2008-ல் வானொலி அறிவிப்பாளராகத் தொடங்கிய பணியில் 2013 வரை பலதரப்பட்ட அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்தது. அனுபவம் சார்ந்த அவை அனைத்தையும் எழுத்துகளாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் எழுதி வானொலியில் ஒலிபரப்பிய கண்ணாடித்துண்டுகள் என்ற நிகழ்ச்சி எனக்குச் சமூகத்தின் பல முகங்களை அறிமுகம் செய்தது. ‘மலேசியத் தமிழ்ச் சமுதாயம்’ என பாட நூல்களிலும் ஆவணங்களிலும் காட்டப்படும் தோட்டப்புற முகம் தொடங்கி மேட்டுக்குடி முகம் வரை பார்த்துப் பார்த்து சலித்துவிட்ட எனக்கு இந்நாட்டின் இருண்ட பிரதேசங்களில் வாழும் சிறு சிறு குழுவினரையும் அவர்கள் வாழ்வையும் அறிமுகம் செய்து வைத்தது இந்நிகழ்வும் அதற்கான உழைப்பும்தான். சமுதாய ஒற்றுமை, தேச ஒற்றுமை குறித்து பேசுபவர்கள் இந்த சிறு குழுவினர் குறித்து பேசாததும் அவர்கள் தேவை குறித்து அக்கறை காட்டாததும் இவர்களை இந்நாட்டின் குடிகளாக அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் கருதவே இல்லை என்பதற்கான சான்று.
அக்காலகட்டத்தில் இளம் வானொலி அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிகழ்ச்சி என ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ நிகழ்ச்சி, மகளிர் நிகழ்ச்சி, சவால்மிக்க மாணவர்கள் குறித்த நிகழ்ச்சி, சிறுகதை, இசை சொல்லும் கதை, கணினி மற்றும் தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சி, இளைஞர்களுக்கான நிகழ்ச்சி என அவை பல்வகைப்பட்டவையாக இருந்தன. சில காரணங்களால் எனக்கு இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றைக் கொடுக்க வேண்டுமா என யோசித்தார்கள். முடிவாக எழுத்தில் ஆர்வம் உள்ள அதிர்ஷ்டத்தால் மனிதர்களின் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏதாவது உண்மைக்கதைகளை (reality show) நிகழ்ச்சியாக படைக்க முடியுமா எனக் கேள்வியைத் தொடுத்தார்கள் நிர்வாகத்தினர்.
உண்மைச் சம்பவங்களை நிகழ்ச்சியாகப் படைக்கும்போது அதற்கான script மக்கள் மனதில் பதியும் வகையில் இருப்பது அவசியம். பாதிப்படைந்தவர்கள் சொல்வதைவிட பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் எடுத்துச் சொல்வதுதான் கேட்பவர்கள் மனதில் பதியும். ஆக, எழுத்துக்கும் இது தீனிதான் என்ற நம்பிக்கை பிறந்தது.
நிகழ்ச்சிக்குத் தலைப்பு வேண்டுமே! உள்ளடக்கத்தை உணர்த்தும் வகையில் தலைப்பு இருத்தல் அவசியம். சக அறிவிப்பாளர்கள் ஆளாலுக்கு ஒரு தலைப்பை பரிந்துரைத்தார்கள். எந்தத் தலைப்பும் மிகச் சரியாக பொருந்தவில்லை. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்ற முறையில் என் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் தலைப்பிடுவதுபோல் யோசிக்கலானேன். உடனே வந்துவிட்டால் தலைப்புக்கு என்ன மரியாதை.
பிம்பங்கள், மறுபக்கம், கைதியில் டைரி என எழுதிக்கொடுத்தேன். முதல் தலைப்பு என் சிறுகதையின் தலைப்பு. தவறான நம்பிக்கையால் வழிதவறிய பெண்ணின் கதை. அடுத்தது, படப் பெயர்தான். மூன்றாவது கைதிகளைப் பேட்டி எடுக்கலாம் என யோசனை இருந்ததால் வந்தது. ஆனாலும் வருடம் முழுவதும் எப்படி கைதிகளின் பேட்டியை எடுப்பது என்று யோசிக்க வைத்தது. தலைப்புகளில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படும்போது ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. மற்றவர்கள் தலைப்புகளைக் கொடுத்துவிட்டார்கள் .
அவமானத்தை போக்க சட்டென்று காகிதத்தில் கண்ணாடித் துண்டுகள் என எழுதிவிட்டேன். ஏன் எழுதினேன். எதற்கு இந்த தலைப்பு என்றெல்லாம் பெரிய முன்திட்டம் இல்லை. எழுதிய தலைப்பை மேலிடத்தில் கொடுத்ததும் எதிர்பார்த்தது போல் கேள்விகள் வந்தன. பதிலும் கொடுத்தேன். இந்நிகழ்ச்சி ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிரக்கூடிய நிகழ்ச்சி. சில மனவலிகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சி. இதன் வழி அனுபவம் பெற்ற ஒருவரின் கதையிலிருந்து மற்றவர்கள் தங்களில் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த வடுவும் வலியும் மாறினாலும் மறையாது. கண்ணாடி எப்படி உடைந்துவிட்டால் மீண்டும் ஒட்ட முடியாதோ அதேபோலதான் சிலரில் பாதிப்புகள் மறைந்துவிடாது.
கம்பிகளுக்கு உள்ளே
2008-ல் ஆகஸ்டு மாதம் முதல் நிகழ்ச்சி என ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நிகழ்ச்சிக்காகக் கைதிகளைப் பேட்டி எடுக்க காஜாங் சிறைச்சாலைக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். பேட்டிக்கு அனுமதி கொடுத்தார்கள். குறிப்பிட்ட நாளில் அங்கு சென்றோம்.
முதன் முதலாக சிறைச்சாலைக்குச் சென்றேன். பெயரட்டையையும் அனுமதிக் கடிதத்தையும் கொடுத்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டேன். சிறைச்சாலையின் உள்ளே செல்லும் முன், நாங்கள் கொண்டுவந்திருந்த பணப்பை முதல் கைபேசி வரை அனைத்தையும் தயாராக இருக்கும் அலமாரியுள் வைத்துப் பூட்டி சாவியை எடுத்து பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்து, வைத்த பொருள்களைக் குறிப்பிட்டு எழுதிக் கையொப்பமிட்டோம்.
காத்திருக்க வேண்டிய அறைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். நாங்கள் சந்திக்கவேண்டிய கைதியைப் பற்றி எங்களுடன் வந்திருந்த காவல் அதிகாரி கூறிக்கொண்டிருந்தார். அனைத்தையும் குறிப்பெடுத்தேன். அதோடு கைதியுடன் இதுபோன்ற பேட்டியில் கவனிக்கவேண்டியது, கருத்தில் கொள்ளக்கூடியது என பலத்தகவல்களை அந்த அதிகாரி சொல்லிக்கொண்டிருந்தார். கதவு தட்டும் ஓசை கேட்டது. கைதியுடன் இந்திய அதிகாரி ஒருவர் வந்திருந்தார். பேட்டிக்காக கொண்டுவந்திருந்த பதிவு இயந்திரத்தைத் தயார் செய்தேன். உடனே பேட்டியை ஆரம்பிக்காமல் கைதியுடன் கொஞ்சம் பேசினோம்.
43 வயதிருக்கும் அவருக்கு எழும்பும் தோலும் ஆங்காங்கே தழும்புகளும் பாவமாய் மீந்திருந்தது. இவரா கொலை செய்தார்…? மிகவும் பவ்யமாக வணக்கம். எப்படி இருக்கிங்க? என்ன பேட்டி? என சிரித்தவாரே ஆரம்பித்தார். ஆனால் அந்தச் சிரிப்பு பேட்டியின்போது துணைவரவில்லை. ஆர்வக்கோளாரால் அவருக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு என் கேள்விகள் இருந்ததையும் அவரின் கண்கள் சிவக்க ஆரம்பித்ததையும் கவனித்த என்னுடன் வந்திருந்தவர் என் குறிப்புப் புத்தகத்தை வாங்கி ஆங்கிலத்தில் ‘slow down he is getthing angry’ என எழுதினார். அதைப் படித்ததும் அவர் கண்களைக் கவனித்தேன் தூக்கிவாரிப்போட்டது. அன்று முதல், பேட்டியின்போது குறிப்பு புத்தகத்தை பார்ப்பதைக் குறைத்து பேட்டி கொடுப்பவரின் கண்களையும் அவர்களின் புருவத்தையும் கவனிக்கத் தொடங்கினேன். புருவம் மட்டும் இல்லயென்றால் எதிரில் பேசுகின்றவரின் எண்ணங்களை எப்படித்தான் புரிந்து கொள்வதோ!
அந்தக் கைதியின் மகளுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவரது மனைவி அவரின் குடிப்பழக்கத்தால் தனியே சென்றுவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன், நண்பர்களுடன் போதையில் இருந்த நேரம் சீனர் ஒருவரிடம் வாய்ச் சண்டை ஏற்பட்டு மது போத்தலை பாதி உடைத்து ஆயுதமாக்கியுள்ளார். வயிற்றில் குத்தியதால் அந்த சீனர் அங்கேயே மரணமடைந்து விட்டார். குடிக்கு உடனிருந்த நண்பர்களைக் கொலைக்குப் பின் காணவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இவர் சிறையில் இருந்தாக வேண்டும். இரண்டு வயது மகளை உறவினரிடம் விட்டு வந்திருக்கின்றார். முதல் ஆண்டு வரை வந்து பார்த்த உறவினர்கள் சில ஆண்டுகளில் தங்களில் வருகையைக் குறைத்து; தற்போது நிறுத்திவிட்டார்களாம். அவரின் மகளுக்கு இப்போது பதின்ம வயது. மகளும் வந்து பார்க்காதது வலிக்கிறது என்றார்.
பேட்டியை முடித்து காரில் திரும்பிக்கொண்டிருந்த சமயம், உடன் வந்தவர் அறிவுரைக் கொத்துகளை கொடுத்துக்கொண்டிருந்தார். இதை முன்னமே கொடுத்திருந்தால் அந்தக் கைதியில் கண் சிவக்கும் அளவுக்கு நான் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டேன்.
தலை தப்பியதைவிட, கண்ணாடித் துண்டுகள் நிகழ்ச்சிக்காக முதல் பேட்டியே சிறைக் கைதி என்ற மகிழ்ச்சிதான் எனக்கு.
வெற்றிபெற்றவர்களை பேட்டி எடு என்றாலே நடிகர் முதல் அரசியலில் முக்கிய பிரமுகர் என மேல்தட்டு மக்களையே சில சமயங்களில் ஊடகங்கள் வட்டமிடும். மேல்தட்டு பார்வைக்கு வேறென்ன தெரியும். உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, அழுகைகளுக்கும் சாபங்களுக்கும் கையாலாகத்தனத்திற்கும் இடையேதான்.
குப்பைத் தொட்டிக்கு அருகில் மூக்கை பொத்திக்கொண்டே குப்பையைப் போடப்போகும் நமக்கு குப்பைத்தொட்டியில் வாழ்க்கை நடத்துகிறவர்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். கண்ணாடித் துண்டுகள் நிகழ்ச்சியை நான் வெகுமக்கள் மூக்கை மூடும் பிரதேசங்களை நோக்கிதான் குறிவைத்தேன்.
அகற்றப்படும் அவசியமற்ற ஆயுதம்
வெறுமனே இவர்களை உதாசீனம் செய்வது அவ்வளவு எளிதானது. ‘அதுங்க’ என்று அஃறிணையிலேயே அழைப்பது நமக்கு வெகு சுலபமானது. ஆனால் அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்பதைவிட அவர்கள் எதை வெட்டினார்கள், எங்கே ஊசிபோட்டார்கள் என சிரிப்பு யூகங்களை ஆளுக்கு ஆள் வைத்திருக்கிறோம். கண்ணாடித் துண்டுக்காக நான் சந்தித்த திருநங்கை பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டெனத் திரும்பி முதுகைக் காட்ட எனக்குச் சுருக்கென்றது. வெட்டுகளும் தையல் தழும்புகளும் இருந்தன. காட்டிய இடமெல்லாம் காயங்களாக இருந்தன. அதனால்தான் முதுகை முழுக்க துப்பட்டா கொண்டு மூடியிருக்கிறாள் எனப் புரிந்தது.
தனக்கு பெண் தன்மை இருப்பதை அவர் உணர்ந்த பின் வாங்கிய அடிகளை சொல்லிக்கொண்டே இருந்தார்.
“இப்போ 26 வயசு. எனக்குத் தெரியும் நான் ஆம்பளை இல்லைன்னு. ஆன எனக்கு ஆம்பளை மாதிரியே எல்லாம் இருந்தாலும் மனசு என்னமோ நான் பொம்பளைன்னுதான் சொல்லுச்சி. ஸ்கூலுக்கும் அனுப்பல. வாத்தியாரு என்னமோ சொல்லிட்டாருன்னு அப்பா அடியோ அடின்னு அடிச்சி என்னைய ஸ்கூலுக்கு போகவே வேணாம்னுட்டாரு. வீட்லயே இருந்தேன். எல்லோரும் வேலைக்கு போய்டுவாங்க. நான் மட்டும்தான் வீட்டிலேயே இருப்பேன். அப்போ வயசு பத்தோ பனிரெண்டோ இருக்கும். வீட்டு லோரோங்ல் பொண்ணுங்களைப் பார்க்கறப்போ எனக்கும் அவங்களை மாறியே பாவாடையெல்லாம் போடனும்னு தோணுச்சி. பக்கத்து வீட்டுக் கொடியில காயப்போட்டிருந்த பாவாடைய எடுத்து வீட்டுக்கு வந்து போட்டு பார்த்துக்கிட்டேன். அது எப்படியோ எங்க அப்பாக்கும் அண்ணனுக்கும் தெரிஞ்சிடுச்சி. என்னை சாகடிக்கறதுதான் சரின்னு அப்பா வெட்டுக்கத்தியை எடுத்து என்னைய வெட்ட வந்தாரு. என்னோட அண்ணனும் என்னைய ஓடாம புடிச்சிக்கிட்டான். அம்மா கத்தி அழுதும்கூட என்னைய விடல. கத்தி வெட்டு முதுகு பூராவும் விழுந்தது. அங்கிருந்தவங்க வந்து பார்த்ததால தப்பிச்சேன். இல்லைன்னா அப்பவே செத்திருப்பேன். ஆஸ்பத்திரில இருந்தப்ப ஒருத்தரும் வந்து பாக்கல. அம்மாகூட வந்து என்னைய பாக்கல. ஆஸ்பத்திரில எனக்கு ஒரு அக்கா அறிமுகமானாங்க. அவங்க இங்கதான் பிரிக்பீல்டுக்குக் கூட்டுட்டு வந்தாங்க.”
தொடர்ந்து பேசிய அவர் கொஞ்சம் நேரம் மூச்சிரைக்க அமைதியானார். தொடரும்போது கண்கள் கலங்கியிருந்தன.
“எல்லாத்தையும் வெட்டிகிட்டேன். கொஞ்ச நஞ்ச பணமா? எப்படியோ எதையெதையோ செஞ்சு காசு சேர்த்து வெட்டிகிட்டேன். முழு பொம்பளையா வீட்டுக்குப் போனேன். அப்பா செத்து போய்ட்டது அப்பதான் தெரிஞ்சது. வீட்டுல அண்ணனும் அண்ணியும் அம்மாவும் இருந்தாங்க. அண்ணனுக்கு என்னைய அப்பயும் பிடிக்கல. பொம்பளைன்னுகூட பாக்காம என்னைய முடியை புடிச்சி இழுத்து வெளிய தள்ளிட்டான். இப்பவும் அம்மா ஒன்னுமே கேக்கல. எல்லோரும் வேடிக்கை பார்த்தாங்க. ஒருத்திக்கும் என்னோட வலி தெரியல. என்னத்த செய்ய… யாருமே இல்லாம போய்ட்டாங்க. என்னைய மாதிரி இருக்கறவங்களுக்கு எங்கதான் இடமிருக்கு சொல்லுங்க… தோ இப்ப வெளிய சொல்ல முடியாத தொழிலைச் செய்யறேன்… நானா போனேன்? இவங்கதானே அனுப்பினாங்க. இந்தச் சமூகம்தான் என்னை அனுப்புச்சி. நான் குற்றவாளினா இந்தச் சமூகமும் குற்றவாளிதான்.
இன்னொன்னை சொல்ல மறந்துட்டேன். என்னைய யாருன்னு தெரிஞ்சும் ஒருத்தன் வந்து காதலிச்சான். என்கூடவே இருப்பேன்னும் சொன்னான். எனக்கும் அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. என்கிட்ட இருந்த எல்லா காசையும் நல்லா வாங்கித் தின்னான். அப்பறம் என்னைய ச்சீன்னு சொல்லிட்டு போய்ட்டான். இங்க என்னைய மாதிரி உள்ளவங்கள கல்யாணம் செய்துக்கறதா காதலிக்கறதா சொல்லி ஏமாத்தறவங்களும் இருக்காங்க. பணம்தான் வேணும் அவனுங்களுக்கு. நாங்களே இங்கு நாய் பாடுபட்டு சம்பாதிக்கறோம். அதை வலிக்காம வந்து வாங்கிக்கிறானுங்க. ஆனா நான் சொல்றேன் பாருங்க, அவனுக்கு நான் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். எனக்கு இன்னமும் அவன்தான் காதலனா இருக்கான். என்னால அவனை மறக்க முடியல… ”
பேசி முடிந்ததும் புறப்பட்டார். நிகழ்ச்சிக்கு பேச அழைத்ததும் ஒப்புகொண்டு வந்தவருக்கு நன்றி சொல்லி விடை கொடுத்தேன். புறப்படும்போது கூறியது இன்னமும் காதில் கேட்கிறது…
“நாங்களும் மனிஷிங்கதானே. செக்ஸுக்கு மட்டுமா நாங்க இருக்கோம். எங்களுக்கும் குடும்பம், புருஷன் எல்லாம் வேணும்தானே. புள்ளைய பெத்துக்கத்தான் முடியல; எடுத்து தாயாக வளர்க்கவாவது வாய்ப்புக் கொடுங்களேன்.”
அந்த திருநங்கையின் பேட்டி ஒலிபரப்பாகிகொண்டிருக்கும்போது நேயர்கள் பலர் அழைத்து அவர்களின் ஆறுதல்களை பகிர்ந்துகொண்டார்கள். அந்த சூடெல்லாம் அப்போதைக்கு மட்டுமா? என்ற கேள்வி மனதில் இல்லாமலில்லை. மாற்றம் சின்னதாக ஏற்பட்டாலும் நல்லதுதானே என அன்றைய நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் முன் நினைக்கலானேன்.
சேவை வணிகம்
பேட்டியை ஆரம்பிக்கும் முன்பே கண்ணீருடன் அமர்ந்திருந்த பெண் என்னைக் கவர்ந்தார். தொடக்கமாகவே அவரிடம் எனது கேள்விகளை முன் வைத்தேன். அவரும் பேசினார். அழுகைக்கு மத்தியில் பேச்சும் வந்தது.
“என்னோட வீட்டுக்காரு என்னைய விட்டு போய்ட்டாரு. என்னைவிட இன்னொருத்தியைதான் அவருக்குப் புடிச்சிருக்காம். கொஞ்ச நாள் வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தாரு. அப்பறம் சுத்தமா வராமலே போய்ட்டாரு. அவரோட காசையெல்லாம் நல்லா புடுங்கித் தின்னுட்டு அவருக்கு முடியாமப் போனப்போ அவளே அவரை விட்டு போய்ட்டா. என்னாலயும் அவரு மருந்துக்கு எதுவும் சரியா செய்ய முடில. அவரு வேலை செஞ்சப்போ நான் குழந்தைங்களைப் பார்த்துக்கற வேலையை வீட்டுலேயே செய்தேன். அவரு அவகூட போனப்ப ஏதோ அந்த காசு செலவுக்கு இருந்திச்சி. நாலு படிக்கற பிள்ளைங்க. அவரு சீக்கா வீட்டிலேயே இருந்தப்போ யாரும் குழந்தைங்களை பார்த்துக்க அனுப்பல. பிள்ளைங்களுக்கும் ஏதாச்சும் சீக்கு வந்திடும்ன்னு என் காதுபடவே சொன்னாங்க. கொஞ்ச நாள்ல அவரும் செத்துட்டாரு. எங்களுக்கு யாருமே இல்லைங்க. நானும் பிள்ளைங்களும் அனாதையாகிட்டோம். எனக்கு வேற வேலையும் தெரியாது. சாப்பாட்டு கடைகள்ல வேலை செய்யப் போனேன். பிள்ளைங்களையும் கூட்டிகிட்டேன். படிக்க வைக்க காசு இல்ல. என்னோட நிலைமை அப்படி இருந்தது. அப்பதான் புருஷன் செத்தவங்களுக்குக் காசு கிடைக்கும்ன்னு சொன்னாங்க. நானும் பிள்ளைங்க படிப்புக்காவது காசு வேணும்ன்னு போனேன். காசு தறேன் ராத்திரி ஹோட்டலுக்கு வந்திடுன்னு பச்சையா பேசிட்டாங்க. இப்படியா ஒருத்திகிட்ட நடந்துக்கிறது. நானே புருஷன் போய் புள்ளைங்களைப் படிக்க வைக்க பணம் வாங்க வந்தா… என்னைய போய் அந்த ஆளு ஹோட்டலுக்கு வந்து காசை வாங்கிகோன்னு சொல்லிட்டான். எனக்கு என்னமோ மாதிரி ஆச்சி. எனக்குன்னு எதாச்சும் வேலை இருந்தா இப்படி எவனாவது கேட்பானான்னு வேலை தேடினேன்; கிடைக்கல. இன்னமும் அந்த சாப்பாட்டு கடைலதான் நானும் பிள்ளைங்களும் இருக்கோம். ஸ்கூலுக்கு போனாலும் காசு கேட்கறாங்க. நீங்கதான் எப்படியாவது எனக்கு வேலை கிடைக்க எதாச்சும் செய்யனும். பிள்ளைங்கள படிக்க வைக்கவும் உதவி செய்யனும்… ”
அழுகையோடு தொடங்கி அழுகையோடு அவர் பேட்டியை நிறுத்தினார். கொஞ்சம் நேரம் நாங்க அமைதியானோம். அவரின் விசும்பல் சத்தம்தான் இடத்தை நிரப்பியிருந்தது. வழக்கமாகவே தனித்து வாழ்கிறவர் என்றால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக கூறி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். உதவி என்பது அவர்களைப் பொருத்தவரையில் கொடுக்கல் வாங்கல். அப்படி உதவி செய்து பயன்படுத்த நினைப்பவர்கள் யார் யாரென தெரிந்தும் பயம் காரணமாக பெயரை வெளியில் சொல்வதில்லை. அப்படிச் சொல்லி உண்மையைப் பகிரங்கப்படுத்தினாலும், புரிந்துகொள்ளும் தன்மை நம்மிடம் குறைவுதான். மற்ற கதையெல்லாம் போகட்டும். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நாம் மனதார தனித்து வாழும் எத்தனை பேருக்கு உதவியிருக்கிறோம். முதலில் அப்படிப் பட்டவர்களுடன் பேசுகிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.
மாய மான்கள்
நம் நாட்டு உணவங்களில், திரையரங்கு வாசலில், வங்கி, நம்பர் எழுதும் கடை, கோவிலுக்கு அருகில் என மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் கையில் பிளாஸ்டிக் பையுடன் தோளில் பள்ளிப் பையுடன் பாவ முகத்துடன் ஒரு குரல் கேட்கும். வேண்டா வெறுப்பாகவும், இளகிய மனதுடனும் நம்மிடம் இருக்கும் சில்லறைகளை கொடுத்துவிட்டு வழக்கத்திற்குத் திரும்புவோம். சில்லறையைப் பெற்றுகொண்ட அந்தப் பாவ முகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் முடிந்தவரை வசூல் பெற்று சென்றுவிடும். நடப்பது அவ்வளவுதான். ஆனால் உண்மையில் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதையும் தாண்டி சில இருக்கின்றன. எங்களின் ஒலிப்பதிவு கருவியை பிறர் கண்ணில் படாதவாரு வைத்துக்கொண்டு சாப்பாட்டு கடையில் அமர்ந்திருந்தோம். சாப்பாடுக்காக அல்ல அந்த சிறுவனுக்காகக் காத்திருந்தோம். சில்லறைக் காசுகளை வேண்டுமென்றே சாப்பாட்டுத் தட்டுக்கு அருகில் வைத்திருந்தோம். யாரெல்லாம் சில்லறையைப் போடுவார்கள் என அந்தப் பரிதாப முகத்தால் யூகிக்க முடியும்.
நினைத்ததுபோலவே எங்களிடம் வந்து நின்றான் அந்தச் சிறுவன். ஒலிப்பதிவுக் கருவியை தயாராக்கிவிட்டேன்.
“அண்ணே பேனா வாங்கிக்கிறீங்களா அண்ணே, ரெண்டு வெள்ளிதான். நான் ஸ்கூலு படிக்கிறேன். அப்பா இல்ல அம்மாக்கு சீக்கு. ஒரு தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க. நான்தான் மூத்த பையன். இப்படிப் பொருள் வித்துதான் சாமாளிக்கறோம். நீங்க வாங்கினா எனக்கு உதவியா இருக்கும் உதவி செய்யுங்க அண்ணே…”
நான் கொண்டு வந்திருந்த ஒலிப்பதிவு கருவிபோலவே சரியாகச் சொல்லவேண்டியதை சொன்னான். அண்ணன், அக்கா இதுதான் மாறுமே தவிர வேறெதுவும் மாறாது. இவ்வளவையும் கேட்டு பணம் கொடுப்போம் அல்லது முடியாதென்போம். ஆனால் நாங்கள் கேள்வி கேட்டோம்.
“தம்பி உன்னோட பேரு என்ன”
“என் பேரு குமாரு”
“அப்பா பேரு…”
“ம்…”
“அப்பா இருக்காருதானே”
“இல்ல அப்பா செத்துட்டாரு…”
“தெரியும் தம்பி. அப்பா செத்துட்டா பேருமா செத்துடும், அப்பாவுக்குன்னு பேரு இருக்கா இல்லையா…”
“ஓ… அப்பா பேரு சிவராமன்…”
“அம்மா பேரு?”
“ஏன் அண்ணா கேட்கறீங்க…”
“காசு வெணூமா வேணாமா..?”
“அம்மா பேரு பாக்கியம்”
“என்ன படிக்கற”
“நாலாவது”
“எங்க படிக்கற…”
“தமிழ் ஸ்கூலு”
“அதான் தம்பி ஸ்கூலுக்குன்னு பேரு இல்லையா..?”
“ஞாபகம் இல்ல…”
“நாலு வருசமா படிக்கற… ஸ்கூல் பேரை மறந்துட்டயா..?”
“ம்…”
“சரி வீட்டுல போன் இருக்கா…”
“இருக்கு…”
“நம்பர் கொடு”
ஆச்சரியமாக இருந்தது. அந்த மாணவன் கொடுத்தது கைபேசி எண். இது யாருடைய கைபேசி என கேட்டோம்.
“என்னோடதான் அம்மா வாங்கி கொடுத்தாங்க…”
“சரி …ஸ்கூலு டீச்சர் நம்பர் இருக்கா…”
“இல்ல… நம்பரு இல்ல… அம்மாவ கூப்பிடத்தான் நம்பரு இருக்கு”
கேள்விகள் அவனை உளரச் செய்ததைப் புரிந்து எங்களின் எண்களைக் கொடுத்து ஸ்கூலு சம்பந்தமா ஏதும் உதவி வேணும்ன்னா கூப்பிடச் சொல்லி அனுப்பினோம். இதுவரை நடந்ததெல்லாம் உங்களுக்கும் நடந்திருக்கலாம். இனிதான் முழு விபரமும் இருக்கிறது. இப்படியே இரண்டு வாரங்கள் தேடி அலைந்ததில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வேன் வந்து நிற்கும். அதிலிருந்து சில சிறுவர்கள் தோளில் பள்ளிப் பையுடன் கையில் பிளாஸ்டிக் பொருட்களுடன் இறங்குவார்கள். இரவு அதேபோல வேன் வந்து நிற்கவும் இறங்கியவர்கள் வரிசையாக ஏறுவார்கள். உண்மையில் இவர்கள் சொல்லும் கதையெல்லாம் இவர்கள் மனனம் செய்த கதைகள்தான். இது ஒரு வகை வியாபாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அனாதைப் பிள்ளைகளை அல்லது பெற்றோருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பின்னர் பிள்ளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை வியாபாரம்தான் இது. வெறுமனே சில்லறையைப் போடுவதாலும் உதாசீனம் செய்வதாலும் இதனைத் தவிர்க்க முடியாது. பேசவேண்டும். உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். முடிந்தவரை சிக்கியிருப்பவர்களை மீட்டெடுக்க வேண்டும்.
வாசனையுள்ள அறைகள்
பாலியல் தொழிலாளியுடன் நடந்த பேட்டி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தது. வட்டமேஜையில் பேசிக்கொண்டிருக்கையில் தூரத்தில் சிறுமியுடன் நடந்துபோகும் பெண்ணைக் காட்டி “தோ அவதான் என்னோட மவ… பாருங்க தெரியாத மாதிரியே போறத… தோ இங்க படுத்து கிடைச்ச பணத்துலதான் அவளை வளர்த்தேன். இப்ப என்னமோ தெரியாத மாதிரியே போறா பாருங்க. அவ புருசனையே இங்க பல தடவை பார்த்திருக்கேன். சொன்னாக் கேப்பாளா… என்னமோ நான்தான் தப்பு பண்ணிட்டு இருக்கற மாதிரியும் நாய் பீய மிதிச்ச மாதிரியும் மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு போறா…”
பாலியல் தொழிலாளியைப் பேட்டி காண பிரிக்பீல்ட் சிவப்பு விளக்கு பகுதிக்குச் சென்றிருந்தோம். வாடிக்கையாளர்களையும் வேடிக்கையாளர்களையும் சரியாக இனம் கண்டு கொள்கிறார்கள் அங்குக் காவலிருப்பவர்கள். வேடிக்கையாளர்களை சில எல்லைக்குப் பின் அனுமதிப்பதில்லை. கட்டணத்தைச் சொல்லி விரட்டிவிடுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் எங்கும் சென்று வர அனுமதியுண்டு. ஆனால் பெண்கள் இருக்கும் அறைக்குள் நுழைவதற்கு மட்டும் கட்டணத்தை முழுமையாகக் கட்டியிருக்க வேண்டும். நீண்ட பாதையில் வரிசையாய் கதவுகள் இருந்தன. ஒவ்வொரு கதவருகிலும் ஒருத்தி நின்றுகொண்டிருப்பாள். அரைகுறை ஆடையில் அலங்காரிக்கப்பட்ட அழகிகள் அவர்கள். அவ்வழியே கடக்கும்போது அழைத்தார்கள். எங்கள் சட்டையைப் பிடித்து இழுத்தார்கள். சிலரின் கால்சட்டையைகூட விடாப்பிடியாய் பிடித்து சாதித்துக்கொள்கிறார்கள். வாசனையால் சூழ்ந்திருக்கும் அந்த பாதை. எல்லா மொழியிலும் கூப்பிடுவார்கள். எல்லா வயதிலும் எல்லா அழகிலும் நின்றிருப்பார்கள். அவர்களுக்கென தனித்தனிக் கட்டணம் உண்டு. காவலாளியிடம் பணத்தைக் கொடுக்கவேண்டும். அவன், பணம் வாங்கியதும் தன்னிடம் இருக்கும் குறிப்புப் புத்தகத்தில் எதையோ குறித்துக் கொள்வான்.
கற்பனைக்கு எட்டாத வகையில் அவர்களின் உருவமும் பேச்சும் இருந்தது. காரணம் தெரியாமல் காவலாளிகள் எங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். வாசல்களில் நின்றிருந்தவர்களும் எங்களை ஒருமாதிரியே பார்க்க ஆரம்பித்தார்கள். விபரீதம் என மனதில் பட, சட்டென அருகில் இருந்த அறை பெண்ணின் கட்டணத்தை விசாரித்தோம். பணம் செலுத்தி உள்ளே நுழைந்தோம்.
வெளியில் இருந்த வாசனைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது நாற்றம். சின்ன அறை. கீழே மெத்தை தலையணை இரண்டு. துணி மாட்டிவிட சுவரில் நான்கு ஆணிகள். மெத்தைக்கு அருகில் மருந்து பாட்டில்கள், பௌடர் டின் ஒன்று. அருகிலேயே கை கால் கழுவ குழாய். எதிர்பார்க்காத மாதிரி கழிவறை. சட்டென அந்தப் பெண் ஆடைகளைக் கழற்ற ஆரம்பித்தாள். எனது தோள் பையில் இருக்கும் ஒலிப்பதிவு கருவி முன்னமே தயாராக இருந்ததால் நான் அப்போது என்ன பேசினாலும் பதிவு செய்துவிடும். கொஞ்சம் சத்தம் கேட்டாலும் சக உத்தம நண்பர்கள் புரிந்தது போலவும் தெரிந்தது போலவும் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு பயந்தே அந்த பெண்ணிடம் கைபேசி எண்ணை வாங்கினேன். சும்மா ஒன்றும் வாங்கவில்லை. ஒருநாள் முழுக்க உடனிருக்க வேண்டும் என்றும் ஏஜண்டுக்கு தெரிஞ்சா காசுகூட வரும் அதனால் இது தனிப்பட்ட வியாபாரம் போல பேசி எண்ணை வாங்கினேன். வரும் ஞாயிறு தயாரா இருந்து விடுவதாகவும் நான் கொடுத்த எண்ணுக்குத் தொடர்புகொண்டதும், வந்து கூட்டிப்போகவும் சொன்னாள். மூச்சிரைக்க வெளியில் வந்தேன்.
சரியான முறையில் பாதுகாப்பு இல்லாமல் இதில் ஈடுபட முடியாது என்று அந்த சம்பவங்கள் காட்டின. மறுநாள் நிருபர் மற்றும் இரண்டு போலிஸ்காரர்களுடன் பேட்டிக்கு வேறு இடம் தேடிச் சென்றிருந்தோம். வீட்டு உடையிலேயே எல்லோரும் வந்திருந்தோம்.
பேசவேண்டிய பெண்ணை போலிஸ்காரர் சர்வசாதாரணமாகக் கூப்பிட்டார். திடீரென்று அதட்டல் குரலில் திகைத்தவர் வந்து எங்களுடன் அமர்ந்துகொண்டாள். ‘இவங்க கேட்கறதுக்குப் பதில் சொல்லிட்டு போ’ என்றதும் அந்த பெண் ஒரு மாதிரியாகதான் பார்த்தாள். இன்னொரு போலிஸ்காரர் தன்னிடம் இருந்த பெரிய சிகரெட் பெட்டியைக் கொடுத்ததும் அவளின் முகம் மகிழ்ச்சியில் மாறியது; பேச்சுத் தொடங்கியது.
“பொறந்தது ஜொகூர்ல. பதினைஞ்சி வயசுல ஒருத்தனை காதலிச்சி வீட்டுல தெரிஞ்சி அடிச்சாங்க. அப்பறம் அவன்கூட ஓடி வந்துட்டேன். அப்பதான் கோலாலம்பூருக்கு முதல் தடவையா வரோம். இங்க ஓட்டல்ல மூணு நாள் தங்கினோம். வந்த அன்னிக்கே எனக்கும் அவனுக்கும் எல்லாம் முடிஞ்சி போச்சி. ஓட்டல்ல இருந்த மூணு நாளும் சாப்பாட்டுக்கு மாட்டும்தான் வெளிய போய்ட்டு வருவோம். மத்தபடி ரூம்லயேதான் இருந்தோம். அப்பறம் எங்கயோ வேலை இருக்கு அங்கேயே வீடும் பார்த்திருக்கறதா சொல்லி என்னைய கூட்டிட்டு போனான். யாரோட வீட்டுக்கோ கூட்டிட்டுப் போனான். சீன தவுக்கதான் முதலாளின்னு சொல்லி என்னையக் காட்டினான். நான் முதலாளியாச்சேன்னு சிரிச்சேன். அதுவரைக்கும் அவன் என்னை சீனன்கிட்ட வித்துட்டது தெரியாது.
என்னைய விட்டுட்டு அவன் கிளம்பும்போதுதான் சந்தேகம் வந்து அவன் பின்னாலயே போனேன். சீனன் வந்து அறைஞ்சான் பாருங்க ஒரு அறை. அப்படியே பெங்சான் ஆகிட்டேன். ஒன்னும் தெரியல. மயக்கமாகிட்டேன். எழுந்து பார்த்தா ஒடம்புல ஒட்டு துணிகூட இல்லாமதான் கட்டில்ல படுத்திருக்கேன். அப்பயும் மயக்கம் போகல. கைல ஊசி எதையோ ஏத்திட்டான்போல. எத்தனை நாளா அங்க இருந்தேன்னு தெரியல. என்னோட வீடியோவ என்கிட்டயே காட்டறான் அந்த சீன தவுக்க. காதலிச்சவன், இந்த சீன தவுக்க, அப்பறம் வேற எவன் எனவோ என் கூட இருக்கான் அந்த வீடியோல. ஒத்துக்கலைன்னா வீட்டுக்கு வீடியோவை அனுப்பிடுவேன்னு பயமூட்டுனான். கட்டு கட்டா பத்து வெள்ளி தாளு காசு கொடுத்து வச்சிக்கோ… இன்னும் நிறைய இருக்குன்னான்… எப்படி ஒத்துகிட்டேன்னு தெரியல… ஆனா ஒன்னு சும்மா சொல்லக்கூடாது. சீன தவுக்க நல்லா பார்த்துகிட்டான். வாரத்துக்கு ஒரு தடவை செக்கப் போவேன். கேக்கறப்ப காசு கொடுப்பான். என்ன! எல்லாம் கொஞ்ச நாளுதான். வயசாக வயசாக எல்லாம் மாறிப்போச்சி. அப்பறம் மாசமாயிட்டேன். எவன் அப்பான்னு எனக்கு தெரியாதா சொல்லுங்க. கூடவே ஒருத்தன் இருந்தான். சரி இனி குடும்பம் பிள்ளைன்னு ஆகலாம்ன்னு பெத்துகிட்டேன். குழந்தை பொறந்ததும் அத்த நாய் எங்கயோ ஓடிப்போச்சி. இன்னவரை என் கைல மாட்ட மாட்டுது. வேற என்ன பண்றது நானே திரும்ப இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். எவன் எவனோ வருவான் போவான். ஸ்கூலு பிள்ளைங்ககூட வந்து நிக்குங்க. விரட்டி அடிச்சுடுவேன். ஒன்னுமே மொளைச்சிருக்காது. பொம்பளை சுகம் கேக்குது பாருங்க. வெள்ளைக்காரன் தாங்க பெஸ்ட்டு. வருவான்… ஒருவாரம் ஓட்டலுக்குக் கூட்டிட்டு போவான். மொத்தமா ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்திடுவான். ஓட்டல் காசு, சாப்பாடு, தண்ணி எல்லாம் அவன் காசுதான். இந்த தமிழனுங்க வந்து கெஞ்சுவானுங்க பாரு… கேவலமா இருக்கும்… போனா போதுன்னு ஒத்துகிட்டா இம்சை படுத்திடுவானுங்க…”
அவர் குரலில் வறட்சி இருந்தது. நாங்கள் இன்னும் சில கேள்விகள் கேட்டு விடைபெற்றோம்.
கண்ணாடித்துண்டுகள்
இன்று நினைக்கும்போது கண்ணாடித் துண்டுகள் அவர்களல்ல, நாம்தான் என எண்ணத் தோன்றுகிறது. சிறுபான்மையினரான நாம் பிறரால் ஒடுக்கப்படுவதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், ஒழுக்கம், சமூக மரியாதை என்ற பெயரில் நாம் நமக்கும் கீழுள்ள சிறு சிறு குழுவினரை ஒடுக்கவும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும் தயாராக இருக்கிறோம். நமது சமூக நிலையை எப்போதும் உயரத்தில் வைத்திருக்க நமக்கு சில அடிமைகளும், பலவீனமானவர்களும் எப்போதும் தேவைப்படுகிறார்கள். நாம் மிக எளிதாக சமூகத்தின் பொதுபுத்தியில் சில பொதுவிதிகளை அமைத்து, அதற்குள் அடங்காதவர்களை ஒடுக்குகிறோம்.
நாட்டில் கலை, இலக்கியம் குறித்துப் பேசும் எவ்வகை படைப்பாளர்களும் இத்தகைய தரப்பை முன் வைத்து சிந்திக்கக்கூடத் தயார் இல்லை. மலேசியத் தமிழ் இலக்கியம் தொடங்கி சினிமா வரையிலான தேக்கத்திற்கு எப்போதைக்குமான மேட்டுக்குடி பார்வையே காரணியாக உள்ளது. சதா ஒப்பனைகள் மூலம் நாம் நமது சமூகத்தில் தேங்கியுள்ள இருண்ட பிரதேசங்களை மறக்கவும் மறைக்கவும் நினைக்கிறோம். ஆனால் அவை உங்கள் கண்ணாடிகளில் வெவ்வேறு நேரங்களில் ஒரு திரைப்படமாக ஒளியேறிக்கொண்டே இருக்கும். காரணம், இருட்டில் இருக்கும் அவர்களும் வெளிச்சத்தில் உள்ள நமக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.
பல்வேறு காரணிகளால் நாம் அடங்கியிருக்கிறோம். நமக்குள் அவ்வப்போது வெளிவர துடிக்கும் மிருகத்தை அடக்கி வைக்கிறோம். அல்லது யார் கண்ணிலும் படாமல் அலைய விடுகிறோம். மற்றபடி, மனிதன் இன்னமும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலங்குதானே.
தயாஜியின் கட்டுரை வாசகர்களை பெரிதும் பாதிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. கட்டுரையை வாசிக்கும் போதே மனதுக்குள் இறுக்கமும் ஒருவித பயமும் ஏற்படுகின்றது. சாருவின் பிரத்தியேக வரிகளில் ஒன்று, ” நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்”. அதையே எனக்கும் கேட்க தோன்றுகின்றது. கண்ணாடித் துண்டுகள் நிகழ்ச்சிக்காக தயாஜி எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் சில எடுத்துக்காட்டுதலிலேயே புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு நல்ல நிகழ்ச்சி அறிவிப்பாளரை வானொலி இழந்திருக்கிறது. தொடர்ந்து நல்ல கட்டுரைகளைப் படைக்க தயாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்