கௌசல்யா கவிதைகள்

ஒரு நல்ல மரணத்தை வேண்டுகின்ற நாளில்

சாத்தான் கொஞ்சம் மனமிறங்கியிருக்கலாம்.
அன்பற்று வறண்டு கிடக்கும் சரீரத்தில்

ஒரு தேநீரை நிரப்பி பிழைத்திருக்க

வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

***

எனக்கு உன் குறைகள் உறைக்கிறது

அப்படியானால் நான் உன்னை இழக்க தயாராகி கொண்டிருக்கிறேன்.

நான் அன்பின் கரங்களை ஏந்தியபோது

எந்த வெறுப்பையெல்லாம் என்மீது உமிழ்ந்தாயோ

அதையெல்லாம் திரும்பச்செய்

நான் கொஞ்சம் சீக்கிரமாகப் புறப்பட வேண்டும்.

***

அவர்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

இவ்வளவு காலம் எவ்வளவு செலவழித்தார்கள்

எவ்வளவு கொடுத்தார்கள்

என்ற கூட்டல் கழித்தலுக்கு பிறகு

நம்மை இன்னொருவருடன் தராசில் ஏற்றி

எடை பார்த்து இறக்கி வைப்பார்கள்.

நமக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

விடைபெறுவதற்கு முன் கட்டியணைத்த சில நொடிகளை

குறுஞ்செய்தியில் வந்தடைந்த சில ரோஜாக்களை

கூடலுக்கு பின் கால் பிடித்துவிட்ட விரல்களை

ஆனால் நாம்

தராசுக்கு பதிலாகத் தூளியில் ஏற்றுகிறோம்.

***

புணர்ச்சி ஏன் ஒரு தேநீர் சந்திப்பு போல எளிமையாக இருப்பதில்லை

ஒரு தேநீர் சந்திப்புக்காக

காதல் வந்துவிடுவதில்லை

விவாகரத்துகள் நடப்பதில்லை

விவாகரத்தாகி விடவேண்டும் என வேண்டி கொள்வதில்லை

காதலிகள் சந்தேகிப்பதில்லை

காதலியாக வேண்டும் என நினைப்பதில்லை

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வருவதில்லை

ஒருமுறை லவ் யூ சொல்ல சொல்லி மனம் பதபதைப்பதில்லை

வேறு வேலை ஏதும் செய்யமுடியாதவாரு மூளையை கட்டிபோடுவதில்லை

பைத்தியம் பிடிப்பதில்லை

பயப்பட தேவையில்லை

கோபம் வருவதில்லை

பிரிவு வருவதில்லை

கண்ணீர் வருவதில்லை

யாரும் இவ்வளவு மனஉளைச்சளுக்கு ஆளாவதில்லை

புணர்ச்சி ஒருபோதும் எளிமையாக போவதில்லை

ஆக, ஒரு எளிமையான தேநீர் சந்திப்போடு நிறுத்திக்கொள்ளலாம்.

1 comment for “கௌசல்யா கவிதைகள்

  1. January 3, 2026 at 1:05 pm

    கௌசல்யாவின் கவிதைகள் நம்பிக்கையூட்டுக்கின்றன. மலேசியாவில் எழுதப்படும் புதுக்கவிதைகளை வாசிக்கமுடியவில்லை. எங்கே தொடங்கினார்களோ அங்கேயே நின்று ஓடுவதாக எண்ணிக்கொள்வதுதான் நமக்குள்ள சாபம். அடுத்த நகர்வுக்கான எந்த முயற்சியையும் மேற்கொள்வதில்லை. வாசிப்பதே இல்லை என்றே திட்டவட்டமாகச் சொல்லிவிடலாம். ஆனால் கௌசல்யாவின் பார்வையில் ஒரு புதிய அவதானிப்பு தெரிகிறது. புணர்ச்சி தருணத்துக்கும் தேனீர் சந்திப்புக்குமான வேறுபாடுகளை சொல்லும்போது ஒரு பெண்ணின் கசப்பான அனுபவம் எந்த அளவுக்கு புணர்ச்சியைப் புறந்தள்ளி, நட்பை விதந்தோதுகிறது என்று புரிகிறது. உடல் சார்ந்த உறவுக்கும் உள்ளம் சார்ந்த உறவுக்குமான ஒரு பெண்ணின் அபிப்பிராயத்தில் உள்ள நுணுக்கமே இக்கவிதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...