இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

எப்படி எழுத வேண்டும் என்று

நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்

எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

வெற்று வெளிகளில்

உலவும் மோனப் புத்தர்கள்

உலகம் எக்கேடாவது போகட்டும்

காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கிறேன்

எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்

உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்

தொலைதூர எதிரொலி கூட கேட்கவில்லை

வார்த்தைகளின் சப்தங்கள்

அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன.

எழுதுங்கள்

பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும் 

-ஆத்மாநாம்-

கடந்த வல்லினத்தில் அண்மையில் மலேசியாவில் இரு இடங்களில் வெளியீடு செய்யப்பட்ட ‘அன்று போல் அன்று’ நூல் மீதான விமர்சனத்திற்குப் பிறகு பல கேள்விக் கணைகள், குற்றச்சாட்டுகள், சுய மதிப்பீடுகள், வசைகள் என் மீது வைக்கப்பட்டிருந்தன. அதே வேளையில், கவிதைகள் குறித்த தொடர் வாசிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும், அதன் போக்கைத் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கும் நண்பர்களும் அந்நூல் குறித்த விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைத்தபடி இருக்கின்றனர். அந்த வசைகள் எம்மை ஒன்றும் செய்து விடாது என்ற போதிலும் தொடர் தேடலை நோக்கி என்னை உந்தித் தள்ளும் வல்லமையை அந்த வசைகள் கொண்டிருந்தன.

ஒரு கவிதை எதனால் எழுதப்படுகிறது என்ற கேள்வி தொடர்ந்து என்னை இம்சித்தப்படியே இருந்தது. நான் ஏன் வேறு எந்த இலக்கிய வடிவங்களையும் தேர்ந்தெடுக்காமல் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் தொடர்ந்து கேள்விகள் எழுந்தபடியே இருந்தன.

நான் எழுதத் தொடங்குவதற்கு முன்பும் நிறைய கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. இனியும் தொடர்ந்து எழுதப்படும். நீங்களும் நானும் கவிதைகள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட நாடுகள் வாரியாக மொழிகளைக் கடந்து எண்ணிலடங்கா கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கலாம். இங்கு சிக்கல் அதுவல்ல. எழுதப்படும் எல்லாவற்றையும் கவிதை என ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாசகர்கள் மீது திணிப்பதற்கு எந்தவொரு படைப்பாளிக்கும் உரிமை இல்லை. மேலும், கவிதை, கவிதை நூல், கவிதைத் தொகுப்பு என்று மீண்டும் மீண்டும் சொல்வதாலோ எழுதிக் கொண்டிருப்பதாலோ கவிதை அல்லாதது ஒரு கவிதையாக மாறப் போவதுமில்லை என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு கவிதை எப்போது கவிதையாகிறது? எப்போது ஒரு கவிதை தன்னை நிறுவிக் கொள்கிறது என்ற தேடலுக்குப் பிறகானதுதான் இந்த விளக்கம்.

கவிதை சொற்களால் சொற் கூட்டங்களால் ஆனது. கவிதையில் உள்ள ஒவ்வொரு சொற்களையும் நாம் கடந்து போவதைத்தான் ஒவ்வொரு கவிதையும் விரும்புகிறது. அந்தக் கடந்துபோவது தான் வாசகனுக்கும் கவிதைக்கும் இடையே ஒரு உரையாடலை நிகழ்த்திப் போகிறது. அந்த உரையாடல்தான் கவிதைக்கான பொருளை, எதிர்வினைகளை, அனுபவப் பகிர்வுகளை உருவாக்குகிறது. சிலவேளை வாசிக்கப்படும் கவிதை இன்னொரு கவிதை எழுதவும் ஒருவனைத் தூண்டுகிறது. கடந்து போதல், தூண்டல், நிகழ்தல், மௌனமாயிருத்தல் இப்படி எண்ணற்ற துணைவினைகளில் ஊடாகத்தான் ஒரு கவிதையானது நிகழ்கிறது. மற்றவையெல்லாம் மீண்டும் மீண்டும் வார்த்தை ஜாலங்களாக மட்டுமே தன்னை நிறுவிக் கொள்கின்றன.

எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களில் ஒருவர் தேவதச்சன். அவரது கவிதைகளில் ஒரு உயிர்த்தன்மை இருப்பதை நாம் பெரும்பாலும் உணர்ந்திருக்கிறேன்.எப்போதுமே அவரது கவிதைகள் தனித்த கவித்துவத்துடன் மிளிரும். அவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

தப்பித்து 
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு 
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து. 
அதன் கரையோர நாணலில் 
அமர்ந்திருக்கிறது 
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று. 
அது இன்னும் இறந்து போகவில்லை 
நமது நீண்ட திரைகளின் பின்னால் 
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது 
அதன் கண்கள் இன்னும் நம்மைப் 
பார்த்துக் கொண்டிருக்கின்றன 
பசியோடும் பசியோடும் 
யாருமற்ற வெறுமையோடும். 
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி 
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை. 
அதன் சிறகுகளில் ஒளிரும் 
மஞ்சள் வெளிச்சம் 
காற்றின் அலைக்கழிவை 
அமைதியாய் கடக்கிறது 
நீ 
திரும்பிப் போனால்,

இப்போதும் அது 
அங்கு 
அமர்ந்திருப்பதைக் 
காணலாம்.

உன்னால் 
திரும்பிச் செல்ல முடிந்தால்…

இக்கவிதையில் மிக நுட்பமான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் ஆறுகளை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவிருப்பவர்களுக்கு அந்த ஆற்றின் தப்பித்தல் என்பது கொஞ்சம் மன நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால், இன்னும் எவ்வளவு காலத்திற்கு அந்த தப்பித்தல் என்ற பதைப்பதைப்பும்சேர்ந்தே மனதைப் பிசையும்.

ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கருகே ஒரு வயதான வண்ணத்துப்பூச்சி – அது இன்னும் இறந்து போகவில்லை. ஒரு நொடி இந்த வரியில் நின்று நிதானிக்கிறோம். ஏன் கவிஞர் அந்த வண்ணத்துப்பூச்சி இன்னும் உயிருடன் இருக்கிறது என்று குறிப்பிடாமல் அது இன்னும் இறந்து போகவில்லை என்று குறிப்பிடுகிறார் என்ற மெல்லிய நடுக்கத்தோடு தொடர்கிறோம். ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதற்கான அறிகுறி தெரிவதாக மனம் உணர்கிறது.

அதன் கண்கள் இன்னும் நம்மைப் 
பார்த்துக் கொண்டிருக்கின்றன 
பசியோடும் பசியோடும் 
யாருமற்ற வெறுமையோடும். 

இப்போது நம்மைச் சுற்றி அந்த வண்ணத்துப்பூச்சியைத் தேடுகிறோம். அந்த வண்ணத்துப்பூச்சியை வதைத்தது யார்? அதன் வளமிக்க வாழ்வை பசியிலிட்டு அதனைத் தனிமைப்படுத்தியது யார் என்ற எல்லா கேள்விகளையும் நம் தலைமேல் சுமந்து கூனிக் குறுகிப் போகிறோம். இறுதியாக, அந்த வண்ணத்துப்பூச்சியை உன்னால் பார்க்க முடிந்தால் போய்ப் பார் என்ற சவாலோடு கவிதை முடிகிறது. ஓடிக் கொண்டிருக்கும் ஆறு அதன் சத்தம் இன்னும் இறந்து போகாத வயதான வண்ணத்துப்பூச்சி அதன் தனிமை அதன் நிசப்தம் என இருப்பையும் இல்லாமையையும் நேருக்குநேராக வெகு அருகில் உணர்கிறது நம் மனம். எப்போது வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்தாலும் அதன் ஒவ்வொரு அசைவும் இன்னும் இறந்து போகாத அந்த வண்ணத்துப்பூச்சியைத் தேடிப் பறக்கிறது. இதுதான் கவிதையின் உயிர்த்தன்மை –கவித்துவம் அதன் வெற்றி என நான் கருதுகிறேன்.

நான் அந்த கவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது எப்படி என்றுதான் எனக்கும் தெரியவில்லை. ஒரு நிமிடம் நின்று நிதானிக்கும் உணர்வைக் கவிதைகள் தரவில்லை என்றால் நீ எதையும் உணரவில்லை அல்லது அந்த உணர்வினை உனக்குக் கவிதைகள் அளிக்கவில்லை என்று பொருள்படுத்திக் கொள்ளலாம். அக்கவிதைகள் வெறும் வார்த்தைகளாக கவித்துவமற்றவையாக இருந்துள்ளன என்றும் கவனத்தில் கொள்ளலாம்.

இதென்ன கவிதை –சமூகத்திற்கு இந்த கவிதை என்ன சொல்கிறது –வண்ணத்துப்பூச்சியா அது குறித்தெல்லாம் எழுதுவார்களா –அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம் என்பவர்களுக்கு இந்த கவிதை ஓர் எச்சரிக்கை. இன்று இன்னும் இறந்து போகாத வண்ணத்துப்பூச்சி நாளை இன்னும் இறந்து போகாத நீ…இயற்கையை மறந்து வாழ முற்பட்டால் இதுதான் உன் கதியும் என்ற எச்சரிக்கையை வாசிக்கும் அந்த வாசகன் உணராதவரை அவனது வாசிப்பில் ஏதோ பிழையிருப்பதாக மட்டுமே நாம் கொள்ள முடியும்.

இங்கு என்னை மிகவும் கவர்ந்த நவீனின் கவிதை ஒன்று குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.

வீடு கட்டும் பகுதியில்

குருவிகள் சத்தம் நின்றபாடில்லை

மாயா கேட்டாள்

‘ஏன் குருவிகள் கத்துது?’’

வீடுகள் கட்ட மரங்களை அழிச்சிட்டாங்க என்றேன்.

‘அவங்கெல்லாம் கெட்டவங்களா’

ஆமாம்

‘நம்ம வீடு கட்டுன இடத்துல

‘முன்ன எத்தனை மரங்கள் இருந்துச்சு’

மேம்பாட்டிற்காக நமது வாழ்விற்காக இயற்கையழிப்பு குறித்த கவிதைதான் இதுவும். ஆனால் மாயா என்ற குழந்தை அதற்குள் வருவது ஒரு கவித்துவம். கவித்துவத்தை வர்ணிப்பது சிரமம்தான். ஆனால் அதனை நாம் உணரலாம். குழந்தையின் பார்வையில் நம் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ தவறுகள் விசயங்கள் புலப்படுகின்றன. நாம்தான் அவர்களைச் சொல்ல விடுவதில்லை. அப்படியே சொன்னாலும் ஏற்றுக் கொள்வதில்லை.

நவீனின் மற்றுமொரு கவிதை.

ஐம்பதுக்கும் மேல்

குவிந்திருக்கும் புறாக்களைப் பிடிக்க

பெரும் ஓசை எழுப்பி

ஓடுகிறாள் மாயா

வழக்கமான பதற்றம் இன்றி

அவை பறந்துவிட

பிடிக்க இயலாத தன்

பிஞ்சுக் கரத்தை மூடி

சிறிதிலும் சிறிதான

அதன் துவாரத்தில்

ஒற்றைக் கண்ணால் பார்க்கிறாள்.

கவித்துவமும் குழந்தைத்தனமும் நிறைந்த கவிதை இது. குழந்தைகள் தாங்களாகவே தங்களைத் தேற்றிக் கொள்கிறார்கள். எல்லா உயிர்களும் சக மனிதர்கள் போலத்தான் குழந்தைகளுக்கு. இந்த சமூகத்திற்கு இந்தக் கவிதைகள் ஒன்றும் சொல்லவில்லையா? அப்படி சொல்லாவிட்டால் என்ன? எப்போதும் ஏ மானுடா! ஏ மனிதா! வாருங்கள் நண்பர்களே! ஏ பெண்ணே! என்று எதையாவது ஒன்றை இந்த சமூகத்திற்குக் கவிதை சொல்லியாக வேண்டுமா? அப்படி சொல்லித்தான் ஆக வேண்டும் என யார் வரையறுத்திருக்கிறார்கள்?

நிகழ்தலை அடையாளப்படுத்தவும் அதன் விளைவுகளை வெளிக்கொணரவும் நுண்உணர்வுகளை வெளிப்படுத்தவும் பிறர் கண்ணுக்குக் காணக்கிடைக்காத காட்சிகளை காட்சிப்படுத்தவும் எப்போதும் கவிஞர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சாத்தியப்படும் கவிதைகள் நம்மை பேரன்பில் திளைக்கச் செய்கிறது. பெருங்கவலையில் மூழ்கடிக்கிறது. வாழ்வதற்கான இனிமையைத் தந்து போகிறது. இருப்பும் இல்லாமைக்குமான இடைவெளியை உணர்த்துகிறது.

இந்த சூழலில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க ‘நாங்களும் கவிதை எழுதுகிற பேர்வழிகள்தான்’ என்று கவிதை குறித்த ஒரு சிறு குழந்தைக்குள்ள அறிவுமில்லாமல் உலா வருபவர்களால்தான் எங்கள் கவிமணம் கனத்துப் போகிறது. உங்கள் வரிகள் எந்த விபரீதத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. வெற்று வெளிகளில் உங்களை அடுத்த கட்டம் நோக்கி நகரவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மட்டும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கலாம். மற்றபடி இனி எழுதுவதா வேண்டாமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

3 comments for “இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

  1. m.karunakaran
    July 11, 2014 at 4:24 pm

    oru kavithai padaippaalan, atan ulliddil tanaga karaintu padaippatu kavithaiyaaki vidum. Naviina kavithaiyaanatu atan porulkalai vevveru vitamaaka vasippavanin unarvil solli viddu poogum. Unggal vimarsanam nanmai padaipatai iruntaal inte visiyanggalai nienggal sollaam. Eluttil evar yaar endu aariyaatu pootu kaatiramaana vimarsanam payan illaata ondrai aagi poogom. Inggu vimarsanam enpatu uyarvaaga solla vendum enpete padaipavanin ennamaga irukkum pootu unggal nermai vimarsanam edupadatu. ethir vimarsanam enum parivaiyil tevai illaata sikkalkali padaipukku appal eduttu vaipaarkal. Ini terteduttu vimarsanam vaiyunggal.

  2. ஸ்ரீவிஜி
    July 15, 2014 at 2:01 pm

    அருமை சிஸ்.. சென்ற மாதம் `இது கவிதையல்ல’ என்கிற கட்டுரை. இந்த மாதம் `இது கவிதை’ என்கிற கூற்றோடு சுவையான பகிர்வு.

  3. ஸ்ரீவிஜி
    July 15, 2014 at 2:05 pm

    “ஏய் பெண்ணே..’’
    உனக்குள் இவ்வளவு அற்புதமான கவிமனம்
    உள்ளதென்று
    இங்கே என்னைச்சுற்றும் பட்டாம்பூச்சி
    தமது அழகிய சிறகுகளின் மூலம்
    கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறது..

    😛

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...