத்துக்காகக் காத்திருந்தேன்.

மிக விரைவில் அதற்கான வாய்ப்பும் அமைந்தது.

பி.எம்.மூர்த்தி அவர்கள் படைப்பிலக்கியத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் சிலரை அடையாளம் கண்டு ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். அதில் நானும் இணைந்திருந்தேன். மூன்று நாட்கள் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலின் நோக்கம் சிறுவர் சிறுகதையை எழுதும் வழிமுறைகளை வகுப்பதுதான். அந்த மூன்று நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியதாக நினைவு. ஒவ்வொரு கதையை ஒட்டியும் மூர்த்தி அவர்கள் பல்வேறு கருத்துகளையும் அதனை மேம்படுத்தும் வழிவகைகளையும் விளக்கினார். அதுவரை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த எனக்குச் சிறுவர்களுக்கான சிறுகதை உலகம் மூர்த்தி வழியாகவே விரிந்தது. இனி நான் எழுதக்கூடிய சிறுவர் சிறுகதைகளில் நான் செய்து வந்த தவறுகளும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் புரிந்தது. அதே சமயம் பி.எம்.மூர்த்தி அவர்களும் சிறுகதைகள் குறித்து மரபான சிந்தனையில் இல்லாமல், எழுத்தாளர் ஜெயமோகன் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளை வாசித்து அதன் அடிப்படைகளைப் புரிந்து வைத்திருந்தார். (பின்னாட்களில் அவர் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனை அழைத்து வந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கியதெல்லாம் கல்வி அமைச்சில் யாரும் நிகழ்த்தாதது.)

பயிற்சி இல்லாத ஓய்வு நேரங்களில் மூர்த்தி அவர்களிடம் பேசும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொண்டேன். ஆசிரியர் தொழில் குறித்து அவருக்கு இருந்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் பகிர்வும் அவரின் மேலிருந்த மரியாதையைக் கூட்டியது. முக்கியமாக அவர் வாசிக்கக்கூடியவர் என்பதை அறிந்தபோது மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். கல்வித்துறையில் உள்ளவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அத்தனை மங்கிப்போயிருந்தது அவ்வியப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் மூர்த்தி அவர்கள், உயரதிகாரி எனும் நிலையில் இருந்து என் மனதில் ஆசிரியர் எனும் நிலைக்கு உயர்ந்திருந்தார்.

***

மூர்த்தி அவர்களிடம் பெற்ற பயிற்சியை நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் பொறுப்பை நானும் என்னுடன் பயிற்சி பெற்ற சக எழுத்தாளர்களும் ஏற்றிருந்தோம். மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கும்போது எனக்குள் எழும் தயக்கங்களை மூர்த்தி அவ்வப்போது போக்கினார். அறிவுப்பகிர்வுக்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. தன்னிடம் உள்ள அத்தனை தகவல்களையும் தரவுகளையும் வாரி வாரி வழங்குபவராக இருந்தார் மூர்த்தி. அவரே சில பள்ளிகளுக்கு அழைத்து மாணவர்களுக்கு விளக்கம் வழங்க என் பெயரைப் பரிந்துரைத்திருந்தார்.

நான் பள்ளிகளில் மிகத் தீவிரமாக பட்டறைகள் நடத்திய காலம் அது. நான் ஈராண்டுகள் உருவாக்கிய பயிற்சி நூலைக் கொண்டே அப்பட்டறைகளை வழிநடத்தினேன். இடையில் கே. பாலமுருகன் ‘தேவதைகளின் காகித கப்பல்’ எனும் பயிற்சி நூலைத் தயாரித்தார். அந்த நூலை நாடு முழுவதும் விற்பனை செய்ய நானும் சிவா பெரியண்ணனும் முடிவெடுத்தோம். பாரதி பதிப்பகத்தைத் தோற்றுவித்து அந்த நூலை நாங்களே அச்சிட்டோம். ஈராண்டுகள் பள்ளி அளவில் பயிற்சிக்காக நான் தயாரித்த படங்களை அந்த நூலில் கூடுதலாக இணைத்து மேலும் தரமாக்கினேன். சுமார் ஒருமாதம் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நூலை விற்பனைச் செய்யத் தொடங்கினேன்.

நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி ஒரு நூலை அனைத்துப் பள்ளிகளும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தன. இம்முயற்சி எனக்குள் பெரும் தூண்டுதலை உருவாக்கி நான் சுயமாக இன்னொரு நூல் ஒன்றைத் தயாரித்தேன். அந்த நூலைக் கொண்டு பயிற்சிப்பட்டறைகளை நடத்தத் தொடங்கினேன். மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆற்றல் என்னைப் போல மூர்த்தி அவர்களால் பயிற்சி பெற்ற சில ஆசிரியர்கள் மூலம் பற்றிப் படர்ந்தது. நாங்கள் அவரது குரலாகவே செயல்பட்டோம்.

மிக உற்சாகமான தினங்கள் அவை.

***

பி.எம்.மூர்த்தி மலேசிய இலக்கியச் சூழலில் ஏற்படுத்தி வரும் மாற்றத்தை நான் மெல்ல மெல்ல அறிந்துகொண்டேன். அவர் முன்னெடுப்பது கல்வி அமைச்சின் கட்டளையை அல்ல; மலேசிய இலக்கியச் சூழல் வளர்ச்சியை மனதில் கொண்ட நகர்ச்சி. இறுகி துருபிடித்து அதன் கறுமையே இயல்பான வண்ணம் என நம்பிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், அவர் உலுக்கி எடுத்து துருவை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். தமிழ்ப்பாட வளர்ச்சியில் புதிய வண்ணம் பாய்ச்சினார். அது வெறும் இரும்புத்தூண் அல்ல; பிரம்மாண்டமான மொழி, இலக்கிய, பண்பாட்டு உலகில் நுழைவதற்கான வாயிற்கதவு என்பதை அனைவருக்கும் புரியவைத்தார். தேர்வு வாரிய அதிகாரி எனும் பதவிக்கான மதிப்பு மூர்த்தி அவர்களால் பல மடங்கு உயர்ந்தது.

சிறுகதைகள் மேல் நாட்டம் கொண்ட ஆசிரியர்கள் உருவாவதை நான் கண்கூடாகவே கண்டேன். நான் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவது ஒருபுறம் இருக்க, தங்களுக்கும் சிறுகதை எழுதும் கலை கைக்கூட வேண்டும் என ஆசிரியர்கள் பலரும் பட்டறைக்காக என்னை அணுகினர். தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் புனைவுகளையும் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்தது. கோ. சாரங்கபாணி தமிழ் முரசு நாளிதளில் உருவாக்கிய மாணவர் மணிமன்றம் மூலம் எப்படி ஓர் அலை எழுந்ததோ அப்படி ஓர் அலை மூர்த்தி அவர்களால் உருவானது. ஆனால் ஒரு வரலாற்றுத் தருணம் நிகழும்போது அதை அறிவதற்கான ஞானமும் ஒருவருக்கு இருப்பது அவசியமாக உள்ளது. அந்த நிகழ்வுகள் வழியாக வரலாற்று நாயகர்களை அறியும் அறிவும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மூர்த்தி தொடர்ந்து எதிர்க்கப்பட்டும் வந்தார். அவர் கல்விச் சூழலில் உருவாக்கும் ஒவ்வொரு மாற்றமும் பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்தது. மொழித்தூய்மை கெட்டுவிடும், மாணவர்கள் கெட்டுவிடுவர், நவீன இலக்கியம் மாணவர்களின் சிந்தனையைச் சிதைக்கும் எனும் அறியாமையாலும் மூர்த்தியின் ஆற்றலைக் கண்டு பொறாமையாலும் அவர்மீது ஏராளமான புகார்கள் வழங்கப்பட்டதை நான் அறிந்தபடியே இருந்தேன். அதில் உச்சமாக ‘தினக்குரல்’ எனும் நாளிதழில் பி.ஆர்.இராஜன் என்பவர் கிருத்துவ மத பரப்ப கல்வி அதிகாரி எனும் அதிகாரத்தை மூர்த்தி பயன்படுத்திக்கொள்வதாக முன்னோட்டம் ஒன்று எழுதி அதன் விரிவான கட்டுரை விரைவில் வரும் என அறிவித்திருந்தார்.

நான் அவ்வலுவலகத்திற்கு அழைத்து கடும் எதிர்வினையை வழங்க வேண்டியிருந்தது. பின்னாளில் அப்படி எதிர்வினையாற்றியவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என அங்குப் பணியாற்றும் ஒருவர் மூலம் அறிந்துகொண்டேன். அவர்கள் மூர்த்தியின் தூண்டுதலால் அதைச் செய்யவில்லை. மூர்த்தி தனது தேவைக்காக அப்படி யாரையும் தூண்டுபவரும் அல்ல. அவரை அறிந்துகொண்டவர்கள், அவரது நேர்மையை உணர்ந்துகொண்டவர்கள் இயல்பாகவே அவருக்குப் பக்கபலமாயினர். தினக்குரலில் அக்கட்டுரை இடம்பெறவில்லை.

ஆனால் 2014இல் மேலும் ஓர் இடரை அவர் சந்திக்க நேர்ந்தது. புலனம் வாயிலாக யூ.பி.எஸ்.ஆர் சோதனைத் தாள்களில் சில கசிந்திருந்தன. அதற்குப் பொறுப்பேர்க்கச் சொல்லி சில தேர்வு வாரிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களிள் மூர்த்தியும் ஒருவர்.

நான் அப்போது மூர்த்தி அவர்களைத் தொடர்புக்கொள்ளாமல் இருந்தேன். தொடர்புக்கொண்டாலும் என்ன பேசுவது எனத் தெரியவில்லை. பொதுவாகவே எனக்கு ஆறுதல் மொழிகள் வராது. சோர்வுகளைச் செயலுக்கத்தால் மட்டுமே தகர்க்கும் பாணி என்னுடையது. எனவே நான் அமைதியாகவே இருந்தேன். பின்னர் அவர் மாவட்ட கல்வி இலாக்காவுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டபோது நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். இயல்பாக இருந்தார். உடல் அங்கு இருந்ததே தவிர எண்ணம், ஆன்மா எல்லாமே தேர்வு வாரியத்தில் இருந்தது. அப்போதே அவர் விருப்ப ஓய்வு பெறப்போவதாகச் சொன்னார். 2017இல் அதை செய்தார்.

***

பி.எம்.மூர்த்தி அவர்கள் விருப்ப பணி ஓய்வு பெற்றபோது அவரை வீட்டில் தனியாகச் சென்று சந்தித்தேன். அவருக்கு அன்பளிப்பாக ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்’ எனும் நூலை எடுத்துச் சென்றேன்.

ஒரு துறையைத் தங்களின் தீவிர செயல்பாட்டினால் மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டவர்களே விதி சமைப்பவர்கள்; மற்றவர்கள் பயனீட்டாளர்கள். ஜெயமோகன் அப்படியான ஆளுமைகள் குறித்து அந்நூலில் எழுதியிருப்பார்.

ஓர் ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் முறையாகப் பள்ளிக்குச் சென்று பாடம் போதித்து, கோப்பு பணிகளைச் செய்வதால் அவர் விதி சமைப்பவராக உருவாவதில்லை. அதுபோலவே ஒரு கலைஞன் தன் கலைத்துறையில் ஈடுபடுவதாலும் அவன் விதி சமைப்போன் அல்ல. அவரால் அந்தத் துறையில் மாற்றம் நிகழ வேண்டும். அதற்காக அவன் தன்னை அர்ப்பணித்து முழுமையாக தவம்போல் ஒன்றில் இயங்க வேண்டும். அவன் வழியாக ஒரு துறையில் உண்டாகும் மாற்றம் சமூகத்திலும் நேர்மறை அதிர்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்க வேண்டும்.

மூர்த்தி விதி சமைத்தவர். தான் ஈடுபட்ட துறையில் எல்லா நிலைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். எனவே, அவர் சோர்ந்துவிடக்கூடாது என விரும்பினேன். அந்நூல் அவரை மீட்கும் என நம்பினேன். நான் அவர் மீது கொண்டிருந்த மதிப்பை, மதிப்பு மிக்க ஒரு நூலின் வாயிலாகத்தான் என்னால் வெளிபடுத்த முடிந்தது. என் ஆறுதல் மொழி என்பது ஒருவரைச் செயலை நோக்கித் தள்ளுவதாகவே இருக்கும். நடைப்பாதையில் தடுக்கி விழுந்தவருடன் அமர்ந்து உடனழுவது என் பாணியல்ல; ”வா மலையேறப் போகலாம்,” என்பேன்.

நான் மூர்த்தி அவர்களின் ஆளுமை கல்விச்சூழலோடு மட்டும் அடங்கக் கூடியதல்ல; அதைக் கடந்து அவர் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதை உணர்ந்திருந்தேன். 2018ஆம் ஆண்டு மூர்த்தி குறித்து ஜெயமோகன் தளத்தில் ‘பி. எம். மூர்த்தி – விதிசமைப்பவர்’ எனும் தலைப்பில் எழுதவும் செய்தேன். அதற்குப் பதில் எழுதிய ஜெயமோகன் கடிதத்தின் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எழுத்தாளர்களுக்கு ஒரு கடமை உண்டு, புனிதக்கடமை என்றே சொல்வேன், அத்தகைய பெருமானுடரை எழுத்தில் பதியவைத்து காலத்தின் பகுதியாக்கி அடுத்தத் தலைமுறைக்கு அளிப்பது’.

***

உண்மையில் மூர்த்தி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னரே என்னால் அவருடன் இயல்பாக பழக முடிந்தது. அவரை நண்பராக எண்ணும் எண்ணம் அப்போதுதான் உருவானது. பொதுவாகவே கல்வி அமைச்சின் உயர் பொறுப்பில் உள்ளவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் மொய்க்கும். அப்பதவியால் தாங்கள் பெறப்போகும் நன்மைக்காக மொய்க்கும் கூட்டம் அது. அப்பதவி போனவுடன் கூட்டமும் பறந்துவிடும். நான் அப்படி இருக்க விரும்பியதில்லை. தேர்வு அதிகாரியாக அவர் பணியாற்றிய காலத்தில் எவ்வளவு நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தாலும் தேர்வின் ‘இரகசியம்’ குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சொல் கேட்டதில்லை. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் அவர் சொன்னார், “என் வாழ்நாளில் தமிழ் தேர்வு தாள் குறித்து யாருக்கும் ஒரு குறிப்பும் கொடுத்ததில்லை. அதை அறிந்துகொள்ள யாராவது என் முன்னே எந்தப் பாவனையில் முகமூடி அணிந்து வந்தாலும் அவர்கள் நோக்கத்தை நான் உணர்ந்துகொள்வேன். அவர்கள் மேலுள்ள மரியாதை அதோடு கீழே சரிந்துவிடும்.” எனக்கு அவ்வரி நிம்மதியைக் கொடுத்தது. நான் மூர்த்தி அவர்களின் மனதில் நெருக்கமான ஓர் இடத்தில் இருக்கவே விரும்பினேன். ஆனால் அவரை அணுகியபோதெல்லாம் அதிகாரி எனும் இடைவெளியே முன்வந்து நின்றது. மூன்றாவது கலை இலக்கிய விழாவை அவர் உருவாக்கிய இலக்கியத்துடன் இணைந்து நடத்தியபோதும் சிறிய இடைவெளியுடன்தான் அவருடன் பழகினேன்.

பி.எம்.மூர்த்தியின் பதவி ஓய்வுக்குப் பின் என்னால் இயல்பாகப் பல ஆலோசனைகளை அவரிடம் கேட்க முடிந்தது. கல்வி அமைச்சின் சில நெருக்கடிகளைக் கையாளும் முறைகள், மேற்கல்வியைத் தொடர்வதற்கான தரவுகள், பயிற்சி நூல்களை வடிவமைப்பதில் ஆலோசனைகள் என அவரின் ஆற்றலைக் கேட்டுப் பெற்றேன். எப்போது வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம் எனும் உரிமையை நானாகவே எடுத்துக் கொண்டேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகச் சிலர் மட்டுமே ஆலோசனை வழங்க அனுமதி கொடுத்துள்ளேன். ஜெயமோகன், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, வழக்கறிஞர் பசுபதி, டாக்டர் சண்முகசிவா எனும் வரிசையில் மூர்த்தி எப்போதும் இருந்து வருகிறார். மணமுறிவுக்குப் பின் என் மறுமணம் குறித்து அதிகம் கவலைப்பட்டவர் அவர். ஒருவகையில் என்னை மீட்டவர்.

மூர்த்தி அவர்களின் நான் அவதானித்த குணங்களில் ஒன்று அவர் தீமைகளை மனதில் வைத்துக்கொள்ளாதவர் என்பதுதான். தனக்குத் தீங்கு செய்தவர், தன்னைப் பற்றி அவதூறு பேசியவர்களை உண்மையாகவே மறந்துவிட்டு இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பதை நானே கண்டிருக்கிறேன். அவரால் நன்மை அடைந்தவர்கள் அநீதியின் பக்கம் சாயும்போதெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

“நவீன் நீங்க நினைவு படுத்தியதுக்கு நன்றி. ஆனா இன்னும் ரெண்டு மாசம் கழிச்சி கேட்டா நான் இதை மறந்திருப்பேன். எனக்கு இது மனசுல நிக்காது,” என்றார் ஒருமுறை. நாம் ஆசிரியர்களாகக் கருதுபவர்கள் நமக்களிக்கும் போதனை இவ்வாறுதான் அமைகிறது. அவர்களின் நற்குணங்களின் சில சதவிகிதமாவது கடைபிடிக்கும் பண்பு இப்படித்தான் வளர்கிறது.

மூர்த்தி அவர்களால் மனிதர்களை இயல்பாகவே அடையாளம் காண முடியும். ஒரு முயற்சிக்குப் பின் உள்ள சுயநலத்தையும் போலித்தன்மைகளையும் அவர் அறிந்தே இருப்பார். ஒரு முயற்சியை முழு அற்பணிப்புடன் செய்பவர்களால் இரவல் வெளிச்சத்தை எளிதாக அடையாளம் காண முடியும். ஆனால் அவர் அவற்றைக் கண்டிப்பதோ விமர்சிப்பதோ இல்லை. அது அவரது இயல்புமல்ல. அனைவரையும் ஊக்குவித்து தன் பயணத்தைப் பாசாங்கின்றி தொடர்பவர். என் வழி அதற்கு நேர் எதிரானது என்பதால் அது குறித்தெல்லாம் அதிகம் விவாதிப்பதில்லை.

***

மூர்த்தி அவர்களிடம் பழகியவரையில் எனக்கு அவரது இயல்பில் சில முரண்பாடுகளும் உள்ளன. அவர் எப்போதும் ஆசிரியர் மனோபாவத்தில் இருக்கிறாரோ எனத் தோன்றும். அதுவும் கடந்த நூற்றாண்டு ஆசிரியர். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதற்கான பதவுரை, பொழிப்புரை, பகுப்புரை, தொகுப்புரை என விரிவாக ஒன்றைக் கூறியபடி செல்வது பழைய ஆசிரியர் மரபு. இன்று காலாவதியாகிவிட்ட மரபு அது.

மாணவனுக்குக் குறைவாகச் சொல்லி அதில் உள்ள இடைவெளியால் அவனிடம் தேடலை உருவாக்குவது என் பாணி. எதிரில் உள்ளவனை என்னைவிட கூடுதலாகப் பேச வைப்பதே என் போதனையின் வெற்றியென கருத்துவேன். ஒன்றைக் குறைவாகவும் கூர்மையாகவும் சொல்வதே உரையாடலைச் சுவாரசியப்படுத்துவது. அதன் வழியாக எதிரில் உள்ளவனுக்கும் பேச வாய்ப்பளிக்க முடியும். இல்லாவிட்டால் அது உரையாடலாக இல்லாமல் உரையாகிவிடும் என்பதில் தெளிவாக இருப்பேன்.  

ஆனால் அதற்கு ஒன்றும் செய்வதற்கில்லை. அது அவரது இயல்பு. ஒருவரை அவரது இயல்புடன் ஏற்பதே நட்புக்கு ஆழம் சேர்க்கக்கூடியது. ஆனால் அந்த இயல்பு ஒருவருக்குள் திரண்டுவரும் புனைவுக்கான சாத்தியங்களைக் கெடுத்துவிடும் அபாயமும் உண்டு. அபாரமான ஒரு வாழ்க்கைத் தருணம் நமக்குள் முளைத்து முட்டி எழ அதை சொற்களாக்காமால் பதுக்கி வைப்பதே சிறப்பு. எல்லாவற்றையும் பேச்சுமொழியால் விளக்கி தீர்க்கும்போது அது தன் தீவிரத்தை இழந்துவிடுகிறது. மூர்த்தியிடம் சில அரிய தருணங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் அவை புனைவுகளாக உருவாகாமல் இருக்க இந்தப் பதுக்கி வைக்காத தன்மையே காரணமென நினைக்கிறேன். வருங்காலத்தில் அவர் சிறந்த நாவல்களைப் படைக்க முதலில் செய்ய வேண்டியது உரையாடல்களைத் தனக்குள் நிகழ்த்திக்கொள்வதுதான் எனத் தோன்றுகிறது.

***

பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க முடிவெடுத்தபோது யாருக்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இளம் தலைமுறையினர் அவரை அறிய வேண்டும் என விரும்பினேன். எனவே அவரது வாழ்க்கை வரலாற்று நூல் தயாரிப்பில் அவர்களை உட்படுத்தினேன்.

“அவர் உண்மையிலேயே பெரிய ஆளுமைதான். வல்லினம் விருது பெற தகுதியானவர்” என்றார் அரவின் குமார். அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. கோ. சாரங்கபாணி 1952இல் உருவாக்கிய மாணவர் மணிமன்றத்தின் வழி எவ்வாறு ஓர் இலக்கியத் தலைமுறை உருவானதோ அவ்வாறு மூர்த்தி ஏற்படுத்திய மாணவர்களுக்கான படைப்பிலக்கிய அலையின் வழி உருவானவர் அரவின் குமார். வீர்யமான விதை ஒன்று, தன் மூதாதையின் வலுவான வேரைத் தொட்டுப் பார்ப்பது எத்தனை அரிய அனுபவம்.

மூர்த்தி அவர்கள் இதுவரை ஆற்றிய பணிகளுக்காக மட்டும் வழங்கப்படும் விருது அல்ல இது. அவர் இன்னமும் இயங்கக்கூடியவர். சிறுவர் இலக்கியம் சார்ந்து அவர் மேலும் பலத்திட்டங்களை வகுத்துள்ளார். அவரால் இயங்காமல் இருக்க முடியாது. வல்லினம் விருது இனி அவர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் சேர்ந்ததே. அதன்வழி அவர் பணியை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்ய முனைவது. கூடுதலாக அவருக்குள் ஓர் புனைவு எழுத்தாளர் இருக்கிறார் என்பதை நினைவு படுத்தக்கூடியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...