பெரும்பாலோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன். அவர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் போக்கில் கேமரன் மலைப் பகுதியில் (பகாங்) வாழும் பழங்குடியினர் கிராமமான ‘கம்போங் பன்கான்’ வாழிடத்திற்கு செல்லும் வாய்ப்பொன்று கிட்டியது. பெருவாறாக அவர்களது மனக்குமுறலே எனது குறிப்பு நூலில் இடம்பெற்றன.
பொதுவாகவே ஓரிடம் விட்டு வேறொரிடத்திற்கு இடம்பெயர்பவர்கள் அவர்தம் அடையாளங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை உடன் கொண்டு செல்வது இயல்பு. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை அவரவர் பேசும் மொழியினைக்கொண்டே அறியலாம் என்பது எனது நம்பிக்கை. இதனை உன்னிப்பாக அணுக வேண்டிய அவசியத்தையும் உணர்கிறேன். இத்தகைய மொழியியல் தொடர்புகள் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா பகுதிகளில் வெளிப்படுவது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதொன்று.
மொன்- கிமேர் (Mon-Khmer) மொழியானது தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாக பேசப்படும் மொழியாகக் கருதப்படுகிறது. வியட்நாம், கம்போடியா, லாவோஸ், வட தாய்லாந்து, சல்வீன் ஆற்றின் (மியான்மார்) மேல் மற்றும் கீழ் பகுதிகள், மலாய் தீவுகள் (Malay Archipelago), நிகோபார் தீவு மற்றும் மேகாலயாவின் (Meghalaya) வடகிழக்குப் பகுதிகளில் இம்மொழியானது பரவலாக பேசப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டன் மானிடவியலாளர் சார் க்ராவ்தன் எலியாட் ஸ்மிட் (Sir Grafton Elliot Smith), தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய குடிகள் ஒன்றோடொன்று தொடர்பிலிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய இன மக்களின் உடல் பண்பினைப் போலவே தென்னிந்தியா, இலங்கை மற்றும் சோட்டா நாக்பூரில் (Chota Nagpur) வேறொரு இன மக்களுடன் சேர்ந்து வாழும் மக்களின் இருப்பை அடையாளம் கண்டுள்ளார். மேலும், மலாய் தீபகற்பம் (சகாய்), வடசுமாத்ரா, போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளில் இவர்களைப் போன்றோர் சிறுபான்மையாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தெற்கு வழியாக, மலாய் தீவுகளைக் கடந்து சென்றுள்ளதை உணரலாம்.
அமெரிக்க மானுடவியளாளர் A.L.Kroeber (1923) மலாய் தீபகற்பத்தில் காணப்படும் பழங்குடியினரான ‘சகாய்’ (Sakai) அல்லது ‘செனோய்’ (Senoi) எனப்படும் இனத்தவர் இந்தியா தொடங்கி கிழக்கு இந்தியத் தீவுகளில் வசித்த பழங்குடியினரின் ஒருங்கிணைப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வேடுவர் (Vedda), தென்னிந்தியாவில் இருளர் (Irulas) மற்றும் இதர குடியினர், சுலவேசியில் தோஹலா (Toala) குடியினர் ஆகியோர் உட்பட, மத்திய இந்தியாவில் முண்டா (Munda) / கொளாரி (Kolarians), மோய் (Moi) எனப்படும் இந்தோ சீனக் குடியினர், நிக்கோபார் மற்றும் சுமத்ரா தீவுகளின் குடியினர் மரபும் இவர்களிடத்திலே காணப்படுவதாக நிறுவியுள்ளார் (Veena Sikri, Trading With East: Malaysia and India: Intertwined Strands, P.36).
மேலும் சில குறிப்புகள் செனோய் மற்றும் ப்ரோடோ-மலாய் இனத்தார் சுமார் 3,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக தென் சீனா மற்றும் தைவானிலிருந்து தென்கிழக்காசியா, கிழக்கு வரை குடியேறிய வரலாற்றுக்கு முந்தைய மனிதனான ஆஸ்ட்ரேனேஷியன் (Malayo- Polynesian) வழிவந்தவர்கள் என குறிப்பிடுகின்றன. இருப்பினும் இவ்விரு குழுக்களிடையே கலப்பு திருமணம் நடந்தமைக்கான சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. மேலும், வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி தற்போதைய மலாய், இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் மக்கள், ப்ரோடோ-மலாய் இனத்தார் சீனர் (Chao Dynasty), இந்தியர் (Bengal and Dacca), அரேபியர்கள், தாய்லாந்து மக்களுடனான கலப்பு திருமணங்களுக்குப் பிறகே தற்போதைய நிலையை அடைந்திருக்க முடியும் எனக் கருதுகின்றனர் (Alberto G. Gomes, Modernity and Malaysia, 2007).
நெக்ரீட்டோ இனத்தார் 7,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து தென் கிழக்கு நோக்கி புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியா- மெலானேஷியா (Australia- Melanesians) எனப்படும் வரலாற்றுக்கு முற்பட்ட மனித வம்சாவளியினர் ஆவர். எனினும், இதற்கும் முந்தைய காலத்தில் இப்பகுதிக்கு இவர்கள் புலம்பெயர்ந்திருக்கலாம் என பண்டைய வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன (Alberto G. Gomes, Modernity and Malaysia, 2007).
மேற்குறிப்பிட்ட வரலாற்றுக் குறிப்புகள் தற்கால மொழி மற்றும் தொல்பொருள் ஆய்வுகளின் படையெடுப்புகளால் மதிப்பிழந்துவிட்ட நிலையில் இன்னமும் அதனை சில ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் சேர்த்துக்கொள்வது சரியானதன்று என நினைக்கிறேன். இருப்பினும், ஏதோ ஒரு தருணத்தில் அனைத்தும் களையப்படலாம் எனும் நம்பிக்கையுடையவன் நான். அதாவது 3,000 அல்லது 7,000 ஆண்டுகள் வரையிலான குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள்ளேயே இவர்களது நகர்வானது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய பதிவுகளும் சான்றுகளும் குறிப்பிடப்படாததால் இப்பகுதிகளில் மக்களின் இடப்பெயர்வென்பது சீனாவிலிருந்தே தொடங்கியதென்னும் முடிவுக்கு இட்டுச் செல்லும். சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தை விட்டு வெளியேறி தெற்காசியாவில் கால் பதித்தவர்களின் நகர்வானது இங்கு அறியப்படாது. அதனை உறுதிப்படுத்தும் அளவிலேயே மனித மரபணு இயக்கம் ஆய்வொன்றினை மேற்கொண்டது.
டிசம்பர் 10, 2009-ல் மனித மரபணு இயக்கம் (HUGO) வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் (“Mapping Human Genetic Diversity in Asia”) தற்கால ஆசிய மக்கள், தென்னிந்தியாவின் திராவிடர்கள் வழி வந்தவர்கள் எனும் கருத்து பெறப்பட்டது. ஆசியா முழுவதிலுமிருந்து 80-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 40 அறிவியல் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், மனித குடியேற்ற வரலாற்றில் ஒரு திருப்பம் நிறுவப்பட்டது. அதாவது, ஆதிகாலத்தில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகள் வழியாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அப்படி குடியேறிவர்கள் தென்கிழக்காசியாவிலிருந்து ஆசியாவின் சீனா உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு மெல்ல நகர்ந்து தங்களின் சந்ததிகளை வளர்த்துள்ளனர். மனித மரபணு அமைப்பின் தலைவர் பேராசிரியர் மருத்துவர் எடிசன் லியூ கூறுகையில், இந்நகர்வானது சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அல்லது 5,000 தலைமுறையினரைக் கடந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படும் வேளையில், பெரும்பாலும் இவர்கள் கடற்கரையோரமாகவே இடம்பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐந்தாண்டுகால ஆய்வில் சுமார் 71 சமூகங்களுடைய டி.என்.ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாய்வின் முடிவில் முக்கியமான மொழி அல்லது இனக் குழுக்களாக Altaic, Tai-Kadai/Sino-Tibetan, Hmong-Mien, Austro-Asiatic, Negrito-W (மலேசியாவின் நெக்ரீட்டோ இனத்தினை குறிக்கிறது), Papuan (பபுவான் அல்லது இந்தோனேசியர்கள்), Austranesian, திராவிடர் (திராவிட மொழிகளைப் பேசுபவர்கள்) மற்றும் இந்தோ- ஐரோப்பிய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Pan-Asian SNP Consortium கூறுகையில் ஆசிய மக்களின் முதல் மூதாதையர்கள் இந்தியாவில் குடிகொண்டு பின்பு தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, பிலிபீன்ஸ் வரையில் நகர்ந்திருக்கலாம். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் (மலேசிய நெக்ரீட்டோ, பிலிபீன்ஸ் நெக்ரீட்டோ, கிழக்கு இந்தோனீசியர்கள் மற்றும் பசிபிக் தீவுகளில் குடியேறியவர்கள்) தெற்கு நோக்கி வெகுதூரம் பயணித்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
இவ்வாய்வறிக்கையை HUGO வெளியிடுவதற்கு முன்பதாகவே, மானுடவியலாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் தெற்காசியா தொடங்கி தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா வரையிலான மொழி, இனம் மற்றும் கலாச்சார நகர்வு குறித்த கருத்தினை ஆதரித்துள்ளனர். மலாய் தீபகற்பம் இந்நகர்விற்கு ஒரு முக்கியமான முகட்டுப் புள்ளியாக இருந்திருக்க வேண்டும். 2009-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட மரபணு சோதனை செயல்முறையினைக் கொண்டு இந்நிலப்பகுதிகளுக்கு இடையிலான இனம், மொழி, மற்றும் கலாச்சார ஒற்றுமையை உறுதிப்படுத்தினர். தெற்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி நெடுந்தூரம் பயணித்தவர்களின் தடயங்கள் இன்றளவும் கிடைக்கப்பெறுகின்றன. இடம்பெயர்வதற்கு முன்னதாக இவர்கள் அவரவர் நிலப்பகுதியில் வெகுகாலம் வாழ்ந்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதேவேளையில் உட்புறமாகவும் ஒதுக்குப்புறமாகவும் குடிபெயர்ந்தவர்கள் தங்களின் அடையாளம், மொழி, மற்றும் கலாச்சாரத்தை இன்றளவும் தொடர்வதைக் காண முடிகிறது.
தனது தனித்தன்மையைக் கொண்டே முதிர்ச்சியடைந்த பழங்குடியினர், உலக மாற்றங்களுக்குக் கொஞ்சமும் அசையாமல், தங்களின் வாழ்வாதாரத்தை இயற்கையோடு ஒன்றிணைத்தே உருவாக்கி வந்தனர். நகரத்தில் அன்றாட நிகழ்வுகளான கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் இவர்களிடத்திலேயே காணப்பெறாது. அமைதியான சூழலில் வனப் பகுதிகளில் வாழும் இவர்களின் வாழ்விடத்தில் இரைச்சலேதும் இல்லாத சூழலை உணரலாம். மழைக்காடுகளின் இயற்கை வரலாற்றை இவர்கள் அறிந்து வைத்ததைப் போல் வேறு எவரும் அறிந்திருக்க இயலாது. வாழ்விடஅமைப்பு மற்றும் அதன் பயன்பாடு, உணவுவகை தேர்வு, இனப்பெருக்க பழக்க முறைகள், நிலப்பகுதி விரிவாக்கம் என வனத்தினுள்ளே ஊன்றி நின்ற மன்னவர்கள். இவர்களின் தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டு முறைகள் இன்றைய மூலிகை நிபுணர்களின் முதன்மை ஆதாரமாகக் கொள்ளப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவது கண்கூடு.
லிம் பூ லியாட் (Lim Boo Liat) தமது Orang Asli Animal Tale எனும் நூலில் பொறுப்புமிகு தந்தையர்கள், தலைவர்கள் (பதீன்), பெரியவர்களான இவர்கள் தங்களுக்குண்டான நீதிநெறிகளின் அடிப்படையில் அனைவரையும் நேர்மையுடனும் இரக்கத்துடனும் அணுகும் முறையானது தம்மை கவர்ந்ததோடு, இரண்டு தலைமுறைகளாக இவர்களின் பிள்ளைகள் வெளியுலகத் தொடர்பினால் தங்களது பாரம்பரியத்தை விட்டு நியாயமற்ற முறையில் அங்கேறிய உலகமயமாதல், நகரமயமாதலில் பறிபோனதையும் குறிப்பிட்டுள்ளார். (Lim Boo Liat, Orang Asli Animal Tale, 2010, p7)
‘ஒராங் அஸ்லி’ என மலாய் மொழியில் அழைக்கப்படும் இவர்கள் மலேசியாவின் மொத்த மக்கட்தொகையிv (27.73 மில்லியன்) 0.5 சதவிகிதம் வகிக்கிறார்கள் (Jabatan Perangkaan Malaysia, 31 December 2009). இவர்களில் நெக்ரீட்டோ (மென்ராக்), செனோய், மற்றும் ப்ரோடோ-மலாய் போன்ற பிரிவினர் முதல் மூன்று முக்கியமான குழுக்களாகக் கொள்ளப்படுகிறார்கள். இம்மூன்று குழுக்களிலிருந்து சிறு சிறு பிரிவுகளாக மொத்தம் 18 இனக்குழுக்கள் விரவிக்கிடக்கின்றன. இவர்களில் செனோய் இனத்தவர் மொத்த பழங்குடியினர் (141,230) தொகையிலிருந்து 56 சதவிகிதத்தை வகிக்கிறார்கள் (Jabatan Hal Ehwal Orang Asli, 2008). இவர்கள் மொன்- கிமேர் இனத்தாரின் மொழியையும், ‘காசிஸ்’ எனப்படும் மேகாலயா (Meghalaya) பகுதியில் பேசப்படும் மொழியையும் புலக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். நெக்ரீட்டோ பிரிவினர் மத்தியிலும் மொன்–கிமேர் மொழியின் தாக்கத்தைக் காண முடிகிறது. ப்ரோடோ-மலாய் எனப்படுபவர்கள் 41.4% கொண்டிருக்கையில் இவர்களது சிறு குழுப் பிரிவான ‘செமலாய்’ (Semelai), மொன்–கிமேர் மொழியினைப் பயன்படுத்துவது தெரியவருகிறது. ‘ஜாகுன்’ எனப்படுபவர்கள் மலேசிய-இந்தோனீசிய நாடுகளில் பரவலாக விரவி இருப்பதோடு ப்ரோடோ-மலாய் இனத்தின் சிறு குழுப் பிரிவில் அதிகமாக அங்கம் வகிக்கிறார்கள். ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இப்பகுதியில் இவர்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. காடுகள், மலைகள் என உட்புறமாக வசித்த இவர்கள், ‘ஒராங் உலு’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களை மலேசியாவின் ஜொகூர்-பகாங் மாநிலங்களில் நிறையவே காணலாம். காலங்காலமாக வேட்டையாடியும், மீன் பிடித்தும், பழங்களை சேகரித்தும், வனப் பொருட்களை விற்றும் வாழ்வை வழிநடத்தி வந்துள்ளனர்.
மேற்கூறிய ஒவ்வொரு மூலக் குழுவிலிருந்து விரவிக் கிடக்கும் சிறு சிறு பிரிவினரைப் பார்ப்போம். நெக்ரீட்டோ இனக் குழுவில் கென்சியூ, கிந்தாக், லநோ, ஜஹாய், மென்ட்ரிக் மற்றும் பதேக் என்று ஆறு பிரிவினர் இருக்கின்றனர். அதே போன்று செனோய் இனத்தாரின் வழியில் தெமியார், செமாய், செமோக் பேரி, ஜாஹுட், மா மேரி, மற்றும் சே வோங் என ஆறு பிரிவினர் உள்ளனர். குவாலா, கானாக், செலெதார், ஜாகுன், செமலாய் மற்றும் தெமுவான் ஆகியோர் ப்ரோடோ-மலாய் குழுவின் பிரிவினராவர்.
பழங்குடி மக்கள் வாழும் ஆறு கிராமங்களுக்கு எங்களது பயணத்தை மேற்கொண்டோம். உடன் என் சக பணியாளர் ஒருவரும் வந்திருந்தார். முதல் ஐந்து கிராமங்களில் அதிகப்படியான நேரத்தைச் செலவிட இயலாதபட்சத்தில் கம்போங் பன்கானில் (Kampung Pangan) சுமார் நான்கு மணி நேரம் அங்கு வாழும் மக்களுடன் அமர்ந்து பேசினோம். இவர்கள் செமாய் பிரிவினரைச் சார்ந்தவர்கள். ஏறக்குறைய 200- 300-க்கும் மேற்பட்டோர் இக்கிராமத்தில் வாழ்வதாக தோக் பதீன் (Tok Batin) தெரிவித்தார்.
சாதாரணமான வண்டிகள் செல்லக்கூடிய பாதைகள்கூட இங்கு அமைக்க பெறவில்லை. வல்லுந்து ஒன்றில் ஏறி சுமார் 20 நிமிட பயணத்திற்குப் பின்பு நானும் எனது நண்பரும் கிராமத்தினுள் நுழைந்தோம். வல்லுந்தினுள் உடல் அசைந்த வண்ணமாகவே இருந்ததால், குமட்டிக் கொண்டு வந்தது. தலைவலித் தைலத்தை மூக்கில் தடவி தலையில் தேய்த்துக்கொண்டேன். பெரும்பாலான நேரங்களில் இவ்வாறான திரவியங்கள் என்னை அமைதிப்படுத்தி நிதானத்தில் அமரச் செய்யும். ஒரு வித பழக்கமாகவே மாறி விட்டது.
மிகுந்த மரியாதை கொண்டவர்களாகவும், கபடமில்லாத சிரிப்போடும் எங்களை வரவேற்றனர். முதலில் அங்குள்ள சிறார்களின் உயரம் மற்றும் அவர்களது தோற்றமானது என்னை பல கேள்விகளுக்குள் மூழ்கடித்தது. சுருண்ட முடி, சப்பையான மூக்கு, குட்டையான கை கால்கள் என அவர்கள் அனைவரும் ஓரளவிற்கு ஒரே மாதிரியான உடல் வடிவத்தைக் கொண்டிருந்தனர். என்னுடைய நிழற்படக் கருவி உட்பட, நான் கொண்டு சென்ற நூல்களை உற்று நோக்கியவாறு சிறார்கள் என்னை நெருங்கினர். வேற்று நிலத்தவன் என்ற எண்ணம் பளிச்சிட்டதும் அவரவர் வேலையை தொடர்ந்தனர் போலும்.
இங்கு வாழும் மக்கள் தாங்கள் பயிரிட்டதையும், காட்டில் விளைந்ததையும் உண்டு, வாழ்நாளை நடத்திக்கொண்டிருந்த காலம் மறைந்து தற்போது ரிங்லேட் (Ringlet) அணைக்கட்டிலும், ‘போ’ தேயிலைத் தோட்டத்திலும் பணிபுரிந்து வருவதாக தோக் பதீன் (Tok Batin) கூறினார். இயற்கை பல்வேறு வளங்களைத் தன்னுள் பொதித்து வைத்து தாவரம், விலங்கு, மனிதன் என அனைத்திற்கும் வளமையைப் பகிர்ந்தளிக்கிறது. அதனை அதன் போக்கில் விட்டு வாழ்ந்தோமானால் மனிதயினம் வளம் பெற்று செழிக்கும்.
இக்கிராம இளையோர்களிடத்திலே, குறிப்பாக பெண்கள், நகர வாழ் பெண்களின் ஒரு சில பண்புகளைப் பெற்றிருப்பதைக் காண முடிந்தது. இளம் பெண்கள் உதட்டுக்கு சாயம் பூசி, மார்புக்குழி தெரியும் அளவிற்கு மேலாடை அணிந்திருந்தனர். லீம் பூ லியாட் கூறியதை நிரூபிக்கும் வண்ணம் அவர்களின் தோற்றம் வெளிப்பட்டது. போலியை நிசமென்று கருதி ஏமாறிக்கொண்டிருக்கும் இப்பெண்களின் நிலையை நினைத்து மனம் சற்றுத் தடுமாறியது. இதன் தொடர்பாக தோக் பதீன் முற்றிலுமாக தமது ஆதங்கத்தை ஊடகத்தின் மீது வைத்தார். மேலும், நகரத்தில் போலித்தனம் தலைதூக்கியிருப்பது தங்களை எவ்விதத்திலும் பாதிக்காவிட்டாலும், இம்மாதிரியான நஞ்சினை ஏந்திய மாயைகள் தங்கள் பிள்ளைகளின் மத்தியில் பெருமைக்குரிய அடையாளமாக கருதப்படுவதே ஆபத்து என்றார்.
காடுகளின் மையப்பகுதியில் இக்கிராமம் அமைக்கப் பெற்றிருந்தாலும், இதற்கு முன்னர் கம்போங் குவாலா போ, போஸ் மென்சன், ரெலுங், ரந்தாவ், தெஜி, தியாட், செரோஸ், போஸ் தெலானோக் ஆகிய பழங்குடியினரின் கிராமங்கள் உட்புறமாக இருந்தன. இம்மலையைச் சுற்றிலும் நிகழ்ந்த மேம்பாட்டு திட்டங்களால் வழக்கிலிருந்த வழிகள் மறைக்கப்பட்டு வேற்று வழி பாதைகளை ஏற்படுத்தப்பட்டன. உட்புறமாக இருந்த கிராமங்கள் மேன்மையடைந்த பகுதிகளுக்கு அருகிலும், கம்போங் பன்கான் மேற்கூறிய அனைத்து கிராமங்களைத் தாண்டி உட்புறமாக நகர்த்தப்படாமலேயே இடம்பெயர்ந்தது. இங்குள்ள பழங்குடியினர் கிராமங்களில் இதுவே உட்புறமாக அமைந்திருக்கிறது. கிராமத்தின் அருகில் ஆறொன்று எவ்வித தடையுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. சிறார்கள் அச்சமின்றி பாறைகளின் மீது குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அசுத்தமின்றி ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் அருகே அமர்ந்து இளைப்பாறினோம். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வோரின் நிலையை அன்றுதான் மிக அருகிலிருந்து உணரும் வாய்ப்புக் கிட்டியது. அரசாங்க உதவி பெற்று இவர்களது வீடுகள் மேம்பாடு அடைந்திருந்தன. அங்குள்ள பெண்கள் பொதுவாகவே யாரேனும் புதியவர்கள் கிராமத்தினுள் நுழைந்தால் தூர நின்று கவனிப்பார்களாம். வயதான மூதாட்டி தொடங்கி இளம் பெண்கள் வரை வெற்றிலையை மென்று கொண்டிருந்தனர். என்னுடன் பேசிக்கொண்டிருந்த பதீன் உட்பட. இவர்கள் தங்களை எவ்வித மாற்றத்திற்கும் தயார்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக தோக் பதீன் கூறினார். முன்னோர்கள் இவர்களுக்கு விட்டுச் சென்ற பழக்கவழக்கங்களின் மாற்றுருவத்தை தம்மால் இன்றைய சூழலில் ஏற்க முடிந்தாலும் அதன் தொடக்க கால ஆக்கிரமிப்பென்பது அத்துமீறியே நடைபெற்றது என்றார்.
‘பயிரிடும் நிலமானது தகுந்த விளைச்சலைத் தர இயலாதபோது முன்னோர்கள் இடம்பெயர்ந்தனர். சில நேரங்களில் வெகுதூரம் இடம்பெயர நேரிடும். இருப்பினும், அதில் ஒரு வித நிம்மதியும் நியாயமும் இருந்தது. இப்போதெல்லாம் நகர மேம்பாட்டுத் திட்டம், மக்கள் நலத் திட்டம் எனக் கூறி தேவையற்ற இடப்பெயர்வுகளும் அழிவுகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. கேமரன் மலை ஒரு காலத்தில் என் போன்றோரின் பொதுச் சொத்து. இன்று மலைகளைக் கூறு போட்டு, காடுகளை நகரமாக்கி, அந்நகரித்தினுள்ளே எங்களையும் நுழையச் செய்துவிட்டனர்’ என தோக் பதீன் வருத்தமுற்றுக் கூறினார். ‘பன்கான்’ என்றால் வனவாசிகள் என பொருள்படுமாம். பெரும்பாலான பன்கான் மக்கள் கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலத்தில் இருப்பதை அவர் நினைவூட்டினார்.
ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான அடையாளத்தை மரபு ரீதியாக உருவாக்கி வளர்த்து அதனைப் பேணிக் காப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகின்றது. எனினும் வெளிச் சமூகத்தின் உறவும் ஊடுருவலும் சில நேரங்களில் இவர்களின் சமுதாய அடையாளங்களைச் சிதைத்து விடுகின்றன. இன்றைய நகரமயமாதல் கிராம சமுதாயத்தின், குறிப்பாக பழங்குடி கிராமங்களின் அடையாளங்களை அழித்து வருகிறது. மக்கள் வேர்களை இழந்தும், முகங்களைத் தொலைத்தும் பல நூற்றாண்டுகாலமாக வாழ்ந்து வந்த நிலத்தினிலேயே அகதிகளாக மாறி வருகின்றனர்.
இவ்வாறான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களானது பல தருணங்களில் மக்களை நடைப்பிணமாக்கும் அவலங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதை மறுக்க இயலாது. வன்முறை மோதல்கள், உள்நாட்டு சண்டைகள், பயங்கரவாதங்கள் என உலகைப் பாதுகாப்பற்ற இடமாகவே நினைத்துப் பார்க்கத் தூண்டினாலும், இவற்றை கையாளுபவர்கள் எதன் அடிப்படையில் மனிதர்களுக்கெதிராகவும் அரசுகளுக்கெதிராகவும் போராடுகிறார்கள் என்பதனை அறிந்துகொள்வது முக்கியமானதாகும். 1986 மற்றும் 1991-கும் இடையில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான வகுப்புவாத வன்முறை மூண்டு 15,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ‘Green Revolution’ அல்லது பசுமைப் புரட்சி எனும் இந்திய அரசாங்கத்தின் விவசாய அபிவிருத்தி திட்டத்தினால் நிலங்கள் செழிப்பற்றுப் போன நிலையில் பயிர்கள் பாதிக்கப்பட்டு, தண்ணீர் தேங்கிய பாலைவனங்கள் பஞ்சாப் மாநிலத்திலே உருவாயின. மக்கள் கடன் தொல்லைகளுக்கு ஆளாகி அதிருப்தி அடைந்த நிலையில் எதிர்ப்பு அலைகள் தலைதூக்கின. பின்பு அதுவே வன்முறை மோதலாக உருக்கொண்டது (Vandana Shiva, The Violence of the Green Revolution, 1991). இன்றைய நிலையில் கேமரன் மலைப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்தோடு வேக வேகமாய் நடந்தேறிய வண்ணம் இருந்தாலும், விவசாயத்திற்காக குறிப்பிட்ட ஒரு சிலர் வனப்பகுதிகளை அழித்து வருவதும் கண்கூடு. இவ்வாறாக அதிகமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக கேமரன் மலை உருமாறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய உருமாற்றத்தினால் இடைப்பட்டக் காலத்தில் இப்பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குட்படத் தொடங்கினர். இப்படியாக வனங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படும் நிலையில், நாளை உட்புறமாக அடர்ந்த காடுகளின் மத்தியில் குடிகொண்டிருக்கும் பழங்குடியினர் எவ்வித முன்அறிவிப்புமின்றி வெளியேற்றப்படலாம். இவ்வாறான ஒடுக்கு முறைகள் எவ்விதச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு கிளந்தானில் பதிவான இரத்தச் சரித்திரமொன்று பாடமாக அமைகிறது.
1993-ம் ஆண்டு கிளந்தானிலுள்ள சுங்கை ருவாஸ் (Sungai Ruas) எனும் கிராமத்தில் மூன்று மலாய்க்கார்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயத்திற்குள்ளாயினர். இதன் காரணமாக பதினொரு பழங்குடியினரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மென்ராக் எனப்படும் இப்பிரிவினர் குக்கிராம் ஒன்றில் வசித்து வந்தனர். இக்கிராமமானது அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் சம்பவம் நடந்த நாளன்று, மலாய்க்காரர் ஒருவர் தன் சக நண்பர்களோடு வெட்டுக்கத்திகளுடன் பழங்குடிகளை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்த பதீனிடம், தாங்கள் இந்நிலத்தை மாநில நில அலுவலகத்திடமிருந்து வாங்கிக் கொண்டதாகக் கூற பழங்குடியினரிடையே பதற்றம் அதிகரித்தது. பதீன் மீண்டும் மறுப்பு தெரிவிக்க அக்கும்பலிருந்து ஒருவன் பதீனைத் தாக்கினான். பதீன் தாக்கப்பட்ட அடுத்த கணமே இதர குடியினர் அக்கும்பலைத் தாக்கினர். அவ்வாறு தாக்கியதில் இரு மலாய் ஆடவர்கள் ஊது குழாய் வழியாக செலுத்தப்பட்ட விச ஊசியால் கொல்லப்பட்டார்கள் (News Straits Times, 27/04/93). பொதுவாகவே ஆய்வாளர்கள் பழங்குடியினரை ஆபத்தற்றவர்களாகவே குறிப்பிட்டுள்ளனர். ஒடுக்கப்படுபவர்களின் சினம் கொண்ட எழுச்சியாகவே இந்நிகழ்வினை என்னால் கருத முடிகிறது.
மாற்றம் என்பது நிலைகொண்ட பின்பு ஒரே நிலையாய் இருந்துவிடப் போவதில்லை என்பது தோக் பதீன் அறிந்திருந்தார். அன்றைக்கு நிகழ்ந்த சமூக, பொருளாதார, மத மாற்றத்தின் விளைவுகளை நினைவு கூறுகையில், அவற்றை ஏற்க முடியாத நிலையில் இச்சமூகத்தில் பலர் நிர்கதிநிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறினார். அந்நிய மதம், மொழி, வாழ்வுமுறையென இயற்கையை மறந்து வாழ பழகிக் கொடுத்த நகர நாகரிகம் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு முறையை சிதைத்தது. அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின்பு நம் மத்தியில் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பழங்குடிகளின் வருகையை எதிர்பார்க்கலாம். தமக்கே உண்டான அடையாளங்களோடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயரத் தொடங்கியவர்கள் நாளைய உலகில் முகமூடி அணிந்து அலையப்போவதென்னமோ நிதர்சனம் என்றே தோன்றுகிறது.
மேற்கோள் :
‘Mapping Human Generic Diversity in Asia’, The HUGO Pan-Asian SNP Consortium. Science 326,1541(2009): DOI: 10.1126/science.1177074
Edison Liu, Press Release of the Genome Institute of Singapore, December 2009.
Alberto G. Gomes, (2007). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge Taylor & Francis Group.
Lim Boo Liat, (2010), Orang Asli Animal Tale, Centre for Orang Asli Concerns, Subang Jaya.
Jabatan Perangkaan Malaysia: http://www.statistics.gov.my/portal/index.php?lang=bm
Jabatan Kemajuan Orang Asli (JAKOA): http://www.jakoa.gov.my
Veena Sikri, (2013), India and Malaysia: Interwined Strands, ISEAS Publishing.
Anthony Milner, (2011), The Malays, John Wiley & Sons, Ltd., Publication.
Tineke Hellwig & Eric Tagliacozzo, (2009), The Indonesia Reader: History, Culture, Politic, Duke Uviversity, Press.
Frank Athelstane Swettenham, (1899), The Real Malay: Pen Pictures, London & New York
அருமையான தேடல்…அகலமான பார்வை….//ஒடுக்கப்படுபவர்களின் போராட்டம் சினம் கொண்ட எழுச்சியாகவே இருக்கிறது//
பழங்குடியினர் பிரச்சனை, சுற்றுச்சூழல் பற்றிய அதன் நிலைபாடு குறித்த எனது புரிதல் மிகவும் குறைவானதே. தேடல் நிறைந்த ஆளுதாப்பா நீங்க. வருங்காலங்களில் உங்களது படைப்புகள் பொக்கிசங்களாகக் கொள்ளப்படும். மேலும் தீவிரமான ஆய்வுகளை எதிர்பார்க்கிறேன் தோழர்.
நன்றி தோழி.
நல்லதொரு அனுபவம். உங்களைப் போன்றோரிடம் நேரடியாகப் பேசினால் நிறைய விசயங்கள் கிட்டும். கைபேசி எண் கிடைக்குமா ? நன்றி.
வணக்கம்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_21.html
நன்றி.
நன்றி கீதமஞ்சரி.
என் கைப்பேசி எண்ணை யாரிடமும் நான் பொதுவில் பகிர்வதில்லை ஓவியா. என்னை முகநூலில் தொடர்பு கொள்ளலாம். https://www.facebook.com/naveensilvongala . நன்றி.
சிறப்பு அருமையான பதிவு, உங்களை எப்படி தொடர்பு கொள்வது