“மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!” சாமிநாதன் முனிசாமி

சாமிநாதன் முனிசாமி ஒரு வரலாற்று ஆய்வாளர்; செயற்பாட்டாளர். விடுதலைக்கு முந்தைய மலேசியாவின் தொழிலாளர் மற்றும் விடுதலை போராட்டம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு தொடங்கி தன்னுடைய வலைதளத்தில் அகில மலாயா தொழிற்சங்கத் தலைவராகச் செயல்பட்ட மலாயா கணபதியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வருகிறார். ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சயாம்-பர்மா இரயில்வே கட்டுமானப் பணியில் தமிழர்களின் பங்கேற்பு குறித்து விரிவாக ஆராய்ந்து இணையத்தளத்தில் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருக்கிறார். சிட்டிசன்ஸ் ஜர்னல் இணையத்தளத்தில் பழங்குடி நில உரிமைகள், வரலாற்றுச் சின்னங்கள் குறித்து கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

https://www.malaya-ganapathy.com/
மலாயா கணபதி இணையத்தளம்

உங்களின் பின்னணி பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்

சாமிநாதன்: நான் லாபிசில் இருந்த மெல்வில் தோட்டத்தில் பிறந்தேன். இத்தோட்டம் பின்னாளில் சுங்கை லாபிஸ் எனப் பெயர் மாற்றம் கண்டது. தந்தை முனிசாமி பேராக் தெலுக் இந்தானில் இருக்கும் நோவோஷ்குஷியா தோட்டத்தில் பிறந்தவர். தாயார் திருமதி தனலட்சுமி ஹெமில்டோன் தோட்டத்தில் பிறந்தவர். பெற்றோர் திருமணம் புரிந்தபின் மெல்வில் தோட்டத்துக்குப் பெயர்ந்தனர். என்னுடன் உடன்பிறந்தவர்கள் அறுவர். என்னுடைய தொடக்கக்கல்வி லாபிஸ் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியது. தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் அதிகமான கண்டிப்புடன் இருப்பதை அப்பாவிடம் சொல்லப் போக ஸ்ரீ லாபிஸ் தேசியப்பள்ளிக்கு மாற்றப்பட்டுத் தொடக்கக்கல்வியை நிறைவு செய்தேன். என்னுடைய படிவம் மூன்று வரையிலான இடைநிலைக்கல்வியை லாபிஸிலிருந்த முன்சி இப்ராகிம் இடைநிலைப்பள்ளியில் பயின்றேன். அதன் பிறகு, கிம்மாசில் இருந்த துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 வரையிலான இடைநிலைக்கல்வியை முடித்தேன். பிறகு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் கடற்பொறியியல் துறையில் இளங்கலையை முடித்தேன். தற்போது பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தில் உணவு விநியோகத்துறையில் பணிபுரிகிறேன்.

வரலாற்றின் மேல் ஆர்வம் உங்களுக்கு எங்கிருந்து தொடங்குகிறது?

சாமிநாதன்: இடைநிலைப்பள்ளியில் பயிலும் போதே வரலாற்றுப்பாடத்தில் வரும் விடுதலை போராட்டத் தகவல்களைக் கற்று நினைவில் வைத்திருப்பது விருப்பத்துக்குரியதாக இருந்தது. அங்கிருந்துதான் வரலாற்றார்வம் தொடங்கியது. பின்னர், ஜப்பானில் தொழிற்பயிற்சி மேற்கொள்ளச் சென்ற போது வரலாற்றார்வம் கூடியது. ஜப்பானின் மூன்று முக்கியமான சாமுராய்களாகக் கருதப்படும் ஒடா நொபுநாகா (Oda Nobunaga), தொயொதோமி ஹிடேயோஷி (Toyotomi Hideyoshi), தொகுகாவா லெயாசு (Tokugawa Leyasu) ஆகிய மூவரையும் இன்றளவும் வீரத்தின் அடையாளமாய்ப் போற்றப்பட்டு விழாக்கள் கொண்டாடுவது வழக்கம். மூன்று வெவ்வேறு சமுராய் பரம்பரைகளைச் சேர்ந்த இந்த மூன்று தளபதிகளும் பெரும் வீரர்களாகவும் ஒருவரையொருவர் போரில் வென்றும் அழித்தும் ஜப்பானிய வரலாற்றில் நிலைபெற்ற வீரர்கள். இந்த மூன்று சமுராய் பரம்பரையைச் சேர்ந்தவர்களையும் எதிர்த்து நின்று போரிட்டவனாக டகேடா ஷிங்கன் (Takeda Shingen) எனும் வீரன் கருதப்படுகிறான்.  மக்களில் ஒருவனாக நின்று இந்த மூவரையும் எதிர்த்து நின்றதால் இன்றளவும் மாட்சுமோ, நகானோ ஆகிய பகுதிகளில் சமுராய்களுக்கு நிகராக டகேடாவுக்காக ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தக்கிடாவின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு அக்கிரா குராசாவா ககேமுஷா (Kagemusha) எனும் பெயரில் திரைப்படமாக எடுத்தார்.

டகேடாவை நினைவுகூறும் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்துக்கு நடத்தப்படும். அக்கொண்டாட்டங்களின்போது, பொதுமக்கள் சமுராய் வீரர்களைப் போல உடைகளை அணிந்து கொண்டு சமூக விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாய் நடந்து செல்வர். அவர்களின் நடை, உடை அலங்காரத்துக்கும் பதாகைகளின் வாசகங்களுக்கும் எவ்விதத் தொடர்புமின்றி இருக்கும். ஆனால், இதற்கு மாறாக நகானோ பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் வெட்டப்பட்ட பைன் மரங்களில் ஆட்களை அமரச் செய்து மேலிருந்து உருட்டிவிடும் சாகசப் போட்டிகள் சட்டவிரோதமாக நடத்தப்படும். இந்தக் கொண்டாட்டங்களில் பார்வையாளனாகப் பங்கேற்கும் போது, தமிழர்களிடையே இம்மாதிரியான வரலாற்றை நினைவுகூறும் நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் இல்லாததை உணர்ந்தேன்.

தமிழ்ச்சமூகத்தில் வீரர்களாக அடையாளம் காணப்படும் ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்ற வரலாற்று மாந்தர்கள் மலேசியாவுக்குப் படையெடுத்து வந்து இங்குள்ள பண்பாட்டுக்கு எந்தப் பங்களிப்பும் ஆற்றாமல் திரும்பியவர்கள். அதனாலே அவர்களை மலேசியத் தமிழ்ச்சமூகத்துக்கான வீரத்தின் அடையாளங்களாக ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. பயிற்சி முடிந்து மலேசியா திரும்பியதும், மலேசியத் தமிழர் வரலாற்றில் இருக்கும் வரலாற்று நாயகர்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன்.  அப்படித்தான் செம்பருத்தி அறவாரியம் வெளியிட்ட ‘மலாயா கணபதி’ எனும் நூல் வாசிக்கக் கிடைத்தது. அந்த நூலில் மலாயா கணபதி பற்றிய பெருமித வரலாறுகளே அதிகமும் காணப்பட்டன. அதில் மலாயா கணபதியின் ஆசிரியரான குருதேவன் சொன்ன தகவல்களை ஒட்டிப் பலர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து இரா. உதயசங்கர் ‘மாவீரன் மலாயா கணபதி’ நூலை 1998 இல் வெளியிட்டார். அந்த நூலைப் படித்து விட்டு மலாயா கணபதி பற்றிய தொடர் தேடலில் ஈடுபட்டேன். வயது மூத்தவர்களைப் பார்த்தால் உடனே மலாயா கணபதி பற்றி விசாரிக்கத் தொடங்கி விடுவேன். அவர்கள் சொல்லச் சொல்ல கணபதியைப் பற்றிய சித்திரத்தை எழுப்பிக் கொண்டேன். அந்தத் தொடர் தேடல்தான் என்னுடைய வரலாற்றார்வத்தை இன்றளவும் அணையாமல் காத்து வருகிறது.

மலாயா கணபதியைப் பற்றிய உங்கள் ஆய்வைக் கூறுங்கள்

சாமிநாதன்: செம்பருத்தி இதழில் வரும் செய்திகளிலிருந்து மலாயா கணபதியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்தும் சில தகவல்களைப் பெற்றேன். அவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு மலாயா கணபதி பற்றி வலைப்பக்கம் ஒன்றைத் தொடங்கி அவரைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினேன். சிங்கப்பூரில் இருக்கும் தென் கிழக்காசிய ஆய்வு மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜியாப் வேட் ( Prof Geoff Wade) சிங்கப்பூரில் 1965இல் இடதுசாரி அரசியல் போராட்டங்களை முடக்க அரசால் நடத்தப்பட்ட Operation Coldstore நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவரிடம் தொடர்பு கொண்டு கணபதி பற்றிய தகவல்கள் ஏதும் இருந்தால் தெரியப்படுத்த வேண்டினேன்.  மலாயா கணபதி பற்றி அடிக்கடி குறிப்பிடப்படும் வரலாற்றுக் குறிப்பு ஒன்று இருக்கிறது. அதாவது அவரது தூக்குத்தண்டனையை நிறுத்தச் சொல்லும் அரசாணை கிடைக்கப்பெற்றும் மலாயா பிரிட்டன் உயர் ஆணையர் சர் ஹென்றி கர்னி அதைப் படிக்காமலே தூக்குத்தண்டனையை நிறைவேற்றினார் என்பதை அவரிடம் சொன்னேன்.

முதலில், அந்தத் தகவல் திரைப்படப்பாணியில் அமைந்திருப்பதாக வேடிக்கையாகச் சொன்னார். அதன் பிறகு, லண்டனில் அமைந்திருக்கும் ஆவணக்காப்பகத்தில் மேற்கொண்ட தேடலில் கணபதியின் தூக்குத்தண்டனையை நிறுத்தச் சொல்லும் இங்கிலாந்து பிரதமர் துறையிலிருந்து அனுப்பப்பட்ட தந்தி அதிகாலை நான்கு மணியளவில் மலாயாவுக்கு அனுப்பபட்டிருப்பதை அவர் உறுதிபடுத்தினார். அந்தத் தந்தி கிடைப்பதற்கு முன்னரே மலாயா கணபதி தூக்கிலிடப்பட்டார். கணபதியின் தண்டனை நிறைவேற்றத்தை நியாயப்படுத்தும் வகையில் காலை 7.30 மணியளவில் சர் ஹென்றி கர்னி தந்தியொன்றை அனுப்பியிருந்தார். அத்தந்தியில் கணபதியின் தண்டனை நிறைவேற்றத்தின் இன்றியமையாமையை விளக்கியிருப்பார். கணபதியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் அதே போன்ற குற்றங்களில் ஈடுபட்ட மற்ற கைதிகளும் சலுகையைக் கோரத் தொடங்கிவிடுவார்கள். அத்துடன், தண்டனை நிறைவேற்றம் மலாயா பிரிட்டன் செயலகத்தின் ஒட்டுமொத்த முடிவன்று, அது சிலாங்கூர் சுல்தானின் முடிவுக்கும் உட்பட்டது என்கிறார். இம்மாதிரியான தகவல்கள் கிடைக்கப்பட்டதும், ‘மலாயா கணபதி’ நூலின் உள்ளடக்கத்தில் மிகைப் பெருமிதங்களுடன் உண்மை வரலாறும் கலந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.

மலாயா கணபதியைப் பற்றி அதிகமும் அறியப்படாத செய்தியாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

சாமிநாதன்: அறியப்படாதது எனச் சொல்வதைவிட நான் கூர்ந்து கவனித்ததைச் சொல்லலாம். அக்டோபர் 20, 1948-இல் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் போராட்டத்தில் கணபதி தலைமையேற்றிருந்த அனைத்து மலாயா தொழிற்சங்கச் சம்மேளனத்தின் (Pan Malayan Federation Trade Union) பங்களிப்பு மிக முக்கியமானது. பிரிட்டன் அரசு மலாயாவுக்கு முன்மொழிந்த கூட்டரசு சட்டத்துக்கு மாற்றாக மக்கள் அரசியலமைப்புச் சட்டம் எனும் மாற்றுச் சட்டம் ஹர்த்தால் போராட்டத்தின் போது முன்மொழியப்பட்டது. அந்தப் போராட்டத்தால் பிரிட்டன் அரசாங்கத்துக்கு 20 மில்லியன் பவுண்டு நட்டம் ஏற்பட்டது. அத்தகையப் பெரும் போராட்டத்தை நடத்தியவர்களில் மலாயா கணபதியும் ஒருவர். அக்காலக்கட்டத்தில் அரசு தரப்பு செய்திகளையே அதிகம் வெளியிடும் ‘மலாய் மெயில்’ நாளிதழின் முன்பக்கத்தில் கணபதியின் உரை இடம்பெற்றிருந்தது. அந்த உரையில், மலாயாவில் வெவ்வேறு இனக்குழுவினரின் பணிச்சூழலுக்கேற்ப தேவைப்படும் உணவுகளை ஒட்டி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுதல், தொழிலாளர் காப்புறுதி, தோட்டங்களில் நிர்வாகத்தினர் வெளியாட்களின் வருகையைத் தடுக்கச் செய்யும் நடைமுறைகளின் அபத்தம் ஆகியவற்றைக் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தென்கிழக்காசிப் பகுதியில் சோசிலிசம், கம்யூனிசம் ஆகிய கொள்கைகளின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. அரசுக்கு எதிராகப் பேசும் எல்லா தரப்பையும் கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தும் போக்கு மிகுந்திருந்தது. மலாயாவில் வலுவாக இயங்கிய தொழிற்சங்கங்களை முடக்குவதற்காக பிரிட்டனிலிருந்து தொழிற்சங்க ஆலோசகரான ஜான் அல்பிரட் பிரேசியர் வரவழைக்கப்பட்டார். மலாயாவில் தீவிரமாக இயங்கிய தொழிற்சங்கங்களை முடக்கி அரசுக்கு இணக்கமான போக்கு கொண்ட தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.  தொழிற்சங்கச் சம்மேளனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. தொழிற்சங்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்றுதான் பிரிட்டனில்கூட சட்டம் இருந்த நிலையில் தொழிலாளர்கள் ஒன்றுபடுதலைத் தடுப்பதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

கணபதியின் செயற்பாடுகளின் வாயிலாகக் அவர் களப்போராட்டவாதியாகயும் மட்டுமின்றி சமூகச் சிந்தனையாளராகவும் இருந்தது தெரியவருகிறது. அவருடைய சிந்தனைப் போக்கு எங்கிருந்து தொடங்குகிறது?

சாமிநாதன்: முதலாவதாக, மைக்கல் ஸ்டேன்சன் எழுதிய (Class, Race and Colonialism in Peninsular Malaysia) நூலில் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் கணபதியின் சிந்தனையில் முதன்மையான தாக்கம் செலுத்தியது என்கிறார். அதே சமயத்தில் சிங்கப்பூரில் இயங்கிய அகமுடையார் சாதிச் சங்கத்தின் போராட்டங்களும் கணபதியின் சிந்தனையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தது. 1920களில் தமிழ்நாட்டில் பிறமலைக்கள்ளர்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட கைரேகைச் சட்டத்தை எதிர்த்து கலகம் செய்த பெருங்காமநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 பேர் காவற்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இயக்கங்களும் போராட்டங்களை நடத்தின.   அதன் விளைவாக, சிங்கப்பூரிலும் இயங்கிய அகமுடையார் சங்கம் ஏனைய ஒடுக்கப்பட்டச் சாதி இயக்கங்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது. இந்தச் சூழலில் சிங்கப்பூரில் அகமுடையார், கள்ளர் போன்ற இடைநிலைச் சாதியினரும் தாழ்த்தப்பட்டச் சாதியினரும் இணைந்து சமூகப்போராட்டங்களைச் செய்திருக்கின்றனர். கணபதியின் தந்தை அகமுடையார் சங்கத்தில் உறுப்பினராக இருந்து இயக்கச் செயற்பாடுகளில் பங்கெடுத்திருக்கிறார். அகமுடையார் பின்னணியிலிருந்து வரும் கணபதியும் அங்கிருந்தே சமூகச் சிந்தனை, மனித விடுதலைக்கான சிந்தனையைப் பெற்றிருக்கலாம் எனக் கருதவும் இடமிருக்கிறது.

கணபதிக்கு முன்னரே மலாயாவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரும் தொழிலாளர் கிளர்ச்சியான கிள்ளான் கலகத்தை முன்னெடுத்த ஆர்.எச்.நாதனுக்கும் கணபதிக்குமான உரையாடல் நிகழ்ந்திருக்கிறதா?

சாமிநாதன் : 1941ஆம் ஆண்டில் நடைபெற்ற கிள்ளான் கலகத்தைப் பற்றிய செய்திகள் கோலாலம்பூரில் இயங்கிய தமிழ்நேசன் நாளிதழில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே காலக்கட்டத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு நாளிதழில் கிள்ளான் கலகத்தைப் பற்றிய போதிய செய்திகள் இடம்பெறவில்லை. அஞ்சல், தந்தி வளர்ச்சி பரவலான காலக்கட்டத்தில் கிள்ளான் கலகத்தைப் பற்றிய செய்திகள் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மலாயாவிலும் சிங்கப்பூரிலும் நிலவிவந்த காந்தி மற்றும் பெரியார் ஆகிய இரண்டு ஆளுமைகளை மையப்படுத்தி வெவ்வேறு அரசியல் நிலைபாடுகள் கொண்ட இயக்கங்கள் செயற்பட்டதை மைக்கேல் ஸ்டேன்சன் காரணமாகக் காட்டுகிறார். தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் கோ. சாரங்கபாணி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். தமிழ் நேசன் நாளிதழ் காந்திய இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டது. இந்த முரண்பட்ட அரசியல் நிலைபாட்டின் பின்னணியில் இருந்த ஆர்.எச்.நாதனும் கணபதியும் உரையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

மலேசியாவில் இருந்த இடதுசாரி இயக்கங்களில் இந்தியர்களின் பங்கேற்பு எவ்வாறு இருந்தது?

சாமிநாதன்: இந்தியர்கள் கம்யூனிஸ்டு போராட்டத்தில் பங்கேற்றதற்கு பிரிட்டன் அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வே முக்கிய காரணமாக இருந்தது. தோட்டங்களில் இந்தியர்கள் நடத்தப்பட்ட விதம், பொருளாதாரச் சூழல் ஆகியவையே இந்தியர்கள் கம்யூனிஸ்டு இயக்கங்களில் சேர்வதற்கான காரணங்களாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் பிரிட்டனுக்கு எதிராக இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) பங்கேற்ற இந்தியர்கள் பலரும் போருக்குப் பின்பு கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தனர்.

ஆனால், பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களில் இந்தியர்களின் பங்கேற்பு பற்றி முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இடதுசாரி இயக்கங்களில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட்டதால் தங்கள் முன்னோர்கள் இடதுசாரி இயக்கங்களில் பங்கேற்றதைப் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யாமல் தவிர்த்தனர். சுங்கைப்பட்டாணியில் இருந்த கணபதியின் அண்ணன் மகனை நானும் மறைந்த தொழிற்சங்கவாதி ஜீ.வி. காத்தையாவும் சென்று சந்தித்தோம். அவர் தன்னுடைய பால்யக்காலத்தில் கணபதியைச் சந்தித்திருக்கிறார்.  இருப்பினும், கணபதியுடன் தொடர்பு வைத்திருந்தால் அரசு கண்காணித்துப் பலவகையிலும் தொல்லை தரும் என்பதால் கணபதியின் உறவினர்கள் என்பதை எங்கும் வெளிப்படுத்தாமல் மறைத்திருக்கின்றனர். கம்யூனிஸ்டுகள் பலரும் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்று சமூகத்திலிருந்த பொதுப்பார்வையும் இந்த மாதிரியான சிந்தனைக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதன் தாக்கம் பலகாலம் இருந்ததல்லவா?

சாமிநாதன்: ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஜொகூர் புலாயில் வசித்து வந்த எழுத்தாளர் பெருமாள் தன்னுடைய இளமைக்காலத்தில் நிகழ்ந்த சம்பவமொன்றைப் பகிர்ந்து கொண்டார். கணபதி தூக்கிலிடப்பட்டு பத்தாண்டுகள் கழித்து குளுவாங்கில் அரங்கேற்றப்பட்ட மேடை நாடகமொன்றில் மலாயாவுக்குச் செல்லப் போகிறேன் என ஊரிலிருந்து புறப்படும் மகனிடம், ‘’கணபதியைத் தூக்கில் போட்ட ஊருக்கா போற’’ எனத் தாய் கேட்பதாக வரும் காட்சி இடம்பெற்றது. அந்த ஒரு காரணத்துக்காக நாடக இயக்குநர், கதையாசிரியர், நடிகர்கள் என அனைவரையும் மூன்று நாட்களுக்குக் காவல் துறை தடுப்பில் வைத்திருந்தனர் என்றார். கணபதியைப் பற்றிய சிறுகுறிப்பு கூட மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணக்கூடியது என அரசு கவனமாகச் செயற்பட்டிருப்பதை இச்சம்பவம் காட்டுகிறது.

மலாயா பொதுவுடைமைக் கட்சி ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுக்க அடிப்படை காரணம் என்ன?

சாமிநாதன்: சீனப் பொதுவுடமைக் கட்சியே மலாயா பொதுவுடைமை கட்சிக்கான வழிகாட்டலையும் நிதியுதவியையும் செய்து வந்ததால், அவர்களின் வழிகாட்டலுக்கிணங்க ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மலாயா பொதுவுடைமைக் கட்சி முன்னெடுத்தது. இதனால், தொழிற்சங்கத்தில் இணைந்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த இந்தியப் போராளிகள் பலரும் வேறுவழியின்றி ஆயுதப்போராட்டத்தில் இணைந்தனர். அவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் பலரும் காடுகளில் மறைந்து தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினர்.  தலைமறைவு வாழ்க்கையின் போதே, பெரியாரின் குடியரசு இதழில் வெளிவந்து கொண்டிருந்த சிங்காரவேலரின் பொதுவுடைமைக் கட்டுரைகளை வாசித்தனர்.

தமிழர்கள் இடதுசாரி போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எம்மாதிரியான நடவடிக்கைகளைக் காலனிய அரசு மேற்கொண்டது?

சாமிநாதன்; இந்தியர்கள் இடதுசாரி இயக்கங்களில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே தோட்டத் தொழிலாளர் சங்கம் கொண்டு வரப்பட்டது. 1950களில் மலாயாவில் தீவிரமாக இருந்த கம்யூனிஸ்டு போராட்டங்களை முடக்குவதில் பிரிட்டன் உயர் ஆணையர் டெம்பளர் தீவிரமாகச் செயற்பட்டார். டெம்பளரின் பரிந்துரையின் படியே சிறு இயக்கமாக மலாயாவில் செயற்பட்டுக் கொண்டிருந்த தோட்டத் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர் பி. பி. நாராயணன் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரிட்டன் அரசியல் நகர்வுகளில் கூட பெரும் செல்வாக்கு செலுத்திய ரப்பர் உற்பத்தியாளர் அமைப்புடனான இணக்கமான பேச்சுவார்த்தைக்குப் பி. பி. நாராயணனைத் தூதுவராக அனுப்பினார்.  இங்குத்தான் முதலாளிகள் அமைப்புடன் இணக்கமானச் சூழலில் பேச்சுவார்த்தை நிகழ்த்துவதற்குத் தொழிற்சங்கவாதியின் தேவைதான் என்ன என்ற கேள்வி எழுகிறது. பி. பி. நாராயணனை மலாயா தொழிற்சங்கப் பிரதிநிதியாக பிரிட்டன் முன்னிறுத்தியது. உலகத் தொழிற்சங்க அமைப்புக்கு மாற்றாக காமன்வெல்த் நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு (World Trade Confederation) பி. பி. நாராயணனைத் தலைவராக முன்மொழிந்தது. அதைப் போல ஆசிய நோபல் பரிசாகக் கருதப்படும் ரோமன் மக்சாசே விருது பி. பி. நாராயணனுக்கு அளிக்கப்பட்டது. இம்மாதிரியான விருதுகள், பதவிகளின் வாயிலாகத் தோட்டத் தமிழர்களின் நிகராளி ஒருவருக்கு உயர்ந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதென்பதை பிரிட்டன் உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தியது. ஆனால், இந்தியர்கள் தோட்டப்புறங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பூசி மழுப்பும் முயற்சியாகவே இவற்றைக் காண முடிகிறது.

அதே சமயத்தில், தொழிலாளர்களிடையே எழும் தீவிரமான போராட்டங்களைச் சமன் செய்வதற்காக ம. இ. காவிலும் தொழிலாளர் பிரிவு கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழிலாளர்களிடையே போதுமான வரவேற்பின்மையால் அந்தப் பிரிவு செயற்படாமல் போய்விட்டது.  இடதுசாரி போக்குடன் செயற்பட்டு வந்த அனைத்து மலாயா தொழிற்சங்க இயக்கத்துக்கு (Pan Malayan Trade Union Federation) மாற்றாகக் கொண்டு வரப்பட்ட சமரச நோக்கு கொண்ட இயக்கங்களைக் காலனிய அரசு ஆதரித்துப் பேணியிருக்கிறது. அனைத்து மலாயா தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆதரவுடன் 43 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்திருக்கின்றன. தொழிற்சங்கத்தை நீர்த்துப் போக செய்த பின்னர் அத்தனை பள்ளிகளும் மூடப்பட்டு தோட்டப்பாட்டாளிகளின் குழந்தைகள் கல்வி வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

மலாயாவுக்கு 1929இல் நிகழ்ந்த பெரியாரின் முதல் வருகை 1940கள் காலக்கட்டத்தில் இந்தியர்களிடையே ஏற்பட்ட சமூக எழுச்சி, தொழிலாளர் கிளர்ச்சிக்குத் துணைபுரிந்தது எனக் குறிப்பிட முடியுமா?

சாமிநாதன்: அதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. முதலில் இந்திய காங்கிரசில் இருந்த அரசியல் பிளவு மலாயாவில் நிகழ்ந்த போராட்டங்களிலும் சமூக இயக்கச் செயற்பாடுகளிலும் பிரதிபலித்தது. கிள்ளான் கலகத்தை முன்னெடுத்துப் போராடிய ஆர். எச். நாதன் காந்திய வழியிலான அகிம்சைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அநீதியான தீர்ப்பு மாற்றப்படும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம், காந்தி குல்லாக்கள் அணிந்து போராடுதல் என காந்திய பாணியிலான போராட்ட வழிமுறைகள் கிள்ளான் கலகத்தின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கிள்ளான் கலகத்தைப் பற்றி பதிவு செய்த ஹெச். ஏ. வில்சன் போராட்டத்தை வழிநடத்திச் சென்றவர்கள் பலரும் தீவிரமான மூர்க்கக்குணம் கொண்ட இந்திய இளைஞர்கள் என்கிறார். அதைப் போல, தொண்டர்படை, ஐ. என். ஏ ஆகிய இயக்கங்களில் பங்கேற்றவர்கள் பலரும் மலாயாவில் பிறந்த முதல் தலைமுறை இந்தியர்களாக இருந்தனர்.

1929ஆம் ஆண்டு தன் முதல் மலாயா வருகையின்போது மலாயாவின் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றிய பெரியார், முதன்மையாக குடியுரிமை பற்றிய விழிப்புணர்வையே முன்வைத்தார். மலாயாவின் குடிமக்களாகத் தமிழர்கள் வாழ குடியுரிமை பெற வேண்டுமென வலியுறுத்தினார். பெரியாரின் வருகைக்குப் பின்னர், மலாயா இந்தியர்கள் தங்களை இந்நாட்டுக் குடிகளாக எண்ணும் போக்கு மிகுந்தது. அதன் விளைவாகக் கூட 1940களில் தொழிற்சங்கக் கிளர்ச்சிகள், பிரிட்டன் எதிர்ப்புணர்வு இயக்கங்கள், சமூக விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை நிகழ்ந்ததாகக் காண முடியும்.

மலாயாத் தமிழர்கள் நடத்திய தொடக்கக்காலப் போராட்டங்கள் எவை?

சாமிநாதன்: தமிழர்கள் நடத்திய பெரும்பாலான போராட்டங்கள் பட்டணங்களில்தான் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் போராட்டங்கள் தோட்டங்களில் நிகழாமல் போனது பற்றி பரவலாகக் கேள்வி எழுப்பப்படுவதுண்டு. தோட்டப்பாட்டாளிகளிடையே இருந்த குறைவான கல்வியறிவே அதற்கான காரணம். தோட்டங்களில் பணிபுரிவதற்கான கையேடுகளைக் கூட பிரிட்டன் அரசு தயாரித்துத் தொழிலாளர்களைப் பயிற்றுவித்திருக்கிறது. உதாரணத்துக்கு, அதிகம் நடக்காமலேயே ஒரே நிரையில் இருக்கும் மரங்களை வெறும் உடலை மட்டும் திருப்பி எவ்வாறு சீவுவது என்பதை விளக்கும் கையேடுகளைக் கூட தொழிலாளர்களுக்குத் தயாரித்துத் தந்திருக்கிறது. இம்மாதிரியான சூழலில் வாழ்ந்த தொழிலாளர்களும் காத்திரமான போராட்டங்களைச் செய்திருக்கின்றனர். 1912 ஆம் ஆண்டில் கிள்ளானில் இருந்த புக்கிட் பாஞ்சாங் தோட்டத்தில் தெலுங்குத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைச் செய்திருக்கின்றனர். அதுவே மலாயா வரலாற்றில் முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட பெரிய அளவிலான தோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தமாகக் கருதப்படுகிறது.  அந்த வேலை நிறுத்தத்துக்கான காரணங்களாக சம்பளமின்மை, போதிய உணவின்மை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர். அந்த வேலை நிறுத்தப் போராட்டமே, 1912ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்ட வரைவுக்கான காரணமாக இருந்தது.  மேலும், அந்தப் போராட்டமே, தெலுங்குத் தொழிலாளர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப்படுவதைப் பிரிட்டன் அரசு தடை செய்யக் காரணமாகவும் இருந்தது.

1919களிலே செந்தூல் ரயில்வே துறை பணியாளர்கள் ஒருவாரம் வேலை நிறுத்தம் நடத்தியிருக்கின்றனர். ரயில்வே பணியாளர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் பணிக்காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து தொழிலாளர் குடியிருப்புகளிலே தங்க அனுமதிக்கக் கோரி 1 வாரத்துக்கு மேலாக வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர். அந்தக் காலக்கட்டத்தில் ரயில்வே துறையைத் தீயணைப்புப்படை பணியாளர்களைக் கொண்டு பிரிட்டன் அரசு இயக்கியிருக்கிறது.

ஜப்பானியர் ஆட்சிக்காலத்தைப் பற்றியும் சயாம் ரயில் சடக்குக் கட்டுமானத்தைப் பற்றியும் முக்கியமான ஆளுமைகளைக் கொண்டு ஆறு வாரமாகத் தொடர் இணைய உரையாடலை நிகழ்த்தியிருக்கிறீர்கள். அந்தப் பணிக்குப் பின்னான உழைப்பைப் பற்றி குறிப்பிடுங்கள்.

சாமிநாதன்: மலாயா கணபதியைப் பற்றிய தேடலில் சயாம் ரயில் சடக்குக் கட்டுமானத்தைப் பற்றியத் தகவல்களும் கிடைத்தன. ஏறக்குறைய 800 முதல் 900 பக்கங்கள் கொண்ட தகவல்களைத் தேடித் தொகுத்து வைத்திருந்தேன். இந்தியத் தேசிய ராணுவத்தில் இணைந்து சேவையாற்ற தயங்கியவர்களே சயாம் ரயில் சடக்குக் கட்டுமானத்தில் பங்கு பெற்றனர். ஜப்பானிய ஆய்வாளரான மிச்சிக்கோ நக்காமுரா, சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான இந்தியத் தேசிய ராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் வீரர்களை 1970களில் நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில்தான், ஜப்பானியப்படைகள் சரணடைந்த பின் செல்லாக்காசாகிவிட்ட ஜப்பானிய பண நோட்டுகளை மூட்டைக்கணக்காக சுமந்து வந்த ரயில் சடக்குக் கட்டுமானத் தொழிலாளர்களை ஐ.என்.ஏ வீரர்கள் கடுமையாக ஏசியதைக் குறிப்பிடுகிறார். இம்மாதிரியாக உதிரியாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு ரயில் சடக்குக் கட்டுமானத்தைப் பற்றிய முழுமையான வரலாற்றை நூலாக எழுத வேண்டுமென எண்ணம் வந்தது. அதே காலக்கட்டத்தில், இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் சசிதரன் செல்லப்பா என்பவர், சுபாஸ் சந்திரபோஷை மையப்படுத்தி நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட என்னை அணுகினார். இருப்பினும், ரயில் சடக்குக் கட்டுமானத்தில் பங்கேற்ற தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தாமல் போஸை வீரநாயகனாக முன்னிறுத்தும் அந்த முயற்சியில் பங்குபெற எனக்கு விருப்பமில்லை.

ரயில் சடக்குக் கட்டுமானத்தில் பங்கேற்று உயிரிழந்த தொழிலாளர்களை நினைவுகூறும் விதத்தில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கூட எழுந்தது. ரயில் சடக்குக் கட்டுமானத்தில் பங்கேற்ற வெள்ளைக்காரப் போர்க்கைதிகளின் நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் அருங்காட்சியகங்கள் சீராகப் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அதில் பெருமளவில் பங்கேற்று உயிரிழந்த தமிழ்த்தொழிலாளர்களின் நினைவாக நினைவுத்தூணைக் கூட கட்ட முடியாத நிலையிலே நாம் இருக்கிறோம். அவர்களை நினைவுக்கூறும் விதமாகத்தான், 2020 ஆம் ஆண்டு ஆறு வாரமாக இணைய உரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தோம். ரயில் சடக்குக் கட்டுமானத்தைப் பற்றிய தொடராய்வுகளைச் செய்த டாக்டர் டேவிட் போக்கட், பேராசிரியர் அர்ஜூணன், ஆகியோரை நேர்காணல் செய்தோம். அத்துடன், ஜப்பானியப் போர் அருங்காட்சியகத்திலும் பிரிட்டன் இம்பிரியல் ஆவணக்காப்பகம், ஆஸ்திரேலியா ஆவணக்காப்பகம் என இணையத்தில் கிடைக்கும் தரவுகள் பலவற்றையும் தொகுத்துப் பேசினோம்.

ஜப்பானிய அரசால் ரயில் சடக்குக் கட்டுமானத்தில் ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களுக்கான நட்ட ஈட்டுத் தொகை கொடுக்கப்பட்டதாக செய்திகள் சொல்லப்படுகின்றன. அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?

சாமிநாதன்: 1952ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ நகரில் போரில் ஈடுபட்ட நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் போரில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான நட்ட ஈட்டுத் தொகை பகிர்ந்தளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் படி மலேசியாவுக்கும் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தரவுகள் கிடைக்கின்றன. அதே மாதிரி, மற்ற நாடுகளுக்கும் போர் பாதிப்புக்கு ஈடாகத் தொழிலாளர் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மற்றப்படி ஜப்பான் அரசு மலேசியாவுக்குக் கொடுத்ததாகச் சொல்லபடும் 207 பில்லியன் ரிங்கிட் தொகைக்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

உங்களின் ஆய்வுக்கு முறைமை எதாவது இருக்கிறதா?

சாமிநாதன்: என்னுடைய ஆய்வுக்கென்று தனிப்பட்ட முறைமை எதுவும் இல்லை. நான் தேடிய வரலாற்றுத் தரவுகளை எழுதி பார்ப்பதற்கு முன்னர் எனக்குள்ளாகவே அசை போட்டு பார்ப்பேன். இளமைக் காலக்கட்டத்தில் கிடைத்த செய்திகளையும் செவிவழிச் செய்திகளையும் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே வலைப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். பின்னாளில், அவற்றைத் திரும்ப வாசிக்கும் போது அதன் அபத்தத்தன்மை மிகுந்த நெருடலைத் தரும். உதாரணத்துக்கு, வீரசேனன், மலாயா கணபதி போன்ற தொழிற்சங்கப் போராளிகளைப் பற்றி சொல்லப்படும் சில செய்திகள் மிக சுவாரசியமானவை. ஆனால், இம்மாதிரியான செய்திகளின் தர்க்க நியாயம் கேள்விக்குட்பட்டதே. ஆகவே, இப்பொழுதெல்லாம் கிடைத்த தகவல்களை எனக்குள்ளாக அசைப்போட்டு அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே கட்டுரைகளாக எழுதி வலைப்பக்கத்தில் பதிவிடுகிறேன்.

இரண்டாம் மூலத்திலிருந்து தரவுகளை எடுத்தாண்டு வரலாற்றை எழுதுவது என்பது எனக்கு உவப்பாக இருப்பதில்லை. அதனால் கூடுமான வரையில் முதல் மூலத்திலிருந்தே தரவுகளை எடுத்து ஆய்வு மேற்கொள்கிறேன்.

வரலாற்றை அணுகுவதில் எதைச் சரியான பார்வையாகக் கருதுகிறீர்கள்?

சாமிநாதன்: ஹாவர்ட் ஜெய்ன் (Howard Zinn) என்ற அமெரிக்க வரலாற்றாய்வாளர் அதிகார வர்க்கத்தை மையப்படுத்திய அமெரிக்காவின் வரலாற்றை முழுக்கவே எளிய மக்களை மையப்படுத்தி எழுதியிருக்கிறார். அந்தப் பார்வையை மக்கள் வரலாறு என்ற பதத்தைக் கொண்டு அழைக்கின்றனர். வரலாற்றை அணுகுவதில் மிகச்சரியான பார்வையாக மக்களின் பார்வையிலிருந்து எழுதப்படுவதையே கருதுகிறேன்.

உங்களுடைய வரலாற்றாய்வுக்கான தேடலையும் அதற்கான முயற்சிகளையும் பற்றி குறிப்பிடுங்கள்

சாமிநாதன்: மலேசியாவில் பெரும்பாலும் முக்கியமான வரலாற்றுத் தரவுகள் கிடைப்பதில்லை. இடதுசாரி சித்தாந்தம் மீதான ஒவ்வாமையால் தரவுகளைப் பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது.

சிங்கப்பூர் தேசிய நூலகம், ஆவணக்காப்பகம் ஆகியவற்றிலிருந்தே வரலாற்றுத் தரவுகளைப் பெற முடிகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஆவணக்காப்பகத்தில் மலாயாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் தகவல்களைப் பெறச் சென்றிருந்தேன். பட்டப்படிப்புக்காகவே தரவுகளைப் பெறுகிறேன் என ஆவணக்காப்பகப் பொறுப்பாளர்களிடம் சொல்லுமாறு நண்பர்கள் அறிவுறுத்தியிருந்தனர். பட்டயக்கல்வியைத் தொடர்பவர்களுக்குக் கிடைக்கப்படும் உதவித்தொகையை முன்னிட்டுத் ‘தனியான’ கவனம் கிடைக்குமென்பதால் அப்படியான அறிவுரையைத் தந்தனர். அங்கு அப்படி ஒரு ஆவணம் இருப்பதே ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவருக்குத்தான், ஆவணக்காப்பத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகளின் வைப்பிடமும் தெரிந்திருந்தது. அவரும் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறப் போகிறவராக இருந்தார். அவரும், அந்த ஆவணத்தின் முன்பக்கம் மட்டுமே இருக்கும் கையேட்டை மட்டும் தேடி எடுத்துக் காண்பித்தார்.  காலனிய காலக்கட்டத்தில் வெள்ளைக்கார அதிகாரிகள் இரு வாரத்துக்கொருமுறை அரசுக்கு எழுதி அனுப்பும் பதிவேடுகளின் பட்டியலையும் காண்பித்தார். அதன் முழு ஆவணத்தைப் பார்வையிட அரசு அனுமதி தேவையென்றனர். எனக்கு பல்கலைக்கழக உதவிநிதி கிடைக்கிறதென சொன்னவுடன் அதிகாரிகளின் அணுகுமுறையே முற்றிலும் மாறிவிட்டது. அதே துறையையொட்டி ஆய்வு செய்யும் முதுகலை மாணவரொருவரை அறிமுகம் செய்து அவருடன் இணைந்து ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற அறிவுரையைத் தாங்களாகவே வழங்கினர். இருப்பினும், நான் தேடி வந்த ஆவணம் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் நடத்தும் தனியார் ஆவணக்காப்பகத்தின் வசம் இருப்பதாகத் தெரிவித்தனர். அந்த ஆவணக்காப்பகத்தில் எந்த ஆவணத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் தனிக் கட்டணங்கள் இருந்ததுஅதிர்ச்சியளித்தது. பின்னாளில், நண்பர்கள் லண்டன் இம்பிரியல் ஆவணக்காப்பகத்துக்குச் சென்ற போது மலாயாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களைப் பற்றிய 200க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படியெடுத்து அனுப்பினர். அப்படி நான் தேடியலையும் தகவல்கள் தானே வந்து சேர்ந்த விந்தையும் நடந்திருக்கிறது.

இவ்வாறு ஒருதுறையில் தீவிரமாக ஈடுபடும் பலரும் கூறியுள்ளனர்.

சாமிநாதன்: ஆம்! என்னுடைய ஆய்வுக்கான தேடலின் போது தட்டுப்படுகின்ற செய்திகள் குறித்து இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து சிந்தித்து வந்தால் அதற்கான கூடுதல் தகவல்கள் எங்கிருந்தாவது கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஆழ்மனதில் இருக்கும் தேடல்களைத் தொடர்புப்படுத்தும் வலைகளாக எங்கிருந்தாவது செய்திகள் வந்து சேரும். அப்படித்தான், நானே அறியாமல் கணபதி பற்றிய செய்திகள் நினைத்துப் பார்த்திராத இடங்களிலிருந்தெல்லாம் வந்து சேர்ந்தன. கணபதியைப் பற்றி அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட உளவுத்தகவல்கள் அவ்வாறு கிடைத்தவைத்தான். அதோடு, பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட என் மனைவியும் கூட கணபதியின் உறவினர் என்பதும் அப்படியானதுதான்.

ஆச்சரியமாக உள்ளதே.

சாமிநாதன்: இதைவிட ஆச்சரியம் ஒன்றுள்ளது. மலேசிய விடுதலைக்கு முன்னர் காடுகளில் பதுங்கியிருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களை மலேசிய கம்யூனிஸ்டு கட்சிப் போராளிகள் மேற்கொண்டனர் அல்லவா. என்னுடைய தந்தை தன்னுடைய பதின்ம வயதின் போது, காடுகளில் பதுங்கியிருந்த சில போராளிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கச்சென்று கைது செய்யப்பட்டு ஈராண்டுகள் பத்துகாஜா சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் வாழ்ந்து வந்த தெலுக் இந்தான் பகுதியிலிருந்தும் நாடு கடத்தப்பட்டு ஜொகூருக்குப் புலம்பெயர்ந்தார். பின்னாளில், என்னுடைய தந்தை இறந்தபின்னர், சிற்றப்பா சொல்லித்தான் எனக்கு இத்தகவல் தெரிய வந்தது. இவ்வாறு வரலாற்று காலத்துடன் என் பரம்பரையில் ஏதோ ஒரு தொடர்பு இருந்துள்ளது.

உங்களுடைய ஆய்வுகளின் வழி கண்டடைந்த தனித்துவமான தகவல்கள் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

சாமிநாதன்: 1940களில் மலாயாவில் கம்யூனிசம் வேரூன்றத் தொடங்கியப் போது மலாயா கம்யூனிஸ்டு போராளிகள் சிலருக்குச் சீனாவில் பயிற்சியளிக்கப்பட்டது. கம்யூனிசச் செய்திகளைத் தென்கிழக்காசியாவில் பரவச் செய்ய மலாய், சீனம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. மலாயா புரட்சி வானொலி (Radio Revolusi Malaya)   என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த வானொலி ஒலிபரப்பின் தமிழ்ப்பகுதியின் பொறுப்பாளராக பி. வி. ஷர்மா நியமிக்கப்பட்டார். இப்பொழுது சீன வானொலியின் தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் பலருக்கும் பி. வி. ஷர்மாத்தான் பயிற்சியளித்தார். சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட பி. வி. ஷர்மாவின் தந்தை சிங்கப்பூரில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றை நடத்தி வந்தார். தந்தைக்குப் பிறகு கல்லூரியை ஏற்று நடத்தி வந்த ஷர்மாவுக்கு இடதுசாரி சித்தாந்த ஆர்வமுள்ள விரிவுரைஞர்களுடன் நட்பு ஏற்பட்டது. அதன் விளைவாக, மலாயாவில் முதன்முறையாக ஆசிரியர் தொழிற்சங்கத்தை ஷர்மா தொடங்கினார். இதனைப் பெரும் ஆபத்தாக உணர்ந்த பிரிட்டன் அரசு, ஷர்மா எந்தக் கருத்தையும் வெளியீடக் கூடாதென வாய்ப்பூட்டு சத்தத்தைப் பிறப்பித்ததுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அதன் பிறகு, இந்தியச் சீனப் போருக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருகை தந்த சீன துணைப் பிரதமர் ஷர்மாவை சீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென நேருவிடம் கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்திய அரசு ஷர்மாவையும் அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தகளையும் சீனாவுக்கு அனுப்பி வைத்தது. சீனாவுக்குச் சென்ற ஷர்மா அயல்நாட்டுப் போராளிகளுக்கான பயிற்சி மையமான ரெஜிமெண்ட் 10 இல் சேர்ந்தார்.

1948க்கு முன்னர் மலாயாவில் வெளிவந்த ஜனநாயகம் இதழ் இடதுசாரி வரலாற்றில் முக்கியமான நாளிதழாக விளங்கியது. அந்த நாளிதழுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சி நிதியுதவி அளித்து நடத்தியது. அந்த நாளிதழில் சீ. வி. குப்புசாமி, சக்தி மோகன் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றனர். ஜனநாயகம் எனும் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பொன்றில் குவாந்தானில் தமிழ்த்தொழிலாளர் ஒருவரை மேலதிகாரி கெல்லிங் எனச் சொல்லி அழைத்தார் என்பதற்காக இருநாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தியைப் படித்தேன். அதே ஜனநாயகம் நாளிதழில் தோட்டத் தொழிலாளிகளுக்கும் புரியும் வண்ணம் அரசின் முக்கியமான கொள்கைகளை இரு தோட்டத் தொழிலாளர்களைப் பாத்திரமாக வைத்து உரையாடல் பாணியில் எழுதியிருந்தனர். 1950களில் ஜனநாயகம் நாளிதழை அரசு தடைசெய்தது. இவை எல்லாம் என்னுடைய ஆய்வின் வழி கிடைத்த தகவல்கள்தாம்.

உங்களின் நூலாக்கப் பணிகளைப் பற்றி கூறுங்கள்.

சாமிநாதன்: என்னுடைய நூலாக்கப் பணிகளைத் தொடங்கும் போது சோர்வு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். வரலாற்றை முறையான தரவுகளின் ஆதாரத்துடன் எழுதினால் அதனைப் படிப்பதில் சோர்வு ஏற்படும் அல்லது அது வாசிக்கப்படுமா என்ற ஐயமும் சேர்ந்து எழும். இப்பொழுது, அதிலிருந்து மீண்டெழுந்து தேடி வைத்திருக்கும் தகவல்களைத் தொகுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

மலேசிய இந்தியர்கள் குறித்த வரலாறு பாட நூல்களில் புறக்கணிப்பு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் பார்வையில் அதற்கான நியாயங்கள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

சாமிநாதன்: என்னைப் பொறுத்தளவில் முதலில் குறிப்பிட்டதைப் போல அரசு கொள்கைகளுக்கு மாறாகச் செயற்பட்ட எந்த இயக்கமும், நிகழ்ச்சியும் பாடநூல்களில் இணைக்கப்படுவதில்லை என்பது நியாயமான குற்றச்சாட்டுத்தான். அரசில் அங்கத்துவம் பெற்றிருக்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் முன்வைக்க விரும்பும் அரசியல் தலைவர்கள், கொள்கைகள் ஆகியவற்றை வரலாற்று நூல்களில் முன்னிலைப் படுத்துகின்றனர். ஆனால், மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்றுத்தான். அந்த வரலாற்றை அரசுத்தான் முன்வைக்க வேண்டுமென்பதில்லை. அதனைப் பேசியும் முறையான வரலாற்றுத் தரவுகளின் துணைக் கொண்டு நிறுவும் பொறுப்பும் வரலாற்றாசிரியர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மலாயா வரலாற்றில் இந்தியர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய வரலாற்றுத் தருணங்களாக எதைக் காண்கிறீர்கள்?

சாமிநாதன்: ‘Pan Malayan Federation Trade Union’ என்றறியப்படும் அனைத்து மலாயா கூட்டரசு தொழிற்சங்க அமைப்பின் செயற்பாடுகளைப் பெருமித வரலாறாகக் கருதுகிறேன். இன்றைக்கும் கூட இனத்தால் பிளவுப்பட்டுத்தான் பொது அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதற்கு முற்றிலும் மாறாக, 90 சதவீகிதம் இந்தியர்கள் உறுப்பியம் பெற்றிருந்த அனைத்து மலாயா தொழிற்சங்க அமைப்பு 1943 வாக்கில் சுரங்கங்களில் பணியாற்றும் சீனத்தொழிலாளர்களின் நலனுக்காக மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைக்கு மலேசியாவில் பொது இயக்கங்களில் உறுப்பியம் பெற்றிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் நலனுக்கு மாறாக மற்றொரு சமூகத்தின் நலனை முன்னிறுத்தும் போராட்டங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. அப்படியான சூழலில், தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் குரல் கொடுத்தத் தொழிற்சங்கங்களை இந்தியர்கள் முன்னெடுத்தனர் என்பது நிச்சயமாகப் பெருமித வரலாறாகவே கருதலாம்.

உங்களுடைய வரலாற்றுப் பார்வை பெரும்பாலும் இடதுசாரிப் பார்வை கொண்டதாகத் தெரிகிறது. உங்களுடைய வரலாற்றாய்வில் எந்தளவு இடதுசாரிப்பார்வை ஆதிக்கம் செலுத்துகிறது?

சாமிநாதன் முனிசாமி: இங்கு வரலாற்று ஆசிரியர் ஹாவர்ட் செய்ன் சொல்லும் மேற்கோளைச் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன். தொடர்வண்டியில் பயணிக்கும் போது அதில் ஏதாவது திசையைத் தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டும். அதைப் போலவே, வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போதும் ஏதேனும் பார்வையை முன்வைக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், அறுதியாக, மக்களின் பார்வைக்கே வரலாற்று ஆய்வுகளை முன்வைக்க விரும்புகிறேன். இடது வலது என்ற கொள்கைகளில் சிக்காமல் மக்களின் கண்ணோட்டத்தையே வரலாற்றாய்வில் சுட்டிக்காட்ட முயல்கிறேன். பெருமித வரலாறுகள், ஆண்டப்பரம்பரை வரலாறு போன்றவற்றை முன்வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், எனக்கு வரலாற்று அவலங்களை முன்வைப்பதிலே ஆர்வம் இருக்கிறது. அப்படியான பார்வை இடதுசாரி பார்வை எனச் சொல்லப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வேன்.

மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய பகுதிகளாக எவற்றைக் குறிப்பிடலாம்?

சாமிநாதன்: மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் இன்னுமே ஆய்வுக்குட்படுத்தப்படாத பல பகுதிகள் இருக்கின்றன. 1940களில் தோட்டங்களில் வலுவாக இயங்கியத் தொண்டர்படை இயக்கம் குறித்த முழுமையான வரலாறு இன்னுமே கிடைக்கவில்லை. ஆகவே, அதைப் பற்றிய முழு வரலாறு எழுதப்பட வேண்டும். தொண்டர்படையின் தோற்றம், நோக்கம், செயற்பாடுகள் தொடங்கி பிற்காலத்தில் மலாயாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாகவும் தொண்டர்படை இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளை ஒட்டி முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அத்துடன் 1948ஆம் ஆண்டு இடதுசாரி இயக்கங்கள் பிரிட்டன் அரசு கொண்டு வந்த கூட்டரசு அரசியலைப்புச் சட்டத்துக்கு மாற்றாக முன்மொழிந்த மக்கள் அரசியலைமைப்புச் சட்டத்தை ஒட்டியும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அந்தச் சட்ட முன்மொழிவு இயக்கத்துடன் இணைந்து செய்யப்பட்ட ஹர்த்தால் எனப்படும் கடையடைப்புப் போராட்டமும் மக்களிடையே பெருமளவு வெற்றி பெற்றிருந்தது. இவற்றையொட்டியும் முழுமையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

உங்களுடைய எதிர்காலத்திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுங்கள்

சாமிநாதன்: மலாயா கணபதி, அனைத்து மலாயா தொழிற்சங்கக் கூட்டமைப்பு போன்றவற்றைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது. அத்துடன், வரலாற்றுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்யும் ஆர்வமும் இருக்கிறது.

.

நேர்காணல்: அரவின் குமார்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...