
2006ஆம் ஆண்டில் பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, மலேசிய இலக்கிய உலகில் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல நான் சுற்றிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது என் வயது 24. அப்போதைய என் தோற்றத்தை எண்ணிப்பார்க்கிறேன். பெரும்பாலும் உடலைவிடப் பெரிய அளவு கொண்ட உடை, பரட்டைத்தலை, ஒட்டிய உடல், நேர்த்தியற்ற தோற்றம், கண்ணில் மட்டும் கலங்கமற்ற கனவுகள்.
அப்போதும் எனக்கு இலக்கிய நண்பர்கள் இருந்தனர். பெரும்பாலும் என்னைவிட ஓரிரு வயது அதிகம் கொண்டவர்கள். எனக்கு அறிவுரை சொல்வதில் ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்களில் சிலருக்கு நான் எப்போதும் கேலிக்குரியவனாக இருப்பேன். அதற்குக் காரணமும் இருந்தது. நான் பேசும் எதுவும் நிகழ்காலத்துக்கு உரியதாக இருக்காது. ‘அடுத்த பத்து ஆண்டுகளில்…’ எனத் தொடங்கி ஒட்டுமொத்த மலேசிய இலக்கியச் சூழலையும் மாற்றியமைக்கும் கனவுலகத்தினுள் நுழைந்திருப்பேன். அதில் நானே கதாநாயகன். நானே மையம். அந்தப் பேச்சு சமவயது கொண்டவர்களை எரிச்சல் அடைய வைப்பது இயல்புதான்.
”நவீன், நீங்கள் கனவுலகவாசி… நாங்கள் நவீன இலக்கியவாதிகள். எனவே, எதையும் அறிவார்த்தமாகச் சிந்திப்பவர்கள்,” என்பார்கள். எனக்கு அதெல்லாம் கேலி என்றுகூட அப்போது புரியாது. 2006இல் மனுஷ்யபுத்திரனும் அவரைத் தொடர்ந்து ஜெயமோகனும் மலேசியா வந்தபோது தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபோது அதே நண்பர்கள் சொன்னார்கள், ”நவீன், நீங்கள் ஃபிடல் காஸ்ட்ரோபோல… உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடியும்; நிகழ்ச்சி நடத்த முடியும். நாங்கள் சே குவேராபோல. அதனால் நாங்கள் அடிப்படைக் கலைஞர்கள். கலைஞர்களால் இயக்கப் பணிகளைச் செய்ய முடியாது.”

அப்போதெல்லாம் எனக்குமே அப்படித்தான் தோன்றியது. நான் ஒரு கலைஞன் இல்லை. என்னால் செயல்பட மட்டுமே முடியும்போல என எண்ணிக்கொள்வேன். எனக்கு அதுவே நிறைவாகவும் இருந்தது. நண்பர்கள் எழுதினால் போதுமென அவர்களை ஊக்கப்படுத்துபவனாக இருந்தேன். மலேசியாவில் நல்ல இலக்கியவாதிகள் உள்ளனர். ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் போன்ற இலங்கை எழுத்தாளர்களால் தமிழ் இலக்கியச் சூழலில் தாக்கம் செலுத்த முடிகிறது என்றால் ஏன் மலேசிய எழுத்தாளர்களால் முடியாது என்பதே என் கேள்வியாக இருந்தது. அதற்குச் சிற்றிதழ் இலக்கியச் சூழலில் அவசியம் என உணர்ந்தபோது ‘வல்லினம்’ அச்சிதழ் தொடங்கினேன். தமிழக எழுத்தாளர்களுடான கலந்துரையாடல் அவசியம் என அறிந்தபோது அவர்களை அழைத்துவர முயன்றேன். எல்லாவற்றுக்கும் பணம் அவசியமாக இருந்தது. எனவே யாரிடமும் எப்போதும் நிதி உதவி கேட்கத் தயங்காதவனாகவே இருந்தேன்.
வல்லினம் அச்சு இதழுக்கு நூறு ரிங்கிட் கொடுக்கக்கூடிய முப்பது பேரை அணுகிப் பணம் கேட்டுத் துரத்திக்கொண்டே இருந்தேன். சிலர் என் தொந்தரவு தாங்காமல் தவிர்க்கவும் செய்தனர். சிலர் துரத்தியடிக்கும்படி பேசினர். இவையெல்லாம் எனக்குத் தொடக்கத்தில் அவமானமாக இருந்தபோது, டாக்டர் சண்முகசிவா சொன்னார், ”வாங்கும் பணத்தில் ஒரு ரிங்கிட் உன் சொந்தச் செலவுக்குச் சென்றால் மட்டுமே நீ அவமானப்பட வேண்டும். மற்றபடி பொதுநன்மைக்காக வாங்கும் பணத்தை எண்ணி அவமானப்பட ஒன்றும் இல்லை.” அப்போது முதல் முடிவெடுத்தேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் முயற்சிகளிலும் நிதியளிப்போர் பட்டியலில் நானும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் என் சொந்தப் பணமும் இருக்க வேண்டும். அப்படியானால் யார் பணமும் தவறியும் நம் பைக்குள் வராது. அன்றுமுதல் யாருடைய பகடிகளையும் அவதூறுகளையும் பொருட்படுத்தாமல் ஈராண்டுகள் ‘வல்லினம்’ அச்சிதழை வெளியிட்டேன். பா.அ.சிவம், மஹாத்மன் போன்றோரின் துணை எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

2009ல் முதல் கலை இலக்கிய விழாவைத் தொடங்கியபோது ‘வல்லினம்’ அச்சிதழ் இணைய இதழாக உருவெடுத்தது. இப்படியான விழாக்கள் பத்து ஆண்டுகள் தொடரும் என முதல் நிகழ்ச்சியிலேயே அறிவித்தேன். அதற்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கவும் தயாராக இருந்தேன். அதுவும்கூட கேலிப்பொருளானது. “பத்து ஆண்டில் என்ன நடக்கும் என இப்போது எப்படித் தெரியும்? இலக்கியம் என்ன அரசாங்கத் திட்டமா?” என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. நான் என் நோக்கத்தில் தெளிவாக இருந்தேன்.
பத்து ஆண்டுகள் கலை இலக்கிய விழா தொடரும் என அறிவித்தேனே தவிர நிதி பெறுவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆனால் எதையுமே சாதிக்காத அந்தக் காலத்தில் என் வாழ்வில் சில அதிசயங்களும் நடந்தன. முதல் கலை இலக்கிய விழாவில் மூன்று நூல்களை அச்சிடுவது என முடிவானது. அதற்கு ஏழாயிரம் ரிங்கிட் தேவையாக இருந்தது. அப்போதுதான் பெரு. அ. தமிழ்மணி அவர்கள் மூலம் அ. ராமகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். ‘மதுரா’ எனும் உணவகத்தில் அதே கலைந்த தோற்றத்தில் அவரைச் சென்று பார்த்தேன். என்னுடைய திட்டம் என்னவென்று கேட்டார். அப்போதெல்லாம் எனக்கு நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் பேச வராது. என் மனத்தில் இருந்த அத்தனை திட்டங்களையும் சொன்னேன். இப்போது எவ்வளவு தேவை என்றார். சொன்னேன். சில நாட்கள் கழித்து அவரிடமிருந்து அழைப்பு. ”உங்கள் வீடு தெரியவில்லை; ஆனால் குடியிருப்பின் தெருவில் காத்திருக்கிறேன்.” என்றார். நான் உடனே ஓடிச்சென்று அவரைப் பார்த்தேன். தன் காரில் இருந்து இறங்கியவர், நாளிதழ் காகிகத்தில் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார். ”தமிழ்மணி சொன்னதால் உங்களைச் சந்தித்தேன். ஏதோ கொஞ்சம் கொடுக்கலாம் என நினைத்தேன். நல்ல லட்சியத்தோட இருக்கிங்க… நல்லபடியா செய்ங்க,” என்றார். வீட்டுக்கு வந்து பொட்டலத்தைப் பிரித்தபோது அதில் ஏழாயிரம் ரிங்கிட் இருந்தது.

இதுபோல இன்னொரு சம்பவமும் நடந்தது. ஸ்டார் கணேசனின் நிழல்படங்களைக் கண்காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தேன். படங்களைப் பெரிதாக அச்செடுக்கும் செலவை அவரே ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்தப் படங்களைக் கண்காட்சிக்கான பலகையில் ஒட்ட வேண்டும். பஞ்சு தரித்த பலகை அது. அதைச் சீனர் ஒருவர் வாடகைக்கு விட்டார். மொத்தம் பத்து பலகைகள் தேவைப்பட்டன. நான் அந்தச் சீனரைச் சென்று பார்த்தேன். லாரி வாடகையுடன் சேர்த்து மூவாயிரம் சொன்னார். நான் அதிர்ந்துவிட்டேன். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றேன்.
அதற்கு தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதாக பதில் சொன்னார். நான் சோர்ந்துபோய் போர்ட்டை தேடி அலைந்தேன். எங்குமே கிடைக்கவில்லை. மீண்டும் ஒருநாள் அவரிடமே சென்றேன். என்னைக் கூர்ந்து பார்த்தவர், “எதற்கு இது தேவை?” என்றார். “ஒருவரின் நிழல்பட கண்காட்சிக்கு” என்றேன். “அவர் உனக்கு யார்?” என்றார். “யாரும் இல்லை,” என்றேன்.
“பின் எதற்காக?” என்றார்.
ஸ்டார் கணேசன் எவ்வளவு முக்கியமான நிழல்பட கலைஞர் என்பது தொடங்கி, மலேசியாவில் யாரும் அவரைக் கண்டுகொள்ளாத சூழலில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற அவரைச் சமூகத்தில் அறிமுகம் செய்வதன் தேவையென அவரிடம் விவரிக்கத் தொடங்கிவிட்டேன். அவர் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

பின்னர் மென்மையாக, “ஆயிரம் ரிங்கிட் தர முடியுமா?” என்றார். நான் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். நிகழ்ச்சிக்கு முதல் நாளே போர்ட்டை எடுத்து வந்து வைத்துவிட்டு, முடிந்தவுடன் அவர் ஊழியர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை.
இதையெல்லாம் என் சமகால இலக்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டே இருந்திருக்கிறேன். இதையெல்லாம் ஓர் அதிசயமாகச் சொல்வேன். அப்போது ஒரு நண்பர் சொன்னார், “நீங்கள் திக்கி திக்கிப் பேசுவதால் அவர்களுக்கு உங்கள் மீது இரக்கம் ஏற்பட்டிருக்கலாம்!” அதோடு நான் இக்கதைகளைச் சொல்வதை நிறுத்திக்கொண்டேன். ஆனாலும் நான் அவர்களுடன்தான் சுற்றிக்கொண்டிருப்பேன். எனக்கு இலக்கிய நண்பர்களென வேறு யாரும் இல்லை.
ஒருமுறை குழுவிலிருந்த ஒரு தோழியின் வீட்டுக்கு அவர் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பர்களும் உடன் வந்திருந்தனர். அந்தத் தோழியின் அம்மா எனக்கு ‘கறுப்பு நாய்’ எனப் பெயர் இட்டிருந்தார். நான் இல்லாதபோதெல்லாம் அந்தப் பெயரைச் சொல்லி அவர்களுக்குள் கிண்டலாகப் பேசிக்கொள்வது எனக்குத் தாமதமாகத் தெரிந்தபோது உடல் குறுகிப்போனது. நான் அவர்களுக்கு எப்போதுமே ஒரு கேலிப்பொருளாக இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டது அப்போதுதான்.

பெரும்பாலும் எந்த அவதூறைக் கண்டும் நான் பின் வாங்கியதில்லை. எனக்கு என் கனவுகள் இருந்தன. நான் அதைத் துரத்தியபடியே இருந்தேன். ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலில் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கான ஓர் இடம் வேண்டும். அதை உருவாக்க முதன்மையான படைப்புகளை உருவாக்கும் களம் தேவைப்பட்டது. முதன்மையான படைப்பாளிகளை முன்னிறுத்த விமர்சனம் அவசியமாக இருந்தது. எனவே, நான் என் பணிகளை வாரிக்குவித்துக்கொண்டேன். ஓர் எழுத்தாளர், ‘நவீன் பிச்சை வாங்கி இலக்கியம் நடத்துகிறான்,’ எனும் ரீதியில் தன் அகப்பக்கத்தில் பகிரங்கமாக எழுதியபோதும் எனக்கு எந்தச் சஞ்சலமும் ஏற்படவில்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விதைகள் துளிர்க்க வளமான நிலம் வேண்டும். நான் விதையை நடுவதற்கு முன்பாக பத்தாண்டுகள் நிலத்தை உழுவதென முடிவு செய்தேன்.
அச்சமயம் ஒரு சம்பவம் நடந்தது.
அப்போதும் ஷோபா சக்தி ஒரு நட்சத்திர எழுத்தாளர். 2010ஆம் ஆண்டில் அவர் நடத்திய ‘லும்பினி’ இணைய இதழுக்கு என்னை நேர்காணல் செய்தபோது அதை நண்பர்களிடம் ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டேன். ஒரு நண்பர் சொன்னார், “இலக்கியச் சூழலைவிட்டு வெளியேறப்போகிறவர்கள் மட்டுமே எதையும் உருப்படியாக எழுதாமல்; நேர்காணலெல்லாம் கொடுப்பார்கள்.” மலேசியாவில் பல திறமைசாளிகள் இருக்கும்போது புதிதாக வந்த என்னை நேர்காணல் செய்வது அவர்களுக்கு உவப்பாக இல்லை.

நான் நண்பர்கள் கூட்டத்தால் கேலி செய்யப்படவில்லை; வெறுக்கப்படுகிறேன் என உணர்ந்தது அன்றுதான். ஆனால் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. என் இயல்பில் இயங்கிக்கொண்டிருந்தேன். என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடிந்ததில்லை. அநாவசியமாக எதையாவது பேசிக்கொண்டிருப்பேன். பேச ஆரம்பித்தால் எங்கே நிறுத்துவது எனத் தெரியாமல் இருந்தேன். ஆனால் நான் மெல்ல மெல்ல பலரிடமிருந்தும் விலகிச் சென்றேன். 2013இல் பெரும்பாலும் தனியனாகத் திரிந்தேன். அதன்பின்னர் புதிய நண்பர்களின் ஒத்துழைப்பால் ‘வல்லினம்’ மீண்டும் புதிய எழுச்சியுடன் வளர்ந்தது. 2014இல் ஒரு ராஜநாகம்போல தோலை உரித்து எறிந்துவிட்டு வீரியத்துடன் சீறி எழுந்தது.
பத்து ஆண்டுகள் கலை இலக்கிய விழாவை நண்பர்கள் உதவியோடு நடத்தி முடித்தபோது 2018 நிறைவடைந்திருந்தது. உழுது உழுது நிலம் நன்கு வளமாகியிருந்தது. இப்படி 2007 முதல் வல்லினம் அச்சு இதழுக்கும் 2009இல் முதல் கலை இலக்கிய விழாவுக்குமாகக் கையேந்த தொடங்கி, இன்றுவரை பலருடைய அன்பினாலும் அரவணைப்பினாலுமே வல்லினத்தின் செயல்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்துள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் வல்லினத்துடன் தங்களைப் பிணைத்துக்கொண்ட நண்பர்கள் வழியாகவே அது தீவிரம் கொண்டது. அப்போது நான் ஒன்றை நன்றாக உணர்ந்தேன். ‘ஒருவன் தனியாக பெரும் பணிகளைச் செய்ய முடியாது; ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் குழுவாலேயே ஓர் அசாதரண பணியை நிறைவேற்ற முடியும். அந்த நண்பர்கள் இயல்பாக இணைவார்கள். பணியின் நேர்மறை அதிர்வலைகள் அவர்களை அழைத்து வரும்.

2018க்குப் பிறகு கலை இலக்கிய விழா கொண்டாடப்படவில்லை என்றாலும் வல்லினத்தின் செயல்பாடுகள் பலவகையிலும் தீவிரம் அடைந்துள்ளன. 2018க்குப் பிறகு புதிய படைப்பாளிகளின் வருகையும் தொடங்கியிருந்தது. புதிதாக வரும் இளம் படைப்பாளிகளிடம் இருக்கும் கனவுகளை அறிவதில் எனக்கு ஆர்வம் எழுந்தது. எல்லோரும் என்னைப்போல மூர்க்கமான கிறுக்குத்தனத்துடன் இருக்க வேண்டியதில்லை. ஆனால் நிதி பெறுவதில் இருக்கும் இயல்பான தயக்கத்தினால் அவர்கள் கனவுகள் தடைபடக்கூடாது என எண்ணிக்கொள்வேன். அந்த எண்ணத்தில்தான் கடந்த ஆண்டு இறுதியில் பதினோரு பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி புதிய படைப்பாளிகளின் செயலார்வத்தைக் கண்டடைந்தோம்.
பரிமித்தா, தமிழகத்தின் சிறந்த சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ‘அழியாச்சுடர்’ தளம்போல மலேசியாவில் ஒன்றை உருவாக்கும் தனது ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டார். கி. இளம்பூரணன் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான நவீன இலக்கியப் பயிலரங்கை நடத்த விரும்பும் தன் ஆர்வத்தைக் கூறினார். விஜயலட்சுமி காமன் ரதி விழாவை ஆவணப்படம் எடுக்கும் திட்டத்தை முன்வைத்தார். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டங்கள் இருந்தன.

நான் அவர்களை அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூறினேன். அதற்கான நிதித் தேவைகளை வல்லினம் நிறைவேற்றும் என்றேன். இப்படித்தான் ‘முதல் எழுத்து’ இலக்கிய விழாவுக்கான திட்டங்கள் தொடங்கின. இளம் படைப்பாளிகளின் செயலார்வம் பொருளாதார எல்லைகளால் நின்றுவிடக்கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. குடும்பத்தினராலோ, நண்பர்களாலோ அவர்களின் ஆர்வம் பரிகசிக்கப்படாமல் இருப்பது அவசியம் எனக் கருதினேன்.
***
திட்டமிட்டபடியே முயற்சிகள் தொடங்கின. பரிமித்தா சேகரிக்க வேண்டிய சிறுகதைகளின் பட்டியலை நானும் சிங்கை லதாவும் வழங்கினோம். நூல்களில் இருந்த சில பழைய சிறுகதைகள் சேகரிக்கப்பட்டு இலக்கவியல் வடிவத்திற்கு மாற்றப்பட்டன; தொகுக்கப்பட்டன. அதன் எழுத்துப்பிழைகளைச் சரிபாக்கும் பணியை கி. இளம்பூரணன், அரவின் குமார், சாலினி, புஷ்பவள்ளி ஆகியோர் செய்து முடித்தனர். கதைகளைப் பதிவேற்றும் தளத்தை தர்மா வடிவமைத்தார். தளத்துக்கு ‘நிரை’ எனும் பெயர் குழுவில் கலந்துபேசி முடிவானது. பாண்டியன் அந்தப் பெயரைப் பரிந்துரைத்தார். தோட்டங்களில் இரப்பர் மர வரிசையைக் குறிப்பிடும் சொல், எழுத்தாளர்களின் வரிசையைக் குறிக்க தேர்வு செய்யப்பட்டது. கதைகளைப் பதிவேற்றும் பணியை அரவின் குமார், தர்மா, பரிமித்தா ஆகியோர் செய்து முடித்தனர்.

விஜயலட்சுமி ‘காமன் ரதி விழா’ ஆவணப்படத்தை இயக்கத் தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்க, காமன் ரதி விழா நடைபெறும் டெங்கில் நகரில் வசிக்கும் கௌசல்யா அப்பணியைத் தொடர்ந்தார். இருபத்தோரு நாள் நடக்கும் காமன் ரதி விழாவை ஒளிப்பதிவாளர் செல்வம், கௌசல்யா துணையுடன் பதிவு செய்தார். ஆவணப்படத்துக்குத் தேவைப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் காட்சிகளை சாலினி உருவாக்கிக் கொடுத்தார். பெரும் உழைப்பைக் கோரிய பணியது. கௌசல்யா புதிய தொடர்புகளை காமன் ரதி விழா குழுவினருடன் உருவாக்கிக்கொண்டு தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார். ஒலிப்பதிவு பணி முடிந்தபின்னர், செறிவாக்கும் பணியில் (Editing) நான் இணைந்தேன். குரல் பதிவுக்கு சர்வின் உதவினார். ஆவணப்படத்துக்குக் ‘காமாண்டி’ எனத் தலைப்பிடப்பட்டது.
இதற்கிடையில் கி.கோகிலவாணியின் நூலைப் பதிப்பிக்க வேண்டுமென முடிவெடுத்தேன். அவரிடம் அதுவரை எழுதிய கட்டுரைகளைத் தொகுக்கச் சொன்னேன். புதிய படைப்பாளிகளின் செயல்பாடுகளை முன்வைக்கும் அவ்விழாவில் கோகிலவாணியின் முதல் நூல் வருவது சிறந்ததெனத் தோன்றியது. ஏற்கெனவே வல்லினத்தில் வெளிவந்திருந்த அக்கட்டுரைகளில் சாலினி மெய்ப்புப் பார்க்க, நான் கட்டுரைகளை மேம்படுத்தினேன். அரவின் குமார் ஒட்டுமொத்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்,

நிகழ்ச்சி மே 24 என முடிவானபோது அதற்கு முதல் நாள் இடைநிலைப் பள்ளி இலக்கிய ஆசிரியர்களுக்கான பயிலரங்கை நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். பயிலரங்கின் முழுப்பொறுப்பையும் கி. இளம்பூரணன் எடுத்துக்கொள்ள ‘மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்’ ஆதரவு வழங்கியது. கிட்டத்தட்ட 95 ஆசிரியர்கள் பயிலரங்கிற்குப் பதிவு செய்தது ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம். மூத்த எழுத்தாளர் என்பதால், எங்கள் திட்டங்களை ஆர்வத்துடன் அங்கீகரித்தார்.
நான்கு முயற்சிகளும் மெல்ல மெல்ல முழு உருப்பெற்று வந்துகொண்டிருக்க, நிகழ்ச்சிக்கான சிறப்புப் பிரமுகர்களை முடிவுசெய்தோம்.

சமகாலத்தில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் முதன்மையான பணிகளைச் செய்பவர் அருண் மகிழ்நன். தமிழ் வளங்களை எண்மமயமாக்க (digitize) வேண்டும் என்னும் பெருநோக்கோடு 2013ஆம் ஆண்டு தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தைத் (Tamil Digital Heritage) தொடங்கி 1965ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான தமிழ் இலக்கிய வெளியீடுகளில் பெரும்பான்மையை எண்மமயமாக்கி பொதுவில் அணுகக்கூடியதாக்கினார். அண்மையில் அவரது முன்னெடுப்பில் சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் உருவானது. அவரை இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கச் சொல்வது சிறப்பெனத் தோன்றியது. அவரே ‘நிரை’ தளத்தை வெளியிடுவதும் ஏற்பானதாக இருந்தது.
அதுபோல, கோகிலவாணி எழுதியுள்ள நூல் அடிப்படையில் கலைஞர்களின் அரூபமான உள்ளுணர்வுகளைப் பேசுவதால் அந்நூலை ஒட்டி பேச சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களே பொருத்தமானவர் என முடிவானது.
கௌசல்யா – செல்வன் உழைப்பில் தயாரான ஆவணப்படத்தை வெளியிட்டு உரையாற்ற இயக்குநர் சஞ்சய் பெருமாள் அவர்களைத் தேர்வு செய்தோம்.

புதிய படைப்பாளிகளுக்கான விழா என்பதால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வல்லினம் குறுநாவல் போட்டிக்கான பரிசளிப்பையும் இவ்விழாவில் இணைப்பதென முடிவானது. அந்த அமர்வை ஒட்டி மா. சண்முகசிவா அவர்களைச் சிறப்புரையாற்ற அழைத்திருந்தோம். ஆனாலும் நிகழ்ச்சியில் ஏதோ ஒன்று விடுபட்டிருந்தது. மலேசிய இலக்கியச் சூழலை நன்கு அறிந்த தமிழக எழுத்தாளர் ஒருவர் இலக்கிய உரை ஆற்றுவது இந்நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதினோம். மலேசியாவில் நவீன இலக்கியம் தோன்றிய ஐம்பதுகள் முதல் இன்றுவரை இங்கு நடந்த, நடக்கின்ற முயற்சிகளை அறிந்தவர் எழுத்தாளர் சு. வேணுகோபால். அவரைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது சரியெனப்பட்டது. நிகழ்ச்சியின் ஒழுங்கு முடிவானபோது அதன் நிறைவையும் முன்னமே மனத்தில் ஓட்டிப்பார்க்க முடிந்தது.
***
மே மாதம் 23–24 ஆகிய இரு நாட்கள் கி. இளம்பூரணன் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய ஆசிரியர்களுக்கான நவீன இலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி இயக்குநர் திருமதி ப. விஜயலட்சுமி தலைமையேற்றார். மே 23 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நவீன இலக்கியம் குறித்த அறிமுகம் நடைபெற்றது. இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியப்பாடத்தின் தேவை, நவீன இலக்கியம் என்றால் என்ன, நவீன நாவல்கள், நவீன கவிதைகள் எனும் தலைப்பில் முதல் நாள் உரைகளுடன் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. மறுநாள் நவீன சிறுகதை, தமிழ் இலக்கியப் பாடம் குறித்த விளக்கங்கள் பற்றிய அரங்குகள் இடம்பெற்றன.

மலேசியாவெங்கும் இருந்து வந்திருந்த இலக்கிய ஆசிரியர்கள் கருத்தரங்கில் பகிரப்பட்ட கருத்துகளை ஒட்டி தங்களின் ஏற்பையும் முரணையும் கலந்துரையாடலில் வெளிப்படுத்தினர். அது ஆரோக்கியமானது. விவாதங்களே சிந்தனைக்கு வழிவகுக்கும். லாவண்யா, சல்மா, புஷ்பவள்ளி, சாலினி, அரவின் குமார், சண்முகா, சர்வின் செல்வா ஆகியோர் உதவியால் இந்தப் பட்டறைகள் நேர்த்தியாக நடந்து முடிந்தன.
மறுநாள் ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சி 24 மே ஞாயிறன்று ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் சு.வேணுகோபால், சிங்கப்பூரிலிருந்து பண்பாட்டுச் செயல்பாட்டாளர் அருண் மகிழ்நன், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, இயக்குநர் சஞ்சய் குமார், டாக்டர் சண்முகசிவா ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

‘முதல் எழுத்து’ நிகழ்ச்சி நான்கு அங்கங்களாக நடைபெற்றது. சண்முகாவின் பாடலுடன் நிகழ்ச்சி சரியாக 2 மணிக்குத் தொடங்கியது.
முதல் அங்கமாக, எழுத்தாளர் பரிமித்தா தொகுத்த சிறந்த மலேசியச் சிறுகதைகளின் இணையத்தளமான ‘நிரை’ வெளியீடு கண்டது. அருண் மகிழ்நன் அவர்களே தளத்தை வெளியீடு செய்தார். திரு. அருண் மகிழ்நன் அவர்கள், தமது உரையில் ‘செய்க, இணைந்து செய்க, தொடர்ந்து செய்க’ ஆகியவையே தாம் செயலூக்கத்துடன் இருப்பதற்கான விதிகள் எனக் குறிப்பிட்டார். அவர் உரையும் இந்தக் கூற்றையே சாரமாகக் கொண்டிருந்தது.
தொடர்ந்து எழுத்தாளர் பரிமித்தா ‘நிரை’ தளத்தின் தேவை குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கலைகள் தொடர்பான ‘அப்சரா’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடு கண்டது. அப்சரா கட்டுரைகள் புனைவுக்கு உரிய அழகியலோடு இருப்பதாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தம் உரையில் குறிப்பிட்டார்.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி உரை
கோகிலவாணி தாம் நூல் எழுதிய பின்னணியையும் அவர் எதிர்ப்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக, கவிஞர் கெளசல்யா இயக்கிய ‘காமாண்டி’ ஆவணப்படச் சுருக்கக் காட்சி திரையிடப்பட்டது.
ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான சித்திரத்தையும் தம்முடைய மதிப்பீடுகளையும் இயக்குநர் சஞ்சய் குமார் பகிர்ந்தார். காமன் ரதி விழா குறித்த இந்தப் பதிவின் அவசியத்தைப் பாராட்டிய அவர், ஆவணப்படம் கலைத்தன்மை குறைபாடு கொண்டதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
கௌசல்யா தம் முன் அனுபவத்தை அரங்கில் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து இந்த விழாவுக்கு தொழில்நுட்ப ரீதியாகப் பணிகள் ஆற்றிய சாலினிக்கும் தர்மாவுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இடையில் நான் அனுமதி கேட்டு சுருக்கமான உரையொன்றை ஆற்றினேன். மலேசிய நூல்களை இலக்கவியல் வடிவத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஜயலட்சுமிக்கு வல்லினம் பொருளியில் ரீதியிலும் செயல்திட்டங்களிலும் துணையாக இருக்குமென அறிவித்தேன். முக்கியமாக வெளியிடப்பட்ட ‘அப்சரா’ நூலின் மொத்தத் தொகையும் விஜயலட்சுமியின் முயற்சிக்கு வழங்கப்படும் எனக் கூறினேன்.
தொடர்ந்து எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களின் இலக்கிய உரை இடம்பெற்றது. மலேசியாவில் இலக்கியச் செயல்பாடுகள் எவ்வாறு தொடக்கம் முதல் தொடர்ந்து வருகின்றன என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது. மலேசியாவில் பெருஞ்செயலாற்றிய கோ. சாரங்கபாணி, சை.பீர்முகம்மது ஆகிய முன்னோடிகளின் உழைப்பைக் குறிப்பிட்டு எழுத்தாளர் சு. வேணுகோபால் பேசினார். அத்தகையோரை வழிநடத்திய ஊக்கம் மிக்க படைப்புக்கரம் ஒவ்வொருவரிடமும் இருப்பதைக் குறிப்பிட்டு இளைஞர்களை அறிவு செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்குமாறு பேசினார்.
இறுதியாக, வல்லினம் நடத்திய உயர்கல்வி மாணவர்களுக்கான குறுநாவல் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வாழ்த்துரையை மா. சண்முகசிவா வழங்கினார். விமர்சன உரையை நடுவர் குழுவில் இருந்த முனைவர் கி. இளம்பூரணன் ஆற்றினார். முதல் நிலையில் விக்னேஷ்வரனும், இரண்டாவதாக ஷர்மிளாவும் மூன்றாவதாக தரகேஸ்வரரும் போட்டியில் வென்றிருந்தனர், டிவினா என்ற மாணவிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
***
நிகழ்ச்சி முடிந்த மறுநாளே நான் கேரளா புறப்படும் திட்டம் இருந்ததால் யாரிடமும் சாவகாசமாகப் பேசும் மனநிலையில் இல்லை. பொருள்களை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு வீடு திரும்ப இரவு எட்டாகிவிட்டது. களைப்புக்கு மத்தியில் மகிழ்ச்சியும் நிறைவும் மனத்தில் குடிகொண்டிருந்தது. நிறைய பாராட்டும் வாழ்த்தும் வந்துகொண்டிருந்தன. அது எனக்கானதல்ல எல்லாருக்குமானது. நண்பர்கள் இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியமில்லை.

பெரும் பணிகளில் ஈடுபடும் ஒருவன் காலத்தை அறிவது அவசியம். வரலாற்றை அறிவதன் வழியாகவே நிகழ்காலத்தையும் அறிய முடியும். அப்படி இக்காலம் ஒரு பொற்காலம் என்பது என் அவதானிப்பு. இந்தக் காலத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு இயங்குவது பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். அதை நிகழ்த்த சுயநலமற்ற மனமும் ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்களுமே அவசியம்.
