“விதண்டாவாதமாகப் பேசுவதை நிறுத்து. இப்படிப் பேசிப் பேசித்தான் எல்லாமே சிக்கலாகிறது. என்னை மடக்கி மடக்கிப் பேசி ‘கிரிட்டிக்கலாக’ அனலைஸ் செய்யாதே,” லலிதா கோபமாகச் சொன்னாள்.
“என்ன விதண்டாவாதம்? அரை மணிக்கு மேல் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்கிறேன்!”
“உனக்குத்தான் நான் பேசினால் காது கேட்பதில்லை!” கோபமாக பரந்தபன் கத்தினான்.

அவள் ஒரு துளி காப்பியை அருந்தினாள். உணவுத் தட்டில் இருந்த பிரெட்டை விரலால் கிள்ளி எடுத்தாள். உணவுமேஜையின் மறுமுனையில் இருந்த பரந்தபனைப் பார்க்காமல், அருகில் இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
பரந்தபன் தன்னிச்சையாக அவள் பார்வையைத் தொடர்ந்து அவனும் ஜன்னலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்.
“இந்த ஜன்னலுக்கு என்ன கேடு? அந்தச் சூரியனுக்கு என்ன கேடு? ஏன் இருளாகவே எனக்குத் தெரிகிறது? இந்த இருள் எப்படி வந்தது? என் வார்த்தைகள் அவளுக்கு வெளிச்சம் கொடுக்க வேண்டியது; ஆனால் மாறாக அவள் இன்னமும் இருளுக்குள் மூழ்கி என்னையும் இழுக்கிறாள். அவள் உடலின் உருவம் தெரிகிறது; ஆனால் உள்ளத்தில் அருவாக எதையோ வைத்து என்னிடம் மறைக்கிறாள்.”
அருவாகவும் உருவாகவும் இருப்பது எது என்பதை அறிய வேண்டுமென அவன் விழைந்தான்.
அவன் கண்கள் அவள் உடல் அசைவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. காதுகள் அவள் சொல்லும் சொல்லுக்கு நாவை அசைக்கத் துடித்துக் கொண்டிருந்தன. ஒரு சுடுசொல் வழியாக அவளை வென்றெடுக்கத் துடித்தன. வழக்கமாக ரசித்துச் சாப்பிடும் ரொட்டித்துண்டு இன்றைக்கு ஏன் இத்தனை கெட்ட வாடையாகத் தோன்றுகிறது என மூக்கு ஒரு கேள்வி கேட்டது. அவன் தோல் அவள் சொல் தொட்டுக் கூசியது.
அவன் மனம் மதம் கொண்ட யானையைப் போல பலமும் அளவும் பெற்றது. புலன்களால் பெருவிசையுடன் பல திசைகளில் இழுபட்டு, அவனை அவள் முன் நிறுத்தியிருந்தது. யானை தன் தும்பிக்கையாக்கிய சொல்லை அவளைச் சுற்றி அலைந்து அலைந்து பிடித்து நிறுத்த முயன்று இளைத்தது.
“நான் கேட்பதற்கு உன்னிடம் பதில் இல்லை. அதனால் ‘விதண்டாவாதம்’ எனச் சொல்கிறாய்,” வருத்தம் தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.
அவன் வருத்தத்தை நோக்கி, அவளுடைய விரல்கள் உணவுத் தட்டுகள், காப்பிக்கோப்பைகள் மீது படாமல், விவாகரத்து ஆவணத்தை மெதுவாக நகர்த்தின. அவன் கண்களின் காட்சிக்கு வந்தது.
“நமக்கு இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று விவாகரத்தினை வழக்காக்கி, நான் மட்டும் நீதிமன்றத்துக்குப் போய், வக்கீலோடு பேசி, உனக்கு அறிக்கை அனுப்பி, நீயும் வக்கீலை பார்த்து எனப் பெரிய வேலை. இன்னொன்று இந்த ஆவணம். இதில் நாம் இருவரும் உடன்பட்டுப் பிரிவது. இதில் ஒன்றிலாவது நாம் உடன்படலாம் அல்லவா? இந்த விவாகரத்துதான் உனக்கும் எனக்கும் தேவை. நன்கு யோசித்தே இங்கு வந்திருக்கிறோம்,” என்றாள்.
“இரண்டு தேர்வு மட்டும் இருக்கின்றது என யார் சொன்னது? நாணயத்தைச் சுண்டி விடுவது போல ‘தலையா, பூவா’ எனப் பேசுவது சரியில்லை. உனக்காக பெங்களூரு வந்தேன், நியூஜெர்சி வந்தேன், இப்போது மேரிலாண்டுக்கு வந்திருக்கிறேன்… என் வாழ்க்கையையே உனக்காக மாற்றிக் கொண்டேன். அடுத்து விவாகரத்துக்கு வா என்கிறாயா? நீ மிகக் குரூரமானவள்,”
அவன் குரலில் இறுக்கம் கூடி, தன் தரப்பை முழுக்க சொன்ன திருப்தி இருந்தது.
“அந்த வயதில் நீ செய்த எதுவும் எனக்காக செய்யவில்லை;நான் செய்த எதுவும் உனக்காக செய்யவில்லை;நமக்காக நாம் செய்தோம்,” அவள் குரல் உறுதியாக இருந்தது.
“நீ சொல்வது புரியவில்லை. நான் உனக்காக என்ன செய்தாலும்… அதை…” அவன் குரலில், ‘அவள் வேண்டுமென்றே குழப்புகிறாள்’ என்ற குற்றச்சாட்டு இருந்தது. தலையில் அடித்துக் கொண்டான்.
அவனால் அந்த உணவை விழுங்க இயலவில்லை. எழுந்து சென்று, அடுப்பறை கழுவும் இடத்தில் தட்டைப் பெரும் ஓசையுடன் வீசினான். கையைக் கழுவிக் கொண்டு, தட்டைக் கழுவாமல் அகன்றான்.
அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளிடம் ஒரு மெல்லிய அசைவைத் தவிரப் பெரிய எதிர் உணர்வுகள் இல்லை. பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அறையின் வெறுமையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீ சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. விவாகரத்து செய்து விட்டு வேறு என்ன செய்யப் போகிறாய்? அதற்கு இப்படியே இருக்கலாமே?” விடாமல் அடுத்துக் கேட்டான்.
கண்ணை மூடி அவள் பெருமூச்சு விட்டாள். தன் கையை உயர்த்தி, அவனை அழைத்து எதிரே உள்ள நாற்காலியில் உட்காரச் சொன்னாள்.
அவன் விடாமல், இறுக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அவள் நகர்வுக்குக் காத்திருந்து, அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, நகராமல் இருப்பதைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள்.
“இன்றைக்கு நீ கேட்கும் அத்தனை கேள்விகளையும் கலந்தாய்வில் பேசியுள்ளோம். கலந்தாய்வுக்கு வெளியில், இதே வீட்டில், இதே அறையில் பேசியுள்ளோம். பேசி என்ன ஆனது? மூன்று திருமணக் கலந்தாய்வு நிபுணர்களிடம் போயிருக்கிறோம்…” அவள் குரல் கமறியது.
பழைய நினைவுகள் அவளை அசைப்பதை அவன் அறிவான்.
ஓர் இடைவெளி விட்டாள். நாற்காலியில் பின்னால் நகர்ந்து அமர்ந்தாள். அவள் உடலைச் சரிசெய்து கொண்டு நிமிர்ந்தாள்.
“ஒருகாலத்தில் நாம் ஒரு நொடியும் ஒருவரை ஒருவர் விட்டு விடக் கூடாது என இருந்தது உண்மை. அது இன்றைக்கும் இருக்கிறதா? இன்றைய சூழலில் நீ எப்போது வேலை முடித்து வீட்டுக்கு வருகிறாய் என எனக்குத் தெரியாது. நான் எப்போது வேலைக்குப் போய் விட்டு வீட்டுக்கு வருகின்றேன் என உனக்குத் தெரியாது. நாம் பேசினாலும் உன் தொழிலுக்குப் பார்க்கும் கணக்கு, வழக்கு, வேலையை விட்டால் வேறு எதுவும் இல்லை,” அவள் குரலின் கமறல் இன்னமும் தெளிவாக இருந்தது.
அவள் சொல்லும் விதம் அவனுக்கு முகத்தில் அடித்தது போல இருந்தது.
“விவாகரத்து செய்தால் இதெல்லாம் சரியாகி விடுமா?” அவன் அவளின் கமறலை நோக்கி கேள்வியை வைத்தான்.
“சரியாகவோ இருக்கவோ, சரியில்லாமல் போகவோ கூட நமக்குள் எதுவும் இல்லையே… பரந்தபன், எனக்குப் புரிகிறது. நீ பயப்படாதே,” அவள் குரல் மெல்லியதாக இருந்தது.
அவள் “பயப்படாதே” என்று சொன்னதும், அவன் மனம் அவனிடமிருந்து கோபமாகக் கிளம்பி, அவளைத் துதிக்கையால் வாரித் தூக்கி அடிக்கும் இடத்தை எல்லாப் புறமும் தேடியது.
“கல்யாணம் செய்து கொள்வது விவாகரத்து செய்ய அல்ல; சேர்ந்து இருக்கத்தான். தெரியுமா?” என பரந்தபன் சீற்றமுடன் கேட்டான்.
“சேர்ந்தா இருக்கிறோம்? ஒரு கூரைக்குள் இருக்கிறோம்; ஆனால் சேர்ந்து இல்லையே,” அவள் அவன் கண்ணைப் பார்த்துத் தெளிவாகச் சொல்லி, விவாகரத்து ஆவணத்தை மீண்டும் எடுத்து முன்னே வைத்தாள்.
“நீ இப்படி இருப்பதால்தான் பதினைந்து வருடமாக நமக்குக் குழந்தை இல்லை. உன் திமிருக்கு ஒரு முடிவு இருக்கும்!” என லலிதாவிடம் உறுதியான குரலில் சொல்லிக் கொண்டு, கையில் தொழிலுக்கான ஷூவை எடுத்துக் கொண்டு, டிரக் சாவியை எடுத்துக் கொண்டு, கராஜ் கதவினை ஓசை எழச் சாத்தி விட்டு வெளியேறினான்.
“வீட்டுக்குள் உட்கார்ந்து ஷூ போட்டுக் கொண்டு போ!” என லலிதா சொன்னது, கராஜ் கதவினைத் தாண்டி அவன் காதுக்குள் விழுந்தது.
சில நொடிகள் கராஜுக்குள் நின்றான்.
“என் இஷ்டம். ஷூவை எங்கு வேண்டுமானாலும் போடுவேன்,”
உள்ளுக்குள் பதில் சொல்லிப் பார்த்தான்.
“காதில் விழுமோ, விழாதோ… தொலைபேசியில் அழைத்துச் சொல்லலாம். தொலைபேசி எங்கே? ஓ… மேஜையில்தானே…”
திரும்பக் கதவினைத் திறந்து உள்ளே வந்தபோது, லலிதாவின் தேம்பல் கேட்டது.அவன் ஆர்வமாகச் சமையலறைக்குச் சென்றபோது, அவள் உணவு மேசையில் நிதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் கண்களில் தண்ணீர் இன்னமும் இருந்தது.கண்ணில் இருந்த கண்ணீர் ஒரு துளியாக மாறுமா எனக் கொஞ்சம் காத்திருந்தான். அதற்குள் அலைபேசி அழைத்தது. எடுத்தான். அவனது வாடிக்கையாளர்.
உடனே பதில் செய்தியை அனுப்பினான்.
வெளியே கிளம்பினான்.
“எதுவாக இருந்தாலும், இன்னும் ஒரு வாரத்தில் எனக்குத் தெரிய வேண்டும்,” அவள் குரலில் உறுதியைக் காட்ட முயன்றது தெரிந்தது. கொஞ்சம் அழுகையும் இருந்தது; அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
“அழுது நாடகம் ஆடாதே. என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்,” அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
திரும்ப கராஜில் இருந்த வாகனத்தருகே வந்தபோது, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த காட்சி நினைவுக்கு வந்தது.
“அதற்கு முன்பு அழுகையைப் பார்த்தது எப்போது?” டிரக்கின் மீது சாய்ந்து கொண்டு யோசித்தான். ஞாபகம் இல்லை.
மூன்று வருடங்கள் முன்பு அவன் அப்பா இறந்தபோது அவள் அழுதாள்.அவனும் அழுதான். அது மட்டுமே நினைவில் நின்றது.பின்பு இந்த வீடு வாங்கினாள். கிரகப்பிரவேச நாள் அன்று சிரித்தோம். பின்பு என்ன ஆனது? வேலையில் பிசியாகி விட்டேன். அதற்காக விவாகரத்தா?
கண்கள் இருண்டன.
“விவாகரத்தா ஆனால்… நான்…”
அந்த இருள் பெரும் யானையின் எடையோடு அவனை அழுத்தியது. உடைந்து, கராஜின் தரையில் உட்கார்ந்தான்.
“ஆகாது, விடக் கூடாது…”
டிரக்கின் கதவைப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
“எப்படியெல்லாம் கேட்டேன்! என் தரப்பினை விளக்கிச் சொல்கிறேன்.அவளுக்குத் தன்னாலும் தெரியவில்லை; சொன்னாலும் புரியவில்லை.அவள் வேண்டுமென்றே முட்டாளாக நடிக்கிறாளா?
என்னை ஏமாற்றுகிறாளா?”
டிரக்கின் பொத்தானை அழுத்தி, டிரக்கை துவக்கி, அதனை நகர்த்தினான். கராஜை விட்டு டிரக் கீழே இறங்கியது. தெருவில் திருப்பினான்.
“உண்மைக்கு மதிப்பு இல்லை. வேறு எந்த மாதிரி அவளிடம் சொல்ல வேண்டும்? வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சொல்லிப் பார்க்கலாம். எனக்கும் ஆள் இல்லை; அவளுக்கும் இல்லை. எப்படி அவளிடம் புரிய வைப்பது?”
வெளியே போக்குவரத்து அதிகமாவதைப் போலவே, அவனுக்குள்ளும் எண்ண ஓட்டம் அதிகமானது. அதே நேரம் வேகம் குறைந்து, தட்டுத் தடுமாறி நகர்ந்தது.
டிரக் வாடிக்கையாளர் இல்லம் நோக்கித் திரும்பியது.
சாலை விளக்குச் சிவப்பைக் காட்டி “நில்” என்றது.
“சீக்கிரம் பச்சையாகிவிடு,” என அதனிடம் சொன்னான்.
கண்ணில் வாகனத்தின் கடிகாரம் பட்டது.
கடிகாரத்தில் நின்ற வாடிக்கையாளர், “எங்கே இருக்கிறாய்?” எனக் கேட்டார்.
“நான் வேண்டுமென்றே தாமதிக்கிறேனா?”
கடிகாரத்தில் இருந்த வாடிக்கையாளரிடமே பேசினான்.
“இன்றைக்கு வேலை முடிக்க வேண்டும். மூவாயிரம் ரூபாய் வரும்.”
காரை நகர்த்தினான். அவனது உதவியாளர் சேமியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வராதது எரிச்சலைத் தந்தது.
பத்து வருடங்களாக வேலை செய்கிறான். பொறுப்பில்லை, சோம்பேறி. சாயங்காலம் வேலை முடிந்ததும் காசு வாங்குகையில் தாமதிப்பதில்லை. ஆனால் வேலைக்கு வருகிறேனா, இல்லையா என்று ஒருநாளும் சொல்லியதில்லை.யார் யாரிடம் வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனாலும் நல்ல நம்பிக்கையான ஆள். வராமலும் போனதில்லை.
ஸ்டியரிங் போல எண்ணங்கள் சுழன்றன.
“வேலையை காலை ஒன்பது மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். நான் கிளம்பி வந்து கொண்டிருக்கிறேன்.” வண்டியை நகர்த்திக்கொண்டே செமிக்கு செய்தி அனுப்பினான்.
செய்தி சென்று சேர்ந்தது; ஆனால் மறுமுனையில் படித்ததற்கான அடையாளம் வரவில்லை.வண்டியை ஓட்டிக்கொண்டே தொலைபேசி பார்த்துக்கொண்டிருந்தான்.
தொலைபேசியின் பக்கத்தில் ஜிபிஎஸ் மார்க், வாடிக்கையாளர் வீட்டுக்கு அருகில் வந்ததை “இங்கே பார், இங்கே பார்” எனக் காட்டிக்கொண்டிருந்தது.
வண்டியை மார்க் ஹெர்னாண்டஸ் வீட்டருகில் நிறுத்தினான். தன் கையில் டூல் பாக்ஸை தூக்கியபோது, அதன் கனம் வெயிலோடு சேர்ந்து அவனை வியர்க்க வைத்தது.
“எண்பத்தைந்து பாரன்ஹீட் இருக்குமா?” என நினைத்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது; அப்பாயின்மெண்ட் எட்டு மணிக்கு.
மார்க் கதவுக்கு வெளியே சூடாக நின்றுகொண்டிருந்ததை அவன் கவனித்தான். மார்க் பரந்தபனின் நீண்டநாள் வாடிக்கையாளர். மூன்று வருடங்களாக மார்கின் வீட்டு ஏசி, ஹீட்டர் எல்லாம் பரந்தபனின் மேற்பார்வையில்தான் நடந்து வந்தன.
மார்க் கையில் மூன்று வயது குழந்தை இருந்தது. அலுவலக உடையில் நின்றிருந்தான். அவன் முகத்தில் வியர்வை வழிந்தது;கைகளில் குழந்தையின் எடையும்,காலையில் எண்பத்தைந்து டிகிரி வெயிலும் அவனைச் சோர்வடையச் செய்திருந்தது.
பரந்தபன் வரும் சத்தம் கேட்டதும் மார்க் திரும்பினான்.
“சாரி, மார்க். டிராஃபிக் அதிகமா இருந்தது,” என பரந்தபன் சொன்னான்.
“டிராஃபிக்கா?” மார்க் குரல் உயர்ந்தது.
“நம்முடைய அப்பாயின்மெண்ட் காலை எட்டு மணிக்கு இருந்தது. இப்போது ஒன்பது மணி ஆகிறது. உன்னால் நான் அலுவலகத்தில் விடுமுறை போட்டிருக்கிறேன். என் மேலாளர் என்னைத் திட்டுகிறார். நீ வருவாயா இல்லையா என குழந்தையோடு வெயிலில் நிற்கிறேன்!”
பரந்தபன் அவன் குரலின் கோபத்தை உணர்ந்தான்.
அவனுக்கு மார்க் நியாயமின்றி கத்துகின்றான் போல் தோன்றியது.
“சாரி, மார்க். நான் முயன்றேன். ஆனால் காலையில் வீட்டில் ஒரு பிரச்சனை இருந்தது. அதனால் தாமதம்,” அவன் தன் விளக்கத்தை ஆரம்பித்தான்.
“வீட்டு இஷ்யூவா?” மார்க் கசப்பாகச் சிரித்தான்.
“பரந்தபன், நான் உன் மேல் நம்பிக்கை வைத்து இந்த வேலையைக் கொடுத்தேன்.நீ சிறு தொழில் செய்பவன்.உனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.ஆனால் நான் அப்படிச் செய்திருக்க கூடாது.”
மார்க் சொன்ன வார்த்தைகள் பரந்தபனுக்குக் கசப்பாக இருந்தன. கைகள் டூல் பாக்ஸை இறுக்கிப் பிடித்தன. கால்களைத் தரையில் பூமியைக் கீழே தள்ளும் விசையுடன் ஆழமாக ஊன்றினான். உடலில் ஒரு சூடு பரவியது; கண்களில் நீர் மெல்லத் திரண்டது. காற்றின் அசைவே இல்லாத அந்தக் காலை இன்னும் வியர்வையை உருவாக்கியது. அவன் நிற்கும் வெளி அவனுக்கே பாரமாக இருந்தது.அவன் மனமெனும் யானை, தொழில் அவனை நோக்கி வந்த விதத்தைக் கண்டு முழு வேகமெடுத்தது.
“மார்க், நான் மூன்று வருடமாக உனக்குப் பல வேலைகளைச் செய்துள்ளேன். எப்போதும் சரியாகத்தானே செய்திருக்கிறேன் இல்லையா? ஒரு நாள் தாமதமானதற்காக…” அவன் குரல் பதிலுக்கு உயர்ந்தது.
குழந்தை அப்பாவின் கையில் அசைந்தது.சில வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தது. மார்க், குழந்தையின் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தான்.
“ஆமாம், பரந்தபன். மூன்று வருடமாக நன்றாகவே வேலை செய்தாய். அதனால்தான் இன்றைக்கும் உன்னைக் கூப்பிட்டேன். ஆனால் பார், வெதர் ரிப்போர்ட் என்ன சொல்கிறது தெரியுமா? இன்றைக்கு நூறு டிகிரி வரப்போகிறது. உனக்கு அதைப் பற்றி அக்கறை இருக்கிறதா?”
மார்க் குரல், அவனைக் கீழே தள்ளிப் புதைக்கும் வலிமையுடன் வந்தது. பரந்தபன், மோதும் அதைத் தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க விரும்பினான்.
‘தாமதமாக வந்தது என் தவறுதான்.மன்னிப்பு கேட்டேனே.இவன் ஏன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்?’
காலையில் பதினைந்து வருட மனைவி; இப்போது மூன்று வருட வாடிக்கையாளர்.
‘ஏன் யாருக்கும் என் நியாயம் புரியவில்லை? சேமி இல்லாமல் பழைய யூனிட்டைப் பிரித்து, கழற்றி, நகர்த்த முடியாது. வேறு வழியில்ல. இவனிடம் சொல்ல வேண்டியதுதான்.’
பரந்தபனின் மனதில் எண்ணங்கள் ஓடின. திட்டத்தை வடிவமைத்துக்கொண்டான்.
“ஓகே, மார்க். நான் வந்துவிட்டேனே. என்னுடைய ஹெல்பர் சேமி இன்றைக்கு வந்துக்கொண்டிருக்கிறான். அவன் வந்தவுடன் வேலை ஆரம்பித்திடலாம்,” பரந்தபன் தன் பிரச்சினையைச் சொன்னான்.
மார்க் முகம் இன்னும் கடுமையாக இருந்தது. “என்ன? நீ ஒரு மணி நேரம் தாமதம். இப்போது ஹெல்பர் இல்லாமல் வந்திருக்கிறாயா? ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்!”
பரந்தபன் தன் நெஞ்சில் கோபம் எழுவதை உணர்ந்தான். முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“பரந்தபன், இது சின்ன பிரச்சனை இல்லை. இன்றைக்கு வேலை நடக்குமா இல்லையா?” எனக் கேட்டபோது,மார்க் கையில் இருந்த குழந்தையை இறுக்கப் பிடித்ததைப் பரந்தபன் பார்த்தான்.மார்க் கைகளில் வியர்வை வழிந்தது.
“மார்க், நான் சொல்வதைக் கேளுங்கள். காண்ட்ராக்டில் எனக்கு HVAC யூனிட்டை மாற்ற 72 மணி நேரம் சொன்னீர்கள். எனக்கு இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது,” எனச் சொல்லிவிட்டு ஏசி கருவியை நோக்கி நடக்கத் தொடங்கினான். மார்க் அவன் முதுகில் முறைத்தது அவனுக்குத் தெரிந்தது.
தொலைபேசியை எடுத்து செமியை மீண்டும் அழைத்தான். அவன் எடுக்கவில்லை. இன்றைய வேலை இரண்டு நபர்கள் இருந்தால்தான் நடக்கும்.அவனால் கனமான பொருள்களைத் தனியாகத் தூக்க முடியாது.
அவனுக்குத் தெரிந்த வேறு பலரையும் அழைத்துப் பார்த்தான்;யாரும் அன்றைக்கு வேலைக்குக் கிடைக்கவில்லை.
கோபத்தில் பரந்தபன் டூல் பாக்ஸை சத்தமாக வைத்தான். அந்தச் சத்தத்தில் மார்க் குழந்தை அழ ஆரம்பித்தது.
“பார்! உன் சப்தத்தில் என் குழந்தை அழுது,” மார்க் குரலில் கடுமை மேலும் கூடியது.
“மார்க், மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சப்தம் போடவில்லை. டூல் பாக்ஸ் கனமாக இருந்தது,” என அவன் குரல் மிக கீழே இறங்கி ஒலித்தது.
“சேமி வருவானா இல்லையா?” மார்க் குரல் அவன் காதுகளில் ஈயம் என இறங்கியது.
‘சேமியை தூக்கி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நிற்கின்றேனா!’ பரந்தபன் மார்க்கிடம் கத்த நினைத்தான். ஆனால் முடியவில்லை.
“மார்க், நான் போய் சேமியை கூட்டிக்கொண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பி வருகிறேன்,” எனச் சொல்லிவிட்டு தனது டிரக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
“உனக்குக் கூகிளில் நல்ல ரிவியூ கொடுக்கப் போவதில்லை. நீ அன்ப்ரொஃபஷனல்!”
முதுகில் கத்தி போல மார்க் சொல் இறங்கியது. வலியுடன் நடந்தான்.
அங்கே இருக்க விரும்பாமல், மனம் போன போக்கில் வண்டியை ஓட்டிச் சென்றான்.
“எங்கே போவது? யாராவது என்னைத் தேடுவார்களா?அம்மா இருந்தால் தேடுவாள். அவளும் இல்லை. லலிதா ஒரு காலத்தில் தேடுவாள். இப்போது….” வாகனம் நகர, அவன் எண்ணங்களும் நகர்ந்தன. கண்கள் கலங்கின.அழ விரும்பவில்லை; கட்டுப்படுத்தினான்.
“லலிதாவை முதலில் எங்கே பார்த்தேன்? அனிமேஷ் வீட்டில்… அனிமேஷ் என் நண்பன். அவன் என்னை ஏற்றான். எத்தனை வருடப் பழக்கம்! அவன் பழக்கத்தால்தான் லலிதாவை சென்னையில் அவன் வீட்டில்தான் பார்த்தேன். உஷா, லலிதாவின் தூரத்து சொந்தம். ஏதாவது சொல்லுவாளோ?”
சாலையில் அத்தனை வாகனங்களுக்கு மத்தியில் தனிமையை உணர்ந்தான்.
“அவள் ஏதாவது சொன்னாலும், அனிமேஷ் என்னுடன் வருவான். வந்தே தீர வேண்டும்; வராமல் இருக்கக் கூடாது. கடவுளே,அவனை வரச் சொல்… வராமல் இருக்கக் கூடாது.”
மனதில் ஒரு கனம் எழுந்தது. அந்தக் கனம் உடலுக்கேறி, உடல் சோர்ந்தது. வாகனத்தை அனிமேஷ் வீடு நோக்கித் திருப்பினான்.
“அவனைப் பார்த்து, அவனுடன் கொஞ்ச நேரம் செலவிட்டால் போதும்.” அந்நேரத்தின் உளச்சொல்லின் சுமை, கனரக வாகனத்தில் ஏற்றியிருந்தால், அது நிரம்பியிருக்கக் கூடும்.
அனிமேஷ் வீட்டு வாசல் தெரியும் தூரத்தில் வாகனத்தை நிறுத்தினான். அனிமேஷின் டிரக் அவன் வீட்டு டிரைவ்வேயில் நின்றிருந்தது. அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
“அனிமேஷ் வீட்டில்தான் இருக்கிறான். தொலைபேசியில் அழைத்து விட்டு வந்திருக்க வேண்டும். என்ன நம்பிக்கையில் அழைக்காமல் வந்தேன்? வெளியில் எங்குப் போகலாம்? அவனுக்கு வேலை இல்லாமல் இருக்குமா? பிளம்பிங் வேலைக்கு போகவேண்டுமெனச் சொல்வானோ?”
முடிவு செய்ததும் அவனை அழைத்தான். அழைத்தவுடன் முதல் ரிங்கிலேயே அனிமேஷ் எடுத்தான்.
பரந்தபனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனிமேஷின் “ஹலோ” பெரும் ஆறுதலாக இருந்தது.
பரந்தபன் நெகிழ்வுடன் பேசத் தொடங்கும் முன்னர், அனிமேஷின் குரல் கேட்டது, “பரந்தபா, நீ ஏன் இப்போது தொலைபேசியில் அழைக்கிறாய்?”
என்ன சொல்வது எனத் தடுமாறி, கொஞ்சம் சீராகி, பின்னர் “டேய்…” என்றான்.
“அப்புறம் பேசு. இப்ப லலிதா வந்திருக்கிறாள்,” என அனிமேஷ் ரகசிய குரலில் பேசினான்.
“நான் வீட்டு வாசலில் நிற்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்?” பரந்தபன் குரல் வலுவிழந்தது.
“டேய், சொன்னால் கேளுடா. நீ இங்கே நிற்காதே. கிளம்பு! சொன்னால் புரிந்து கொள்,” அனிமேஷ் குரல் கோபமடைந்தது.
“நான் எங்கேயடா போவேன்?” பரந்தபன் பரிதவிப்புடன் கேட்டான்.
வறண்ட பாலை நிலத்தில், யானையொன்று காலூன்றி எழுந்து, தன் பெரும் எடையைத் தானே தாங்கத் தடுமாறி, பெருமரத்தின் ஒரு சிறு கிளையைத் துதிக்கையால் வளைத்துப் பிடித்து, தன் வாழ்வைக் காக்கப் போராடுவது போல அவனும் தடுமாறினான்.
“ப்ளீஸ்… லலிதா பாவம்டா. அவளிடம் உஷாவும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். கொஞ்ச நேரம் கழித்து உன்னிடம் பேசுகிறேன். மதிய உணவு முடிந்ததும் அழைக்கிறேன். உஷா தொலைபேசியைக் கீழே வைக்கச் சொல்கிறாள். நானே பிறகு உன்னை அழைக்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு அனிமேஷ் தொலைபேசியைத் துண்டித்தான்.
“என் மனைவி… என் வாடிக்கையாளர்… என் நண்பன்…யார் என்னுடன்?”
டிரக்கின் ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான். கை வலித்தது. ஸ்டியரிங் அமைதியாக இருந்தது.
“எத்தனை சொல்கிறேன்… எல்லாமே சொல்கிறேன்…எனக்கென கேட்க யாரும் இல்லையே…எதுவுமே எனக்கு இல்லையே…”
அவன் உணர்வில் சினமன்றி வேறு எதுவும் இல்லை.யானைகள் மதம் கொண்டு, அவனது உலகைச் சல்லி சல்லியாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தன.
வண்டியைத் திருப்பி மதுக்கடையை நோக்கிச் சென்றான். விஸ்கியை வாங்கிக்கொண்டு ‘குட் மோட்டல்’ நோக்கித் திரும்பினான். தொலைபேசியை அமைதியாக அதிரும் நிலையில் வைத்தான்.
யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருந்தான். அவன் தலையில் அவனுடன் பேசும் அவன் குரல் அவனை நிரப்பியது. சேமி மேரிலாண்டு வந்தபோது, அங்குச் சில நாட்கள் தங்கியிருந்தான்.
சேமியின் மனைவி அங்கே ஹவுஸ்கீப்பிங் வேலையில் இருந்தார். அதன் வழியாகப் பரந்தபனுக்குப் பழக்கமான மோட்டல். அவன் சொல்லும் விலைக்கு அறை வாடகைக்குக் கிடைக்கும். உரிமையாளர் யாரோ ஒரு படேல்.
அந்த படேல் சிரிப்புடன் பரந்தபனை வரவேற்றார். பரந்தபன் முகத்தின் கடுகடுப்பைக் கண்டவுடன், அவர் பெரிதாகக் கேட்கவில்லை. சாவியை வாங்கிக்கொண்டு அறையில் நுழைந்தான். முழுக்க குடித்தான். யானை மயங்கியது. அந்த யானையின் அடர்த்தியான தோல் கொடுத்த இருள் போகவில்லை; சினமென்றும், கொதிப்பென்றும், தவிப்பென்றும் அவனைப் போர்த்தியது.
அவன் உறங்க ஆரம்பித்தான்.
கதவு படபடவென தட்டப்பட்டது. அவன் உறக்கம் விழிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது.
“யாராக இருக்கும்?”
கண்ணைத் திறக்க முயன்றான். விழித்தான். அறை இருளாக இருந்தது. கண்ணைத் திறந்து இருக்கிறேனோ என சந்தேகம் வந்தது. கனவோ என நினைத்தான். அப்புறம் கடிகாரத்தைக் கண்டான். நான்கு மணியைச் சுட்டியது. கதவைத் திறந்தான். படேல் நின்றிருந்தார்.
“உங்களைத் தொலைபேசியில் அழைத்தேன்;நீங்கள் எடுக்கவில்லை… அங்கே பாருங்கள். வாகன நிறுத்துமிடத்தில் சேமியும் அவன் மகனும்…” என படேல் கையைக் காட்டினார்.
“சேமி” என்ற சொல் அவனுக்கு முழு விழிப்பைத் தந்தது. கோபம் பொங்கியது.
“அவனை எத்தனை நம்பினேன்! அவனும் ஏன் என்னைக் கைவிட்டான்? ஏன் காலையில் வரவில்லை? ஐந்து வருடமாக வேலை விடாமல் கொடுத்திருக்கிறேன். இப்படி வாடிக்கையாளரிடம் திட்டு வாங்க வைத்தாயே! உன்னை இனி நான் நம்ப முடியுமா? உன்னிடம் ஒருநாளாவது தினக்கூலியைத் தள்ளிக் கொடுத்திருக்கிறேனா?”
படேல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவனுக்குக் காதில் ஏறவில்லை. தூரத்தில் சேமியை கண்டான்.
சேமி, யாரோ ஒரு பதின்ம வயது இளைஞனுடன் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
படிகளில் இறங்கி, சேமியை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னால் இன்னும் சத்தமாக படேல் ஏதோ புலம்பிக்கொண்டே வந்தார்.
“இவர் ஏன் உயிரை எடுக்கிறார்?”
திரும்பி முறைத்தான். ஆனால் அவர் கவனிக்கவில்லை. அவனுக்கு எரிச்சல் கூடியது.
“நான் பேசிக்கொள்கிறேன்,” என படேலை நோக்கிச் சொல்லிவிட்டு, மீண்டும் சேமி இருந்த திசையை நோக்கிப் பார்த்தான்.
சேமியுடன் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென சேமியை அடிக்க ஆரம்பித்தான். கையில் கனமான இரும்புத்தடி போன்ற ஒன்று இருந்தது. அதை சேமியை நோக்கி வீசியதும், சேமி கீழே விழுந்தான்.
“காவல்துறையைக் கூப்பிடுங்கள்!” என படேலிடம் கத்திச் சொல்லிவிட்டு, பரந்தபன் சேமியை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
இவன் வருவதைப் பார்த்ததும், சேமியை அடித்தவன் அங்கிருந்து அகன்று ஓடினான். ஓடிக்கொண்டிருந்தபோது, பையில் கையை விட்டு எதையோ எடுத்து சேமி மீது வீசினான்.
படேல் ஓட முடியாமல், பின்னால் மெதுவாக நடந்து வரும்போது,பரந்தபன் ஏற்கனவே சேமியை அணுகியிருந்தான்.
சேமியின் மூக்கிலும் முகத்திலும் அடி விழுந்து ரத்தக் காயம் இருந்தது. கீழே விழுந்திருந்த சேமியை தூக்கிப் பிடித்தான்.
ஆம்புலன்ஸுக்கும் காவல்துறைக்கும் அழைக்கப் பையில் கை விட்டான். தொலைபேசி அறையில் இருந்தது. அதற்குள் படேல் அருகில் வந்து விட்டார்.
“தொலைபேசியைக் கொடுங்கள்,” என பரந்தபன் கை நீட்டினான்.
வலியில் தவித்துக் கொண்டிருந்த சேமி, மெல்ல பரந்தபன் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
“பரந்தபன்… ப்ளீஸ்… காவல்துறைக்குச் செல்ல வேண்டாம்.தொலைபேசியில் அழைக்காதீர்கள்,” என தடுமாறும் குரலில் சொன்னான்.
பரந்தபன் தவிப்புடன் அவனைப் பார்த்தான். “அப்படியா? சரி… வா, மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறேன். அடி விழுந்திருக்கிறது,” என்றான்.
“அந்த அளவுக்கு அடி இல்லை. இது சரியாகி விடும். எனக்கு ஒரு உதவி முடிந்தால் செய்யுங்கள்…” அவன் ஓடி மறைந்தவன் சென்ற திசையைக் கைகாட்டினான். சொல்லை விழுங்கினான். தலை தாழ்ந்தது;சுட்டுவிரல் நடுங்கியது.பேசுவதை நிறுத்திக்கொண்டான். தலையில் கை வைத்துக் கொண்டு அழுதான்.
“என் டிரக்…” என ஏதோ சொல்ல ஆரம்பித்தான்;மீண்டும் நிறுத்தினான்.
பரந்தபன் அமைதியாக நின்றிருந்தான்.
படேல் தொலைபேசியில்,சேமியின் மனைவிக்கு ஏதோ செய்தியை ஸ்பானிஷில் சொல்லிக் கொண்டிருந்தார். பரந்தபனுக்கு “சேமியின் மகன்” பற்றியே அவர் சொல்கிறார் என்பது மட்டும் புரிந்தது.
அவன் தன் கவனத்தை முழுவதுமாக சேமியிடம் செலுத்த முயன்றான்.
சேமி மெல்ல எழுந்து நின்றான். கால் வலியால் முழு எடையையும் ஊன்ற முடியாமல், சிறு நடுக்கம் இருந்தது.
“என் டிரக்கை அபராதம் கட்டி எடுக்கவேண்டும். அதை எடுத்துக்கொடுங்கள். அது இல்லாவிட்டால் எனக்கு வேலை, குடும்பம் எதுவும் நடக்காது… ப்ளீஸ்…” சேமியின் குரலில் கெஞ்சல் இருந்தது.
பரந்தபன் குனிந்து, கீழே அடித்தவன் வீசிய பொருளை எடுத்தான். அது சேமியின் டிரக் சாவி என்பதை அவன் கண்டான்.
“சரி, இரு…” எனச் சொல்லிவிட்டு படேலை நோக்கித் திரும்பினான். “இவனைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். நான் அறைக்குச் சென்று என் பொருள்களை எடுத்து வருகின்றேன்,” என விரைந்து சென்றான்.
அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பாட்டிலைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, தன் டிரக் சாவியும் தொலைபேசியும் எடுத்துக் கொண்டு கிடுகிடுவென திரும்பி ஓடி வந்தான்.
அதற்குள் படேல், சேமியை பரந்தபனின் டிரக் அருகே கூட்டி வந்திருந்தார். டிரக் கதவைத் திறந்து, அதில் சேமியை உட்கார வைத்தார்.
“ஆறு மணிக்குள் அபராதம் கட்டிவிட வேண்டும்;இல்லையென்றால் கதவை மூடி விடுவார்கள்,” என படேல் சொன்னார். பரந்தபன் வண்டியைக் கிளப்பி அபராதத் தொகை வசூலிக்கும் அலுவலகம் நோக்கிச் சென்றான்.
“டைலனால் இருக்கிறதா? உடலெல்லாம் வலிக்கிறது,” என சேமி கேட்டான்.
டிரக்கின் க்ளவ் பாக்ஸை நோக்கிப் பரந்தபன் கை காட்டினான். சேமி அதைத் திறந்து, மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு விழுங்கிவிட்டு, கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தான்.
தூங்கும் பொழுது, கண்ணில் நீர் வழிவதை அப்போதுதான் பரந்தபன் பார்த்தான்.
அபராதத் தொகை வசூலிக்கும் அலுவலகம் மூடும் முன் செல்ல வேண்டுமென அவன் விரைந்தான்.
அங்குச் சென்றவுடன் க்ளர்க்கிடம் சேமிக்காக பணம் கட்டி, ரசீதைப் பெற்றான்.
பின்பு அங்கிருந்து கிளம்பி,வண்டியைப் பறிமுதல் செய்து வைத்திருந்த இடத்துக்குச் செல்லும் நேரத்தில், கிட்டத்தட்ட இருள் நெருங்கி விட்டது.
போகும் வழியில், சேமி பெரும்பாலும் கண்ணை மூடி தூங்குவது போல மௌனமாக இருந்தான்.
பரந்தபன், வண்டியை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
வண்டியைப் பறிமுதல் செய்த இடம் வந்ததும், சேமி இறங்கி, “நன்றி, பரந்தபன்… பெரிய உதவி. நான் கிளம்புகிறேன்,” என நெகிழ்ச்சியான குரலில் சொன்னான்.
“நாளை ஓய்வெடு. நாளை மறுநாள் மார்க் வீட்டில் பார்ப்போம். பத்திரமாக வீட்டுக்குச் செல்,” எனச் சொல்லிவிட்டு பரந்தபன் அங்கிருந்து கிளம்பினான்.
கொஞ்சம் தள்ளி இருந்த பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தி, இறங்கி நின்றான். சிகரெட்டைப் பற்றவைத்து பிடித்துக்கொண்டான்.
அங்குப் பக்கத்தில் எந்த மரமும் இல்லை. மேரிலாண்டின் சூரியன், தொண்ணூறு பாரன்ஹீட்டில் கொளுத்திக்கொண்டிருந்தது.
வியர்வை உடலைப் பற்றினாலும், பரந்தபன் உடல் சூட்டைப் பெரிதாக எடுக்கவில்லை. குடித்த மயக்கம் எதுவும் இல்லை. நடையில் இலகுத்தன்மையை உணர்ந்தான். கைகளும் விரல்களும் இறுக்கமாக இல்லை. மூச்சு நல்ல குதிரையொன்று அழகாக நடப்பதைப் போல சீராக இருந்தது. கண்கள் தூரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் நடந்து கொண்டிருந்த அழகான பெண்ணொன்றை நோக்கி, “பார்,” என அவனுக்குள் யாரோ சொன்னது. இதயம் எந்தக் கேள்வியையும் சுமக்காமல் துடித்துக்கொண்டிருந்தது.
மெல்லிய புன்னகை வந்தது. தன் உதடுகள் அந்தப் புன்னகையை ஏற்றுக்கொண்டன என்பதை அவன் அறிந்தான்.
“காலையில் லலிதா எப்போது சிரித்தாள் என யோசித்தேன். கிரகப்பிரவேசத்துக்குப் பின், இன்றுதான் நான் சிரிக்கிறேன். எவ்வளவு நாள்? ஏன் காத்திருந்தேன்?”
சிகரெட் புகையை ஆழமாக இழுத்தான்.முடிந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான்.
மெல்ல அந்தி முடிந்து, இரவு இருளின் வடிவில் வந்து கொண்டிருந்தது.
அந்த இருளில், சேமியின் டிரக் இம்பவுண்ட் லாட்டின் தானியங்கி கதவைத் தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தது. சேமி, அவனை நோக்கி கை அசைத்தான்.பரந்தபன் டிரக்கில் ஏறி உட்கார்ந்தான்.
“இப்படி இருப்பது எனக்குப் பிடித்துள்ளது…ஏன் இப்படி இருக்கிறேன்?”
மதம் கொண்ட யானையின் கனத்த தோலென இருந்த இருள் அவனுள் இருந்து உரிந்துகொண்டிருந்தது.
தொலைபேசி அதிர்ந்து அழைத்தது. எடுத்தான். அதன் வெளிச்சம் அவன் கைகளில் பரவியது.
