“காலங்காலமாகப் பெருமை பெற்று நிலைத்திருக்கும் ஒரு மதமும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சாதியும் ஒரு எளியவனின் எழுத்துக்களால் சிதறுண்டு போகும் என்றால் அந்த மதத்தின் அடிப்படையையும் அந்தச் சாதி அமைப்பின் கட்டுமானத்தையும் காலம் உலுக்கி வீழ்த்தும்.” மாதொருபாகன் சர்ச்சையின் போது கவிஞர் சுகுமாரன் எழுதிய ‘எழுத்தை யார் ஆள்வது?’ எனும் கட்டுரையின் உள்ளடக்கத்தை வைத்து பெருமாள் முருகனின் படைப்புலகத்தை அறிமுகப்படுத்திவிடலாம். சமுதாய விழுமியங்களும் கலாச்சாரங்களும் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாறும் என்பதைப் பெருமாள் முருகனின் கதைகள் நிறுவுகிறது. வல்லினம் நடத்திய இலக்கிய முகாமில் பெருமாள் முருகனின் படைப்புலகத்தைக் குறித்துக் கலந்துரையாட ஒரு ஓர் அமர்வு ஒதுக்கப்பட்டது. 21 டிசம்பர் ‘மாதொருபாகன்’, ‘கழிமுகம்’, ‘பூக்குழி’, மாயம்’ என பெருமாள் முருகனின் நான்கு படைப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டன. அவரது நான்கு படைப்புகளின் விமர்சனம் மற்றும் வாசகர் அனுபவங்களைக் கொண்டு பெருமாள் முருகனின் படைப்புலகத்தை உள்வாங்கிக் கொள்ளும் சிறு முயற்சியாக இந்த அமர்வு அமைந்தது.

‘மாதொருபாகன்’ நாவல் வாசிப்பனுபவத்திலிருந்து அமர்வு தொடங்கியது. ‘மாதொருபாகன்’ நாவலின் சர்ச்சையைப் பெருவாரியான இலக்கிய உலகம் அறிந்த ஒன்றே. தனது எழுத்து உலக மரணத்தைத் தானே அறிவிக்கும் அளவுக்கான அழுத்தமான சூழ்நிலையை எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஏற்படுத்தியது. ‘மாதொருபாகன்’ நாவல் குறித்து பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நாவலின் சர்ச்சையைத் தவிர்த்து அந்நாவலை இலக்கியமாக அணுக வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ‘மாதொருபாகன்’ நாவலின் முக்கிய கதாபாத்திரங்களான காளி மற்றும் பொன்னாவின் கதாபாத்திர அம்சங்களிலிருந்து தொடங்கி நாவலில் பேசப்பட்ட கதை பிணக்கு சமகாலத்தில் எவ்விதமாக மாற்றங்கள் அடைந்துள்ளன என்பதைப் பற்றியும் நான் விளக்கினேன்.
காளி மற்றும் பொன்னா தம்பதிகள் பிள்ளைப் பேறின்மையையும், அது குறித்து வரும் சமூக விமர்சனங்களையும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதே கதையின் கரு. இந்நாவலில் வரும் பொன்னா கருவுற எடுக்கும் முடிவுகள் பெண்களை அவமதிப்பதாக ஒரு தரப்பு எதிர்வினை ஆற்றுகிறது. மற்றொரு சூழலில் பிள்ளை பெறாத பெண்களின் இருப்பையும் பெண்மையையும் தூற்றுவதை நியாயப்படுத்துவதாகவும் இருக்கிறது. குழந்தையற்ற பெண்களை அவமதிப்பதும் அல்லது சுயமுடிவின் காரணமாகக் குழந்தை வேண்டாம் என முடிவு செய்யும் பெண்களைச் சுயநலவாதிகளாகச் சமூகம் கட்டமைக்கிறது. அதே வேளையில் பிள்ளை பாக்கியம் கிடைப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத பெண்களைப் புனைவுபடுத்துகிற இந்த நாவலை, பெண்களை அவமதிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தற்போதைய சமூகச் சூழலில் பிள்ளைப் பேறின்மை ஒரு மனிதநேயப் பிரச்சினையாக அல்ல; ஒரு வணிக வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது. தெருவுக்குத் தெரு உருவாகியுள்ள குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனைகளும் நிபுணர்களும் பெண்களின் குழந்தையற்ற நிலையைக் கருவியாகக் கொண்டு அதிலிருந்து லாபம் ஈட்ட முனைகின்றனர். ‘மாதொருபாகன்’ நாவலில் சித்தரிக்கப்படும் சமூக நிலைப்பாடுகள் இன்றைய யதார்த்தத்துடனும் ஒத்திசைவாகவே உள்ளன.

குழந்தையற்ற பெண்கள் இன்னும் சடங்குகள், சமய நிகழ்வுகள், சமூக விழாக்கள் ஆகியவற்றிலிருந்து திட்டமிட்டு விலக்கப்படுகின்றனர். இவ்வகையான சமூக ஒதுக்கல் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையையும், சுயமதிப்பிழப்பையும் உருவாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக, அவர்கள் உறவுகளிடமிருந்தும் குடும்பகளிலிருந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சமூகமெனும் கட்டமைப்பில், பெண்களின் உடலை இனப்பெருக்கக் கருவியாக மட்டுமே அணுகும் பார்வை, பிள்ளைப் பேறின்மையை ஒரு ‘குற்றமாக’ மாற்றுகிறது. அதன் விளைவாக, பெண்கள் புறக்கணிக்கப்படுவதோடு, மன அழுத்தம், உளவியல் நெருக்கடி, தன்னுணர்வு சிதைவடையும் நிலைகளுக்கும் உள்ளாகின்றனர். அவ்வகையில் ‘மாதொருபாகன்’ நாவல் இவை அனைத்தையும் பெண்களின் உளவியல் நிலையிலிருந்து மிக நுட்பமாக ஆவணப்படுத்துகிறது. இத்தகைய சமூக முரண்களையும், ஆதிக்க மனப்பாங்கின் இருண்ட அடுக்குகளையும் வெளிப்படுத்தியதற்காக, என்னவோ அடையாளங்களைப் பயன்படுத்தி அவமதிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு நீதிமன்றம் வரை சென்று அழுத்தியது சமூகம். ஆனால், உண்மையில் சமூகத்தில் நிகழும் அவலங்களையும் யதார்த்தத்தையும் முன்வைத்து பெண்களின் உளவியலை மிக நுட்பமாகக் காட்டிய நாவல்தான் ‘மாதொருபாகன்’.
என்னைத் தொடர்ந்து, இரண்டாவதாக எழுத்தாளர் அரவின் குமார் ‘கழிமுகம்’ நாவல் பற்றிய தமது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். சமூகப் பார்வையையும் விமர்சனத்தையும் மிகைப்படுத்திப் பகடியுடன் படைக்கப்பட்ட நாவல் ‘கழிமுகம்’. சமகாலத்தில் இருக்கும் கல்வி முறை, தந்தை மகன் உறவு சிக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை ‘கழிமுகம்’ நாவலின் பேசுபொருளாகிறது. இதனால் சிக்கலுக்கு உள்ளாகின்ற நடுத்தர வயதைக் கடந்த தந்தையின் வாழ்வைப் பற்றி இந்நாவல் பேசுகிறது. கற்பனை உலகமான அசுரலோகத்தில் கதை நகர்ந்தாலும், சமகாலச் சூழலையும் தமிழ் மக்களையும் விமர்சனம் செய்வதாகவே நாவல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அரவின் குமார் தமது பார்வையில் இந்நாவல் வெளிக்காட்டும் 3 தரிசனங்களைக் கூறினார். கல்வி வியாபாரமாகிப் போய் மாணவர்களின் இயல்பான ஆற்றலை முடக்கும் கட்டுப்பாடு மிகுந்த சூழலைப் பகடிச் செய்வது நாவலின் முதல் தரிசனமாக விளங்குகிறது. இரண்டாவதாக, தலைமுறை இடைவெளியின் காரணமாக தந்தைக்கும் மகனுக்குமான உறவு சடங்குப்பூர்வமாக மாறிப் போவது. மூன்றாவதாக, கட்டுப்பாடுகளும் இறுக்கமும் மிகுந்த தந்தையின் உளவியல் என நாவலில் தாம் கண்டறிந்த 3 தரிசங்களை அரவின் குமார் குறிப்பிட்டார்.

நாவலின் மையம் என்பதே வெவ்வேறு சிந்தனைப்போக்குகள் கொண்ட தந்தை மகன் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளிதான். தந்தையின் பார்வையிலிருந்து தலைமுறை இடைவெளியை நாவல் அணுகியிருக்கிறது. அதைப் போல மகனுடைய பார்வையிலும் தலைமுறை இடைவெளி, உளவியல் அணுகப்பட்டிருந்தால் நாவல் இன்னும் ஆழபட்டிருக்கும் என அரவின் குறிப்பிட்டார். முகாமின் நிறைவில் பேசிய எழுத்தாளர் கனகலதாவும் நாவல் பேசும் களம் தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் வாழும் முந்தைய தலைமுறை தந்தையருடனே நாவலின் களம் பொருந்திப் போவதாகக் குறிப்பிட்டார். அதனாலே, இன்றைய தலைமுறை தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்ட தந்தையர்களுடன் நாவலைப் பொருத்திப் பார்க்க முடியாமல் போவதாகக் குறிப்பிட்டார். அதோடு, ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடமான கழிமுகம் போன்றதுதான் இந்நாவலின் உச்சமும் அமைந்ததாக அரவின் கூறினார்.

தொடர்ந்து, ‘பூக்குழி’ நாவலைப் பற்றி எழுத்தாளர் பரிமித்தா பேசினார். குமரேசன், சரோஜா மற்றும் மாராயி நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். குமரேசனும் சரோஜாவும் காதலித்து சாதிக் கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்தில் உச்சமாக இருக்கின்ற சமூக மறுப்பு காலப்போக்கில் அதன் வீரியத்தை இழந்துவிடும் என்று நம்பி இவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது. ஆனால், நாம் எப்போதுமே நமது சமூகக் கட்டமைப்புக்கும் குடும்பப் பின்னணிக்கும் ஏற்றவாறு உள்ள உறவுகளை மட்டுமே அங்கீகரிக்கின்றோம். அவ்வாறான உறவுகளை மட்டுமே அங்கீகரிக்கின்ற குமரேசனும் சரோஜாவும் கூட காலப்போக்கில் உறவினர்களிடமிருந்தும் எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில் பொருளாதார அநிச்சியமும் சமூக ஒதுக்குதலையும் சந்திக்க நேரிடுகிறது. குடும்பங்களை எதிர்த்துச் சாதிக் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் நிலைமை இதுதான்.
மனிதர்கள் இயல்பிலே வெறுப்பையும் பாகுபாட்டையும் வன்முறையையும் ஊக்குவிக்கும் நடைமுறைகளைச் சாதி எனும் பெயரில் தீவிரமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். பரிமித்தாவைப் பொருத்தவரை சமூக கட்டமைப்புகளுக்கும் நீதிகளுக்கும் அப்பாற்பட்ட வாழ்க்கையைத் தேடிக்கொள்வது தனிநபர் சுதந்திரம். இருப்பினும், சமூகத்திலிருந்து எதிர்ப்புகளையும் வன்முறையையும் தேடித்தரும் கலப்புக் காதலை நாவலில் தவிர்த்திருக்கலாம் என்றார். ஆனால், ஆணவக் கொலைகள் வெறும் சமூக கட்டமைப்பினால் மட்டுமே நடப்பவை அல்ல. அதிகாரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள சாதி அமைப்பு கையாளும் வஞ்சகமான திட்டம். இன்றைய காலத்திலும் கூட பழமையான சாதி அமைப்பையும் குடும்ப அந்தஸ்தையும் பற்றிக்கொள்ளும் மனிதர்களுக்குக் கள்ளங் கபடமற்ற காதல் உறுத்துமாயின், காதலிக்கத் தவறக்கூடாதென்றே எண்ண வேண்டியிருக்கிறது.

அமர்வின் நிறைவாக, எழுத்தாளர் தயாஜி பெருமாள் முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய வாசக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ‘முத்தம்’, ‘ஒளி’, ‘மாயம்’, ‘நாய்’ போன்ற சிறுகதைகளைக் குறித்து பேசினார். சமூக அவலங்கள் மட்டுமின்றி, தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கும் கவனிப்பதற்கும் இக்கதைகள் வழி வகுக்கின்றன. படைப்பில், ஆறு கதைகள் காதலை மையப்படுத்தி நிதர்சன வாழ்க்கை சூழலுக்குப் பொருந்துவதாக அமைந்திருந்தது. அந்தக் கதைகளின் நுட்பங்கள் ஒன்றொன்றையும் தயாஜி நுட்பமாகச் சுட்டிக்காட்டினார். நாம் கவனிக்க மறந்த நம்முடன் பயணிக்கும் மனிதர்களை மையமாகக் கொண்டே பெருமாள் முருகனின் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. பெருமாள் முருகனின் எழுத்து, தேவையற்ற வருணனைகளைக் களைந்து, வாசகரை நேரடியாகக் கதையின் வாழ்வுலகத்திற்குள் இழுத்துச் செல்லும் தன்மை கொண்டுள்ளதாக தயாஜி விளக்கினார். அதுமட்டுமின்றி, அவர் எந்த அளவிற்குத் தம்மைச் சுற்றி இருக்கும் சூழல்களைக் கவனிக்கின்றார் என்பதைத் தெளிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறு, ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்பு, பெருமாள் முருகனின் சமூக யதார்த்த எழுத்துமுறை, மனிதர்களின் உள் சிந்தனைகளின் நுணுக்கம் மற்றும் வாழ்க்கையின் நிதர்சன தருணங்களை வாசகருக்கு உணரச் செய்வதில் சிறப்பாகச் செயல்படுகிறது. வளர்ப்பு விலங்குகள், சாதியம் என வெவ்வேறு கருக்கள் கொண்ட கதைகளைத் தொகுத்திருப்பதைப் போல காதல் கதைகள் எனத் தனியே கதைகளைத் தொகுக்க வேண்டும் என தயாஜி வேண்டுகோளை முன்வைத்தார்.
படைப்புகளின் வாசிப்பனுபவத்துக்குப் பிறகு, எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசினார். தம்முடைய படைப்புகளின் வாசிப்பனுபவப் பகிர்வு தன்னை மிக நெகிழ்வாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ‘மாதொருபாகன்’ நாவலையும் ‘பூக்குழி’ நாவலையும் எழுத்தாளர் மோகனாவும் பரிமித்தாவும் அணுகிய விதம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். மலேசியாவிலும் திருமண உறவுகளில் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுவதாக எழுத்தாளர் பரிமித்தா குறிப்பிட்ட உதாரணம் வருத்தமூட்டுவதாகக் குறிப்பிட்டார். அதைப் போல ‘கழிமுகம்’ நாவலில் பேசப்பட்டிருக்கும் கல்வி வியாபாரமாகியச் சூழல் இன்னுமே விரிவாகப் பேசப்பட வேண்டுமெனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
பெருமாள் முருகனின் படைப்புலகம் சமூகத்தின் குறைபாடுகளையும் அவலங்களையும் விமர்சனங்களாகப் புனைவில் நிலை நிறுத்துகிறது. மனிதர்களின் எதார்த்தமான உளவியலிலும் உணர்வுகளிலும் தலையிட்டு, அதைக் கலாச்சாரம், பண்பாடு, மரியாதை என்று பெயர் சூட்டி, அதற்குள் புனிதத்தையும் திணித்து தன்னைத் தூய்மையானவர்களாகச் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றனர். இத்தகைய, அற மீறலை ஆவணப்படுத்துவதும் விமர்சிப்பதும் அவசியம். மதம், இனம், சாதி, பொருளாதார அடையாளங்களின் மூலம் மனிதர்களைப் பிரித்தாளும் போது, அதைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கான இலக்கியம் அறத்தின் குரலாக விளங்குகிற ஒரு எழுத்தாளனிடமிருந்து படைக்கப்படுவது முக்கியம். அத்தகைய குரலாகவே எழுத்தாளர் பெருமாள் முருகனின் படைப்புலகம் விளங்குகிறது.
