
பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின் நடவடிக்கைகளை, சுபாவங்களை, சூழ்நிலையால் மடைமாறும் குணங்களைக் கூர்ந்து அவதானிக்கிறான். எனவே அவ்வாறான பாத்திரங்கள் தன் படைப்புப் பார்வைக்குத் தட்டுப்பட்டுவிடும். அவர்களின் சுய வாழ்வனுபவத்தாலும், புனைவு திறனாலும் அந்த எளிய மனிதர்களின் வாழ்வை விரித்தெடுக்க முடியும். அவர்களை அணுக்கமாக நோக்குவதே அவனின் வேலை. பசிகொண்டு அலையும் மனிதர்களின் கண்களைப் பார்த்தே அந்த உணர்வை அவர்களால் அடையாளம் காணமுடியும். அப்படிக் கூர்மையாக அவதானிப்பவர்கள், அவர்களைத் தன் கதை, கவிதை, நாவல்களில் பாத்திரங்களாக்கி உயிர்ப்போடு உலவவிடுகிறார்கள். புதுமைப்பித்தன் இதில் பிரம்மராட்சசன்.
புதுமைப்பித்தனின் ‘மிஷின் யுகம்’ ஒரு சாதாரணக் கதை என்று ஒதுக்கிவிட முடியாது.
நான் என் வாழ்வனுபவத்திலிருந்து ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டும் அந்த மகத்தான கதைசொல்லியின் புனைவுக்கு வருகிறேன்.
ஒருநாள் மதிய வேளை. வேறெந்த எண்ணமும் குறுக்கிடாதபடி பசி மட்டுமே என்னை ஆட்கொண்டிருந்தது. அவசரமாக ஓர் உணவுக் கடைக்குள் நுழைந்தேன். இலையில் உணவு பரிமாறும்வரைகூட என்னால் பொறுமையோடு காத்திருக்க முடியவில்லை. அப்போது எனக்கு உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் ஒரு கடைப்பணியாளரை, “நீங்க சாப்பிட்டீங்களா?” என்று ஒரு வார்த்தைக் கேட்டேன். அப்போதைக்கு அவ்வார்த்தைகள் தன்னிச்சையாக வந்தது. பசித்தவனின் அடிவயிற்றிலிருந்து கனன்று எழுந்த கரிசனம் அது. நேரம் அப்போது மதியம் மணி மூன்றைத் தாண்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர் என்னை நேர்கொண்டு பார்த்துவிட்டு ஒரு நொடியில் குனிந்து கொண்டார். அந்த நொடிப்பொழுதில் கண்களில் ஈரம் கசிவதை நான் பார்த்தேன். என் கரிசனச் சொற்கள் அவரின் மனதைத் தொட்டிருக்க வேண்டும். வயிறு பசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அவ்வாறு விசாரிப்பது எத்துணை வாஞ்சையான செயல். அந்த ஒற்றைச் சொல் குறிப்பறிந்து கேட்கப்படும்போது பசித்தவரை ஒரு கணம் உலுக்கிவிடுகிறது. என் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளாமல் சொன்னார், ”நான் இவ்ளோ காலம் இங்க வேல செய்றேன், பசிக்கிற சக மனிதனை இப்படிக் கேட்ட மொத ஆளு நீங்கதாண்ணே,” என்றார். அக்கணத்தில் அவருடைய குரல் உடைந்து பிசிறடைந்து கொண்டிருந்தது. அவர் பசியோடிருக்கிறார் என்பதை அவரின் சொற்கள் சொல்லாமல் சொல்லின. எப்போது வேலை முடிவது, எப்போது இவர்கள் போன்ற பணியாட்கள் உண்பது? முதலில் வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டும் என்பதே முதலாளிகள் அவர்களுக்கிட்ட கட்டளை.
புதுமைப்பித்தனுக்கு இவ்வாறான மனிதர்களை மிக நுட்பமான படைப்பின் வழி வெளிக்கொணரக்கூடியவர். ‘மிஷின் யுகம்’ என்ற கதையில் பசித்த சிப்பந்தி ஒருவரைத் துல்லியமாய்க் காட்டிச் செல்கிறார். அக்கடையில் உணவு உட்கொள்ள நிறையபேர் காத்திருக்கின்ற நேரம். விரித்த இலைமுன் உட்கார்ந்திருப்பவர்கள் அவரவர் கேட்ட உணவு வகைக்காகப் பணியாளரைக் கூப்பிட்டுத் தொல்லைசெய்துகொண்டே இருக்கிறார்கள். அவர் சளைக்காமல் அவ்வுணவு வகைகளை கொண்டுவந்து பரிமாறிக்கொண்டே இருக்கிறார். ஒருவர் அடுத்து இன்னொருவர் என அவரை வேலை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் பம்பரம் போல சுற்றி சுற்றிவந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கும் அது மதியவேளைதான்; அவருக்கும் வயிறு என்று ஓர் உயிரி துடித்துக்கொண்டிருக்கிறது, என்று அவர்களில் யாருமே உணரவில்லை. அந்த நேரத்தில் உணவுண்ண அமர்ந்திருந்த கதைசொல்லியின் கைகுட்டை தரையில் விழுந்துவிட அதனை எடுத்துத்தர குனிகிறார் அப்பணியாளர். அப்போது கதைசொல்லி நினைப்பார் அவருக்குள்ளும் ‘மனிதன்’ இருப்பதை. ஓய்வே இல்லாமல் பரிமாறிக்கொண்டிருக்கும் அவருக்கு ஒரு சிறிய கைகுட்டை எடுத்துக்கொடுப்பதில் கரிசனம் பிறக்கிறது என்றால் அவர் மனித நற்குணங்கள் உடையவர்தானே! மனிதன் என்றுரைப்பது எதனால்? அவனுக்குள்ளும் மனிதப் பண்பு இருக்கிறது, அவனுக்கும் ஓய்வு தேவை, அவனுக்கும் பசிக்கும் என்ற உணர்வைச் சுட்டிக்காட்டவே இந்தச் சம்பவத்தை வைக்கிறார் கதைசொல்லி. பசியோடு உண்ணும் ஒரு கதைசொல்லிக்குத்தான் சக மனிதனுக்கும் பசிக்கும் என்று சொல்ல முடியும். மற்றெல்லாரும் அவனை இடைவிடாமல் வேலை வாங்க விரட்டிக் கொண்டே இருக்கும்போது, கதைசொல்லிக்கு மட்டும் அவன் மனிதனாகத் தெரிகிறார். அவன் மிஷின் அல்ல, ஓய்வே இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்க! எல்லா பண்புகளையும் ஒருங்கே அமைந்த ஒரு சாமான்ய மனிதன், பசி உட்பட. கதையின் ஜீவனை விவரிக்க புதுமைப்பித்தனுக்கு வண்டி வண்டியான சொற்கள் தேவையில்லை. நீட்டி முழக்கி இழுவையாக்கிக்கொண்டுபோய் வாசகனை மூச்சுத் திணறவைக்கும் நாடகீயத் தருணங்களை அவர் கையாண்டதில்லை. ஒரே அடியில் தேங்காயை நொறுக்குவதுபோல நொறுக்கி உள்ளே உள்ளதைக் காட்டுவதையே உத்தியாகக்கொண்டு எழுதுகிறார்.
புதுமைப்பித்தன் மனித வயிறு பசியால் கொதிப்பதை அழுத்தமாக எழுதியவர். வறுமை வாட்டும் மனிதர்களைத்தான் தன் கதைக்குள் பிடித்து இழுத்துக்கொண்டு வருகிறார். அந்த வகை கதை மாந்தர்கள் அவரின் புனைவுக்கான கச்சா பொருள்கள்.
‘கவந்தனும் காமனும்’ என்ற சிறுகதை மிகச் சிறிய கதை. சிறிய கதையில் சீற்றம் இருக்காதா என்ன? பசி மானுடத் தேவையில் தலையாயது. வறுமையில் வாடுபவனுக்கு இறைவன் வயிற்றைப் படைத்திருக்கக்கூடாது என்று வாசகன் சொல்லும் அளவுக்குப் புதுமைப்பித்தன் பசியின் உக்கிரத்தை ஒரு சில பக்கங்களிலேயே எழுதிவிடுகிறார். பசியைப் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய அவசியமே எழவில்லை புதுமைப்பித்தனுக்கு. அந்த ஒருசில பக்கங்களில் உணர்வைத் துல்லிதமாகக் கடத்திவிட முடிகிறது அவரால். அதனால்தான் புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதை ஆசிரியர் சமூகத்தில் பிரம்ம ரிஷி என்று மதிக்கப்படுகிறார்.
‘கவந்தனும் காமனும்’ கதையில் நகரத்தில் வெள்ளிச்சத்தை வியந்து காட்டும் புதமைப்பித்தன் வெளிச்சத்துக்குள்ளும் இருள் கவிந்து கிடப்பதைச் சொல்கிறார். அதனால் கதையின் தொடக்கத்தில் நகர வெளிச்சத்தை வியந்து வியந்து எழுதுகிறார். கதையின் மையத்துக்குள் நுழைந்தவுடன் அதன் சூட்சமத்தை வாசகனால் உணர முடிகிறது.
நகரத்தின் ஒரு மூளையில் ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் வாடிக்கையாளரைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறாள் ஒரு விலைமாது. அந்த நேரம் பார்த்து பசி களைப்போடு ஒருவன் அவ்வழியே வருகிறான். அவனைத் தன் வலைக்குள் சிக்கவைக்க அவன் கையைப் பிடித்து தன் வசம் இழுக்கிறாள். அவளுக்கு அப்போது பணத்தேவை நெருக்குகிறது. உணவுக் கடையை நோக்கி அவசரமாய்ப் பசியோடு போய்க்கொண்டிருப்பவனுக்குக் காமம் கிளர்ந்தெழுமா என்ன? அவளின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பையில் உள்ள காசையெல்லாம் அவள் கைகளில் திணித்துவிட்டு அவளிடமிருந்து உடனடியாகத் தப்பிக்கிறான். விலைமாதோ ஒரு போலியான கோபத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கொடுத்த காசை விட்டெறிந்து “ஏண்டா பொடிப் பயலே! பிச்சைக்காரின்னா நெனச்சுகினே,” என்று அவன் காதுபடத் திட்டுகிறாள். ஆனால் அவன் கண் மறைந்த பின்னர் சிதறிய சில்லறைகளைப் பொறுக்கி எடுக்கிறாள். அவளுக்குத் தொழில் தர்மம் முக்கியம் என்று போலியாக பாவனை செய்யவே அவன் கொடுத்த சில்லறைகளை அவன் கண்முன் விட்டெறிந்தவள், அவன் மறைந்த பின்னர் மீண்டும் பொறுக்க என்ன காரணம். அவளுக்கும் வயிற்றில் பசித்தீ கனன்று எரிகிறது. தான் வீறாப்புடன் தூக்கி எறிந்த சில்லறைகளை மீண்டும் குனிந்து தேடிப் பொறுக்கியெடுப்பது பசியின் காரணத்தால்தான் என்று வாசிக்கும்போதுதான் புதுமைப்பித்தனின் எழுத்தின் நியாயம் புரிகிறது. அவனுக்கும் வயிற்றுப் பசிதான். அதே வேளையில் தான் காமப் பசிக்குள் விழுந்துவிட்டதாய் யாரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே சட்டென்று தன் பசி தீர்க்க வைத்திருந்த காசுகளை அவளிடம் ஒப்படைத்துவிட்டு அக்கணமே அங்கிருந்து மறைந்துவிடுகிறான். சமூகக் கண்களில் தாங்கள் ஒழுக்கம் மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கும் வெகுசனத் திரளின் பிரதிநிதி இவர். விலைமாதுவிடம் காணப்படும் தொழில் நியாயமும், அவனிடம் இருக்கும் பாசாங்கான மனநிலையும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்கின்றன. சாமான்ய மனிதனிடம் இருக்கும் கலவையான குணநலன்கள் இருவரிடமும் சம அளவு வெளிப்படுவதைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன். அவனிடம் காமம் இல்லாமல் இல்லை, ஆனால் தன் பலவீனம் பொதுவெளிக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று பதறுகிறான். அதைப் போலவே விலைமாதுவும் தான் சேவை வழங்காமல் பணம் பெறுபவள் அல்ல என்று பிரகடனப்படுத்தவே அவனைத் திட்டிவிட்டு, அவன் கொடுத்த சில்லறையை விட்டெரிகிறாள். இருவருமே வேடதாரிகள்தான். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னை தகவமைத்துக் கொள்வதே மனிதர்களின் இயல்பாகும். இதனைத்தான் கதைகள் வழி போட்டுடைத்துக்கொண்டே இருக்கிறார் புதுமைப்பித்தன். இது சமூகத்தில் நடக்காத ஒன்றல்ல. கதையின் போக்கு மிகுந்த நம்பகத் தன்மை கொண்டியங்கும்போது வாசகனையும் அது பாதிக்கிறது. அன்றைய எழுத்துச் சமூகம் எழுதத் தயங்கிய பாடுபொருளைத் துணிச்சலாக எழுதியவர். புற உலகத்திலிருந்து தான் அவதானித்த மனித மன ஊடாட்டங்களின் பிரச்சனைகளை மிகச்சரியாக அடையாளங்கண்டவர். ‘கவந்தனும் காமனும்’ அவ்வாறான கதைகளில் ஒன்றாகும்.
தினமும் மூன்று வேளை மூக்கைப்பிடிக்க உண்பவர்களில் பெரும்பாலோருக்குப் பசியில் தவிக்கும் மனிதர்களைப் பற்றி ஒரு பொருட்டே கிடையாது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஊட்டியிலிருந்து இறங்கும் வழியில் எனக்குப் பயங்கரப் பசி எடுத்துக் கொண்டது. வழிகாட்டியைக் கேட்டேன் உணவுக்கடை இன்னும் தூரம் போக வேண்டுமா என்று. இன்னும் அரை மணி நேரத்தில் அடைந்துவிடுவோம் என்றார். நேரம் ஆக ஆக தூரம் கூடிக்கொண்டே போவதுபோல இருந்தது. கடையை வந்தடைந்ததும் உள்ளே நுழைந்தால் மக்கள் நெரிசல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் பின்னாலாயே நின்று காத்துக் கிடக்கும் பசித்தவர்களை அங்கே பார்க்க முடிந்தது. இடம் காலியானதும் உணவு பரிமாறப்பட்டு சாப்பிட்டு முடித்தும் கொதித்துக் கொண்டிருந்த பசி எஞ்சியிருந்தது. வெளியே வந்ததும் பசியோடு காத்திருக்கும் பிச்சைக்காரர்கள், “அய்யா பசிக்குதுய்யா” என்று கெஞ்சி கையெடுத்துக் கும்பிட்டனர். நான் பசியோடு கடைக்குள் நுழையும்போது அவர்கள் என் கண்ணில் படவே இல்லை. பசியில் பத்தும் பறந்துவிட்டிருந்தது. மீண்டும் உள்ளே போய் ‘கைக்குழந்தோயோடு நிற்கும் அப்பெண்ணுக்கு உணவைப் பொட்டலம் கட்டிக் கொடுங்கள்,’ என்று கூறிப் பணம் கொடுத்தேன். “பொட்டலமெல்லாம் கொடுக்க முடியாது. உங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,” என்றார். நான் ஏனென்று வினவினேன். ஒவ்வொரு நாளும் யாராவது பணம் கொடுப்பார்கள் என்பதற்காகவே கடையின் வியாபாரத்தைக் கெடுத்துவிடுகிறது இந்தப் பிச்சைக்காரக் கூட்டம். பிச்சைக்கார்களின் தொல்லை தாங்காமல் வாடிக்கையாளர்கள் திரும்பப் போய்விடுகிறார்கள் என்று குறைபட்டுக்கொண்டார். பசிப்பவருக்குத்தான் பசிப்பவரின் துடிப்பைத் துல்லியமாய் உணர முடியும். பார்த்தும் பார்க்காததுபோல பாவனை செய்யும் மனிதர்கள் நம்மிடையே அதிகம் உலவிக் கொண்டிருக்கிறார்கள். கடைக்காரருக்குக் கல்லாப்பெட்டி வசூல் முக்கியம். பசித்தவனுக்கு வயிறென்று ஒன்றிருப்பதைக் ‘கல்லாப்பெட்டி’ அறியுமா என்ன?
ஆனால் புதுமைப்பித்தன் அவர்களைத் தன் கதைக்குள் இழுத்து வருகிறார். தன் கதைகளின் வழியாக இந்த மனிதர்களின் வயிறு பட்டினியால் காய்ந்துகிடப்பதைச் சொல்கிறார். அதே வேளையில் ஈவிரக்கமில்லாத மனிதர்களையும் நையாண்டி செய்யத் தவறுவதில்லை.
புதுமைப்பித்தனின் பசியால் வாடும் கதைமாந்தர்கள் கைவிடப்பட்ட நிலையைப் பற்றிப் பேசும்போது ‘தெருவிளக்கு’ கதையைச் சேர்க்காமல் இருக்க முடியாது. ஒரு தெருவிளக்கின் கீழேதான் நிர்க்கதி நிலையில் இருக்கும் ஒரு பிச்சைக்காரனின் உறைவிடம். தினமும் அந்தத் தெருவிளக்கின் அடியில் உட்காருவதால்தான் அவன் வயிற்றுப் பசிக்கு வழி பிறக்கிறது. அந்த வெளிச்சம்தான் அவனை யாசகம் செய்வோருக்குக் காட்டுகிறது. ஒருநாள் அக்கம்பத்தின் விளக்கை ஒரு பையன் கல்லெரிந்து உடைத்துவிட இருந்த ஒளியும் இல்லாமல் போய் அவ்விடம் இருண்டுவிடுகிறது. அத்தெரு விளக்கை அங்கிருந்து நீக்கிவிடுகிறது முனிசிபால். பிச்சையிட ஆளில்லாமல் பட்டினியால் அங்கேயே இறந்துவிடுகிறது கிழம். அவரின் பசியைப் போக்கியதே தெருவிளக்கு நல்கிய அந்தச் சொற்ப வெளிச்சம்தான். அதனையும் இல்லாமல் செய்ய கிழம் பசியில் துடித்து செத்துவிடுகிறது. அவர் இறந்த பின்னர்தான் புது தெருவிளக்கை அங்கே நிறுவுகிறது முனிசிபால். அந்த புது வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். ஒரு பிச்சைக்காரனின் இருப்பே உணரப்படாமல் உலகம், காலம் அதன் கதியில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அவன் பசியால் இறந்ததை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புது தெருவிளக்கின் வெளிச்சம் வந்தென்ன செய்ய? இருளான உள்ளங்களின் குறியீடாக அமைகிறது அந்தத் தற்காலிக இருள். தெருவிளக்குதான், கரிசனத்தோடு அவருக்கு இருக்க இடம் கொடுத்து அவரின் பசியைப் போக்கக் காரணமாக இருந்து வந்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தைக் குறியீடாகக் காட்டி உள்ளத்தில் ஒளி உள்ளவர்களிடம்தானே கரிசனம் கருணையெல்லாம் பிறக்கும் என்றும் புரிந்துகொள்ளலாம்.
நகரத்தின் நெருக்கடிமிக்க வாழ்க்கையில் பிதுங்கித் தத்தளிக்கும் விளிம்புநிலை மனிதர்களின் கதையைப் பேசுகிறது ‘குப்பனின் கனவு’ சிறுகதை. குப்பன் ரிக்ஷா ஓட்டுபவனாகவும், அவன் மனைவி விலைமாதாகவும் காட்டப்படுகிறாள் கதையில். பசியைப் போக்க மனிதர்கள் எந்த விளிம்புக்கும் போவார்கள் என்பதைக் காட்டவே அவள் உடலை விற்பவளாகக் காட்டுகிறார். ஒரு கடுமையான மழைநாளில் குப்பனுக்கு ஒரு வாடிக்கையும் கிடைக்காமல் அலைமோதுகிறான். நாலனா கிடைத்தால்கூட அதில் வீட்டில் சமைத்து சாப்பிட்டு உறங்கியாவது போகலாம் என்று காத்திருக்கிறான். அதற்கும் வழி இல்லை! அல்லது சாராயம் வாங்கிக்குடித்துத் தன் பசியைப் போக்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறான். அவனுடைய தினச் சம்பாத்யம் பீடிக்கும் குடிக்குமே போய்விட, அவன் மனைவி உடலை விற்று அவனுக்கும் சேர்த்து உழைப்பவளாகக் காட்டப்படுவதும் பசியின் பொருட்டுதான். நாள் முழுதும் பெய்யும் மழை அவனின் சொற்ப வருமானத்தைக் களவாடிவிடுகிறது. அந்நேரத்தில் அவனுக்கொரு கனவு வருகிறது. அக்கனவில் அவன் செல்வந்தராகி வெள்ளைக்காரன் குடிக்கிற இடத்துக்குப் போ என்கிறான் குப்பன்.(குப்பனே செல்வந்தனாகவும் ரிக்ஷா ஓட்டியாகவும் கனவில் காட்டப்படுகிறார்.) அங்கே சற்று முன்னர் குப்பன் சவாரிக்கு அழைத்தும் நிராகரித்த செல்வந்தன் வருகிறான். இருவருக்கும் குப்பாய்க்காகப் போட்டி போடுகிறார்கள். கனவில் செல்வந்தனாகிவிட்ட குப்பன் அந்தப் பணக்காரனிடம் அடாவடியாகச் சொல்கிறான், “வெளியில ரிக்ஷா இருக்கு, அத ஓட்டிப் பொழச்சிக்கோ என்கிறான்.” இதனைக் கேட்டதும் குப்பனுக்கு ஓர் அறைச்சல் விடுகிறான் உண்மை பணக்காரன். அந்த அறையில் குப்பனின் கனவிலிருந்து தெளியும்போது அவன் ரிக்ஷா ஒரு கம்பத்தில் மோதிக் கிடக்கிறது. ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்கே அலைமோதும் குப்பனைப்போன்ற ஓர் வறியவன், செல்வந்தனாகி, பாவனை செய்வது கனவில் மட்டுமே நடக்ககூடியது என்று நையாண்டித்தனத்தோடு சொல்ல வருகிறது ‘குப்பனின் கனவு’ கதை. எள்ளல் தொனியோடு கதை சொல்வதில் புதுமைப்பித்தனுக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியவில்லை.
‘அவதாரம்’ கதையில் பசியின் உக்கிரத்தை இன்னொரு புதிய கோணத்தில் காட்டுகிறார். வசதியாக வாழ்ந்து வந்த கிருஷ்ண கோணாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. மனைவி ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்துவிட்டு இறந்துபோகிறார். தான் வாழ்ந்த ஊரைவிட்டே வாழ்வாதாரம் தேடி மகனோடு கிளம்புகிறார் கோணார். பாலையங்கோட்டையில் ஒரு கிருஸ்துவ மிசினரி பள்ளியில் மகன் இசக்கிமுத்துவைச் சேர்க்கிறார். அவர் பள்ளியில் மகனைச் சேர்ப்பிப்பதற்கு முக்கியமான காரணம் மகனும் பசியில் வாடக்கூடாது என்பதால்தான். பாதிரியார் இசக்கிமுத்துவுக்குச் சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தருவதோடு, மாதம் இரண்டு ரூபாய் படிச்செலவுக்குக் கொடுப்பதாகச் சொல்லும்போது கோணார் அக மகிழ்ந்து போகிறார். கதை வளர்ந்து வேறு திசையை எட்டினாலும் பசியே அவரை அந்த எல்லைக்குக் கொண்டு செல்வதாகப் புரிந்துகொள்கிறோம். தன்னை மதம் மாற்றப் பார்க்கிறார்கள் என்ற இசக்கிமுத்துவின் புகாரைப் பெரிதாய் எடுத்துக்கொள்ள மறுக்கிறார் கிருஷ்ண கோனார். பசி பூதாகாரமாய் முன்னால் எழுந்து அச்சுறுத்தி நிற்கும்போது மதமாற்றமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று நினைக்கிறார். பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவளிப்பதே உண்மையான ஆன்மீகச் சேவை என்று விவேகானந்தர் சொல்வதும் இதனால்தான். இந்தியாவில் காலனித்துவர்களின் வருகை கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் முகாந்திரத்தையும் கொண்டிருந்தது. அந்த நோக்கம் வெற்றிபெற காலனித்துவர்கள் வியூகம் வகுத்தது வறிய மனிதர்களை நோக்கியே என்று புரிந்துகொண்டால் கிருஷ்ணகோனாரின் முடிவு தெளிவாகப் புரிந்துவிடும்.
எனக்குப் பிடிக்காதவர்களைக் கிண்டல் செய்ய கதை எழுதுகிறேன் என்று ஒளிவு மறைவில்லாமல் சொல்கிறார் புதுமைப்பித்தன். அவர் கதைகளில் அடிநாதமாக ஒலிக்கும் எள்ளல் மொழி அவர் வலிந்து புகுத்தியதல்ல. அது கற்பனை ஓட்டத்தில் வந்து விழும் தன்னிச்சையான மொழி.
பல கதைகளில் மானுடத்தின் ஏழ்மை நிலையைக் கதையில் கொண்டுவந்தாலும் அவை வாசகனைக் கசக்கிப் பிழிய வேண்டும் என்ற நோக்கம் இருந்ததே இல்லை புதுமைப்பித்தனுக்கு. நாடகீயத் தருணங்களை வலிந்து புகுத்தும் முயற்சிகளைக் கவனமாகக் கைவிட்டவர் புதுமைப்பித்தன். கதைப் பொருண்மை கதையோட்டத்தில் ஊடுபாவாக இழையோடும்போது வாசக மனதை அவை தன்னிச்சையாகவே தைக்கும் என்று அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.
தான் எழுதும் கதைகளில் கலை என்ற முக்கிய அம்சம் பற்றிய தான் கவலைப்படுவதில்லை என்று சொன்னாலும் அவரின் கதைசொல்லும் பாணி தனித்துவமானது. அவர் வாக்கியங்களில், கதை ஓட்டத்தில் வந்து விழும் சொற்களில், எள்ளல் தொணியில், கலை எழுச்சிக் கொண்டு மிளிர்வதை வாசகனால் உணர முடியும். என்னைப் பொறுத்தவரை அவர் கதையைச் சொல்லிப்போகும் முறையில் கலையும் கூடவே நர்த்தனமாடுவதைப் புன்னகையோடு உள்வாங்குகிறான் வாசகன். புதுமைப்பித்தன் கதைகளைச் சிலமுறையேனும் வாசித்தால்தான் அதற்குள் கலைவிளையாட்டு அபாரமாக நிகழ்வதை உணர முடியும். கலை அம்சத்தை வலிந்து புகுத்தி எழுத முற்படுவது கதை செயற்கையாக அமைந்துவிடும். அவர் எழுதும் வேளையில் நிகழும் அபாரமான அசைவுகள். புதுமைப்பித்த்னுக்கு அது ஒரு தன்னிச்சையான செயல்பாடு.
அவர் கதைக்குள் காட்டும் அழகியலைவிட கதைக்குள் பிரதிபலிக்கச் செய்யும் பிரச்சனையையே முக்கியமான இடத்தை நிரப்பிக்கொள்கிறது. தயிரைக் கடையும்போது நெய் தோன்றுவதுபோல பசி என்ற பொருண்மையைப் பற்றி பேசும் அவருடைய கதைகளில் அந்தக் குறிப்பிட்ட பிரச்சனையே மேலெழுந்து வருவதைக் கவனிக்கலாம்.

சார் கட்டுரையில் உங்களின் தமிழ் மிக அழகாக உள்ளது. கட்டுரையின் பசி கருவைவிட, தமிழின் சுவை அபாரம்
ஶ்ரீவிஜி