தன்னைப் புரட்டிப் போட்ட வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்கு, அது தந்த இன்பத்தையும் வலியையும் சேர்த்தே அனுபவிப்பதற்குக் கவிஞனுக்கு இருக்கிற ஒரே வழி கவிதை எழுதுவது மட்டும்தான். அதன்வழிதான் அவன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். அதே வழியில்தான் அவன் மரணத்தை நோக்கியும் செல்கிறான்.
நாம் கடந்து வந்த வாழ்வில் கடந்து போன நிகழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில் நம்மை ஆட்கொண்டு வசீகரிக்கிறபொழுது, உணர்வுகளை அறுத்தெடுத்து குருதி ஒழுகக் செய்கிற பொழுது அந்த உணர்வு தருகிற இன்பம், துன்பம் அல்லது வலி ஒரு கவிஞனை வந்தடைகிற பொழுது அது கவிதையாகிறது. கவிதை என்பது ஒரு நிகழ்தலுக்கான எதிர்வினை. கவிதை என்பது நிகழ்ந்து விட்ட நிகழப் போகும் ஒன்றை வார்த்தையில் தருகிறது. கவிதையின் உயிர் என்பதே நிகழ்தலில்தான் இருக்கிறது.
நிகழ்ந்துவிட்ட கணங்களை மீட்டு தரும் கவிதைகளை வாசிக்கும் போது மீண்டுமொரு முறை அந்த காட்சிகளை மெல்ல மெல்ல நகர்த்திப் பார்த்து பேருவகை கொள்கிறோம். ஆழாத் துயரில் மூழ்கிப் போகிறோம். நிகழ்ந்துபோன மரணத்திற்கு மீண்டும் துக்கம் அனுசரிக்கிறோம். அல்லது குறைந்தபட்சம் ஒரு கணமேனும் அமைதியில் ஆழ்ந்து போகிறோம். கவிதைகள் இதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் இதையெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டிய – நமது தோட்டப்புற வாழ்வு குறித்து எழுதப்பட்ட ஜமுனா வேலாயுதத்தின் அன்று போல் அன்று கவிதைத் தொகுப்பு தவறிவிட்டது என்பதற்காகவே இந்த பதிவினை எழுதுகிறேன்.
எப்போதுமே காத்திரமான விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளனையும் படைப்பையும் உயர்த்தும் என்பதில் தீரா நம்பிக்கை கொண்டவள் நான். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பின் மீது அன்று சமகாலத்தில் என்னோடு கவிதை எழுதிக் கொண்டிருந்த ம.நவீன் முன்வைத்திருந்த எந்தவொரு சமரசமுமில்லாத விமர்சனம்தான் கவிதைகள் குறித்த தீவீர தேடலையும் சில நல்ல கவிதைகள் எழுதுவதற்கான வாய்ப்பினையும் எனக்கு உருவாக்கித் தந்தது. ஜமுனா வேலாயுதத்தின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தப் போதே ஒரு காத்திரமான விமர்சனம் அதன்மீது வைக்கப்பட்டிருந்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகான அவரது இரண்டாம் தொகுப்பில் ஒரு சில மாற்றங்களை நாம் பார்த்திருக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
இன்றைய நிலையில் சமகால கவிதைகளின் போக்கு குறித்து மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் ஜமுனா வேலாயுதம் இருக்கிறார்.
மலேசியாவில் 90-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் புதுக்கவிதைகள் மிக அதிகமாகவும் மிக வேகமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. அவை வெறும் வார்த்தை ஜாலங்கள். சம்பவத்தை சொல்லடுக்கில் சொல்லிச் செல்பவை. வந்த வேகத்திலேயே அந்த உற்பத்தி கவிதைகள் தடம் தெரியாமல் மறைந்து விட்டன. அதே உற்பத்தியைத்தான் ஜமுனா செய்திருக்கிறார். கவிதைகள் உற்பத்திப் பொருள் அல்ல என்பதை அவர் உணரத் தொடங்கும் தருணத்தில் சில நல்ல கவிதைகள் பிறப்பதற்கான வாய்ப்பு உருவாகலாம்.
ஜமுனா வேலாயுதம் கவிதைத் தொகுப்பின் தொடக்கத்திலேயே தோட்டத்து வாசனையில் நான் பிறக்கவில்லை என்பதை மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். பிறரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே இந்த கவிதை நூலை எழுதியிருக்கிறார். தகவல்களைத் திரட்டி ஆய்வுக் கட்டுரை எழுதலாம் – கட்டுரைகள் பத்திகள் எழுதலாம். ஏன் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஆவணப் படம் கூட தயாரித்திருக்கலாம். கவிதை அதற்கு உகந்த வடிவமல்ல ஜமுனா.
கவிதை தகவல்களின் கூட்டமோ சொற்களின் கோர்வையோ மட்டுமல்ல. அது நிகழ்தலில் வெளிப்பாடு. ஒரு வேளை நீங்கள் திரட்டப்பட்ட தகவல்களை வைத்து மேற்சொன்ன ஏதாவதொரு வடிவத்தில் முயற்சி செய்திருந்தால் நல்ல ஒரு படைப்பினை படைத்திருக்கலாம்.
//உழைப்பொன்றைத் தவிர வேறொன்றை அறியாத பாமரமக்கள் காண்டாவாளிக்கும் வெளிக்காட்டு வேலைக்கும் ஓடாகி ரப்பர்மரத்திற்கே பாலாகினர்// இந்த வாக்கியத்தை நீங்கள் கவிதை என்றால் கவிதைகள் குறித்து அறிந்திருக்கும் நாங்கள் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். //எங்கிருந்து வந்தோம் என்று கூறுவதில் தயக்கம் இருந்தால் அடுத்த தலைமுறைக்கு நமது வரலாறு அந்நியமாகத்தான் தோன்றும்// //ஒன்றை அடைந்தால் மகிழ்ச்சி என்றில்லாமல் இருக்கும் தருணத்தை அப்படியே ஏற்றுக் கொள்வோம்// உங்கள் தொகுப்பு முழுக்க இப்படியான பெருவாரியான வாக்கியங்கள் நிறைந்து கிடக்கின்றன.
முழு வாக்கியத்தை உடைத்துப் போட்டு சில முற்றுப்புள்ளிகளும் இறுதியில் ஒரு வியப்புக் குறியும் வைத்து விட்டால் அது கவிதையாகிவிடாது. அல்லது எழுவாய் பயனிலை செயப்படுபொருளை மாற்றிப் போடுவதாலோ கலைத்துப் போடுவதாலோ ஒரு வாக்கியம் கவிதையாகிவிடாது. கவிதைக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழி கைவரப் பெற வேண்டும்.
இந்த வரியை வாசித்துப்பாருங்கள். //சொந்த பந்தங்கள்வேண்டாமென்றும் பணத்தோடு சில நட்பு மட்டும் தேவைக்காய் போதுமென்றும் வாழ்கிறது ஓர் உலகம். இப்படியே போனால்… தாத்தா பாட்டியின் பேரும் நாம் பிறந்த வளர்ந்த ஊரும் அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போகும்// இது ஏதோ கட்டுரைப் போல உங்களுக்குத் தோன்றலாம். இல்லை, இதுதான் ஜமுனாவின் கவிதை. உடைந்த வாக்கியங்களை ஒன்றாகச் சேர்த்தால் அது கட்டுரையாகிவிடும் அதிசயத்தை இந்த நூலில்தான் பார்க்க முடிகிறது. எந்தக் கவிதையையும் இவ்வாறு வாக்கிய வரிசையில் போடலாம்தான். ஆனால் ஒரு நல்ல கவிதையை எவ்வாறு நீங்கள் வாக்கியமாக இணைத்தாலும் அதனுள் இருக்கும் கவித்துவம் உயிர்த்து தன்னை வெளிக்காட்டும். கவித்துவமற்ற வெற்று வரிகளுக்கு எவ்வாறான ஒப்பனை செய்தாலும் அது தனது வெற்றுத்தன்மையை வெளிகாட்டாமல் விடாது. இந்த கவிதை நூலுக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது.
மேலும், உங்கள் கவிதை ஒன்றுக்கு நீங்கள் தலைப்பு வைத்திருப்பது போல நீங்கள் எழுதியதை கவிதை என அப்படியே ஏற்றுக் கொள்ள கண்டிப்பாய் அது குறித்து அறிந்திருக்கும் நல்ல வாசகர்களால் முடியாது. அடுத்து முறையான சமகால கவிதைகள் குறித்தும் கவிதைப் போக்கு குறித்தும் அறிந்திருப்பவர்களிடமும் அது குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்துபவர்களிடமும் உங்கள் கவிதைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு கேட்டுக் கொண்டால் மலேசிய கவிதை வெளியில் உங்கள் கவிதைக்கான இடம் என்ன என்று புரிவதோடு உங்களை நீங்கள் முன்னகர்த்தவும் வாய்ப்புக் கிட்டும். அது தவிர வாசிப்புக்கான உழைப்பைக் கோரியும் உங்கள் காலம் காத்திருப்பதை மறக்க வேண்டாம்.
கவிதையை நல்ல கவிதை என்றும் கெட்ட கவிதை என்றெல்லாம் பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்றுதான் பிரிக்க முடியும். அதனுடைய உறுதியின்மையால், அனுபவ வறட்சியினால், தேவையற்ற பிரச்சாரங்களால், தேவையற்ற முகஸ்துதிகளால் கவிதை அல்லாதது அப்பபட்டமாக தன்னைதானே வெளிக்காட்டி கொண்டுவிடுகிறது.
இனியாவது ஜமுனா வேலாயுதம் கவிதைகள் எழுதுவார் என நான் எதிர்ப்பார்க்கிறேன்.
// தகவல்களைத் திரட்டி ஆய்வுக் கட்டுரை எழுதலாம் – கட்டுரைகள் பத்திகள் எழுதலாம். ஏன் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஆவணப் படம் கூட தயாரித்திருக்கலாம். கவிதை அதற்கு உகந்த வடிவமல்ல//
மிகச் சரியான கருத்து. ஆனால் இக்கருத்து நவீன கவிதைகளுக்கே மிகச்சரியாக பொருந்துகிறது என்று என்னுகிறேன். மற்றபடி நமது மரபுசார்ந்த கவிதைகளுக்கு பொருந்துமா என்னும் சந்தேகம் வருகிறது. காரணம் நமது காப்பியங்களும், பெரியபுராணம் போன்ற சமய நூல்களும் தகவலை திரட்டி புனைவு சேர்த்து கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன என்பதே என் புரிதல். என் புரிதல் தவறாக இருக்கலாம். அறிந்தவர்கள் தெளிவு படுத்தலாம். நன்றி
அ.பாண்டியன்
அருமையான வெளிப்படையான கருத்து இது. உங்களை நான் பாராட்டுகிறேன் குழலி. மிகச்சரியானது உங்களின் பார்வை.
ஊரறிய கொஞ்சம் `பிரபலமாகி’, தமிழில் சரியாக உச்சரிக்கத்தெரிந்துவிட்டால், தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்துவிட்டால், இலக்கியமும் விரல்நுணியில் என்கிற சிந்தனைப்போக்கு புதிதல்லவே..! எவ்வளவு பாடுபட்டாலும் எது இலக்கியம் என்கிற புரிதல் குன்றிய சமூகமாகவே நாம் இருந்துவருகிறோம்.
மேலே நீங்கள் குறிப்பிட்ட சில வாசகங்களைக் கோடிட்டுக் குறிப்பிட்டுச்சொல்லாமல் விட்டிருந்தால், அது கவிதை என்கிற சிந்தனை யாருக்குமே வராது.
எந்த தைரியத்தில் இப்படியெல்லாம்.?
மேடையில் தம்மை முன்னிறுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்ற பலர், தங்களின் கைகளில் எடுக்கின்ற ஒரே கருவி, இலக்கியம் படைப்பதுதான். மற்றவற்றிற்கு (பாடல்/ஆடல்/மிமிக்கிரி/ சொற்பொழிவு.) உழைப்பு தேவை. இலக்கியம் படைப்பதுதான், ஏமாற்றுவேலை. சுலபம். வாசகர்கள் வாய்த்திறக்கமாட்டார்கள். இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்களுக்கும் இலக்கியம் புரியாது. இலக்கியச்சோலை செய்பவர்களுக்கும் இலக்கியம் பற்றிய புரிதல் இருக்காது. சோ, நன்றாக ஏய்க்கலாம். கவிதையாகட்டும், சிறுகதைகள் ஆகட்டும், தொகுப்பு ஆகட்டும், சுயசரிதை ஆகட்டும், நாவல் ஆகட்டும்.. ரசிப்பார்களா? மக்களிடம் போய் சேருமா.? என்கிற சிந்தனையே இல்லாமல், புத்தகம் போட கோதாவில் மிகச்சுலபமாகக் குதித்துவிடுகின்றனர்.
ஒரு சூழலில் வாழ்ந்த வசித்த அனுபவமே இல்லாத ஒருவர் அதை அனுபவித்ததைப்போன்று எப்படி இலக்கியம் படைக்கமுடியும்.? குழலி சொல்லியிருப்பதைப் போல், கதைகள் கட்டுரைகள் வேண்டுமானால் எழுதலாம், என்பதையும் நான் ஏற்கமாட்டேன். ஆய்வுக்கட்டுரை வேண்டுமானால் எழுதலாம். மற்றபடி அனைத்து இலக்கியப்படைப்புகளுக்கும் உண்மைதான் அடிப்படையாக இருக்கவேண்டும். இக்கருத்தை யார் எப்படித் திரித்துச்சொல்லி மழுப்பி மறைக்கப்பார்த்தாலும் நான் ஏற்கவே மாட்டேன். உண்மைக்குப்புறம்பான எதுவும் இலக்கியம் அல்ல..
ஆப்பிரிக்காவில் பிறக்காத நான் புத்தகம் போடவேண்டும் என்பதற்காக அங்கே வாழ்ந்தவர்கள் சொல்கிற கதைகளை, பத்திரிகைகளில் டாக்குமெண்டரிகளில் வாசித்து/பார்த்து/கேட்டுவிட்டு கற்பனையில் சஞ்சரித்துக்கொண்டு தாம் அங்கே வாழ்ந்ததைப்போல் கவிதை கட்டுரை எழுதி புத்தகம் போட்டால் இலக்கிய உலகம் காறி உமிழாதா?
என்னக் கொடுமை இது. stupids
இது போன்றவர்கள் தங்களை விமர்சனம் செய் என்பார்கள்…செய்துவிட்டால் முகநூலில் பாய்வார்கள். உண்மையில் இவர்களுக்குத் தேவையானதெல்லாம் புகழ்ச்சி மட்டுமே.
ஏற்கனவே தேசிய கோட்பாடு தெரியாமல் மாட்டிக்கொண்ட ம…….. இதில் அறிவிப்பாளராக இருந்தானாமே. அரசியல் வாதியில் காலை நக்குவதில் அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம்!
பூங்குழலி, இது போன்றவர்களிடம் பதில்கள் வராது. அப்படியே வந்தாலும் அவை வெறும் கூச்சலே. தனிமனித தாக்குதல் செய்வார்கள். உங்கள் பதிவு நன்று. தொடர்க.
அந்தக் கன்றாவியை நானும் வாசித்தேன். ஒரு நண்பர் பிரியாமல் கொடுத்தார். அதையே என்னால் வாசிக்க முடியவில்ல. பணம் கொடுத்து வாங்கி யவர்கள் நிலை? இதுகள் தங்கள் ஊடக புகழைக் கொண்டு அரசியல் வாதியைப் பிடித்து பணம் பண்ணவே இப்படி அலைகிறார்கள். இதுகளுக்கு அரசியல்வாதிகளிம் காசுகறக்கும் நிருபர் துணை. சீ…
இது ஒரு ஆரோக்கியமான கருத்து. வாழ்த்துகள் பூங்குழலி.
இதைத் திறந்த மனதுடன் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்வது அவசியம். இப்படிப்பட்ட விமர்சகர் நமக்குக்கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எக்கச்சக்கமான நிஜமான இலக்கியவாதிகளுக்கு இருக்கின்ற நெருடல். காரணம் வாசகன் கிடைப்பதே குதிரைக்கொம்பு. அதிலும் அக்குஅக்காக அலசி ஆராய்கின்ற வாசகன் விமர்சகன் கிடைப்பது வரம்.
இப்படி விமர்சனம் செய்கிறவரை குருவாகவும் ஏற்பார்கள் பக்குவப்பட்ட வாசக எழுத்தாளார்கள். அதன் பின்பு அவர்கள் நெருக்கமான நண்பர்களும் ஆவர்கள்.
ஆனால் இங்கே நடப்பது என்ன? ஒரு சிறிய வட்டத்தைச் சேர்த்துகொண்டு, விமர்சனம் செய்தவரை மனநோயாளியாய் சித்தரிப்பதற்கு ஒரு கூட்டம் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றது.
முகஸ்துதியை மட்டுமே எதிர்ப்பார்க்கின்ற முகமுடி இலக்கியவாதிகளுக்கு நல்லமுறையில் செய்யப்பட்ட விமர்சனத்தின் மேல் கடுங்கோபம் வருவது அவரகள் தரப்பின் நியாயம். சகட்டுமேனிக்கு துதிபாடலையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க நினைப்பவர்களுக்கு இலக்கியப்பங்களிப்பு என்பது எட்டாத கனி. ஒத்துவராத துறை என்றும் சொல்லலாம். காரணம் இலக்கிய சுற்றம் என்பது தென்றல் வீசும் வீதியல்ல. அது எப்போதுவேண்டுமானாலும் சுறாவளியாய் மாறக்கூடிய பெருங்கடல். இலக்கியத்தில் பெரும்புள்ளிகள் என்று பெயர் எடுத்தவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஓயாத போராட்டம். அதற்காக ஒரிரு குப்பைப் புத்தகங்களைப் போட்டு பணம் பண்ண நினைப்பவர்கள், இதுபோன்ற நல்லமுறையில் செய்யப்பட்ட விமர்சனங்களை, தம்மை நோக்கி வருகிற இலக்கியப்போராட்டமாகக் கருதிவிடவேண்டாம்.. சில விமர்சனங்கள் திருத்தும். சிலவிமர்சனங்கள் உணர்த்தி ஓட ஓட விரட்டும். ஜமுனாவிற்கு சொல்லப்பட்டது இரண்டாம் நிலை.
ஜமுனாவின் புத்தகம் என்னிடமும் உண்டு. நீங்கள் சாதாரண வாசக நிலையில் கூட இல்லை. உங்களின் சிந்தனைப்போக்கு அனைத்தும் ஆரம்பப் பள்ளி மாணவ நிலையில் உள்ளது. அங்கே போதிக்கின்ற ஆசிரியருக்கு நீங்கள் சிறந்த மாணவியாகத்திகழலாம். அவரும் உங்களின் அபார கற்பனைத்திறனுக்கும் சிறந்த தமிழ் பயன்பாட்டிற்கும் புள்ளிகளை வாரிவாரிவழங்கலாம். ஆனால் அது இலக்கியப் பங்களிப்பிற்கு ஒரு விழுக்காடுதான் உதவமுடியும். இலக்கியத்தின் புரிதல் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
கவிதை புத்தகம் போடுகிற உங்களின் கவிதைகளுக்கு யார் முன்னோடி என்றால், ஒரு பெரிய கவிஞரை நீங்கள் குறிப்பிட்டுச்சொல்லலாம், ஆனாலும் நீங்கள் அவரையும் முழுமையாக வாசித்திருக்கமாட்டீர்கள் என்றே நான் சொல்வேன். காரணம் உங்களின் கவிதைகளில் உயிர்ப்பு இல்லை. கவிதைகள் மட்டுமல்ல எந்த இலக்கிய வாசகங்களையும் நுகராத ஒரு வாடை உங்களின் எழுத்துகளில் வீசுகிறது. அதை முதலில் நிவர்த்தி செய்யலாமே. நிறைய வாசிக்கலாமே முதலில்..
மிட்டாய் மட்டுமே எதிர்ப்பார்க்கின்ற குழந்தைத்தனப் போக்கு உள்ளவர்கள், பொதுப்பார்வைக்கு வருவது வெட்டிவேலை. அதுவும் இலக்கியம் என்கிற வட்டத்திற்குள் புகுந்துகொள்ள நினைத்துவிட்டால், விமர்சனங்கள் என்பது வருடலாக இருக்காது. புத்தகம் நெட் என ஆழ்ந்த வாசிப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கு இது தெரியும். தொடர்ந்து எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கும் இது புரியும்.
கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஜமுனா வேலாயுதத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்குத் தெரியும். என்னோடு சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் என் வயதையொத்த சக படைப்பாளர் என்ற முறையிலேயே அவரின் புத்தக வெளியீட்டிற்கு நான் சென்றிருந்தேன்.
தொடர்ந்து அக்கவிதை தொகுப்பு குறித்து செய்யப்பட்ட விளம்பரமும் தொடர் நேர்க்காணல்களும் அத்தொகுப்பு குறித்த என்ற போன்ற வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருந்தது.
ஆனால், என் எதிர்ப்பார்ப்பின் ஒரு விழுக்காட்டைக் கூட இத்தொகுப்பு நிறைவு செய்யவில்லை. அவ்வெளியீட்டு நிகழ்வில் எல்லாரும் பேசினார்கள். ஆனால், யாருமே கவிதைப் போக்கு குறித்தும் ஜமுனாவின் கவிதைகள் குறித்தும் பேசவில்லை. கவிதை நூல் வெளியீட்டில் கவிதைகள் குறித்து பேசப்படாதது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.
அடுத்து இந்த விமர்சனத்திற்குப் பிறகு கவிதை துறையில் இல்லாத பலர் தொடர்ந்து இந்த விமர்சனம் குறித்து கருத்துரைக்கின்றனர். இதற்கு உச்சக்கட்டமாக ஜமுனா என்னை மனநோயாளி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சக படைப்பாளரை மனநோயாளி என குறிப்பிட்டிருக்கும் அவனது மனப்பாங்கு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு முதிர்ச்சி அடையாத சமூகத்தின் மத்தியில் பேசுகிறவர்கள் எல்லாருமே மனநோயாளிகள்தான். அடுத்ததாக ஒரு மனநோயாளி என்பவன் அவ்வளவு தாழ்ந்தவனா என்ன? மனிதநேயமற்று ஒரு மனநோயாளியை நிந்திக்கத் தெரிந்த ஒருவர் எப்படி கவிஞராக முடியும்? பின் எங்கிருந்து வரும் கவித்துவம்?
இதற்கு மத்தியில் வாழ்த்தி பேசாவிட்டாலும் தாழ்த்தி பேசாதீர்கள் ரக நண்பர்களும் பருப்பு நெருப்பு என அடுக்குமொழி பேசி தங்கள் எல்லாம் தெரிந்தவர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்பவர்களும் தயவு கூர்ந்து எழுத வந்திருக்கும் ஒரு படைப்பாளரை உங்கள் உசுப்பேத்தல்களால் சாகடித்து விடாதீர்கள்.
இப்படி வெறும் புகழ்ச்சியால் மட்டுமே சூழ்ந்திருந்த படைப்புகள் மாதிரியானவை காணாமல் போய்விட்டன… இந்நிலை தொடர்ந்தால் காணாமல் போவது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்…
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத மனம், புகழ்ச்சிக்கு மட்டும் உள்ளம் பூரிக்கிறது…
குழலியின் நேர்மையான விமர்சனம் போல தொடர்ந்து படைப்புகள் குறித்து விமர்சனம் வெளிவரவேண்டும்… மாற்றத்திற்கான உடன் ஏற்றத்திற்கான வழி அதுதான்..
விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு கவிதை சார்ந்த உரையாடலுக்கு ஜமுனா அவர்கள் வருவதாக இருந்தால் நிச்சயம் வல்லினமே அதற்கு ஏற்பாடு செய்யும். கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் இளம் தலைமுறைகள் நாம் இல்லை என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது.