முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு
சாலினி
வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன்.

இதற்கு முன் பங்கெடுத்த முகாம்களைக் காட்டிலும் இம்முறை நடந்த வல்லினம் முகாம் எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தந்துள்ளது. எப்பொழுதும் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் ஆகிய படைப்புகளை வாசித்து அவற்றைக் குறித்த கலந்துரையாடல்களே அதிகம் முகாம்களில் நடத்தப்பட்டுள்ளன. இம்முறை, சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதற்கான பயிற்சியும் சிறுகதை, கட்டுரைகளைப் பற்றிய அறிமுகங்களும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அமர்வையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார்.
அவ்வகையில் டிசம்பர் 21, காலை 9 மணிக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ம.நவீனின் சிறிய அறிமுகத்தோடு முகாம் தொடங்கப்பட்டது. சிறுகதை எழுத எண்ணும் ஒவ்வொரு படைப்பாளியும் அதன் வரலாற்றை அறிந்து வைத்திருப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதன் வரலாற்றை அறிவதன் வழியேதான் முன்னோர்கள் சிறுகதை உலகில் செய்த சாதனைகளை அறிய முடியும். ஆகையால்தான், எழுத்தாளர் பெருமாள் முருகன் தொடக்கத்திலே சிறுகதை வரலாற்றைப் பங்கேற்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி முதல் அமர்வைத் தொடக்கி வைத்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் சிறுகதையின் வரலாறு தொடங்குகின்றது. அச்சு இயந்திர அறிமுகத்திற்குப் பின்பும் உரைநடை அறிமுகத்திற்குப் பின்பும்தான் சிறுகதைகள் உருவாகத் தொடங்கின. இருப்பினும், மேலை நாட்டிலிருந்து சிறுகதை எனும் இலக்கிய வடிவம் உருவாகியது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், சிறுகதைகளுக்கான கூறுகள் தொல்காப்பியம், சங்கப்பாடல், கலித்தொகை போன்ற பழந்தமிழிலக்கியத்திலே காணப்படுகின்றன எனும் வாதத்தை முன்வைப்பதை பெருமாள் முருகன் சுட்டிக்காட்டினார். அதற்குக் காட்டாக, கலித்தொகை பாடலான ‘நகைக்கூட்டம் செய்தான் கள்வன் மகன்’ என்ற பாடலை உதாரணமாக முன்வைத்தார்.
மாறுவேடத்தில் தலைவியின் வீட்டிற்கு நீர் குடிக்க வரும் தலைவன், தண்ணீரைப் பெற்றுக் கொள்வது போல அவள் கையைப் பற்றியிழுத்தவுடன் தலைவி கூச்சலிடுகிறாள். பின்னர், மாறுவேடத்தில் இருப்பது தன் காதலன் என்று அறிந்தவுடன் தன் தாயிடம் தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கின்றாள். இப்பாடலில் காட்டப்பட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் சிறுகதை எழுதலாம், ஆனால், இப்பாடலே சிறுகதை என்று கூறுவது சரியாகாது என்று பெருமாள் முருகன் கூறினார்.
சிறுகதைக்கென வடிவமைக்கப்பட்ட வடிவம், உணர்வு அனைத்தும் 19ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு அச்சு இயந்திர வளர்ச்சியினால் தொடங்கியது. அத்தோடு, 19ஆம் நூற்றாண்டில்தான் நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிட்டார். நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வேலை நேரத்திற்குப் பிறகு, தங்களுக்கான ஓய்வு நேரங்களைப் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்த தொடங்கினார். அவர்களின் பொழுதுபோக்கிற்காக இதழ்கள் உருவாகின. அச்சு இயந்திரத்திற்கு முன் ஓலைச்சுவடிகளில் எழுதிய காலம் மெல்ல மாறவும் தொடங்கியது. ஆக, சிறுகதையின் வரலாற்றை 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாம் வகுத்துப் பார்க்க வேண்டும் என பெருமாள் முருகன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, சிறுகதை வரலாறு குறித்த ஆழமான பகிர்வுக்குச் செல்வதற்கு முன், எழுத்தாளர் பெருமாள் முருகன் சில நூல்களைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிறுகதை வரலாற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அந்நூல்கள் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவை;
- பேராசிரியர் க. சிவத்தம்பி எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’.
- டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் எழுதிய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’.
- எ.வேதசகாயம் எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’.
- பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் எழுதிய தமிழில் ‘சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’.
- சி.சு. செல்லப்பா எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது’.
- டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்’.
- டாக்டர் ம. திருமலை எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை நேற்றும் இன்றும்’.
- சுப்பிரமணி இரமேஷ் எழுதிய ‘தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்’.
- ச. தமிழ்ச்செல்வனின் ‘என் சக பயணிகள்.’
- ச.தமிழ்ச்செல்வனின் ‘முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்.’
- அரவின் சுவாமிநாதனின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்.’
சிறுகதை வரலாற்றை விளக்கும் நூல்களின் அறிமுகத்திற்குப் பிறகு, எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதை வரலாற்றைக் காலத்திற்கேற்ப பிரித்தெடுத்து விளக்கினார். இந்த அமர்வில் முதல் கேள்வியாகச் சிறுகதையின் தந்தை யார் என வினவினார். அனைவரும் அறிந்தபடி நாங்களும் வ.வே.சு ஐயர் என்ற பெயரைக் கூறினோம். வ.வே.சு. ஐயரைச் சில வரலாற்று ஆசிரியர்கள் சிறுகதை தந்தையாக ஏற்றுக்கொள்வதில்லை என்றார். அக்கூற்றை மேலும் சான்றோடு விளக்க சிறுகதை காலத்தை இருபது இருபது ஆண்டுகளாக வகுத்து, அந்தந்தக் காலக்கட்டத்து சிறுகதைப் போக்குகளையும் எழுத்தாளர்களைப் பற்றியும் விளக்கினார். 1890 முதல் 1910, 1910 முதல் 1930, 1930 முதல் 1950, 1950 முதல் 1970, 1970 முதல் 1990, 1990 முதல் 2010, 2010 முதல் தற்காலம் வரை என இருபது இருபது ஆண்டாக பிரித்துப் பார்ப்பதன் வழி சிறுகதையின் வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள முடியும் எனக் கூறினார்.
- 1890 முதல் 1910
முதல் காலக்கட்டம் 1890 முதல் 1910 வரை ஆகும். இக்காலக்கட்டத்தை முன்னோடி காலக்கட்டம் என அவர் குறிப்பிட்டார். இக்காலக்கட்டத்தில் முக்கியமான இதழாக விளங்கியது விவேக சிந்தாமணி பத்திரிக்கை. இவ்விதழ் சென்னையிலிருந்து வெளிவந்த மாத இதழாகும். தொடக்கக் கால நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவையா விவேக சிந்தாமணி இதழில் எழுதியிருக்கிறார்.
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் எனும் தமிழ் அறிஞர் 1892இல் ஆயுர்வேத பாஸ்கரன் மற்றும் சுப்பையா ஆகிய சிறுகதைகளை விவேக சிந்தாமணி இதழில் எழுதியுள்ளார். சிறுகதை தந்தையாகக் கருதப்படும் வ.வே.சு. ஐயர் சிறுகதை எழுதத் தொடங்கியது 1915 இல்தான். ஆனால், திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 1892 ஆண்டிலே சிறுகதை எழுதியுள்ளார். ஆகையால்தான், சில வரலாற்று ஆசிரியர்கள் வ.வே.சு. ஐயரைச் சிறுகதை தந்தையாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதனைச் சான்றோடு எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கூறினார். மேலும், துப்பறிவு வகை நாவல்களுக்கு முன்னோடியாக விளங்கிய ச. ம. நடேச சாஸ்திரி என்பவரும் விவேக சிந்தாமணி இதழில் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆக, 1890-1910இல் எழுதியவர்களைத்தான் தமிழ்ச் சிறுகதை இலக்கிய முன்னோடிகள் என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்களில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், இரண்டாமாவர், ச. ம. நடேச சாஸ்திரி.
தமிழ்ச்சிறுகதை பெண்களிலிருந்து தொடங்குவதாகவும் பெண்ணியச் சிந்தனையாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு 1913இல் எழுதிய அம்மணி அம்மாள் அவர்களைச் சான்றாக சிலர் முன்வைக்கின்றனர். அம்மணி அம்மாள் என்பவர் விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இவர் ‘சங்கல்பமும் சம்பவமும்’ என்ற சிறுகதையை 1913இல் விவேகபோதினி எனும் இதழில் எழுதி உள்ளதால் சிலர் அம்மணி அம்மாளைச் சிறுகதைக்கான முன்னோடியாகக் குறிப்பிடுகின்றனர்.
1905 ஆம் ஆண்டில் பாரதியாரின் சிறுகதைகளும் வெளிவந்தன. பாரதியார் சில சுவாரஸ்யமான சிறிய அளவு கதைகளை எழுதியுள்ளார். ஆனால், அவரின் அனைத்து கதைகளும் சிறுகதை அம்சத்தைக் கொண்ட கதைகளாகக் கருதப்படவில்லை. அவர் நடத்திய சக்கரவர்த்தினி எனும் இதழில் பெண்களின் உலகைக் காட்டும் கதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பாக துளசி பாயி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி ஆகியவை சிறந்த சிறுகதைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஆக, திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ச. ம. நடேச சாஸ்திரி, அம்மணி அம்மாள், பாரதியார் ஆகியோரின் கதைகள் சிறுகதை அம்சம் கொண்டிருக்கின்றதா என்பது விவாதத்திற்குட்பட்டது. ஆனால், அக்கதைகள் அக்காலச் சமூக வரலாற்றைக் காட்டும் ஆவணமதிப்பு வாய்ந்தவை என்றார். அதோடு, நூறாண்டில் நமது சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை உணர இக்கதைகள் நமக்கு உறுதுணையாக அமைவதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார்.
- 1910 முதல் 1930
தொடர்ந்து, 1910 முதல் 1930 வரை உள்ள காலக்கட்டத்தை இரண்டாம் காலக்கட்டம் என வகைப்படுத்துவர். 1920 முதல் 1940 வரை கொண்ட காலத்தைச் சிலர் இருண்ட காலக்கட்டம் என்று வகைப்படுத்துவர். இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட படைப்புகள் சரியாகக் கிடைக்காதது அதிக தழுவல்கள் சார்ந்த படைப்புகள் வெளிவந்ததாலும் அக்காலக்கட்டத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுவர்.
இக்காலக்கட்டத்து எழுத்தாளர்களாக வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு, நாமக்கல் எ. அரங்கசாமி ஐயங்கார், வி.பாலாம்பாள் ஆகியோரை பெருமாள் முருகன் குறிப்பிட்டார். வ.வே.சு. ஐயருக்கு முன் இதழ்களில் பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், முதல் சிறுகதை நூல் என வெளிவந்தது வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ நூல்தான். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் வ.வே.சு. ஐயர் பல புதுமையான உத்திகளைக் கையாண்டிருக்கிறார்.
1924 ஆம் ஆண்டில் அ. மாதவையா நடத்திய பஞ்சாமிர்தம் எனும் இதழ் வெளிவந்தது. இவ்விதழில் அ. மாதவையா ‘கண்ணன் பெரும் தூது’ எனும் சிறுகதையை எழுதியுள்ளார். ‘கண்ணன் பெரும் தூது’ கதை நவீன சிறுகதைக்கான கூறுகளைக் கொண்டுள்ள கதையாகும். அ. மாதவையாவின் குசிகர் கதையும் அக்காலக்கட்டத்தில் வெளிவந்த முக்கியமான கதையாகக் கருதப்படுகின்றது.
எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு ஆனந்த குணபோதினி இதழில் நிறைய கதைகள் எழுதியுள்ளார். இவரின் கதைகளை புதுமைபித்தன்கூட பாராட்டியுள்ளார். ‘கோபால கிருஷ்ணன்’ என்ற சிறுகதையை நாமக்கல் எ. அரங்கசாமி ஐயங்காரும் 1936இல் ‘மண்பானை’ என்ற கதையை வி.பாலாம்பாளும் எழுதியுள்ளனர்.
- 1930 முதல் 1950
1930 முதல் 1950 வரையிலான காலக்கட்டத்தை மணிக்கொடி காலம் என்று குறிப்பிடுவர். சிறுகதை உலகிற்குப் பெரும் பங்காற்றிய இதழாக மணிக்கொடி இதழ் விளங்கியது. இந்த இதழின் ஆசிரியர்களான வ. ராமசாமி ஐயங்காரும் பி.எஸ்.ராமையாவும் அக்காலத்து எழுத்தாளர்கள் சிறுகதைகளில் பரிசோதனை முயற்சிகள் செய்ய ஊக்குவித்தனர். அக்காலக்கட்டத்தில் உருவாகிய எழுத்தாளர்கள் எனக் குறைந்தது 20 எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம். அவர்களுள் மிக முக்கியமானவர்கள் புதுமைபித்தன், மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, ந. சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி, சங்கு சுப்ரமணியம் மற்றும் கு. அழகிரிசாமி ஆகியோர் ஆவர்.
தமிழில் சிறுகதை என்னும் கலைவடிவம் முழுமையடைவதற்கு மணிக்கொடி காலம் பெரும் பங்காற்றியுள்ளது. உதாரணமாக, புதுமைபித்தன்தான் பிராமணர் அல்லாதோரின் வாழ்க்கையைத் தவிர்த்த வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையைத் தமது கதையில் காட்டியவர். அதனால்தான் அவர் சிறுகதை மன்னனாகப் போற்றப்படுகின்றார். தொடர்து, பெருமாள் முருகன் அவர்கள் கு.ப.ராஜகோபாலன் எழுதிய கனகாம்பரம் கதையையும் கு.அழகிரிசாமி எழுதிய பித்தளை வளையல் கதையையும் கூறி தமிழ்ச் சமூகத்தில் மெல்ல உருவான நகர வாழ்வின் சித்திரத்தைப் பற்றி விளக்கினார்.
- 1950 முதல் 1970
1950 முதல் 1970 வரையிலான காலக்கட்டம் அதிகமான விளிம்பு நிலை மக்களின் கதைகளைப் பேசிய காலக்கட்டமாகும். இக்காலக்கட்ட எழுத்தாளர்களுள் ஜெயகாந்தன், ஜி. நாகராஜன், விந்தன், தி. ஜானகிராமன் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோர் முக்கியமானவர்கள்.
இக்காலக்கட்டத்தில்தான் கிராம வாழ்க்கை பின்னணி கொண்ட கதைகளும் பேசப்பட்டன என்பதையும் பெருமாள் முருகன் குறிப்பிட்டார். அதற்கு எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் கதையுலகை உதாரணமாகக் கூறினார். ‘கதவு’, ‘பூவை’, ‘கறிவேப்பிலை’ போன்ற கதைகளையும் அவர் காட்டாக முன்வைத்தார். கி.ராஜநாராயணன் கரிசல் கால மக்களின் வாழ்க்கையைக் கூறிய முக்கிய எழுத்தாளர் என்பதனைப் புரிந்துகொள்ள முடிந்தது.
- 1970 முதல் 1990
1970 முதல் 1990 வரையிலான காலக்கட்டம் தமிழ்ச் சிறுகதையின் பரப்பை விரிவுப்படுத்திய காலக்கட்டம் எனலாம். 1950 முதல் 1970 வரை கரிசல் மக்களின் வாழ்க்கையைப் பேசிய கதைகள் மெல்ல 1970 தொடங்கி 1990 வரை விரிவடைந்து தமிழ்நாட்டில் உள்ள பல வட்டார மக்களின் கதைகளைப் பேசுபவையாக உருமாறின. வட சென்னை, கொங்கு, கரிசல், நாகர் கோவில் எனச் சிறுகதையில் இடப் பின்னணியும் பரப்பும் விரிவடைந்தது.
இக்காலக்கட்டத்தில் பல எழுத்தாளர்கள் உருவாகினர். அவர்களில் அம்பை, வண்ணதாசன், வண்ணநிலவன், ராஜேந்திர சோழன்,கோணங்கி, ச. தமிழ்ச்செல்வன், கு. மணி, ஜெயமோகன், சுப்பிர பாரதிமணியன், பாவண்ணன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு கோணத்தில் எழுதப்பட்டன.
- 1990 முதல் 2010
1990 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் வெவ்வேறான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் எழுதப்பட்டன. தலித், பெண்ணியம், மார்க்சியம் போன்ற கோட்பாடுகளோடு வடிவ ரீதியான கோட்பாடுகளான மாய யதார்த்தமும் பின்நவீனத்துவமும் கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டன. இமையம், பாமா, சிவகாமி, சுதாகர், வெண்ணிலா, உமா மகேஸ்வரி ஆகியோரை இக்காலக்கட்ட எழுத்தாளர்களின் காட்டாக பெருமாள் முருகன் குறிப்பிட்டார்.
- 2010 முதல் 2025
2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் புலம்பெயர் எழுத்துகளை முன்வைக்கும் காலக்கட்டமாக விளங்குகின்றது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி இக்காலக்கட்டத்தில் பெரும் பங்கினையாற்றுவதாக கூறினார். இக்காலக்கட்ட எழுத்தாளர்களாக ஷோபா சக்தி, டெனியல், எஸ். பொன்னுதுரை, அனோஜன் பாலகிருஷ்ணன், ஜா. செந்தில்குமார், ம. நவீன், மயிலன் சின்னப்பன், ஜோர்ச் ஜோசப், கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஆகியோரைக் காட்டாகக் கூறினார்.
பெருமாள் முருகன் அவர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களால் சில கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் கேள்வியை எழுத்தாளர் ம. நவீன் முன்வைத்தார். “வ.வே.சு. ஐயருக்கு முன் எழுதப்பட்ட சிறுகதைகள் ஏதேனும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற சிறுகதை வடிவோடு ஒத்து வந்துள்ளதா?” எனக் கேட்டார். அதற்கு, எழுத்தாளர் பெருமாள் முருகன் அப்படி எதுவும் இல்லை என்றும் வ. வே. சு. ஐயரின் சிறுகதைகூட அவ்வடிவில் இல்லை என்பதனையும் கூறினார். அதோடு, மேற்கத்திய நாட்டின் வடிவத்தோடு ஒத்தி வரும் சிறுகதை வடிவங்கள் மணிக்கொடி காலத்தில் வந்த சிறுகதைகளில் காணலாம் என்றும் புதுமைபித்தனைக் காட்டாகவும் முன்வைத்தார்.
தொடர்ந்து, ஏன் சிறுகதை வரலாற்றைக் குறித்து விளக்கமளிக்கும்போது ஏன் வணிக எழுத்தாளர்களைக் குறிப்பிடவில்லை என்ற வினாவை மீண்டும் ம. நவீன் வினவினார். அதற்கு, பெருமாள் முருகன் அவர்கள் “ அதற்கு என்னுடைய பார்வைதான் காரணம். அதோடு, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றால் அப்படைப்பு ஏதோ ஒரு வகையில் சமூகத்தை நிறைவடையச் செய்ய வேண்டும். வணிக இலக்கியத்தின் மதிப்பு குறுகிய காலமே நீளும் என்றார்.” என்று கூறினார்.
மேலும், புலம்பெயர் எழுத்துகள் என்பது பலமா அல்லது பலவினமா? என எழுத்தாளர் தயாஜி அவர்களால் கேட்கப்பட்ட வினாவுக்கு புலம்பெயர் எழுத்துகள் பலம் என்று விடையளித்தார் பெருமாள் முருகன். இறுதியாக, தமது பார்வையில் எந்தச் சிறுகதை இலக்கிய தன்மை கொண்ட முதல் கதையாக நீங்கள் கருதுவீர்கள் என எழுத்தாளர் அரவின் குமார் கேட்ட கேள்விக்கு, பெருமாள் முருகன் மீண்டும் மணிக்கொடி காலத்தையும் அக்காலக்கட்டத்தில் எழுதிய புதுமைபித்தனையும்தான் காட்டாகக் கூறினார். மணிக்கொடி காலத்திற்கு முன் எழுதப்பட்ட கதைகள் சிறுகதை கூறுகளைக் கொண்டிருந்தாலும், மணிக்கொடி காலத்தில் வெளிவந்த கதைகள்தான் வடிவம், பேசு பொருள், கதாப்பாத்திரம் என அனைத்து வகையில் நவீனத்துவத்தை கொண்ட சிறுகதையாக விளங்குகின்றது.
ஆக, 1890 தொடங்கி 2025 என தற்காலம் வரை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் அக்காலக்கட்டங்களில் முக்கியமாக விளங்கிய சிறுகதைகளைக் குறித்தும் எழுத்தாளர் பெருமாள் முருகன் விளக்கமாகவும் ஆழமாகவும் எங்களுக்கு விளக்கினார். தமிழ்ச் சிறுகதை உலகில் நிகழ்ந்துள்ள போக்குகளை அறிவதன் வழியேதான் சிறந்த சிறுகதைகளை எழுத முடியும். வரலாற்றை அறிவதன் வழி நம்மால் நாம் ஈடுபடும் எழுத்துலகின் முக்கியத்துவத்தை நன்கு உய்த்துணர்ந்து செயல்பட இயலும். அத்தோடு சிறுகதைகளை இலக்கிய வடிவம் என்பதைத் தாண்டி சமூக ஆவணமாகவும் அணுக முடிவதையும் பெருமாள் முருகனின் விளக்கம் வழி அறிந்து கொள்ள முடிந்தது.
அவ்வகையில், பெருமாள் முருகன் அவர்களின் விளக்கம் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையும் போக்கையும் ஒட்டிய பெருந்திறப்பைத் தருவதாக அமைந்திருந்தது.

இரண்டாம் பகுதி : சிறுகதை எனும் கலைவடிவம்
ஜி.எஸ்.தேவகுமார்
மதியம் 2 மணிக்கு இரண்டாவது அமர்வு தொடங்கப்பட்டது. இரண்டாவது அமர்வில், எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதை எனும் கலைவடிவத்தை எழுதும் முறையைக் குறித்த விளக்கத்தை வழங்கினார். இந்த அமர்வில் நாங்கள் பெற்றதை மூன்று பாகங்களாகப் பிரித்து தொகுத்துப் பார்க்கலாம். முதலில், புனைவுலகத்தில் இயங்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் எவ்வாறான வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற விளக்கத்தை நாங்கள் பெற்றோம். இரண்டாவதாக, சிறுகதை எழுதும் முறையையும் அதற்கான பயிற்சிகள் குறித்த விளக்கம் வழங்கப்பட்டது. மூன்றாவது, கேள்வி பதில் அங்கம்.
“ஒருவருக்கு எழுத கற்றுக் கொடுக்க முடியுமா?” என்ற வினாவிலிருந்து இந்த அமர்வு தொடங்கப்பட்டது. எழுத்து என்பது இயல்பாக வரக் கூடிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் பிறவிலேயே அமைந்துள்ளது. சிலர் தங்களுக்கு இந்தத் திறன் உண்டெனக் கண்டு கொள்கிறார்கள். கண்டு கொண்டதும் அதை வளர்த்தெடுத்து விடுகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் தங்கள் திறனைக் கண்டு கொள்வதே இல்லை. எல்லோருக்கும் எதாவது வகையில் திறன்கள் உள்ளன. ஆனால் திறன்கள் இருந்தாலும், அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம், எப்படி வளர்த்து கொள்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதைப் போலவேதான் சிறுகதை எழுதுவதும். நமக்கு இயல்பிலேயே சிறுகதை எழுதுவதில் ஆர்வம் இருக்கின்றது என்றால், அதை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். வளர்த்து கொள்ளாமல் தனக்கு ஆர்வம் இருப்பதாக வெட்டியாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது. நமது ஆர்வத்தைத் திறனாக வளர்த்துக் கொள்வதில்தான் வளர்ச்சியுள்ளது என்றும் அவ்வாறு வளர்த்து கொள்வதற்குதான் இம்மாதிரியானப் பட்டறைப் பயிற்சிகள் உதவும் என்றும் கூறி இந்த அமர்வின் நோக்கத்தை எங்களுக்குப் புரிய வைத்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
வாசிப்பு குறித்த அறிமுகமும் அதன் முக்கியத்துவமும்
கற்றலை நாம் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சுயக்கற்றல் மற்றொன்று அனுபவம் உடையவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் ஆகும். இன்று பெரும்பாலும், பல எழுத்தாளர்கள் சுயக்கற்றலின் வழியே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சுயக்கற்றலுக்கு அடிப்படையாக விளங்குவது வாசிப்புதான். வாசிப்பதன் வழியே ஓர் எழுத்தாளனால் ஒன்றைப் பகுத்தறிந்து பார்க்கவும் தனக்கான சுயப்பார்வையை கண்டறியவும் இயலும் எனக் கூறி வாசிப்புக் குறித்த அறிமுகங்களை எங்களுக்கு வழங்கினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
முதலில், ஒரு கதை பல முறை வாசிக்கப்பட வேண்டும் என்றார். முதல் வாசிப்பு நமது வாசக அனுபவத்திற்காக அமைந்து, அடுத்த வாசிப்பு நமது கற்றலுக்கான கருவியாகச் செயல்பட வேண்டும். கதையைக் கற்றலுக்கான கருவியாக்கி, அக்கதையைப் பல முறை வாசிப்பதன் வழியே நம்மால் கதையின் மையப் பொருள், கதை பின்னல், கதையின் தொடக்கம், முடிவு, மொழி எனச் சிறுகதைக்கான கூறுகள் அனைத்தையும் பல கோணங்களில் கண்டுகொள்ள இயலும். கதையில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் முக்கியம் எனக் கருதி அதனை நுட்பமாக வாசிப்பதே ஒரு சிறந்த வாசிப்பாக அமையும் என்றும் பெருமாள் முருகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, வாசிப்பு பழக்கத்தில் முக்கியமாக விளங்குவது நேர ஒதுக்கீடுதான். ஆக, நேரத்தை ஒதுக்கி வாசிக்கும் பழக்கத்தை ஒவ்வொரு வாசகரும் கொண்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இதில் நம்மில் பலர் நூல்களை வாசிக்கும்போது தூக்கம் வருவதாக முறையிடுகிறோம். இதற்கு முதன்மை காரணமே நாம் வாசிக்கும் நேரம்தான். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும் சமயத்தில் வாசிக்க வேண்டும். ஆனால், நாம் மூளையும் உடலும் சோர்வடைந்திருக்கும் தருணத்தில் வாசிப்பதினால்தான் விரைவில் சோர்வடைந்துவிடுகிறோம். வாசிப்பு எனப்படுவது இன்னொரு உலகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒரு பயணம். ஒரு எழுத்தாளர் நமக்கு ஓர் உலகத்தைப் பகிர்ந்தளிக்கின்றார். அதனால் ஒரு புத்தகத்தை நேரம் ஒதுக்கி வாசிக்கும் போதுதான் நாம் அதற்கான உரிய மதிப்பைக் கொடுத்தவர்களாகிறோம். அதே சமயம், நமது வாசிப்பும் அர்த்தமுள்ளதாக உருமாறுகின்றது என்பதனைப் பெருமாள் முருகன் அவர்களின் விளக்கத்தின் வழி உய்த்துணர முடிந்தது.
மேலும், வாசித்தவற்றுள் முக்கியமானவற்றை அடையாளப்படுத்தி வைக்க பேனா, பென்சில், குறிப்பேடு, Bookmark, Book Stands, Book Sleeves, Book Beg, Book Lights, Page Holders போன்றவற்றை வைத்திருப்பது நமது வாசிப்பை மேலும் சுவாரசியப்படுத்தும் என்பதனை அவரின் விளக்கத்தின் வழி அறிந்து கொண்டேன்.
இறுதியாக, வாசிப்பிற்கும் படிப்பிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினைக் கூறி வாசிப்பு குறித்த அறிமுகத்தை நிறைவு செய்தார். படிப்பு என்பது ஒருமுறை சார்ந்த கல்வி என்பதால் அது கட்டாயத்தின் சாரம் கொண்டிருக்கும். ஆனால், வாசிப்பு என்பது கட்டுபாடுகளற்றது என்றும் கூறி வாசிப்பின் சிறப்பைச் சுட்டிக்காட்டினார். ஆக, படிப்பதில் இல்லாத சுதந்திரம் வாசிப்பதில் உள்ளது. யாரோ தீர்மானித்து திணிப்பது படிப்பது; நாமே தீர்மானிப்பது வாசிப்பு என்பதனை நான் இந்த அமர்வில் உணர்ந்தேன்.
சிறுகதை எழுதும் பயிற்சி குறித்த விளக்கங்கள்
எழுத்தாளர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக விளங்குகின்றனர். சராசரிகளிலிருந்து வேறுபட்ட, மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களால் மட்டும்தான் விழுமியங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி புனைவுலகத்தில் இயங்க முடியும். ஆக, முதலில் நம்முடன் வாழும் சக மனிதர்களைக் கவனிப்பதன் வழியே நாம் நமது சிறுகதை எழுதும் பயிற்சியைத் தொடங்கலாம் எனக் கூறினார் பெருமாள் முருகன்.
அவதானிப்பு எழுதுபவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு சம்பவத்தைக் கவனிக்கும்போது மற்றவர்கள் கவனிப்பதற்கும் ஒர் எழுத்தாளர் கவனிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சக மனிதர்களைக் காட்டிலும் எழுத்தாளர்கள் முன்வைக்கும் வேறுபட்ட பார்வையும் கோணமும் புனைவுக்கு அவசியம். ஆக, உற்றுநோக்குதலின் வழி சிலருக்கு அது இயல்பாக வருகின்றது. சிலர் பயிற்சிகளின் வழி தங்களை உருவாக்கி வளர்த்து கொள்ள வேண்டும் என்றார் பெருமாள் முருகன்.
மேலும், கள ஆய்வு மேற்கொள்வதும் சிறுகதை எழுதும் பயிற்சிக்கு வித்திடும் என பெருமாள் முருகன் கூறினார். அதற்குக் காட்டாக, அவர் தமது ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டிருந்த பூவரசு மரத்தைக் குறித்து முன்பே அறிந்திருந்தாலும் அம்மரத்தைக் குறித்த கள ஆய்வு வழி பெற்ற தகவல்களின் வழியேதான் அக்காட்சி விவரிப்பு சாத்தியமாகியது எனச் சொன்னர். கள ஆய்வின் மூலம் நம்மால் ஒரு விடயத்தைக் குறித்து கூடுதலாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இயலும்.

கதாப்பாத்திர வார்ப்பு சிறுகதைகளில் முக்கியம் என்பதால், அக்கதாப்பாத்திரங்களை உருவாக்குவதில் உள்ள உத்தியைக் குறித்த விளக்கம் பெருமாள் முருகன் அவர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டது. ஒரு மனிதனின் உருவம், தோற்றம் போன்றவற்றையெல்லாம் ஓர் ஓவியன் படம் வரைவதைப் போல நாம் நமது மனதில் படம் பிடித்துக்கொள்ள வேண்டும். காட்டாக, அவர் மீண்டும் ‘மாதொருபாகன்’ நாவலில் வரும் காளி பாத்திரத்தைக் குறிப்பிட்டார். காளியின் முகத்தை வாசிக்கின்றவர்களின் மனதில் கொண்டுவர முதலில் அவர் காளியைத் தமது மனதில் உருவகித்துக் கொண்டதாகக் கூறினார். ஒரு கதாப்பாத்திரத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் முன், எழுத்தாளராக நாம் முதலில் நமது மனதில் அப்பாத்திரத்தை உருவகிப்பதன் வழிதான் நம்மால் வாசகர்களின் மனதில் அப்பாத்திரத்தை நிலைநாட்ட இயலும். இது கூர்ந்து நோக்குதலின் வழியும் படைப்பாளர்களின் உழைப்பின் வழியும் சாத்தியமாகின்றது. ஒரு சூழலை, மனிதர்களை நேரில் சென்று பார்த்து அதனை உள்ளார உள்ளுணர்ந்து எழுத்தில் உயிரோட்டத்தைக் கொண்டு வர ஒரு படைப்பாளியின் உழைப்பு முக்கியமாக விளங்குகின்றது.
அடுத்து, எழுத்தாளர் எவ்வாறு மனிதர்களையும் சமூகத்தில் உள்ள கருத்துகளையும் அணுக வேண்டும் என்ற விளக்கம் வழங்கப்பட்டது. நமது நம்பிக்கைகளைத் தீவிரமாகவும், ஆழமாகவும் நம்பிக் கொண்டு ஒன்றை அணுகாமல், திறந்த மனதோடு அணுகுவது முக்கியம். உதாரணத்திற்கு, ஒருவர் மீது தவறு சுமத்தப்பட்டிருந்தால், அந்த நபர் மீது எடுத்தவுடன் குற்றம் சொல்லாமல், குற்றவாளியின் பக்கமுள்ள நியாயங்களையும் நோக்க வேண்டும். மேலும், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பொது விதிகளை மீறும் ஒரு மனிதனுக்குப் பின் உள்ள நியாயங்களையும் திறந்த மனதோடு அணுகுவதன் வழியே ஒரு படைப்பு உருவாகுகின்றது. ஆக, சமூக விழுமியங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனைக் குறித்து கேள்வி எழுப்புவதன் வழியும் அதனைப் புரிந்து கொள்வதன் வழியும் ஓர் எழுத்தாளனால் தன்னை உருவாக்கிக் கொள்ள இயலும் என்பதனை அவரின் விளக்கத்தின் வழி உணர்ந்திட முடிந்தது.
மேலும், பெருமாள் முருகன் அவர்கள் நாம் பார்ப்பது, அனுபவித்தது மட்டுமே வைத்துக் கொண்டு கதை எழுதிட முடியாதென்பதையும் கூறினார். நம் மனதில் பதிந்த அனுபவம், நம் அனுமதியோடு மெல்ல மனதில் ஊறி கதையாக உருமாற்றம் பெறும். அந்தப் படிமுறையைக் கடந்துதான் கதை எழுத இயலும் என்றார். அதோடு, தன்னிலையில் கதை சொல்வதை விட, படர்க்கையில் கதைச் சொல்லும் முறையையே பெருமாள் முருகன் ஊக்குவித்தார். ஏனென்றால், தன்னிலை நமது சுயத்தின் வெளிப்பாடாகக் கதையில் தலையிட வாய்ப்பாகி விடக்கூடும் என்பதனால் அவர் அவ்வாறு பரிந்துரைத்தார்.
ஒரு குழந்தை பிறந்தவுடனே நடப்பதில்லை என்பதற்கு ஏற்ப படிப்படியாகவே எழுதுவதில் நாம் நுழைய வேண்டும் எனக் கூறி புதியதாக எழுத வருபவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பயிற்சிகளைப் பெருமாள் முருகன் குறிப்பிட்டார். அவை;
- நாம் வாசித்த புத்தகம் மற்றும் கண்ட சினிமா பற்றிய சிறு குறிப்புகளை எழுதுதல்.
- நாட்குறிப்பு எழுதுதல்.
- நாம் சந்தித்த, நமது கவனத்தை ஈர்த்த மனிதர்கள் அல்லது நிகழ்வைக் குறித்து எழுதுதல். அந்தக் குறிப்பிட்ட நொடியில் நமக்குள் நிகழ்ந்த உணர்வுகளை எழுதி பார்த்தல்.
- எழுத்துப்பிழைகளின்றி எழுதிப் பார்த்தல்.
கேள்வி பதில் அங்கம்
பட்டறையில் இடையில் பங்கேற்பாளர்களால் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகள் அனைத்திற்கும் பெருமாள் முருகன் அவர்கள் தெளிவாக விடையளித்தார். அவை;
கேள்வி 1: வாசித்தப் பிறகு நமக்கென ஒரு பார்வை இருக்கும். அந்தப் பார்வை மற்றவர்களோடு பகிரும்போது அவர்களின் பார்வை நம் பார்வையோடு ஒத்திசைவதில்லை. இரண்டு பேரும் பகிரும் கருத்தும் வேறுபாடுகள் கொண்டவையாக உள்ளன. இதற்கான சிக்கல் என்ன?
பதில்: ஓவ்வொரு மனிதனும் வேறுபட்ட சிந்தனைகள் உள்ளவர்கள். அதனால் இருவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி 2: நம்முடைய வாசிப்புப் பார்வையைக் காட்டிலும் வேறொருவர் முன் வைக்கும் வாசிப்புப் பார்வைத் தரமிக்கதாக உள்ளது. ஏன் அவ்வாறான தரமிக்க வாசகர் பார்வையை என்னால் முன்வைக்க இயலவில்லை?
பதில்: நமக்கு எவ்வாறு அவர்களுடைய பார்வை மாறுபட்டுள்ளதாக தோன்றுகின்றதோ, அதே மாதிரி அவர்களுக்கும் நமது பார்வை மாறுப்பாட்டுள்ளதாக தெரியும். நாம் என்றும் நமது கருத்து தரமற்றவை என நினைத்துவிடக் கூடாது. நம் வாசிப்பின் வழி நமக்கென ஒரு கருத்து உருவாகி வருவதுதான் இங்கு முக்கியம். அந்தக் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நமக்கென்று ஒரு கருத்தோ அபிப்பிராயமோ உருவாகினாலே அது நல்ல வாசிப்பு வகையில்தான் சாரும்.நமது பார்வையை மேம்படுத்த நாம் ஒரு கதையை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும் போது நமக்கான பார்வை கூடும்.
அதோடு, ஒவ்வொரு துறை குறித்தும் ஒர் எழுத்தாளருக்கு குறைந்தபட்சமான அறிவு இருக்க வேண்டும். அவ்வாறான அறிவோடு வாசிக்கும் போது படைப்பு குறித்து நம் பார்வை மேலும் விரிவடையும். மேலும், நாம் வாசிக்கும்போது பல கோணத்திலிருந்து ஒரு கதையை அணுக வேண்டும். ஒவ்வொருவரின் துறையைச் சார்ந்தும் கதை பார்வை மாறுப்படும். உதாரணமாக, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒரு நாவலை வாசிக்கும் போது அவரின் சுற்றுச்சூழல் அறிவைக் கொண்டே அவரின் கதை பார்வை அமையும். சில சமயம் நம் கருத்து அவர்களின் கருத்தோடு முரண் படுவதாகவும் அமையும். இவ்வாறான சமயத்தில் நாம் திறந்த மனதைக் கொண்டு அக்கதையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிறரின் கருத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வதன் வழி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்கிறோம்.

கேள்வி 3: ஒரு கதையை எத்தனை முறை வாசிக்க வேண்டும்?
பதில்: ஒரு கதையை எத்தனை முறை வாசிக்க வேண்டும் என்பது அவரவர் மனதுக்கும் தேவைக்கும் தகுந்தது. ஒரு கதையை இரண்டு முறை வாசிக்கலாம். முதல் வாசிப்பில் பிடிப்படாத சில விஷயங்கள் இரண்டாம் வாசிப்பில் பிடிப்படும். சில கதைகளுக்குப் பல முறை வாசிக்கப்படும் பேறு கிடைக்கும். புதுமைப்பித்தனின் கதைகள் அவ்வாறான பேறு பெற்றவை.
கேள்வி 4: ஒரு கதையில் தலைப்புக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? தலைப்பிற்கு முக்கியத்துவம் தராமல் கதையின் மையத்தை மட்டும் பார்க்க வேண்டுமா?
பதில்: ஒரு கதைக்கு தலைப்பென்பது மிக முக்கியமான ஒன்று. தலைப்பு வைப்பதில் கூட பல முறைகள் உள்ளது. சிலர் கதைகளிலிருந்தே எதாவது ஒரு தொடரை எடுத்து தலைப்பாக கொடுத்து விடுவார்கள். கதைக்குள்ளேயே இடம் பெற்றிருக்காத வார்த்தை ஒன்றை தலைப்பாக கொடுப்பார்கள். (மூன்றாம் பிறை திரைப்படத்தை உதாரணமாக பயன்படுத்தி விளக்கம் கொடுத்தார்) தலைப்பு என்பது கதையைத் திறப்பதற்கான சாவி. ஒரு கதையை வாசித்து முடித்ததும், அதன் தலைப்போடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தலைப்பு குறியீடு சார்ந்து இருந்தால் சிறப்பு.
கேள்வி: விழுமியங்கள் மீறல் பற்றிப் பேசுகிறோம். மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சுயநலத்தில் ஏழை குழந்தைகளைத் தன் ஆராய்ச்சிக்காக பயன்படுத்துகிறார். அங்கே ஏற்படும் அறம் மீறல்களை நாம் நியாயப்படுத்த முடியுமா? அந்த மருத்துவ ஆராய்ச்சியை நியாயப்படுத்த முடியுமா?
பதில்: மனித சமூகத்திற்கு அடிப்படை அறம் என்ற ஒன்றுள்ளது. அறத்திற்கு எதிரான செயல்களை நியாயப்படுத்த முடியாது. எழுத்து விழுமியங்களைக் குறித்து கேள்வி கேட்க வேண்டுமென்பது அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான கேள்வியாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் கோணத்திலிருந்து பார்ப்பது எழுத்தினுடைய முக்கியமான அம்சம்.
கேள்வி 5: சிறுகதைகளில் உரையாடல்களை எவ்வாறு அல்லது எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்?
பதில்: கதையில் உரையாடல் கச்சிதமாக அமைய வேண்டும். உரையாடல்கள் கதையோட்டத்தை விட்டு வெளியேறி விடக் கூடாது. கதையைக் கச்சிதமாக நகர்த்தப் பயன்பட வேண்டும். புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ கதையை உதாரணமாகப் பார்க்கலாம். அக்கதையில் இடம் பெறும் வசனங்களைக் கச்சிதமாக இருக்கும். ஆக, கதையில் உரையாடல் கச்சிதமாக அமைய வேண்டும்.
ஆகவே, பங்கேற்பாளர்கள் முன்வைத்த அனைத்து வினாக்களுக்கும் தெளிவாகவும் பொறுமையாகவும் பெருமாள் முருகன் அவர்கள் விடையளித்தார். இந்த அமர்வின் வழி எங்களால் சிறுகதை எழுதுவதற்கு அடிப்படையாக தேவைப்படும் வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவை குறித்தும் அறிந்துகொள்ள இயன்றது.

மூன்றாம் பகுதி: கட்டுரை எழுதும் திறன்
கௌசல்யா
21 டிசம்பர் காலையில் தமிழில் கட்டுரை வரலாறு, கட்டுரை வகைமைகள் ஆகியவற்றை ஒட்டியதாக அமர்வுகள் அமைந்திருந்தன.
உரைநடை மற்றும் அச்சு இயந்திர வரவுக்குப் பின்னரே தமிழில் கட்டுரை வடிவம் அறிமுகமானது.
அதற்கு முன்னதாக, தமிழ் மரபில் கட்டுரை எனும் இலக்கிய வடிவம் என்பது இல்லை. ஆனால், மணிமேகலை, சிலப்பதிகாரம், தேவாரம் போன்றவற்றில் கட்டுரை காதை என்ற சொல் பயன்பாடு உண்டு. அது நாம் சொல்லவருவதை வரிசைப்படுத்தி கட்டி உரைப்பது எனும் பொருளில் பயன்பட்டிருக்கிறது. இலக்கண நூலான நன்னூலில் கூட நல்லாசிரியர் இலக்கணம் எனும் செய்யுள் பகுதியில் கட்டுரை வன்மை என்ற சொல் உண்டு. அது அறிந்தவற்றை எடுத்துரைக்கும் ஆற்றல் எனப்படுவதாகும். தமிழில் கட்டுரை அறிமுகமான 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் கட்டுரை வடிவத்தின் பொருளை குறிக்கும் சொல்லாக வியாசம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. புனைந்து உரைத்தல் என்பது அதன் பொருள்.
தமிழ்க் கட்டுரைகளின் முன்னோடியாக 1830களில் துவங்கப்பட்ட தமிழ் பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ஆங்கில பத்திரிக்கையைப் பின்பற்றி அதேபோல் தமிழில் ஒரு விசயத்தை அல்லது செய்தியை பற்றி எழுத தொடங்கினார்கள். அதுதான் முதன்முதலில் தமிழில் கட்டுரைகள் உருவாக காரணமாக அமைந்தது. புத்தகங்களைப் பொருத்தமட்டில் கட்டுரைகள் வந்தது முன்னுரைகள் மூலமாகத்தான். அச்சு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இதழ்கள் பிரசுரிக்கப்பட்டன. அவை முதலில் முன்னுரைகள் இன்றி வெளியிடபட்டுள்ளன. பின்னர் ஆங்கிலத்தில் முன்னுரைகளுடன் நூல்கள் வெளிவந்ததைப் போல தமிழிலும் வெளிவரத் தொடங்கின.
வரலாற்றில் அதிகம் தமிழில் கட்டுரைகள் வந்த காலக்கட்டம் இந்த நூற்றாண்டுதான். முன்பு அச்சு தொழில்நுட்பம் இருந்தாலும் பிரசுரிப்பதற்கான செலவுகள் அதிகமாக இருந்தது. தற்போது இணைய இதழ், சமூக வலைத்தளம் போன்றவைகள் நிறைய கட்டுரைகள் வருவதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொடுத்துள்ளன.
கட்டுரைகளின் வகைகள் பல உண்டு. அவற்றை எளிதில் வரையறை படுத்திட இயலாது. எவ்வாறு வகைப்படுத்தினாலும் அதிலிருந்து விலகிய கட்டுரைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அனுபவ கட்டுரை, இலக்கிய கட்டுரை, நூல் அறிமுக கட்டுரை, செய்தி கட்டுரை, விமர்சன கட்டுரை, ஆய்வு கட்டுரை, அறிவியல் கட்டுரை என பல விதமான கட்டுரைகள் உள்ளன. அவை இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை.
எப்படி சிறுகதைகளுக்கு தொடக்கம் முடிவு இருக்கிறதோ அதுபோல கட்டுரைகளுக்கும் உண்டு. கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் கருவிற்கு வாசிப்பவர்களைத் தயார்ப்படுத்தி கொண்டு போகிற வழக்கம் கட்டுரையின் முதல் பகுதியில் காணலாம். முன்னுரையில் அதன் இன்றைய தேவை அல்லது தொடர்பையும் சொல்லலாம். சில சமயம் எழுதும் நபர்களை பொருத்து தொடக்கமும் மாறுபடும். ஒரு புனைவு எழுத்தாளர் ஒரு நூல் அறிமுக கட்டுரையில் அந்த நூலுக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பிலிருந்து தொடங்க கூடும். ஆனால் ஒரு பேராசிரியர் அவ்வாறு எழுத வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கட்டுரையின் மையப் பகுதியில் தனது அனுபவங்களைக் கட்டுரை ஆசிரியர்கள் விவரிப்பர். இறுதி பகுதியில் அந்த அனுபவத்தின் சாரமாக தமக்கு என்ன கிடைத்தது என்பதை விளக்கலாம். பெரும்பாலும் இவ்வாறு மூன்று பகுதிகளாக கட்டுரைகளை அமைவதுண்டு. கட்டுரையில் பத்திகள் முறையாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். பத்திகள் பொருள், முடிவு அடிப்படையில் பிரிக்க வேண்டும். ஒரு பத்தி பின்வரும் பத்தியுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

அடுத்தபடியாக, சான்றுகள் கட்டுரைகளுக்கு மிக அவசியம். அனுபவ கட்டுரைக்குச் சான்றுகள் தேவைப்படாது. ஆனால் ஒரு இலக்கிய ஆய்வு கட்டுரைக்குச் சான்றுகளும் எடுத்துக்காட்டுகளும் அதன் தரத்தை உயர்த்துவதாக அமையும். அதுபோல் ஒரு ஆய்வு கட்டுரைக்குச் சான்றுகள் மிக துல்லியமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
மேலும், நல்ல கட்டுரைகளை அறிமுகப்படுத்தும் முகமாக, உ.வே சாமிநாத அய்யரின் என் சரிதம் நூலிலிருந்து ஒரு பகுதியையும் கட்டுரையாசிரியர் அதியமான் எழுதிய கண்ணழிந்து பெற்ற உரிமை ஆகிய இரண்டு கட்டுரைகளையும் வாசிக்கத் தந்தார். அத்துடன், தொ.பரமசிவன் எழுதிய நாள் மலர் என்னும் கம்பராமாயண இலக்கியக் கட்டுரைத் தொகுப்பின் ஒருபகுதியையும் அளித்து வாசிக்கச் செய்து நல்ல கட்டுரை எழுதுவதற்கான கூறுகளை விளக்கினார்.
நல்ல கட்டுரைகளை எழுத நிறைய கட்டுரைகளை வாசிப்பது அவசியம். வாசிக்கும்போது கட்டுரை எழுதிய விதம், தொடக்கம், சான்றுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்து வாசித்து வரும்போது சிறந்த கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி தானே கூடிவரும் எனக் கூறி கட்டுரை எழுதுதல் அமர்வை எழுத்தாளர் பெருமாள் முருகன் நிறைவு செய்தார்.
