வல்லினம் விருது விழா : 8 மாத நினைவுக்குறிப்பு

வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு என முடிவானப்பின் மே 11-ஆம் திகதி வல்லினம் குழுவினரோடு சென்று காஜாங் நகரில் அவரைச் சந்தித்தேன். அந்நாளில் அ. பாண்டியன் குடும்பப் பணியாக காஜாங் வந்திருந்ததால் அந்நாளே பொருத்தமானது என முடிவானது. அரவின் குமார், ஆசிர் லாவண்யா ஆகியோரும் இணைந்துகொண்டனர். ‘காஜாங் சாத்தே’ பிரபலமான உணவகம். அங்கு அவருக்காக சாத்தே சாப்பிட்டுக்கொண்டே காத்திருந்தோம்.

ரவாங் நகரில் ஒரு திருமண விருந்தில் கலந்துகொண்டு திரும்பியதால் மூர்த்தி வந்து சேர கொஞ்சம் தாமதமானது. அவர் வந்து அமர்ந்தவுடன் வழக்கமான நல விசாரிப்புகளுடன் உரையாடல் தொடங்கியது. விருது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அதைப் பெற்றுக்கொள்ளச் சம்மதமா எனக் கேட்டோம். அப்படிக் கேட்பது எங்கள் வழக்கம். விருது பெறுபவரின் முழுமையான சம்மதமும் ஏற்புமே விருது விழாவில் முக்கியம். அவர் பதிலுக்காகக் காத்திருந்தோம். “பொதுவாக ஒரு மனிதரின் இறுதிக் காலத்தில்தான் இப்படியான விருதுகள் வழங்கப்படும். உங்களுக்கு அப்படி ஏதும் தோன்றியதா?” என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தாலும் சிரித்துவிட்டோம். அதுவரை வல்லினம் விருது வாங்கியவர்கள் பல ஆண்டுகள் நல்ல நிலையில் வாழ்ந்ததையும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் குறிப்பிட்டோம். அவரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் கூறினோம். ‘வல்லினம் அவ்வளவு எளிதாக ஒருவரைத் தேர்வு செய்யாது’ எனக் கூறியவர் மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எங்களுடன் வந்திருந்த இளம் படைப்பாளர்கள் இருவர், மூர்த்தி குறித்து விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் அன்றைய உரையாடல் அமைந்தது.

சண்முகா

விடைபெறும்போது மூர்த்தி அவர்கள் இனி செய்ய வேண்டிய முக்கியப் பணி குறித்து விளக்கினேன். குறிப்பாக அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடும் திட்டத்தைக் கூறி அதை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். மூர்த்தி அவர்களிடம் விருது குறித்து முன்னமே தெரிவிக்க அதுதான் முதன்மை காரணம். கொஞ்சம் தயங்கி, “செய்கிறேன்!” என்பதாகக் குத்துமதிப்பாகத் தலையாட்டினார்.

சாலினி

பி.எம்.மூர்த்தி அவர்கள் எங்களிடம் சம்மதம் சொன்னாலும் அது அவருக்கு பெருஞ்சுமையான பணி என என் உள்ளுணர்வு கூறியது. அவர் எழுத்தாளர் அல்ல; எழுத்தாளர்களை உருவாக்கும் பணியைச் செய்தவர். செயல்பாட்டாளர். எனவே, இப்பணி அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம் எனப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் விருது விழாவில் நூல் வெளியிடுவதை அதிமுக்கியமாக நாங்கள் கருதினோம். அ. பாண்டியன் அதில் உறுதியாகவே இருந்தார். விருது பெறும் ஒருவரைச் சிரமப்படுத்துவது எனக்குச் சங்கடமாக இருந்தது. இந்தச் சங்கடம் சில நாட்களில் வலுபெற்றதால் நண்பர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தேன். மே 16-ஆம் திகதி ஆசிரியர் தினத்தின்போது அவரை அழைத்து, ஆசிரியர் தின வாழ்த்துகளைக் கூறினேன். பின்னர், அவர் வாழ்க்கை வரலாற்று நூலை நாங்களே எழுதத் திட்டமிட்டுள்ளதையும் குறிப்பிட்டேன்.

“நீங்க ஆசிரியர் தின வாழ்த்து சொல்லியதுகூட சந்தோசமா இல்ல… நூல் தயாரிக்கும் பணியை நீங்களே எடுத்துக்கிட்டது ரொம்ப மன நிம்மதியா இருக்கு,” என்றார் மூர்த்தி. அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில் நிறைவாக உணர்ந்தேன். நூல் தயாரிப்புப் பணியில்தான் விருது விழா முதல் அடி எடுத்து வைத்தது.

***

ஜூன் 1ஆம் திகதி பி.எம்.மூர்த்திக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதை ‘முக்கோண கதைகள்’ எனும் நிகழ்ச்சியில் அறிவித்தோம். அந்த நிகழ்ச்சியில் மூவின எழுத்தாளர்களும் இணைந்திருந்தனர். சரியாக அந்நாளில் மூர்த்தி அவர்களின் தங்கை ஆதியின் மரணம் நிகழ்ந்திருந்தது. மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது கிடைப்பது குறித்து அறிவித்த அந்நாளில் அவரை நோக்கி வந்த வாழ்த்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்டிருப்பார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. காலம் உருவாக்கும் வரைபடம் எத்தனை மர்மங்கள் நிறைந்தவை. அதன்முன் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கும்போதெல்லாம் நாம் எவ்வளவு சிறியவர்கள் எனப் புரியத் தொடங்குகிறது.  

நிகழ்ச்சி முடிந்தபின் இந்த விருது விழாவுக்காக உருவாக்கப்பட்ட செயற்குழுவுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். அ. பாண்டியன், அரவின் குமார், லாவண்யா, லதா, இளம்பூரணன், சல்மா, சாலினி, சண்முகா, சர்வின், தேவகுமார், கௌசல்யா, மோகனா, சுப்புலட்சுமி, புஷ்பவள்ளி ஆகியோர் அக்குழுவில் இணைந்தனர். நிகழ்ச்சி எவ்வாறு நடக்கும், யாருக்கு என்ன பணி, நிதி நிலவரம் போன்றவை விவாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாடப்பட்டன. வழக்கமாக வல்லினம் சந்திப்புகள் அனைத்துமே அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். அவசியமற்ற பேச்சுகளுக்கு அங்கு இடமே இல்லை. முறையான முன் திட்டங்களை விவாதித்து முடிவெடுத்தாலே எதையும் சாத்தியப்படுத்த முடியும். முன்திட்டம் இல்லாதவர்களே அதிகம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது என் எண்ணம். அவ்வகையில் உருவாக்கி வைத்திருந்த திட்டங்கள் குறித்தே அங்கு விவாதிக்கப்பட்டன. குழுவில் இருந்த நண்பர்கள் சிலர் நிகழ்ச்சிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டது பெரும் ஆறுதலாக இருந்தது. 

செயற்குழுவில் ஒரு பகுதியினர்

முக்கியமாக நூல் தயாரிப்பு பணி குறித்து முடிவு செய்யப்பட்டது. நூல் தயாரிப்புப் பணியில் நான்கு பேர் தங்களை இணைத்துக்கொண்டனர். சுப்புலட்சுமி டீச்சர் பி.எம்.மூர்த்தியின் பால்ய காலம் குறித்தும் புஷ்பவள்ளி அவரது ஆசிரியர் பணி குறித்தும் அரவின் குமார் கல்வி அமைச்சில் அவரது பங்களிப்புகள் குறித்தும் சாலினி பி.எம்.மூர்த்தியின் பொதுவாழ்க்கை குறித்தும் என தலைப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பி.எம்.மூர்த்தி எதையும் விரிவாகப் பேசக் கூடியவர். இப்பணியை கையிலெடுத்துக் கொண்டவர்களில் இருவர் நேர்காணல் செய்வதில் புதிய அனுபவம் கொண்டவர்கள். எனவே, பணியைத் தொடங்கும் முன்னர் பி.எம்.மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து அந்த நேர்காணல் எப்படி அமைய வேண்டும் என விளக்கினேன். கேள்விக்குப் பதில் எனும் வடிவத்தில் நேர்காணல் அமைந்தால் புதிய தலைமுறைக்கு அதை எழுத்தாக மாற்ற ஏதுவாக இருக்கும் என விளக்கினேன். மாறாக, பதில்கள் கிளைவிட்டு பிரிந்தால் அதை தொகுப்பதில் சிரமம் இருக்கும்.

உண்மையில் இந்த அணுகுமுறை இளம் படைப்பாளிகளின் இலக்கிய வாழ்வுக்குப் பெரும் பயிற்சியாக இருக்குமென நம்பினேன். ஆரம்பக்காலங்களில் ‘மன்னன்’ மாத இதழில் நான் செய்த நேர்காணல்களே எதையும் சுருக்கமாகவும் கூர்மையாகவும் உணர்ச்சி விலகாமலும் எழுதும் பயிற்சியை எனக்கு வழங்கின. எனவே, அவர்களிடம் இருந்து வரப்போகும் எழுத்து வடிவம் எவ்வாறு இருக்கும் எனப் பார்க்க ஆவலாக இருந்தேன். சாலினி மற்றும் புஷ்பா முதல் நேர்காணலைச் செய்தனர். மதியம் சென்றவர்கள் இரவு பதினோரு மணியளவில் வீடு திரும்பியிருந்தனர். அதிகம் களைத்திருந்தனர். நேர்காணல் சிறப்பாக அமைந்ததாகவும் ஆனால் பதில்கள் விரிவாகச் சென்றதால் தங்களுக்கு அதை கிரகிப்பதில் சிக்கல் இருப்பதையும் கூறினர். நான் அன்று இரவே மூர்த்தி அவர்களை அழைத்து, அவர் பதில் சுருக்கமாக இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறினேன்.

இந்த நேர்காணல் வழியாக இளம் படைப்பாளிகளுக்குப் பயிற்சியும் கிடைக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டதால் அடுத்தடுத்த சந்திப்புகளில் தன் பதிலைக் கவனமாகவே வழங்கினார். இவ்வாறு மூர்த்தி அவர்களின் நேர்காணல் முழுமையடைந்தபடி இருந்தது. எழுதப்பட்ட நேர்காணல்கள் என் பார்வைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் இணைக்கப்பட வேண்டிய துணைக் கேள்விகளை நான் மீண்டும் அவர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் மூர்த்தியிடம் பதில்களைப் பெற்று நேர்காணலை விரிவாக்கினர். ஜூலை இறுதிக்குள் நால்வரும் தத்தம் செய்த நேர்காணலை முழுமையாக எனக்கு அனுப்பினர். அதில் சுப்புலட்சுமி டீச்சர் பகுதி அவரது இளமை காலத்தைப் பேசியதால் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. ஒரு புனைவை வாசிக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது.

ஆகஸ்டு 2-ஆம் திகதி இரவில் அந்த நேர்காணல்களைக் கட்டுரையாகத் தொகுக்க அமர்ந்து அதிகாலையில் முழுமையாக அந்த நேர்காணல்களைச் சுய வாழ்க்கை வரலாற்று கட்டுரை வடிவத்திற்குத் தொகுத்து முடித்தேன். அதை அப்படியே எழுத்தாளர் அ. பாண்டியனுக்கு அனுப்பிவிட்டு உறங்கினேன். மனம் நிறைவாக இருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குத் தரமான சுயவரலாற்று நூல் கிடைத்துள்ளது எனும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அந்த உற்சாகத்தைப் போர்த்திக்கொண்டுதான் உறங்கிப்போனேன்.

***

இதற்கிடையில் செப்டம்பர் மாத வல்லினத்தில் பி.எம்.மூர்த்திக்கு வல்லினம் விருது என அறிவிக்கப்பட்டபோது அது பலரும் கொண்டாடும் உற்சாகமான செய்தியாக மாறியிருந்தது. மூர்த்தி பலபேரின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதை அனுபவப்பூர்வமாக அறிய முடிந்தது. அவர் குறித்த உரையாடலை உருவாக்க வேண்டும் என்றே மூன்று மாதங்களுக்கு முன்னரே விருதை அறிவித்தோம். அது நிறைவேறத் தொடங்கியது.

நவம்பர் மாத வல்லினம் இதழை பி.எம்.மூர்த்தியின் சிறப்பிதழாக உருவாக்கும் முயற்சிகள் தொடங்கின. அவருக்கு விருது வழங்க எழுத்தாளர் பெருமாள்முருகனை அழைத்திருந்ததால் அவரது படைப்புலகம் குறித்தும் கட்டுரைகள் இடம்பெறும் வண்ணம் இதழை உருவாக்கத் தொடங்கினோம்.

பணிகள் விரைவாக நடந்தன.  

மூர்த்தியின் நூலை வாசித்த அ. பாண்டியன் மேலும் சில திருத்தங்களைக் குறிப்பிட்டதால் நூலை ஒட்டிய பணிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. எனக்கும் அந்நூலில் சில இடைவெளிகள் தெரிந்ததால் மூர்த்தி அவர்களை நேரில் ஒருமுறை சந்தித்து உரையாடி லங்காவி காட்டில் அவர் செய்த பணிகள் குறித்து விரிவாக எழுதினேன். நூல் இப்போது எல்லா வகையிலும் முழுமையாகத் தோன்றியது. எனவே ஆகஸ்டு 17-ஆம் திகதி அதை பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு அனுப்பி நூலில் உள்ள தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கக் கூறினேன். அப்பணியைச் செய்ய அவருக்கு இரண்டு வாரங்கள் ஒதுக்கப்பட்டன.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

பொதுவாக நான் பணி செய்யும் முறை ஒன்று உண்டு. அத்தனை வேலைகளையும் முன்னமே முறையாகத் திட்டமிட்டு விடுவேன். அதற்கு முக்கியக் காரணம் எங்களுக்குத் துணை நிர்க்கும் பலர் அதனை மலிவான முறையில் சில சமயம் நட்பின் அடிப்படையில் இலவசமாகச் செய்துகொடுப்பவர்கள். எனவே, அவர்களின் ஓய்வு நாட்களை ஒட்டியே அத்தனை வேலைகளையும் வடிவமைப்பேன். நூலை இறுதி வாசிப்பு செய்து பிழைத்திருத்தமும் பார்க்க எழுத்தாளர் லதா ஒத்துக்கொண்டிருந்தார். எனவே ஆகஸ்டு மாதத்தில் நூலை முழுமைப்படுத்த நினைத்தேன்.

மூர்த்தி அவர்கள் சரியாக 30-ஆம் திகதி நூலை முழுமையாகத் திருத்தம் செய்து எனக்கு அனுப்பினார். கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளையும் விரிவாக்கியிருந்தார். தான் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போலவும் எனக்கு அதிக வேலை கொடுத்துவிட்டது போலவும் அந்தத் திருத்தப்பட்ட கோப்பை அனுப்பிவிட்டு தயக்கத்துடன் இருந்தார். ஆனால் எனக்கு அவரது அந்தப் பங்களிப்புதான் முக்கியமானதாக இருந்தது. நூலில் மெல்ல மெல்ல அவரது கைரேகை படிவதை நான் அதிகம் விரும்பினேன். அப்போது மூர்த்தி அவர்கள் சொன்ன வார்த்தைகள் முக்கியமானது. “நவீன், என்னால் ஒரு நூலையெல்லாம் எழுத முடியாதோ என யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த நூல் பணியில் ஈடுபட்டபோதுதான் என்னால் புனைவு எழுத முடியும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.”

சாலினி அந்தத் திருத்தங்களை இணைத்து மீண்டும் நூலை முழுமைச் செய்துகொடுத்தார். இப்போது மீண்டும் மூர்த்தி அவர்களுக்கு நூல் அனுப்பி வைக்கப்பட்டது.

நான் இந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் இந்நிகழ்ச்சிக்கான செயற்குழுவினர் இருக்கும் புலனக்குழுவில் தெரிவித்தபடியே இருந்தேன். அவர்களுக்கு ஒரு நூல் எவ்வாறு தயாராகிறது, அதற்கு எவ்வளவு பொறுமையும் அக்கறையும் திட்டமிடலும் தேவை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினேன். பொதுவாக புதிய தலைமுறையிடம் அவசரம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன. அத்தனையையும் தொழில்நுட்பத்தால் நிகழ்த்திவிட முடியும் என்பதில் தொடங்கும் அவசரம் அது. ஆனால் நூல் தயாரிப்பில் ஆத்மார்த்தமான பங்களிப்பு முக்கியம். அச்சில் வந்த பிறகு எதையும் மாற்ற முடியாது. அதுவும் பி.எம்.மூர்த்தி போன்றவர்களின் தன் வாழ்க்கை வரலாறு காலம் கடந்தும் வாசிக்கப்படக் கூடியது. எனவே, கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனால் அதே சமயத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் நிகழ வேண்டிய செயல்களையும் சரியாக பின்பற்ற வேண்டியிருந்ததால் எதையும் தாமதிக்கவும் முடியாது. செப்டம்பர் 23-ஆம் திகதி மீண்டும் மூர்த்தி அவர்களை காஜாங்கில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் சந்தித்து அவர் கூடுதலாகச் செய்த திருத்தங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். மூர்த்தி அவர்களின் விருப்பங்கள் அந்தத் திருத்தத்தில் தெரிந்தன. அவர் காட்டும் அக்கறை எங்களுக்கும் நூல் உருவாக்கத்தில் புதிய தெம்பைப் பாய்ச்சியது. ஆனால் மூர்த்தி தான் செய்யும் திருத்தங்கள் எங்களைச் சிரமப்படுத்தும் என களக்கமடைந்தபடி இருந்தார். அது சிரமம் கொடுக்கக் கூடியதுதான் என்றாலும் நூல் நிறைவாக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருந்தது. விருது நிகழ்ச்சி என்பது ஒரு நாள் மட்டுமே. இந்த நூல்தான் விருதின் சாரத்தைக் காலம் கடந்தும் கடத்திச் செல்லப்போவது. எனவே, சமரசம் இல்லை.

நூல் வெளியீடு

“ஏன் முதன்முறையே இந்தத் திருத்தங்களை இணைக்கவில்லை” என்று கேட்டேன். “நீங்கள் இரண்டாவது மூன்றாவது முறை எனக்கு வாசிக்கக் கொடுப்பீர்கள் என நினைத்தேன். பல படிகளாக இந்த வாசிப்பு நடக்கும் என நினைத்தேன்” என்றார். அவர் அப்படி எண்ணுவதில் தவறில்லை. அவரும் ஒரு பதிப்பகம் நடத்துகிறார்.  அவர்கள் பணியாற்றும் முறை வேறாக இருக்கலாம். எனவே அவருக்கு எங்கள் பணி முறையை விளக்கினேன். நாங்கள் எதையும் அவசரமாகச் செய்யவில்லை என்றும் வேகத்துக்கும் அவசரத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிய வைக்க முயன்றேன். இறுதியாக மூர்த்தி கொடுத்த திருத்தங்களை இடும் பணியை சாலினியே மேற்கொண்டார்.

உண்மையில் இந்த நூல் தயாரிக்கும் பணியில் தன்னை முழுமையாகப் பிணைத்துக்கொண்டதில் சாலினி முக்கியமானவர். திருத்தங்கள் இடுவது, உரிய படங்களை மூர்த்தி இல்லத்திற்குச் சென்று ஸ்கேன் செய்வது, படங்களை மாதிரி நூலில் இணைத்து குறிப்புகள் வழங்குதல், மெய்ப்புப் பார்த்தல் என தனது நேரத்தையும் சக்தியையும் இந்நூலுக்கு அதிகமாகவே வழங்கினார். அவர் வழியாக மாதிரி நூல் தயாரானப்பின் அது எழுத்தாளர் லதாவுக்கு அனுப்பப்பட்டது. லதா சில வாக்கியங்களைச் செறிவு செய்தார். அவர் செய்த சில திருத்தங்களுக்குப் பின் அக்டோபர் 2-ஆம் திகதி தமிழகத்தில் உள்ள வடிவமைப்பாளர் ஜி. முருகன் அவர்களிடம் சேர்க்கப்பட்டது.

முனைவர் குமரன்

எனக்கு விருப்பமான வடிவமைப்பாளர் ஜி. முருகன். விரைவாகவும் சரியான எழுத்துருவுடன் நூலைத் தயாரித்துக்கொடுப்பவர். அதுபோல புத்தகத்தின் முன்னட்டையை நண்பர் தென்னரசு செய்துகொடுத்தார். முகப்பு அட்டையிலும் பின் அட்டையில் போடுவதற்கான படங்களைத் தமிழக ஓவியர் சுப்பிரமணி அவர்கள் வரைந்துகொடுத்தார். ஒருவழியாக நூல் அக்டோபர் 15-ஆம் திகதி நூல் அச்சுக்குச் சென்று அக்டோபர் 26-ஆம் திகதி நூல் வடிவம் கண்டது.

நான் இந்த நூலைத் தயாரிக்கும் பணி முழுவதும் அ. ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்று நூலை நான் தனியனாகத் தயாரித்த அனுபவத்தை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் மடிக்கணினியுடன் அவர் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். காலை 8 மணிக்கு அவர் வீட்டில் இருப்பேன். அவர் எனக்கு முன்னமே தயாராக இருப்பார். அவர் எழுதி வைத்த நூலை வாசிக்க வாசிக்க நான் தட்டச்சு செய்வேன். இடையில் மதிய உணவை அவர் வீட்டிலேயே சாப்பிடுவேன். சாப்பிட்டவுடன் அவர் மதிய ஓய்வுக்குச் செல்வார். நான் வரவேற்பறையிலேயே அமர்ந்தபடி தூங்குவேன். மீண்டும் நான்கு மணிக்கு வேலை தொடங்கும்.

ஆசிரியர் கோபாலன்

இம்முறை அப்படி எந்தச் சிரத்தையும் நான் எடுக்கவில்லை. பெரும்பாலான பணிகளை இளம் தலைமுறையினரே செய்தனர். நான் மூத்த எழுத்தாளனாகிவிட்டதை அனுபவமாக உணர்ந்துகொண்டேன்.

***

வல்லினம் விழா என்பது இன்று பெரும்பாலும் இளம் தலைமுறையினர் எடுத்துச் செய்யும் நிலைக்கு நகர்ந்துள்ளது. வல்லினம் முகாம், நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் உணவுகளுக்கான பொறுப்பு முழுவதையும் ஆசிர் லாவண்யா எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காணொலி தொகுப்பைச் சாலினி தயார் செய்தார். முகாமில் உபயோகிக்க வேண்டிய குறிப்புகளின் நகல்களை அரவின் குமார் ஏற்பாடு செய்தார். சிலரைக் காணொலி பதிவு செய்ய தேவகுமார் உதவினார். பி.எம்.மூர்த்தி அவர்கள் குறித்து புஷ்பவள்ளி, அரவின் குமார், சாலினி, விஸ்வநாதன், கி. இளம்பூரணன் ஆகியோர் கட்டுரைகள் எழுதினர். அந்தக் கட்டுரைகள் வல்லினம், தென்றல், வானம்பாடி, செல்லியல், மலேசிய நண்பன் ஆகிய நாளிதழ்களில் இடம்பெற்றன.

சகாதேவன்

விருது விழா என்பது அதை வழங்கும் முன்னரே உரையாடல்கள் வழியாகத் தொடங்கப்பட வேண்டும். அந்த உரையாடல்கள் உருவாக இதுபோன்ற கட்டுரைகள் முக்கியம். இன்று பலருக்கும் பிரம்மாண்டமான மேடைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த விருதுகள் வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மறக்கப்பட அது வருடாந்திர சடங்காக இருப்பதே காரணம். விருது பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களில் அதை ஒட்டி தாங்களே அறிவித்துக்கொள்வதைப் பார்க்க பரிதாபமாகவே இருக்கும். உண்மையில் அப்பணியைச் செய்ய வேண்டியது விருது வழங்கும் அமைப்பு. அதில் எவ்வித குறைவும் இருக்கக் கூடாது என நினைத்தோம்.

மேலும் எங்களுக்கு ஒரு பணி இருந்தது. எழுத்தாளர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வரும்போது அவரது படைப்புலகம் குறித்து விரிவாக அறிமுகம் செய்வது அவசியம். ஓர் எழுத்தாளரைக் கௌரவப்படுத்த அதுவே சிறந்த வழி. அப்பணியைக் கௌசல்யா, மோகனா, சண்முகா, ஆசிர் லாவண்யா, அ. பாண்டியன், ஜி.எஸ்.தேவகுமார் ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.

பெருமாள்முருகன்

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வல்லினம் இலக்கிய விழாக்கள் நடத்தத் தொடங்கி 17 ஆண்டுகளில் இத்தனை இலகுவாக நான் இருந்ததில்லை. இளம் தலைமுறையினரின் பங்களிப்பு இந்த விழாவிற்கு முன்தயாராவதில் அத்தனை தீவிரமாக இருந்தது.

***

பெருமாள் முருகன் நவம்பர் 19-ஆம் திகதி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அழைத்து வருவது தொடங்கி கோலாலம்பூரை ஒட்டிய இடங்களைச் சுற்றிக்காட்டும் பணியை லாவண்யாவும் அவர் தோழி பிரியாவும் கவனித்துக்கொண்டனர். நான் வெள்ளிக்கிழமை இரவு பெருமாள் முருகனை YMCA வளாகத்தில் சந்தித்தேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின்னர் இரவு உணவுக்குச் சென்றோம். சிங்கப்பூரிலிருந்து அன்றிரவு வந்து சேர்ந்த லதா எங்களுடன் இணைந்துகொண்டார். பரிமித்தாவும் அன்று இரவே வந்திருந்தார். நான் நம்பிக்கை வைத்துள்ள இளம் எழுத்தாளர்களுள் ஒருவர்.

அடுத்த நாள் முகாம்.

பொதுவாக இப்படியான விழாவுக்கு வரும் தமிழக எழுத்தாளர்களைக் கொண்டு இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் பட்டறைகளை நடத்துவதுண்டு. எனவே, மறுநாள் பட்டறைக்கான தேவைகளையும் எதிர்பார்ப்பையும் பெருமாள்முருகனிடம் விளக்கிக்கொண்டிருந்தேன்.

முகாமில்

டிசம்பர் 20 – 21 ஆகிய நாட்களில் பட்டறைகள் நடந்தன. பெருமாள் முருகன் கல்வியாளர் என்பதால் விரிவுரை பாணியில் வகுப்புகளை நடத்தினார். புனைவு உத்தி குறித்து அதிகம் பேசாமல் சிறுகதையின் வரலாறு தொடர்பான விளக்கங்களை வழங்கினார். கட்டுரை எழுதும் பட்டறையும் அவ்வாறே நடந்தது.

இதற்கிடையில் சனிக்கிழமை இரவு பெரும்பாள் முருகனின் படைப்புலகம் குறித்த அமர்வு ஒன்றும் நடைபெற்றது. அதில் மோகனா, அரவின் குமார், பரிமித்தா, தயாஜி ஆகியோர் உரையாற்றினர். அவரவர் பார்வையில் பெருமாள் முருகன் படைப்புலகை அணுகினர். டாக்டர் சண்முகசிவா தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

சனிக்கிழமை இரவெல்லாம் நான் மறுநாளைய விருது விழாவிற்குத் தயாராகியிருந்தேன். பெருமாள் முருகன் படைப்புலகம் குறித்த உரையாடல் முடிந்தவுடன் இரவு பத்து மணிக்கு மறுநாள் விருது விழாவுக்கான அரங்கைத் தயார் செய்யத் தொடங்கினோம்.

ம. நவீன்

தொடங்கினோம் எனச் சொல்வதை விட தொடங்கினர் எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். ‘ஏபிசிடி’ எனும் திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை ஒன்று இடம்பெறும். அவர் கண்டேக்டராக இருக்கும் பேருந்து பலுதடைந்திருக்கும். அதை அனைவரும் இறங்கி தள்ளும்போது அங்கு நிற்கும் பிச்சைக்காரன் ஒருவன் தூரமாக நின்றபடி “தள்ளு தள்ளு தள்ளு” என சத்தம் மட்டும் போட்டுக்கொண்டிருப்பான். கிட்டத்தட்ட என் நிலை அப்படியாகிவிட்டது.

நள்ளிரவுக்குள் அரங்கு முழுமையாகத் தயாராகியிருந்தது. அரவின் குமார் அந்த அரங்கில் உள்ள விசைகளைக் கையாள்வதில் அதிகம் தேறியிருந்தார். இன்னும் இரண்டு முறை நிகழ்ச்சி நடத்தினால் அவர் அந்த அரங்கில் பகுதிநேரமாக வேலைக்குச் சேர்ந்துவிட முடியும். சண்முகா பி.எம்.மூர்த்தியின் படங்களுடன் வாசகங்களும் அடங்கிய சிறிய பதாகைகளை மாட்டிக்கொண்டிருந்தார். ஆதித்தன், தேவகுமார், ரேவின், தயாஜி என சிலர் மேடையில் பேனர் மாட்டுவதில் மும்முறமாக இருந்தனர். சாலினி, லாவண்யா மற்றும் அவர் தோழிகளும் நூல் விற்பனைக்கான பகுதியைத் தயார் செய்தனர். புஷ்பா, சல்மா ஆகியோர் அரங்கில் நாற்காலிகளை அடுக்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் எல்லாம் இலகுவாக நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது. நிம்மதி பெருமூச்சி விட்டபோது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது. இளம் எழுத்தாளர் சர்வின் செல்வா தேசிய அளவிலான பேரவைக் கதைகள் சிறுகதைப் போட்டியில் பொதுப்பிரிவில் முதல் பரிசைப் பெற்று 5000 ரிங்கிட் மாதிரி காசோலையுடன் திரும்பியிருந்தார். அதே போட்டியில் கலந்துகொண்ட பிருத்விராஜூவுக்கும் ஆறுதல் பரிசு கிடைத்திருந்தது. எனவே, அது இரட்டை மகிழ்ச்சி. மகிழ்ச்சியை வேடிக்கையாக்குவது எங்கள் இயல்பு என்பதால் அதைச் செய்தோம்.

சர்வின் செல்வா மற்றும் பிருத்விராஜூ

இருவருமே இளைஞர்கள். இருவரும் இலக்கியத்தில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. அவர்களால் அப்பயணத்தைத் தடையின்றி நிகழ்த்த முடியும் என்பதை அந்தப் பரிசு உணர்த்தியது. அந்த இரவு களைப்பாக இருந்தாலும் மனநிறைவாக அமைந்தது.

***

காலையில் நடந்த கட்டுரை முகாமில் என்னால் முழு மனதுடன் இருக்க முடியவில்லை. நிகழ்ச்சி குறித்தே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எதையாவது தவறவிட்டுவிட்டோமா எனும் யோசனை வந்துகொண்டே இருந்தது. நிகழ்ச்சியைப் பலமுறை மனதில் ஓட்டிப்பார்த்தேன். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நண்பர்கள் வந்து சேர்கிறார்கள். அவர்கள் உரிய நேரத்தில் ஊர் திரும்ப நிகழ்ச்சியைச் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் தொடங்குவதில் எனக்குச் சிக்கல் இல்லை; முடிப்பது என் கையில் இல்லாமல் இருந்தது. அறிவிப்பாளராக பொறுப்பேற்றிருந்த ஆசிர் லாவண்யாவிடம் அதை பலமுறை வலியுறுத்தியபடி இருந்தேன்.

ஆசிர் லாவண்யா

பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டும் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. என்னால் அதை சாப்பிட இயலாது எனத் தோன்றியதால் அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கு என் பங்கைக் கொடுத்துவிட்டேன். நிகழ்ச்சி முடியும்வரை எதையும் வாயில் வைக்க முடியாது எனத் தோன்றியது.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் நண்பர்கள் வரத் தொடங்கியிருந்தனர். ஒவ்வொருவரையும் அணுகி என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டேன். மூர்த்தி அவர்கள் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். அவரைச் சென்று அரங்கிற்கு அழைத்து வந்தேன். நிகழ்ச்சி எப்போதும்போல சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கியது.

வல்லினம் நிகழ்ச்சிகளில் பொதுவாகவே சிற்றுண்டி நிகழ்ச்சிக்கு முன்னமே வழங்கப்படும். ஆனால் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது சிலர் தேநீர் கொடுக்கும் இடத்தில் நாற்காலியைப் போட்டு காப்பிக்கடையில் அமர்ந்திருக்கும் ‘மூட்’டில் கதையடித்துக்கொண்டிருப்பதால் நிகழ்ச்சி முடிந்த பிறகே சிற்றுண்டி என முடிவெடுத்தோம்.

விருது வழங்கப்பட்டபோது

நிகழ்ச்சி சரியாக மதியம் 2 மணிக்குச் சண்முகாவின் பாடலுடன் தொடங்கியது. பாரதியின் ‘பாயும் ஒலி’ பாடல். தொடர்ந்து நான் வரவேற்புரையாற்றினேன். அதன் பின்னர் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் உரையையும் இம்முறை நிம்மதியாகக் கேட்க முடிந்தது. சாலினி தயாரித்திருந்த காணொலி தொகுப்பு பலரையும் கவர்ந்தது. பத்து பேருடைய வாழ்த்துச் செய்திகள் சோர்வளிக்கா வண்ணம் செறிவாக சேர்க்கப்பட்டிருந்தது.

ம. நவீன் வரவேற்புரை

காணொலி தொகுப்பு

சாலினி உரை

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியோட்டத்திற்கு என் வழிகாட்டுதல் என ஒன்றும் அவசியமாக இருக்கவில்லை. எனவே, நான் ஒரு பார்வையாளனாக நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். ஒலி-ஒளியை அரவின் கவனித்துக்கொண்டார். அரங்குக்குப் புஷ்பாவும் சல்மாவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவையின் ஒழுங்கைக் கௌசல்யா கையாண்டார். வருகையாளர் பதிவை மோகனா பார்த்துக்கொண்டார். நூல் விற்பனையைப் பிரியா, கோகிலா, பவானி ஆகியோர் கலகலப்பாக கையாண்டதாக கருத்துகள் வந்தன. நண்பர் செல்வன் நிகழ்ச்சியின் காணொலி பதிவிற்கும் தர்மா புகைப்படத்திற்கும் பொறுப்பெடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு வழங்கப்படும் சிற்றுண்டியைச் சண்முகா, சர்வின் செல்வா ஆகியோர் எடுத்து வந்தனர். இவ்வாறு எல்லாரும் அவரவருக்கு வழங்கப்பட்ட பணிகளை நிறைவாகவே செய்தனர். இந்த மொத்த நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தும் வகையில் அறிவிப்பாளரின் பங்களிப்பு இருந்தது. ஆசிர் லாவண்யா மேடையைத் தனதாக்கிக் கொண்டு மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

சு. குமரன் உரை

கோபாலன் உரை

சகாதேவன் உரை

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ நூல் வெளியீடு கண்டது. நூலின் தொகுப்பாசிரியர்கள் சார்பாக சாலினியும் நூல் குறித்த தன் பார்வையைச் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும் உரையாக வழங்கினர். தொடர்ந்து வல்லினம் விருது வழங்கப்பட்டது. பி.எம்.மூர்த்தி அவர்களின் வாழ்க்கையில் அதிமுக்கிய பங்காற்றிய அவர் அக்கா மீனா, மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டதால் பி.எம்.மூர்த்தி அவர்களுக்கு அது முக்கிய தருணமாக அமைந்திருக்கும் என எண்ணிக்கொண்டேன். எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மூர்த்தி எனும் நபர் இல்லாவிட்டால் மலேசியக் கல்விச்சூழலில் தமிழ் இலக்கியம் எத்தனை மொண்ணையாக இருந்திருக்கும். அதை ஒருவர் நினைத்துப் பார்த்தாலே மூர்த்தி வணங்கத்தக்கவர் என்பது புரிந்துவிடும்.

பி.எம்.மூர்த்தி

தொடர்ந்து முனைவர் சு.குமரன், ஆசிரியர் மு.கோபாலன், எ.சகாதேவன் ஆகியோர் தாங்கள் அறிந்த பி.எம்.மூர்த்தி குறித்து உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்த பி.எம்.மூர்த்தியின் ஆளுமை குறித்து பகிர்ந்துகொண்டனர். எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுவர் இலக்கியம் குறித்து அடிப்படையான புரிதலைத் தன் உரையில் வழங்கினார். ஏற்புரை பி.எம்.மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. நற்செயல்களை வாழ்வில் உயர்ந்தபின்னர்தான் செய்ய வேண்டும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை என்றவர், அந்த நற்செயல்களில் ஆற்றல் ஒரு மலைபோல குவிந்து நம்மைப் பாதுகாக்கும் என்றார்.

சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை & நூல் வெளியீடு

பெருமாள்முருகன் உரை

வல்லினம் விருது வழங்கப்படுதல்

நிகழ்ச்சி திட்டமிட்ட நேரத்தில் நிறைவடைந்தது.  அதன் பின்னர் மேடையை முழுக்கவே மூர்த்தி அவர்களுக்கு வழங்கினோம். அவருக்கு வாழ்த்துச் சொல்பவர்கள், பரிசுகள் வழங்குபவர்கள், நூலில் கையொப்பம் பெறுபவர்கள் என மேடைக்குத் திரளாக வாசகர்களும் ஆசிரியர்களும் சென்றுகொண்டே இருந்தனர்.

பி.எம்.மூர்த்தி ஏற்புரை

இம்முறை வல்லினம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் புதியவர்கள். பி.எம்.மூர்த்தியின் நண்பர்கள். வல்லினம் நிகழ்ச்சியில் இணைந்து பழக்கம் இல்லாதவர்கள். எனவே என் வரவேற்புரை குறித்து விமர்சனங்கள் வரவே செய்தன. முதலாவது ஏன் முக்கியஸ்தர்கள் பெயரைக் குறிப்பிட்டு வணக்கம் சொல்லவில்லை எனச் சிலர் நட்பாகக் கேட்டனர். நானும் நட்பாக அவர்களுக்கு விளக்கம் வழங்கினேன். “வல்லினத்தில் பதவி அடுக்கு நிலை என ஒன்று இல்லை. இங்கு அனைவரும் சமம். சிலர் பெயரைக் குறிப்பிட்டால் பெயரைக் குறிப்பிடாதவர்கள் முக்கியமற்றவர்களா என்ன? நேற்று நள்ளிரவுவரை எனக்காக மண்டபத்தில் இருந்து அத்தனை பணிகளையும் செய்துகொடுத்த நண்பர்களாகட்டும் வல்லினம் இத்தனை காலம் வளர வாசகர்களாக எழுத்தாளர்களாக பங்களித்தவர்களாகட்டும் எல்லாருமே முக்கியமானவர்கள். எனவே அனைவருக்கும் வணக்கம் என்பதில் அனைவரும் அடங்கிவிட்டனர்” என்றேன். நண்பர் சிரித்தார். என் கருத்தை ஏற்றுக்கொள்ளாத சிரிப்புதான். “எல்லாருடைய மனதையும் மகிழ்ச்சிப்படுத்த நான் கலை நிகழ்ச்சி நடத்தவில்லை. இது அறிவார்த்தமான நிகழ்ச்சி. இங்குச் சடங்குகளுக்கு இடமில்லை,” என்றேன்.

இன்னொரு பெரியவர், நான் அரசியல்வாதிகளை இலக்கிய மேடைகளில் ஏற்றுவதை உரையில் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டி, நீங்கள் செய்வதைச் சொல்லுங்கள் மற்றவர்கள் செய்வதை விமர்சிக்காதீர்கள் என்றார். நான் “விமர்சிக்கத்தான் வேண்டும்!” என்றேன் அழுத்தமாக. “அதனால் ஒருவர் புண்படுகிறார் என்றால் அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. யாராவது ஒரு அரசியல்வாதி தன் அரசியல் கட்சி மேடையில் இலக்கியவாதியைத் தலைமை தாங்க அழைப்பாரா? அப்படி இதுவரை நடக்காத சூழலில் எழுத்தாளன் மட்டும் ஏன் வெட்கம் கெட்டு ரோஷம் கெட்டு அரசியல்வாதியை அழைக்கிறான்?” என்றேன். அரசியல் மேடையில் அரசியல்வாதி முதன்மையானவனாக இருப்பதுபோல இலக்கிய மேடையில் எழுத்தாளனே முதன்மையானவன். இதை ஒருவன் அறியாவிட்டால் அவன் இலக்கியவாதியாக இருக்கவே தகுதியவற்றவன் என்றேன் காட்டமாக.

இவ்வாறு, ஒரு வரவேற்புரைக்குப் பொழிப்புரை வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது.

எப்போதுமே ஒரு நிகழ்ச்சி முடிந்தபின்னர்தான் கடும் பணிகள் இருக்கும். சிலரிடம் நான் பேசிவிட்டு திரும்பியபோது எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. நாற்காலிகள் அடுக்கப்பட்டிருந்தன. பதாகைகள் கலற்றப்பட்டிருந்தன. உணவிடம் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது.

எப்போதுமே அரக்கப் பறக்க பொருட்களை அள்ளிப்போட்டுக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் நான் இம்முறை பொறுமையாக பெருமாள் முருகனோடு இரவுணவுக்குச் சென்றேன். உடன் நண்பர் எஸ்.தி. சரவணனும் அ.பாண்டியனும் இணைந்து கொண்டனர். எஸ்.தி. சரவணன் இன்று தமிழில் இருந்து மலாய்க்கு மொழிபெயர்ப்பு செய்பவர்களில் முதன்மையானவர். எனவே உரையாடல் மொழிபெயர்ப்பு முயற்சி சார்ந்து சென்றது.

***

மறுநாள் பெருமாள் முருகனை நானும் அரவின் குமாரும் மை ஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு அழைத்துச் சென்றோம். பொதுவாகவே வெளிநாட்டில் இருந்து வரும் எழுத்தாளர்களை அப்படி அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் வழியாக மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் பெரும்பணியைப் பரவலாக அறிமுகப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.  அங்கிருந்து புறப்பட்டு சில தோட்ட வீடுகளுக்குச் சென்றோம். ஒரு தோட்டத்துத் தமிழ்ப்பள்ளியைப் பார்வையிட்டோம். பின்னர் நேராக விமான நிலையம் நோக்கிச் சென்றோம்.

குழுவுடன்

மறுநாள் தொடங்கி பள்ளி விடுமுறை. மனதும் உடலும் ஓய்வுக்கு ஏங்கியது. பெருமாள் முருகனை விமானம் ஏற்றி அனுப்பியவுடன் ஓய்வுக்கான மனம் தொற்றிக்கொண்டது. பெர்னமா தமிழ்ச் செய்தியில் நிகழ்ச்சி குறித்து வந்திருந்தது. நானும் அரவினும் மகிழ்ச்சியாக அதைப் பார்த்துக்கொண்டு வந்தோம். அந்நாள் அப்படித்தான் இன்பமாக நிறைவுற்றது.

1 comment for “வல்லினம் விருது விழா : 8 மாத நினைவுக்குறிப்பு

  1. January 5, 2026 at 11:28 pm

    100% பி. எம். மூர்த்தி சாரே எழுதிய auto biography போன்று படிக்கும் போது தோன்றிற்று.

    – எம். பிரபு, பெந்தோங்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...