
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிக் கிட்டத்தட்ட 5.30 வரை நடைபெற்ற விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றியோர், வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோர், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அது அவரது பரவலான தொடர்பையும் எல்லோரையும் மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்தியது.
நிகழ்வில் ‘விதி சமைத்தவர்’ என்னும் தலைப்பில் அவரைப் பற்றிய காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. ஒருவரது நேர்காணலைத் தொடர்ச்சியாக வைக்காமல் பல துண்டுகளாகக் கத்தரித்துப் பொருள் சார்ந்து தொகுத்திருந்ததால் காண்பதற்குச் சலிப்பில்லாமலும் அவரது முழு ஆளுமையை வெளிக்கொண்டு வரும் விதத்திலும் சிறந்திருந்தது. தொடர்ந்து உரைகள். நினைவுப் பகிர்தலாகவும் பணிகளை விவரிக்கும் பாராட்டுக்களாகவும் உரைகள் இருந்தன. அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விருந்தினராக வல்லினம் விருதை என் கையால் பி. எம். மூர்த்திக்கு வழங்கியதைப் பெரும்பேறு என்றே எண்ணுகிறேன். அத்தருணம் எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக அமைந்தது. பி. எம். மூர்த்தி பிறந்த ஆறு மாதத்தில் அவரைக் கவனித்துக் கொள்வதற்காக மூத்த அக்கா மீனாட்சி தம் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டாராம். தம் குடும்பத்தினர் அனைவரும் கல்வி கற்கத் தூண்டுதலாக இருந்த அக்காவுக்குப் படிக்க வாய்ப்பு அமையவில்லை என்னும் குற்றவுணர்ச்சியும் அதன்பாற்பட்ட நன்றியுணர்ச்சியும் வெளிப்பட அக்காவை மேடைக்கு அழைத்திருந்தார். விருதுத்தொகையையும் அக்காவுக்கே வழங்குவதாக அறிவித்தார்.
நிகழ்வில் ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ என்னும் தலைப்பிலான பி. எம். மூர்த்தியின் தன்வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. ‘நான் பிறந்தவுடன் என்னைப் பராமரிக்க தன் பள்ளிப்படிப்பை முதல் வகுப்போடு நிறுத்திக்கொண்ட அக்கா மீனாவுக்கு’ என நூலையும் தம் அக்காவுக்கே காணிக்கை ஆக்கியுள்ளார். அந்த நூல் உருவான வரலாற்றை அதில் பங்கேற்ற சாலினி விவரித்தார். விருதின் துணைவிளைவாக நூல் இருந்தாலும் அதுதான் முக்கிய ஆவணமாகத் திகழக் கூடியது. தன்வரலாறு எழுதும் எண்ணம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. விருதை ஒட்டி ஒருகுழு இந்நூலை உருவாக்கியுள்ளது. அதில் சாலினி, சுப்புலட்சுமி, பாண்டியன், அரவின் குமார், ம. நவீன், லதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அக்குழுவினர் அவரிடம் நேர்காணல் செய்து அதை எழுத்தாக்கியுள்ளனர். அதை வாசிக்கும்போது பி. எம். மூர்த்தி ஆர்வமாகித் தாமே எழுதியும் சிலவற்றைச் சொல்லி எழுத வைத்தும் இடைவெளிகளை எல்லாம் நிரப்பியிருக்கிறார்.
தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு என இருவகையில் தனிமனித வரலாறு எழுதப்படும். ஒருவர் தாமே தம் வரலாற்றை நேரடியாக எழுதுவதும் அவர் சொல்லச் சொல்லக் கேட்டுப் பிறர் எழுதி நூலாக்குவதும் என இருவகையில் தன்வரலாறு உருவாகும். நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ அவரே எழுதியது. உ. வே. சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ அவர் சொல்லச் சொல்லப் பிறர் எழுதியது. ஒருவர் வாழும் போதே அவரைப் பற்றிய தகவல்களைச் சேர்கரித்துப் பிறர் எழுதுவது தன்வரலாறு ஆகாது. அது ‘வாழ்க்கை வரலாறு’ என்னும் வகைமைக்குள் தான் அடங்கும். கல்கியின் வரலாற்றைப் ‘பொன்னியின் புதல்வர்’ நூலைச் சுந்தா எழுதினார். பெரியார் வாழும் போதே ‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் சாமி. சிதம்பரனார் எழுதினார். பெரியாரின் ஒப்புதலைப் பெற்று அந்நூல் வெளியானாலும் அது தன்வரலாறு ஆகாது; வாழ்க்கை வரலாறுதான்.
ஒருகுழுவினர் பொருள்வாரியாகச் செய்திகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியாக நேர்காணல் செய்து எழுத்தாக்கிப் பிறகு அவற்றைக் கட்டுரைகளாக மாற்றித் தொடர்புடையவரிடமே கொடுத்துச் சரிசெய்து இடைவெளிகளை அவரே நிரப்பி ஆக்கம் பெற்றது பி. எம். மூர்த்தியின் தன்வரலாறு. இப்படி ஒரு தன்வரலாற்று நூல் உருவானது புதுமைதான். இவ்வழிமுறையைக் கைக்கொள்ளச் செய்த ம. நவீனும் செயல்பட்ட குழுவினரும் போற்றத்தக்கவர்கள்.
மலேசியாவில் இருந்து முத்தம்மாள் பழனிச்சாமி எழுதிய ‘நாடு விட்டு நாடு’ என்னும் தன்வரலாற்று நூலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவர் இறந்தபோது அதைப் பற்றி விரிவாக எழுதினேன். அடுத்து நான் வாசித்த மலேசியத் தன்வரலாற்று நூல் பி. எம். மூர்த்தியின் ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ தான். இரண்டும் வெவ்வேறு வகையிலானவை. தம் தாத்தா பாட்டியில் தொடங்கிப் பேரன் பேர்த்திகள் வரை ஐந்து தலைமுறை வாழ்க்கையைச் சித்திரித்த குடும்பக் கதை முத்தம்மாள் எழுதியது. அதில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தந்தையின் கதையும் அவரோடு அலைக்கழிந்த தம் கதையும் விரிவானவை. குடும்பம் தவிர்த்துப் பல்வேறு மனிதர்களையும் சூழல்களையும் சேர்த்துக் கொண்டு அப்பகுதி செல்வதால் சமூக ஆவணமாகவும் மாறிவிடும் தன்மை பெற்றிருக்கிறது.
பி.எம்.மூர்த்தியின் தன்வரலாறு ஒற்றை விஷயத்தை ஒரே நேர்கோட்டில் சொல்லிச் செல்லும் தன்மை கொண்டது. ‘வல்லினம் விருது’ எதற்காக வழங்கப்படுகிறதோ அதை முதன்மைப்படுத்தி விளக்கிச் செல்லும் வகையிலானது. அதற்குள் முந்தைய தலைமுறையினர் கதைக்குச் சிறிதும் இடமில்லை. சொந்தக் குடும்பத்தினர் கதைக்குக்கூட மிகச் சொற்பமான இடம்தான். தொடக்கத்தில் சில பகுதி, இறுதியில் சில பகுதி என அது முடிந்து போகிறது. பிற இயல்கள் அனைத்தும் அவர் கல்வி, பணிகள், செயல்பாடுகள் என விரிந்து செல்கின்றன. முழுமையாகக் கல்வித்துறை சார்ந்து அவர் சாதித்த சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் விவரிக்கின்றன. அவ்வகையில் விருதுக்கான நியாயத்தை விளக்கி உரைக்கும் தன்வரலாறு இது என்று சொல்லிவிடலாம். அப்படி இருப்பதால் இதன் மதிப்புக்குக் குறை ஒன்றும் நேர்ந்துவிடவில்லை.
நான் கல்லூரி ஆசிரியராகக் கிட்டத்தட்ட இருபத்தாறு ஆண்டு பணியாற்றியிருக்கிறேன். அதில் கடைசி நான்காண்டு முதல்வர் பணி. கல்வித்துறை அதிகாரிகளாக ஆசிரியர்களே இருக்க வேண்டும் என்பது விதி. எனினும் அவ்வப்போது அரசு அதை மீறி ஆட்சிப்பணி அதிகாரிகளை உயர்கல்வி இயக்குநர்களாக நியமித்து விடும். அவர்களிடம் கல்வி தொடர்பாகவோ ஆசிரியர் பிரச்சினைகள் தொடர்பாகவோ பேசி எளிதில் புரிய வைத்துவிட முடியாது. ஆசிரியப் பணியில் இருந்து பதவி உயர்வு பெற்று அதிகாரிகள் ஆவோருக்குக் கற்பித்தல் அனுபவம் இருக்கும்; கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய திட்டங்கள் இருக்கும்; ஆசிரியர், மாணவர் பிரச்சினைகளைச் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ளவும் முடியும். இத்தகைய எதிர்பார்ப்புகளுக்குச் சிறிதும் பொருந்தாமல் அதிகாரப் பதவி பெற்றதும் அதன் சுகங்களை முழுமையாக அனுபவித்து இன்பம் காணும் ஆசிரியர்களே பெரும்பான்மை. கடனே என்று நீட்டிய இடத்தில் வெறும் கையொப்பம் மட்டும் போட்டு ஊதியம் வாங்கி ஓய்வு பெறுவோர் பலர். அரிதாகச் சிலரே தம் பதவியைப் பொறுப்பு என்றுணர்ந்து அதிகாரத்தைச் செயல்பாட்டுக்குப் பயன்படுத்துவர். அப்படிப்பட்ட ஒருவர்தான் பி. எம். மூர்த்தி.
ஆசிரியராக இருந்து தமிழ்த் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணிக்குச் செல்லும் அவர் தம் எல்லைக்கு உட்பட்டும் எல்லையிலிருந்து சற்றே விலகியும் பலவிதமான முன்னேற்றச் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். சிறுவயதிலிருந்தே சுயசிந்தனையாளராகவும் செயல்பாட்டாளராகவும் இருந்திருக்கிறார். இத்தகையோர் சமூகப்பணியில் தம் சுவடுகளை அழுத்தமாகப் பதிப்பர். பி. எம். மூர்த்தி தம் இளமைக் காலத்தில் கல்விக்காக நண்பர்களுடன் இணைந்து கட்டிய சிறுசிறு அமைப்புகள், ஆசிரியப் பணியின் போது தாம் பணியாற்றிய பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அவற்றை நிலைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் முக்கியமானவை. அந்தச் செயல்பாட்டு ஆற்றல் தேர்வுத்துறை அதிகாரியானதும் வீச்சாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்நூல் விவரிப்பவற்றை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு மலேசியக் கல்விச் சூழலைப் பற்றியும் அங்கு தமிழ்ப் பள்ளிகள் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டும். மலேசியாவுக்குச் செல்லும் முன் இந்நூல் கைக்கு வந்தபோதும் என்னால் வாசிக்க இயலவில்லை. அது எனக்கு ஒருகுறையாகவே இருந்தது. போய் விருது விழாவில் பங்கேற்றதோடு மலேசியக் கல்விச் சூழல் பற்றி ஓரளவு அறிந்து திரும்பினேன். போகுமுன் வாசித்திருந்தால் இந்நூலின் பல பக்கங்களை வெறுமனே கடந்து சென்றிருப்பேன். சில பக்கங்களை வாசிக்காமலே திருப்பியிருக்கவும் வாய்ப்புண்டு. ஓரளவு அறிந்த பிறகு வாசிக்கையில் இந்நூல் பேசுபவற்றின் முக்கியத்துவத்தை உணர்வதோடு அவற்றின் விளைவுகளையும் அறிய முடிகிறது.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் என்றால் அவை தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டும் கற்பிப்பவை அல்ல. வரலாறு, அறிவியல், கணக்கு உள்ளிட அனைத்துப் பாடங்களையும் தமிழ் வழியில் கற்பிப்பவை. தேர்ந்து கொள்ளும் பாடமாகத் தமிழ் இலக்கியம் இருக்கிறது. மலேசியத் தமிழர்களின் பேச்சும் இயல்புகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலவே பெரும்பான்மை இருக்கக் காரணம் இத்தமிழ்ப் பள்ளிகள் என்றே சொல்லலாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்தனவாம். இப்போது பாதியாகக் குறைந்து ஐந்நூற்று முப்பது பள்ளிகள் இருக்கின்றனவாம். பத்துமலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஒருபள்ளியைக் கண்டேன். தோட்டச் சூழலில் இன்னொரு பள்ளியையும் பார்த்தேன். அழகான சூழலில் எளிய கட்டிடங்களுடன் வசதியான பள்ளிகள். தமிழ்நாட்டுப் பள்ளிகளை ஒப்பிடும்போது அவை பெரிதும் மேம்பட்டவை என்றே சொல்லலாம்.
பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்குப் பலரும் ஆங்கில வழி, மலாய் வழிப் பள்ளிகளை நாடிச் செல்வது ஒருகாரணம் எனினும் தமிழ் வழியில் பயில்பவர்களுக்குப் போதுமான பாடநூல்கள், வழிகாட்டி நூல்கள் உட்படக் கருவி நூலகள் இல்லை என்பதும் தேர்வுமுறையும் பெருங்காரணங்களாக இருந்துள்ளன. இத்தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றி வைக்க ஓர் அதிகாரியாக இரவுபகல், விடுமுறை நாட்கள் என்றெல்லாம் பார்க்காமல் தொடர்ந்து பதினைந்து ஆண்டுக்கும் மேலாகப் பி. எம். மூர்த்தி செயல்பட்டிருக்கிறார். ஆசிரியராக இருந்தபோதே பள்ளிக்கான வசதிகளை ஏற்படுத்துவதிலும் மாணவர் எண்ணிக்கை குறைவால் மூடும் நிலையில் இருந்த பள்ளியை மீட்பதிலும் பங்காற்றியிருக்கிறார். எவ்விடத்திலும் எந்நிலையிலும் தம் செயல்பாடுகளை அவர் முடக்கிக் கொண்டதேயில்லை. அவ்வியல்பு அதிகாரி நிலையில் பேருருக் கொண்டிருக்கிறது.
கருவி நூல்களை உருவாக்குதல், வினாத்தாள் அமைப்பை மாற்றுதல், மதிப்பீட்டு முறையைச் சீரமைத்தல், பாடத்திட்டத்தை நவீனமாக்குதல், கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பயிலரங்குகளை ஒருங்கிணைத்தல் என அவர் செயல்பாடுகள் பல கோணங்களில் அமைந்திருக்கின்றன. மாற்றங்களை உருவாக்க முனைபவருக்கு எதிர்ப்புகள் எழுவதும் பகை உருவாவதும் சாதாரணம். அவற்றைத் தயக்கமின்றி எதிர்கொண்டிருக்கிறார். சிறுகதையைப் பாடத்தில் வைத்த போது தனித்தமிழ் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். பிறமொழிச் சொற்கள் கலவாமல் தமிழைப் பயன்படுத்துவது மட்டும் அவர்கள் கொள்கையல்ல, பேச்சுத் தமிழும் கூடாது என்று சொல்வார்கள். சிறுகதைகளில் வரும் உரையாடல்கள் ‘கொச்சைத் தமிழில்’ இருப்பது நல்லதமிழ்ப் பயன்பாட்டைச் சிதைத்துவிடும் என்று கருதி எதிர்த்துள்ளனர். அவர்களை எல்லாம் ஓரிடத்தில் கூட்டிப் பி. எம். மூர்த்தி பேசியிருக்கிறார். தம்மை எதிர்ப்பவர்களைப் பகையாக நிறுத்திக் கையாள்வதுதான் அதிகாரத்தின் இயல்பு. ஆனால் மூர்த்தி சொல்கிறார், ‘அவர்களின் தமிழ்ப்பற்று என்பது அப்பழுக்கற்றது.’ எதிர்ப்போரின் நோக்கத்தை இப்படிப் புரிந்துகொண்டால் பகைக்கு இடமேது?
தனித்தமிழ் ஆர்வலர்களிடம் பேசும்போது பி. எம். மூர்த்தி கையாண்ட தர்க்கம் மிகச்சிறப்பு. அதை அப்படியே இங்கே கொடுக்கிறேன்:
‘பேச்சுமொழி நம் தாய்மொழியின் ஆன்மா போன்றது. முத்தமிழின் ஒருபகுதி நாடகம். எழுத்தறிவு கொண்ட சான்றோர் முதல் எழுத்தறியாத சாமானியர் வரை பயன்படுத்தக் கூடியது. அது வாழ்ந்தால்தான் தமிழ் வாழும். பேச்சு மொழிக்கான எதிர்மறைப் போக்கு தமிழ் மொழியின் நீடுநிலவலுக்கே ஊறு விளைவித்து விடலாம். பேச்சுமொழி வழக்கொழிந்து போனதால்தான் லத்தின், சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் எல்லாம் இன்று வெறும் ஏட்டுமொழியாக மட்டும் மாறி கிடப்பில் கிடக்கிறது. பேசுவதற்கு ஆளில்லாமல் போகும் எந்த மொழியும் செத்துப் போகும். எனவே பேச்சுமொழியை நாம் பேசும்போது மட்டும் பயன்படுத்தி காப்பாற்றிவிட முடியாது. எழுத்திலும் பயன்படுத்தி ஆவணப்படுத்தி அடுத்தடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்ல – விட்டுச் செல்ல வேண்டும். ஒரு தலைமுறை பேசும் வார்த்தைகள் இன்னொரு தலைமுறையில் வழக்கொழிந்த சொற்களாக மாறி கால ஓட்டத்தில் மறைந்தே போய்விடலாம். அப்படி நேராமல் இருக்க வேண்டுமானால் சிறுகதை அல்லது புதினங்களில் உலாவரும் ‘கற்பனை’ மாந்தர்கள் வழி பேச்சுமொழியைப் பதிவு செய்து வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஐம்பது முதல் அறுபது ஆண்டுகளுக்கு முன் தோட்டப்புறங்களில் பேசப்பட்ட வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. இன்றைய தலைமுறை அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் அவை நம் மூத்த எழுத்தாளர்கள் படைத்தளித்த சிறுகதைகளில், நாவல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவை சாகா வரம்பெற்று நிலைத்திருக்கின்றன. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட நிலைத்திருக்கும். மூத்த எழுத்தாளர்கள் செய்த அந்தப் பதிவை அடுத்து வரும் இளம் படைப்பாளர்களும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். தயவுசெய்து என்னோடு கைகோத்து இந்த முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்’ (ப.150 – 151).
இந்தத் தர்க்கத்தை ஏற்காதவர் இருக்க முடியுமா? அவர்களை ஏற்கச் செய்துவிட்டேன் என்று மூர்த்தி கூறவில்லை. ‘மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்னும் ஔவையாரின் கூற்றுக்கேற்ப தங்கள் ஆதரவை வழங்கினார்கள்’ என்று அவர்களின் பெருந்தன்மையாகப் பார்க்கிறார். அவர்கள் மேன்மக்களோ இல்லையோ இவரை ‘மேன்மகன் மூர்த்தி’ என்று சொல்ல வேண்டும். தம் கனவுகளைத் துரத்திச் சென்று வெற்றி பெற்றமைக்கு இத்தகைய அணுகுமுறையும் முக்கியமான காரணம். அவரது தாய்மொழிப் பற்றும் இன்னொரு காரணம். அரசு ஊழியரல்லாத ஒருவரை அழைத்துப் பேச வைக்கக் கூடாது என்னும் விதியை மீறி மலேசியக் கவிஞர் சீனி நைனா முகமதுவை அழைத்து ஆசிரியர்களிடையே பேச வைக்கிறார். ‘உங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடாதா?’ என்னும் கேள்வி வருகிறது. அதற்கு மூர்த்தி சொல்கிறார்: ‘இந்தத் தேர்வு வாரிய அதிகாரி பதவி எனக்குப் போகிறது என்று சொன்னால் செய்யும் தொழிலில் ஏதோ தப்பு செய்துவிட்டான் என்னும் அவப்பெயரோடு போகாமல் இப்படித் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்ப்பதற்காகப் போகுமானால் அதனை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்’ (ப.178).
இந்தத் தன்வரலாற்று நூல் பற்றி மேலும் எனக்குத் தோன்றும் சில எண்ணங்கள்:
நூலுக்கு விரிவான முன்னுரை ஒன்று இருந்திருக்கலாம். நூல் உருவாக்கம் பற்றிய செய்திகள் அதில் பதிவாகியிருக்கும். இந்நூல் தமிழ்நாட்டிலும் பரவலாக வாசிக்கப்படும் என்பதால் மலேசியக் கல்விச் சூழல், தமிழ்ப் பள்ளிகள் பற்றி அம்முன்னுரையில் அறிமுகப்படுத்தியிருந்தால் உதவியிருக்கும்.
நூலில் வரும் பல சொற்களுக்குப் பொருள் தேவைப்படுகிறது. நூலின் முதல் பத்தியில் ‘தோட்டத் துண்டாடல் காரணமாக என் பெற்றோர் பெர்லிஸின் கோடியாங்கிற்கு வேலை தேடிச் சென்றனர்’ என்று வருகிறது. ‘தோட்டத் துண்டாடல்’ என்பது என்ன? பெருந்தோட்டம் ஒன்றைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்பனை செய்த நிகழ்வு மலேசியாவில் நடந்திருக்கிறது. அதுதான் ‘தோட்டத் துண்டாடல்.’ இத்தகைய மலேசியத் தமிழ்ச் சொற்களுக்கும் கல்வித்துறை சார்ந்த சொற்களுக்கும் பொருள் தரும் ‘அருஞ்சொல் அகராதி’ ஒன்று இந்நூலுக்கு அவசியம்.
‘விருது நியாயத்தை விளக்கும் தன்வரலாறு’ என்று இந்நூலைப் பற்றி முன்னர் குறிப்பிட்டேன். அதைக் கடந்து எழுதுவதற்குப் பி. எம். மூர்த்திக்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அவர் முன்னோரின் புலப்பெயர்வு தொடர்பான சம்பவங்கள், கதைகள், பெற்றோர் வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதினால் அவை வரலாறாகவும் சுவை மிகுந்ததாகவும் அமையும். விருது விழா ஏற்புரையில் ‘இன்னும் எழுத வேண்டியிருக்கிறது’ என்று அவர் சொன்னார். எழுத வேண்டும். இந்நூலில் பல சாதனைகள் தகவல்களாக மட்டும் இருக்கின்றன. அவற்றை எடுத்துச் செய்யும்போது எதிர்கொண்ட பிரச்சினைகளைச் சில சம்பவங்கள் மூலமாக விவரித்திருந்தால் வாசிப்புச் சுவை மிகுந்திருக்கும். அப்படிச் சொல்வதால் யாரையேனும் காயப்படுத்தி விடுவோமோ என்னும் எச்சரிக்கை உணர்வு இருந்திருக்கிறது. தன்வரலாறு எழுதுவோருக்குச் சக மனிதர்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயக்கம் இருக்கிறது. அதைத் தவிர்க்கப் பெயர் குறிப்பிடாமல் எழுதுவது ஒருவகை உத்தி. அடுத்த நூலில் அப்படி ஏதேனும் உத்தியைக் கையாண்டு சம்பவங்களுடன் இணைத்து எழுதுவது நல்லது.
சமூக உணர்வுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு நேர்வதே இவருக்கும் நடந்திருக்கிறது. ஏராளமான மொட்டைக் கடுதாசிகள். அவற்றுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய தேவை. வினாத்தாள் கசிவில் இவருக்குத் தொடர்பில்லை எனினும் பணியிட மாறுதல். தாம் தொடங்கிப் பலன் கொடுக்கும் நிலையில் இருந்த பணிகளைத் தொடர இயலாத நிலை. ஆகவே விருப்ப ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார். ஓய்வுக்குப் பின்னும் அவர் சும்மா இருக்கவில்லை. ஓய்வுக்குப் பின்னான தம் வாழ்வைப் பற்றியும் இந்நூலில் பேசியிருக்கிறார்.
எதையும் திட்டமிட்டுச் செய்யும் இயல்பு சிறுவயதிலேயே வந்திருக்கிறது. மூன்று பேர், நான்கு பேரைச் சேர்த்து ஒருபெயரிட்டுக் குழு அமைத்துச் செயல்படும் முறை மிகப் புதிதாக இருந்தது. குறிக்கோளை நிறைவேற்றியதும் அக்குழுவைக் கலைத்து விடுகிறார். இது அவர் அதிகாரியான பின்னும் தொடர்ந்திருக்கிறது. நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. குடும்பச் சந்திப்புக்களைக்கூட அப்படிக் குழு அமைத்துச் சிறப்பாக நடத்தியிருக்கிறார். இவ்வகையில் பலருக்கும் வழிகாட்டி நூலாக விளங்கும் கூறுகளையும் நூல் கொண்டிருக்கிறது.
நூல் நல்ல தயாரிப்பில் வந்திருக்கிறது. அட்டையை தென்னரசு அழகாக வடிவமைத்திருக்கிறார். ஜி. முருகன் உருவாக்கியுள்ள உள்பக்கங்களில் எழுத்துருக்களும் நன்று. சங்கிலி கோத்தது போன்ற தொடர்களைக் கொண்ட மொழிநடையில் வல்லினம் மிக வேண்டிய இடங்கள் பலவற்றில் ஒற்று இல்லாமை ஒன்றுதான் குறை. நூல் தமிழ்நாட்டில் கிடைக்கும் முகவரியையும் கொடுத்திருக்கலாம்.
தமிழர்கள் புலம்பெயந்து பல நாடுகளில் வாழ்கிறார்கள் என்று பெருமை கொண்டால் மட்டும் போதாது. அங்குள்ள சூழல்களையும் பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளவும் ஆளுமைகளை அறிந்து போற்றவும் இத்தகைய நூல்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
நூல் விவரம்: பி.எம்.மூர்த்தி, கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை, வல்லினம் பதிப்பகம், மலேசியா.
