விரலிடுக்கில் சிக்கும் வார்த்தைகள் – அ.வெண்ணிலாவின் கவிதைகள்

எல்லைகளற்று வரைமுறைகளற்று நீண்டு விரிந்திருக்கும் சிந்தனையையும் மனதையும் போல் கவிதையும் தனது சிறகை எல்லைகளற்று விரித்தபடியே இருக்கிறது. தனக்கான வெளியை கவிதையே கட்டமைக்கிறது. அந்த வெளியைத் தகர்த்து புது புது வெளிகளையும் தொடர்ந்து கட்டமைக்கும் பணியையும் கவிதை செய்கின்றது. வெறும் அழகியலையும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் மேல்பூச்சுகளோடு பேசி வந்த கவிதைகள் இன்று கட்டுகள் உடைத்து தன்மொழியில் நிதர்சனத்தைப் பேசுகின்றது. கவிதை வெறும் இன்பம் என்பதை தாண்டி இரத்தமும் சதையுமாக நம்மை பதற வைக்கின்றது.

பெண்வாழ்வு என்பது கவிதைக்குள் நுழைந்த பிறகு வாசிப்பில் தொடர்ந்து அதிர்வையேற்படுத்தியபடியே இருக்கிறது. இந்த அதிர்வினை ஏற்படுத்திய சமகால பெண்கவிஞர்களில் அ. வெண்ணிலா குறிப்பிடத்தக்கவர்.

இவரின் முதல் தொகுப்பான நீரில் அலையும் முகம் என்ற கவிதை தொகுப்பை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அண்மையில் தோழி ஆழியாள் மலேசியா வந்திருந்த போது அ.வெண்ணிலாவின் அண்மைய தொகுப்பான துரோகத்தின் நிழல் என்ற கவிதைத் தொகுப்பினை வழங்கிப் போயிருந்தார். முந்தைய தொகுப்பில் இருந்ததைவிட காத்திரமான பல நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.

அ. வெண்ணிலா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்தவர். ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ ‘நீரிலலையும் முகம்’ ‘கனவிருந்த கூடு’ எனஆறு கவிதை நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு கடிதத் தொகுப்பு ஆகியவை இவருடைய முக்கியமான படைப்புகள். இன்னும் பல சிறு கதை, ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுத் தொகுப்புகளைத் தொகுத்திருக்கிறார். தீவிரப் பெண்ணிய ஆர்வலர். சிறு பத்திரிகை ஆசிரியர். ‘திண்ணை’ அமைப்பின் அமைப்பாளர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

வெண்ணிலா தான் கடந்து வந்த வாழ்வின் பதிவை எந்தவொரு புனைவுமின்றி பதிவாக்கியிருக்கிறார். இவரின் கவிதை வரிகள் பலரது முகங்களை மிக துல்லியமாக அடையாளப்படுத்துகின்றன. நாமும் நீங்களும் அதே முகங்களோடும் வெண்ணிலாவின் கவிதைகளில் வலம் வருகின்றோம்.

அங்க நின்று பேசின

இங்க நின்னு பேசினன்னு

பேச்சு வந்தது

படிச்சது போதுமுன்னு

சோறாக்க வேண்டியதுதான்…

இப்போதும் கூட சில வீடுகளில் பெண் பிள்ளைகளை நோக்கி வீசப்படும் சொற்கள் இவை. நாடு மாறினாலும் சொற்கள் மட்டும் அப்படியேதான் நிலைத்திருக்கின்றன.

முதல் இரத்தம் பார்த்து

கலங்கி

பாதி வகுப்பில் வெளியேறும்

பெண்

ஒரு செவிலித் தாய்க்கான

பிரியத்தை விட்டுச் செல்கிறாள்

தன் வகுப்பறையிடம்…

 

எந்த பூச்சுக்களுமற்ற இயல்பான பெண் ஏக்கத்தின் பதிவு இது. பதற்றமான அந்த முதல் இரத்தம் பார்த்த சூழலில் பற்றி படர ஒரு கிளையாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு வகுப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் ஏக்கம் இது. இன்றும் கூட இந்த ஏக்கம் தொடர்ந்து வந்தபடியே இருப்பதுதான் வருத்தமளிக்கிறது. அந்த முதல் இரத்தத்திற்குப் பிறகுமாற்றம் காணும் பிறரது பார்வையும் அதுவரை இல்லாத அளவிற்கு அந்த சிறு பெண்ணின் மீது சுமத்தப்படும் கடமைகளும் இன்ன பிற தொடர் நிகழ்வுகளும் எல்லார் மீதும் எரிச்சல்படவே வைக்கிறது.

குழலி படம்மரண தண்டனைக்கு எதிராக எழுதப்பட்ட கவிதை இது. மரணதண்டனை அமலாக்கம் குறித்த விவாதங்கள் உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. பன்னாட்டு மன்னிப்பு சபை தொடங்கி உலகெங்கும் பல அமைப்புகள் மரண தண்டனை என்பது அடிப்படை மனித உரிமையைப் பறிப்பதாக இருப்பதால் அது ஒழிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மரண தண்டனையை ஆதரிப்போர் கொடிய உயிரிழப்புகள், குழந்தை கொலை, வன்கொடுமைகள், இனவழிப்புகள், பயங்கரவாதம் போன்ற கொடூர நிகழ்வுகளில் குற்றம் புரிந்தவரின் உயிரைப் பறிப்பது நியாயமே என்றும் பலர் வாதிடுகின்றனர். மரண தண்டனை வழங்கப்படாவிட்டால் பல வழக்குகளில் தகுந்த நீதி நிலைநிறுத்தப்படாது என்றும் பலர் தொடர்ந்து வாதிடுகின்றனர்.

இந்த விவாதங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்க ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டுக்குறிய ஒவ்வொரு சட்டப்பிரிவிற்கும் தண்டனைகளும் அபராதங்களும் வேறுபட்டிருக்க எவ்வாறு மரணதண்டனையை நிறைவேற்ற முடியும் என்ற கேள்வியியை எழுப்புகிறார் கவிஞர் வெண்ணிலா.

வெண்ணிலாவின் கவிதைகள் திணை சார்ந்து அதிகம் பேசுகின்றன. அவர் கவிதைகளில் கடல் இருக்கிறது. மரம், பறவைகள், பூக்கள் என எல்லாம் நம்மை மிக அருகில் சென்று இரசிக்க வைக்கின்றன. இயல்பாகவே நம் எல்லாருக்கும் இயற்றையின் மீது ஈடுபாடு உண்டு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருந்த நம் மூதாதையரின் மரபணுவாக கூட அது இருக்கலாம்.

கண்ணுக்குள்

சிறகசைத்தப்படி

ஒரு பறவை

 

இரவின் மௌனத்தை

பறவையின் முதல் குரல்

கலைக்கிறது

 

அந்தியில்

கூடு திரும்பும் பறவைகள்

சிறகசைக்காமல்

பொழுதைத் தன் முதுகில்

சுமந்தபடி செல்கின்றன.

என எண்ணற்ற பறவைகள் வெண்ணிலாவின் கவிதைகள் தோரும் சிறகசைத்துப் பறக்கின்றன.

அன்பைப் போதிக்கிற போது கூட வெண்ணிலா கடல்குறித்துதான் பேசுகிறார். கடல் அவரது கவிதைகளில் அன்பின் உருக்கொண்டு ஆர்ப்பரிக்கிறது.

கடல் என்ன வடிவம்

நீருக்கு வடிவம் உண்டா

கடலுக்கேது வடிவம்

கிணற்றிற்குண்டு

குளத்திற்குண்டு

கடலுக்கேன் இல்லை

வடிவற்ற பெருவடிவாய் கடல்

நம் பேரன்பின் உருக் கொண்டு.

 

எங்கலைந்தும்

தொலைக்க முடியா தீரா தனிமையை

கடற்கரையொன்றில் விரிக்கிறேன்

தீப்பற்றி எரியத் துவங்கும் கடல்

என் காலடியில் புதையுண்டு

பின் தொடர்கிறது.

 

என் தன் எல்லா உணர்வுகளையும் கடலோடு தொடர்பு படுத்துகிறார்.இயற்கையோடும் திணையோடும் தொடர்புபடுத்தி கவிதை எழுதுவது அந்த கவிதைகயோடு மிக நெருக்கமாக நம்மைப் பயணிக்க வைக்கின்றது.

பரவசங்கள் வடிந்துவிட்ட

காதலை என்ன செய்வது

என காதல் குறித்தும் வெண்ணிலா பேசுகிறார். என்ன செய்யலாம் என்பதையும் அவரே சொல்கிறார்.

பரவசங்கள் உதிர்த்துவிட்ட காதலை

பிறரறியாமல் கொன்று புதைப்போம்

பரவசத்தையாவது

கைவசம் வைத்திருப்போம்.

பலரது வாழ்க்கை வெறும் பரவசங்களோடு மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன என்பதைக் கவிஞர் மிகத் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்.

பிரியத்தை

பிரியம் என்றெழுதிச் சொல்வதா…

பிரியம் என்றொரு சொல்லிலிருந்து

கிளைப்பதேயில்லை

பிரியத்திற்கான கணங்கள்.

வெண்ணிலா கவிதைகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அவரது கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட அவரது கவிதைகள் சொல்லிச் செல்லும் வாழ்வியல் அதிர்வினை ஏற்படுத்தும். சில கவிதைகள் வெறும் சொல் அலங்காரமாகவும் மனப் பதிவாக தோன்றினாலும் நம்மால் அதனோடு பயணிக்க வைக்கும் வல்லமையை வெண்ணிலாவின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. வெண்ணிலாவின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகில் தனக்கான இடம் ஒன்றினைப் பெற்றிருக்கிறது எனதாராளமாகச் சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...