பார்த்து, படித்து பிடித்த புகைப்படங்களையும் கருத்துகளையும் முகநூலில் பகிர்வது வழக்கம். பலருக்கு இது பழக்கம். அப்படி பகிர்வது எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்வதற்கில்லை. பிடிக்காதவர்களைன் நாம் பொருட்படுத்துவதும் பொருட்படுத்தாமல் போவதும் அவர் செய்யும் பின்னூட்டத்தில்தான் இருக்கிறது.
சமீபத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தேன். ‘நீங்கள் யாரோடும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையென்றால்; நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று பொருள்’. இதனை பகிர்ந்ததும் பலர் வந்து பின்னூட்டமிட்டார்கள். இன்னும் சிலர் லிகெ like செய்திருந்தார்கள். ஒரு பெரியர் வந்திருந்தார்; ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எல்லோரோடும் ஒத்துப்போக பழகுங்கள்’ என்று பின்னூட்டமிட்டு போய்விட்டார். இதனையொட்டி அவரோடு பேசலாமென கருத்தினை எழுதினேன். போனவர் போனவர்தான் இதனை எழுதும் இந்நொடி வரை வரவில்லை.
நான் ஒரு கருத்தை சொல்லி; அது அப்படியல்ல என்று சொல்வதுதான் கருத்து முரண், மாற்றுக்கருத்து . இது கூட தெரியாமலா அவர் வந்து பின்னூட்டமிட்டிருப்பார் என்றால் விசயம் அதுவல்ல. ஏற்கனெவே என்மீதோ என் எழுத்தின் மீதோ அவருக்கு விமர்சனம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும். அதனை உரையாடலாகவோ , கேள்வி பதிலாகவோ அமைக்க அவர் விரும்பவில்லை. உள்ளுக்குள்ளேயே மறைத்தும் பதுக்கியும் வைத்திருக்கும் விஷயங்கள் நம்மையும் அறியாமல் வெளிவந்துதான் தீரும். சில சமயம் கோவமாகவும் சில சமயம் காமமாகவும் தேவையில்லாத வார்த்தைகளாகவும்.
போன பெரியவர் வருவாரா மாட்டாரா என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இப்படி பலரை தினமும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. நாமும் அப்படி ஆக வேண்டியும் உள்ளது . யாரோ ஒருவரின் கருத்துக்கு குரல் கொடுத்து ,முழுமை கிட்டாமல் நமக்கேன் வம்பு என்று செல்வார்கள். அல்லது அவருக்கு பிடிக்கல அதனால நான் பேசல. இவருக்கு பிடிக்கல அதனால நாமும் சண்டை போடலாம் என்பவர்களால் அவர்களுக்கு அவர்கள் குரல் கொடுப்பதாக நினைக்கிறவர்களுக்கும் ஒரு தூசும் பயனில்லை. என்ன..? சில நொடி மின்சாரம் போல ஒரு உலுக்கு உலுக்குவிடும். அது போதும் இரு சாராருக்கும்.
சமீபத்தில் புத்தகங்களை விற்க சென்றிருந்தேன். கவிதைகள் கதைகள் நாவல்கள் என வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தது. வருவோர் போவோரெல்லாம் புத்தகங்களை நோக்கி கடைக்கண் பார்வையை வீசினார்கள். ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சியென்பதால் சில மாணவர்கள் பெற்றோருடனும் சில மாணவர்கள் ஆசிரியர்களுடனும் வந்திருந்தார்கள். ஓய்வு நேரத்தில் புத்தகங்களை பார்வையிட வந்திருந்தவர்களுக்கு முடிந்தவரையும் தெரிந்தவரையிலும் இருக்கும் புத்தகங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு புத்தகம் குறித்து சில விபரங்களை சொல்லிக்கொண்டிருந்ததை ஆச்சர்யமாக பார்த்தனர். நேற்று படித்து இன்று புத்தகங்களை விற்கவரவில்லை. வாசிப்பது தொடங்கி வருடம் பலவாச்சி என்பதால் புத்தகங்கள் குறித்து பேசுவது அலாதியானது. தனியின்பம் இருப்பதை உணர்ந்ததால் தொண்டை தண்ணீர் வற்றுமளவுக்குக் கூட பேச முடியும்.
அப்போது மாணவர்களுக்கும் எனக்குமான உரையாடல் என்னை மேலும் இளமையாக்கியது அது குறித்து எழுத எனக்கு இன்னும் அவகாசம் வேண்டும்.
பிள்ளைகளுக்காக புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு எந்தவகை புத்தகங்கள் தேவையென கேட்டு நானும் தேடினேன். கவனித்தேன். கவிதை புத்தகம் மீது அவரின் கை படவேயில்லை. கவிதை புத்தகத்தை எடுத்து கொடுத்தேன். கவிதையெல்லாம் வேணாம்ப்பா இப்ப உள்ள கவிதைகள்லாம் புரியவே மாட்டேங்குது என்றார். புத்தகம் தேடிக்கொண்டிருந்த பெண்ணும் அவர் கருத்தினை ஆமோதித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. அதன் காரணம் கேட்டார்கள்.
கவிதை எப்படி புரியனும்னு எதிர்ப்பார்க்கறிங்க. பாடல் நூல் போலவா இல்லைன்னா ஓவ்வொரு கவிதைக்கும் கீழே விளக்கம் கொடுக்கவேண்டுமா திருக்குறள் போல. இருவரும் யோசித்தார்கள். நான் ஏதோ சொல்லவருவதை யூகித்துவிட்டார்கள். உடனே நான் அமைதியானேன்.
அவர் விரும்பாத போது, அவர்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டத போது யார் பேசினாலும் அவர்களின் மனம் அதில் லயிக்காது. அந்நேரம் நாம் பேசுவதெல்லாம் சுடுதண்ணி கணக்காய் நேரம் ஆக ஆக சூடு தணிந்துவிடும். முதலில் அவர்களின் ஆர்வத்தை கண்டறிந்தே மேற்கொண்டு பேசினேன்.
இங்கிருக்கும் நம்மில் பலரும் தமிழ், மலாய், ஆங்கில மொழி அறிந்தவர்கள்தான். சிலருக்கு மட்டுமே ஓரளவு சீன மொழியில் பண்டிதம் இருக்கும். சீன மொழி பரிட்சயமில்லாதவர்களும் நாடங்களிலும் திரைப்படங்களிலும் ஆங்கில மலாய் மொழியாக்கம் கீழே கொடுக்கப்பட்டதை படித்து புரிந்துகொள்வார்கள். சிலர் சீன பேய்படங்களை விரும்பி பார்ப்பார்கள், அதன் மொழியாக்கம் தரப்படாவிட்டாலும் ரசிப்பார்கள். குதித்து குதித்து வரும் பேய்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள தப்பியோடும் சிலர்தான் கதை. ஆனாலும் அவர்களின் செயல்கள் பார்ப்பவர்களள கவரும் சிரிக்க வைக்கும். அதைவிடுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொரியன் சீரியல்களள இங்கு காட்டுகிறார்கள். அவர்கள் பேசும் மொழி கொரியனாக இருக்கும். ஆனால் அதன் ஆங்கில மொழியாக்கம் கீழே போடப்பட்டிருக்கும்.
ஆங்கில மொழி அறிந்திடாதவர்கள் கூட விரும்பி பார்த்த நாடகம் அது. பெரிய ஹோட்டலில் இருக்கும் சமையலறையில் நடக்கிறது கதை. அவர்களின் சமையல், நட்பு, முதலாளித்துவம், காதல், பிரிவு இதுதான் கதையை நகர்த்தி செல்கிறது. பலருக்கு இந்நாடகங்கள், மொழி தெரியாவிட்டாலும் ரசிக்க முடியும் காரணம் அவர்களுக்கு அந்நாடகம் குறித்து யாரோ சொல்லியது மனதில் பதிந்திருக்கும். நல்லா இருக்கு என யாரவது சொல்லி இவர்கள் அவர்களின் கருத்தினை உள்வாங்கி, அவர் சொன்னா நல்லாதானே இருக்குமென முதலில் பார்க்கத்தொடங்கி பின்னர், அந்நாடகம் பிடித்திவிடுகிறது. வேறெந்த தனித்துவமும் அந்த நாடகங்களில் இல்லை. பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும் அந்நாடகங்கள் மட்டும் தனித்து தெரிவதற்கு காரணம் என்ன..? பார்க்கின்றவர்களின் மனம்தான்.
மனம் விரும்பிய ஒன்றை எவ்வளவு நேரமேனும் சலிக்காமல் பார்க்கலாம்.
கவிதையினை புரிந்து கொள்வதும் அப்படித்தான். புரியாது என்ற எண்ணுத்தடன் எந்த கவிதையை தொட்டாலும். கவிதை தன்னை காத்துக்கொள்ள ஓடி ஒழிந்துவிடதான் செய்யும். முதலில் கவிதைமீதான நமது எண்ணத்தை கவனிக்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளித்தனமாக இருக்காமல்; மிக இயல்பாக கவிதை கடந்து செல்லலாம். மனம்வந்து கவிதையினை படிக்கவேண்டும். புரிகிறதோ இல்லையோ, தொடங்கிய கவிதையினை படித்து முடித்திட வேண்டும். படித்ததை மனதில் அசைபோடும் போதும், கவிதையின் கருத்து மட்டும் உள்ளிருக்காது. நமது கடந்த கால அனுபவங்களும் மனதில் தேங்கியிருக்கும் சந்தேகங்களும் கவிதையுடன் சேர்ந்து கொஞ்சமாகவே நம்மை குழப்பிவிடுகிறது. நாமும் கவிதைதான் நம்மை குழப்புவதாக சொல்லி தப்பித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு பேசி முடிக்கவும் நின்றிருந்தவர் கேள்வியைக் கேட்டார்; “அப்படின்னா எல்லா கவிதையுமே புரியனுமே.. இல்லையே… உங்களுக்கு எல்லா கவிதையும் புரியிதா என்ன..?”
எனக்கும் கவிதைகள் அத்தனையும் புரியவில்லைதான். ஆனால் அது குறித்த புலம்பல் எனக்கு இருப்பதில்லை. இது ஒன்றும் மிகப்பெரிய குற்றமெல்லாம் கிடையாது. இன்று புரியாத கவிதை நாளை புரியலாம். நாளையை கடந்து நான்கு வருடங்கள் கழித்தும் புரியலாம். அதுவரை ஒரே கவிதையை கட்டிக்கொண்டு அழவேண்டியதுமில்லை. ஆழ்ந்து படிக்கும் கவிதை அதுவாக இதனை நமக்கு செய்யும்.
சந்தேகமெனில்; ஒரு கவிதை புத்தகத்தை எடுங்கள். சில கவிதைகளை படித்துப்பாருங்கள். புரியவில்லையெனில். புத்தகத்தை மூடி நெஞ்சினில் வைத்து உங்களுக்கான கவிதை எதுவென கேளுங்கள். ஏதாவது பக்கத்தை திறந்து அதிலிருக்கும் கவிதையை படியுங்கள். இன்னமும் குழப்பமாக தோன்றினால், அடுத்ததும் இப்படியே செய்யுங்கள். இன்னொரு கவிதையை மனதில் வைத்து பக்கத்தை திறவுங்கள். அங்கிருக்கும் கவிதையை படியுங்கள், புரிந்துக் கொள்ள முயலுங்கள். அப்படியும் புரியவில்லையென்ற புலம்பல் வந்தால்; பிடிக்கலைன்னா மூடிட்டு போங்க புத்தகத்தை ஒன்றும் குறைந்துவிடாது. உங்களுக்கான கவிதை அந்த புத்தகத்தில் இல்லை அவ்வளவுதான். ஆனால் உங்களுக்கான கவிதை எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கிறது. நாம்தான் அதை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ‘அதற்கெல்லாம் கஷ்டமுங்க, உலகம் போற வேகத்துல’ நொண்டி சாக்குகளை நாமே நமக்கு சொல்லி கவிதைகளை காலம் முழுக்க குறை சொல்லிக்கொண்டே இருந்தால் இன்னொரு காரியம் மட்டும் செய்யலாம். குக்கரில் அரிசி வெந்து சோறாவதற்கு முன்னரே எடுத்து தின்றுப்பார்க்க வேண்டிதான் அதான் உலகம் போற வேகத்துல செய்து முடிக்க காரியம்.
கவிதை பிடிக்கலைன்னா புத்தகத்தை மூடிட்டு போவதில் இருக்கும் அதே ஆர்வம் நமக்கான கவிதையை தேடுவதிலும் இருக்கவேண்டும்.
‘குழந்தை வரைந்தது
பறவைகளைதான்
வானாம் தானாக உருவானது’ என்று கலாபிரியா சொல்வது போல தானாக வானம் உருவாக பறவைகளை நாம் கண்டறிய வேண்டும்.