போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு.

பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன் சமூக உறவுகளின் தொகுப்பு என்று மார்க்ஸ் கூறுவார். ஒரு தொழிலாளி, ஒரு தந்தை, ஒரு நண்பர் என அவன் சமூக உறவுகளின் மூலமே தன் அடையாளத்தைப் பெறுகிறான். அதேபோல் வளர்த்த பிராணிகளின் உரிமையாளராக இருப்பதும் சமூக உறவுகளின் ஒன்றாக மாறியுள்ளது.

மனிதர்கள் விலங்குகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்றாக இணைந்து வாழ்ந்துள்ளனர். விலங்குகளை உணவிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், விவசாயத்திற்காகவும் உதவிக்காகவும் பயன்படுத்தி அவற்றுக்கு உணவும் உறைவிடமும் அளித்துள்ளனர். இதன் மூலமாக மனிதர்களுக்கு விலங்குகள் மீது பரிவும் பிணைப்பும் பரிணாமமாகவே உருவானது. ஆனால், இன்று மனிதர்கள் ‘நான் ஒரு நாய் பிரியர்’ அல்லது ‘நான் பூனைகளை நேசிக்கின்றேன்’ என தனித்த அடையாளங்களை உருவாக்கி, அவர்களைப் போல் இல்லாத சக மனிதர்களைக் கருணையற்றவர்களாகப் புனையவும் தவறுவதில்லை. குழுக்களாக இணைந்து வாழ்ந்த மனித இனம், இன்று தனிக் குடும்பங்களாக மாறிவிட்டது. மனிதனை மெதுவாக சமூகத்திலிருந்து பிரித்து அவனைத் தனிமையின் வளைக்குள் தள்ளியுள்ளது. சமூகத்திலிருந்து அந்நியப்பட்டதால் உண்டாக்கிய வெறுமையை நிரப்பும் உறவே செல்லப்பிராணிகள்.

நவீன வாழ்க்கையும் தொழில்நுட்பமும் பலரையும் தனிமைப்படுத்தி விட்டது. மனிதன் வெறும் உற்பத்தி இயந்திரமாக மாறியிருக்கிறான். தனிமையும் சமூக அந்நியப்படுத்தலும் மனிதனை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது. இதற்கு உதாரணமாக இத்தொகுப்பில் வரும் ‘போண்டு’ கதையினைச் சொல்லலாம். கணவர் பணி நிமித்தமாகப் பயிற்சிக்கும் மகள் வெளியூருக்குப் படிக்கச் சென்றதாலும், செல்வி வீட்டில் தனியாக உள்ளார். மகளின் ஆசைக்கிணங்க அவர்கள் இதற்கு முன்பே பீமை (நாய்) வளர்த்திருந்தாலும், செல்விக்கு நாய்கள் மீது உள்ள அருவருப்பும் பயமும் தீர்ந்தபாடில்லை. பீமின் இறப்பிற்குப் பிறகு, மகள் சுடர் மீண்டும் வேறொரு நாயை வளர்க்க ஆசைப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள்.  வந்த முதல் நாளே, போண்டுவை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவிற்கு நெருக்கம் உண்டாகிறது. நாய்களை அருவருப்பான ஜீவனாக எண்ணும் செல்விக்கு 13 வருடங்களாக இருந்த பீமூடன் இல்லாத நெருக்கம் ஒரே நாளில் போண்டு மேல் வந்ததற்கான காரணம் தனிமைதான். தனிமை அவரை உளவியல் ரீதியாகத் தளரச் செய்து ஒரு உயிருடன் பிணைப்பு தேடும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதுதான் மனிதனின் அடிப்படை சமூகத் தேவையின் வெளிப்பாடு.

பெரும்பாலோர் அவர்கள் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கான காரணம் தங்களின் பரிவு அல்லது கருணை குணம் என்று நம்புகின்றனர். ஆனால் அந்தக் கருணையின் அடித்தளத்தை ஆராய்ந்தால், அதன் கீழ் இன்னொரு ஆழமான உணர்வு மறைந்திருப்பதைக் காணலாம். அதுதான் தனிமையின் பயம். தனிமையின் பிம்பத்திலிருந்து தப்பிக்க ஒரு முயற்சி. நாம் பல சமயங்களில் நம்மைப் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாத உலகில் வாழ்கின்றோம். ஆனால் ஒரு உயிரினம் அது நாயோ, பூனையோ, பறவையோ நம்மை விமர்சிக்காது, தீர்ப்பளிக்காது, எந்த நிபந்தனையும் இல்லாமல் நம்மை ஏற்றுக்கொள்ளும். அதுவே, நம்மை உள்ளார்ந்த பிரச்சனைகளான தனிமையிலிருந்தும் ஒதுக்கத்திலிருந்தும் போதாமையிலிருந்தும் காப்பாற்றக் கூடும் என நாம் நம்புகிறோம்.

அன்பு, கருணை, பரிவு போன்ற மனித குணங்களைத் தாண்டி அதிகார உணர்வை நிலைநாட்டும் உளவியல் தான் பல நேரங்களில் மனிதனைப் பிராணிகளை வளர்க்கத் தூண்டுகிறது. மனிதன் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த காலம் கடந்துவிட்டது; நாகரிக வளர்ச்சி அவனை இயற்கையை ஆளும் உயிரினம் என மாற்றியது. விதைகள் விதைப்பது, நிலத்தைக் கைப்பற்றுவது, விலங்குகளை அடக்கி வளர்ப்பது இவை அனைத்தும் மனிதனின் மனதில் ஒரு ‘நான் கட்டுப்படுத்துகிறவன்’ என்ற ஆழமான உணர்வை உருவாக்கின. இதிலிருந்து தான் ‘அதிகாரம் கலாச்சாரம் (power culture)’ என்ற மனோபாவம் உருவானது. நிலம் என் சொத்து, வீடு என் சொத்து, மனைவி என் சொத்து, குழந்தை என் சொத்து, இவ்வாறு மனிதன் தன் வாழ்வை நிலைத்திருக்கச் செய்யும் ஒவ்வொரு உறவையும், பொருளையும், உயிரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடன் வாழ்கிறான். இந்த மனோபாவமே சமூகத்தில் உருவான ஏற்றத்-தாழ்வுகளுக்கும், அதிகார உறவுகளுக்கும் அடிப்படை.செல்லப் பிராணிகளை நாம் பெரும்பாலும் அன்பின் பிரதிபலிப்பாகக் காட்ட முயல்கிறோம். ஆனால் அதன் ஆழத்தில் “நான் உன்னை வளர்க்கிறேன், உன் வாழ்க்கையை நான் தீர்மானிக்கிறேன், நீ என் உலகின் ஒரு பகுதி” என்ற உரிமை உணர்வு மறைந்திருக்கிறது. அதாவது — அன்பின் பெயரில் கூட மனிதன் ஆளும் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறான்.அதுதான் இந்த உளவியல் சிக்கலின் மையம். இதற்கான சிறந்த பிரதிபலிப்பாக ‘குர்குர்’ சிறுகதை நிற்கிறது.

வெளியூர் செல்லும் அத்தை, தனது செல்லப் பூனை குர்ருவை சில நாட்கள் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைப் பாலனிடம் ஒப்படைக்கிறார்.சில நாட்களில் குர்ருவுக்கும் பாலனுக்கும் இடையில் நெருக்கம் வளர்கிறது. இதுவரை வீட்டுக்குள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்த குர்ருவுக்கு, பாலன்தான் முதல்முறையாகச் சுதந்திரத்தின் அனுபவத்தையும் மற்றும் வெளி உலகின் உறவையும் வழங்குகிறான்.மனிதர்கள் போல் பிராணிகளும் துணையைத் தேடும் இயல்புள்ளவை. அவை, இனப்பெருக்கம் மற்றும் சமூக தொடர்புகளுக்காகவே இயற்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதன் அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுத்துலும், துணை தேடும் உயிரியல் உந்துதல் அழியாது. அதனால் தான் சில பெண் நாய்களோ, பூனைகளோ ஆண் மனிதர்களிடம் அதிக பாசத்துடன் நடந்து கொள்கின்றன. அது உணர்ச்சி அல்ல, உயிரியல் நெருக்கத்தின் வெளிப்பாடு. ஆனால் மனிதன் தன் செல்லப் பிராணிகளிடம் கொண்டிருக்கும் பாசம் ஒரு கட்டத்தில் உரிமை உணர்வாக மாறுகிறது.அவை வேறொருவருடன் நெருக்கம் காட்டும் போது, அந்தச் செயல் அவனுடைய ஆளுமையையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல் எனத் தோன்றுகிறது. அன்பு மறைந்து, “நீ என் சொத்து” என்ற மனோபாவமே மேலோங்குகிறது. அதனால்தான் ‘குர்குர்’ கதையில், குர்ரு அத்தையிடம் இருந்து விலகி பாலனுடன் நெருக்கம் கொண்டதும், அத்தை உதைத்து விரட்டியதும் இந்த முரண்பாட்டில் உண்டான கோபம் மற்றும் பொறாமையால்தான்.

மனித மூளை ஒரு ஆழ்ந்த உளவியல் விதிமுறையைப் பின்பற்றுகிறது: ‘கட்டுப்படுத்தினால் தான் பாதுகாப்பு.’ ஒரு பொருள், ஒரு மனிதன், அல்லது ஒரு உயிரினம் நம்மால் கட்டுப்படுத்த இயலாதபோது மூளை அதனை ஆபத்தாகக் கருதுகிறது. அதனால் தான் நாமே ஒரு விலங்கின் வாழ்க்கையையும் நம் விதிகளுக்குள் அடைத்துவிடுகிறோம்; அதை ‘அன்பு’ என்று பெயர் சூட்டுகிறோம். இதை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் உதாரணம் ‘இளன்’ என்ற கதை. அதில் வரும் பூனை, நான்கு சுவர்களுக்குள் வாழும் சிறைப்பட்ட உயிர். அது வெளி உலகத்தைக் காணாதது; அதன் ஆர்வம் அடக்கப்பட்டு, அதன் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. மனிதன் அதை ‘பாதுகாப்பு’ என நம்புகிறான், ஆனால் பூனைக்குப் பொருளில் அது சிறை. அந்த அடைப்பு தானே, ஒருநாள் அதைத் தப்பித்து ஓடச் செய்கிறது. அதனால், அன்பு என்று தோன்றும் சில உணர்வுகள் உண்மையில் அதிகாரத்தின் வடிவ மாற்றமே. பாசம் என்ற பெயரில் ஆளுமையை விதிக்கும் இந்த மனநிலை, மனிதன் இன்னும் இயற்கையுடன் சமமாக இல்லையென்பதை நினைவூட்டுகிறது.

மனித உறவுகளின் மையத்தில் ‘நான்’ என்ற சிறிய புள்ளி தான் உள்ளது. அந்தப் புள்ளியின் சுற்றிலும் வட்டமாய் விரியும் உறவுகள், முதல் வட்டம் குடும்பம், அடுத்தது நண்பர்கள், பின்னர் சமூகம், இறுதியில் செல்லப் பிராணிகள் போன்ற வெளிப்புற பாசங்கள்.இந்த வட்டம், மனிதனின் உணர்ச்சி மற்றும் உயிரியல் பாதுகாப்பு தேவையின் அடிப்படையில் செயல்படுகிறது. அவன் எதை நெருக்கமானதாக உணருகிறானோ, அது ஆபத்தில் சிக்கும்போது, வட்டத்தின் எல்லையிலிருக்கும் உயிர்களைத் தற்காலிகமாகப் புறக்கணிக்கிறான்.

அந்த நேரத்தில் ‘அன்பு’ அல்ல, ‘பாதுகாப்பு’ என்ற உயிரியல் உந்துதலே மனிதனை இயக்குகிறது. ‘பீம் – சுட்கி’ சிறுகதை இதைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. மலரும் குமாரும் அக்கா தம்பி. அவர்கள் வீட்டில் பீம் என்ற நாய், சுட்கி என்ற பூனை,  இரண்டும் பாசத்துடன் வளர்க்கப்பட்ட உயிர்கள். ஆனால் ஒரு நாள், அந்த அன்பு மையத்தில் ஆழ்ந்திருந்த மலர் தன் உயிரியல் உணர்வின் ஆட்சிக்குள் சென்று விடுகிறாள். பீம், சுட்கியைத் தாக்குகிறது; அந்தத் தாக்குதலில் மலர் நாயை அடித்துக் கொன்றுவிடுகிறாள்.அவளுக்குப் பீமைவிட சுட்கியே மேலானது. தனக்குப் பிடித்த உயிருக்கு ஆபத்து நேரும் போது மனிதன் எந்த எல்லைக்குக் கூட செல்லக்கூடும். அன்பு என்ற உணர்வே எவ்வளவு நிபந்தனைகளால் கட்டுப்பட்டது என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது. தன் சொந்த பாசத்தின் மையத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மனிதன் தன்னைவிட வெளியுள்ள வட்டத்தில் இருக்கும் உயிர்களைக் கூட தியாகம் செய்யத் தயங்குவதில்லை.

பெருமாள் முருகனின் ‘போண்டு’ தொகுப்பு, மனிதனின் அன்பு என்ற எளிய சொல் எவ்வளவு பல அடுக்குகளைக் கொண்டது என்பதை நமக்குக் காட்டுகின்றன. அன்பு எப்போதும் பரிசுத்தமானது அல்ல, அது பயத்தையும், உடைமையையும், பாதுகாப்பின் பேராசையையும் உடன் சுமந்து வருகிறது. மனிதன் செல்லப் பிராணியை நேசிக்கிறான் என்ற உண்மை, அதே நேரத்தில் அதைக் கட்டுப்படுத்த விரும்புகிறான் என்ற உண்மையையும் மறைக்கவில்லை. அன்பு, ஒன்றை உடைமையாக்குவதல்ல; அவற்றைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி. ஆனால் பெரும்பாலான மனித அன்பு இன்னும் அந்த அடியெடுப்பைத் தொடங்கவில்லை. 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...