சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’

ராஜம் ரஞ்சனி படம்1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக இருந்தார். திருமணத்திற்குப் பின் ஆனந்தியின் கல்வியைத் தொடர ஊக்குவித்தார். ஆனந்தி தன் பதினான்காம் வயதில் ஆண் சிசுவை ஈன்றெடுத்தார். போதிய மருத்துவ வசதி இல்லாததால் குழந்தை பத்து நாள்களில் இறக்க நேரிட்டது. இந்தத் துயர சம்பவமே ஆனந்தி மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்க முக்கிய தூண்டுகோலாய் உருவெடுத்தது. கோபால் ஜோஷியின் ஊக்குவிப்பினால் பலவித இன்னல்களைக் கடந்து ஆனந்தி மருத்துவப்படிப்பை வெற்றிக்கரமாக முடித்து 11 மார்ச் 1886ம் நாளன்று பட்டம் பெற்றார்.

கமலா சோஹோனி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண். தன் இளங்கலை பட்டப்படிப்பை பெளதிகம், வேதியயல் துறையில் முதல் நிலையில் தேறியவர் மேற்கொண்டு ஆய்வுத்துறையில் ஈடுபட எண்ணி ஆய்வு மையத்திற்கு விண்ணப்பித்தபோது அவர் பெண் என்ற காரணத்தினால் மட்டுமே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பெண்கள் ஆய்வுத்துறையில் ஈடுபடத் தொடங்காத காலம் அது. பெண் என்ற ஒரே காரணத்தால் தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைக் கமலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. போராட்டங்களுக்குப் பின்னர் ஆய்வு மையத்தில் ஒரு வருட பயிற்சிக்கால நிபந்தனையின்படி நுழைய அனுமதிக்கப்பட்டார். ஒரு வருட பார்வையில் கமலாவின் பணி திருப்தியளிக்கும்படி இருந்ததால் உயிரியல் வேதியல் துறையில் ஆய்வுப்பணியைச் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

இந்திய பெண்கள் என்றோ தங்கள் லட்சியங்களைச் சாதிக்க தொடங்கிய பாதச்சுவடுகளாக இவற்றை கருதலாம். ஆனாலும் எல்லா பெண்களின் லட்சியங்களும் நிறைவேறுவதில்லை. லட்சியங்களைத் தவிர்த்து குடும்பமும் பெண்களின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாய் திகழ்கின்றது.

ஆனால் ரத்னபாயின் வாழ்க்கை வெறுமையானது. கணவனோ பிள்ளைகளோ மகிழ்ச்சிக்கு வித்திட்டதில்லை. மாறாக வாழ்க்கையின் துன்பத்தை மேலும் அதிகமாக்கிவிட்டிருகின்றார்கள். வெறுமை நிறைந்த தன் வாழ்க்கையிலும் ரத்னபாய் தன் தோழி அம்புவுக்குக் கடிதம் எழுதுகின்றாள். எதற்காக எதைப்பற்றி கடிதம் எழுதுகின்றாள் என்பதை அறிய நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாக இருக்கும். தான் வாங்கியிராத பட்டுப்புடவையைப் பற்றி வர்ணித்து எழுதுகின்றாள். ராதையின் அழகும் கண்ணனின் கானமும் கலந்து வண்ணங்களாய் பட்டுபுடவையில் பரவ செய்தவனைக் கலைஞனென புகழ்கின்றாள். இத்தகைய வர்ணிப்புகளுடன் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுகின்றாள். கடிதத்தைப் படித்த தோழி அவளுடைய ஆங்கிலத்தை மெச்சுகின்றாள். தனக்கும் தன் தோழிகளுக்கும் அதே போன்ற புடவைகளை வாங்கி அனுப்புமாறு கேட்டு கொள்கின்றாள். சேலைகளை வாங்கி வைத்து விட்டு மீண்டும் ஆங்கிலத்திலேயே தோழிக்குப் பதில் அனுப்புகின்றாள். எழுதிய கடிதத்தைப் பலமுறை படித்துப் பார்க்கின்றாள். இது சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’ என்ற கதை.

குடும்ப மகிழ்ச்சியே தங்களின் இன்பமாக கருதும் பெண்களுக்கு அத்தகைய மகிழ்ச்சி கிடைக்காத பட்சத்தில் வாழ்க்கை வெறுமையாய் தோன்றுகின்றது. அதை நிரப்பிக் கொள்ள அவர்களுள் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை வெளி கொணரவே விரும்புகின்றனர். அது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதையே வாழ்க்கையின் அர்த்தமாக்கி கொள்ள தயாராகின்றனர்.

“பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்றாள்.“இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள். கதை முற்று பெறுமுன் இவ்வரிகள் வருகின்றன. அவளது வாழ்க்கையின் முழு திருப்தியையும் மகிழ்ச்சியையும் இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன. அவளது ஆங்கில புலமை மட்டுமே அவளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்பிப்பதாய் உள்ளது. அது மட்டுமே அவளது திறன். அதை உணர்ந்து கொண்டவளாய் அதை மட்டுமே எண்ணி எண்ணி மனம் மகிழ்கின்றாள்.

தன் வாழ்க்கை குறைகளை அவள் கொட்டி தீர்க்கவில்லை. மாறாக வாழ்க்கையின் திருப்தியைத் தொட முயற்சிகின்றாள். பெரும்பாலும் மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் கண்களுக்கு நிறைகள் இருந்தும் குறைகளே அதிகமாக தெரிகின்றன. திருப்தியைத் தொட முயற்சித்தால் நிறைகள் வெளிபடும் தருணங்கள் அதிகம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...