மண்கதை

கனத்த மூச்சுடன், அம்மா இனி இல்லை என்பதைத் தம்பி என்னிடம் சொன்னான்.1

நானும் தம்பியும் தாத்தாவின் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் குடிசையின் நிழல் நீளமாக விழும் மாலை நேரம் வரை எங்களை மறந்து மண்ணில்2 ஆர்வமாக விளையாடிய நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது.  நானும் தம்பியும் உள்ளே படுத்திருந்த தாத்தாவை முற்றிலும் கவனிக்கவில்லை. தாத்தாவுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் அம்மா கட்டிலின் அருகில் இருந்த பெரிய வயிரைக் கொண்ட ஒரு மண் குடத்திலிருந்து  தாத்தாவுக்குக்  குடிக்க  தண்ணீர் கொடுப்பார். நாங்கள் அம்மாவையும் அப்பாவையும் கூட முழுமையாக மறந்து போயிருந்தோம். எங்கள் கவனத்திலிருந்தது மண் மட்டுமே.

கருஞ்சாக்லேட் நிறத்தில் மென்மையாகவும் கொழகொழப்பாகவும் இருந்த களிமண்னைத் தம்பி அத்தனை ஆர்வமாக  உருட்டிப்  பிடித்துக்கொண்டிருந்தான். மெல்ல குதித்து நகரும் அட்டைப்புழுக்களைப் போல் அவ்வப்போது அவன் சிறிய கைப்பிடிக்குள்ளிருந்து விரல் இடுக்குகளின் வழி களிமண் விடுதலையடைந்து  வெளியேறின. அவனது நகக்கண்களையும் அந்த மண் நிறப்பியதை என்னால் பார்க்க முடிந்தது. என் நக இடுக்குகளையும் மண் நிறப்ப தொடங்கி இருந்தது.

அவனைப் போலவே நானும் மண்ணில் புரண்டு கொண்டிருந்தேன்.  அதுவும் தம்பியை ஒரு அரண்மனை கட்ட அழைப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன். (காரணம் தாத்தாவின் குடில் இருந்த அந்த வளாகத்தில் நாங்கள் மணல் அரண்மனை கட்ட மணல் இல்லை.) குத்துக்காலிட்ட படியே நாங்கள் மண்ணைக் கைகளால் தோண்டினோம். கோழிகளும், வாத்துகளும் எங்களின் செயலை ஆச்சரியமாகப் பார்த்தன.

தென்னை மர மட்டைகளின் உரசல்கள் மேலே இருந்து ஏதோ முனு முனுப்பது போல இருந்து. ஆனால் சூரியன் மட்டும் எங்களைப் பொருட்படுத்தாதது போல சத்தமின்றி கீழிறங்கி மலைகளுக்குப் பின்னால் மறைந்தது. மாலை நேரம் எங்களின் வியர்வைப் பூத்த உடலின் மீது சிவந்த ஒலியைப் பாய்ச்சியபோதுதான் நான் தம்பியிடம் அதைக் கூறினேன். நாம் அனைவரும் மண்ணால் படைக்கப்பட்டிருக்கிறோம். மண்ணிலிருந்து நாம் வந்தோம். மீண்டும் மண்ணுக்கேதான் திரும்பிச் செல்வோம்.3

தம்பியின் கைகள் அரண்மனையின் மேல் மண்கட்டிகளை அப்புவதை நிறுத்தின. அவனது அந்த அரண்மனை பாபேல் கோபுரம் போல சாய்வாக உயர்ந்து இருப்பதை என்னால் பார்க்க முடிந்து. தம்பியின் உதடு ஏதோ முனகப் போவதைப் போல துடிப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.  அவன் என்னைப் போல இல்லை, வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனது கண்கள் தொலைக்காட்சியை விட்டு அகலாது. என்னுடைய வார்த்தைகளை முழுமையாக மண்ணில் புதைத்துவிட்டு, மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது ஆதாம் மட்டும்தான் என்றான்.

“ஆதாம் மட்டும்தான்”

என்னுடைய தம்பி இந்த உலகுக்கு வர சில மாதங்கள் இருக்கும் போது, என் அறிவுக்கும் புரிதலுக்கும் சரியாக புலப்படாத அந்த இரவு நேர சம்பவத்துக்குள் என் நினைவுகள் சறுக்கிச் சென்றன.  என் அம்மாவும் அப்பாவும் நோயில் வீழ்ந்துவிட்ட பாட்டியைப் பார்த்துக்கொள்ள என்னையும் கம்பத்துக்கு அழைத்து சென்றிருந்தனர். நாங்கள் மூவரும் அங்கே சென்ற போது பாட்டி கடுமையாக இருமிக் கொண்டிருந்தார். என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாத எதையோ ஒன்றை தாத்தா அப்பாவிடம் சொன்னார். அம்மா உடனே வரவேற்பறை  கட்டிலில் தளர்ந்து படுத்திருந்த பாட்டியின் அருகில் சென்றார்.

அஸ்ரின் ஃபௌஸி

அன்று நடு சாமத்தில், பசியோடிருந்த கொசுக்களின் தொல்லையால்தூங்க முடியாமல் நான் பாட்டி தாத்தாவிடம் சென்றேன். நான் தடுமாறிய நடையுடன் வரவேற்பறையை சென்றடையும் முன்னமே சமையலறையில் இருந்து ஏதோ கிசு கிசுப்பு சத்தம் என் காதுகளை வந்தடைந்து. என் நடை அந்த இடம் நோக்கி திரும்பியது.  மற்றும் 4

என் மண்டைக்குள்  ஒரு திடமான காட்சியும் வடிவமும் இருந்தன.மறுநாள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்  பாட்டியின் மூச்சுத்திணறல்களுக்கு இடையில் அவர் சொன்னவற்றைக் கொஞ்சம் மறந்தும் மறக்காமலும் நினைவில்  வைத்திருக்கிறேன்.  ‘கலவையின் பதம் மிகச் சரியாக இருக்க வேண்டும்… கைகள் மிகவும் மென்மையாக பிசைய வேண்டும்… பிள்ளை பூரணமாக இருக்க… எல்லாம் முழுமையாக இருக்க…”  இப்படி  எதையோதான் அவர் அன்று காலை தூக்க மயக்கத்திலிருந்த பேரனிடம் சொல்ல விரும்பியிருக்கலாம்.

இந்த மண்ணின் கதையைதான் நான் அந்த அந்தி பொழுதில் தம்பிக்குச் சொன்னேன். இதை தம்பி புரிந்துகொள்வது கடினம். அதை முழுமையாக சொல்வது எனக்கும் கடினம்தான்.

அம்மா எங்களை வீட்டுக்குள் வரும்படி சத்தமாக அழைத்தார். (மண்ணை உடலெங்கும் பூசிக் கொண்டு அழுக்காக இருந்த எங்களைக் கடும் கோபத்தில் ஏசுவதற்கு முன்) வரவேற்பரையில் கட்டிலின் மீது இருந்த தாத்தா “அந்தி சாயும் நேரமாகிவிட்டது, இனிமேல் விளையாட வேண்டாம். இல்லையென்றால் அது மறைத்துவைத்துவிடும்” என நினைவூட்டினார் தம்பி என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். அவன் இன்னும் நம்பவில்லை. என் கதையை அவன் முற்றிலும் நம்பவில்லை.  நாம் அனைவரும் மண்ணால்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவன் நம்ப ஒரு போதும் தயாராக இல்லை.

காரணம் முன்னமே அவன் கூறியதுபோல ஆதாம் மட்டும்தான் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவன். அவன் வேகமாக என்னிடம் விளக்கினான். அநேகமாக தொலைகாட்சியில் அவன் பார்த்த ஆவணப்படதொகுப்புகளில் அறிந்தவையாக இருக்கலாம். மனித உற்பத்தி முறையை A  யில் தொடங்கி Bக்கும் அதிலிருந்து  Cக்கும்  அதிலிருந்து குரொமொசம்  x மற்றும் y என விளக்கி கடைசியாக  z வரை6. சென்று நிறுத்தினான். எனக்குத் தம்பியின் அறிவாற்றலை எண்ணி வியப்பாக இருந்தது உண்மை.  அதே போல நாங்கள் தாத்தாவின் சவ அடக்கத்திற்குப் போக முடியாமல் போனதும் உண்மைதான்.

ஆனால், என்னுடைய முழு கதையையும் தம்பி கேட்கவில்லை. அம்மா எங்களை வீட்டிற்குள்  அழைத்தபோது நிறுத்தப்பட்ட  கதை பகுதியை மட்டும்தான் தம்பி கேட்டிருந்தான். நித்தியமான அந்த  வார்த்தைகளைச் சொன்ன அடுத்த நாள் பாட்டி இறந்துவிட்டது அவனுக்குத் தெரியாது.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, காலையில் கண்விழித்து எழுந்து பார்த்தபோது,  அப்பா, அம்மா, தாத்தா மற்றும் எனக்கு அறிமுகம் இல்லாத உறவினர்கள் என அனைவரும் வரவேற்பறையில் அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தனர். அதுவும் அம்மா உடைந்து அழுவதற்கு முன்புவரைதான்.  பிறகு மற்ற உறவினர்களும் அம்மாவோடு சேர்ந்து கதறி அழத்தொடங்கினர்.

…..கட்டிலின் மீதிருந்த ஒரு குவியல் மண்ணைச் சூழ்ந்து அமர்தபடி.7

நிலத்தடிக் குறிப்பு

  1. நீண்ட நேரமாக நான் அலைபேசி திரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்பா கம்பத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். உறவினர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்.  இந்த ரயில் தீவுக்குச் செல்ல கடல் அடி  சுரங்கப்பாதையில் இன்னும் சில நிமிடங்களில் நுழையும் அதே நேரம் தம்பியும் தன் கண் முன் நிகழும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வான் என நம்புகிறேன்.

    2. கோலாலம்பூரில் வளர்ந்த காரணத்தால் எங்களின் காலடிகள் அனைத்தும், தார் ஊற்றிய தரையின் மீதும், சிமென்ட் தரையின் மீதும், காங்கிரீட் தரையின் மீதும், பல்வேறு வகை கற்களின் மீதும்தான் பதிந்திருக்கின்றன. மண் எங்களுக்கு அந்நியமானதாகவும் புனிதமானதாகவுமே இருந்துள்ளது.

    3. அல்லது,  இந்த கம்பத்து மண்ணிலிருந்து நாங்கள் வந்தோம், இந்த கம்பத்து மண்ணுக்கே மீண்டும் செல்வோம்.

    4. நான் அம்மாவையும் அப்பாவையும் பார்க்கிறேன். மங்கலான வெளிச்சத்தில், மண் குடத்துக்குள் குழையும் ஏதோ ஒன்றை அம்மா இலயிப்புடன் பிசைந்து கொண்டிருக்கிறார். அப்பா அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றிக்கொண்டிருக்கிறார். அவர்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை. நான் அருகில் சென்றபோது, எனது வருகையை அவர்கள் உணரவில்லை. அவர்கள்  இருவரும் தங்களை அவ்வளவு மறந்திருக்கின்றனர். அம்மா பிசைவதில் இலயித்திருக்கிறார். அப்பா நீருற்றுவதில் ஆழ்ந்திருக்கிறார்.

    5. எல்லாம் தெளிவாக இருக்கிறது. மண் குடத்துக்குள் அசையும் நீரின் தெளிவை ஒத்து இருக்கிறது.  மண்ணை மகிழ்ச்சியாக பிசையும் மென்மையான அம்மாவின் கைகள் நனைந்திருக்கின்றன.

    6. அல்லது மனிதனின் உருவாக்கம் சார்ந்த கதைகள் முடிவுபெறுவதே இல்லையோ?

    7. இந்தக் கதையை நான் கட்டாயம் முடிக்கதான் வேண்டுமா? இன்னும் பயன்படுத்தப்படாத என் பயணச் சீட்டை எடுத்துப் பார்க்கிறேன்.  எண்ணங்களை எனது இலக்காகிய ஜார்ச்டவுனை நோக்கி செலுத்துகிறேன். இந்தப் பயணம் என் வாழ்விலேயே மிக நீண்ட பயணமாக இருக்கும் என நினைக்கிறேன்.  ரயில் கடலுக்கடியில் நுழையும்போது நான் என்னுடைய காதில் head set மாட்டிக்கொள்கிறேன். அழைப்பேசியில் பாடல்களை  mod shuffle இல் வேகமாக வைக்கிறேன்.  The Cure ஆல்பத்தின் “Disintegration” என்ற பாடல் என் மண்டைக்குள் ஒலிக்கத் தொடங்குகிறது.

    ***

    இச்சிறுகதை ‘சிலாங்கூர் கினி’ பத்திரிகையில் முதல் பிரசுரம் (22 -28 நவம்பர்) கண்டது. பின்னர் Amok-Imago என்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது (Nusa Centre, 2022). மேலும் இந்தச் சிறுகதை சிலாங்கூர் சாஸ்திரா கினியில் ‘முதன்மையான சிறுகதை’ என்ற பரிசை வென்றது.

    மலாய் மூலம்: அஸ்ரின் ஃபௌஸி

    தமிழில்: ம.நவீன்

    உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...