அந்த மாவட்டத்தின் டாக்டர்

இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஓர் உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று சளிபிடித்து  உடல் காய்ச்சல் கண்டது. நல்ல வேளையாக அப்போது நான் அவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். ஒரு டாக்டரை வரச் சொல்லியிருந்தேன். சொல்லி அரை மணி நேரத்துக்குள் அவர் வந்துவிட்டிருந்தார். ஒல்லியான தேகம், கருமையான தலைமுடி, சராசரி உயரம் வளர்ந்த மனிதர். எனக்கு சர்டோரிபிக் மாத்திரைகளையும், நெற்றியில் ஒட்டிக்கொள்ள பிலாஸ்டரும் எழுதிக் கொடுத்தார். கடுமையாக இருமிக்கொண்டே என் சட்டை கைமடிப்பிலிருந்து  கசங்கிய ஐந்து ருபில்ஸை எடுத்துக் கொடுத்துவிட்டு, எழுந்து வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன். அவருடனான பேச்சு சுவாரஸ்யத்தில் போகாமல் அங்கேயே இருந்துவிட்டேன்.

எனக்கு உடல் சோர்ந்து காய்ச்சல் கடுமையாகிக்கொண்டிருந்தது. உடலில் உஷ்ணம் கனன்றது. என்னால் அன்றிரவு உறக்கம்கொள்ள முடியாது என்று தோன்றியது. என்னோடு இணக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் டாக்டரிடம் உரையாடிக்கொண்டிருக்கலாம் என்ற ஓர் எண்ணம் ஓடியது. அவரும்  பேசுவதையே விரும்பினார். நான் வீட்டுக்குப் போகாமல் இருந்ததற்கு இன்னொரு காரணம் அவர் மிகவும் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவை உணர்வுடனும் பேசும் ஆற்றல் கொண்டிருந்ததார்.

“இந்த உலகம் வியப்புகளால் நிறைந்தது. சிலரிடம் நீண்ட நாட்கள் நட்புடன் வாழ்வீர்கள் ஆனால் அப்படி வாழும் பொருட்டு, உங்கள் ஆன்மாவிலிருந்து ஒருபோதும் வெளிப்படையாக அவரிடம் பேசிவிடக்கூடாது; அதே வேளை சிலரை அப்போதுதான் சந்தித்திருப்போம். ஆனால் அவர்களைப் பார்த்தவுடனேயே அவரிடம் நாமோ நம்மிடம் அவரோ  நம்முடைய ரகசியங்களைக்  கொட்டித் தீர்த்துவிடத் தோன்றும். இப்படித்தான் நான் எப்படி என் புதிய நண்பரின் நம்பிக்கையைப் பெற்றேன் என இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. எந்த மனத்தடையும் இல்லாமல் அவர் தன் வாழ்வில் நடந்த ஓர் அபூர்வ சம்பவத்தைச் சொல்லத் தொடங்கினார். டாக்டரின் வாயிலிருந்து வந்த அதே வார்த்தைகளால் இப்போது அச்சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள்.”

இப்படித்தான் மிகவும் சோர்வான அந்தரங்கத் தொணியில் அவர் சொல்லத் தொடங்கினார், “உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,” மிகை கலவாத சொற்களால் மீண்டும், “அந்த நீதிபதியை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர் பெயர் மைலோ… பாவல் லுக்கிச், கண்டிப்பாய் உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்காது.” அவர் குரலைக் கனைத்துச் சரிசெய்துகொண்டு கண்களையும் லேசாக கசக்கிக்கொண்டார். “நல்லது… அது நிகழ்ந்தது… பிழையின்றி  மிகச்சரியாக…. சொல்வதென்றால், லெண்டில் பனி உருகும் ஒரு நாளில். நீதிபதியின் வீட்டில் அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த நீதிபதி நல்ல மனிதர். அவர் சீட்டாட்டத்தில் விருப்பமுள்ளவர்.” திடீரென, (டாக்டருக்கு இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தப் பிடிக்கும்) அங்கிருந்தவர்கள், “ஒரு வீட்டுப் பணியாள் உன்னைத் தேடி வந்திருக்கிறான்,” என்று என்னிடம் சொன்னார்கள்.

“அவனுக்கு என்ன வேண்டும்,” என நான் கேட்டேன்.

“அவன்  ஒரு துண்டுச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறான்,  அது ஒரு நோயாளி கொடுத்தனுப்பியதாய் இருக்கவேண்டும்,” என்றார்கள்.

“அதைக் கொடுங்கள்,” என்று நான் கேட்டு வாங்கினேன்.

“ஆம் ஒரு நோயாளியிடமிருந்துதான். நல்லதுதான்… உங்களுக்குத் தெரியும், அதுதான் எங்கள் ஜீவாதாரமென்று. ஆனால் ஒரு விதவை இதனை எழுதியிருக்கிறார். என் மகள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். நீங்கள் உடனடியாக வரவேண்டும்,” என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தது, “உங்களுக்காகக் குதிரை வண்டியை அனுப்பியுள்ளேன்,” என்றும் எழுதியிருக்கிறார். “அதெல்லாம் சரிதான், ஆனால் அவள் வீடு இங்கிருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கிறது. நள்ளிரவு நேரம் வேறு, அந்த இடத்தை நோக்கிச் செல்லும் சாலை கரடுமுரடானது… அவள் பரம ஏழை… எனவே  இரண்டு ரூபில்சைக் கூட எதிர்பார்க்கமுடியாது. அந்தச் சிறிய தொகைகூட அவர்களுக்குப் பெரும் பிரச்சனைதான். ஒருகால் தடிமனான ஒரு துணிச் சுருளையோ அல்லது ஒரு சிறிய மூட்டை ஓட்ஸோசையோ கூட, சிகிச்சைக்கான கட்டணமாகக் கொடுக்க வாய்ப்புண்டு! எது எப்படி இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாகக் கடமையென்ற ஒன்றிருக்கிறதல்லவா? அவள் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. நான் என் சீட்டுத் தாள்களை அந்த உல்லாச அமைப்பின்  சக உறுப்பினரான கல்லோப்பனிடம் ஒப்படைத்துவிட்டு, என் இல்லம் விரைந்தேன்.

“வீட்டு வாசலில் அந்த விவசாயி அனுப்பிய குதிரை வண்டி காத்திருந்தது. குதிரைகள் நன்றாகப் பருத்திருந்தன. அதன் உடல் தடித்த உரோமத்தால் போர்த்தப்பட்டிருந்தது. குதிரை வண்டி ஓட்டுநன் என்னைக் கண்டதும், தன் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினான். கண்டிப்பாக இதை அனுப்பியவர் வசதியானவளாக இருக்க முடியாது. நீங்கள் சிரிக்கிறீர்கள். என்னைப்போன்ற ஏழை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். வண்டிக்காரன் ஒரு இளவரசனைப் போல பாவனை செய்து, நம்மைக் கண்டதும் தொப்பியைக் கழற்றாமல், தன் தாடிக்குள் ஏளனப் பார்வையை ஒளித்துவைத்து, சாட்டையைச் சொடுக்கினால், கண்டிப்பாய் ஆறு ரூபில்ஸாவது  கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் இவர்களிடம் பெரிதாய் எதிர்பார்க்க முடியாது! இருந்தால் என்ன? கடமை முன்னே நிற்கிறதே! முக்கியமான மருந்துகளை அரக்கப் பரக்க எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாரானேன்.”

அங்குப் போய்ச் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

சாலையின் நிலை கொடுமையாக இருந்தது. ஆற்றில் நீர் நிறைந்து, ஆங்காங்கே பனி மூடி, ஓடைகள் குறுக்கே ஓடி,  அணைகள் உடைந்து, இப்படி எண்ணற்ற தடைகள்.  இவற்றையெல்லாம் சிரமப்பட்டுக் கடந்து கடைசியில் எப்படியோ அங்குப் போய்ச் சேர்ந்தேன். குளிர்காலத்துக்கென கட்டப்பட்ட கூரை கொண்ட சிறிய வீடு. சன்னமான வெளிச்சம் சிறிய சன்னலின் வழியே பரவிக் கொண்டிருந்தது. அவர்கள் எனக்காகக் காத்திருந்ததற்கான அடையாளமாகச் சன்னல் திறந்தேவிடப்பட்டிருந்தது.  தொப்பியணிந்த,  பணிவு நிறைந்த ஒரு முதிய மாது என்னை வரவேற்றாள்.

“அவளைக் காப்பாற்றுங்கள், அவள் இறந்துகொண்டிருக்கிறாள்!” அவள் கண்களில் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது.       

“கவலை படாதீர்கள் மேடம், பிரார்த்தியுங்கள்… இயேசு கருணை காட்டுவார், அவள் எங்கே?” என்றேன்.

“இப்படி வாருங்கள்” என்று சொல்லி அவர் முன்னே நடக்க நான் அவளைத் தொடர்ந்து நடந்தேன். தூய்மையான ஒரு சிறிய அறை அது. ஒரு மூலையில் கொஞ்சமாய் ஒளி உமிழும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இருபது வயதுக்குள்ளிருக்கும் ஒரு பெண் பலமாய் மூச்செறிந்தவாறு படுத்துக்கிடந்தாள். கடுமையான காய்ச்சலால் அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய இரண்டு சகோதரிகள் அச்சத்தால் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தனர்.

“நேற்று நன்றாகத்தான் இருந்தாள். எப்போதும் போல சாப்பிட்டாள்.  காலையில் தலைவலி என்றாள், இன்று மாலையில்தான் திடீரென ஜுரம் கண்டு படுத்துவிட்டாள்.”

நான் மீண்டும் சொன்னேன், “கர்த்தரை பிரார்த்தியுங்கள்.”

நோயாளியைப் பற்றிய என் முன்முடிவு சரியாகத்தான் இருந்தது. அவள் மோசமான நிலையில்தான் இருந்தாள்.

நான் அவளை நெருங்கி தொட்டுப் பார்த்தேன். உடல் நெருப்பாய்க் கொதித்தது. நெற்றியில் காய்ச்சலுக்கான முஸ்தாட் பிளாஸ்டர் ஒட்டவேண்டும் என்றேன். உட்கொள்வதற்கு மருந்தும் எழுதிக் கொடுத்தேன். அப்போதுதான் அவளை அணுக்கமாகப் பார்த்தேன். நான் என் வாழ்நாளில் பார்த்திராத பேரழகியாக இருந்தாள். பார்த்த அக்கணத்திலேயே அவள் அழகில் மயங்கிவிட்டேன். அவளின் முகம்  தேவதையின் முகத்தை ஒத்திருந்தது. கவர்ச்சியான கண்கள். நான் தொட்டதும் அவள் உடல் கொஞ்சம் அசைந்தது. கண் விழித்துப் பார்த்தாள். உடல் லேசாக வியர்க்கத் தொடங்கியது. சுற்றியும் நோட்டமிட்டாள். மெல்ல புன்னகைத்தாள். உதடுகளில் வெடிப்புகள் இருந்தன. ஆதரவுக்காகக் கைகளை நீட்டினாள். அவளின் சகோதரிகள் அவள் பக்கம் குனிந்து, “எப்படி இருக்கிறது இப்போது?” என்று விசாரித்தனர். “பரவாயில்லை” என்று சொல்லி மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். நான் உன்னிப்பாய்ப் பார்த்தேன். அவள் உறங்கிவிட்டிருந்தாள்.

“நல்லது, அவளைத் தொந்தரவு செய்யவேண்டாம். நன்றாக ஓய்வெடுக்கட்டும்,”  என்று சொல்லிவிட்டு ஓசையில்லாமல் அவ்விடத்திலிருந்து நகர்ந்து வெளியேறினோம். அவளின் உடனடி உதவிக்குப் வீட்டுப் பணிப்பெண் மட்டும் உடனிருந்தாள்.

வரவேற்பு கூடத்தில் ஒரு மேசை மேல் தேநீர் குடுவை இருந்தது. ஒரு புட்டி ரம்மும் இருந்தது. வேலை நேரத்தில் மது அருந்துவது எங்கள் பணிக்கு ஒழுங்கல்ல! எனக்கு ஒரு கப் டீ கொடுத்தார்கள். இரவில் அங்கேயே தங்கச் சொன்னார்கள். நான் ஒத்துக்கொண்டேன். இந்த அகால நேரத்தில், நான் வேறெங்குதான் போக முடியும்?

வயதான தாய்க்காரி விசும்பிக் கொண்டிருந்தாள். “ஏன் அழுகிறீர்கள்? தைரியமாக இருங்கள். அவள் பிழைத்துக்கொள்வாள். கவலை படவேண்டாம். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. பாருங்கள், மணி நல்லிரவைத்தாண்டி இரண்டாகிவிட்டது. உதவி தேவைப்பட்டால் என்னை எழுப்ப ஆள் அனுப்பத் தயங்காதீர்கள்.”

“சரி… கண்டிப்பாக…” என்றாள்.

கிழவி அங்கிருந்து கிளம்பினாள். சகோதரிகளும் அவரவர் அறைக்குச் செல்லும் முன்னர், எனக்கு வரவேற்பு கூடத்திலேயே படுக்கையைத் தயார்செய்தனர். என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு மிகுந்த களைப்பாய் இருந்தது மட்டுமல்ல, நோயாளிப்பெண் என் நினைவுக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தாள். அந்த நினைவிலிருந்து முற்றாய் நீங்கிவிட முடியாத நிலையில், நான் சட்டென்று எழுந்தேன். அவளிடம் ஏதும் மாற்றமிருக்கிறதா என்று பார்க்கத் தோன்றியது. அவள் அடுத்த அறையில்தான் இருந்தாள். அவள் அறைக்கு ஓசையில்லாமல் நடந்தேன். என் இதயம் துடிப்பது எனக்குக் கேட்டது. பணியாள் வாய் பிளந்து குறட்டைவிட்டவாறு தூங்கிக்கொண்டிருந்தாள், நோயாளிப் பெண்ணின் முகம் என் பக்கம் ஒருக்கலித்திருந்தது. படுக்கையின் பக்கவாட்டில் அவளின் கைகள் விரிந்திருந்தன. பாவம் அவள்! நான் அருகில் போனேன்… அவள் சட்டென்று விழிப்புத் தட்டி…”யாரது?… யாரது?” என்றாள் அதிர்ச்சியில் மிரண்டு.

“நான் உங்கள் டாக்டர்… உங்கள் நிலையைக் கண்டறிய வந்தேன். பதறவேண்டாம் மேடம். அமைதி அமைதி…”

“ஓ டாக்டரா….?”

“உங்கள் அம்மாதான் பட்டணத்திலிருந்து என்னை வரச்சொல்லியிருந்தாள். உங்களைக் குணப்படுத்த வந்திருக்கிறேன். நீங்கள் நன்றாகத் தூங்கவேண்டும். கடவுளின் கிருபையால் இன்னும் இரண்டொரு நாளில் நீங்கள் எழுந்து நடப்பீர்கள்.”

“ஆமாம் டாக்டர்… தயவு செய்து என்னைக் காப்பாற்றிவிடுங்கள். நான் சாக விரும்பவில்லை. தயவு பண்ணுங்கள் டாக்டர்… நான் சாகக்கூடாது”

“இப்படியெல்லாம் பேசாதீர்கள்…கர்த்தர் துணையிருக்கிறார்.”

நான் தொட்டுப்பார்த்தேன். அவளுக்குக் காய்ச்சல் தணியவில்லை. அவளுடைய நாடித்துடிப்பைத் தொட்டுணர்ந்தேன். ஆம் காய்ச்சல் சற்றும் குறையவில்லை. என்னை ஏறிட்டுப் பார்த்தாள். பின்னர் என் கையைப் பற்றினாள். “நான் ஏன் செத்துவிடக்கூடாது என்று உங்களுக்கு விளக்கவேண்டும். நீங்களும் நானும் மட்டுமே இங்கே இருக்கிறோம். நான் கூறுவதை நீங்கள் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது… சொல்கிறேன் கேளுங்கள்.” என்றாள்.

அவள் சொல்வதைக் கேட்கக் குனிந்தேன். அவளின் தலை முடி என் செவிமடல்களை ஸ்பரிசித்தது. அவள் கிசு கிசுத்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கடுமையான ஜுரத்தில் பிணாத்துகிறாள் என்று பட்டது. அவள் கிசுகிசுத்துக்கொண்டே இருந்தாள். அது ருஷ்ய மொழியல்ல என்று மட்டும் புரிந்தது. சொல்லிமுடித்துவிட்டு கடைசியில் தலையைத் தலையணையோடு சாய்த்துப் படுத்தாள். சுட்டு விரலைக் காட்டி மீண்டும் எச்சரித்தாள், “ நினைவிருக்கட்டும் டாக்டர்… எவரிடமும்!” நான் அவளை அமைதிப்படுத்தினேன். குடிக்க நீர் கொடுத்தேன். பணியாளை எழுப்பி கவனிக்கச்சொல்லிவிட்டு என் அறைக்குத் திரும்பினேன்.

இந்த இடத்தில் டாக்டர் பெருமூச்செறிந்து, தொடர்ந்து சொல்வதற்கான ஆற்றலை வரவழைத்துக்கொண்டார். ஆனால் அந்தச் சம்பவத்தின் பாதிப்பு அவரைச் சற்றே தடுமாறவைத்தது போலும்.

“எவ்வாறாயினும்…” என்று மீண்டும் தொடர்ந்தார். “மறுநாள் என் எதிர்பார்ப்பபையும் மீறி அவள் நிலை மேலும் மோசமடைந்துகொண்டிருந்தது. நான் அங்கேயே இருக்க முடிவெடுத்தேன்.  என் பிற நோயாளிகளையும் நான் போய்ப் பார்க்கவேண்டியிருந்தது, அவர்களையும் நிராகரிக்க முடியாதுதான், போய்ப் பார்க்காமல் இருப்பது தவறுதான், ஆனாலும் அவளின் உடல் நிலை என் முழு கவனத்தையும் கோர நான் அங்கேயே தங்கி சிகிட்சை செய்ய முடிவெடுத்தேன். அது மட்டுமல்ல, அவள்பால் நான் தன்னிச்சையாக ஈர்க்கபட்டிருந்தேன். அவளின் குடும்பத்தாரை எனக்கு ரொம்ப பிடித்திருந்ததும் அவளைப் பிடித்துப்போனதற்கு ஒரு காரணம்தான். அவர்கள் ஏழ்மையில் இருந்தாலும் நல்ல பண்புள்ளவர்களாகவும், மரியாதை தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவளின் தந்தை நல்ல கல்வி கற்றவராக இருந்திருக்கிறார். அவர் ஏழ்மையில்தான் இறந்திருக்கிறார். இறப்பதற்கு முன்னர் தன் பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்கியிருக்கிறார். அவருடைய சேமிப்பில் நிறைய நூல்கள் இருந்தன. இந்தப் பின்புலத்தையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அக்குடும்பத்தின் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டானது.

இதற்கிடையே, நான் கடந்து வந்த சாலை மிக மோசமாக சேதமுற்றது. எல்லா வகை போக்குவரத்தும் நின்று போனது. ஆகையால் பட்டணத்திலிருந்து அவசரத்துக்கு மருந்து கூட கிடைக்காத நிலை உருவானது. நாட்கள் கடந்துகொண்டுதான் இருந்தனவே ஒழிய அவள் குணமாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றே கருதவேண்டியிருந்தது.

டாக்டர் பெருமூச்செறிந்து, சற்றுத் திணறி, இருமி, எச்சிலை விழுங்கி, “எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை…” என்று தொடங்கினார்.

“சரி, நான் நேரடியாகவே தெரிவிக்கிறேன்… நோயாளி… எப்படிச் சொல்வது…. என்னைக் காதலிக்கிறாள்… அல்லது… அவள் என்னை விரும்பவில்லை! எப்படிச் சொல்வது? டாக்டர் சிவந்த முகத்தோடு தலை தாழ்த்தி இல்லை! உடனே மறு மொழி உகுத்தார். நான்தான் காதலில் விழுந்துவிட்டேன். ஒருவன் தன்னை மிகைப்படுத்திக்கொண்டு சொல்வது சரியில்லை. அவள் கல்வி கற்றவள், கெட்டிக்காரி. படித்தவள். நானோ கற்ற லத்தின் மொழியைக் கூட மறந்துவிட்டவன், முன்னே உள்ள கண்ணாடியைப் பார்த்து என் தோற்றமும்… நானே புகழ்ந்துகொள்ளக் கூடாது… கடவுள் என்னையும் முட்டாளாகப் படைக்கவில்லை, நான் சிறந்தது இருக்க மோசமானதைத் தேர்ந்தெடுப்பவனல்ல… எனக்குச் சிறந்ததைத்  தேர்வு செய்யத் தெரியும்.. என்னால் தெளிவாக முடிவெடுக்கவும் முடியும். அலெக்ஸாந்திரா எண்டிரியெனாவ்… அதுதானே அவள் பெயர். என்னை விரும்பவில்லை. ஆனால் என் மீது ஒரு நட்பார்ந்த உணர்வு. ஒரு சாய்வு. ஒர் மரியாதை அல்லது அதுபோல எதோ ஒன்று. அவள் மீதான என் உணர்வைத் தப்பாக எடுத்துக் கொண்டாளோ. என்னவோ அவளுடைய மனோபாவம்… நான் சொல்வதிலிருந்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால்…,” என்று உளறிய டாக்டர் தான் மூச்சுவிடாமல் உதிர்த்த குழப்பமான வார்த்தைகளை ஒரு சங்கடமான சுய எள்ளல் உணர்வால், “நான் சொன்னதை உங்களால் கண்டிப்பாக முழுமையாக புரிந்துகொண்டிருக்க முடியாது… ஆனாலும் உங்கள் அனுமதியுடன் நான் மீண்டும் கோர்வையாகச் சொல்ல முயற்சி செய்கிறேன்.”

டாக்டர் ஒரு கப் தேநீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார். அமைதியான குரலில் தொடர்ந்தார்.

“நல்லது… அவளுக்கு நோய் கணத்துக்கு கணம்  மோசமாகிக்கொண்டிருக்கிறது. நீங்கள் மருத்துவரல்ல,  மதிப்புமிக்கவரே! அதனால் அவருக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று உங்களால் அனுமானிக்க முடியாது. நோயாளியைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு எனக்கு நம்பிக்கை கைவிட்டுப் போய்விட்டது.”

தன் திறமைகளின் மீது அவருக்கே நம்பிக்கையற்றுவிட்டது! அவரைத் திடீரென அச்சம் சூழ்ந்துகொள்கிறது. அதனை வார்த்தைகளால் விளக்கமுடியாது. அவள் மீது விருப்பம் கொண்ட பின்னர் அவருக்குத் தெரிந்த  எல்லாமே மறந்து போய்விடுகிறது. அதனால் நோயாளி அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகிறார். அதனை உணர்ந்த பிறரும் நீ எவ்வளவு குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறார் என்று தெரிந்துகொள்கிறார்கள். உன்னைச் சந்தேகத்துடன் கவனித்தவர்கள் நோய்க்கான அறிகுறிகள் இன்னின்ன என்று ஒரு  தயக்கத்துடனே உன்னிடம் தாழ்ந்த குரலில் சொல்கிறார்கள். உன்னைச் சந்தேகத்துடனும் பார்க்கிறார்கள். ஹா அந்த நிலை கேவலமானது. நோயின் அறிகுறிகளைச் சரியாகக் கண்டுப்பிடிப்பவர்க்கு இந்த நோயைக் குணமாக்கும் உபாயம் கண்டிப்பாய்த் தெரியும் அல்லவா? அல்லது ஏதாவது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. உனக்குத் தயக்கம் உண்டாகிறது. நீ முயல வேண்டும்… இல்லை அதுகூட இல்லை! சரியான நேரத்தில் சரியான மருந்தை நோயாளிக்கு நீ கொடுக்கவில்லை! குழப்பத்தில் ஒரு சரியான மருத்துவ முறையை நீ கையாளவில்லை! ஒருமுறை ஒரு மருந்தைக் கொடுக்கிறாய் பின்னர் உடனே மருந்தை மாற்றுகிறாய். சில சமயம் சரியான மருந்துக்காக மருத்துவ நூல்களைத் திறந்து பார்க்கிறாய். இன்ன மருந்துதான் என்று திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளாமல், ஏதோ ஒரு மருந்தைக் கொடுத்துப் பார்க்கிறாய், விதிப்படி நடக்கட்டும் என்று நினைக்கிறாய். வேறு டாக்டராய் இருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்க முடியும்! நாம் கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும் என்கிறாய். நான் தனியனாய் ஒரு முடிவுக்கு வர முடியாது என்கிறாய்! இது போன்ற தருணங்களில் நீ எப்பேற்பட்ட மடையனாக மாறிவிடுகிறாய்! நீ இதற்கான மருந்தைக் கொடுத்து குணப்படுத்தத் திணறி……..பின்னர் என்னால் முடியாது என்று நம்பிக்கை இழந்து,  குழம்பியது உனக்கு எவ்வளவு கொடுமை மிகுந்த தருணமாக இருந்திருக்கும்! அதைவிடக் கொடுமை ஒரு குறிப்பிட்ட மருந்தைக் கொடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாமல் தவித்தது!”

“நல்லது, அவர்கள் என் மீது வைத்திருந்த குருட்டு நம்பிக்கை காரணமாக அலெக்ஸென்றா அண்டிரியானவ் ஆபத்தான நிலையில் இருப்பதைச் சற்றே மறந்திருக்கிறார்கள். நானும் அவள் தேறி விடுவாள் என்றே சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குள்ளே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்தவனாய் இருந்தேன். அது போதாதென்று மருந்து வாங்கிவரச் சென்ற குதிரை வண்டிக்காரன் சில நாட்களாகியும், திரும்பிவராததற்குச் சாலை மிக மோசமான நிலையில் இருந்ததும் என் நம்பிக்கை சரிந்ததற்குக் காரணம். நான் நோயாளியின் அறையை விட்டு அகன்றதும் இல்லை. என்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டு நான் அவரிடமிருந்து விலகிச் செல்லவும் முடியவில்லை. நான் அவளுக்கு நகைச்சுவை மிகுந்த கதைகளைச் சொல்லிக்கொண்டும் நான் ஒருவனாக சீட்டு ஆடிக்கொண்டும் இருந்தேன். இரவில் அவளருகில் இருந்து கவனித்துக்கொண்டும் இருந்தேன். அவள் கண்களில் கண்ணீர் வழிய எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தாள். அவள் எனக்கு நன்றி சொல்லவேண்டிய அவசியமில்லை என எனக்குள் நான் நினைத்துக் கொண்டேன். நான் வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறேன் நான் அவளை மனதார விரும்புகிறேன் அதனை நான் மறைத்துப் பயனில்லை…. நான் என் நோயாளியைக் காதலிக்கிறேன்.

அலெக்ஸென்றா எண்டிரியானாவும் என்னை விரும்பத் தொடங்கிவிட்டாள்.  அவள் அறையில் என்னைத் தவிற வேறெவரும் இருப்பதை அவள் விரும்பவில்லை. என்னோடு உரையாடவும் துவங்கிவிட்டாள். என்னைக் கேள்வியும் கேட்பாள். ‘நான் எங்கே கல்வி கற்றேன்? நான் எப்படி இருந்தேன்? எனக்கு அணுக்கமானவர்கள் யார் யார்? நான் யாரை அடிக்கடி சந்திப்பேன்?’   அவள் அதிகம் பேசக்கூடாது என்று நான் நினைப்பேன், ஆனால் அவளைக் கட்டாயப்படுத்த எனக்கு மனம் வரவில்லை! சில சமயம் என் இரு கைகளையும் என் தலையில் வைத்துக்கொண்டு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னையே கேட்டு  நொந்துகொள்வேன். என் கைகளைத் தலையிலிருந்து அகற்றி  மிருதுவாய்ப் பற்றிக்கொண்டு நெடுநேரம் பார்வையை அகற்றாமல் இருப்பாள். அவள் கைகளின் காய்ச்சலின் தகிப்பு இருக்கும், அந்தத் தொடுதலில் மென்மையையும் உணர்வேன். 

“ஆமாம், நீங்கள் நல்லவர், கனிவானவர், எங்கள் அண்டைவீட்டாரைப்போல் அல்ல…கண்டிப்பாய் அவர்கள் போலல்ல, இதுநாள் வரை உங்களை எப்படி எனக்கு அறிமுகமில்லாமல் போயிற்று?”

“அலெக்ஸென்றா எண்டிரியானாவ்  அமைதியாய் இருங்கள்,” நான் சொன்னேன்.

“நான் எவ்வாறு உங்கள் அன்பைப் பெற்றேன் என்று தெரியவில்லை…..”

“நான் என் நம்பிக்கையைக் கைவிடவில்லை. நீ கண்டிப்பாய்க் குணமடைவாய்… பொறுமையாய் இரு… நம்பு….. நீ இந்த நோயிலிருந்து மீண்டு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவாய்.”

“இந்தத் தருணத்தில், நான் கண்டிப்பாய் ஒன்றைச் சொல்லவேண்டும்,” குனிந்து தன் இமைகளை உயர்த்தியவாறு, டாக்டர் தொடர்ந்தார். ”அவர்கள் அண்டைவீட்டாரோடு அணுக்கமான தொடர்பை வைத்துகொள்ளவில்லை. ஏனெனில் அவர்களிடையே உயர்வு தாழ்வென்ற வர்க்க பேதம் இருந்தது. அவர்கள்  தற்பெருமை கொண்டவர்கள் வேறு. இதனால் இரு குடும்பங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருந்துவந்திருக்கிறது. அவர்கள் பணக்காரர்கள் என்பதால் இந்த விலக்கம் உண்டாகியிருக்கிறது.”

இக்குடும்பமோ  நற்பண்புகளை எந்த நிபந்தனையுமின்றி தீவிரமாகப் பேணும் குடும்பம். எனவே நான் கொடுத்தால் மட்டுமே மருந்தை உட்கொள்வாள். நிமிர்ந்து உட்கார நான் அவளுக்கு உதவுவேன், மருந்தை எடுத்துக்கொண்டதும் என் மீது கனிவான பார்வையை வீசுவாள். அப்போது என் இதயம் மெழுகாய் உருகும். அதே வேளையில் அவளின் உடல் நிலை  நொடிக்கு நொடி மோசமாகிக்கொண்டிருந்தது. அவள் இறந்துவிடுவாள். அவள் இறப்பதை நானே உள்ளூற விரும்பினேன். அவள் இறக்கத்தான் வேண்டும். நம்புங்கள். விரைவில் நான் அவள் கல்லறைக்குக்கூட போவேன். அத்தருணத்தில்  என் கண்களைப் பார்த்த அவளின் தாயும் சகோதரிகளும் என் மீதான நம்பிக்கையை இழந்துகொண்டிருந்தார்கள் எனத் தெரிந்தது. “ஆமாம்… யார் இவள்? ஓ….. சரி … சரி… சரி… ஆமாம்!’ நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.”

“ஓர் இரவில்…  நான் என் நோயாளியின் அருகே அமர்ந்திருக்கிறேன். வீட்டுப் பணிப்பெண் சற்றுத் தள்ளி உட்கார்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள். அவளிடமிருந்து முரட்டுக் குறட்டை ஒலி வெளிப்பட்டது. அவளை நான் குற்றஞ்சொல்ல மாட்டேன். பாவம், நாள் முழுதும் இடைவிடாமல் வேலைசெய்து களைத்துப் போய்க்கிடக்கிறாள்.

அன்று மாலையில் அலேக்ஸான்றா எண்டிரியாவ்னாவின் உடல் நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குப் போய்விட்டது. உடம்பு காய்ச்சலால் கொதித்தது. உறங்க முடியாமல் நெடுநேரம் பிணாத்திக்கொண்டும் புரண்டு கொண்டும் இருந்தாள். கடைசியாக தூக்கம் இழுக்க அசையாமல் சற்று நேரம்தான் நிம்மதியாக உறங்கினாள்.

கர்த்தரின் படத்தின் முன்னால் ஒரு மெழுகு விளக்கு மெல்ல ஒளி வீசிக்கொண்டே இருந்தது. என் கைகளை மடக்கி அவளருகே அமர்ந்திருந்தேன். என் கண்கள் ஒரு நிமிடம் கிறங்கி இழுத்த தருணம் ஒரு கரம் என்னைத் தொட்டது. நான் நிலைகுலைந்து சற்றே சுதாரித்து சமநிலைக்கு வந்தபோது… கடவுளே, அலெக்ஸாண்றாதான் மென்மையாக என்னைத் தட்டியிருக்கிறாள். என்னை உன்னிப்பாய்ப் பார்த்து… அவளின் உதடுகள் பிரிந்து, கன்னங்கள் சிவக்க, எதையோ பேசத் துடிப்பதைக் கவனித்தேன்.

“டாக்டர்! நான் இறந்துவிடுவேனா… உங்கள் வாயால் நான் பிழைத்துவிடுவேன் என்று சொல்லாதீர்கள்! என் உண்மை நிலைமையை மறைக்காதீர்கள்.” அவள் நெஞ்சு பதறியது. மூச்சு உதறியது. “நான் உறுதியாக இறந்துவிடுவேன் என்று தெரிந்தால் அதனை நானே சொல்லிவிடுவேன் டாக்டர்…” அலெக்ஸாண்றா எண்டிரியெனாவ் கெஞ்சினாள். “என்னால் தூங்கவே முடியவில்லை. நான் உங்களையே வெகுநேரம் கண்மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கடவுளே… நீங்கள் மிகவும் நல்லவர். உண்மையானவர். நான் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள்…எனக்கு நீங்கள் சொல்வது முக்கியமான ஒன்று என்று கருதினால்… இறைவனின் சாட்சியாக தயவு செய்து சொல்லுங்கள். நான் ஆபத்தான நிலையில் இருக்கிறேனா?”

“நான் எப்படிச் சொல்வது அலெக்ஸாண்ட்ரா எண்றியானவ்… பிராத்தனை செய்யுங்கள்… இயேசுவிடம் மன்றாடுங்கள்… நான் எதையும் மறைக்க விரும்பவில்லை!… நீங்கள் உண்மையில் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறீர்கள்… ஆனால் கர்த்தர் கருணைமிக்கவர்.”

“நான் செத்து விடுவேன்… நான் செத்துவிடுவேன்…”

அவள்  மகிழ்ச்சியாக இருப்பது போல தென்பட்டாள். அவள் முகம் ஒளி வீசியது. இந்தத் திடீர் மாற்றத்தால் நான் மிகுந்த கவனமானேன். ”அஞ்ச வேண்டாம்… அஞ்ச வேண்டாம்… நான் இறப்பதற்குப் பயப்படவில்லை! கொஞ்சமும் பயப்படவில்லை!” அவள் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். தன் முட்டிக்கைகளை ஊன்றி சற்று நிமிர்ந்து சாய்ந்து படுத்துக்கொண்டாள். “நான் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் நல்லவர்… என் நெஞ்சைத்தொட்டுச் சொல்கிறேன்… நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர் என்பதால் நான் உங்களை விரும்புகிறேன்.”

எனக்குப் பேய் பிடித்துவிட்டது போல அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். “நான் சொல்வது கேட்கிறதா? நான் உங்களை நேசிக்கிறேன்!” “அலெக்சாண்றா எண்டிரியானவ் நான் இதற்கு  எப்படித் தகுதியானவனாவேன்?” “இல்லை உங்களால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை!” என்று சொல்லிவிட்டு தன் கைகளை நீட்டி என் தலையைத் தன்பக்கம் அணைத்து முத்தமிட்டாள். நம்புங்கள், நான் உரக்கக் கத்திவிட்டேன். நான் மண்டியிட்டு அமர்ந்து, தலையணையால் என்னைப் புதைத்துக்கொண்டேன். அவள் ஏதும் பேசவில்லை. அவளின் விரல்கள் என் தலைமுடிகளுக்கிடையே நடுங்கிக்கொண்டிருந்தன. எனக்கு நன்றாகக் கேட்டது அவள் விசும்புவது. நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் அவளை ஆசுவாசபடுத்த முயன்றேன். “நீ மீண்டுவிடுவாய்…” நான் சொன்னேன். “அலெக்ஸான்றா எண்டிரியானவ், நான் உனக்கு நன்றி சொல்கிறேன்… என்னை நம்பு. நம்மை நாமே சாந்தப்படுத்திக்கொள்வோம்.”

“போதும்… போதும்…” அவள் உறுதியாகச் சொன்னாள். “பரவாயில்லை….அவர்கள் விழித்தெழட்டும்… உள்ளே வரட்டும்… நான் மரணத் தருவாயில் இருக்கிறேன். அஞ்ச என்ன இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? என்னை நிமிர்ந்து பாருங்கள்… ஓ நீங்கள் என்னை நேசிக்கவில்லை போலும்… நான் தவறாக நினைத்துவிட்டேன் போலும்… அவ்வாறென்றால் என்னை மன்னித்துவிடுங்கள்…”

“அலெக்ஸாண்டறா எண்டிரியானவ், நீ என்ன சொல்கிறாய்! நான் உன்னை விரும்புகிறேன்” அவள் தன் பார்வையை விலக்காமல் என்னை நோக்கியபடி இருந்தாள். பின்னர் கைகளை அகல விரித்தாள். “என்னை அணைத்துக்கொள்ளுங்கள்,” என்றாள். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், என்னால் அதனை எப்படி எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை அந்த இரவில் நான் கிட்டதட்ட பைத்தியமானேன். என் நோயாளி தன்னையே கொன்றுகொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தேன். அவள் அவளாக இல்லை. தான் இறக்கப்போகிறேன் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றாமல் இருந்திருந்தால் அவள் என்னைப்பற்றி நினைத்துபார்த்திருக்கக்கூட வாய்ப்பே இல்லை. நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள், காதல் என்பது என்னவென்றே உணராத இந்த இருபது வயதில் அவள் இறப்பது எத்துணை கொடுமை? இந்தப் பருவ வயதுதான் அவளை என் பக்கம் ஈர்த்திருக்கிறது.  இப்போது புரிகிறதா உங்களுக்கு? அவள் என்னைக் கைகளால் பற்றிக்கொண்டு  போகவிடாமல் செய்தாள். அவள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவன். “அலேக்ஸாண்றா எண்டிரியானவ் என் மீது நீ கருணை காட்டவேண்டும். உன் மீது நீயும் கருணை காட்டிக்கொள்ளவேண்டும்!” என்று  நான் சொன்னேன்.

“ஏன்?” அவ்வாறு நினைப்பதற்கு என்ன இருக்கிறது?” அவள் கேட்டாள். “உங்களுக்குத் தெரியும் என் மரணம் நிச்சயம் என்று.” இதனையே அவள் திரும்ப திரும்ப சொன்னாள். “நான் மறு உயிர்பெற்றுத் திரும்பினால்,  இளப்பெண்ணாக இருக்க வெட்கப்பட வேண்டும்… கண்டிப்பாய் வெட்கப்பட வேண்டும். “இப்போது அப்படி என்ன நடந்துவிட்டது? நீ இறந்துவிடுவாய் என்று உன்னிடம் யார் சொன்னது?”

“என்னிடம் பொய் சொல்லாதீர்கள். என்னை ஏமாற்ற நினைக்காதீர்கள். உங்கள் முகத்தில் பொய்  உணர்வே தென்படவில்லை!”

”உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. நீ மீண்டு விடுவாய் அலெக்ஸாண்றா எண்டிரியானவ், நான் உன்னைக் குணப்படுத்திவிடுவேன், உன் அம்மாவின் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. நாம் கண்டிப்பாய் ஒன்று சேருவோம், எல்லோரும் முன்புபோல மகிழ்ச்சியாக வாழ்வோம்”.

“இல்லை! நான் உங்கள் வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறேன்.  நான் இறந்துவிடுவேன். நீங்கள் உறுதியளித்தீர்கள். நீங்கள் சொன்னீர்கள்.”

“அப்படிச் சொன்னது எனக்கு மிகக்கொடுமையாக இருந்தது… பல காரணங்களால் கொடுமையானது. அல்பமானது, சாதாரணமானது என நாம் கருதும்  விடயங்கள் சில சமயம் வலி மிகுந்ததாக மாறிவிடும். என்னைக் கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோணியிருக்கிறது. என் பெயர் என்ன என்று கேட்டாள். என் குடும்பப் பெயரை அல்ல என் பெயரை. ‘டிரிபோன்’ என்று அழைக்கப்படும் துர் அதிர்ஸ்டம் எனக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆமாம் உள்ளபடியே டிரிபோன் இவானிச். வீட்டில் எல்லோரும் என்னை டாக்டர் என்றே அழைக்கிறார்கள். அதற்காக என்ன செய்ய முடியும்?  “டிரிபோன் மேடம்.”

அவள் முகம் சுளித்து தலையை ஆட்டினாள். பிரெஞ்சில் எதுவோ சொன்னாள். எரிச்சலூட்டக்கூடிய சொல் அது. பின்னர் விருப்பமில்லாமல் சிரித்தாள். அந்த இரவு முழுதும் அவளோடு இவ்வாறே கழிந்தது. மறுநாள் விடிவதற்கு முன் அங்கிருந்து விலகினேன். எனக்குப் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

மறுநாள் தேநீர் முடிந்து அவள் அறைக்குச் சென்றேன். அது ஒரு காலை வேளை. கடவுளே, நான் அவளை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தாள். கல்லறையில் வைக்கப்பட்டிருக்கும் பிணம்கூட சற்றுத் தெளிவான முகம் கொண்டிருக்கும். என்னாள் புரிந்துகொள்ள முடியவில்லை… சத்தியமாய்ச் சொல்கிறேன் அறவே புரிந்துகொள்ள முடியவில்லை!  நான் எப்படி இந்த அனுபவத்தைக் கடந்து வந்தேன் என்று தெரியவில்லை! மூன்று பகல் மூன்று இரவுகள் ஒரு இக்கட்டான காலகட்டத்தைக் கடந்திருக்கிறேன். அவளுடனேயே   இருந்திருக்கிறேன். அந்த இரவு வேளைகளில் என்னிடம் என்னவெல்லாம் பேசினாள். குறிப்பாக அந்தக் கடைசி நாள் இரவு… நான் அவளருகில் அமர்ந்து, வேண்டிக்கொண்டே இருந்தேன்… இறைவா… அவளை உன்னோடு அழைத்துக்கொள், சீக்கிரம்… என்னையும் அவளோடு சேர்த்து…

அத்தருணத்தில் அவளின் வயதான அம்மா, சற்றும் எதிர்ப்பாராத வேளையில்  அறைக்குள் நுழைந்தாள். முதல் நாள் அந்தி வேளையில், “எனக்கு நம்பிக்கை இல்லை, அவள் மிக மோசமான நிலையில் இருக்கிறாள்,” என அவளிடம் நான் சொல்லியிருந்தேன், “நீங்கள் பாதிரியாருக்குச் சொல்லிவிடுங்கள்” என்றேன்.

அவளின் தாயைப் பார்த்ததும் நோயாளிப் பெண் சொன்னாள், “நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள்…எங்களைப் பாருங்கள்… நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் காதலைச் சொல்லிக்கொண்டோம்!”

“அவள் என்ன சொல்கிறாள், அவள் என்ன சொல்கிறாள் டாக்டர்?”

எனக்குள் கொந்தளிப்பாக இருந்தது.

”அவள் கனவு கண்டிருப்பாள்….. காய்ச்சலில் பிணத்துகிறாள்,” என்று நான் சொன்னேன்.

“ஹஷ் ஹஷ்… இப்போது நீங்கள் ஏன் மாற்றிச் சொல்கிறீர்கள்? நீங்கள் என்னிடம் வேறெதையோ  சொன்னீர்களே. என் மோதிரத்தை உங்களுக்கு அணிவித்தேனே! ஏன் பாசாங்கு செய்கிறீர்கள்? என் தாய் நல்லவள். அவள் புரிந்துணர்வு மிக்கவள், நான் மரணித்துக்கொண்டிருக்கிறேன். நான் பொய்சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் கரத்தை நீட்டுங்கள்…” நான் அதிர்ச்சியுடன் அறையை விட்டு உடனடியாக வெளியேறினேன். அந்த வயதான மாது இங்கே என்னதான் நடக்கிறது என்று குழம்பியிருக்கக்கூடும்.

“உனக்குச் சோர்வுதட்டும்… நான் இக்கதையை  மீண்டும் சொல்ல மாட்டேன். எனக்கே போரடிக்கிறது. ஆனாலும் மீண்டும் நினைவுகூர்கையில் இது வேதனையளிக்கும் சம்பவம்தான். அவள் மறுநாள் இறந்துவிட்டாள். அவளின் ஆன்மா சாந்தி பெறட்டும்.” டாக்டர் சொன்னார். இன்னொன்றையும் படபப்பாக  சொன்னார், “அவள் கடைசி மூச்சு விடுவதற்கு முன்னர் அவள் குடும்பத்தாரிடம் எங்களைத் தொந்தரவு செய்யாமல் தனியே விட்டுவிட்டு வெளியேறச் சொன்னாள்.”  

“என்னை மன்னியுங்கள்… என்னைத்தான் பழி சொல்லவேண்டும்… என் நோய் அப்படி என்னை ஆட்டுவித்தது. நம்புங்கள்… உங்களைத் தவிர வேறு எவரையும் நான் விரும்பியதில்லை!  இதனை மறவாதீர்கள்… நான் கொடுத்த கணையாழி. அதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்…”

டாக்டர் முகம் திருப்பிக்கொண்டார். நான் அவர் கையைப் பற்றிக்கொண்டேன்.

“ஹா… வேறு ஏதாவது பேசலாமே… அல்லது மகிழ்ச்சியாய் சீட்டாடலாம்… சிறிது பணம் கட்டி, என்னைப் போன்ற மனிதர்களின் உணர்வுகளை மற்றவரிடம் கடத்துவது நல்லதல்ல! நான் ஒன்றைப்பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.  குழந்தைகளை அழவைக்காமல் இருப்பதுவும், மனைவிமார்களை ஏசவைக்காமல் இருப்பதுவும் மட்டுமே. அந்தச் சம்பவத்திலிருந்து நான் என் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதன் பின்னர் நான் சட்டப்பூர்வமாக ஒரு வணிகரின் மகளை மணம் புரிந்துகொண்டு, டௌரியாக ஆறாயிரம் பெற்றுக்கொண்டேன் அவள் பெயர் அக்குலினா. டிரிபோன் இனத்தோடு அவள் சாதி ஒத்துப்போகிறது. அவள் மிகுந்த கோபக்காரி என்றுதான் சொல்ல வேண்டும். என் நல்ல நேரம் அவள் முழு நாளும் உறங்கிக்கொண்டே இருப்பாள். அதைவிடுங்கள்…. வாருங்கள் நாம் சீட்டாடலாம்.

நாங்கள் அரைகாசு பந்தயம் கட்டி சீட்டாடத் தொடங்கினோம். டிரிபோன் இரண்டரை ரூபில்ஸ் வென்றுவிட்டு, அவர் வெற்றிபெற்ற மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்.

தமிழில்: கோ.புண்ணியவான்

ஆங்கில தலைப்பு: The district doctor

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...