ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

tamilar_thadangalநான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின் மேல் திணிக்கப்பட்டுள்ள கதைகளின் மேல் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை. வரலாற்றுக்கும் வரலாற்றுக்கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பதே இன்றைய அடிப்படை கல்விச்சூழல் முதல் கல்லூரி வரை உள்ள மிகப்பெரிய சிக்கல்.

கதை என்பது ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் காரண காரிய உறவுடன் தொகுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே. மலாக்கா  வரலாற்றில் வரும் சருகுமான் வேட்டை நாயை உதைத்தக் கதையை நாம் கேட்டிருப்போம். பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது என்பது நல்ல ஒரு சகுனம் என்று கருதிய பரமேஸ்வரா  அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு பேரரசை உருவாக்கினார் என்பது கதை. மலாக்கா எனும் பேரரசு உருவானது அடிப்படை வரலாறு என்றால் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் சருகுமான் வீரம் தொகுத்துச் சேர்க்கப்பட்ட ஒரு கதை மட்டுமே.

சிக்கல் என்னவென்றால், நாம் நம் மரபில் நிபுணத்துவத்துவத்துடன் வரலாற்றை எழுதும் முறைமையைக் கொண்டிருக்கவில்லை. வரலாறு என நாம் மேற்கோள் காட்டுவதெல்லாம்  கதைகள்தான். தமிழர் வாழ்வை அடையாளம் காண நாம் மீண்டும் மீண்டும் சங்க இலக்கியத்தையும் காப்பியங்களையுமே நாட வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்கள் மூலமே ஓரளவேனும் தமிழர் வாழ்வை அறிந்துகொள்ள மெனக்கெட வேண்டியுள்ளது. அதாவது இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் மட்டுமின்றி அகழ்வாராய்சி, மொழியியல், கல்வெட்டு, பூகோளம் என பலவற்றையும் உள்ளடக்கிய ஆய்வுகள் இன்றும் தமிழ் வாழ்வை நுட்பமாக விரிவாக்கிக்கொண்டுச் செல்கின்றன. தமிழில் இத்தகைய அம்சங்களைக் கொண்ட நூல்கள் வருவது குறைவே. சு.கி.ஜெயகரன் எழுதிய ‘குமரி நிலநீட்சி’ எனும் நூல் அண்மையில் நான் வாசித்தவற்றில் அவ்வாறான தன்மையைக் கொண்டிருந்த முக்கியமான ஆய்வு நூல். இச்சூழலில் அறைகுறை ஆய்வுகள் மூலமும் ஆழமற்ற வாசிப்பின் மூலமும் வரலாற்று திரிபை ஏற்படுத்தாமல் இருப்பதே இன்றைக்கு நாம் வரலாற்றுத்துறைக்குச் செய்யும் நன்மை. இதன் காரணமாகவே வரலாறு குறித்து எழுத எனக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். நுனிப்புல் மேய்ந்தெல்லாம் வரலாற்றை பேசுவது தவறாவே முடியும். எனவே இந்தக் கட்டுரையில் நான் சொல்வதெல்லாம் எனது வாசிப்பில் உள்ள மனப்பதிவின் தொகுப்பு மட்டுமே.

ஆலின் வேர்

ஒரு புனைவு எழுத்தாளனுக்கு தான் விரும்பியதை எழுத எல்லாவித சுதந்திரமும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் வரலாற்றை தனது புனைவுக்குள் இழுத்துச்சென்று மீள்நிகழ்வின் மூலம் கட்டி எழுப்பவும்கூட சுதந்திரம் உண்டு. ஆனால், வரலாறை எழுதும்போது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படுகிறது. அங்கு உணர்ச்சிக்கு இடமே இல்லை. மிகையான பொறுப்புணர்ச்சியுடந்தான் அதை அணுக வேண்டியுள்ளது. ஆனால் பலர் தங்களை ஒரு வரலாற்று ஆய்வாளராகவும் சிந்தனையாளர்களாவும் காட்டிக்கொள்ளும் அவசரத்தில் அபத்தங்களை மட்டுமே நூல்களாகப் பதிவு செய்கின்றனர். அந்த வரிசையில் சீ. அருண் இணைந்துகொண்டதுதான்  எனது வருத்தம். அவர் கட்டுரைகளில் நான் மிக திடமாக தவறுகள் என நம்பும் விடயங்களை மட்டும் இங்குச் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.

2012ல் வெளிவந்த அவரது ‘ஆலின் வேர்’ என்ற நூல் அண்மையில்தான் வாசிக்கக் கிடைத்தது. சீ. அருணை ஒரு புனைவாளராக நான் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேன். மலேசிய நவீன கவிதை தொடக்கத்தில் அவர் பங்கும் முக்கியமானது. சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. அது குறித்தெல்லாம் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதும் இல்லை. புனைவுலகில் அவருக்கான இடம் என்ன என்பதை நல்ல வாசகர்கள் தீர்மாணித்துக்கொள்வார்கள் . ஆனால் ஆய்வாளர் என வரலாற்றை திரிப்பதென்பது சுட்டிக்காட்டக் கூடியதே. காரணம் அது அடுத்த தலைமுறைக்கு தவறான தகவல்களை உற்பத்தி செய்யக்கூடாது.

பழந்தமிழரின் காதல் வாழ்வு

பதினாறு கட்டுரைகளை உள் அடக்கிய நூல் இது. மொழியைப்பற்றி அடிப்படையான தகவலுடன் அதன் மேன்மையைப்பற்றி பகரும் உணர்ச்சிகரமான பிரச்சாரக் கட்டுரைகள் அவற்றில் சில. அது குறித்து நான் சொல்ல ஒன்றும் இல்லை. மொழி குறித்த எனது அபிப்பிராயங்கள் வேறானவை. எனவே எனது அபிப்பிராயங்களை இங்குச் சொல்வது சரியாகாது. நாம் இங்கு கவனிக்க வேண்டியவை வரலாற்று திரிபுகளே.

முதலாவது ‘தாஜ்மகாலும் தமிழர் காதலும்’ என்ற கட்டுரையை எடுத்துக்கொள்வோம்.  தாஜ்மகாலை காதல் சின்னமாகக் காட்டுவதைக் கண்டிக்கிறார் ஆசிரியர். கண்டிக்கட்டும். சிக்கல் அங்கு இல்லை. சீ. அருண் பின் வருமாறு தமிழ் காதல் குறித்து கூறுகிறார். “மாந்தர் வாழ்வியலுக்கும் அதன் தொடர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது திருமணமாகும். திருமண வாழ்வினை மேற்கொண்டிருக்கும் மாந்தர் உறவினை வலுப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் களமாக இருப்பது காதல் உணர்வாகும். தமிழர் மேற்கொண்டிருக்கும் காதல் உணர்வும் அது தொடர்பான செயல்களும் பண்பாட்டுச் செறிவுமிக்கதாக அமைந்துள்ளது. காதலுக்கான குறியீடுகளும் உவமைகளும் பல நம்மிடம் உள்ளன. சங்க இலக்கியங்கள் பலவற்றுள் காதல் தொடர்பான செய்திகளும் உவமைகளும் பலநூறு உள்ளன. இளையோர் இத்தகைய செய்திகளைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வது நலம் பயக்கும்.”

முதலில் தமிழர் காதலை கொஞ்சம் ஆதாரங்களுடன் பார்ப்போம். சங்க இலக்கியங்களைப் பற்றி நன்கு அறிந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அதில் காதல் எனும் அம்சத்தைப் பற்றி விரிவாகவே கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் கட்டுரைகளின் சாரம்சத்தைக் கீழ்க் கண்டவாறு தொகுக்கலாம்:

1. சங்கப்பாடல்கள் காதலை பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.

2. பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.

3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள்.

4. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்குமான ஆதாரமான பாடல்களையும் தருகிறார் பிரபஞ்சன். (விரும்புபவர்கள் தேடி வாசிக்கலாம்.) பிரபஞ்சன் தரும் உதாரணங்கள் மூலம்  ஒன்று முழுமையாகப் புரிகிறது. சங்கத் தமிழர்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதன் காரணமாகவே உடன்போக்கு (ஊரை விட்டு ஓடிப்போவது) இருந்தது. மேலும் களவு வாழ்க்கையும்  (திருமணத்துக்கு முன்பான புணர்ச்சி) வெகு ஜோராய் நடந்துள்ளன.

குறிப்பு: சங்க இலக்கியங்கள் பெண்களைத் தூக்கிக்கொண்டு சென்று மணப்பதைச் சித்தரிக்கவில்லை. அவளே விரும்பி உடன்போக்கு நிகழ்ந்தால்தான் உண்டு. ஆனால் வட இந்திய தொல் இலக்கியங்களில் காந்தருவமணம் எப்போதுமே பேசப்பட்டுள்ளது.

இப்போது சீ. அருண் சொல்லும் பண்பாட்டுச் செறிவு மிக்க காதல் என்பது எது? முதலில் பண்பாடு  என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தமிழில் ‘சால்பு’ என்றச் சொல்லே புழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வாறு காதலை மறுக்கும் ஒரு சமூகமாக நாம் வாழ வேண்டும் என்கிறாரா? அல்லது திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறாரா? வீட்டில் ஒத்துப்போகாவிட்டால் ஓடிவிடுங்கள் என்கிறாரா?  சீ.அருண்தான் இதற்கான பதிலைக் கூற வேண்டும். மேற்சொன்ன மூன்றுமே நமது சமூகத்தில் இன்றும் தடையில்லாமல் நடந்துகொண்டுதானே இருக்கிறது. அப்படியானால், அருண் சொல்லும் காதல் வாழ்வு என்பது எது?

சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்க ‘மடலேறுதல்’ எனும் நிகழ்வையும் சங்கப்பாடல்களில் காண முடிகிறது. காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு  பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்தித் தெருத்தெருவாகச் செல்வான். அக்குதிரையை ஊர்ச் சிறுவர்கள் இழுத்துச் செல்வர். இதனையே மடல் ஏறுதல் என்பர்.

இவையெல்லாம் இணைந்தே அன்றைய காதல் வாழ்க்கை இருந்துள்ளது. அப்படி இருக்க அருண் குறிப்பிட்ட ஒரு பாடலைக்காட்டி அதில் தமிழர் காதலைக் கூறுவாரேயானல் அதை முழுமையற்ற பார்வை என்றே ஏற்க வேண்டியுள்ளது.

மதம்

சீ. அருணின் மதப்பிடிமானம் என்னவென்று தெரியவில்லை. அது தெரியாமல் அவரை இந்துத்துவவாதி எனச் சாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ‘இலையும் தமிழர் வாழ்வும்’ என்ற கட்டுரையை வாசிக்கும் ஒருவர் மிக இயல்பாக அந்த மனநிலைக்கு வர வாய்ப்புள்ளது.

அக்கட்டுரையில் இப்படி ஒரு பத்தி வருகிறது . “இறைவழிபாட்டிற்கு உரிய பொருளாகவும் மங்களப் பொருளாகவும் இலையைக் கருதுவது தமிழர்களின் மரபாகும். வில்வ இலை சிவபெருமானுக்கும் அருகம்புல் கணபதிக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது.”

தன்னை ஒரு பண்பாட்டு ஆய்வாளராகக் காட்டிக்கொள்ளும் அருணிடம் இந்த வரியை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. கணபதிக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? முதலில் தமிழராக உள்ள ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் உண்டா என்ன? அதோடு வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிப்பாடு குறித்த செய்திகள் இடம்பெறவில்லை என அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். மதங்கர் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறியான யானை பின்னர் கணபதியானார் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த  யானை அடையாளத்தை சூத்திரர்களின் கடவுள் என பிராமணியம் தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் பேரா. ஆ. சிவசுப்ரமணியன். இன்னும் சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

‘கணபதி சூத்திரர்களின் கடவுள். கணபதியின் அடியார்கள் செய்யும் கணயாகம் என்ற சடங்கைச் செய்தவன் இழவு விருந்தில் இருந்து விலக்கப்பட வேண்டும்’

கணபதி வட இந்தியாவின் பூர்வ குடியினரின் அடையாளமாக இருந்ததற்கு சான்றுகள் பலவற்றை பேரா. ஆ. சிவசுப்ரமணியன் ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூலில் விரிவாகவே கொடுத்துள்ளார். இப்படி இருந்த பிள்ளையார் தமிழ்நாட்டில் கி.பி 6ஆம் நூற்றாண்டில் வழிபடப்படுகிறார் என்பது  ஆய்வாளர்களின் தெளிவான நிலை. சூழல் இப்படி இருக்க எந்தக் காலத்து தமிழர்களின் கடவுளாக பிள்ளையார் புகுந்தார் ? பின்னர் ஏற்பட்ட அரசியல் தேவைக்காக அவர் இந்து மதத்தில் இணைக்கப்பட்டு அம்மதத்தை பின்பற்றுபவர்கள் கணபதியை வழிப்படுகிறார்கள். அவ்வளவே.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் தமிழர்களின் கடவுள் அதிகாரத்துக்குட்பட்டு மாற்றம் கண்ட வரலாறு நெடியது. குறிப்பாக தமிழர்களின் மூத்ததேவியாக இருந்த மூதேவி பெருங்கோயில் உள்ளிருந்து அகற்றப்பட்டதெல்லாம் அரசியலோடும் அதிகாரத்தோடும் தொடர்புடையவையே. இந்த அரசியலோடு தமிழர் வாழ்வையெல்லாம் இணைத்து வரலாற்றை அசுத்தப்படுத்த வேண்டாமே அருண்.

காலக்குழப்பம்

அருண் கட்டுரைகளில் பெரிய சிக்கலே காலக்குழப்பம்தான். மிக எளிதாகத் ‘தமிழர்கள் பயன்படுத்தினார்கள்’, ‘தமிழர்களின் பழக்கம்’ என சொல்லிச் செல்கிறீர்கள். எப்போது வாழ்ந்த தமிழர்கள் என்று தெளிவுபட கூறவில்லை. அது சங்க காலமா? அல்லது எங்க காலமா? என்றும் விளங்கவில்லை. ஒரு வரலாற்றைப் பேசுகிறவருக்கு இருக்க வேண்டியது காலம் பற்றிய அறிதல். அதை கொஞ்சமும் சட்டை செய்யாமலேயே எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் ஏதோ நன்னெறி பாட நூல் போலவே ஒரு சித்திரத்தைக் கொடுக்கிறது.

ஆதி மரபு தொடங்கி  காப்பிய காலம், பக்தி இயக்க காலம் என தமிழர்களின் வாழ்வு ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்டு அமைந்துள்ளது. அதோடு மொழியியலாளர்கள் ஒவ்வொரு காலத்திலும் வழக்கில் இருந்த சில சொற்களும் நுட்பமான பொருள் பேதம் கொண்டுள்ளதென கூறுகின்றனர். நிலை இப்படி இருக்க, எல்லா காலக்கட்டத்து தமிழர்களையும் ஒரே கண் கொண்டு பார்ப்பது தவறான முடிவுகளையே கொடுக்கும்.

உதாரணமாக:

‘மரபு’ என்ற கட்டுரையில் “இறப்பைப் பற்றி குறிக்கும் போது ‘இறைவனடி சேர்ந்தார்’, ‘சிவனடி சேர்ந்தார்’ என்று தமிழர்கள் பதங்களைப் பயன்படுத்தினார்கள் என அருண் சொல்கிறார். எந்தக் காலத்துத் தமிழர்கள் எனச் சொல்லப்படவில்லை. நிச்சயம் அது தமிழர்களின் மரபான சொல் இல்லை . இடையில் சேர்ந்து கொண்டவைதான். இடையில் சேர்ந்து கொண்டதை நான் தவறென சொல்லவரவில்லை. உண்மையில் அவர் தமிழர் வாழ்வை எதிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்கிறார் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.

அதே போல கணவன் இறந்த பிறகு மனைவி தாலி அணியக்கூடாது என்ற வழக்கம் தமிழரிடம் உண்டென்கிறார் அருண். பேரா. தோ.பரமசிவன் ஓரளவு அதுகுறித்து எழுதியுள்ளார்.  இங்கு அத்தகவல்கள் சிலவற்றைக் கூறலாம் என நினைக்கிறேன். அவர் கூற்றுப்படி, தாலி ஏதோ ஒரு பழங்குடியினரின் பழக்கமாக இருக்க வேண்டும். கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி என்ற பேச்சே இல்லை. அதேபோல, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம். ஆக! கணவன் இறந்த பிறகு  தாலி அணியக்கூடாது எனும் வழக்கமெல்லாம் பிற்பாடு வந்தது. அதையும் அருண் தமிழர் பழக்கம் என ஏற்றுக்கொள்வார் என்றால் சிக்கல் ஒன்றும் இல்லை. ஆனால் மரபை பேண வேண்டும் என முழங்கும் அவர் 10 ஆம் நூற்றாண்டில் தமிழர் வாழ்வில் புகுந்த ஒரு பழக்கத்தைத்  தமிழர் மரபோடு இணைக்கும் போது அப்படியே 20 ஆம் நூற்றாண்டில் உள்ள பழக்கத்தையும் இணைத்துக்கொள்ள என்ன சிக்கல்?

இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், பண்பாடு என்பது காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. சங்க காலத்தில் இல்லாத புதிய பழக்கங்கள் பல்வேறு இனத்தவர்களின் ஆட்சி காலங்களில் தமிழர் வாழ்வில் உள் நுழைந்துள்ளன. அருணுக்கு அது குறித்தெல்லாம் எந்தப் பிரக்ஞையும் இல்லை. அவரது எதிர்ப்பெல்லாம் இன்றைய போக்குக் குறித்து மட்டுமே. ஒரு பத்து ஆண்டுக்கு முன் சேர்ந்த பழக்கங்களைக் கூட அவர் தமிழர் மரபோடு இணைப்பாரேயானால் இன்றைய பழக்கமும் பத்தாண்டுகளில் தமிழ் மரபோடு கலந்துவிடும் தன்மை கொண்டதுதானே. எனவே நூல் முழுதும் விரவி கிடக்கும் அவர் வருத்தம் வீண்.

உடை

‘தமிழர் வாழ்வில் முன்றானை’ என்பது இந்நூலின் இறுதி கட்டுரை. மிக மொண்ணையான கட்டுரையும் இதுதான். இக்கட்டுரையில் வரும் வரிகளை முதலில் காண்போம்.

“உடையில் தமிழர்களின் அறிவும் ஆற்றலும் பரந்து விரிந்துள்ளன. பருத்தி , பட்டு ஆடைகளைப் பல்வகையாக வடிவமைத்து அணிந்துள்ளனர். பொற்சரிகைகளையும் பல்வகை மணிகளையும் பயன்படுத்தி தங்களது ஆடைகளைப் பொலிவாக்கினர். கோயில்களில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் தமிழர்களின் உடையியல் வளப்பத்திற்குரிய சான்றுகளாக உள்ளன.”

மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வின்படி பண்டைய காலத்தில் தமிழர்கள் உடை அணிவது மிகக் குறைவு. குறிப்பாக மேலாடை. எனவே உடலை மறைக்க நகைகளை அதிகம் அணிந்தார்கள் என்கிறார். மேலும் அனைத்து தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. அது காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் என பிரிந்து கிடந்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் மேலாடை அணியாமல் இருக்கும் பழக்கம் நெடுகாலம் தொடர்ந்ததை வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது.
அருண் கூறிய பழங்கால ஓவியங்களையே நானும் குறிப்பிடுகிறேன். தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோவிலில் இருக்கிற சோழர் காலத்து ஓவியங்களில், அரசன் முதல் ஆண்டி வரையில் , ஆண் பெண் உருவங்கள் அனைத்துமே அரைக்கு மேலே வெற்றுடம்பாக உள்ளன என்கிறார் மயிலை. சீனி.வேங்கடசாமி . நிலை இப்படி இருக்க, அருண் சொல்வது எங்குள்ள சிற்பங்களை. பத்துமலைக் கோயில் சிற்பங்களையா? அவை ஆய்வுக்கு ஆகாதே.

இந்தக் கட்டுரையில் அருண் புடவையில் உள்ள முன்றானை குறித்தும் எழுதியுள்ளார். புடவை எனும் உடை சமணர்களிடம் இருந்து வந்ததாக தொ.ப சொல்கிறார். இவை எதையுமே அருண் குறிப்பிடாமல் ஒரு நூறு ஆண்டு காலக்கட்டத்தை மட்டும் மனதில் கொண்டு தமிழர் வரலாற்றை கூறுகிறேன் என்றால் எவ்வளவு பெரிய அபத்தம்.

இறுதியாக

அருண் தமிழர் வாழ்வைப் பற்றி பேச முனைந்ததில் தவறில்லை. ஆனால் அதற்கான மெனக்கெடலும் வாசிப்பும் இல்லாமல் இது போன்ற முயற்சிகள் செய்வது தமிழரின் இருக்கும் கொஞ்ச நஞ்ச அடையாளத்தையும் கெடுப்பதற்கு சமம். முன்பே நான் சொன்னது போல நான் ஆய்வாளன் அல்ல. எனது கருத்தில்/ தகவலில் பிழை இருந்தால் நண்பர்கள் திருத்தி உதவலாம். அல்லது விவாதிக்கலாம். விவாதங்கள் மூலமே கருத்தை மேலெடுக்க இயலும். உண்மைகளை நோக்கி நகர முடியும்.

3 comments for “ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

  1. நவீன் செல்வங்கலை
    July 10, 2014 at 10:44 pm

    நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது… 🙂 ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?

    வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.

    உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது

  2. m.karunakaran
    July 11, 2014 at 4:52 pm

    Thiru. Navin solli irukkum karutukkal vivatattikku uriyatu. Nanbar Ci. Arun etarkku etir vinai aadruvatu nalam. athu oru arokkiya vivaatamaga amaivathai naanum virmkiren. Enakku varalarru aaivil aarvam kuraivu. Karuthukkalai mun vaippatu nallatalla. Ci. Arun avarkalin pativai varaverkiren.

  3. ஸ்ரீவிஜி
    July 13, 2014 at 5:56 pm

    வத்துமல கோயிலுக்கு போயிட்டுவந்து எழுதியிருப்பாரு.. :))))))))))

    வாழ்த்துகள் நவீன். நிறைய விளக்கங்களைக் கொடுத்துச்சென்ற கட்டுரை இது..

Leave a Reply to நவீன் செல்வங்கலை Cancel reply