அன்றாட வாழ்வில் நாம் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் ஒரே வணிக குறி / வணிக முத்திரையைக் கொண்டிருப்பதில்லை. அவ்வகையில் பல பொருள்களின் பொதுபெயர்களும் மற்றும் பல பொருள்களின் வணிகக் குறியும் கலந்தே நமது மனதில் பதிவாகி விடுகின்றன. பல நேரங்களில் நமக்கு இதற்கான வேறுபாடுகளே தெரியாமல் போய்விடுகின்றது என்பதே ஆச்சரியம். உதாரணமாக, முகப்பூச்சுக்களைக் குறிப்பிடும்போது ‘பெளடர்’ என்ற பொதுப்பெயரிலேயே குறிப்பிடுகிறோம். Johnsons’ Baby Powder, Himalaya Baby Powder, Cussons Baby Powder என பல வணிக முத்திரையிலான பொருள்கள் இருக்கும் பட்சத்தில் பொதுப்பெயரில் ‘Powder’ என்றே நாம் பெரும்பாலும் அப்பொருளை நிறுவுகிறோம். நாம் தொடர்ந்து ஒரே முத்திரையிலான பொருளைப் பயன்படுத்தும்போது அதன் முத்திரையை தவிர்த்துவிட்டு பொதுப்பெயரிலேயே அழைக்க முற்படுவதே இதற்கு காரணமாகும்.
மறுநிலையில், மீ வகையைக் குறிப்பிடும்போது மேகி (Maggi) என்று ஒரு பொருளின் வணிக முத்திரைப் பெயரைக் கொண்டும் அழைப்பது வழக்கம். மேகி எனப்படுவது ஒரு வணிக முத்திரையாகும். மேகி எனும் வணிக முத்திரையைக் கொண்டு மீ வகை, soy souce வகை, chilli souce வகை என பலவகையான சமையல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மேகி எனும் சொல் ஏதோ மீ வகைக்கான பெயராக பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இதே நிலையை பற்பசையைக் குறிப்பிடும்போதும் காணலாம். நாம் வேறு ஒரு வகை பற்பசையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தபோதும் பற்பசையைக் குறிப்பிட Colgate என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஒரு முத்திரை தொடர்ந்து வணிக சந்தையில் முன்ணணி வகிக்கும் பட்சத்தில் அம்முத்திரை பொருளின் பெயரையும் கடந்து நம் மனதில் பதிவாகிவிடுகின்றது.
இதனை நாம் வணிக பொருள்களின் முத்திரைகளை தெரிந்து வைத்திருப்பதில் காட்டும் அலட்சியம் என்று குறைசொல்லிவிட முடியாது. ஆனால், வணிக முத்திரை எனப்படுவது நாம் இவ்வளவு சாதாரணமாக எண்ணிவிடும் அளவுக்கு முக்கியத்துவம் குறைந்ததாகவும் ஆகிவிடாது. வணிக முத்திரையின் செயல்பாடுகளையும் பயன்களையும் அறியும் முன் எவையெல்லாம் வணிக முத்திரை என்றழைக்கப்படுகின்றன என்பதனை காண்போம்.
பிரிவு 3(1) சட்டத்தின்படி சாதனம்-device, பிராண்ட், தலைப்பு, எழுத்து, சொல், சொற்றொடர், குறிச்சொல்-label, பெயர், கையொப்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே முத்திரை (mark) என வகைப்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய அனைத்தையும் வணிக முத்திரையாக பதிவு செய்து வணிக முத்திரை சட்டம் 1976ன்கீழ் பாதுகாக்க முடியும். சட்ட ரீதியிலான பாதுகாப்பு ஒருபுறம் இருக்க பொருள்/சேவை ஆகியவற்றிற்கும் அதன் உரிமையாளருக்கும் உள்ள தொடர்பினை காட்டவும் வணிக முத்திரை உதவுகிறது.
அதாவது, வணிக முத்திரை என்படுவது ஒரு பொருளை அல்லது சேவையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அல்லது தனிநபருக்கு/குழுவினருக்கு குறிப்பிடத்தக்க ஒரு பொருளின் அல்லது சேவையின் மீது உள்ள தொடர்பைக் காட்டும் எனலாம். உதாரணமாக milo மற்றும் nescafe ஆகிய இரண்டு பெயர்களில் பானங்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே Nestle எனும் வணிக முத்திரையின்கீழ் தயாரிக்கப்படும் பானங்களாகும். ஆக, இவ்விரு பானங்களுக்கும் இடையேயான தொடர்பையும் அதன் உரிமையாரின் தொடர்பையும் காட்ட வணிக முத்திரை முக்கிய பங்காற்றுகிறது.
பெரும்பாலும் பெயர்களுடன் சின்னங்கள், வசனங்கள், எண்கள், படங்கள், வடிவங்கள், ஓவியங்கள், ஓசை வடிவங்கள் மற்றும் நிறங்கள் என ஒன்றுக்கும் பேற்பட்டவை இணைக்கப்பட்டு வணிக முத்திரையாக்கப்படிருப்பதைக் காணலாம். உதரணமாக, KFC உணவு வகைக்கான வணிக முத்திரையாக KFC என்ற மூன்று எழுத்துகள், சிவப்பு வெள்ளை, கருமை ஆகிய நிறத்திலான கிழவரின் உருவம், it’s finger-lickin’ good எனும் சொற்றொடர் ஆகியவற்றைக் கூறலாம். அதேபோல apple ரக பொருள்களில் ஒரு பகுதி கடிக்கப்பட்ட ஆப்பிளின் படத்தை மட்டுமே கொண்டு அதன் வணிக முத்திரை நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம்.
மலேசிய சூழலில் வணிக முத்திரை
வணிகச் சந்தையில் தொடர்ச்சியான போட்டிகள், வளர்ச்சியானது காளான்களைப் போல ஒவ்வொரு நாளும் பல வணிக முயற்சிகள் தொடங்கப்பட்டு தொடங்கிய வேகத்திலேயே மூடப்பட்டுவிடும் சூழல்கள் இருக்கும் நிலையில் அனைத்து வணிகங்களுமே வணிக முத்திரையை பதிவு செய்வதென்பது பொருத்தமற்றதாகும். எனவே, மலேசிய நாட்டை பொருத்தமட்டில் வணிக முத்திரை இன்றுவரை கட்டாயப்படுத்தப் படவில்லை. மலேசியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் வணிக முத்திரை பதிவு கட்டாயப்படுத்தப்படாமலேயே இருக்கின்றது. ஆனால், சட்டபூர்வமான பாதுகாப்பு கறுதி வணிக முத்திரைகள் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவுறுத்துதலையும் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றன.
உள்துறை, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் (Kementerian Dalam Negeri, Koperasi dan Kepenggunaan) கீழ் இயங்கும் Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பின்வழி வணிக முத்திரை பதிவினை மேற்கொள்ள வேண்டும். Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பில் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் 470க்கும் மேற்பட்ட வணிக முத்திரை பதிவு முகவர்கள் (Trade Mark Agent) மூலமாகவும் வணிக முத்திரை பதிவினை நாம் செய்துகொள்ள முடியும். இவை அனைத்தும் Perbadanan Harta Intelek Malaysia அமைப்பின்கீழ் சட்டப்படி பதிவுபெற்ற முகவர்களாவர்.
அரசாங்கத்தின் அங்கிகாரம் பெறாத முகவர்களிடம் பதிவு செய்யபடும் முத்திரைக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படாது என்கிற நிலையில் இப்பதிவு வேலைகளில் ஈடுபடுபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் முகவர்கள் அரசாங்க அங்கிகாரம் பெற்றவர்களா என்பதனை நன்கு உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே பதிவு வேலைகளில் ஈடுபடுவது சிறப்பாகும்.
இவ்வாறு மலேசியாவில் பதிவு செய்யப்படும் முத்திரைக்கு மலேசியாவில் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், பாரிஸ் மாநாட்டில் அங்கத்துவம் பெற்ற நாடுகளிலும்(Paris Convention) மற்றும் உலக வர்த்தக அமைப்பு அங்கத்துவம் பெற்ற நாடுகளிலும் (WTO) இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முத்திரையைக் கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஓரளவு வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தவிர்த்து மற்ற நாடுகளில் நம்முடைய வர்த்தக சந்தை விரிவாகும் வாய்ப்புகள் இருப்பின் அந்நாடுகளிலும் தனித்தனியாக வணிக முத்திரை பதிவு செய்துக்கொள்வதே சிறப்பு. மேலும், மலேசியாவில் பயன்படுத்தப்பட உள்ள பொருளுக்கு அப்பொருளின் உரிமையாளர் (மலேசியர் / மலேசியர் அல்லாதவர்) பதிவு விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.
வணிக முத்திரையில் பயன்படுத்தப்படும் மூன்று வகையான குறியீடுகள்
பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையின் கடைசி பகுதியில் “TM” , “SM” அல்லது “®” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். வணிக முத்திரை பதிவு செய்யப்பட்ட முறையின் அடிப்படையிலேயே “TM”, “SM” அல்லது “®” என மூன்று விதமான குறியீடுகள் இடம்பெற்றிருப்பதையும் அதன் பொருளையும் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
1) “TM” (trademark)
1 முதல் 34 வரையிலான வகுப்புகளில் அடங்கும் பொருள்களின்-products (பெயர், சொல், சின்னம், சாதனம் அல்லது இவற்றின் கலவைகள்) TM எனும் இவ்வகை வணிக முத்திரையின்கீழ் பதிவு செய்யப்படுகின்றன. முழுமையாக பதிவு செய்யப்படாத பொருளுக்கான வணிக முத்திரைக்கு TM எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இது தற்காலிக பயன்பாட்டிற்கான குறியீடு மட்டுமே. அதாவது ஒரு பெயர், சொல், சின்னம், சாதனம்–device அல்லது இவற்றின் கலவைகள் வணிக முத்திரைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை பொதுவில் காட்டவே TM எனும் குறியீடு தற்காலிகமாகப் பயன்படுத்தப்படுவதாக கொள்ளலாம். மேலும், இதன் முழுமையான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்; இன்னும் முடிவு பெறவில்லை அல்லது நிலுவையில் இருப்பதையும் இக்குறியீடு உணர்த்துகிறது. ஆக, TM என்பது தற்காலிகமான குறியீடு என்றும், முழுமையான அங்கிகாரத்தை பெறாத நிலையில் நாம் அதன் எந்த பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்த முடியாது என்பதையும் இவ்விடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2) “SM” (Service Mark)
35 முதல் 45 வரையிலான வகுப்புகளில் அடங்கும் சேவைகளின்-services (பெயர், சொல், சின்னம், சாதனம் அல்லது இவற்றின் கலவைகள்) SM எனும் இவ்வகை வணிக முத்திரையின்கீழ் பதிவு செய்யப்படுகின்றன. முழுமையாக பதிவு செய்யப்படாத சேவையின் வணிக முத்திரைக்கு SM எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு பெயர், சொல், சின்னம், சாதனம்–device அல்லது இவற்றின் கலவைகள் வணிக முத்திரைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை பொதுவில் காட்டவே SM எனும் குறியீடு தற்காலிகமாக உதவுவதாகக் கொள்ளலாம். மேலும், இதன் முழுமையான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும்; இன்னும் முடிவு பெறவில்லை அல்லது நிலுவையில் இருப்பதையும் இக்குறியீடு உணர்த்துகிறது. ஆக, முழுமையான அங்கிகாரத்தை பெறாத நிலையில் நாம் அதன் எந்த பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்த முடியாது என்பதையும் இவ்விடம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
3) “®” (registered)
ஒரு பொருளின் (product) முத்திரை அல்லது சேவையின் (service) முத்திரை அந்நாட்டின் அதிகார பீடத்திலுள்ள முத்திரை பதிவு அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டு / அங்கீகரிக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவுச் செய்யப்பட்டுவிட்டதை கட்டுவதே ® எனும் முத்திரையின் பொருளாகும். இதனை பெற்றுவிடும் நிலையில் ஒரு பொருளின் முத்திரை அல்லது சேவையின் முத்திரை தனது பொருளை/சேவையை சட்டபூர்வமாக பாதுகாக்க முடியும்.
சுருங்கக்கூறின் முழுமையாக பதிவு பெறாத அல்லது நிலுவையில் இருக்கும் பொருளின் முத்திரைக்கு TM எனும் குறியீடும், சேவையின் முத்திரைக்கு SM எனும் குறியீடும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டும் முழு பதிவிற்குட்பட்டு சான்றிதழைப் பெற்றுவிடும் நிலையில் ® எனும் குறியீடு பயன்படுத்தப்படும்.
வணிக முத்திரை பதிவு
இனி தொடர்ந்து வணிக முத்திரை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை காண்போம். இப்பதிவு வேலைகள் அனைத்தையும் வணிக முத்திரை பதிவு முகவர்களே மேற்கொள்வார்கள் என்றாலும்கூட அவை எவ்வாறு மேற்கொள்ளப் படுகின்றன என்பதைப் பற்றியும் அவற்றில் நமது பங்களிப்பு என்ன என்பது பற்றியும் ஓரளவாவது நாம் அறிந்து வைத்திருப்பது சிறப்பாகும்.
- வணிக முத்திரையின் வகுப்பை அடையாளம் காணுதல் (Class Identification)
இதற்கான கால வரையறை : விண்ணப்பிப்பவரின் விருப்பம்
வணிக முத்திரைக்கு பதிவு செய்ய விரும்பும் தரப்பினர் முதலில் எவ்வகையான சின்னம், பெயர், சொல், சொற்றொடர்களைப் பயன்படுத்த உள்ளார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். (இது முழுமுற்றிலும் நம்முடைய கடமையாகும். வேறு யாரும் நாம் தேர்வு செய்திருக்கும் முத்திரையைக் கொண்டிருக்கவில்லை எனும் பிரக்ஞையுடனேயே இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.) பின்பு, 1 முதல் 45 வரையிலான வணிக முத்திரை வகுப்பில் எப்பிரிவை சேர்ந்தது என்பதை கண்டறிய வேண்டும். நம் பொருள் அல்லது சேவை எவ்வகை வகுப்பில் அடங்குகிறது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பதன்வழி பதிவுக்காகான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எளிமையாக்கிவிட முடியும்.
இவ்வணிக முத்திரை வகுப்பு இரண்டு பிரிவுகளாக [1.]பொருள்கள் (Goods) மற்றும் [2.] சேவைகள் (Services) என அவற்றின் தன்மைகள் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன.
[1.] பொருள்கள் (Goods/Products) – பொருட்களை கொண்டு வணிகம் செய்பவர்கள் தங்களது வணிக பொருள் 1வது வகுப்பு முதல் 34 வரையிலான வகுப்பில் ஏதாவது ஒரு வகுப்பின்கீழ் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக வாகனங்களை வணிக பொருளாக்குபவர்கள் வகுப்பு 12ல் அடங்குவர்.
[2.] சேவைகள் (Services) – சேவைகளின் அடிப்படையில் வணிகம் செய்பவர்கள் 35வது வகுப்பு முதல் 45வது வகுப்பிற்குள் அடங்குவர். உதாரணமாக காப்புறுதி நிறுவனங்கள் 36வது வகுப்பிலும் tuition நிறுவனங்கள் 41வது வகுப்பிலும் அடங்குவர்.
வணிக முத்திரைக்கு விண்ணப்பிக்கும்போது மேற்கூறிய 45 வகுப்புகளில் எவ்வகுப்பைச் சார்ந்த பொருள் அல்லது சேவைக்கான முத்திரை பதிவுக்கு விண்ணப்பிக்கிறோம் என குறிப்பிடுவது அவசியமாகும். பெரும்பாலும் ஒரு வகுப்பில் பல விதமான பொருள்களின்/சேவையின் வகைகள் குறிப்பிடப்பட்டிருப்பதால் நாம் அவற்றில் நமக்கு பொருத்தமான ஒன்றையே தெரிவு செய்ய வேண்டும்.
உதாரணம்
நுண்கலை பள்ளி எனும் நிறுவனம் தனது முத்திரையை பதிவு செய்கிறது என வைத்துக்கொள்வோம். எவ்வகை பொருள் பண்டமாற்றத்தையும் உட்படுத்தாமல் அறிவுசார்ந்த கலையை போதிக்கும் நடவடிக்கையையே இந்நிறுவனம் மேற்கொள்கிறது என்பது தெளிவு. அவ்வகையில் அதன் முத்திரை பதிவானது சேவைகள் (Services) எனும் பிரிவில் 41வது வகுப்பில் அடங்கிடும். ஆக, முத்திரை பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது வெறுமனே 41வது வகுப்பு என்று எழுதிவிட முடியாது. காரணம், அவ்வகுப்பில் இதர சில சேவை வகைகளும் அடங்கியுள்ளன. அதனை பின்வருமாறு காணலாம்:
Class 41 | – Education; providing of training; entertainment, sporting and cultural activities. |
ஆக, நுண்கலை பள்ளியின் சேவை [cultural activities] எனும் வகைக்கே மிகப் பொருத்தமானதாகும். அவ்வகையில் விண்ணப்பதாரர் ;
பிரிவு – Services
வகுப்பு – 41
வகை – cultural activities
எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதுவரையில் எவ்வாறு வணிக முத்திரையின் வகுப்பை அடையாளம் காண வேண்டும் என்பதை தெளிவாக கண்டோம். தொடர்ந்து நம்முடைய வணிக முத்திரை நமக்கு முன் பிறரால் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதைப்பற்றி காண்போம்.
- முத்திரை யாருடனும் பொருந்தாததை உறுதி செய்தல் (Pre-searching)
இதற்கான கால வரையறை : ஏறக்குறைய 3 நாட்கள்
நம் வணிக முத்திரை எவ்வகையிலும் வேறொரு நிறுவனத்தினுடையதாக இல்லாதிருத்தலை உறுதி செய்துகொள்வதன்வழி வணிக முத்திரை பதிவுக்கான வேலைகளை சுலபமாக்கிக்கொள்ள முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வணிக முத்திரையை தவறுதலாக நம் பெயரில் புதிதாக பதிவு செய்ய முயற்சிக்கும்போது பதிவு வேலை நடுவில் தடைபடுவதோடு மிகுந்த கால விரயத்தையும் ஏற்படுத்திவிடும்.
பெரும்பாலும் வணிக முத்திரை பதிவுக்கான சேவையை வழங்கும் நிருவனங்கள் மூலமே முத்திரை தொடர்பான தேடுதல்களை மேற்கொள்ளலாம். அதாவது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முத்திரை வேறு நிறுவனங்களின்கீழ் பதிவு செய்யப்படுள்ளதா என்பதை சில வலைதளங்களில் தேடுவது என்பது இதன் பொருளாகும். அவ்வலைத்தளங்களைப் பயன்படுத்தி தேடுவதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, உள்துறை, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் (Kementerian Dalam Negeri, Koperasi dan Kepenggunaan) கீழ் இயங்கும் Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பின்வழி வணிக முத்திரை பதிவு செய்ய விரும்புபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரிம. 20 கட்டணமாக செலுத்தி முத்திரை தேடும் பணியை மேற்கொள்ளும் வசதியை MyIPO (Intellectual Property Corporation of Malaysia) ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முத்திரை, பெயர் அல்லது சொற்றொடர் வேறு ஒருவரால் பதிவு செய்து பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாம் தொடர்ந்து அதனை நம் பெயரில் மீள்பதிவு செய்யாமல் இருப்பதே சிறப்பு. இது பின்னாளில் ஏற்படக்கூடிய சட்ட சிக்கலில் இருந்து நம்மையும் நம் அறிவுசார் பொருளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் செயலாகும்.
- விண்ணப்ப பதிவு (Filing Aplication)
இதற்கான கால வரையறை : ஏறக்குறைய 5 நாட்கள்
*வணிக முத்திரைக்கு விண்ணப்பித்த காலம் தொடங்கி நமது பொருள் அல்லது சேவைக்கு “TM” அல்லது “SM” ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேறு நிறுவனங்கள் முத்திரை பதிவு செய்யவில்லை என்பதை நன்கு உறுதிபடுத்திக் கொண்ட பின்னரே வணிக முத்திரைக்கான விண்ணப்ப பாரத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரே வேளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முத்திரைகளை பதிவு செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களைத் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
- சான்றிதழ் / சாட்சியப்பத்திரம் பெறுதல் (Certificate)
இதற்கான கால வரையறை : 12 முதல் 15 மாதங்கள்
*வணிக முத்திரை பதிவு செய்யப்பட்டுவிட்டதற்கான சான்றிதழைப் பெற்றுவிட்ட காலம் தொடங்கி நமது பொருள் அல்லது சேவைக்கு “®” எனும்குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
பதிவு வேலைகள் முழுமைபெற்ற பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்யப்படும் முத்திரைக்கு சுமார் 10 ஆண்டுகால வரையறையில் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முத்திரை பதிவு செய்த நாள் தொடங்கி பத்தாண்டுகள் கழித்து மீண்டும் முத்திரையை மீள்பதிவு செய்ய வேண்டும். பத்தாண்டுகள் கழித்து அம்முத்திரைக்கான பாதுகாப்பு நீக்கப்படும் என்பதனையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
சான்றிதழ் பெற்ற வணிக முத்திரை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகின்றது
நாம் வணிக முத்திரைக்கு விண்ணப்பத்ததை தொடர்ந்து முத்திரை பதுவு முகவர்கள் மீண்டும் Search & Examination எனும் மீள் ஆய்வை மேற்கொள்வர். இங்கு நமது முத்திரை பிறரால் பயன்படுத்தப்படவில்லை என்பது மறுஉறுதி செய்யப்படுகின்றது. பின்பு அரசாங்க வர்த்தகமாணியில் (Government Gazette) – Gazette Trade Mark பதிவேற்றம் செய்யப்பட்டு சுமார் 2 மாத காலத்திற்கு பொதுப்பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
இவ்விரண்டு மாதங்களில் ஏதும் எதிர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டாத நிலையில் நமது முத்திரை பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்ற வணிக முத்திரை அதன் பொருள்/சேவை உரிமையாளர் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குகின்றது. எந்தவொரு அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி நம் வணிக முத்திரை முன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்படும்போது Court-section 35(1) எனும் சட்டப்பிரிவின்கீழ் நம்மால் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
வணிக முத்திரையால் அதன் உரிமையாளர் பெரும் நன்மைகள்
- வணிக முத்திரைக்கான சான்றிதழைப் பெற்றுவிடும் நிலையில் நாமே நமது பொருளின் அல்லது சேவையின் முழு முற்றிலுமான உரிமையாளராகிவிடுகிறோம். யாரிடமும் தனியாக இதை தனியாக வேறு வழியில் ஆதரங்காட்ட வேண்டிய அலைச்சல்கள் இல்லை.
- வணிக முத்திரை பெற்ற நமது பொருள் அல்லது சேவை நமது சொத்தாக மாறிவிடுகிறது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் லாபம் நட்டம் ஆகியவற்றிற்கு நாமே முழு பொறுப்பையும் ஏற்போம்.
- வணிக முத்திரை ஒரு வகை சொத்தாகக் கருதப்படுவதால் அதனை உரிமை மாற்றம் செய்தல், விற்றல் போன்ற நடவடிக்கைகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
- நமது பொருளை அல்லது சேவையை மற்றவர்களின் பொருளோடு வேவையோடு வேறுபடுத்து காட்ட உதவும். தனித்துவம் மிக்க பொருளை அல்லது சேவையை தனித்து அடையாளம் காட்டும்.
- நமது பொருளை அல்லது சேவையை கண்டறிவதில் வாடிக்கையாளர்கள் அடையும் குழப்பத்தை தவிர்க்கலாம்.
- பிறர் நமது பொருளின் அல்லது சேவையின் நற்பெயரை சேதப்படுத்தும் நடவடிக்கையை சட்டபூர்வமாக எதிர்கொள்ளலாம்.
- நமது வர்த்தக முத்திரையை நாடு முழுவதும் எந்தத் தடையுமின்றி பயன்படுத்த முழு சுதந்திரம் பெறுகிறோம்.
- நமது வணிக முத்திரைக்குத் தொடர்ந்து பத்தாண்டு காலம் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்; பத்தாண்டுகள் கழித்து மீள் பதிவுனை எளிதாகப் புதுபித்துக் கொள்ளலாம்.
- வணிக முத்திரை பதிவு செய்யாதவர் தனது பொருளை அல்லது சேவையைத் தற்காத்துக்கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் பண விரயம், கால விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
10.வியாபாரம் எளிதில் விருத்தியடையும்
வணிக முத்திரை பொருளின் தரத்தை நிலைநிறுத்தும் அதேவேளை அம்முத்திரையின் தரத்தையும் உயர்த்தி பிடிக்கின்றது. அதிக பிரபலமடைந்த முத்திரைகளுக்கென்று தனிப்பட்ட விலைமதிப்பை உலக சந்தை நிர்ணயம் செய்கின்றது. உதாரணமாக, உலக சந்தையில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் கோகா கோலாவே அதிக மதிப்பு வாய்ந்த வணிக முத்திரையாக இருந்து வந்துள்ளது. அவ்வகையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை 98.3 பில்லியன் அமேரிக்க டாலர் மதிப்புடன் முதல் நிலையினை அடைந்துள்ளது.
தொடக்கத்தில் மடிகணினியின்வழி சந்தையை தன் வசப்படுத்தி தனது தரத்தை நிலைநாட்டிக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து சில்லறை வணிகங்கள், iPod, iPhone என தன வணிகப் பொருளை பலதரப்படுத்தி வியாபார விருத்தியடைந்துள்ளதை இதற்கு சான்றாகக் கூறலாம். அப்படியானால், ஒரு வணிக முத்திரையிலான பொருளில் தொடங்கிய வணிகம் அதில் நிலையாக கால் பதித்து மக்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் பெற்றுவிடும் நிலையில் தொடர்ந்து அதே வணிக முத்திரையைப் பயன்படுத்தி மற்ற பொருள்களின் வணிக சந்தைக்குள் மிக எளிதாக நுழைந்துவிட முடியும்.
11.நிலையான உரிமத் தொகையைப் பெறலாம்
பெரும்பாலும் வணிக சந்தையில் பிரபலம் அடைந்த பொருட்களை பல்வேறு நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்கள் பயன்படுத்துவதை பரவலாக காணலாம். உதாரணமாக, வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் (Walt Disney Pictures) என்றதுமே உல்லாசமான பொழுதுபோக்குக்கு பொருத்தமான ஒன்றாக நினைக்கும் போக்கு அனைவருக்கும் இருக்கும்.
சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் என தனக்கென தனியாக வயது வரம்பற்ற பயனிட்டாளர்களை உலக அளவில் வைத்திருக்கும் நிறுவனம் இதுவே. அனைவரும் நன்கு அறிமுகமான இந்த Walt Disney Picturesஐ பல்வேறு வகையில் பயன்படுத்தி அதன் பயனிட்டாளர்களை தங்கள் பக்கம் கவரும் செயல்பாடுகளைப் பல சிறுசிறு நிறுவனகங்கள் மேற்கொள்வதைப் பார்க்கலாம். உதாரணமாக, சாவி கொத்துகளுடன் இணைத்துக் கொள்ளும் key chain மற்றும் இதர பரிசு பொருட்களைச் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் தனியாக இயங்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, தனது வணிக முத்திரையின் உரிமத்தை பரிசு பொருள்கள் செய்யும் நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுப்பதன் மூலம் நிலையான உரிமத் (royalty) தொகையைப் பெறலாம்.
வணிக முத்திரையைப் பயன்படுத்துவதன்வழி பொதுமக்கள் அடையும் நன்மைகள்
- வாணிகப் பொருளை அடையாளங்காண உதவும்
வணிக முத்திரை இருப்பதன்மூலம் பயனிட்டாளர்கள் ஒரு பொருளின் வெளியிட்டாளர் யார் என்பதை எளிதில் அறிந்துகொள்ள உதவுகின்றது. உதாரணமாக, Johnson & Johnson என்பது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் முகம், தோல், தலைமுடி போன்ற பகுதிகளை பராமரிக்கப் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் பொருள்களின் வணிக முத்திரையாகும். இம்முத்திரையின்கீழ் Johnson’s Baby Lotion, Baby Shampoo, head-to-toe wash என ஐந்திற்கும் மேற்பட்ட சருமம் மற்றும் முடி பராமரிப்புப் பொருள்கள் வணிக சந்தையில் கிடைப்பெறுகின்றன. Johnson & Johnson பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி பயன்பெற்ற பயனிட்டாளர்கள் தொடர்ந்து அதன் மற்ற தயாரிப்புப் பொருட்களை அடையாளங்கண்டு வாங்க இவ்வணிக முத்திரை பேருதவியாக இருக்கும். அவ்வாறே ஒரு வணிக முத்திரையிலான அனைத்து பொருட்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்படும்போது பயனிட்டாளர்கள் அவற்றை மிக சுலபமாக அடையாளம் கண்டு விழகவும் வணிக முத்திரை உதவியாக அமைகின்றது.
2. விருப்பத்திற்குரிய பொருளை எளிதில் தேர்ந்தெடுக்க உதவும்
வணிக முத்திரையின் உதவியோடு பயனிட்டாளர்கள் தங்களின் விருப்பமான பொருளை எளிதில் தேர்ந்தெடுக்க முடிகின்றது. அதாவது ஒரு பொருளை வாங்கி திருப்தி அடைந்த பின்னர் மீண்டும் அதன் சேவையைத் தொடர; வாங்கி பயன்படுத்த அப்பொருளின் வணிக முத்திரை மிக மிக அவசியமாகின்றது. எந்தவொரு வணிக முத்திரையும் அற்ற பொருளை மீண்டும் பெருவதில் ஏற்படும் சிக்கல்களை சற்று சிந்தித்துப் பார்த்தால் அதன் இன்றியமையா தேவையினை நன்கு உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாக, முடி உதிர்வதை நிவர்த்தி செய்யும் எண்ணெயை (வணிக முத்திரை இல்லாத) வாங்கி பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதனைப் பயன்படுத்தி முடி உதிர்வது குறைந்துவிட்டால் மீண்டும் அவ்வெண்ணையை எங்கு போய் என்ன சொல்லி வாங்குவது? வணிக முத்திரை இல்லாத நிலையில் அந்த எண்ணெய் புட்டியின் வடிவத்திலேயே;நிறத்திலேயே;பெயரிலேயே போலியான மற்ற பொருட்களை வாங்கி ஏமாந்துப் போவது நிச்சயம். ஆக, நம் பயன்பாட்டிற்கான மிகச் சரியான பொருளை வாங்க வணிக முத்திரை மிக மிக அவசியமாகின்றது.
3. பொருளின் தரம் தொடர்பான நம்பிக்கையை வழுக்கச் செய்கிறது
பெரும்பாலும் பயனிட்டாளர்கள் ஒரு பொருளை வாங்கி பயன்படுத்திவிட்டு மீண்டும் அதன் சேவையை நாடுவது வழக்கம். போட்டி தன்மைமிக்க வியாபாரத் துறையில் ஒரு பொருளுக்கு இருக்கும் மதிப்பு, அதன் தரம் மற்றும் சேவை ஆகிய அம்சங்களே வணிக சந்தையில் அதன் தொடர் நீட்டிப்பை நிர்ணயம் செய்கின்றன. முன்கூறிய மூன்று அம்சங்களை ஒருங்கே அமையப்பெற்ற பொருள் மக்களால் வெகு விரைவில் கவர்திழுக்கப்படுவதோடு அதன் வணிக முத்திரையும் மிக சுலபமாக பிரபலமாகிவிடும். உதாரணமாக, விவேக கைபேசியை எடுத்துக் கொள்வோம். உலக சந்தையில் எத்தனையோ வகை விவேக கைபேசிகள் இருந்தும்கூட Apple முத்திரை கொண்ட விவேக கைப்பேசியே உலக சந்தையை அதிக அளவில் பிரபலமானதாகவும் அதிகம் விற்பனையாவதாகவும் இருக்கின்றது. மற்ற விவேக கைபேசியை ஒப்பிடுகையில் இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட தரத்தை அடிப்படையாகக் கொண்டு பயனிட்டாளர்கள் இம்முத்திரையிலான கைபேசியை வாங்குகிறார்கள். பயனிட்டாளர்களை பொருத்த மட்டில் Apple முத்திரையிலான பொருள்கள் அனைத்துமே தரமானது எனும் உறுதியான நம்பிக்கையை அம்முத்தியின்வழி அதன் நிறுவனம் நிலைநாட்டியுள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.
முடிவாக
வணிக முத்திரை எனப்படுவது வணிகர்களுக்கு தங்களை வணிக சந்தையில் தனித்துக் காட்ட உதவும் அதேவேளை பயனிட்டாளர்களுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருப்பதை ஓரளவு விளங்கிக் கொண்டிருப்போம். நாம் வணிக முத்திரை பதிவை புறக்கணிக்கும் தருணம் நமது போட்டியாளர்களுக்கு விசாலமான வணிக வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தருகிறோம் என்பதை நன்கு உணர வேண்டும். இப்போது அலட்சியம் காட்டும் நாம், நமது பொருளின் அல்லது சேவையின் தரத்தால் ஓரளவு சந்தையில் பிரபலம், நன்பதிப்பு பெற்றுவிடும் நிலையில் வேறு நிறுவனம் இம்முத்திரையைப் பயன்படுத்தி பன்மடங்கு லாபம் ஈட்டுவதை தடுக்க முடியாத இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும்போது இதன் அவசியத்தை அறிய நேரலாம். இப்படி அனுபவங்களின்வழிதான் வணிக முத்திரையின் அவசியத்தைப்பற்றி உணர்வோம் என்றால் நாம் அதற்காக இழக்கபோவது அதிகம்.
பயன்மிக்க இணைய இணைப்புகள் [useful links]
Trade Mark Classes List – http://www.myipo.gov.my/web/guest/cap-kelas
Trade Mark Agents List – http://www.myipo.gov.my/web/guest/cap-senarai
Gazette Trade Mark – http://www.myipo.gov.my/web/guest/cap-warta
மேற்கோள் இணைய பட்டியல்
தேவையானதை தேவையான தருணத்தில் பதிந்துள்ளீர்கள் தோழி. நன்றி.
மிக முக்கியமானதொரு கட்டுரை. விஜயலட்சுமியின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. வாழ்த்துக்கள்