செலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும்

selanjar empatவரலாறு தொடர்பான செய்திகளைப் பதிவு செய்தல் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களின் வரலாறு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி வைத்தல் என்பது பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஒரு நாட்டினுடைய வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்கத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பவையாகவும் அவர்களைச் சார்ந்து ஆவனப்படுத்தப்படுபவையாகவுமே இருக்கும். அது சாதாரண மக்களை பதிவு செய்யத் தவறிவிடுவது நிதர்சனம்.

அவ்வகையில் 80களில் தோட்டத் துண்டாடல்கள் மற்றும் நிலக் குடியேற்ற திட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் மக்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு அமைந்தது, அவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் என்னென்ன என்பது பற்றிய செய்திகளை நாவல் வடிவில் கொண்டமைந்திருக்கும் “செலாஞ்சார் அம்பாட்” உலகப் பார்வையிலிருந்து மறைக்கப்படிருந்த 47 குடும்பங்களின் மிகக் கொடுரமாக வாழ்வியலைச் சித்தரிக்கும் புனைவாகும். இந்நாட்டு வரலாற்றின் கருப்பு பக்கங்களான ‘செலாஞ்சார் அம்பாட்’ கொத்தடிமை முகாம் தொடர்பான செய்திகளோடு சிவப்பு அடையாள அட்டையால் தான் அடைந்த சுய அனுபங்களையும் இணைத்தே கோ. புண்ணியவான் இந்நாவலைப் புனைந்துள்ளார் என்பது தெளிவு.

இந்நாவலின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு நிகழ்வு கடந்த 14.9.2014 ஞாயிற்றுக்கிழமையன்று தான் ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெற்றது.  இதனுடன் சேர்த்து எழுத்தாளர் திரு. கோ.புண்ணியவான் அவர்களின் “எதிர்வினைகள்” சிறுகதை தொகுப்பும் வெளியீடு கண்டது.  செலாஞ்சார் அம்பாட் நாவல் உருவான பின்ணணியில் தொடங்கி கோ. புண்ணியவானின் எழுத்துகளில் காணப்படும் வளர்ச்சி குறிப்பாக கதை சொல்லும் பாணியில் அவர் கண்டுள்ள தேர்ச்சி, வரலாற்றை புனைவாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரனின் தலைமை உரை அமைந்தது.

தொடர்ந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான பேராசியர் ராமசாமி, பல முக்கிய விடயங்களை விடுபட்டிருக்கும் நிலையில் இந்நாவல் வரலாற்றை பிழையாக சொல்லியுள்ளதாக கூறிய கருத்துக்கு எதிர்வினையாற்றி முனைவர் கிருஷ்ணன் மணியம் செலாஞ்சார் அம்பாட் நாவல் குறித்த தனது கருத்துரையை முன் வைத்தார். செலாஞ்சார் அம்பாட் நிச்சயமாக ஒரு வரலாற்று நாவல் அல்ல என்பதையும்; எப்படி ஒரு சமூக நாவல் வரலாற்று நாவலோடு வேறுபடுகிறது என்பதை தொட்டும் அவரது கருத்துரை விரிந்தது.

வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அதில் எந்த வரலாற்று செய்தியும் நிகழ்வுகளும் விடுபடாமல், வரலாற்று பிழைகள் ஏற்படாமல் எழுதுவது மிக முக்கியமாகும்.  ஆனால் புனைவு என்பது ஒரு நெடிய சம்பவத்தில் தன்னைப் பாதித்த ஏதோ ஒரு பகுதியையோ அல்லது அதன் கோர்வையான முழு சம்பவத்தையும் தன்னுடைய எழுத்தின் ஆளுமையால் இலக்கிய வடிவத்துக்குள் கொண்டு வருவதுதான் இலக்கியம். அதில் அவ்வெழுத்தாளன் விருப்பத்திற்கும் கதையோட்டத்தின் தேவைக்கும் ஏற்ப சிலவற்றை சேர்த்துக் கொள்ளவும், விழக்கிவிடவும் அவனுக்கு முழு சுதந்திரமுண்டு.

இந்நாட்டில் தமிழர் இதுவரை எதிர்கொண்ட பல்வேறு இன்னல்களில் ஒரு சிறு தீப்பொறியாக திகழும் செலாஞ்சார் அம்பாட் சம்பவத்தை இந்நாவல் சொல்கிறது. 1984ஆம் ஆண்டு பத்திரிக்கைகளில் பிரபலமாக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டிருக்கின்றது. சமுகத்தின் அடித்தட்டு மக்கள் எல்லாக்காலங்களிலும் அனுபவிக்கும் ஒடுக்குதல்களையும் அடிமைப்படுத்தப்படுதலையும் உரிமை மறுக்கப்படுவதையும் செலாஞ்சார் அம்பார் சம்பத்தின் மூலம் காட்டிச் செல்லும் ஒரு சமூக நாவலாக இதனை பார்க்க வேண்டும் என்பதாக அவரின் கருத்துரை அமைந்தது.

முதன்முறையாக சிலாங்கூரில் நூல் வெளியீடு செய்தமையால் எழுத்தாளர் கோ. புண்ணியவான் இந்நிகழ்வை மேலும் உணர்வுப்பூர்வமானதாக்கி தன் பாலிய நண்பர் திரு. ஐவன் அய்யாவு என்பவருக்கு தன் முதல் நூலை வழங்கினார். இந்நூல் அறிமுக விழாவில் நிறைய புதுமுகங்களைக் காண முடிந்தது. கோ. புண்ணியவானின் முகநூல் நண்பர்கள், தொடர் வாசகர்கள் என ஐம்பதுக்கும் குறையாத வாசகர்கள் வந்திருந்தனர். இந்நாவலுக்காக தனக்கு கிடைத்த இரண்டு முக்கிய விருதுகளோடு வாசகர்கள் மற்றும் வருகையாளர்களின் ஆதரவால் தனக்கு தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற வேட்கை பிறந்திருப்பதாக எழுத்தாளர் கோ. புண்ணியவான் தனது நன்றியுரையில் குறிப்பிட்டார். மாலை 4.40க்குத் தொடங்கிய நிகழ்வு 7.20 மணிக்கு தேநீர் விருந்துடன் முடிவடைந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...