நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

tayaji pixசுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை – மரபும் மனித நேயமும்’ என்ற புத்தககம் கிடைத்தது. சுந்தர ராமசாமியின் பெயருக்காகத்தான் அந்த புத்தகத்தை வாங்கினேன்.  புத்தகத்தைப் படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ இங்கே  கிடைப்பது அரிதாக இருந்தது. இருந்தும் சு.ரா இந்தப் புத்தகத்தில் ந.பிச்சமூர்த்தியின் கதைகள், கவிதைகள், அவரது வாழ்க்கை குறித்து ஆழ்ந்தும் அற்புதமாகவும் எழுதியிருக்கிறார்.

    இதுவரை நான் படித்த புத்தகங்களிலேயே அதிக அளவு கோடிட்டும், சிறு சிறு குறிப்பும் எழுதி படித்த புத்தகம் இதுதான். பாட புத்தகம் போல ஒன்றின் பின் ஒன்றாக சொல்லியிருக்கிறறர் சு.ரா. கவிஞன் என்பவன் யார் என்கிற தெளிவும் கூட எனக்கு கிடைத்தது. வெறும் சந்தத்திலும் எதுகையிலும் மோனையிலும் இல்லாமல், அழகுகளை மீறிய ஆழ்மன அழுக்குகளையும் ஆதங்கங்களையும் ஆன்மிக தேடல்களையும் இவர் சொல்லியிருக்கும் விதம் அபாரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் அந்த புத்தகத்தை படிக்கவேண்டும்; பின்னர் அது குறித்து எழுதவேண்டும்.

சரி இப்போது,

அப்படி ந.பிச்சமூர்த்தியின் புத்தகங்களை தேடும் போதுதான், மாதாந்திர நாவல் ஒன்றில் சிறப்பு வெளியீடாக சிலரில் சிறுகதைகளை வெளியிட்டிருந்தனர். தேடிக்கொண்டிருந்தவரின் சிறுகதையொன்றும் அந்த புத்தகத்தின் இருந்ததால் வாங்கினேன். ந.பிச்சமூர்த்தியின் கதையை படிக்கத்தான். படித்தேன்.

தலைப்பு ‘வெறும் செருப்பு’.

வெறும் செருப்பில் இருந்து வாழ்வின் உன்னத தத்துவமான ‘நிலையின்மையை’ சொல்லியிருக்கிறார் ந.பிச்சமூர்த்தி. அறுந்துபோன செருப்பை ஒதுக்கி புது செருப்புடன் நடக்கிறார்; கதை அங்கே தொடங்குகிறது. செருப்பை மிக கவனமாக உபயோகிக்கிறார், அதிக அக்கறை காட்டுகிறார். பின் நண்பரின் மரண செய்தி. ரயில் பயணமாய் இறப்பு வீட்டிற்கு செல்கிறார். செல்லும் வழியில் தனது சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்த செருப்பை திடீரென உணர்கிறார். அங்கே நிலையாமை புலப்படுகிறது. நண்பரின் மரணமும், தனது மனம் முழுக்க பரவியிருக்கும் புது செருப்பும் எதையோ இவருக்கு நினைவூட்டுகிறது.

 மரண வீட்டிற்கு செல்லும் போது காலில் செருப்பு இல்லை. நண்பர் ஒருவர் விசாரிக்க , இப்படி பதில் கொடுக்கிறார்,

 “ ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிபோக்கன் எப்போதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எறியலாம். யாரால் தடுக்க முடியும் ”

இப்போது மீண்டும் இந்த கதை நினைவுக்கு வந்ததின் காரணம் நண்பர் ஒருவரின் காரசாரமான கருத்துதான். காணாமல் போன விமானம் குறித்து பலரும் பலவாறாக பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள். பல வருடங்கள் விமானியாக இருந்தவர்களுக்கு கூட தெரிந்திருக்காத தொழில்நுட்பங்கள் , விமான உள்விபரங்கள் போன்றவரை தெரிந்தவர்கள் பலர் இருப்பதை இந்த சம்பவம் உணர்த்தியது. சொன்னவர்களுக்கு அவ்வளவு அறிவும் தெளிவும் இருக்கும்போது ஏன் அவர்களில் யாரும் விமானியாகவில்லை என்பது கேள்விக்குறிதான்.

ஒன்றன் பின் ஒன்றாக வந்திருந்த செய்திகளில் சமீபத்திய செய்தி, விமானம் கடலில் விழுந்திருக்கிறது, யாரும் உயிர் பிழைக்கவில்லையென்ற செய்தி வந்திருந்தது. (இதுவும் நிரந்தரம் இல்லையென்றே மனம் நம்புகிறது. இதனை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதுகூட இக்கருத்தில் மாற்றம் ஏற்படலாம்.)

 உயிர்கள் பலியான செய்தி வந்திருந்த சமயம், வழக்கம்போல மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒன்றை முகநூலில் பகிர்ந்திருந்திருந்தேன். அறச்சீற்றம் கொண்ட அந்த நண்பன், இன்பொக்ஸில் வந்து உணர்ச்சிப்பொங்க கருத்திட்டிருந்தார். மனிதாபிமானமற்று உயிர்கள் பலியான செய்தி வந்த நாளில் கேவலமாக மர்லின் புகைப்படத்தை பகிர்ந்துவிட்டேனாம்.

உண்மையில் இதுபோன்றவர்களுக்கு பதில் கொடுப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். என்னதான் சொன்னாலும், உயிர் பலியைத்தான் திரும்பத்திரும்ப பேசுபொருளாக வைத்திருப்பார்கள். நல்லவேளையாக இவருக்கு அப்படியொரு வியாதி இருக்கவில்லை.

முதலில் அதிர்ச்சியானது. இதற்கு முன் நாம் சந்திந்த பதில் தெரியாத மரணங்கள் , மண்ணில் வாழ கேட்டு மண்ணுக்குள் படுத்துறங்கும் மக்கள் போன்ற ஒவ்வொரு மரணமும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்த போது முதலில் கொந்தளித்து பின்னர் வீட்டுத்தொலைக்காட்சியில் செய்திக்கு செய்தி மாற்ற விசைகளை அழுத்தி மறுநாள் மற்றவர்களுடன் கருத்துபேச குறிப்பெடுக்கத் தொடங்கிவிடுவோம். தினம்தினம்தான் ஏழை சாகிறான். நம் வீட்டுக்கு மூனாவது வீட்டில் வந்து போன மரணம் குறித்து எத்தனை தூரம் நாம் வருந்தியிருப்போம். ஒருவேளை இறந்தவர் அமெரிக்காவில் இருந்திருந்தாலும் முகநூல் கணக்கிருந்தால் ஊர் மெச்ச அனுதாபங்களை ‘like’ செய்திருப்போம்.

நாம் வருந்திய ஒன்றிற்கு நீயும்தான் வருந்தி அழவேண்டும் என்று கட்டளையிடுவது எதனை காட்டுகிறது. எனக்கு புரிதாய கதையும் கவிதையும் உனக்கும் புரியக்கூடாது என கூட்டம் சேர்ப்பது போலதானே இருக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் மரணத்துக்குக் கூட பிரம்மாண்டம் தேவையாகிறது.

திரும்பி வருவார்கள் என்று நம்பிக்கை கொடுக்கும் அதே கைகள்தான் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துக்கொண்டே கொடுத்த நம்பிக்கைகளை உடைத்துக் கொண்டிருக்கிறது.

1 comment for “நிலையாமையில் தினம் தினம்தான் ஏழை சாகிறான்

  1. விஜய்
    April 8, 2014 at 4:29 pm

    போலி மனிதர்கள் நண்பரே

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...