கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை நாவல் முழுமையிலும் காண முடிகிறது.

நாவல் இரண்டு வெவ்வேறு வாழ்க்கை அல்லது காலத்தின் மாற்றங்களைப் படம்பிடித்து காட்டுகிறது. ஒன்று பழமையான கிராம வாழ்வு. மற்றொன்று நவீனமயமான நகர்புற வாழ்வு. சாதிய மனநிலை நவீனமயமாக்கலில் நுழைந்த மனிதர்களுக்குள் அதன் வீரியத்தைக் குறைத்துள்ளதைப் போல இந்நாவல் காட்டுகிறது. வேறு சாதி பெண்ணைக் காதலிக்கும் மகனின் மனதை மாற்ற பல்வேறு முயற்சிகளைச் செய்து அப்பா பிரிக்கப் பார்க்கிறார். மகனின் உறுதியைக் கண்டபின் அரைமனதோடு திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்குச் சமரசம் செய்துகொள்ளும் அப்பாவிற்கு ஒர் அளவுக்குப் பக்குவம் இருக்கிறது எனத் தோன்றுகிறது. ஆனால் அதே மகனின் அம்மா தனது சிறு வயதில் சூராம்பட்டியில் காதலிக்கும்போதும் சாதிதான் தடையாக வருகிறது. ஆனால் அந்தத் தலைமுறை அப்பா குடும்பத்தோடு விஷம் குடித்துவிடுவோம் என நாடகமாடி மகளைத் தங்கை மகனுக்குத் திருமணம் செய்துவைத்து நினைத்ததைச் சாதித்துகொள்கிறார். குப்பாசுரன் மரணத்திற்குப் பிறகு பித்து பிடித்து முதுமை வரையிலும் அவன் நினைவோடு வாழும் குப்பாசுரிக்குக் காதலின் பிரிவு எவ்வளவு துயர் மிகுந்தது என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் அம்மாவின் காதலைக் குப்பாசுரியும் புரிந்துக்கொள்ளவில்லை. அசுரகுலத்தின் பித்துதான் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த மாற்றத்திற்கான இடைவெளி வெறும் ஒரு தலைமுறைதான். ஒரு தலைமுறையில் நிகழ்ந்த நவீனமயமாக்கல், கல்வி மற்றும் வெவ்வேறு நிலப்பரப்புகள் இதற்கு காரணங்களாக அமைகிறது.
சூராம்பட்டி மனிதர்களும் வீராசுரத்து மனிதர்களும் மிகவும் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். சூராம்பட்டியில் உறவு வலிமையாக இருக்கிறது. கணவனை இழந்த குப்பாசுரியை அவன் அண்ணன் கைவிடவில்லை. அவள் மகனை வறுமையிலும் படிக்கவைத்து ஆளாக்கும் மனம் படைத்த மாமா சூராம்பட்டியில்தான் இருக்கிறார். வீராசுரத்தில் வளர்ந்த பிள்ளைகள் வெளியூர் சென்றதோடு பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப கூட விரும்புவதில்லை. ஆனால், அம்மாவை மட்டும் உடன் வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். இது அதீத பணி சுமை, பண சுமைக்குள் சிக்கிக்கொண்டு சக உறவுகளுக்கே வாழ்வில் இடமில்லாமல் சுருங்கிய குடும்ப அமைப்புக்குள் வாழும் இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் நிலையை இந்நாவல் வெளிப்படையாக பிரதிபலிக்கிறது.
மேலும், நாவலில் காலமாற்றத்தில் காதல் எவ்வாறு பரிணமித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அந்தக் காலக்கட்டத்தில், சூராம்பட்டி போன்ற ஒரு ஊரில் காதலிக்க குறைவான சந்தர்ப்பமே வழங்கப்படுகிறது. காதல் பற்றிய புரிதல் பெரிதாக வாய்க்க பெறாத அல்லது அதை ஆராய்ந்து பார்க்க வாய்ப்பு வழங்கப்படாத இறுக்கமான தலைமுறையாக இருக்கிறது. அச்சூழலில் காதலிக்கும் மாங்கானும் மதுராவும் பால்யத்தின் காதலுக்கே உண்டான குழந்தைதனத்தோடு நம்மை வந்தடைகின்றனர். உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் அளவுக்கு அந்தக் காதல் உறுதிமிகுந்ததாகவும் அதிகபிரசங்கிதனமாகவும் இருக்கிறது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மேகாசுவின் காதல் அப்படியல்ல. அவன் காதலி குழந்தைக்கு அவனின் பெயரை வைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் அளவுக்கு யதார்த்தமானதாக இருந்தது.
தமிழ் சமூகத்தின் இன்னொரு கொடூரமான யதார்த்த காதல் அப்பா அம்மாவின் காதல்தான். பேசாமலே குடும்பம் நடத்துவதும், மனைவியைப் பலவந்தமாக உடலுறவில் ஈடுபடுத்திய பிறகும் இருவரும் சேர்ந்து மூன்றாவது பிள்ளை பெற்றுக்கொள்வதுமான பல தமிழ் இல்லறங்களின் யதார்த்த வாழ்வை இந்நாவலில் காண முடிகிறது. இவர்களின் வழிதொடர்ச்சியாக வந்த தலைமுறையாக இருந்தாலும் அனுமதியின்றி முத்தமிட்டதற்காக மன்னிப்பு கேட்க தெரிந்த முருகாசுவும் அதற்காக உறவிலிருந்து விலகிச் செல்ல சுதந்திரம் இருக்கிற பெண்ணும்தான் இன்றைய காலத்தின் மாங்கானும் மதுராவும்.
நாவலில் கதைமாந்தர்கள் அனைவரும் அவர்களின் குறை நிறைகளுடனே வலம் வருவது நாவலின் சுவாரிஸ்யத்தையும் யதார்த்தத்தையும் தக்க வைத்துள்ளது. குப்பாசுரன் கொலையுண்ட பகுதி சுவாரஸ்யமாக இருந்தாலும் நாவல் தொடக்கத்திலிருந்து வாசகரைத் தயார்ப்படுத்தி கொண்டுவந்த உணர்வு நிலையிலிருந்து சற்று வெளியேற்றி மீண்டும் அதே உணர்வு நிலைக்குக் கொண்டுவந்தது. சமகால நிகழ்வுகளோடும் சமகால மனிதர்களின் மொழியிலும் எழுதப்பட்டிருப்பது நாவலை எளிமையாக மற்றும் ஆழமாக மனதில் பதியவைத்துள்ளது.
