‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது.
கொஞ்சம் கூட இலக்கிய அறிவு இல்லாத எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரன் கூட அண்மைய காலமாய் ‘பின் நவீனத்துவம்’ என்ற சொல்லாடலை போகும் இடமெல்லாம் உளறி தொலைக்கிறார். அவரைப்பொறுத்தவரை ஆபாசம் என்பது பின் நவீனத்துவம் போடும் குட்டி. பின் நவீனத்துவத்தை ஆதரிப்பவர்கள் ஆபாசக்குட்டியைத்தான் இலக்கியத்தில் போடுவார்கள் என்பதே அவருக்கும் அவரைப்போல மழுங்கிய வாசிப்பு சார்ந்தவர்களுச்ம் இருக்கும் இறுதியான முடிவு.
பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடோ தத்துவமோ கிடையாது. அதுவொரு அறிதல் முறை. பின்நவீனத்துவ எழுத்துமுறை என எதுவும் கிடையாது. பின்நவீனத்துவ வாசிப்பு முறையே உண்டு. இதில் அது எங்ஙனம் ஆபாசக் குட்டியைப் போடக்கூடும் என்பது குறித்து யாரும் சிந்திப்பதே இல்லை. பின் நவீனத்துவம் என்பது ஆபாசமாக எழுதுவது என எந்த அரைவேக்காடு இவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது என இன்றுவரை தகவல் இல்லை. ஓர் அரைவேக்காடு எடுத்த வேகாத வாந்தியை மாறி மாறி புசித்து மீண்டும் மீண்டும் கக்கும் இவர்களால் மலேசிய இலக்கிய உலகம் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு பின் நவீனத்துவத்துக்குத் தவறான புரிதல் கொடுத்து, அவர்களாக உண்டாக்கி வைத்துள்ள அதன் கட்டமைப்புக்குள் மாற்றுச்சிந்தனை கொண்ட இளம் எழுத்தாளர்களைத் திணிக்க முயல்வதுதான் வேடிக்கை.
‘வல்லினம்’ குழுவினரையும் ‘பின் நவீனத்துவக் கூட்டம்’ எனச் சொல்வதை பல இடங்களில் கேட்டுள்ளேன். அதன் உள் அர்த்தம்: இவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், எந்த நேரமும் காமம் குறித்தே சிந்திப்பவர்கள், பொதுவில் பேச மறுப்பவற்றைப் பச்சையாகப் பேசுபவர்கள், கலகம் செய்பவர்கள், வம்புக்கு நிற்பவர்கள், வன்முறையாளர்கள். இன்னும் என்னென்னவோ மறைமுக அர்த்தங்களை மனதில் வைத்துக்கொண்டு முடிந்தவரை ‘வல்லினம்’ குழுவினரின் அருகாமையை தவிர்க்கவே நினைப்பார்கள். தமிழ்ச்சூழலில் இந்த அவமதிப்பு ஒன்றுaம் புதிதில்லைதான்.
அதற்கு முக்கியக் காரணம் பின் நவீனத்துவம்: அறிவொளி மரபு, பகுத்தறிவு, விஞ்ஞானப்பார்வை என பலவற்றையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறது. ‘பகுத்தறிவின் பயங்கரவாதம்’, ‘அறிவின் வன்முறை’ என அறிவொளி மரபை சாடுகிறது. பகுத்தறிவு பேசும் பெரியாரிஸ்டுகள் கூட பின் நவீனத்துவத்தின் இந்த வாசகங்களைக் கேட்டு முகம் சுழிப்பதுண்டு. அதற்கு இரு முக்கியக் காரணங்களில் முதலாவது பெரியரிஸ்டுகள் பலரும் பெரியாரின் சுதந்திரவாதத்தை அறியாததும் இரண்டாவது, மலேசியத் தமிழ் சமூகத்தில் இதுவரை பேசப்படாமல் இருந்த பல விடயங்கள் இன்றைய இளம் எழுத்தாளர்களால் பேசப்படுவதுமே. பெரியாரின் சுதந்திரவாதம் குறித்து மற்றுமொரு முறை விரிவாகப் பேசலாம். ஆனால், மலேசியாவில் இன்னும் பல விடயங்கள் பேசப்படாமல் இருக்க புத்திஜீவிகளாகச் சொல்லிக்கொள்பவர்களின் சமூக மரியாதையைப் பேணிக்காக்கும் அசட்டுப் பண்பே காரணமாக இருக்கிறது.
பின் நவீனத்துவம் குறித்து பேசுவதற்கு முன்பு நீட்ஷேவையும் ஃபூக்கோவையும் ஓரளவாவது அறிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. அறிவும் அதிகாரமும் எவ்வாறு வன்முறைக்கு இட்டுச் செல்கிறது என இவர்கள் தீவிரமாக ஆராய்ந்தவர்கள். பொதுவாகவே மொத்தத்துவம் அதிகாரத்திற்கே வழிவகுக்கும். ஒருமைத் தன்மை, ஒன்றை நோக்கிய கருத்துக்குவிப்பு , பொதுமை படுத்துதல் என்பதெல்லாம் வன்முறைக்கே இட்டுச்செல்லும் என்பதால் விலகல், வேறுபாடு, பன்மைத் தன்மை, ஒருமையின்மை, இரு பொருட்தன்மை ஆகியவற்றை பின் நவீனத்துவம் வழியுறுத்தியது. அதோடு சிறு குழுக்கள், தனித்துவங்கள், சிறு கதையாடல்கள் போன்றவற்றையும் வரவேற்றது.
இதை ஒருசில உதாரணங்கள் வழி பார்க்கலாம் என நினைக்கிறேன். ‘உலகத்தரமான அரசு அலுவலகங்களை உருவாக்குவது வளர்ந்து வரும் மலேசியா போன்ற நாட்டுக்கு அடையாளமாகும்,’ என்பது அரசின் பொதுவான கருத்து என வைத்துக்கொள்வோம். அந்த ஒன்றை நோக்கிய கருத்தில் ‘பெராங் பெசார்’ உள்ளிட்ட தோட்டங்கள் அழிக்கப்பட்டு புத்ரா ஜெயாவாக உருமாறுகின்றது. மலேசியா முழுக்க உள்ளவர்களுக்கு ஏன் பாமர தமிழர்களுக்குக் கூட அது ஒரு ‘கௌரவம்’ சார்ந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால், அந்தத் தோட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை இங்கே வன்முறையால் நசுக்கப்படுகிறது. வரலாற்றில் அக்குரலுக்கான மதிப்பு ஒன்றுமே இல்லாமலாகி விடுகிறது. காலாகாலமாக வாழ்ந்த தங்கள் நிலம் தங்களுக்கே அந்நியமாகி அந்த தோட்ட மக்களை விரட்டி அடிக்கிறது. வன்முறையைப் பற்றி வாய்க்கிழிய பேசுபவர்கள் அவ்விடத்தின் பிரமாண்டத்தின் முன் வாயகழ நிற்கின்றனர்.
கொஞ்சம் பின் நோக்கிச்சென்றாலும் இதே சூழலை நாம் அறியலாம். சயாம் மரண இரயில்வே அமைக்கப் பிடித்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பலர் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மாண்ட வரலாறுகள் நம் பதிவில் உண்டு. தண்டவாளம் அமைக்க வேண்டும் என்பதும், அதன் வழி இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசை ஜப்பான் வென்று சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதும் இலட்சியம். அந்தத் திட்டத்திற்கு மலேசியாவில் உருவான ஐ.என்.ஏ படையும் கைக்கோர்த்தது என்பது வரலாறு. அது அன்று அதிகாரத்தில் இருந்த நேதாஜி உள்ளிட்டோரின் லட்சியம்தான். அந்த அதிகாரத்தில் உள்ளவர்களின் லட்சியத்துக்கு அடிமைகளாய் இருந்து உயிர்பலியானவர்கள் பற்றி நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக அவர்களுக்குத் தியாகி பட்டம் சூட்டி மகிழ்ச்கிறோம். ஒருமை தன்மை இவ்வாறான பேரழிவுக்கே அர்த்தமில்லாமல் செய்யக்கூடியது.
இதை இன்னும் ஆராய்ந்தால், நன்மைக்கு என நினைக்கப்படும் திட்டங்கள் கூட முழுமையற்றதாய் இருப்பதை நாம் உணரலாம். ‘பெண்களுக்காகப் போராடுகிறேன்’ என ஒருவர் சொல்வாரேயானால் “எந்தப் பெண்ணுக்கு” என நாம் கேட்க வேண்டியுள்ளது. அது மலாய் பெண்ணா? தமிழ்ப்பெண்ணா? பாலியல் தொழில் புரியும் பெண்ணா? லெஸ்பியனா? என நீண்டு விரியும் கேள்விகள் மூலம் மொத்தத்துவம் நிச்சயம் அனைத்து சாராரையும் திருப்தி படுத்துவதில்லை எனப் புரிகிறது. ஆக, ஒரு சமுதாயத்தில் மொத்தத்துவத்திற்கான கலை, இலக்கியம், நியாயம், ஒழுக்கம், சட்டம், கலச்சாரம் என ஒன்று இருக்கவே முடியாது. அப்படி உருவாகும் என்றால் அதுதான் வன்முறை.
ஏறக்குறைய இந்தக் குரல்தான் பின் நவீனத்துவம் பேச அல்லது அறிய முற்படும் இளம் எழுத்தாளர்களிடமிருந்து புறப்படுகிறது. அவர்கள் ஒழுக்கங்களைக் கேள்வி எழுப்புவதும், புனிதங்களை உடைத்துப்பார்ப்பதும், மாற்றுப்பால் நிலையை (alternative sexualities) கரிசனத்துடன் அணுகுவதும், கொள்கைகளை அலசிப்பார்ப்பதும், இந்த மொத்தத்துவத்திலிருந்து விடுபடும் வேட்கையில்தான். எந்தக் கொள்கையிலும் வன்முறையோ ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரை புறக்கணிக்கும் தொணியோ இருந்தால் அதுகுறித்து எழும் வினாவே இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களின் பலம்.
கலை, இலக்கியத்திலும் இந்த வன்முறை நிகழவே செய்கிறது. முன்பே நான் சொன்னது போல பின் நவீனத்துவ வாசிப்பு முறையின் மூலமே இங்கு பல பிரதிகள் கட்டுடைக்கப்படுகின்றன. கலை என கொண்டாடப்பட்டவை மீள் வாசிப்புக்கு உள்ளாகி அதில் உள்ள அதிகார, பார்ப்பனிய, இந்துத்துவ ஆணாதிக்க குரல்கள் கண்டடையப்படுகின்றன. சினிமாவிலும் இந்த பின் நவீனத்துவப் பார்வை அவசியமாகிறது.
பறை இரண்டின் அறிமுக விழாவில் எழுத்தாளர் கோ.புண்ணியவான், கே.பாலச்சந்தரை மிக முக்கியமான இயக்குனராக முன் வைத்துப்பேசியதும் அதற்கு நான் மறுப்பு சொன்னதும் இந்த இடைவெளியில்தான் நிகழ்கிறது. உண்மையில் கோ.புண்ணியவான் சொன்னது போலவே வெகுசன மக்களில் ஏராளமானவர்கள் விதவைக்கு மறுவாழ்வு, பாலியல் தொழிலாளிக்குத் திருமணம் போன்ற கருவை கையாண்டதால் கே.பாலச்சந்தரை ஒரு புரட்சி இயக்குனராகவே கருதுகின்றனர். அவ்வாறு அவர் எண்ணுவது தவறும் அல்ல. காரணம் சமூகத்தின் பொதுபுத்தியில் அச்செயல்பாடுகள் புரட்சியாகவே கருதப்படுகின்றன. ஆனால், இதில் அதிகாரத்தின் கூரிய ஆயுதங்கள் புதைந்துள்ளதை இந்த சமூகம் நமக்கு வழங்கியுள்ள பொதுவான ஒழுக்க கண்ணாடியைக் கலற்றி வைத்துப் பார்த்தால்தான் புரியும்.
மனைவியை இழந்த ஓர் ஆணை இவ்வுலகம் இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அவனின் மறுமணம் அத்தனைப் புரட்சியானதாகவோ அவனை மணப்பவள் புரட்சிப்பெண்ணாகவோ கணிக்கப்படுவதும் இல்லை. அதே போல பல ஆணுடன் உறவு கொண்டுள்ள ஒரு பெண்ணை மணப்பது புரட்சி என்றால் பல பெண்ணுடன் உறவு கொண்ட ஆண்களைத்தானே பெண்கள் காலா காலமாக மணந்துகொண்டு வருகின்றனர். ஆனால், அவை சமூகத்தில் நிகழ்ந்தே தீர வேண்டிய கட்டாயங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொதுவான பதில் ‘சமூகத்தில் நடக்கும் அவலங்களைத்தானே அவர் காட்டுகிறார். அதனால் நன்மைதானே’ என இருக்கலாம்.
சமூகத்தில் நடக்கும் ஒன்றின் பின் உள்ள அதிகார அரசியலையும் கவனத்தில் கொள்வதுதானே கலைஞனின் வேலை. நன்மை என்றால் யாருக்கான நன்மை என்பதே பின் நவீனத்துவம் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. முதலில் பாலியல் தொழிலாளர்களையும் கைம்பெண்களையும் சமூகத்தின் கருணைக்குறியவர்கள் என்ற அயோக்கியப்பார்வையை ஏற்றிவைத்ததே இந்த ஆணாதிக்க சமுதாயம்தானே. மற்றபடி யாருக்கு வேண்டும் ஆண்களின் கருணையும் இரக்கமும். முதலில் யார் யாருக்கு வாழ்வு கொடுப்பது? பெண் சமூகத்தால் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒடுக்கப்படுவதைக் கேள்வி எழுப்பாமல் அவளுக்கு இரக்கம் காட்டி உருகுவதுதான் சினிமா என்றால் அந்த சினிமா நிச்சயமாக ஆபத்தான கலைதான். அதை உருவாக்கிய கலைஞனும் ஆபத்தானவன்தான்.
இவ்வாறு சமூக செயல்பாடுகள் முழுவதுமே பொது ஒழுக்கங்கள், நியாயங்கள், சட்டங்கள் அமைக்கப்பட்டு அதை இறுக்கி தகர்க்க முடியாத அதிகார மையமாக்கி, அதை கேள்வி கேட்பவர்கள், அசைத்துப்பார்ப்பவர்கள், உடைத்துப்பார்ப்பவர்கள் கலகக்காரர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். கலைக்கு கலகமும் முக்கியம்தானே.
பின்நவீனத்துவ எழுத்துமுறை என எதுவும் கிடையாது. பின்நவீனத்துவ வாசிப்பு முறையே உண்டு.// ஒட்டு மொத்த கட்டுரையில், இந்த ஒருவரி நச்..
வழக்கமாகச் சொல்வதுபோல்.. அருமை. மாற்றுக்கருத்து இல்லை. பரிபூர்ண தெளிவில் சொல்லப்பட்ட கட்டுரை.