தழலின் தீண்டல்

“நீங்க அவன மண்ணுளி பாம்புன்னு நினைச்சீங்க. நான் அப்பவே சொன்னேன். அவன நம்பாதீங்க, அவன் பெருமாள் கோவில் கருப்பன்னு. நீங்கதான் கேக்கல. இதோ உங்ககிட்டயே சீறிட்டுப் போறான் இப்ப,” என்று மாமாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்த கிரிதரனிடம் நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சிரிப்பிலேயே நிலைத்திருந்த முகத்தில் அவனின் சிறிய கண்கள் மேலும் ஒடுங்கியும், பற்களின் கூர்மை தெரிய உதடுகள் விரிந்தும் இருந்தது. என்னையே சற்று நேரம் பார்த்துவிட்டு எந்த எதிர்வினையும் என் முகத்தில் இல்லாததைக் கண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். இடைவெளி விட்டு நட்டுவைத்தது போல பழுப்பு நிறத்திலிருக்கும் அவனின் தலைமுடிகள், பின்னால் ஒளிர்ந்த சூரிய ஒளியில் மினுங்கி மறைந்தன. தடித்த தோல்கள் கொண்ட அவன் கைகளிலும் கால்களிலும் கூட அதே நிற கூரான மயிர்கள் நிறைந்திருப்பது நினைவுக்கு வந்தபோது, என் மொத்த உடலும் கூச்சம் கொண்டு விழிப்படைந்துகொண்டது.

மாமா, வேட்டியின் ஒரு நுனியை வாயில் கடித்து மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொள்ளும்வரை அவன் அவரின் பதிலுக்காகக் காத்திருந்தான். “விடுடா, எங்க போக போறான். நம்மகிட்ட தான் வரணும்,” என்று சொல்லிக்கொண்டே மாமா என்னைப் பார்க்க, நான் அவரையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் சுதாரித்து என் கையிலிருந்த அவரின் சட்டையைக் கொண்டு கொடுத்தேன். அவர் அதனை ஒருமுறை உதறி அணிந்துகொண்டார். ‘சத்’ என்று எதோ சத்தம் கேட்டு நான் திரும்பிப் பார்க்க, நான் நகர்ந்து வந்த இடத்தில் காய்ந்த தேங்காய் ஒன்று மரத்திலிருந்து விழுந்து சற்று தூரம் உருண்டோடி நிலைத்து நின்றது. சட்டென அடி வயிற்றில் ஒரு அழுத்தம் பொங்கி அடங்க, நான் மாமாவைத் திரும்பிப் பார்த்தேன். அவர் சட்டையை அணிந்துகொண்டு, கசங்கிய சட்டையின் கீழ்ப் பகுதியைக் கையால் நீவிவிட்டுக்கொண்டிருந்தார்.

எத்துணை முறை இந்தத் தென்னந்தோப்புக்குள் வந்தாலும் எனக்குத் தேங்காய் விழும் பயம் மட்டும் குறையவேயில்லை. ஒவ்வொரு முறையும் என் மீது தேங்காய் குரும்புகள் விழும்போதெல்லாம் உடல் விதிர்த்துக்கொள்ளும். பலமுறை என் முதுகின் மேல் தேங்காய் விழுவது போல கனவு கண்டு எழுந்து அமர்ந்திருக்கிறேன். திரும்பி அந்தத் தென்னந்தோப்பைப் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னையோலைகள் ஒன்றோடு ஒன்று விரல் கோர்த்து, தலைக்கு மேல் யாரோ பிரமாண்டமான கூரை வேய்ந்தது போல இருக்க, வானம் காகிதப்பூ வேலையில் வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும் துண்டுகள் போல இரைந்து கிடந்தது.

“வர வர நீங்க ஊர் பஞ்சாயத்து தலைவர்ங்கிறதையே மறந்துரிங்க,” என்று அலுத்துக்கொண்டே கிரி கையில் வைத்திருந்த தென்னை ஓலையைக் கிழித்துத் தூரப்போட்டான்.

“சரிடா. வண்டியில ஏறு. பரஞ்சோதியை பாத்துட்டு வருவோம்,” என்று சொல்லிவிட்டு மாமா முன்னாள் நகர.

“அவரா? அவரை எதுக்கு இப்ப பாக்கணும்?”

“அவரை ஆஸ்பத்திரியில சேர்த்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருக்காங்க. தேர்தல் நேரத்துல திட்டுனத மனசுல வச்சிக்கிட்டு இருக்கானுங்க அவனுங்க ஆளுங்க. இப்ப போய் பார்த்தா, பின்னாடி ஏதும் பிரச்சனை பண்ணமாட்டானுங்க. அரசியல்ல யாரும் நிரந்தர நண்பர்களுமில்லை பகைவனுமில்லை.”

“சும்மா அதையே சொல்லாதீங்க. அந்த சிந்தாந்தம் எல்லாம் ரொம்ப பழசு. இப்பெல்லாம் நண்பர்களா இருந்தாமட்டும்தான் விட்டு வைக்கணும். அதுவுமில்லாம பரஞ்சோதியெல்லாம் உங்க அப்பா காலம். புரட்சி அது இதுன்னு. இப்ப பல்லு புடுங்கப்பட்ட பாம்பு மாதிரி அவனுங்க. அவருக்கெல்லாம் நீங்க பயப்பட வேணாம்.”

“பயமெல்லாம் ஒண்ணுமில்ல. ஊர்ல பரஞ்சோதியும், எங்க அப்பாவும் எப்படி எதிரும் புதிருமா இருந்தாங்கன்னு இன்னும் பழசையே பேசிக்கிட்டு திரியிறானுங்க. இப்ப நான் போய் பார்த்தா, அப்பாவை மறந்துட்டு கொஞ்ச வருசத்துக்குப் பரஞ்சோதியையும் என்னையும் பத்திதான் ஊருக்குள்ள பேசுவானுங்க,” என்று சொல்லிக்கொண்டே மாமா காரில் முன்னால் ஏற, நானும் கிரியும் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டோம்.

கார் தென்னந்தோப்பினிலிருந்து கிளம்பி வரப்புகளில் ஏறி இறங்கி ஆட்டத்துடன் செல்ல, கிரி அவ்வப்போது என் பக்கம் சாய்ந்தான். இரு பூதகணங்கள் மலையாய் குவிந்திருந்த தென்னங்காய்களை ஒவ்வொன்றாக உரித்துக்கொண்டிருந்தன. மாலைக்குள் அனைத்தையும் உரித்து மறுநாள் வந்து அடுத்த மலை முன் வந்து உரிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் உரித்து உரித்து இப்பூலோகத்தில் கிடைக்காத எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பது  போல இருந்தது. ஏனோ என் கைகள் வலியெடுப்பதை உணர்ந்தபோது கைப்பிடிகளை இறுகப் பிடித்திருப்பதை உணர்ந்து சட்டென விடுவித்துக்கொண்டேன்.

மாமா யாரையோ தொலைபேசியில் அழைத்து உரக்கப் பேச ஆரம்பித்தார். கிரி வழக்கம் போல கைக்கட்டிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்ப்பது போல விரைப்பாக அமர்ந்திருந்தாலும், அவனின் காதுமடல்கள் விரைப்படைந்து, சின்னஞ்சிறிய காதுகள் இரண்டும் மாமா பேசுவதைக் கேட்பதற்கு வசதியாக ஒரு புறமாகத் திரும்பியிருந்தன. பின்னாளில் என்றாவது ஒரு நாள் தான் யாருடன் என்ன பேசினோம் என்று மாமா மறந்திருக்கும் தருணங்களில், மாமாவுக்குக் கிரி எடுத்துக் கொடுப்பான். அதனால், மாமா இவன் இருப்பதை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் வீட்டு விஷயங்களைக் கூட உரக்கப் பேசிக்கொண்டிருப்பார். அத்தையிடம் இதனைப் பற்றி ஒருநாள் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவளுக்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்ததால்தான் வேலை வாங்கித் தரச்சொல்லி ஊரிலிருந்து வந்த என்னை மாமாவுடன் இருக்கச் சொல்லியிருக்கிறாள்.

மாமா எதோ யோசனையில் அமர்ந்திருந்தார். கார் சாலையிலிருந்து இறங்கி காமாட்சி மெஸ் இருக்கும் சந்து ஒன்றில் இறங்கியது. 

“ஏன்டா, பெருமா கோவில்ல இன்னும் அந்த கருநாகம் உயிரோட இருக்கு?” என கிரியின் பக்கம் திரும்பிக் கேட்டார்.

“அப்படிதான் சொல்றானுங்க. அந்த ஜப்பான் பய அத குழந்தை மாதிரி வளர்க்கிறான்,” என்று சொல்லிச் சிரித்தான்.

“நான் சின்ன வயசுல இருக்கும்போதே அதப்பத்தி எங்க ஆத்தா பெருமையா சொல்லும். நீ பார்த்திருக்கியா?”

“இல்ல. அப்படி இருந்துச்சுன்னா. ரெண்டு துண்டா போட்டு தூக்கி எரியனும்,” என்று சொன்னபோது கிரியின் முகம் ஆவேசமடைந்து அடங்கியது.

மாமா, “நீ எதுக்குடா இவ்வளவு டென்ஷனா ஆகுற,” என்று சிரித்தார்.

“நல்லா பெரிய கோவில். எவனும் கோவில் பக்கமே போகமாட்டேங்குறான். நீங்க எதாவது பண்ணனும்.” என மாமாவிடம் கிரி முறையிட்டான்.

“பண்ணலாம். அதுக்கு இப்ப ஒன்னும் அவசரமில்லை.”

“அவசரமில்லையா. பஞ்சாயத்து போர்ட்ல வருமானமே இல்ல. எல்லா பயலும் உங்க பேர சொல்லிக்கிட்டு வரி கொடுக்க மாட்டேங்கிறானுங்க. யோசிச்சுப் பாருங்க, இந்த கோவிலுக்கு மட்டும் கூட்டத்தை கொண்டு வந்தா சுத்தி கடைங்க, திருவிழா அது இதுன்னு நம்ம நல்லா வருமானம் பார்க்கலாம். இந்தோ, திருமங்கலக்குடியில ஒரு சின்ன கோவில். அத எடுத்து கட்டி, புதுப்பிச்சு, என்னமா சம்பாதிக்கிறானுங்க. மக்களுக்கு சாமி மேல பயமிருக்கிற வரைக்கும் நமக்கு நல்லது.” என்றான்.

மாமா அமைதியாக இருந்தார். கிரி சொன்னதில் அவருக்கு ஏதோ ஒன்று பிடித்துப்போய் அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றியது. கிரியின் இந்தத் திறமைதான் அவனை மாமாவுடன் மிக நெருக்கமாக்கியது. எதையும் விரைவாகச் சிந்திப்பதும் செயல்படுவதும் தான் அவனுடைய பலம். உள்ளூர் அரசியலுக்குத் தேவையான ஒன்று. மாமாவும் அதனை உணர்ந்தவராகவே இருந்ததால் அவனை அருகிலேயே வைத்திருக்கிறார்.

கார் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி மெதுவாக ஒரு வீட்டினை ஒட்டி செல்ல, மாமா இடுப்பைப் பிடித்துக்கொண்டே, “பஞ்சாயத்துபோர்டு ஆபிஸ்ல இருக்கிற நாற்காலில உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி வந்துடுச்சி. கார்ல உட்காரவே முடியல,” என்று உடம்பை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டார்.

“அது உங்க அப்பா தலைவரா ஆன போது செஞ்சது. அத தூக்கிப்போட்டுட்டு, மெத்துன்னு, இப்பிடி சுத்தற மாதிரி இருக்குற சேர் ஒன்னு வாங்க சொல்லிருக்கேன். சீக்கிரம் வந்துடும்.” என்றான் கிரி. 

வீட்டின் அருகில் சைக்கிளை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவர்கள் மாமாவை அடையாளம் கண்டு இடம் கொடுத்து விலகிச் சென்றார்கள். ஒவ்வொருவரின் கண்களிலும் ஆச்சரியமும் பயமும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. மாமாவும் அதனைக் கவனித்திருப்பார். அவர் இறங்கி, அங்கு நிற்பவர்களைப் பார்த்துத் தலையசைத்துப் புன்னகைத்துக்கொண்டே உள்ளே செல்ல, நானும் மாமாவுடன் இணைந்துகொண்டேன். பச்சை வண்ண சுவருடன், இருபக்கமும் நீண்டிருந்த திண்ணையில் ஆடுகள் மரத்தூண்களில் கட்டப்பட்டிருந்தன. திண்ணை முழுவதும் சிறு சிறு கருப்பு நிற உருளை வடிவான பூச்சிகள் ஊறிக்கொண்டிருந்தன. இடது பக்கத் திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கிழவியிடம்,

“என்ன ஆத்தா நல்லாருக்கியா?” எனக் கேட்டார் மாமா.

அவள் எதையும் கண்டுகொள்ளாதவள் போல பார்வையை விலக்காமலிருந்தாள். வாய் மட்டுமே மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

அருகில் நின்றிருந்த ஒருவர், “காது கேக்காது அதுக்கு,” என்றார்.

“என்ன வயசாகுது?” என மாமா அவரைப் பார்த்துக் கேட்க

“அது இருக்கும் எண்பதுக்கு மேல.” என்றார் அவர்.

“என்னத்த சாதிக்கப்போகுது இத்தனை வயசு வரைக்கும் இருந்து இது?” என்று அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வெளியே நிலைப்படி அருகே தன் செருப்பை உதறிவிட்டு உள்ளே சென்றவர், சட்டென திகைத்து நின்றிருந்தார். உள்ளே யாரோ ஓடுவதும், எதையோ அப்புறப்படுத்துவதும் கேட்கும் ஒலிக்கு மத்தியில் “உள்ள வாங்க, உள்ள வாங்க” என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்க, மாமாவைக் குரல் வந்த திசை நோக்கித் திருப்பிவிட்டேன். அவர் கண்கள் இருளுக்குப் பழகியவுடன், சுதாரித்து, “ம்ம்… நல்லாருக்கீங்களா”, என்று கேட்டுக் கொண்டே இடது பக்கமிருந்த அறைக்குள் சென்றார். நானும் அவர் பின்னாலேயே அந்த அறைக்குள் சென்றேன். சட்டென மூத்திர வாடையும், எதோ மருந்தும் கலந்த நெடி மூக்கை அடைத்தது. நான் வெளியே சென்றுவிடலாம் என்று நினைத்துத் தயங்கியபோது, என் பின்னால் வேறு யாரோ நிற்க, மாமாவுடன் உள்ளே சென்றேன். கொடியில் தொங்கிய துண்டின் மீது, சாளரத்தின் வழியே வந்த ஒளி பட்டு அந்த அறையே சிவப்பாக இருந்தது. கட்டிலில் பரஞ்சோதி சட்டையில்லாமல் வெற்று உடம்புடன் கட்டிலின் பின்பக்கம் சாய்ந்து அமர்ந்திருந்தார். மாமாவைக் கண்டதும் மெலிதான புன்னகையுடன் தலையை லேசாக அசைத்தார்.

“அய்யா, நீங்க பாட்டுக்கு இங்க வந்து படுத்துட்டிங்க. ஊர்ல நிறைய வேல கிடக்குது அதெல்லாம் நீங்களும் நானும்தான் செய்யணும்,” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அருகில் நின்ற ஒரு பெண்மணியைப் பார்த்துச் சிரித்தார். பல் எடுப்பாகத் தலை கேசங்கள் கலைந்து வெளுத்துப் போன புடவையுடன் அவள் நின்றிருந்தாள்.

“மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா? இல்ல புரட்சி அது இதுன்னு சாப்பிடாம இருக்கீங்களா,” என்று சொல்லிவிட்டு அவரே சிரித்தும் கொண்டார்.

“ஏதோ சாப்புடுறேன்,” என்று பரஞ்சோதி அலுத்துக்கொண்டார்.

சட்டென சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

“எஸ்.எம்.கே எப்படி இருக்காரு?” என்று பரஞ்சோதி மாமாவிடம் கேட்டார்

“அப்பாவா… ம்… அவருக்கென்ன. இருக்காரு.”

பரஞ்சோதி, மாமாவையே சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, “அவருக்கு எப்படியும் எண்பது வயசு இருக்கும். கோபத்தோடு வீரியம் குறைஞ்சிருக்காது இந்த வயசுலயும்,” என்று வாய் கோணலாகப் புன்னகைத்தார். “அவர் மனசு நோகாம நடந்துக்கோ. பத்திரமா பார்த்துக்க,” என்றார்.

மாமாவின் முகம் சட்டென மாறியது.

பரஞ்சோதியின் அருகே இருந்த பெண்மணி, “காபி சாப்பிடுறீங்களா?” என மாமாவைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்ல, இல்ல வேணாம். அதெல்லாம் விட்டாச்சு,” என்று சொல்லிச் சிரித்தார்.

“தம்பி யாரு?” என்று பரஞ்சோதி என்னைப் பார்த்துக்கொண்டே மாமாவிடம் கேட்க

“இது கேசவன். அக்கா பையன். படிச்சிட்டு சும்மா இருந்தான். என் கூட இருடான்னு வச்சிருக்கேன்,” என்றார்

என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பரஞ்சோதி சிரித்துக்கொண்டே, “அந்த கீரிப்பயலைவிட, படிச்ச பையன பக்கத்துல வச்சிக்கிறது நல்லது.” என்றார்.

மாமா அதனை எதிர்பார்க்கவில்லை. சட்டென சுதாரித்து, “ஆமா… ஆமா” என்று சொல்லிக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்தார். நான் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று தெரியாமல் தடுமாறினேன். “அப்ப கிளம்புறேன். உடம்ப பாத்துக்குங்க” சொல்லிவிட்டு மாமா அறையை விட்டு வெளியேறினார்.

நாங்கள் வெளியே வந்தபோது கிரி காருக்குள்ளேயே அமர்ந்திருந்தான். வெளியே முன்பிருந்ததை விட இப்போது சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. மாமா அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாலும் முகம் கடுகடுப்பாகவே இருந்தது. தெரிந்த இருவரை நலம் விசாரித்துவிட்டுக் காரினுள் ஏற, நானும் ஏறிக்கொண்டேன்.

எஸ். எம். கே தாத்தாவுக்கு எண்பது வயதாகிறது என்று பரஞ்சோதி சொன்னதை மீண்டும் மனதில் சொல்லிப்பார்த்துக்கொண்டபோது, தாத்தா வெகு தூரத்தில் தனியாகப் பயணிப்பது போல இருந்தது. அந்த உணர்வு சட்டென மனதுக்குள் ஏதேதோ சஞ்சலங்கள், பயங்கள் என ஏற்படுத்தி வயிற்றின் அடிப்பகுதி கனத்து வந்தது. தாத்தாவின் உடலில் மெல்ல நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது பார்த்திருந்தாலும் ஏனோ அதனை ஒரு எண் கொண்டு குறித்தபோது, அது கொடுத்த உணர்வு என் இளமை சட்டெனத் தாவிச் சென்று அதன் முதுமையைக் கண்டுணர்ந்தது போல இருந்தது. வயோதிகம் ஏற்படுத்தும் உடல் ரீதியான விளைவுகள் எதையும் பெரிதாகத் தாத்தாவிடம் பார்த்திடாததால் அவரின் முதுமையை உணரவேயில்லை போலும். கடும் சினத்தைத் திரையாக்கிக் கொண்டு வீட்டில் யாரையும் நெருங்கவிடாமல் ஏறிட்டுப் பார்க்க முடியாத தூரத்தில் மற்றவரை வைத்திருந்தார். நான் கல்லூரிக்குச் செல்லும் வரை அவரை வீட்டில் வைத்துப் பார்ப்பதென்பது மிக அரிதான ஒன்று. களத்துமேடு, கொடிக்கால், தென்னந்தோப்பு, பஞ்சாயத்து அலுவலகம் என ஓயாமல் எங்காவது சென்று கொண்டும் ஏதேனும் வேலை வைத்துக்கொண்டும் எப்போதும் வெளியில் தான் இருப்பார். என் வயதையொட்டி, என்னுடன் வீட்டில் வளர்ந்தவர்களில் பலருக்கும் செவி வழிச் செய்தியாகவும், கதையாகவும் தான் தாத்தாவின் பிம்பம் உருவாகியிருந்தது. ஊருக்குள் எங்குச் சென்றாலும் தாத்தாவின் பெயரால் எங்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான மரியாதையே ஊருக்குள் மற்றவர்கள் அவரை வைத்திருக்கும் இடத்தையும் உயரத்தையும் காட்டியது. இப்போதெல்லாம் தாத்தா அவ்வளவாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உடல் நிலைக்கும், கோவத்துக்கும் குறைவில்லை என்றாலும் மனதளவில் சிதைந்து வீட்டிலேயே அடைந்து சுருண்டு கிடக்கிறார் என்ற நினைப்பு என்னை ஏதோ செய்ய அவரைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது.

மாமாவும் கிரியும் வேறு யாரையோ பார்க்கப் போவதாகச் சொல்ல, நான் சாலையையொட்டி இருந்த பெருமாள் கோவில் குளத்துக்கு அருகில் இறங்கிக்கொண்டேன். இடுப்பு உயரமே இருந்த குளத்தின் பக்கவாட்டு சுவரில் ஏதேதோ சுவரொட்டிகள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. குளத்தின் பக்கவாட்டு சுவரையொட்டியேயிருந்த குல்மோஹர் மரத்திலிருந்து உதிர்ந்திருந்த சிவப்பு நிற மலர்கள் குளத்தில் தீச்சுடரென  மிதந்து கொண்டிருந்தன. குளத்தின் சுற்றுக்கட்டையில் தலைக்குக் கை வைத்து இளநீர் விற்பவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அவரின் கரிய தேகத்துக்குப் பின்னாலிருந்த கோவிலின் கோபுரம் மாலை நேர வெயிலில் ஏனோ மேலும் கலைகூடியிருந்தது. நான் அங்கிருந்த நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று குளத்தின் உள்பக்கம் நான்கு புறமும் இறங்குவதுபோல இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி அமர்ந்துகொண்டேன். பச்சை நிறத்திலிருந்த நீரினுள் இறங்கிச் செல்லும் படிகள் படிப்படியாக மெல்ல மறைந்து போனது, வேறு ஏதோ மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் வாயில் போல தோன்றியது. அவ்வப்போது வெளிவந்து கண் மினுக்கி உள் செல்லும் மீன்களையே பார்த்துக்கொண்டிருப்பது மனதைக் கொஞ்சம் இலகுவாக்கியது. ஒருபோதும் தானிருக்கும் இருப்பின் முழுமையை அறியாத இந்த மீன்கள் போலவே மாமாவுடன் என் இருப்பு இருக்கிறது என்று தோன்ற, என் வேலையைப் பற்றி அத்தையிடம் பேச  வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்த வருடம் ஆறாம் வகுப்புக்கு நிறைய மாணவர்கள் வருவதால் மேலும் ஒரு ஆசிரியர் தேவைப்படுவதாக மணிவண்ணன் சொல்லியிருந்தார். அத்தையிடம் சொல்லி மாமாவிடம் பேசச் சொல்ல வேண்டும். இந்த முறையும் விட்டு விட்டால் அவ்வளவுதான். ஏனோ சட்டென உள்ளுக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாமாவைப் பார்க்கும்போது நானே கேட்டுவிடலாமா என்று தோன்றியது. மாமாவுக்கும் கிரிக்கும் இடையே நான் இருப்பது அவர்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. அதனால், மாமா எனக்கு உடனே அதற்கான ஏற்பாட்டைச் செய்துவிடுவார். ஆனால் அத்தை அதனை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். குளத்து நீரில் கோவிலின் கோபுரம் அலையலையாகத் தளும்ப, மறு கரையில் ஜப்பான் குடத்தினை ஒரு கையால் தூக்கிக்கொண்டு, ஒரு புறம் சாய்ந்து ஒவ்வொரு படியாக நின்று ஏறிக்கொண்டிருந்தார். நான் எழுந்து படிகளின் வழியாகவே நடந்து மறுகரையிலிருந்த திறப்பின் வழியே கோவிலுக்குள் சென்றேன்.

மண்டபத்தினுள் செல்லும் ஜப்பானின் காலடித்தடங்கள் கருங்கல் தரையில் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. கருவறையைச் சுற்றியிருந்த பிரகாரம் முழுவதும் நந்தியாவட்டையும் அரளி செடியுமாக முளைத்தும், கொடிகள் கற்சுவர்களில் வெடிப்புகள் போலவும் பரவியிருந்தன. நான் மண்டபத்தினுள் உள் செல்லாமல் வெளியே பிரகாரத்திலிருந்த சிறிய தேர் போன்றிருந்த ஒரு மண்டபத்தின் படியில் அமர்ந்துகொண்டேன். மண்டபத்தின் நான்கு தூண்களில் கை வைக்கும் இடமெல்லாம் அழகிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கலையம்சத்துடன் இருந்தன. நான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து கருவறைக்குச் செல்லும் மண்டப சுவர்களெங்கும் இருக்கும் கல்வெட்டுகளில் ஏதேதோ எழுதியிருந்தன. என் எதிரே இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த துருப் பிடித்த பலகையில், இக்கோவில் சோழர்காலத்தில் மன்னன் ஒருவன் கட்டியதென்றும், பின்னாளில் படையெடுத்து வந்த ஒரு மன்னன் அவனுடைய பராக்கிரமங்களைக் கல்வெட்டில் எழுதி வைத்ததாகவும், அதற்குப் பின் வந்த மற்றொரு மன்னன் இக்கோவிலைச் சீர் செய்து அவனுடைய உருவச் சிலையைக் கோபுரத்தில் செதுக்கிச் சேர்த்ததாகவும் என அதன் வரலாறு சென்றது. அதற்குக் கீழேயிருந்த தல புராணத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது, கருவறை மண்டபத்திலிருந்து மணியடிக்கும் சத்தமும் கணீர்க்குரலில் பாடும் பாடல் ஒன்றும் கேட்க, நான் அதனை எத்துணை உற்றுக் கேட்டும் அடைய முடியவில்லை. சிறிது நேரத்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். மெலிந்த தேகத்தில் அழுக்கு வேஷ்டியைச் சுற்றியது போன்ற ஒரு உருவம் வெளி வந்து, முகம் தூக்கித் தடித்திருந்த மூக்குக் கண்ணாடி வழியே என்னைப் பார்த்தது. நான் ஜப்பானை அன்று தான் அவ்வளவு அருகில் பார்க்கிறேன். மூக்கு சப்பையாக, முற்றிலும் மழித்தது போன்ற புருவத்துடன், சரியாக உரிக்காத தேங்காய் நார் போன்ற கொண்டையுடன், லேசாக வாய் திறந்து என் முன் நின்றுகொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து, “ஏன் வெளியில உட்கார்ந்துருக்கீங்க. உள்ள வாங்க,” என்றார்.

நான் சற்று தயங்க அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரிடம், “கருப்பன்” என்றேன்.

“அவரு எங்க போகப்போறாரு, அவர் எங்கும் நிறைஞ்சு இருக்காரு. பயப்படாம வாங்க,” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்.

நான் தயங்கிச் சிறிது நேரம் நின்றுவிட்டு மண்டபத்தினுள் சென்றேன். மண்டபத்தினுள் வௌவாலின் வீச்சம் அடித்தது. அர்த்த மண்டபத்தின் இரு பக்கமும் இருந்த தூண்களின் இடைவெளியில் போடப்பட்டிருந்த இரும்பு கம்பி கதவுகளின் உள்ளே, இருளை வெவ்வேறு வடிவங்களில் பிடித்து வைத்தது போல ஏதேதோ உருவங்கள் நின்றுகொண்டிருந்தன. கருங்கல் தரை குளுமையாக, மெத்தென்று எதன் மீதோ நடந்து செல்வது போல இருக்க உடல் சிலிர்த்துக்கொண்டது. நான் கருவறையை அடைந்த போது, நீண்ட கழி போன்ற ஒன்றின் நுனியில் துளி தீபம் ஒன்று தொக்கி நிற்க, ஜப்பான் அதனை மேலும் கீழும் உயர்த்தி ஆரத்தி காண்பித்தார். அங்கிருந்த வெண்கலச் சிலையின் பின்னால், கறுத்த மேனியுடன் பெருத்த தோள் கொண்ட ஒருவர் நிற்பதை அப்போது தான் கவனித்தேன். ஜப்பான் ஏதோ கதை போன்ற ஒன்றை உரக்கச் சொல்லிவிட்டு என்னிடம் ஆரத்தியைக் காட்ட, நான் தொட்டு வணங்கினேன். காலில் ஏதோ பட்டு விலகிச் செல்வது போல எனக்குள் தோன்ற, என்னால் அங்கு அதற்கு மேல் நிற்க முடியாமல் வேகமாகக் கோவிலை விட்டு வெளியேறினேன்.

வீட்டுக்கு வந்தபோது யாரோ ஒருவர் மாமாவைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். திண்ணையில் கண்ணாடி சட்டமிட்ட தாத்தாவின் புகைப்படம் ஒன்று கழட்டப்பட்டு வீட்டின் திணையின் ஓரத்தில் சாத்திவைக்கப்பட்டிருந்தது. தாத்தா அதில் இன்னும் இளமையாக இருந்தார். நான் தாத்தாவை அவர் அறைக்குச் சென்று தேடிப் பார்த்த போது அவரை அங்குக் காணாமல் அத்தையிடம் கேட்க, அவள் பக்கத்துக் கொட்டகையினுள் இருக்கக் கூடும் என்றாள். நான் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டை அடுத்து இருந்த கொட்டகைக்குச் சென்றேன். ஒவ்வொரு முறையும் கொட்டகைக்கு வரும்போது மாடுகள், வைக்கோல் போர்கள், சாணக்குழி என நீண்டிருந்த அந்தப் பழைய கொல்லைப்புறம் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து, அது எதுவுமின்றி வெறிச்சோடி கிடக்கும் வெளி ஏமாற்றத்தையே கொடுக்கிறது. இல்லாதவைகளின் இருப்பு எங்கோ இருந்துகொண்டேதானிருக்கிறது. டிராக்டரை பழுதுபார்க்கப்படும் கூடத்தில் தாத்தா சாய்வு நாற்காலியில் மார்பில் விரல் கோர்த்துப் படுத்துக்கொண்டு, அவரும் அதே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் அமர்ந்து கதை கேட்பது போல மாலை வெயில் அவருக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் விழுந்துகிடந்தது. நான் அவரை நோக்கிப் போகும்போது அவர் என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ ஒன்றில் ஆழ்ந்திருந்தார்.

நான், “தாத்தா எங்க இங்க உட்கார்ந்துருக்கீங்க,” என்றேன்.

என் வரவின் அசைவைக் கண்டுகொண்டது போல அவர் கருவிழி மட்டும் அசைந்தது.

நான் கேட்டது அவரைச் சென்றடையவில்லை என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் அக்கேள்வியை அவரிடம் கேட்டுக்கொண்டே, அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டேன்.

என்ன? என்பது போல தலைதூக்கி மட்டும் பார்த்து விட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.

அவரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவர் அருகிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். தாத்தா எதையாவது நினைத்து வருத்தப்படுகிறாரா? என்னளவில் அவருடைய வாழ்க்கை அவருக்குப் பெரிய நிறைவைத்தான் தந்திருக்கும். அவர் வருத்தப்படுமளவுக்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றே தோன்றியது. இப்போதெல்லாம் எண்பது வயது வரை வாழ்ந்திருப்பதே எவ்வளவு பெரிய கொடுப்பினை. இவர் அத்தனையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார். தாத்தாவின் முகம், பரஞ்சோதி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த அந்த வயதானவளின் முகத்தை நினைவுபடுத்தியது. வயதானவர்களின் முகம் ஏன் இத்தனை வாட்டத்துடன் இருக்கிறது? அது தன் காலம் முடிவடையப்போகிறதென்ற கவலையாக இருக்காது. அது பிறந்தவுடனேயே உள்ளூர இருக்கும் ஒன்றுதானே. வளரும்போது இந்த உடலின் எல்லையும் அதன் சாத்தியமும் அப்பட்டமாகவே தெரிந்துவிடுகிறது. இந்தத் தளர்ந்த போன உடலைக் கொண்டு தன்னால் வெல்லவே முடியாது என்பதைத் தானே காலம் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. தாத்தா போன்ற ஆட்கள் இதனைக் கண்டிப்பாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். இதனையும் மீறி அவர்களுக்குள் இன்னும் வாழ வேண்டும் என்ற இச்சை மிச்சமிருக்கிறதா என்ன?

அவரிடம் எதாவது பேச வேண்டும் என்று தோன்ற, பரஞ்சோதியை அவர் வீட்டில் சென்று பார்த்து உடல் நிலை விசாரித்ததைப் பற்றி சொன்னேன்.

அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ஏதோ கேட்க வருவது போல அவர் உதடுகள் மெல்ல அசைந்தன. நான் அவர் ஏதேனும் கேட்கட்டும் என்று காத்திருந்தேன். அவர் எதுவும் கேட்காமல் திரும்பிக் கொண்டார்.

அவர் சிறிது நேரம் கழித்து மெல்ல எழுந்து அமர்ந்துகொண்டு கை நீட்டி, “அதோ அந்த குழிக்கு பக்கத்துல ஒரு பெரிய மாமரம் ரொம்ப வருசமா இருந்துச்சி. நூறு வயசு ஆகுதுன்னு அம்மாத்தா சொல்லுவா.. நல்ல பெருசு… மாமரம் பூத்து குலுங்கற பருவத்தில ராத்திரியில இங்க வந்தா, யாரோ ஒருத்தி சிரிக்கிற மாதிரி பயமா இருக்கும். என் பெரியப்பா ஒரு நாள் வந்து வெட்டிபோட்டுட்டாரு. ஆனா, அது இன்னும் இங்கயே இருக்கிற மாதிரி, அந்த கசப்பான வாசனை மட்டுமே போகவேயில்லை,” என்றார்.

இதை ஏன் என்னிடம் சொல்கிறார் என்று புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்த விட்டு, “ஏன் வெட்டுனாரு?” எனக் கேட்டேன்.

தெரியலை என்பது போல கைவிரித்து விட்டு, “பொறாமையா கூட இருக்கலாம்,” என்றார்.

நான் சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தேன். அதற்கு மேல் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சிறிது நேரம் அவருடனேயே அமர்ந்து விட்டு வீட்டுக்குள் சென்றேன்.

நான் கோவிலின் முகமண்டபத்தில் அமர்ந்திருக்க, நெடிய கருநாகம் ஒன்று மெல்ல ஊர்ந்து அதன் சிவப்பு நிற நாக்கை அவ்வப்போது நீட்டி கருவறை மண்டபத்தினுள் நுழைந்தது. நான் எழுந்து அது போகும் பாதையிலேயே உள்ளே செல்ல, அதன் கரிய நிறம் மண்டபத்தினுள் எங்கும் பட்டுச் சிதறி வியாபித்திருப்பது போல மண்டப தூண்கள், சுவர்கள், விதானங்கள் என எங்கும் சிறிதும் பெரிதுமான கரு நாகங்கள் மெல்ல ஊர்ந்து நெளிந்து கொண்டிருந்தன. அர்த்த மண்டபத்தில் ஜீவ களை கொண்டிருந்த பெண் சிலைகள் உயிர் கொண்டு உறைந்திருந்த அவர்களின் புன்னகையை நீட்டித்துக் கொண்டனர். கொட்டும், சங்கும், முழவும் கொண்டு, விரல் அளவே இருந்த எண்ணற்ற சிற்பங்கள் உரு கொண்டு முழங்கின. அழகிய தந்தங்களைக் கொண்ட யானைகள் பிளிறின. குள்ளர்களும் யாளியும் கண் உருட்டி விழித்தன. சுவர்களில் கல்வெட்டிலிருந்து எழுத்துகள் சிறு நாகங்களென வளைந்து நெளிந்தன. நான் மேலும் கருவறை நோக்கிச் செல்ல இரு தீப ஒளி சுடர்கள் கருவறையினுள் சட்டெனச் சுடர்ந்தது. அது எங்கும் பரவி கருவறையில் பிரதிபலிக்க, அங்கு எழுந்தருளியிருந்த அந்தக் கரும் மேனி கொண்டவனின் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது. நான் அதனை உற்று நோக்க, இரு சுடர்களின் ஒளி மெல்ல அசைந்து என்னை நோக்கி வர, அது கரும் மேனி கொண்டவனின் தோளில் மாலையாகிக் கிடக்கும் கருப்பன் எனக் கண்டுகொண்டேன். தலை விரித்துச் சிவந்த நாக்கால் என்னைத் தொட்டுத் தீண்ட நான் உயர்ந்த தென்னை மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பினுள் விழுந்து கிடந்தேன். தென்னையின் உயரத்திற்கு எழுந்து வந்த கருப்பனுக்கும், உடலெங்கும் மினுங்கும் பழுப்பு நிற முடிகள் கொண்டு கூர்மையான பற்களுடன் நின்ற மற்றொரு விலங்குக்கும் நடந்த மூர்க்கமான சண்டையில் தேங்காய்கள் தொடர்ந்து விழுந்த வண்ணமிருந்தது. காலம் காலமாய் அச்சண்டை நடைபெறும் தீவிரம் அவர்களிடையே இருந்தது. கருப்பன் கோவிலுக்குள் செல்ல, பெரும் குதிரைப்படையுடன் வந்த நான் கருப்பனை வணங்கித் தொழ, அவனின் தலை, குடையென விரிந்து விரிந்து நாக்கை நீட்டி என்னைத் தீண்ட மிக அருகே வர, நான் திடுக்கிட்டு விழித்து எழுந்து அமர்ந்தேன். அறையெங்கும் இருள் என்னைச் சூழ்ந்து இருந்தது. உடலெங்கும் வியர்த்து, நாக்கு வறண்டு இருந்தது. அன்று கோவிலுக்குச் சென்றபோது, கருவறையில் இருளை மேனியாகக் கொண்டவனின் கழுத்திலிருந்தது கருப்பன்தான் என்று தோன்றியது. பயத்தில் நான் அதனைக் கண் கொண்டு சரியாகப் பார்க்கவில்லையென்றாலும் என் அகம் அதனைப் பார்த்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன். எனக்கு அதற்கு மேல் தூக்கம் வராமல் அமர்ந்திருக்க, இருள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

அடுத்த ஒரு வாரத்தில் மாமாவும் கிரியும் சேர்ந்து அறநிலையத்துறையிடம் பேசி பெருமாள் கோவிலுக்குக் கும்பாபிஷேகத்தைத் தன் செலவிலேயே செய்வதாகச் சொல்லி உத்தரவை வாங்கியிருந்தார்கள். ஒட்டு மொத்த கோவிலையும் சுத்தம் செய்து புதுப்பிக்க அனுப்பவிருக்கும் டெண்டரை என்னைச் சரி பார்க்க மாமா சொன்னபோதே எனக்குத் தெரியவந்தது. நான் அதனை எடுத்துக்கொண்டு மாமாவைத் தேடி தென்னந்தோப்புக்குச் சென்றேன். தோப்புக்குள் நுழையும் போது ஒவ்வொரு மரத்திலும் கருப்பு நிற பாம்பு ஒன்று மேலேறுவது போல வரையப்பட்டிருக்க நான் தயங்கி நின்றேன். எங்கோ தேங்காய்கள் விழுவது போல சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மாமா அவர் காரின் மீது சாய்ந்துகொண்டு யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். நான் வருவதைக் கண்டவுடன், பேசுவதை நிறுத்திவிட்டு என்னருகில் வந்தார். நான் என் வண்டியை ஓரமாகச் சாய்த்துவிட்டு அவரிடம் கையில் வைத்திருந்த டெண்டரைக் காண்பித்தேன்.

அவர், “பார்த்துட்டியா? எல்லாம் சரியாய் இருக்குல்ல?” என்றார்

நான், “மாமா, கும்பாபிஷேகம் செய்றது நல்ல விஷயம் தான். ஆனா அங்க இருக்கிற கருப்பனை என்ன செய்விங்க?” என்றேன்.

“கருப்பனா? எது அந்த பாம்பா? டேய் அதெல்லாம் நீ நம்புறியா? அதெல்லாம் சும்மா கட்டுக்கதை,” என்று சொல்லிச் சிரித்தார்.

நான், “இல்ல, நான் கோவில்ல பார்த்தேன்,” என்றேன்.

“எப்ப பார்த்த?”

“போன வாரம் அங்க போயிருந்தேன். ஜப்பான் உள்ள கூப்பிட்டாருன்னு போனேன். எல்லா இடத்திலேயும் சிறிதும் பெரிதும் நெளிஞ்சுக்கிட்டு இருந்தது, கருவறையில் நின்னுகிட்டு இருக்கிற பெருமாள் தோள் மேல தென்னை மரம் அளவுக்கு மாலை மாதிரி ஒன்னு கிடந்தது.”

“நீ வேற எதையாவது பாத்துரப்ப. அப்படியே இருந்தாலும் என்ன செய்யணும்ங்கிற?”

“அத அழிச்சிட வேணாம். அது அங்கு இருக்கிறதுதான் கோவிலுக்கு பெருமை.”

“பெருமையா? கோவில்ல நான் ஏன் கும்பாபிஷேகம் பண்றேன்னு நினைக்கிற” என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தார்.

“வேண்டாம் மாமா,” என்றேன்.

“சரி. நீ ஒன்னு பண்ணு. ஊருக்கு போய் அந்த பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு பண்ணி எடுத்துக்கிட்டு வா. மனோகிட்ட பேசிட்டேன், டீச்சர் வேலை உடனே வாங்கி தரேன்னு சொல்லிருக்கான். வரும்போது அக்காவையும் கூட்டிகிட்டு வா. கும்பாபிஷேகத்துக்கு இங்க இருக்கட்டும்.” என்றார்.

இதற்குமேல் அவரிடம் என்ன பேசி புரியவைப்பது என்று தெரியவில்லை. நான் தயங்கியபடியே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

ஒரு மாதம் கழித்து ஊருக்கு அம்மாவுடன் மீண்டும் வந்தபோது, கும்பாபிஷேகத்துக்கான விழாக்கள் துவங்கியிருந்தது. வழியெங்கும் மாமாவைப் புகழ்ந்து சுவரொட்டிகள் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு, நேராகக் கோவிலுக்குச் சென்றேன். வழியெங்கும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டிருந்தன. கோவிலின் பிரகாரச் சுவர் முழுவதும் வெள்ளையும் அடர்க் காவி நிறத்திலுமான வண்ணக்கோடுகள் இழுக்கப்பட்டிருந்தன. தேர் போன்று இருந்த மண்டபம் கீழே விழ வாய்ப்பிருக்கிறது என்று அதை இடித்து வெளியே குப்பைகளோடு குவிக்கப்பட்டிருந்தது.

என்னைப் பார்த்தவுடன் என் அருகில் வந்த கிரி “நீ எப்போ வந்த?” என்றான்.

“இப்பதான்”

“என்ன? கோவிலே மாறிபோய்டுச்சா?” என்று சிரித்தான்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்காமல் தவிர்த்தேன்.

“ஒன்னு சொல்ல மறந்துட்டேன். பெருமாள் தோள் மேல் கருப்பன் இருக்கான்னு சொன்னியாமே மாமாகிட்ட?” எனக் கேட்டான்

நான் சட்டெனத் திரும்பி, “ஆமாம். என்ன ஆச்சி?”

அவன் சிரித்துக்கொண்டே, “அது எப்பவோ பெருமாளுக்கு போட்டு, கருகிப்போன மாலை. அத போய் நீ பார்த்து பயந்துருக்க. நான் கூட ரொம்ப ஆர்வமா அத போட்டு தள்ளிடனும்னு வந்தேன்,” என்று சொல்லிச் சிரித்தான்.

நான் அவனிடம் ஒன்றும் பேசாமல். “தாத்தா எங்க?”

“யாரு? எஸ்.எம்.கே வா? அவரு எங்க இருக்காரோ?” என்றான்.

நான் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் யாருமில்லை. அவருடைய அறையில் காணாமல், பின்புறம் சென்று பார்த்தேன். அவர் அந்தச் சாய்வு நாற்காலியில் சுருண்டு படுத்திருந்தார். நான் ஓடிச் சென்று அவரைத் தட்டி எழுப்பினேன். அவரிடம் எந்த வித அசைவுமில்லாமல் இருக்க, அவரின் உடலை மெல்லத் திருப்பி முகத்தைப் பார்த்தேன். அவரின் விழிகள் இரு தீப ஒளியெனச் சுடர்ந்து மெல்ல அணைந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...