தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அநபாயன் என்ற மன்னனுக்கு மூன்று கேள்விகள் பிறந்தன. அவனது கேள்விகள்:
உலகை விட பெரியது எது?
கடலை விடப் பெரியது எது?
மலையை விடப் பெரியது எது?
அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளைக் காணமுடியாததால் ஓர் ஓலையில் எழுதி அதைத் தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி பதிலைத் தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டான். அறிவில் சிறந்த தொண்டை மன்னனும் தமிழ் பற்று மிக்கவன் . அவனாலும் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் போகவே தன்னுடைய அரசகவி வெள்ளியங்கிரிக்கு இந்த ஓலையை அனுப்பி வைத்தான்.
அரசகவியும் அக்கேள்விகளைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்து பார்த்தும் பதில்கள் கிடைக்கவில்லை. அச்சமயம் இவரது மகன் அருண் மொழித் தேவர் தந்தை கவலையுடன் இருப்பதை கண்டான். அவரது கேள்விகளைக் கேட்டறிந்து பதில்களைத் தருகின்றான்.
மலையை விடப் பெரியது எது?
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது – குறள் 124
தன்னிலையிருந்து வேறுபடாது அடக்கமாயிருப்பவரின் உயர்வு மலையைவிட மிகப்பெரியது.
கடலை விடப் பெரியது எது?
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 103
பயன் கருதாமல் செய்த உதவியின் தன்மையை ஒருவன் ஆரய்ந்து பார்த்தால் அது கடலை விடப் பெரியதாகும்.
உலகைவிடப் பெரியது எது?
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – குறள் 102
தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
அந்த பதில்களை அறிந்து தொண்டை மண்டல மன்னனும் சோழ மன்னன் அநபாயனும் மகிழ்ச்சியுற்றனர். சோழ மன்னன் அநபாயன் அருண் மொழித்தேவரை மிகவும் பாராட்டி அவரை தன் முதலமைச்சராகவும் ஆக்கினான். இவர் தான் பிற்காலத்தில் பெரிய புராணத்தை இயற்றிய ‘சேக்கிழார்’.
இதே போன்ற கேள்விகள் லியோ டால்ஸ்டாயின் ‘Three Questions’ என்ற கதையிலும் வருகின்றன.ஒரு முறை மன்னன் ஒருவனுக்கு மூன்று கேள்விகள் எழுகின்றன. சரியான நேரத்தில் சரியான விஷயத்தைச் செய்வது எப்படி? எனக்கு முக்கியமானவர்கள் யார்? எதற்கு நான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?
இக்கேள்விகளுக்குச் சரியான விடையளிப்பவர்களுக்குப் பரிசளிப்பதாக அறிவிக்கின்றான். எத்தனையோ பேர் வித்தியாசமான பதில்களைத் தந்திருந்தாலும் எதற்குமே மன்னனின் மனம் திருப்தியடையவில்லை. சரியான பதிலை அறிய காட்டில் வசிக்கும் துறவியைத் தேடி செல்கின்றான். சாதாரண உடை அணிந்து பாதுகாவலரையும் தொலைவில் நிறுத்திவிட்டு தனியாய் சந்திக்க செல்கின்றான்.
அச்சமயம் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த துறவியிடம் தன் மூன்று கேள்விகளைக் கேட்கின்றான். துறவி பதிலளிக்காமல் தன் வேலையைச் செய்கின்றார். துறவியின் களைப்பை அறிந்து அவருக்கு உதவி செய்கின்றான். மீண்டும் மன்னன் தன் கேள்விகளைக் கேட்க துறவி பதிலளிக்கவில்லை. இறுதியாக மன்னன் தன் கேள்விகளை மீண்டும் முன்வைத்த போது ஒருவன் ஓடி வருகின்றான். அவனது வயிற்றுப்பகுதியில் ரத்தம் வழிந்தோடுகின்றது. அரசன் அவனது காயத்தைச் சுத்தப்படுத்தி கட்டு போடுகின்றான். துறவியின் துணையுடன் அவனைப் படுக்கையில் படுக்க வைக்கின்றான். அயர்ந்து தூங்கி மன்னன் காலையில் எழுகையில் காயப்பட்டவன் மன்னித்துவிடுமாறு கூறுகின்றான்.
ஏதும் புரியாத மன்னனுக்கு, ‘நீங்கள் தனியாக இங்கே வருவதை அறிந்து நான் தங்களை கொலை செய்ய வந்தவன். ஆனாலும் வெகு நேரம் ஆகியும் துறவியின் இடத்திலிருந்து வெளியே வராததால் தங்களைத் தேடி வந்தேன். உங்கள் பாதுகாவலர்கள் என்னை அடையாளம் கண்டு காயப்படுத்திவிட்டனர். அவர்களிடமிருந்து தப்பி வந்த என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். உங்களைக் கொல்ல வந்த எனக்கு உயிர் தந்து விட்டீர்கள். என்னை மன்னித்து விடுங்கள்’ என வருத்தபடுகின்றான். மன்னன் அவனை மன்னித்து ஏற்றுகொள்கின்றான். புறப்படுவதற்கு முன்னர் துறவியைப் பார்த்து மீண்டும் தன் கேள்விகளை முன் வைக்கின்றான்.
நேற்று என்னுடைய களைப்பை உணராமல் எனக்கு உதவி செய்யாமல் புறப்பட்டிருந்தால் அவன் உன்னைத் தாக்கியிருந்திருப்பான். இங்கே முக்கியமான நேரம், நீ உதவி செய்த நேரம். நான் உனக்கு முக்கியமான மனிதன்; உதவி செய்வதே உனக்கு முக்கிய விஷயமாக இருந்தது.
அவன் இங்கே ஓடி வந்தபோது அவனுக்கு பணிவிடை செய்த நேரம் முக்கியமான நேரம்; அவன் உனக்கு முக்கியமான மனிதன்; அவனுக்கு நீ செய்த சேவை முக்கிய விஷயம். நிகழ்காலமே முக்கியமான நேரம்; நம்முடன் இருப்பவரே முக்கியமானவர்; அவருக்கு நாம் செய்யும் உதவியே முக்கியமான விஷயம்.
கதையில் வரும் கேள்விகள் மன்னனுக்கு ஒரு சேர பிறந்திருந்தாலும் மனிதர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழ்நாளில் அத்தகைய கேள்வியில் வரவே செய்கின்றன. ஆனாலும் எளிதாய் விடை கிடைத்து விடுவதில்லை. நிகழ்காலத்தில் வாழ்வென்பது எளிதான விஷயமில்லை என்பதே அதன் முக்கிய காரணம். நிகழ்காலத்தில் இறந்தகாலங்களும் எதிர்காலங்களும் கலக்கப்படுவதே இந்நிலைக்குக் காரணமாகின்றது. நிகழ்காலத்தில் வாழ இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறக்க வேண்டியுள்ளது. அது சாத்தியமானதா? சாத்தியப்படும் வேளைகளில் மட்டுமே மனம் அமைதியும் திருப்தியும் அடைகின்றது. ஆனாலும் நிகழ்காலத்தில் வாழ மனதைப் பக்குவபடுத்த வேண்டியுள்ளது. நிகழ்காலங்களில் வாழ பழகிக் கொண்டால், நிகழ்காலங்கள் இறந்தகாலங்களாகும்போது எதிர்காலங்களில் குறுக்கிடாது.
நம்முடன் நிகழ்காலத்தில் இருப்பவரே முக்கியமான மனிதர் என கதையில் வருகின்றது. சமூக வலைதளங்கள் இதை சற்றே உடைத்தெறிகின்றன. அருகிலிருப்பவர்களின் முக்கியத்துவத்தை மறக்க செய்யும் வலிமை மின்னியல் தொழில்நுட்ப கருவிகளுக்கு இருக்கின்றது.
முன்சொன்ன சேக்கிழாரின் பதிலிலும் டால்ஸ்டாயின் கதையிலும் பலன் கருதாது செய்யும் உதவி பெரிதென அறியபடுகின்றது. உதவி என்பது முந்தைய காலங்களில் சிறப்பான விஷயமாக கருதப்பட்டாலும் இன்றைய காலங்களில் உதவி என்பது பலன் கருதியே செய்யப்படுகின்றது. பலன் கருதாது செய்யப்படும் உதவிகள் இருந்தாலும் அது சுயதேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. உதவிகளின் அளவும் கணக்கிடப்படுகின்றன. இதுவே சேவைகளையும் பெரிதும் பாதிப்புற செய்கின்றன.
நிகழ்காலமே முக்கியமான காலம்; நம்முடன் அச்சமயத்தில் இருப்பவரே முக்கியமான மனிதர்; அவருக்கு நாம் செய்யும் உதவியே முக்கியமான காரியம். வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைக் காட்டும் டால்ஸ்டாயின் வழிகள் இவை
மிக ஆழமான வாசிப்பு அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே இதுபோன்ற ஒப்பீடு செய்ய முடியும். சகோதரிக்கு வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோதரர்.
அருமை.. முடிவு நச்ச்.. வாழ்த்துகள்
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.
simple but meaningful article keep up friend
மிக்க நன்றி.