சில ஆண்டுகளாக மலேசிய தமிழ் இலக்கியத்தில் நீடித்து வரும் நாவல் வரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களின் ‘செலாஞ்சார் அம்பாட்’. அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் தொன்னூறு விழுக்காடு மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. செலாஞ்சார் அம்பாட் என்னும் ஃபெல்டா நிலப்பகுதியில், போக்கிடம் அற்று ஒதுங்கிய தொழிலாளர் கும்பல் ஒன்று முதலாளித்துவ எதேச்சதிகாரத்தால் சில ஆண்டுகளுக்குக் கொத்தடிமை ஆக்கப்பட்ட துயர சம்பவம் சுதந்திர மலேசிய மண்ணில் நிகழ்ந்தது என்னும் பதிவை இந்நாவல் அழுத்தமாக முன்வைக்கிறது.
ஆயினும் செலாஞ்சார் அம்பாட் முற்றிலும் ஒரு வரலாற்று நாவல் என்று கொள்ள முடியாது. வரலாற்று நாவலுக்குறிய துல்லியமான தகவல்களோ, ஆவண ஆதாரங்களோ இதில் இல்லை (கடிதங்கள் போதுமானவை அல்ல) அதோடு காலம் குறித்த தகவலிலும் மயக்கம் உள்ளது. நாவலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் செலாஞ்சார் கொத்தடிமை சம்பவம் 1969 முதல் 1972 வரை நடந்த சம்பவம் அல்ல என்று தோன்றுகிறது. காரணம், நாவலின் இறுதியில் இணைக்கப்பட்டிருக்கும் (பாகம் 21) கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 1981 முன்னைய ஆண்டோடு முரண்படுகிறது. இது கவனப் பிழையா, அச்சுப் பிழையா என்று தெரியவில்லை.
ஆகவே, இந்நாவல், சமகால உண்மைச் சம்பவம் ஒன்றை தளமாக கொண்டு கட்டி எழுப்பப்பட்ட சமுதாய புனைவாகவே அமைந்திருக்கின்றது. ஆயினும் செலாஞ்சார் அம்பாட்டை வாசலாக கொண்டு இந்நாட்டு அரசியல் பொருளாதார மாற்றங்களின் வரலாற்றை உரையாட நிரம்பவே இடம் உள்ளது. இந்நாட்டு வரலாற்றை குறிப்பக தென்னிந்திய தோட்ட தொழிலாளர் வரலாற்றை மீட்டுணர இந்நாவல் பெரிதும் துணை புரிகிறது.
இந்நாவலில் ஆசிரியர், புதுமையான எழுத்து நடையையோ உத்தி முறைகளையோ கையாளவில்லை. மலேசிய வாசக பரப்பில் நன்கு பழக்கப்பட்ட எழுத்து நடையையும் கதை உத்திகளையுமே கொண்டு கதையை நகர்த்தி செல்கின்றார். ஆங்காங்கே பின்நகர்வு உத்தி மூலம் தோட்ட புற வாழ்க்கையின் தன்மைகளையும் சிவப்பு அடையாள அட்டை போராட்டத்தையும் காட்டியுள்ளார். அதே போன்று மிக எளிய சாமான்னிய மக்களின் மொழியை கதை நெடுகிலும் பயன்படுத்தி எதார்த்த வாழ்க்கையை நாவலுக்குள் கொண்டு வருகிறார். ஒரு நல்ல நாவல் தான்பேசும் மக்களின், அக்காலகட்ட வாழ்க்கை முறைகளை மிகத்தெளிவாக வரைந்துகாட்டக்கூடியதாகவும், பசப்புகளோ, மிகைகளோ இன்றியும் அமைந்திருக்கும். அவ்வகையில் ‘செலாஞார் அம்பாட்’ ஒரு நல்ல நாவலாக அமைந்திருக்கிறது.
தோட்ட புற வாழ்க்கையின் அசலான அனுபவங்கள் பலவற்றை கோ.புண்ணியவான் இந்நாவலில் பதிவு செய்துள்ளார். செறிவான விபரங்களுடன் கதைக் காட்சிகள் நகர்த்தப்ப்டுகின்றன. முனியனின் காட்டுப்பன்றி வேட்டையின் காட்சிகளை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம்.
அதே போன்று, மென்மையான மனம் கொண்டோர் கதறி அழும்படியான பல சூழல்களை நூலாசிரியர் விளக்கி விவரமாக எழுதியுள்ளார். குறிப்பாக முனியம்மாவுடன் அவள் மகன் தாமுவும் படும் பாடுகள் பலரை உழுக்கி இருக்கும் என்றே நம்புகிறேன்.. “நீ ஒருத்தந்தானய்யா இருந்த, ஒன்னையும் எலந்திட்டேனையா!” என்ற முனியம்மாவின் அலறல் பல வாசகர்களின் காதில் நீண்ட நாட்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆயினும் ஒரு நாவலின் உச்ச நோக்கம் மனித மனங்களின் எளிய உணர்வுகளை கிளரி விடுவதோடு நின்று விடக்கூடாது.
அடுத்து, நாவலில் காணப்படும் சில பின்னடைவுகள் குறித்தும் கவனம் கொள்வது அவசியமாகிறது. முதன்மையாக, ஆங்காங்கே ஆசிரியர், முன்வைக்கும் கருத்து தெறிப்புகளும், கூடுதல் வர்ணனைகளும் கதை ஓட்டத்தை கொஞ்சம் மந்தப்படுத்துவதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். படைப்பாளி வலிந்து, ஒடுக்கப்பட்டோரின் குரலாக தன்னை முன்னிருத்தும் முயற்சியாகவே இது அமைந்துவிடுகிறது. கதை சொல்லி தன் மன உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஆங்காங்கே தலை நீட்டி விடுவது தெரிகிறது. கதையின் பின்பகுதியில் முன்னைய வேகம் குறைவதையும் காணமுடிகிறது.
தொடர்ந்து செலாஞ்சார் அம்பாட் நாவலின் பின்னனியை தெளிவாக புரிந்து கொள்வதற்கு 1969-க்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் பொருளாதார மாற்றங்களை வாசகர்கள் ஓரளவு தெளிந்திருப்பது மிக அவசியம். செலாஞ்சார் அம்பாட் என்னும் கொத்தடிமை சம்பவம், ஒர் அபலை தோட்டத்தொழிலாளியின் வாழ்க்கையில் நடந்த அவல நிகழ்வாக சுறுங்கிவிடாமல், அது உழைக்கும் வர்க்கம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட வரலாற்று சாட்சியாக, இருக்க இந்த புரிதல் மிக அவசியமாகும்.
மலேசிய அரசாங்கம் மே 13 கலவரத்திற்கு பிறகு தனது அரசியல் பொருளாதார கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் முன்னெடுக்க துவங்கியது. அவற்றில் அரசியல் அடிப்படையில் குடியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்ட நெருகுதல்கள் முக்கியமானவை. ஆங்கிலேய ஆட்சியின் போதும் நாடு சுதந்திரம் பெற்ற போதும் குடியுரிமை கொள்கைகளில் இருந்த தளர்வுகள் மெல்ல அகற்றப்பட்டன. குடியுரிமை உள்ள மக்கள், குடியுரிமை அற்ற மக்கள், நிரந்தர குடியேற்றவாசிகள் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில் நிரந்தர குடியேற்ற வாசிகள் சிவப்பு அடையாள அட்டை கொண்ட இரண்டும் கெட்டான் குடிமக்களாக உருவானார்கள். நீல அடையாள அட்டையை கொண்டிருப்போர் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற தேவைகளை தங்கு தடை இன்றி பெற்ற சூழலில் சிவப்பு அடையாள அட்டை கொண்ட மக்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கடிதங்களின் வழியும் வேலை பெர்மிட் போன்ற இன்ன பிற கட்டுப்பாடுகளின் வழியும் ஜீவனம் நடத்த வேண்டிய நிலை உருவானது.
தென் இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் தங்கள் தோட்டங்களில் உழைக்க கொண்டுவரப்பட்ட போது அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வேலை உறுதியாக முடிவு செய்யப்பட்டு விட்டதால் ஆவணங்கள் குறித்த கவலையே அற்று அவர்கள் வாழ முடிந்தது. ஆனால் சுதந்திர மலேசியாவில் தோட்டங்கள் துண்டாட பட்ட நிலையில் தோட்டத் தொழில் நிரந்தரமானது அல்ல என்னும் உண்மை வெளிப்பட தொடங்கியது. தோட்டங்களை விட்டு வெளியேறி பிற முதலாளிகளிடம் மற்ற வேலைகள் செய்ய தகுந்த ஆவணங்கள் முதன்மை தேவையாக மாறின. அவற்றில் மிக முக்கியமானது நீல அடையாள அட்டை. சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் முதலாளிகளின் பரிந்துரையின் பேரில் வேலை பெர்மிட் பெற வேண்டியது கட்டாயம் ஆனது.
ஆரம்ப காலத்தில் சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் சுலபத்தில் நீலத்திற்கு மாற்றிக் கொள்ள முடிந்தது. கிராம தலைவரின் உறுதிக்கடிதம், ஒரு அரசாங்க உயர் அதிகாரின் கோரிக்கை போன்றவை மூலம் சிவப்பு அடையாள அட்டைக்காரர்கள் நீல அடையாள அட்டை பெற முடிந்தது. ஆனால் 1970-ஆம் ஆண்டுகளில் இருந்து சிவப்பு அடையாள அட்டையை நீல அடையாள அட்டைக்கு மாற்றுவது மிக நீண்ட போராட்டமாக மாறியது. ‘லிட்டல் நெப்போலியன்ஸ்களாக’ விளங்கும் அரசாங்க அதிகாரிகளின் கொட்டம் ஓங்கி ஒலிக்க தொடங்கியபோது படிப்பறிவற்ற சிறுபான்மை கூலி தொழிலாளிகளின் குரல் மங்கி ஒடுங்கிப் போனது.
அடுத்து பொருளாதார அடிப்படையில் துன் ரசாக் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஃபெல்டா நில மறுகுடியேற்ற திட்டம் இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டிருந்தது, முதலாவது விவசாய நிலங்களை அதிகரித்து தனி நபர் மற்றும் நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவது. இரண்டாவது, நாட்டின் உட்புற பகுதிகளில் உள்ள காடுகளை விவசாய நிலங்களாக மாற்றுவதன் வழி கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்குவது. அதே சமயம் இத்திட்டத்தின் வழி நிரந்தர பொருளாதார மூலம் அற்று பின்னடைந்திருக்கும் மலாய்க்காரர்களை நில முதலாளிகளாக மாற்றுவதும் அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
செலாஞ்சார் அம்பாட் நாவலும் அதன் கதைக் களமும் மேற்கண்ட அரசியல் பொருளாதார பின்புலத்திலேயே இயங்கக்கூடியதாகும். ஒரு தோட்டம் துண்டாடப்பட்டு தொழிலாளிகள், முதலாளிகளாலும் தொழிற்சங்கத்தாலும் கைவிடப்பட்டு சிவப்பு அடையாள அட்டையுடன் வீதியில் நிற்கின்றனர். போக்கிடம் அற்ற அவர்களின் அப்போதைய வேண்டுதல் இருக்க இடமும் அடுத்த வேலை ஆக்கித் தின்ன பணமும்தான். அதை கொடுக்க யாரும் முன்வராத நிலையில் எங்கிருந்தோ வரும் “வேலை வாய்ப்பை” அவர்கள் மறு கேள்வி இன்றி ஏற்றுக் கொள்கின்றனர். உள்ளூர முனியம்மாவுக்கும் மற்ற சிலருக்கும் தோன்றும் சந்தேகங்கள் அர்த்தமற்று போகின்றன. ஆனால் தானே தேடி வந்த அந்த “வேலை வாய்ப்பு” அவர்களின் வாழ்க்கையில் நரகமாக மாறும் என்பதை அவர்கள் அறியாமல் போகின்றனர்.
அடுத்து, தோட்டத்தை விட்டு செம்பனைக்காட்டுக்குள் சில அடியாட்களின் பிடியில் மாட்டிக் கொள்ளும் அந்த நாற்பது பேரின் நிலை மிகவும் உணர்வு பூர்வமாக விவரிக்கப்படுகிறது. தன்முனைப்போ துணிச்சலோ அற்ற அந்த மக்களின் நடுவே முனியம்மா மட்டுமே போராட்ட உணர்வு மழுங்கி விடாமல் இருக்கிறாள். அதற்கு நிறையவே விலையும் கொடுக்கிறாள். குறிப்பாக அந்த மக்கள் கூட்டத்தில் பெண்களுக்கு இருக்கும் உணர்வு பூர்வமான கொந்தளிப்பு ஆண்களிடம் இல்லை ( ராமையா நீக்கலாக) அவர்கள் வழக்கம் போல சாராய போதையில் மூழ்கி தங்கள் இயலாமைகளை மறைத்துக் கொள்கிறார்கள். மூக்கன் போன்ற சிலர் திடீர் என்று வீராவேசம் பேசுவதும் பிறகு அற்ப உணர்வுகளில் மூழ்கி தன்நிலை மறப்பதுமாக இருக்கிறார்கள். மூன்று அடியாட்களின் கட்டுப்பாட்டில் நாற்பது பேர் அடிமைகளாக இருக்கின்றனர். அந்த செம்பனைக்காடு அவர்களுக்கு திறந்தவெளி சிறையாக இருக்கிறது. ராமையா தப்பிக்க முயன்று தோல்வி கண்டு கடுமையாக தாக்கப்படுகிறான். ஆயினும் தன் உயிரை பணயம் வைத்து முனியம்மா திட்டம் வகுத்து தப்பிக்கிறாள்.
தொடர்ந்து, செம்பனைக் காட்டில் மாட்டிக் கொண்ட மக்களின் துயரங்களின் உச்சமாக ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. வேலாயி மணி என்கிற சீனமுதலாளியின் கையாளால் வன்புணர்சிக்கு ஆளாகிறாள். அவள் தனக்கு நேர்ந்த அவலத்தை எதிர்க்க முடியாமல் தனக்குள் போட்டு மூடிக் கொள்கிறாள். ஆனால் இன்னொரு கோணத்தில், தோட்ட வாழ்க்கையின் போது, முனியம்மாள் தோட்ட கிராணியால் சல்லாபத்திற்கு அழைக்கப்பட்ட சம்பவமும் குறிப்பிடப்படுகிறது. முனியம்மாள் கிராணியின் ஆசைக்கு இணங்கமறுத்து விடுகிறாள். இங்கு நாம் கவனப்படுத்த வேண்டியது, பொதுவாக பெண்கள், எல்லா தரப்பு அதிகாரங்களிடமிருந்தும் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளேயாகும். மேலும் கூறுவதென்றால் மணி போன்ற முரட்டு கயவர்களைவிட அதிகாரத்தின் துணையுடன் தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முனையும் கங்காணி மரியதாஸ், கிராணி போன்ற பச்சோந்திகள் மிகவும் ஆபத்தானவர்கள்.
கதை நெடுகிலும் அந்த காடும் தோட்டமும் மருட்டலானவையாகவே இருக்கின்றன. அந்த மூன்று அடியாட்களின் கண்காணிப்பும் ஒரு ஜாகாவின் காவலும் நம்மை அந்த மக்களின் நிலை கண்டு மனமிரங்க வைக்கிறது.. ஆனால் அந்த மன ஓட்டம் கதை முடிவில் கலைந்துபோய்விடுவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த நாற்பது பேரும் அடைபட்டு கிடந்தது அடர்ந்த காட்டுக்கு நடுவிலான வனச்சிறையிலல்ல மாறாக முனைப்பும் நம்பிக்கையும் அற்ற தங்களின் மனச்சிறையில்தான் என்பது நிருபர் ராஜனின் பேச்சில் தெளிவாக புரிகிறது.. ராஜன் “ஒங்கல பூச்சாண்டி காட்டி வச்சிருக்கானுங்க, நீங்கல்லாம் நெனச்சிருந்தா அந்த மூனு பேர அடிச்சி போட்டு போயிருக்க முடியும்”, ”இங்க வர்றது பெரிய விஷயம் இல்ல. ஒங்கல அடிச்சு ஒதச்சி பயங்காட்டுனதால தப்பிச்சு போக முடியாதுன்னு நீங்களே முடிவு பன்னிட்டிங்க” என்று ஆதங்கப்படுகிறார். அவர் சொன்னது போன்றே மிக சாமர்த்தியமாக அந்த காட்டுக்குள் அவர் சென்று வருகிறார். ஆகவே, அந்த காடும் காவலும் வெறும் நூல் வேலிதான் என்பதும், அடிமைத்தனத்திற்கு அச்சமும் அடிமைச் சிறுமதியுமே காரணம் என்கிற உண்மையுமே நாவலின் முடிவில் மிஞ்சுகிறது . அதன் வழி செலாஞர் அம்பாட் கொத்தடிமை கொடுமை குறித்த முழு சித்திரமும் கிடைத்து விடுகிறது. அச்சமே அடிமைகளின் பொதுத்தன்மை என்பது மீண்டும் உறுதியாகின்றது.
தங்களது வாழ்க்கை சிக்கலாகிப்போனதற்கு சிவப்பு அடையாள அட்டையை முதன்மை காரணமாக நம்பும் மக்களின் சிந்தனையை மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியமாகிறது. காரணம் சிவப்பு அடையாள அட்டை பிரச்சனை இந்தியர்களுக்கு மட்டுமே உரியதன்று. இந்நாட்டு சீனர்களிலும் சிவப்பு அடையாள அட்டையோடு வாழ்பவர்கள் இருந்தார்கள். இப்போதும் உள்ளனர். ஆனால் அவர்கள் சிவப்பு அடையாள அடையின் காரணமாக அரசியல் ரீதியில் மட்டுமே பாதிப்படைந்து உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்களின் வளர்ச்சியை சிவப்பு அடையாள அட்டையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் நம் இனத்தின் தலைவிதியில் சிவப்பு அடையாள அட்டை மிகபெரிய பாதிப்பை உண்டுபன்ன காரணம் சீனர்கள் சுயதொழில் செய்யும் இனமாக இருந்ததும் நாம் பிறரிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகளாக வாழ்ந்ததும்தான் என்றால் மிகையாகாது.
கதை முடிவில் சீன முதலாளி காணமல் போய்விடுகிறான். கைகூலிகள் போலீசிடம் பிடிபடுகின்றனர். சீன முதலாளி தலைமறைவானதன் வழி உழைக்கும் வர்கத்தை அடிமைப்படுத்தவும் உழைப்பு சுரண்டலின் வழி வயிறு வளர்க்கவும் திட்டமிடும் கூட்டம் இன்னும் நாட்டில் உயிர்ப்புடன் இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. குடியுரிமை பெற்று உயர்கல்வி கற்றவராயினும், சுயசிந்தனையும் துணிச்சலும் அரசியல் விழிப்புணர்வும் அற்று மற்றவர்களிடம் தொழில் செய்து வாழ்வதையே கடமையாக கொண்ட சமுதாயம் உடலாலும் அறிவாலும் மற்றவர்களிடம் அடிமைப்படுவதை தவிர்க்க முடியாது.
செலாஞ்சார் அம்பாட் அடிமைத்தனம் மீதான மீள்பார்வையை உசுப்பிவிடுகிறது.
//குடியுரிமை பெற்று உயர்கல்வி கற்றவராயினும், சுயசிந்தனையும் துணிச்சலும் அரசியல் விழிப்புணர்வும் அற்று மற்றவர்களிடம் தொழில் செய்து வாழ்வதையே கடமையாக கொண்ட சமுதாயம் உடலாலும் அறிவாலும் மற்றவர்களிடம் அடிமைப்படுவதை தவிர்க்க முடியாது.”// அருமை.