கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும் தன் பக்தர்களையும் முன்னகர்த்தக்கூடிய வகையில் பல இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழகத்திலிருந்து வரும் அனைத்துப் படைப்பாளிகளையும் சந்தித்து உரையாடி வரவேற்கக்கூடியவர். ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ், சாரு நிவேதிதா, பிரளயன் எனப் பலரையும் தன் ஆசிரமத்திற்கு வரவழைத்து இலக்கியம், நவீன சிந்தனை என மட்டுமே பேசக்கூடிய ஆர்வளாரகச் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் நவீன இலக்கிய சிந்தனைக்களத்தில் இருக்கக்கூடியவர்களால் கலந்துரையாடி ஜெயமோகனை மலேசியாவிற்கு அழைத்து மூன்று நாள் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டது. பினாங்கு ஆசிரியர் பயிற்றகத்தின் விரிவுரையாளர் திரு.குமாரசாமி, சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்றகத்தின் விரிவுரையாளர் திரு.தமிழ்மாறன், வாசகரும் எழுத்தாளருமான மணிஜெகதீசன், எழுத்தாளர் அ.பாண்டியன், நான் (கே.பாலமுருகன்), தினகரன், எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனப் பலரும் இணைந்து இந்த நவீன இலக்கிய சிந்தனைக்களத்தை நடத்தி வருகிறோம்.
22ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை இந்த இலக்கிய முகாம் பினாங்கு தீவிலுள்ள கொடி மலையில் நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், வாசகர்கள், விரிவுரையாளர்கள் , ஆசிரியர்கள் என மொத்தம் 40 பேர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். பினாங்கு மலையிலிருந்து 5000 அடி உயரத்தில் இருப்பதுதான் இந்தக் கொடி மலை. பிரதர்ஸ் மாளிகை எனச் சொல்லக்கூடிய 5000 அடி உயரமுள்ள கொடி மலையிலிருந்து மேலும் 1500 அடி பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய இன்னொரு முக்கியமான அடர்ந்த மலைப்பகுதியில்தான் இந்த இலக்கிய முகாம் மூன்று நாள் நடைபெற்றது. பரபரத்த உலகத்துடன் எந்தத் தொடர்புமில்லாமல் மூன்று நாள் மலை உச்சியில் இருந்தது அனைவருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.
அமர்வுகள்: சனிக்கிழமை (22.03.2014)
முதல்நாள் 2.00 மணிக்கு ‘தமிழ்க் கவிதைகளின் மரபு’ பற்றி ஜெயமோகன் உரையாடினார். தமிழ் கவிதைகளின் மரபு பற்றிய பகிர்வில்,”கவிதைக்கான மொழி வேறு, தமிழ் படித்த பண்டிதர்கள் அறிந்த மொழி ஒரு நாளும் கவிதையை உணர உதவாது. கவிதை என்றதும் ஓர் இறுக்கமான பண்டித நிலைக்குள் எல்லோரும் போய்விடுகிறார்கள். திருக்குறள் என்பதும் கவிதைத்தான், ஆனால் இதுவரை மதிப்புரையினால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட வடிவம். திருக்குறளை அதன் மதிப்புரை, விளக்கவுரை இல்லாமல் யாரும் புரிந்துகொள்ள முற்பட்டதில்லை. மேலும் கவிதை என வந்ததும் எல்லோரும் மதிப்புரைகளையும் விளக்கவுரைகளையும் தான் எதிர்ப்பார்த்து வாசிக்கிறார்கள். இதுவே காலப்போக்கில் கவிதை வாசிப்பில் மிகப் பெரிய தேக்கநிலையை உருவாக்கிவிடுகிறது” என்றார்.
அடுத்த அமர்வின் மலேசியப் படைப்பாளர் ம.நவீன் அவர்கள் மலேசிய நாவல்களைப் பற்றி அறிமுகம் செய்தார். அவர் உரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நாவல்களின் உள்ளடக்கங்களைக் கதை போல சொல்லிச் சென்றார். எம்.குமாரன் செம்மண்ணும் நீலமர்களும், அ.ரெங்கசாமி எழுதிய இமையத்தியாகம், நினைவுச்சின்னம், சா.அ.அன்பானந்தன் எழுதிய மரவள்ளக்கிழங்கு, கே.பாலமுருகன் எழுதிய ‘நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்’ என இன்னும் சில மலேசியத் தமிழ் நாவல்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார். செம்மண்ணும் நீல மலர்களும் மற்றும் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் தமிழ் இலக்கிய பரப்பில் தணித்து தெரிய காரணம் அது வாழ்வின் அபத்தங்களையும் தன்னுள் கொண்டிருப்பதுதான் என்றார்.
ஜெயமோகன் அவர் பேசுகையில் மலேசியாவில் Great நாவல்கள் எழுதப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு முழு மலேசிய வரலாற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய கதை நாவலாக்கப்பட வேண்டும். அதுவே மிக முக்கியமான பதிவாக இருக்கும் என்றார். இந்திய மொழிகளில் வங்கம் மாராட்டியம் மலையாளம் போன்ற மொழிகளில் நாவல் இலக்கியம் கண்ட வளர்ச்சியை தமிழ் நாவல்கள் பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் அதே சமயம் தமிழ் சிறுகதை இலக்கியம் கண்ட உச்சத்தை மற்ற இந்திய மொழிகள் பெறவில்லை என்று கூறினார்.
இரவில் ஜெயமோகனின் நண்பரான ராஜமாணிக்கம் அவர்கள் ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்’ எனும் கட்டுரையைப் பற்றி அறிமுகம் செய்து பேசினார். சமூகத்தை முன்னெடுக்கக்கூடிய ஆளூமைகளைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். தன் ஆளுமையால் சிந்தனையால் சமூகத்தின் விதிகளை மாற்றியமைப்பதைப் பற்றி முக்கியத்துவப்படுத்திப் பேசினார். அப்படிப்பட்டவர்கள் ஏன் நம் சமூகத்தில் உருவாகாமல் போனதன் போதாமைகளை ஜெயமோகனின் நூலிலுள்ள விசயங்களை மேற்கோள்காட்டிக் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை : 23.03.2014
திரு.கோ.புண்ணியவான் அவர்கள் மலேசிய சிறுகதைகளைப் பற்றி மேலோட்டமான ஒரு பகிர்வைச் செய்துவிட்டு, எம்.ஏ.இளஞ்செல்வன் அவர்களின் ‘பாக்கி’ சிறுகதையை அனைவருக்கும் வாசிக்கக் கொடுத்தார். அனைவரும் வாசித்து அக்கதைக் குறித்துக் கருத்திட்டனர். முடிவில் ஒரு அதிர்ச்சியை அல்லது உச்சத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கதையின் அடர்த்தி கவனிக்கப்படாமல் எழுதப்பட்டுள்ளது என்கிற கருத்துகள் கூறப்பட்டது. மேலும் ஜெயமோகன் பேசுகையில் இதுபோன்ற கதைகளில் வட்டார வழக்கு என்பதைவிட கதாசிரியரின் உரைநடை மேலும் கதைக்குச் சரியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்றார்.
அடுத்ததாக இலக்கியக் கோட்பாடுகள் பற்றி ஜெயமோகன் அடுத்த அமர்வாகக் கலந்துரையாடலை முன்னெடுத்தார். “நவீனம், பின்நவீனம் என்னும் இலக்கிய கோட்பாடுகள் காலம் சார்ந்தவை அன்று. அவை படைப்பாளியின் இலக்கிய அறிவு சார்பை சார்ந்தவை. நவீனம் என்பது 1700- ஆண்டுகளில் தொடங்கிய உலக இலக்கிய அறிவை உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்ட படைப்பிலக்கியமாகும். பாரதி நவீன படைப்பாளி. காரணம் அவர் உலக இலக்கியம் அறிந்தவர். அதே கலகட்டத்தில் பல்வேறு தமிழ் பண்டிதர்கள் எழுதியவை நவீன படைப்புகள் அல்ல. காரணம் அவர்கள் உலக இலக்கியத்தை அறிந்திருக்கவில்லை. அன்பு, தாய்மை, கல்வி, ஜனநாயகம், சமுதாய புரட்சி, அறிவியல் மேண்மை போன்ற விழுமியங்களை சார்ந்து அவை எழுதப்பட்டன.
பின்நவீனம் 1980-ஆம் ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களினின்று வளர்ந்ததாகும். அறிவியலில் போலித்தன்மை, அரசியல் போராட்டங்களில் ஊழல், ஜனநாயகத்தால் விளையும் நேர்மை இன்மைகள் போன்றவை சமுதாய விழுமியங்களின் மீது சந்தேகங்களையும் கேள்விகளையும் வைத்தன. ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்கள் கட்டுடைப்பு செய்யப் பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டன.
இலக்கிய கோட்பாடுகள் பல்வேறு மேற்கத்திய தத்துவங்களை சார்ந்து வளர்ந்துள்ளன. இலக்கிய உக்திகள் இலக்கிய கோட்பாடுகளுடன் தொடர்பற்றவை. லீனியர் நான்-லீனியர் போன்றவை வடிவ உக்திகள். நேர்கூற்று முறையிலோ அயர்கூற்று முறையிலோ கதை சொல்வது கதை சொல்லும் உத்தி முறையை சார்ந்தது. கதை கூறலில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை இலக்கிய கோட்பாடுகளோடு சேர்த்து குழப்பிக் கொள்ள கூடாது” என ஜெயமோகன் கூறினார்.
எழுத்தாளர் சு.யுவராஜன் மலேசியக் கவிதை குறித்து பேச தலைப்பு வழங்கப்பட்டது. அவர் சிவா பெரியண்ணனின் இரு கவிதைகளை வழங்கினார். அதில் ‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’ என்ற கவிதை விரிவாக பேசப்பட்டது. குறிப்பாக இண்டர்லோக் நாவல் குறித்தும் அதன் அரசியல் சிக்கல்கள் குறித்தும் , ‘பறை’ எனும் சொல் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு சீற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் விவாதிக்கப்பட்டது. ஜெயமோகன் அக்கவிதை முழுக்கவே நாயைக் குறிப்பிடுவது போல இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என கருத்துரைத்தார்.
அன்றிரவில் கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் அனைவரும் தங்களையும் இலக்கியம் சார்ந்த தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். 2 மணி
நேரம் இந்த அமர்வு ஒரு வட்ட அறிமுகமாக நீடித்துச் சென்றது. இளம் படைப்பாளர் தினகரன் அவருடைய பகிர்வில் சொன்ன விசயங்கள் அனைவரையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். ஒரு கட்டிடப் பணியாளரான அவர் எப்படி அவ்வாழ்க்கை ஓர் இயந்திரத்தனமாக பெருகி வளர்ந்துள்ளது என்றும் எப்படி சக மனிதனைக்கூட கண்டுக்கொள்ளாமல் அவை வரண்டு இருக்கிறது என்றும், இவைகளிலிருந்து இலக்கியமே தன்னை மீட்டுக் கொண்டு வந்தது என்றும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். அதே போல பலர் தங்கள் வாழ்வின் அனுபவங்களை நகைச்சுவையாகவும் ஆழமாகவும் பகிர்ந்துகொண்டனர்.
திங்கள்: 24.03.2014 – மூன்றாவது நாள்
இலக்கியம் முகாமின் கடைசி நாளில் ஜெயமோகன் அவர்கள் இந்திய ஞான மரபைப் பற்றி விரிவாகப் பேசினார். 6 தரிசனங்கள், வேதக்காலத்திற்கு முந்தைய நம்பிக்கைகள், சமணம், பௌத்தம் என அவருடைய அந்த உரை நீடித்தது. வள்ளுவர் சமண முனிவர் என்பதற்கு போதுமான ஆதாரம் உண்டு. சமண மதமும் பெளத்த மதமும் இந்திய ஞானமார்க்கத்தில் பெரும் பங்காற்றி உள்ளன என்பதையும் கூறினார்.
ஐரோப்பிய வருகைக்கு முன் இந்தியாவில் இருந்த 18 சித்தர்கள் என்பது தோராயனமான ஒரு கணக்குதான். தெளிவான எண்ணிக்கை அன்று. சித்தர்கள் வேத சமயங்களை ஏற்றுக் கொண்டவர்களாகவும் ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் உள்ளனர் என இன்னும் விரிவாகப் பேசினார். மேலும் அயோத்திதாசர் குறித்தும் அவரை வாசிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினார்.
அன்றைய கடைசி அமர்வு சில கேள்விகளுடன் நிறைவுப்பெற்றது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அனைவரும் ஜீப்பில் மலையைவிட்டு இறங்கினோம். ஜீப்பை விட மனமும் அறிவும் அதிக தகவல்களைச் சுமந்திருப்பதாகப் பட்டது.