யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அஹமாட்

யஸ்மின் அஹமாட்

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு கடுமையான எதிர்ப்பையும் இஸ்லாமிய சட்ட ஒழுங்குகளை மீறும் அவரது படங்களுக்கு எதிரான மறுப்புகளையும் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இது குறித்து செய்தி நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் அவரைக் கேட்டபோது, தனது ஸ்டூடியோவுக்கு வெளியில் சிகரெட் புகைத்துக்கொண்டே “யஸ்மின் படம் எடுப்பதை அந்தக் கடவுளால் மட்டுமே நிறுத்த முடியும்,” என நிதானமாகக் கூறினார்.

யஸ்மின் அமாட் எவ்வித அரசியல் அதிகார சக்தியின் உதவியுமின்றி ஒரு சுதந்திரத் திரைப்பட இயக்குனராகவே வாழ்ந்தவர். அரசின் எந்தக் கொள்கைகளையும் வலிந்து பிரச்சாரம் செய்யாமல் தன் ஆளுமையை நம்பியே வாழ்நாள் முழுவதும் சினிமா இயக்கியவர். மலேசியா சினிமாவைத் தொழில்நுட்ப ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் உலகப் பார்வையை நோக்கி நகர்த்திய முன்னோடிகளில் ஒருவர். மலேசிய சினிமாவை உலகம் வியந்து கவனிக்கும்படி செய்ததோடு மட்டுமல்லாமல், நமக்கான சினிமா எல்லைகளை விரிவுப்படுத்தினார். மலேசிய திரைப்படக் கலையை மலேசியத் தன்மையோடும் அலங்காரங்களும் மிகை ஒப்பனைகளும் இன்றி யதார்த்த வாழ்வியலோடும் முன்வைத்து யஸ்மின் அமாட் மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளமாக மாறினார். இனி வரக்கூடிய எந்தத் திரைப்படத்தையும் மலேசியத்தனமிக்க படைப்பு என மதிப்பீடுவதற்கு யஸ்மின் அமாட்டின் படங்களையே அளவுகோளாகக்கொள்ள வேண்டியிருக்கிறது.

2003-இல் ‘ராபுன்’ என்கிற திரைப்படத்துடன் மலேசிய சினிமா உலகுக்குத் தீவிரப் பார்வையுடன் வந்தவர் யஸ்மின் அமாட்.. பின்னர் ‘செப்பேட்’ என்கிற படத்தை 2004-இல் எழுதி இயக்கினார்.மலேசிய சமூகத்தின் மத்தியில் அவரின் இரண்டாவது படமான ‘செப்பேட்’ பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

தனது தொலைக்காட்சி நிகழ்வுகளின் மூலம் நகைச்சுவையாற்றலும், அன்பும், முற்போக்குச் சிந்தனையையும் கொண்ட மனிதராக அறியப்பட்டவர் யஸ்மின். ஜோகூரிலுள்ள மூவார் கம்போங் திரேவில் 1 ஜூலை 1958இல் பிறந்த யஸ்மின் அமாட், இங்கிலாந்தில் உளவியல் துறையிலும் அரசியல் துறையிலும் மேற்படிப்பைத் தொடர்ந்து கலைத் துறை பட்டதாரியாகத் திரும்பினார்.

அவருடைய பெரும்பாலான பெட்ரோனாஸ் நிறுவன விழாக்கால விளம்பரங்கள் மக்கள் மத்தியில் கவனமும் வரவேற்பும் பெற்றவை. நாட்டின் பல இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையிலான அவருடைய விளம்பரங்களும் மறக்கப்பட்ட கலாச்சார நினைவுகளை மீட்டுணரும் வகையிலான விளம்பரங்களும் மலேசிய மக்களின் மனத்தை நெருடச் செய்தன. பெட்ரோனாஸ் விளம்பரம் என்றால் அது தனித்துவமாகத் தெரியவும் மக்கள் இரசிக்கவும் தொடங்கினர். எனக்கு யஸ்மின் அமாட் என்கிற ஆளுமையை அவருடைய பெட்ரோனாஸ் சுதந்திர தின விளம்பரத்தின் மூலமே தெரிய வந்தது.

யஸ்மின் அமாட் திரைப்படங்கள் அனைத்தும் பல்வேறு உலக விருதுகளைப் பெற்று, உலக சினிமா நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்தன. பெர்லின் திரைப்பட விழாவிலும் சான் பிரான்ஸிஸ்க்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட ஒரே மலேசிய சினிமாவென்றால் அது யஸ்மின் அமாட் படங்களே.

 அவருடைய ‘முவால்லாவ்’ படத்துக்கு 2007ஆம் ஆண்டு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டது. அப்படத்தை வெளியிட எவ்வளவு போராடியும் மலேசிய இஸ்லாமிய சட்டத்தின்கீழ் அப்படம் திரையிடப்படுவதிலிருந்து தடைவிதிக்கப் பட்டது. தன் சொந்த அப்பாவால் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஓர் இஸ்லாமியப் பெண் அங்கிருந்து தப்பித்து கத்தோலிக்க இளைஞனின் அன்பால் ஈர்க்கப்பட்டு அவனுடன் காதல் வயப்படுவதாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அவருடைய எல்லா படங்களுக்கும் இதுபோன்ற இஸ்லாமிய ரீதியிலான எதிர்ப்புகளும் கண்டனங்களும் வந்துகொண்டே இருந்தன. இப்பொழுது அவருடைய முக்கியமான சில படங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

முக்ஷின் மற்றும் டேலண்ட் டைம்

சமூகத்தில் எழும் பெரும்பான்மை/சிறுபாண்மை இனங்களின் மத பண்பாட்டு இறுக்கங்கள் என்பது மதத்தின்பால் மதப் போதகர்களால் சமய பாரம்பரியத்தின் வரையறைகளையும் வேத பரிந்துரைகளையும் முன்னிறுத்தி உருவான  ஒரு சார்பான நிறுவுதல்  என்று கருதலாம். ஈரான் போன்ற நாடுகளில் மதக் கோட்பாட்டு இறுக்கங்களின் காரணமாகப் பெண் என்பவள் நுகர் பொருளாகவும் வீடு என்கிற எல்லையே அவளின் சுதந்திரத்தை வரையறுக்கக்கூடிய குறியீடாகவும் பாவிக்கப்பட்டிருக்கின்றன.

‘ஓசாமா’ என்ற ஈரான் படம் முழுக்க போருக்கு அப்பால் ஆண் சமூகத்தால் வன்கொடுமைக்கு உள்ளான ஈரான் பெண்களின் ஒடுங்கிய வாழ்வையே முன்னிறுத்துகிறது. கதையின் முக்கிய பாத்திரத்தில் வரும் பெண்ணைச் சுற்றி நகரும் கதை, இறுதியாக அவள் 8 மனைவிகளுக்குக் கணவனான ஒரு வயோதிக வணிகனுக்கு 9ஆவது மனைவியாக விற்கப்படுவதைக் காட்சிப்படுத்தித் திவீரமடைகிறது. அவளை ஓர் அறையில் (ஏற்கனவே மனைவிகளாலும் குழந்தைகளாலும் நிரம்பிய அறை) வைத்து பூட்டிவிட்டு அந்த வணிகன் தனது இச்சையைத் தீர்த்துக்கொண்டு சுடு நீரில் தன் உடலைக் கழுவிக்கொள்வதுடன் முடிவடையும் சினிமா, இறுக்கமான மதக் கற்பிதங்களைக் கொண்டு பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வரலாற்று வண்முறைகளைக் காட்டுகின்றன.

ஒவ்வோர் இனமும் சமூகமும் மதப்பிரச்சாரங்களால் மதப் போதனைகளால் கட்டமைக்கப்பட்டு, அதன்பால் உருவாகும் பற்பல மூட நம்பிக்கைகளையும்  பின்பற்றுதல்களையும் சடங்குகளையும் கொண்டிருக்கின்றன. மதப் பின்பற்றுதல்களும் சமய போதனைகளும் ஒரு தனி மனிதனையும் நாட்டின் இறையாண்மையையும், குடும்பத்தையும் எப்படி உருவாக்கியிருக்கின்றன என்கிற வெளிப்பாடுகளை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இதைக் கலாச்சாரங்களைக் கடந்த தொடர் மதிப்பீடுகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  நவீன சிந்தனையின் அளவுகோள்களைக் கொண்டு அல்லது மாற்றுச் சிந்தனையின் பின்புலத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயத்தை அல்லது மதத்தை மீள்பார்வை செய்வது என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டின் ஊடே ஓர் இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் இயக்கத்தில் வெளிவந்த ‘முக்ஷின்’, ‘டேலண்ட் டைம்’ படங்கள். முக்ஷின் படத்தில் குடும்பங்களில் இறுக்கமாகியிருக்கும் மத மேலாண்மைகளை உடைத்துக் காட்டும் யஸ்மின் அமாட்டின் சமூக அக்கறையையும் தீவிர சினிமா பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

‘முக்ஷின்’ மலாய்க்கார கம்பத்தில் இரு பால்ய நண்பர்களின் இடையில் ஏற்படும் உறவை, பிறகு இளம் பருவத்தில் காதலாக மாறும் நுட்பத்தை அழகியலுடன் காட்சிப்படுத்தும் படம். மனித மனத்தின் உளவியல் மாற்றங்களையும்  வாழ்வின் பரிணாமங்களின் உச்சங்களையும், மதக் கற்பிதங்களையும் கடந்து கலாச்சார சூழலில் நிகழும் ஒரு காதல் காவியம் போல பார்ப்பவர்களுக்கும் தமது பால்ய காதலை நினைவுறுத்தும் படமாகவே யாஸ்மின் அமாட் படைத்திருக்கிறார்.

கம்பத்துச் சூழலில் வாழும் ஒரு குடும்பத்தில் அம்மாவும் அவரின் பெண் பிள்ளையும் மிகவும் வெளிப்படையாக மாதவிடாய் குறித்தும் மார்பக வளர்ச்சிக் குறித்தும் உரையாடிக்கொள்வதாக அமைக்கப்பட்ட காட்சிகளை வெறுமனே கலாச்சார அதிர்வை ஏற்படுத்தும் செயற்கைத்தனங்களைக் கடந்து இயல்பான ஒரு இறுக்கமற்ற உறவுகளின் பரிமாற்றங்களாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். பெரும்பாலும் பள்ளிப் பருவத்தில் உருவாகும் காதலைத் தவறென கற்பிக்கும் கட்டுரைகளும் சமூக பிரச்சாரங்களும் அதிகமாகக் காணப்படும் சூழலில் ‘முக்ஷின்’ படம் பால்ய காதலை மதசார்பற்ற நிலையில் மானுட உச்சத்தின் ஒரு பகுதியாகவே ஆராய்கிறது. இயல்பாகவே பருவ மாற்றத்தின்போது ஏற்படும் உடல் கிளர்ச்சி, உணர்வு மாற்றங்கள் போன்றவற்றின்மீது இதுநாள்வரை படிந்திருந்த சமய இறுக்கம், மத போதனைகள் அனைத்தையும் மீறி அதை உடல் மற்றும் உணர்வுகொள்ளும் பாய்ச்சலாகவே மிகவும் யதார்த்தமாக யஸ்மின் படத்தில் சொல்லியிருக்கிறார். இதற்கு முன் அதன் மீதிருந்த அனைத்து மதரீதியிலான கற்பிதங்களைக் கட்டுடைத்துப் பால்ய உணர்வு உதிர்த்துவிடும் மனநிலைகளை அழகியலாக வெளிப்படுத்தும் யஸ்மின் அமாட் சமூகத்தின் தொன்ம புரிதல்களை பெரும் எதிர்வினைக்குட்படுத்துகிறார் என்றே பல திரை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

யஸ்மீன் அமாட் அவர்களின் ஆறாவது படம் ‘டேலண்ட் டைம்’. ஒரு தேசிய பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் திறமைக்கான நேரம் என்ற நிகழ்வை முன் வைத்து நகர்த்தப்படும் ‘டேலண்ட் டைம்’ முழுமையான மலேசியத்தன்மை மிக்க சினிமா என்று விமர்சிக்கக்கூடிய அளவிற்கு மலேசிய நாட்டின் மூன்று முக்கிய இனங்களையும் கதையோட்டத்தில் இணைத்து, மலேசியா யாரையும் புறக்கணிக்காத ஒரு தேசிய அடையாளமாக மலர வேண்டும் என்கிற பிரச்சாரமற்ற எதிர்ப்பார்ப்புகளையும் முன்வைக்கின்றது. அந்தத் தேசிய பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் யதார்த்தமான நகைச்சுவை உணர்வுகள், அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய பிற இனத்து மாணவர்களும் அவர்களின் நட்பும், அதில் வெளிப்படும் மனநிலைகளும் என்று அழகியல் சார்ந்து விரிகிறது படம்.

பால்ய காதலை மையமாக வைத்து அவர் இயக்கிய முக்ஷின் படம் மலாய்க்காரர்களின் கம்பத்து வாழ்க்கையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்ததுடன் தீவிரமான யதார்த்த கலையை மக்கள் முன்னிலையில் தரமான கலைஞர்களின் வெளிப்பாடுகளுடன் அடையாளப்படுத்தியது. அதேபோல ‘டேலண்ட் டைம்’ படத்தில் நகரத்தில் வாழக்கூடிய பல்லின மக்களின் மனநிலைகளையும் அவர்களின் வாழ்வினூடே இறுகியிருக்கும்  மதவேறுபாடுகளையும்,  அந்த வேறுபாட்டால் உருவான கசப்புகளையும் வெளிப்படுத்தியிருப்பது, இரு வெவ்வேறு சூழலிலும் யஸ்மின் அமாட் வெளிப்படுத்த நினைப்பது மதமற்ற ஒரு சமூகத்தை அல்லது மத வெளிபாடுகளின் மூலம் நிறுவப்பட்ட அடையாளங்களைத் துறக்கும் சமூகத்தைத்தான் என்று புரிந்துகொள்ள முடியும்.

இதற்கு “டேலண்ட் டைம்” படத்தின் மூலம் பல உதாரணங்களை முன் வைக்கலாம். மலேசியாவில் ஒரு மலாய்க்காரப் பெண்மணியும் இந்திய ஆடவரும் காதலிக்க நேர்ந்தால், அதில் பல மதச் சிக்கல், கலாச்சார சிக்கல், சட்டச் சிக்கல், அரசியல் சிக்கல் என்று விரிவான தளத்தில் சர்ச்சையை பகிங்கரமாக ஏற்படுத்தும் சூழல் இருக்கின்றன. இறுதியாக தேசிய சமயமான இஸ்லாமியத்தைத் தழுவினால் மட்டுமே அந்த இந்திய ஆடவனின் காதல் வெற்றி பெறும். அதற்கு முரணாக நாம் எந்தவகையிலுமே இயங்க முடியாத அளவிற்கு சட்டமும் மதக் கோட்பாடுகளும் தேசியவாதமாக நிறுவப்பட்டுள்ளன. அதை மீறி காதல், மதமற்ற அன்பு என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய நேர்ந்தால் தேசிய சமயத்தின் இறையாண்மையைப் பொதுவில் மலிவான விமர்சனத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இம்மாதிரியான பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் மத சார்பான கோட்பாடுகளை எல்லாம் மீறி ‘டேலண்ட் டைம் ‘படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு இந்திய இளைஞனைக் காதலிக்கும் மலாய் இளம் பெண்ணைக் கதையின் களமாக ஆக்கி, எந்தவித மத நெருக்கடிகளையும், சமயப் புனிதங்களையும் காட்டாமல் இந்தக் காதலை அணுகி, மிக யதார்த்தமாக அவற்றை எதிர்க்கொள்ளும் ஒரு மலாய் குடும்பத்தையும் காட்டியிருக்கிறார் யஸ்மின் அமாட்.

யாருமில்லாத சமயத்தில் இரவு படிப்பதற்கு வரும் அந்த இளைஞன் அங்கேயே தங்கி விடுகிறான். ஒரே தலையணையில் இருவரும் எதிரும்புதிருமாக தலையைப் பகிர்ந்துகொண்டு படுத்திருக்கும் காட்சியைக் காலையில் வீடு திரும்பும் அந்தக் குடும்பத்தினர் எதிர்நோக்கும் விதமே மலேசிய ஒழுக்கவாதிகளுக்குப் புதுமையாக இருந்திருக்கக்கூடும். இவ்வளவு நாள் இளைஞர்களின் உலகத்தில் வெறும் குரோதமான மதிப்பீடுகளையே வழங்கி வந்த பழமைவாதிகளின் முதுகில் அறையும்படி, “எவ்வளவு அழகா படுத்து தூங்கறாங்க பாரு ரெண்டு பேரும்,” என்கிற அந்தப் பெண்ணின் அம்மாவின் வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த மலாய்க்கார குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் சீனப் பெண்மனி அந்தக் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான சூழலில் அன்பாக இருக்கக்கூடியவராகச் சித்தரிக்கப்பட்டுருக்கிறார். அந்தக் குடும்பத்துக்காகவே இஸ்லாம் மதத்தைத் தழுவிய அவர் பெயரை மட்டும் “மெய் லீன்” என்று தொடர்ந்து தக்க வைத்துக்கொள்கிறார். அந்த வீட்டிற்கு வரும் ஒரு விருந்தாளி பெண், “சீனர்களை ஏன் பணிப்பெண்ணாக வைத்திருக்கிறாய்? அவர்கள் பன்றியைத் தொட்டு நமக்கு உணவு சமைத்தால் அது மதக் குற்றமாகாதா?” என்று கேட்கும் இடத்தில், மெய் லீன் பற்றிய கதை சொல்லப்படுகிறது.

“மதம் மாறிவிட்டால் தனது விருப்பமான பெயரைத் துறந்துவிட வேண்டுமா? மெய் லீன் என்பது அழகான பூவின் பெயர்,” என்று சொல்லப்படும் இடத்தில் மதத்தைக் கடந்த நிற்கும் மனிதர்களை யஸ்மின் சித்தரிக்கிறார் என்பது புரியும்.

மேலும் தற்காலத்திய மலேசிய சமூகத்தில் சிறுபான்மை இனமான தமிழர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகப் பயங்கர எதிர்வினைகள் கிளம்பின. அதன் மொத்த விழிப்புணர்வாக 2007 நவம்பர் 25 இண்ட்ராப் பேரணியும் அதன்பின் இசா சட்ட நிபந்தனைக்குக் கீழ் இண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களும் செயலவையினர்களுமான 5 பேரின் கைதும்  பெரும் புரட்சியை நிகழ்த்தின. அதன் காரணிகளாக முன் வைக்கப்படும் ஒரு பிரச்சனையான இந்து கோவில் உடைப்புகளை யஸ்மின் அமாட் மிகவும் நியாயமான சமூகத்தின் குரலாக இப்படத்தின் மூலம் முன் வைத்துள்ளார். அந்த இந்திய இளைஞனுடைய அம்மாவின் தம்பியை அவர் திருமணத்திற்கு முந்தைய நாளில் கோவில் தொடர்பான பிரச்சனையில் அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மலாய்க்காரர்களின் மீது கடுமையான ஆவேசத்தைக் கொண்டிருக்கும் அவரின் குரலைப் பயன்படுத்தி, தன் சொந்த இனத்தின் பலவீனங்களை ஆராயும் விதமாக கேள்வியெழுப்புகிறார் இயக்குனர் யஸ்மின்.

“மனுசனோட உயிரோட மதிப்பு தெரியல…  கோயில உடைக்கறானுங்க…  இவனுங்க சாமி கும்பிடறதெல்லாம் பொய்,” என்றும் வெளிப்படும் வசனத்தின் மூலம் ஒரு சிறுபான்மை இனத்தின் உச்சமான மனவெழுச்சியை மதச் சார்பற்ற நிலையிலிருது பேசுகிறார் யஸ்மின்.

இந்த எதிர்வினைகள் வெளிப்படும் காட்சிகள் மலாய்க்கார சமுகத்தின் எதிர்வினைகளையும் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளன. பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் யஸ்மின் அமாட் குரலுக்கு அரசு ரீதியிலிருந்து இன்னமும் எதிர்ப்போ கண்டனமோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

செப்பேட் (sepet)

யஸ்மின் அமாட்டை உச்சத்திற்குக் கொண்டு சென்ற படம் ‘செப்பேட்’. யஸ்மின் அமாட் என்கிற மலேசிய இயக்குனரின் பரந்த அறிவும் பரவலான பிற மொழி இலக்கியம் குறித்த பரிச்சயமும், அவரது அபாரமான அரசியல் பார்வையும், சமூக இன விமர்சனங்களும் அவரின் சினிமா ஆளுமையின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்டவை எனக் கூறலாம். அதற்கு முதல் சான்று அவருடைய ‘செப்பேட்’ திரைப்படம். அவரது சினிமாவில் அவரது உலக இலக்கியத்தின் வாசிப்பின் தாக்கமும், உலக சினிமா நுணுக்கங்களின் வெளிப்பாடுகளும் மிக அழகாகக் கதையோடு சார்ந்து கதையின் அழகியலை அதன் தனித்துவங்களுடன் சந்திக்கும் புள்ளியில் தன்னை வெளிப்படுத்திக் ள்ளக்கூடியவை.

‘செப்பெட்’ படம் எஸ்.பி.எம் என்ற மலேசிய இடைநிலைப்பள்ளிக்களுக்கான தேர்வை எழுதி முடித்த ஒரு மலாய்க்காரப் பெண்ணுக்கும், சந்தையில் திருட்டு வீசிடி விற்கும் ஒரு சீன இளைஞனுக்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு மீண்டும் யஸ்மின் அமாட்டின் புரட்சிக்கரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறது. சந்தையில் ஆங்கிலப் படம் வாங்க வரும் ஓர்கிட் என்ற மலாய்க்காரப் பெண்ணுக்கும் ஜேசன் என்ற அந்த வீசிடி விற்பனை செய்யும் சீன வாலிபனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களின் தொடர் சந்திப்பு, காதலாக மாறுகிறது.

மழை நாட்களில், தலையில் சிவப்பு நெகிழியைப் போர்த்திக்கொண்டு பேருந்து நிறுத்தக் கூடாரத்தில் அமர்ந்து சாலையை வெறித்துக்கொண்டிருக்கும் காட்சி, கடையின் உள்ளே இருவரும் நெருக்கமாக மங்கிய மஞ்சள் ஒளியில் அமர்ந்திருப்பதைக் கடைக்கு வெளியிலிருந்து கண்ணாடியின் ஊடாகக் காட்டும் காட்சி, புகைப்படம் எடுக்கும் கடைக்குச் செல்லும் இருவரும், வித விதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதைப் புகைப்படத்திற்குரிய பிரேமின் எளிமையிலிருந்து காட்டியிருக்கும் காட்சிகளும் யஸ்மின் அமாட்டின் சினிமா தரத்திற்கான சான்று. அவருடைய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு மிகவும் தனித்துவமாக வெளிப்பட்டிருக்கும்.

இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலைப் பற்றி தெரிய வரும்போது, ஏற்படும் விளைவுகள்தான் நமது மரபார்ந்த எல்லைகளுக்குட்பட்ட அனுபவங்களை உடைக்கின்றன. யஸ்மின் அமாட் அவர்கள் வழக்கமாகப் பாரம்பரிய இன அரசியலை உடைப்பதில் வல்லமைப் பெற்றவர். அவரின் திரைப்படங்களினூடாக மிகத் தீவிரமாக ஆனால் கலை சார்ந்த அழகியலுடன் சொல்லப்படுவது மலேசிய இனங்களுக்கு மத்தியில் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார, மொழி, பண்பாட்டு அரசியல் சுவர்களை உடைக்கும் ஆயுதமான அன்பைப் பற்றித்தான்.

ஓர்கிட்டின் அம்மா அவள் சீன வாலிபனுடன் காதல் வயப்பட்டிருப்பதை எந்தவித அலட்டலும் இல்லாமல் இயல்பாக தன் கணவருடன் பகிர்ந்துகொள்ளும் காட்சியும் ஜேசன் காணாமல் போய்விட்டதாகத் தகவல் கிடைக்கும் சமயத்தில் அவளை அழைத்துக்கொண்டு வீதி வீதியாகக் காரில் அலையும் அவரது மலாய்க்கார தந்தை இடம்பெறும் காட்சியும், யஸ்மின் அமாட் கற்பனை செய்திருந்த மலேசியாவின், குறிப்பிட்ட இன அடையாளத்தைத் தீவிரப்படுத்தாத சுதந்திர மனித நேயமும் காதலும் ஆகும். அதாவது யஸ்மின் சொல்ல நினைக்கும் இஸ்லாத்தின் புதிய வெளிப்பாடாகும்.

அவருடைய படைப்புகள் தேசிய சினிமாவுக்கான தனித்துவங்களை இழந்ததற்கும் அதுவே காரணி எனலாம்.

எந்த இனமாக இருந்தாலும் அவர்களையெல்லாம் முக்கியத்துவப்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆளுமையாக இஸ்லாம் திகழ வேண்டும் என்ற கருத்தையே அவர் முன்வைக்கிறார். இதற்கு மலேசியாவின் அரசியல் பின்புலம் தெரிந்திருந்தால் மட்டுமே யஸ்மின் அமாட் திரைப்படங்களிலுள்ள கலைத்தன்மைமிக்க முயற்சிகளை மீறிய மாற்றுப்பார்வையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மதத்திற்கு வெளியே வைக்க முயன்ற அவரது முயற்சி மீண்டும் ஒரு மதம் என்கிற அதிகாரத்திற்குள்ளே தன்னுடைய அரசியலைப் பரப்பிவிடுகின்றது. மதசார்பற்ற ஒரு வெளிக்குள் ஒரு தூய்மையான புதிய இஸ்லாத்தை உருவாக்கிப் பார்ப்பதே யஸ்மினது கலைப் படைப்புகளின் அரசியலாக முனைந்து நிற்கின்றன.

யஸ்மின் அமாட்டின் சினிமா கலை நுட்பமும், மலேசியாவில் இருக்கக்கூடிய மற்ற இனத்தின் கலாச்சார புரிதலும் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் இன்றும் தமிழ் சினிமா உலகில் யஸ்மின் அமாட் பரவலாக அறியப்படவில்லை. அவரின் எத்தனை படங்கள் தமிழர்களால் பார்க்கப்பட்டது என்றும் எத்தனை தமிழ் விமர்சனங்கள் அவரது கலை ஆளுமை குறித்து எழுதப்பட்டது என்றும்கூடத் தெரியவில்லை.

மலேசிய தமிழ் சினிமா இன்னமும் தட்டையான குண்டர் கும்பல் கருவையும் பேய்க் கதைகளையும் தமிழ் சினிமாவின் தாக்கத்தின் பெயரில் வரண்ட தொழில்நுடபத்தின் வாயிலாக எடுக்கப்பட்டு வருகையில், அபாரமான அரசியல் சமூக விமர்சனங்களைத் தனது குரலாக மலேசியாவின் ஒரே அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும், மற்ற இனத்திற்கும் குரல் எழுப்பக்கூடிய நேர்மையான கலைப் பார்வையை முன் வைத்த யஸ்மின் அமாட் கொண்டாடப்பட வேண்டியவர், உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.

23ஆம் திகதி ஜூலை 2009ஆம் ஆண்டில் மலேசிய பாடகி சித்தி நூராலீசாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது திடீரென்று பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் யஸ்மின் அமாட். 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மணி 11.25க்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவின் உக்கிரத்தால் யஸ்மின் அமாட் இறந்தார்.

கடைசிவரை தனது சினிமாவின் மூலம் இன ஒற்றுமையை வெளிப்படுத்திய மலேசிய சமூகத்தின் ஆளுமை யஸ்மின் அமாட் என்பதில் மறுப்பில்லை. அவருடைய படங்களில் இருந்த யதார்த்தவாதமும் மத வெளிப்படைவாதமும் விமர்சினத்திற்குரியதாக இருப்பினும் இதுவரை எந்தக் கலை படைப்பாளிகளும் செய்யத் தயங்கியதை அவர் முன்னெடுத்திருக்கிறார் என்பதே வரவேற்கத்தக்கதாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதங்களின் மூலம் மலேசிய வாழ்வு பிளவுபட்டுக் கிடப்பதை அவர் விமர்சித்திருந்தாலும் இன்னொரு புதிய இஸ்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதையே தனது படங்களின் வழி கற்பனை செய்திருக்கிறார்.

அவரின் நினைவாக மலேசிய நிலப்பரப்பின் சினிமா பெற்ற உலக விருதுகளும் உலக கவனமும் அங்கீகாரமும் என்றும் இந்த மண்ணின் சினிமா நகர்வை அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கும். அவரின் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட எத்தனையோ இரசிகர்கள் யஸ்மின் 6 படங்களோடு தன் வாழ்நாளின் சாதனைகளை முடித்துக்கொண்டதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது. மலேசியாவின் சொல்ல முடியாத வாழ்க்கையையும் தன் படங்களில் துணிச்சலாக வெளிப்படுத்திய யஸ்மின் அமாட் சினிமா துறையைச் சேர்ந்த புதிய தலைமுறைக்கு எப்பொழுதும் முன்னுதாரணமாக இருப்பார்.

அவருடைய படங்கள் வென்ற மிக முக்கியமான விருதுகள்:

அ. 2002ஆம் ஆண்டில் அவருடைய ‘முக்ஷின்’ படம் உலகக் குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் ‘குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படம்’ விருதை நீதிபதிகளின் சிறப்புத் தேர்வுப்பெற்று வழங்கப்பட்டது.

ஆ. 2005ஆம் ஆண்டில் அவருடைய ‘செப்பேட்’ திரைப்படம் டோக்கியோவில் நடந்த திரைப்படவிழாவில் சிறந்த ஆசியப்பட விருதைப் பெற்றது.

இ. 2005ஆம் ஆண்டில் பிரான்சில் நடந்த கிரேட்டேல் பெண் இயக்குனர்களுக்கான உலகத் திரைப்பட விழாவில் யஸ்மின் அமாட் அவர்களின் ‘செப்பேட்’ படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

ஈ. அவருடைய ‘குப்ரா’ படம் 2006ஆம் ஆண்டின் மலேசியத் திரைப்பட விழாவில் ‘ஒளிப்பதிவு, வசனம், சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளைப் பெற்றன.

உ. 2006ஆம் ஆண்டில் நடந்த 19ஆவது டோக்கியோ திரைப்பட விழாவில் அவருடைய ‘முக்ஷின்’ படம் மிகச்சிறந்த ‘பிரிவேக்கம்’ படமாகத் தேர்வுபபெற்று அங்கீகரிக்கப்பட்டது.

ஊ. 1999 ஆம் ஆண்டு மலேசியத் தொலைக்காட்சி விருதளிப்பு விழாவில் அவருடைய “Forgiving’ எனும் பெட்ரோனாஸ் விளம்பரத்தால் ‘சிறந்த இயக்குனர்’ விருதை பெற்றார்.

எ. மலேசியத் திரைப்பட விழாவில் 2005ஆம் ஆண்டு சிறந்த கதைக்கும் சிறந்த திரைப்படத்திற்குமான விருதை அவருடைய ‘செப்பேட்’ படம் வென்றது

ஏ. 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற மலேசியத் திரைப்பட விழாவில் அவருடைய ‘குப்ரா’ படம் சிறந்த திரைக்கதைக்கும் சிறந்த படத்திற்குமான விருதை வென்றது.

ஒ. 2010ஆம் ஆண்டில் 84ஆவது ஆசியா பசிபிக் திரைப்பட விழாவில் அவருடைய ‘முவால்லாவ்’ திரைப்படத்திற்காக ‘சிறந்த இயக்குனர்’ விருதைப் பெற்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...