தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன்
பிரியாவிடை ‘சி’
என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன்
நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில்
மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன…
புலப்படாத ஏக்கங்களின் மையமிது
“பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…”
ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன்
படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன் வேலைக்குச் செல்வது
என தொடர்வேன்.
இனிய ‘சி’,
நிறத்தின் வேறுபாட்டில் நம் அடையாளத்தை
ஏற்றுக்கொண்டேன் என்றாகி விடாது.
இது நாளைய நமக்காக…
நிற வேற்றுமையைத் தவிர்த்தே
ஓட்டப் போட்டியை நடத்தத் திட்டமிட்டேன்
வேகத்தை மட்டுமே
கணக்கிலெடுத்து…
அந்த நொடிகளில்
ஒரு பச்சை நகரத்தில் எல்லா செம்பருத்தைப் பூக்களும்
நம் இரத்த நிறத்தில் மலரும்
இனிய ‘சி’ , என் இருப்பு இங்குதான் என்று முடிவெடுத்திருக்கிறேன்
இங்கேயே பிறந்து, வளர, இறக்க விடு
இனிய ‘சி’, நான் இறந்த பிறகு
நீ செம்பருத்தைப் பூக்களைப் பறிப்பதில் ஆபத்தில்லை
என்னுடன் பல நிறங்களை உள்ளடக்கிய
இப்புவியின் உயிரினங்களும்
இங்கு இருக்கும்.
********
‘ஜி’ அடுக்குமாடி வீடு
வேலை செய்பவன் அடுக்குமாடியின் நரம்புகளூடே நடந்தான்
அடுக்குமாடியின் இடையை அடைந்திருந்தான்
அவனுக்கு நல்ல வேலையிருந்தது, நிலையான வருமானத்தோடு
பிரகாசமான வீடு இருந்தது, அழகான தலைமுடியும்
ஒவ்வொரு நாளும் அவன் சிவப்பு அணுக்களைப்போல
அவன் வண்ணப் படிகக் கல் போன்ற இதயம்
துல்லியமாக அவனை நகரத்தின் உள்ளுறுப்புகளுக்கு அனுப்பியது
துரித போக்குவரத்து அமைப்புகள் மூலம்
ஆம்! அன்றாடம்
கொழுப்பு குறைந்த தமனிகள் வழியாக
வாழ்க்கையின் வட்டத்தில் நுழைவு
‘அதிகமான கொழுப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை மிகுந்த இரத்தம்’
பிறகு அவன் சத்தமில்லாமல் நரம்புகளிடமிருந்து திரும்பினான்
இரவில், தொலைக்காட்சி மட்டுமே அவனின் ஒரே சன்னலாகியிருந்தது
‘ஒரே தன்னிறைவு இராஜ்யம்’
அவன் தொலைக்காட்சிக் கட்டுப்படுத்தியை உயர்த்துகிறான்
உயரிய நினைவுப் பரிசொன்றினை உயர்த்துவது போல
ஒரு விசை மட்டுமே அழுத்தப்படுகிறது
‘தனிமை’
*******
கட்டிடம்
விடியல் தேவாலயத்தின் சிகரத்தைத் தொடும் முன்பு
ஓர் அறியாமை பெட்ரோல் வெடிகுண்டை
வீசினான் அவன்
கடந்து போன சரித்திரத்தின்
அட்டூழிய ஹிம்சையின் தீ நாக்குகள்
மௌனித்த பைபிளை மிரட்டின…
இருட்டில் ஓடி மறைந்தான்
அது நம்பிக்கையற்ற இருட்டு
அரசியலையும் தேசிய கொடியையும் புதைத்த இருட்டு அது
உறக்கம் கலைந்து எழுந்தவர்கள்
வெறுப்பில் கருகியிருந்த
பல பணிகளைச் சுமந்திருந்த சிலுவையைக் கண்டனர்
ஆனால் கோபம் தீ நாக்குகளாகப் பரவியிருக்கவில்லை
புகை காலையில் கலைந்திருந்தது
மக்கள் வேலைக்குச் சென்றார்கள்
பள்ளிக்குச் சென்றார்கள்
சிகை அலங்காரக் கடைக்குச் சென்றார்கள்
எப்போதும்போல இணையத்தில் உலாவினார்கள்
சுதந்திரம் பறிக்கப்பட்ட ஏமாற்றங்களினூடே
மேகங்களின் பெருமூச்சுகளும்
பெருவாரியாக நீடித்திருந்தது
புறக்கணிப்பின் செங்கற்களும் கற்களும்
தொடர்ந்து தேவாலயத்தின் சன்னல்களை நோக்கி வீசப்பட்டன
ஒரு பண்டிதரின் மூக்குக் கண்ணாடியை
கை முட்டியால் உடைப்பது போல
கூர்மையான எதுவும் சிதறவில்லை
ஆன்மாவின் ஆழத்தில்
கட்டிடம் மட்டுமே சற்றுச் சிதைந்திருக்க
நம்பிக்கை சிதறவில்லை
கருத்துச் சிலுவையை
விடாமுயற்சியுடன் மக்கள் மெருகேற்றுகின்றனர்
நிறைய பிரார்த்தனைகள் நெருங்கி வந்தன
பகுத்தறிவின் அடித்தளம் திடமானது
காலை
ஓசையில்லாமல் சிகரத்தைத் தொட்டிருந்தது.
******
அரிய பூமிக் கோளின் 10 கிலோ மீட்டர் தூர வட்டப்பாதைக்குள் வசிப்பவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரி
€ŽÛÅ~#½éškk¼ÈBË ÂʵQôD½Â*Çíb¿Þ€t͵5^d¡eÌÀÉPáKåZˆ
ŒhûzGžÒ கதிர்வீச்சு ÓíŒXXiÇRIEÂq»Øo¤YhÙÔ£ÂCøè}Ñ›¼žtŽòêÞøx;
ÝñÂÒ«³ ©cµ³èÙÔceçó’ÞþÔÿìÓäகதிர்வீச்சு KØu ÇâäÇÊÎçY±ú•èÊ>Mžv¼
ç]N€z¬ì|ž« ‹ŽòiÚOÌÖÜýŶä¶ýj®ÍÕYœœ õ¨üvêߢâ9†uŒíMÛ°
Á çWaI•prÔ£æsfø கதிர்வீச்சு ú•húÓýè’˜v?¦{`o΢ášmõÔÃÉ™áõoÑܧ)òèÂ
ÆÒ`GÂõ¨óöÕ¿EsŸ¦±žŽJ$Ìušè®ª*€zÔyÂûêߢ¹»†ô¤¥«* ªŠž0þ
ú•hîÓ®Çà Üêªâä°¯þ-:ݧ)¹töÂ\ƒñ×0¿ú•èŸ¦øc¦Ò கதிர்வீச்சு©Æ6úêÔ#ÿþi>
`:˜¹têÒ„ñJÒ…•fžUÅTÅÉ ÄÙ5Eý[tȧ)øh©#séÔ¥ŠÉVÚª*€zñԿ
EÓŸ¦øs¥ŽÌ¥S&,*&WXi¨ª€ªêகதிர்வீச்சு zpÇÿÍ}š” “™K§.MøÁ°¢N§ˆœMUÉ
¢Sërð¨¿WiÚtÌ ArŸ¦È¨DLé¼Ioò´€¬prÔ£èÔú¤<ꊧǜ ú$ñi‰„x³
ñÂJ[˜AUÅÅÉP øõ©Ù™”Á´é˜Tÿ‚$°Sÿ«Á⇿ªŠ¨Š Áóêð0¿$m:æÕ¿
‰O கதிர்வீச்சு SnÛÒ\ñCJš_UÅ °>ûÓnÇ®•Ø±ZX⺬¹t/¬f -E=K]I¬†kJýê¹
©Ùím†ý˜Øº˜ÕöŽTÿ‚$>3âÖ*ŠOL:°°Òšf¬ÏÁ«|ıÝàšýŶä¶ýïÈâÝ
K\® 5§÷Ò×j‰êYêJÊ `5\S*ç® “b«•)ú>0î÷ïÈAõ/µê´射žn½yJçÍ
µ3na¥-Ì ªŸàuÿ ™á×ßr¬²W°கதிர்வீச்சு ¯{_-Q=K]IÞ¬†kJåÜõqRlõ‰ïäúÚ
.:Ýzó”Λn§,^Xi¨ª Ö’xÝosìòû«æÅ-ÔÞv¬Å¶ä¶¬†åÜõq¥lõ§)ø‰ï
x³-¦Çä ú$•
மூதலில் கடைசி கவிதை எழுத்துக்கோளாறு என நினைத்தேன். பின்னர் அதுதான் உக்தி என புரிந்தது. நல்ல முயற்சி.