இருவருணாசிரமக் கோட்டையை
நாய் போலக் காத்துக் கிடப்பதோடு
பொச்சிக்காப்பு கொண்ட
சாதிமானுக்கு அல்லக்கையாகவும்
அன்னார் தம் இல்லத்தில்
தாது புஷ்டி லேகியமாகவும்
குல மகளிர் பொற்புக்குப்
பூட்டருளியும் அருள் பாலிப்பான்
எச்சிக்கலையும் எரப்பாளியுமான
உன் கடவுள்… – ம.மதிவண்ணன்
நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா. ‘நெரிந்து’ கவித்தொகுப்பின் வழியே, தன்னை இலக்கியத்துக்குள்ளும் தலித்தியத்திற்குள்ளும் அறிமுகப்படுத்திக் கொண்ட கவிஞர் மதிவண்ணன். வலியை அணுவணுவாய் அனுபவித்தவனால் மட்டுமே அந்த வலி குறித்து எந்தவொரு புனைவுமின்றி பேச முடியும் என்பதற்கு மிக சரியான சான்று ம.மதிவண்ணனின் கவிதைகள். ஒரு தலித் படைப்பாளியாக அறியப்படும் இவர் இதுவரை சாதிய வன்முறைகளாலும் அடக்குமுறைகளாலும் இன்ன பிற கொடுமைகளாலும் சூழ்ந்த தான் கடந்து வந்த பாதையை தன் கவிதைகளில் மிக இயல்பாக பதிவு செய்திருக்கின்றார். இதுதான் நிதர்சனம் என நம் ஒவ்வொருவரின் கன்னத்திலும் ஓங்கி அறைகிறது அவரது கவிதைகள்.
ஏதிலி என்ற வார்த்தையே எவ்வளவு வன்மம் நிறைந்தது. தான் பிறந்த சொந்த நாட்டிலேயே தேசிய இனம், சமயம், மதம், சாதி என்ற உட்பிரிவுகளால் உரிமைகள் மறுக்கப்பட்டு, அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சக மனிதனாலேயே மனிதம் மறுக்கப்பட்ட நிலையினையே இந்த ஏதிலி என்ற வார்த்தை குறிக்கிறது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று மேடைதோரும் முழங்குபவர்களிடம்கூட தனியாக கூப்பிட்டு சாதி குறித்து கேட்டால் சாதிகள் இல்லையென யார் சொன்னது என்பார்கள். நாங்கள் சாதி எல்லாம் பார்ப்பதில்லை, எல்லா உயிரும் சமம் என்ற வியாக்கியானம் எல்லாம் பல நேரங்களில் ஊருக்கான உபதேசமாக மட்டுமே இருக்கிறது. சாதிகள் இல்லை என்பது இன்றைக்குச் சத்தியமாய் பொய் என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது. தொடர்ந்து தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை மறக்காமல் இணைத்துக் கொள்பவர்களும், பட்டம் பதவி என்று வந்து விட்டால் தனது சாதிக்காரனுக்கே அவை எல்லாம் தரப்பட வேண்டும் என்று நீட்டி முழக்குபவர்களும், திருமணம் என்று வந்துவிட்டால் மறக்காமல் சாதிய தட்டை தூக்குபவர்களுமாக இன்றுவரை எந்தவொரு பின்னடைவுமின்றி பூதாகரமாய் வளர்ந்து நிற்கிறது சாதி. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதிய மனிதன் மிக வன்மத்தோடு உலவியப் படியே இருக்கிறான். அந்த சாதிய மனிதனை மிக லாவகமாக தோலுரித்துக் காட்டுகிறார் மதிவண்ணன்.
சமர்செய்து கொண்டிருக்கிறோம்
அவரவர் இதயத்தை எடுத்து
ஆயுதமாய்க் கையிலேந்தி
உனது இதயம்
உனது ஆட்களுக்காக.
எனது இதயம்
எனது ஆட்களுக்காக.
சாதி விசயத்தில் தான் இருக்கின்ற இடத்தைக் கவனத்தில் கொண்டும், தேவைகளின் அடிப்படையிலும் மனிதன் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்பனாக இருக்கிறான். அவனது இந்த இரட்டை நிலைப்பாட்டை அவனை மிக அணுக்கமாக கண்காணிப்பவர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ள இயலும். இல்லாது போல் தோன்றினாலும் எக்போதும் மனிதனோடு ஒட்டி உறவாடிக் கொண்டே இருக்கிறது சாதி. ஒருவன் எதையாவது சாதித்து விட்டால் அவன் என்ன சாதி என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவதிலும் தன் சாதி என்று தெரிந்து விட்டால் பொங்கிப் பூரிப்பதிலும் ஒருவன் தவறு செய்துவிட்டால் அவன் கண்டிப்பாக தனது சாதிக்காரனாக இருக்க முடியாது என்ற முன்முடிவுகளை எடுப்பதிலும் நாம் முனைப்புக் காட்டியபடியே இருக்கிறோம்.
வானம் பொழிந்ததில்
தனக்குறிய ரெண்டு மிடறு நீரை
பிடித்து வைத்திருந்த
வாளியிலிருந்து
பருகிப் போகிறது காகம்
பொதுவில் பொருள் விளங்க.
மழை அனைவருக்கும் பொதுவானது. நீரும் எல்லாரும் பொதுவானது. ஆனால், அந்த மழைநீரைத் தேக்கி அல்லது கிணற்றில் தேங்கும் நீரையோ குழாய் நீரையோ இன்னார் மட்டுமே எடுப்பதற்குத் தகுதியுடையவர் எனற நிலை இன்றும் இருக்கிறது. காகத்திற்கு விளங்கிய பொதுவுடைமைகூட மனிதர்களுக்கு விளங்கவில்லை என்பதில்தான் கவிஞருக்கும் நமக்குமான வருத்தமே.
தீரமும் துணிவும் கொண்டு
எனக்கொரு இருக்கையை
உருவாக்கிக் கொண்டேன்
தகாது தகாதெனப்
பொருமிக் குமைந்தது ஊர்.
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி அதற்குள் இருந்து முட்டி மோதி மேலெழும்பி வந்தாலும் காலங் காலமாய் அடக்குமுறையில் அமிழ்ந்து கிடக்கும் சுற்றியிருப்பவர்கள் அதைத் தகாது என்பார்கள். மீட்சி என்பது அவர்களுக்குமானதுதான் என்பதை அதற்கு சம்பந்தப்பட்டவர்களே புரிந்து கொள்ளாதவரை யாவருக்குமான மீட்சி சாத்தியப்படாது. ஒடுக்கப்பட்டோர் குரல் பறிக்கப்பட்டோர் ஒன்றுபட்டு எழும் நாளில்தான் சாதி மரணிக்கும் சாத்தியம் நிகழலாம். அதுவரை கண்ணுக்குத் தெரியாக புற்றுநோயாய் சாதியம் நம்மை அரித்தபடியே இருக்கும்.
பரந்து விரிந்த
உனது எல்லைகளைப்
பத்திரப்படுத்தும் தந்திரத்துடன்
நீ போடும் கோட்டுக்குள்
சவம் வேண்டுமானால் கிடக்கலாம்.
உணர்ந்த இவ்வுயிர்பை
உணர்த்த வழியில்லை வேறு
அத்துமீறலைத் தவிர.
இந்த யுகத்தின் மிக முக்கிய தேவையாய் ம.மதிவண்ணனின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்க வேண்டும். சாதிய கற்பிதங்களுக்குச் சாட்டையடி கொடுக்க வேண்டும்.