இல்லாத திசைகள் 1 – ஏமாற்றங்களும் பின் தொடரும் நம்பிக்கையும்

sandru 01இன்று கம்பீரமாய் நிற்கும் ‘மலேசிய நண்பன்’ அலுவலகக் கட்டடத்திற்கு நேர் எதிர்புறத்தில் இருக்கும் இப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும் பேருந்து நிறுத்தத்தில்தான் 25 வருடங்களுக்கு முன் 14 வயதில் வந்திறங்கினேன். அப்போதும் அது வெறிச்சோடிதான் கிடந்தது.

என்னை அழைத்து வந்த என் மாமா என்னிடம் கேட்டார் “நீ இப்போ எங்கே இருக்கேன்னு தெரியுமா?” “தெரியலை” என்றேன். அதற்கு அவர் “கோலாலம்பூர்” என்றார். அன்று தொடங்கியது என் அத்தனை ஏமாற்றங்களும். அந்த இடத்திற்குப் பெயர் ஜாலான் ஈப்போ பத்து தீகா. நான் வந்திறங்கியது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த இடமே சூன்யமாகியிருந்தது. சாலையில் இரண்டு மூன்று வாகனங்கள்தான் சென்றுக்கொண்டிருந்தன.

‘இதுவா கோலாலம்பூர்?’ என நினைத்துக்கொண்டேன். கோலாலம்பூர் பற்றி எந்தவிதமான கற்பனைகள் இல்லை என்றாலும், இதை நான் எதிர்பார்க்கவில்லை. சாலையைக் கடந்து இப்போதிருக்கும் ‘மலேசிய நண்பன்’ கட்டடத்திற்குப் பின்னால் இருக்கும் ஐந்து மாடி கட்டட வரிசையில் ஐந்தாவது மாடியில் இருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்றார் மாமா.

sandru 02வரவேற்பரையில் பேந்த பேந்த விழித்தவாரே அமர்ந்திருந்தேன். பத்திரிகையாளர் தமிழ்மணி அவர்களின் வீடு அது. அவரோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அதே கட்டட வரிசையில் கடைசி கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் இருந்த ஒரு வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார் மாமா. கோலாலம்பூரைப் பற்றி பெரிய கற்பனை இல்லை என்றாலும், ஒரு பத்திரிகை அலுவலகத்தைப் பற்றி சிறிய கற்பனை இருந்தது. அதுவும் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நொறுங்கிப்போனது.

கைவிடப்பட்ட கட்டடம்போல் இருந்தது அந்த அலுவலகம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் ஒரு பெண் ஊழியரும் மட்டுமே இருந்தனர். அந்த ஊழியர் ஏதோ வரைந்துகொண்டு அமர்ந்திருந்தார். மாமா என்னை ஆசிரியரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மாமாவை வரவேற்றவர் என்னை மேலும் கீழுமாக பார்த்தார்.

“பையன் என்று சொன்னீர்கள் இவ்வளவு சின்னப்பையன் என்று சொல்லலையே,” என்றார் மாமாவிடம். நான் வயதுக்கு மீறி கொஞ்சம் சின்னதாகவே இருப்பேன். என் ஓவியங்களைப் பார்த்தார் ஆசிரியர். பெரும்பாலும் என் ஓவியங்களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ‘வாவ்’ என்பார்கள்… பாராட்டுவார்கள்… அவையெல்லாம் எவ்வளவு பொய்யான பாராட்டுகள் என்பதை உணர்த்தியது அவரது முகம்.

ம்… ம்… என்ற மெதுவான சத்தத்தோடு… ஓவியங்களைப் பார்த்துவிட்டு “இதுவெல்லாம் பத்திரிகைக்கு உதவாது,” என்று சொல்லி வரைந்து கொண்டிருந்த ஊழியரிடம் என்னை அழைத்துச் சென்றார். “இதைதான் நீ பழக வேண்டும்,” என்று ஊழியரைக் காண்பிக்க, அவர் தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்தார்.

இன்று போல் கம்ப்யூட்டர் வசதிகள் இல்லாததால் பத்திரிகையில் வரும் தலைப்புக்களை வடிவம் கொடுத்து வரைய வேண்டும். அது எனக்கு புதுசாய் இருந்தது. கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

மாமாவும் ஆசிரியரும் ஏதேதோ பேசினார்கள். இரண்டு சிக்கல் இருந்தது, எனக்கு வேலை கொடுப்பதில். ஒன்று, எனக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாமல் இருந்தது. மற்றொன்று எனக்கு அடையாள அட்டை இல்லாதது. இரண்டாவது பிரச்னையைவிட முதலாவது பிரச்னைதான் முக்கியமாக இருந்தது அப்போது. எனக்கு வேலையையும் தமிழையும் கற்றுத்தரும் பொறுப்பு அந்த ஊழியரிடம் கொடுக்கப்பட்டது.

அந்த ஊழியரின் பெயர் சரஸ். பார்க்க பால் மரம் சீவும் பெண்போல் இருந்தார். நான் பால் மரக்காட்டு பின்னணியில் வளர்ந்ததால் அந்த அக்காவைப் பார்த்ததும் பிடித்து போனது.

பிறகு டத்தோஸ்ரீ சாமிவேலு மற்றும் டத்தோ சுப்ரமணியத்தின் புகைப்படத்தைக் கொடுத்து கேலிச் சித்திரம் வரைய சொன்னார் ஆசிரியர். கேலிச் சித்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வரைந்து கொடுத்தேன். மாதிரிக்கு சில கேலிச் சித்திரங்களைக் காண்பித்தார்கள் அதைப்பார்த்து எதையோ வரைந்து கொடுத்தென்.

சில திருத்தங்கள் செய்தார் ஆசிரியர். பிறகு மறுபடியும் ஆசிரியரும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். மாமா ஆசிரியருக்கு விசுவாசமானவராக இருந்தார். மரியாதையுடனும் நடந்துகொள்வார்.

என்னை பிறகு வந்து அழைத்துக் கொள்வதாகச் சொல்லி மீண்டும் தமிழ்மணி அவர்களின் வீட்டில் விட்டு விட்டு மாமாவும் ஆசிரியரும் கிளம்பிவிட்டார்கள்.

தமிழ்மணி அவர்களின் வீட்டில் என் வயதுக்கேத்த பிள்ளைகள் நிறையபேர் இருந்தார்கள். தமிழ்மணியின் பிள்ளைகள் அவரின் உறவினர் பிள்ளைகள் நண்பரின் பிள்ளைகள் என வீடு குட்டி பள்ளிக்கூடம் போல் இருந்தது. தமிழ்மணி அவர்கள் என்னை சாப்பிட சொல்லி, அவர் அருகிலேயே அமர வைத்தார். அவரின் மனைவி உணவை பரிமாறினார். நல்ல ருசியாக சாப்பாடு. வயிறு நிரம்ப சாப்பிட்டேன். கோலாலம்பூருக்கு வந்து நான் முதன் முதலில் சாப்பிட்டது தமிழ்மணி அவர்களின் வீட்டில்தான்.

மீண்டும் அதே வரவேற்பறை. புதிய இடம்… புதிய முகங்கள்… பதற்றத்துடன் அமர்ந்திருந்தேன். தமிழ்மணியும் அவரின் மனைவியும் என்னை விசாரித்துகொண்டிருந்தனர்.

sandru 03மதியம் மாலையானது…. மாலை இரவானது…. இரவு நள்ளிரவானது…. மாமாவும் வரவில்லை…. ஆசிரியரும் வரவில்லை… பதற்றம் பயம் என எல்லாம் கவ்விகொண்டது என்னை. “என்னடா…. உன் மாமனைக் காணோம்? என்ன பண்ணப்போறே?…. எப்படி?…’’ என்று கேட்டார் தமிழ்மணி. 100 செங்கல்லை நெஞ்சில் கட்டியது போல் கனத்துப்போனேன். அவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அழுகை வந்துவிடும்போல் இருந்தது. பாயையும் தலையணையையும் கொடுத்துவிட்டு எல்லாரும் உறங்கச் சென்றார்கள். குழப்பத்தோடும், பயத்தோடும், ஏமாற்றத்தோடும் நானும் உறங்கிப்போனேன்.

காலை மீண்டும் அந்த வாரப்பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றேன். ஆசிரியர் இல்லை. சரஸ் அக்காவும் இல்லை. பிற இரு ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களிடம் என்னைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர், ‘‘நீதான் வரையிற பையனா?’’ என்று அழைத்து ‘‘நான் சொல்ற மாதிரி படம் வரை’’ என்று பென்சிலையும் தாளையும் கொடுத்து ‘‘ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வரை,” என்றார். வரைந்து கொடுத்தேன்.

‘‘ம்…. கை சரியில்லை…. இந்தப் பகுதி சரியா வரலை… உணர்ச்சி பத்தலை…’’ என்று நிபுணர்கள்போல் ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். அதற்குள் சரஸ் அக்கா வந்துவிட்டார். அவரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு பேசத்தொடங்கிவிட்டார். பேந்தப் பேந்த அமர்ந்திருந்தேன். ஆசிரியர் வந்தார் நேற்று என்ன பண்ணினே? என்ன சாப்பிட்டே? எங்க தூங்கினே? என்று எதுவும் கேட்கவில்லை. நேராக வேலை பற்றியும், என்ன செய்யவேண்டும்; செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டது. சரஸ் அக்கா ஒரு நோட்டுப் புத்தகத்தில் அ.ஆ.இ.ஈ என எழுதிக் கொடுத்து என்னை எழுதச் சொன்னார். காலை உணவும் – மதிய உணவும் அருகில் இருந்த ஒட்டுக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு உணவைப் பற்றி யாரும் பேசவில்லை. கடைசி வரை மாமா வரவில்லை.

மாலை அலுவலகத்தைச் சாத்திவிட்டு என்னைத் தமிழ்மணி வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு ஆசிரியர் கிளம்பிவிட்டார். மீண்டும் குழப்பத்தோடு தமிழ்மணி வீட்டுக்குச் சென்றேன். அவர் ‘‘என்ன?’’ என்றார். ‘‘அனுப்பிட்டாங்க’’ என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. சாப்பாடும், படுக்கையும் கொடுத்தார். முதல் நாள் அளவுக்கு இல்லை என்றாலும் குழப்பத்துடனேயே உறங்கிப்போனேன்.

சில வாரங்கள் ஓடின. முதலில் வேலையை பழகட்டும் என்று எனக்கு சம்பளம் எதுவும் பேசவில்லை. ஒட்டுக்கடையில் சாப்பிடுவதற்கும், தமிழ்மணி வீட்டில் தங்குவதற்கும் சொற்ப பணம் கொடுத்தார் ஆசிரியர். எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. வாரத்திற்கு இரண்டு முறை மாமா வருவார். நினைத்தால் 10 வெள்ளி கொடுப்பார். சில நாளில் அதையும் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் ஆசிரியர்.

ஒரு மாதத்தில் அவசர அவசரமாய் தமிழ் கற்றுக்கொண்டேன். அரசியல் கேலிச்சித்திரங்கள் வரைவேன். அந்தக் கேலிச்சித்திரங்கள் அந்த வாரப்பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தை அலங்கரித்தது. அரசியல் கேலிச்சித்திரங்கள் என்பதால், என் பாதுகாப்புக் கருதி என் பெயரைப்போட அனுமதிக்கவில்லை ஆசிரியர். அந்த வாரப்பத்திரிகையில் பிரதான வடிவமைப்பாளர் ஒருவர் இருந்தார். அவர்தான் பக்க வடிவமைக்கும் வேலையைச் செய்வார். அவருக்கு உதவியாகத்தான் சரஸ் அக்கா இருந்தார். அந்த வடிவமைப்பாளர் என்னை ஒரு பூச்சியைப் பார்ப்பதுபோலதான் பார்ப்பார். நான் அவர் பக்கமே போகமாட்டேன். அவர்தான் நான் வரையும் கேலிச்சித்திரங்களைத் திருத்தம் செய்து வடிவமைப்பார். அவருக்கும் – ஆசிரியருக்கும் ஒத்துப்போகாது. அவருக்கு நிகராக வேறு யாரையாவது உருவாக்கி விடவேண்டும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது.

இப்படியாக ஆறு மாதங்கள் ஓடிவிட்டிருந்தன. அலுவலகம் அருகில் இருந்த கட்டிடத்தின் நான்காம் மாடிக்கு மாறியிருந்தது. தமிழ்மணி அவர்களை, ‘‘அப்பா’’ என்று அழைக்கும் அளவுக்கு அவர் குடும்பத்தில் ஒருவனாகக் கலந்திருந்தேன். வடிவமைப்பாளருக்கும் – ஆசிரியருக்கும் பிரச்னை முத்திப்போனது. வடிவமைப்பாளர் வேலையை விட்டுப் போய்விட்டார். போனவர் சரஸ் அக்காவையும் அழைத்துப்போய்விட்டார். எல்லா வேலையும் என் தலையில் விடிந்தது. தட்டுத்தடுமாறி வேலைகளை முடிப்பேன். மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் வேலைகள் இருக்கும்.

காலையில் வந்தால் வேலை முடிய இரவாகிவிடும். அடையாள அட்டை இல்லாததால் என்னை வெளியில் எங்கும் போகக்கூடாது; போனால் போலீஸ் பிடித்துச்சென்று இந்தியாவுக்கு அனுப்பிவிடுவார்கள். திரும்பி வரவே முடியாது என்று பயம் காட்டி வைத்திருந்தார் ஆசிரியர்.

வேலை முடிந்தால் வீடு . வேறு எங்கும் போகமாட்டேன். அடையாள அட்டை எடுத்துத் தருவதாகச் சொன்ன மாமாவும் ஒன்றும் செய்யவில்லை. என் அப்பா செய்த குளறுபடியால் என்னோடு சேர்த்து என் குடும்பத்தில் மூன்று பேருக்கு அடையாள அட்டை இல்லை. மூன்று பேருக்கும் எடுத்துத் தருவதாகச் சொல்லி எங்கள் பிறப்புப் பத்திரங்களையெல்லாம் வாங்கி ஒரு கவருக்குள் திணித்து அதன்மேல், ‘ஒரு குடும்பத்தின் கதை’ என்று எழுதித் தூக்கிப்போட்டதோடு சரி. கேட்கும்போதெல்லாம் இதோ, அதோ என்று உளப்பிக்கொண்டிருந்தார்.

எப்போதாவது ஆசிரியர் மாமாவிடம் விசாரிப்பார். ‘‘என்ன… பையன் ஐ.சி பிரச்னை என்னாச்சு?’’ என்பார். ‘‘ஓ… நடக்குது முடிச்சிடுறேன் ஹி… ஹி… ஹி…’’ என்பார் மாமா. இந்தத் தொடர் நாடகம் ‘நாதஸ்வரம்’ நாடகத்தைவிட நீண்டதாகத் தொடர்ந்தது. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்தப் பேச்சு வரும்போதெல்லாம் எதையாச்சும் தூக்கி இவர்கள் மண்டையில் அடித்துகொன்றுவிடலாம்போல் இருக்கும்.

ஆரம்பத்தில் ஆசிரியர் என் வடிவமைப்பை பார்த்து திருத்தங்கள் செய்வார். அந்த வாரப் பத்திரிகையின் எல்லாப் பக்கங்களையும் சுயமாக வடிவமைக்கும் அளவுக்கு வேலையில் தேறியிருந்தேன். ஆனால், ‘வேலை பழகிக்கிறேன்’ என்ற அடிப்படையிலேயே எனக்குச் சம்பளம் என்று ஒன்றும் கொடுக்கப்படாமலேயே இருந்தது. அடையாள அட்டைப் பிரச்னையையும் அப்படியே கிடந்தது. என் அம்மா, மாமா வீட்டிற்கு நடையாய் நடந்து பொறுமையிழந்து ‘நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’ என்று மாமா வைத்திருந்த எங்களின் ‘ஒரு குடும்பத்தின் கதை’ கவரை வாங்கி வந்துவிட்டார். (எழுத படிக்கத் தெரியாத என் அம்மாவின் நீண்ட முயற்சியில் என் 26 வயதுக்குப் பிறகுதான் எங்களுக்கு அடையாளம் கிடைத்தது… மாமா நன்கு படித்த தமிழ்ப் பள்ளி ஆசிரியர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)

வாரத்தில் 7 நாளும் தெரிக்க தெரிக்க இரவு பகலாக வேலை ஓடிக்கொண்டிருக்கும். சில நாள்கள் அலுவலகத்திலேயே தங்கிவிடுவேன். வேலை மீதிருந்த ஆர்வம் ஒரு குருட்டுத்தனமான சந்தோசத்தைக்கொடுத்தது. கஷ்டம் தெரியவில்லை. அல்லது புரியவில்லை. ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் என்னை ‘திறமைசாலி, கெட்டிக்காரன்’ என்று பாராட்டியது வேறு என் கண்ணை மறைத்திருந்தது. இப்படியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. இச்சமயத்தில்தான் தமிழ்மணி அவர்கள் வேறு இடத்திற்கு வீடு மாறி சென்று விட்டார். எனக்குத் தங்க இடமில்லாமல்போனது. ஆசிரியர் வீட்டில் தங்கவேண்டியது வந்தது. தமிழ்மணி அவர்களின் வீடுபோல இல்லை ஆரியரின் வீடு. ஏதோ ஆசிரமத்தில் இருப்பதுபோல் இருந்தது. காலையில் பேருந்தில் வேலைக்கு வந்துவிடுவேன். போகும் போது, ஆசிரியருடன் அவர் காரில் சென்றுவிடுவேன். ஒரு பழைய தகரடப்பா கார் ஒன்றை வைத்திருந்தார் ஆசிரியர். அந்தக் காரை அவரைத் தவிர வேறு யாராலும் ஓட்ட முடியாது. அவருக்கு மட்டுமே விசுவாசமான கார். பெரும்பாலும் நள்ளிரவில்தான் வீட்டிற்குச் செல்வோம்.

sandru 04சம்பளம் என்று இல்லாததால் எல்லாவற்றிற்கும் ஆசிரியரை எதிர்பார்க்க வேண்டிருந்தது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம். என் செருப்பு அறுந்துவிட்டது. அது ஒரு சாதராண ஜப்பான் செருப்புதான். அவரிடம் சொன்னேன். “புது செருப்பு வாங்கித் தரேன்” என்றார். மறுநாள் அறுந்துபோன செருப்பு மாதிரியே இன்னொரு செருப்பை வாங்கிக்கொடுத்தார். கொஞ்சம் நல்ல செருப்பு எதிர்பார்த்த எனக்கு, என்னையே அந்தப் புது செருப்பில் அடித்துக்கொள்ளலாம்போல் இருந்தது.

கொஞ்ச நாள்களுக்குப் பிறகு என் கண்கள் மங்கத்தொடங்கியது. ஆசிரியரிடம் சொன்னேன். அவர் அறையில் இருந்த காலண்டர் போஸ்டர்களையெல்லாம் காண்பித்து அதில் உள்ள சின்ன எழுத்து பெரிய எழுந்து தெரிகிறதா? என்று ஒரு கண் மருத்துவரைபோல் பரிசோதனையேல்லாம் நடத்தி விட்டு “நீ நள்ளிரவில் நீண்டநேரம் கண் விழித்து டிவியில் படம் பார்க்கிறாய்… அதனால்தான்” என்றார். விடிய விடிய கண் விழித்து வேலை செய்ததால் இல்லையோ என்று நினைத்துக்கொண்டேன். “கொஞ்ச நாள் ஆகட்டும். என்ன ஆகிறது பார்ப்போம்” என்றார்.

அவர் சொன்ன அந்தக் ‘கொஞ்ச நாள்’ பல நாள் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை மங்கிக்கொண்டே போனது. பஸ் எண் கண்ணுக்குத் தெரியாமல் பல தடவை தவற விட்டிருக்கிறேன். சாதாரணமாக வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்க்க முடியாது. கண்களைச் சுருக்கி சுருக்கி பார்ப்பேன். அது கண் வலியையும், தலை வலியையும் ஏற்படுத்தியது. எதிரில் நிற்பது யார் என்று தெரியாத அளவுக்கு கண்கள் மங்கிய பிறகுதான் அழைத்துச் சென்று கண் கண்ணாடி வாங்கிக்கொடுத்தார் ஆசிரியர். மோசமாக மங்கியதால் கண்ணாடித் தடிப்பாகவும் கணமாகவும் இருந்தது. அதன் அழுத்தம் கொஞ்ச நாளிலேயே என் மூக்கின் மீது கறுப்புப் புள்ளிபோல் உருவானது. ஆசிரியரின் கணிப்பில் என் கண்ணும் ஜப்பான் சிலிப்பரும் ஒன்றுதான்போல.

ஒரு வருடமாகியும் என் சம்பளம் பற்றி எதுவும் பேசாமல் இருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அது ஆசிரியருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், மாமாவுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன். மாமாதான் என்னை அழைத்துப் பேசினார். “இன்னும் வேலை பழகிக்கிறேன் என்று சொல்ல முடியாது. நான் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன். எனக்குச் சம்பளம் வேண்டும்” என்றேன். “எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?” என்றார் மாமா. “500 வெள்ளி” என்றேன். “அவ்வளவு கேட்க வேண்டாம். 400 வெள்ளி கேட்கலாம். நான் பேசுகிறேன்,” என்றார் மாமா. எனக்கு மாமா சொன்ன ‘அவ்வளவு’ என்ற வார்த்தைச் செம்ம்ம கடுப்பை ஏற்படுத்தியது.

நான் சம்பளம் கேட்டேன் என்று கேள்விப்பட்டதும் “சம்பளம் கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டானா?” என்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்து நெஞ்சை கிழித்து முதுகு வழியாக வெளியேறிய மாதிரி முகரக்கட்டையை வைத்துக்கொண்டு “எவ்வளவு கேக்குறான்” என்றார் மாமாவிடம். மாமா தயங்கி தயங்கி “400 வெள்ளி” என்றார். “400 வெள்ளியா!!!???” என்று அளறினார் ஆசிரியர். நான் என்னமோ அநியாயத்திற்குச் சம்பளம் கேட்டுவிட்ட மாதிரி அவர் பண்ணிய அளிச்சாட்டியம் எனக்கு அங்கிருந்த கனமான எதையாவது எடுத்து நச்சு நச்சு நச்சுன்னு அவர் முகரையில் குத்தலாம்போல் இருந்தது.

ஆசிரியரும் மாமாவும் பேசினார்கள். கடைசியில் 200 வெள்ளி தருவதாக சொல்லிவிட்டு என்னமோ நான் அவரை ஏமாற்றிவிட்டதுபோல் சென்றுவிட்டார். “சம்பளம் கொடுத்துவிட்டேன். அவனின் செலவுகளை இனி அவனேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார் ஆசிரியர். காலை, மதிய உணவு அலுவகத்தின் அருகில் இருந்த ஓட்டுக்கடையில் முடித்துக்கொள்வேன். இரவு உணவு ஆசிரியரின் வீட்டில் முடித்துக்கொள்வேன்.

ஆசிரியர் புதுமாடி வீட்டுக்கு மாறினார். அந்த வீட்டின்மேல் மாடியில் எனக்கு தனி அறை கொடுக்கப்பட்டது. அந்த அறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். விடுமுறை நாளில் கூட அந்த அறையை விட்டு வெளியே வரமாட்டேன். அது கொஞ்ச நாள்தான் நீடித்தது. ஆசிரியர் வேறு புதுமாடி வீட்டுக்கு மாறினார். அந்த வீட்டின் மேல் மாடியில் ஒரு வரவேற்பறையும் 3 பெரிய அறைகளும் இருந்தன. ஆனால், என்னை வரவேற்பறையில்தான் தங்க வைத்தார். அந்த 3 அறைகளும் காலியாகத்தான் இருந்தது.

அந்த வீட்டில்தான் விசித்திரமான பிரச்னையெல்லாம் தலைவிரித்தாடியது. வீட்டிலிருந்து நடந்துபோகும் தூரம் அலுவலகம் இருந்தது. ஆனால் எனக்கு நடந்து போக அனுமதி இல்லை. நடந்து போனால் போலீஸ் பிடித்து விடும். இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற புளிச்சுப்போன காரணத்தைச் சொல்லி அவரே அலுவலகத்திற்கும் திரும்ப வீட்டிற்கும் அழைத்துச் செல்வர். அடையாள அட்டை இல்லாததால் என்னை ‘பாதுகாக்கும்’ முயற்சியாம் அது.

காலை 8.00 மணிக்கெல்லாம் அடித்து எழுப்பி விடுவார் ஆசிரியரின் மனைவி. ஆசிரியர் காலை 7.00 மணிக்கெல்லாம் தன் மகளைப் பள்ளிக்கு அனுப்ப சென்று விடுவார். நான் எழுந்து கிளம்பி உட்கார்ந்திருப்பேன். அவர் சாவகாசமாக 10.00 அல்லது 11.30 மணிக்குத்தான் பெரும்பாலும் வந்து அழைத்துச் செல்வார். அலுவலகத்தில் விட்டுவிட்டு வேலைகளைக் கொடுத்து விட்டு எங்காவது சென்று விடுவார். வேலைகளை முடித்து விட்டு காத்திருப்பேன். இரவு 12.00 அல்லது 1.00 மணிக்குதான் வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். சில நேரங்களில் விடியற்காலை 3.00 மணிக்கெல்லாம் வந்த கதையும் உண்டு. சொற்ப சம்பளம் என்பதால் இரவு உணவுக்குக் காசு இருக்காது. ஆசிரியர் வரும் வரை பட்டினியோடு காத்திருப்பேன்.

நள்ளிரவில் வீட்டிற்குச் சென்று சில்லிட்டுப்போன சோற்றைச் சாப்பிட்டு படுப்பேன். சில இரவுகள் சாப்பிட்டதை வாந்தியெடுத்துவிட்டும் படுத்திருக்கிறேன். எவ்வளவு தாமதாமாக வந்து படுத்தாலும் காலை 8.00 மணிகெல்லாம் ஈவு இரக்கமில்லாமல் எழுப்பிவிடுவார் ஆசிரியரின் மனைவி. துண்டைப் போர்த்திக்கொண்டு குளியல் அறையில் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு நான் குளித்துவிட்டு வருவேன். இதையெல்லாம் ரொப்ப நாள் தாங்க முடியவில்லை. அதனால் அலுவலகத்திலே தங்கி விடுறேன் என்று சொல்லி விட்டேன். அதன் பிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் இரவு உணவுக்குதான் வழியில்லாம் போனது. காசு இருந்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் பட்டினி கிடப்பேன். மாதத்தில் 15 அல்லது 20 நாள்கள் இரவில் பட்டினிதான். ஆனால் வேலையைச் சுதந்திரமாக செய்யவும் என்னை வளர்த்துக்கொள்ள வசதியாகவும் இருந்தது. வடிவமைப்பு பற்றியும் வண்ணங்களைப் பற்றியும் தமிழ் நாட்டிலிருந்து வரும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்து ஆராயத் தொடங்கினேன்.

இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு இறக்கைகள் முளைத்தன. முரட்டு கொம்புகளும் முளைத்தன. ஆசிரியராகட்டும், மாமாவாகட்டும். யார் பேச்சையும் மதிப்பதில்லை என மண்டையைக் காட்டத் தொடங்கினேன். என்னைபோல் அடிமாட்டுச் சம்பளத்திற்கு வேலை செய்ய வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று ஆசிரியரும் விட்டுவிட்டார். ஆனால் ஒரு பத்திரிகை வடிவமைப்பாளரின் நியாயமான சம்பளம் எவ்வளவு என்பது எனக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தார் ஆசிரியர். ரொம்ப நாள் கழித்து கொஞ்சமாக ஏறியது என் சம்பளம். இப்படியாக எட்டு வருடங்கள் அவரின் பத்திரிகையில் வேலை செய்தேன். இன்று சிலர் என்னை இத்துறையில் வளர்த்து விட்டது இந்த ஆசிரியர்தான் என்று சொல்லித் திரிகிறார்கள். என்னை வளர்த்து விட்டது அவரல்ல. நான் என்னை வளர்த்துக் கொள்ள அவர்தான் முக்கிய காரணமாக இருந்தார். ஆசிரியரைப்பற்றி நன்கு அறிந்த பலர் என்னிடம் இப்படி கேட்டதுண்டு “எப்படிடா அந்த ஆளுக்கிட்ட எட்டு வருடம் வேலை செஞ்சே?” என்று. அவர்களுக்கெல்லாம் தெரியாது; என்னை பற்றி நன்கு தெரிந்த ஒருவராவது ஆசிரியரிடம் கேட்டிருக்கலாம் “எப்படி சார் அவனை எட்டு வருடம் வேலைக்கு வச்சிருந்திங்க?!!!” என்று.

இந்த 25 வருட பயணத்தில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்ப்பத்திரிகைகளிலும் வேலை பார்த்துவிட்டேன் ஒவ்வொரு பத்திரிகையும் பெரிய நம்பிக்கையை காண்பித்து அழைப்பதும் பிறகு அது ஏமாற்றத்தில் முடிவதும் இப்போது நான் வேலை பார்க்கும் பத்திரிகை வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது ஒரு மாயை போல…

மிக சமீபத்தில்தான் என்னை பின் தொடர்ந்த அந்த மாயையை அடித்து சாகடித்தேன்…

தொடரும்…

6 comments for “இல்லாத திசைகள் 1 – ஏமாற்றங்களும் பின் தொடரும் நம்பிக்கையும்

  1. s.tamilthiruvarutselvi guna
    October 14, 2014 at 3:13 pm

    chandru annan mithu enakku epavume anbu atigam. ithu verum vaichol alla. avaru ootti vidda antha oru vai kavalam soru…. avaru pattiniyai iruntha tarunanggalil avar anubavitha valiyai…. nanum anibavikka kudathunnu ootti vidaro ennavo?! enn kanavarkite kuda soliruken. nayanam maran annan todanggi, tendral chandru annan todanggi, ippotaya maddy annan varai…. ellarume enakku oru vagayil per uthaviyai nalgiyavargal.
    chandru annanukkum enakkum neraya karuthu verupadugal vantirukku. ippo avvalava pesikolrathum illa nalum, anne enkira mariyatayum, yogi anni ennum mariyathayum ippavum nenjila irukku. avar ootti vidda oru vai sorukku indrum nandriyoda irukken. enakkum annan anni kuda ipavum pesi palaganumnu asaithan…. ana ethirigalai athigam uruvakki vidum intha thuraikku…. uravugalai valarkka teriyathu.
    intha katturayai todarnthu nan padippen. annai konjam terincha enakku, mulumayum teriya venumnu asai paduren.

  2. salmadhineswary
    October 14, 2014 at 5:56 pm

    படித்ததும் மனதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அழுத்தத்தைக் கொடுக்கிறது .உண்மை என்றும் கடந்து போவதில்லை , தினம் தினம் நம்மையே கடந்துகொண்டிருக்கிறது கற்றும் கொடுக்கிறது என்பது உண்மைதான் …

  3. sukran
    October 15, 2014 at 9:01 pm

    ……………………………. :'(

  4. sandru
    October 26, 2014 at 12:33 pm

    s.tamilthiruvarutselvi guna tq… sis…

  5. sandru
    October 26, 2014 at 12:44 pm

    salmadhineswary உண்மை சகோதரி… தமிழ் பத்திரிகை துரை கொடுக்கும் மன அழுத்தம் கனமானது…

  6. மஞ்சுபார்கவி
    October 28, 2014 at 3:58 pm

    தமிழ் பத்திரிகைகளின் நிலவரம் இங்கே வெட்டவெளிச்சம் சந்துரு. அங்கே வேலை செய்த நீங்கள், எங்களிடம், உங்களின் அனுபவக் கதைகளைப் பகிரும் அளவிற்கு தமிழ் மொழியில் தேறி உள்ளீர்கள் என்பது மனதிற்கு தெம்பு. சிறப்பான எழுத்துநடை. தொடரட்டும் எழுத்துப்பணி.

    தமிழ் சோறுபோடுதோ இல்லையோ ஆனால் மன உளைச்சலை தற்காலிகமாகப் போக்குகிறது.!

    எல்லா பத்திரிகைகளிலும் இதே நிலைதான் போலும். மறைந்த துணையாசிரியர் மாதவி பெருமாள் என் பழைய தோழி. எண்பதாம் ஆண்டின் இறுதியின் நாங்கள் இருவரும் ஒரே கம்பனியில் வேலை செய்தோம். QC ஆக. அப்போதிலிருந்து அவரின் இறுதிமூச்சு உலகை விட்டுச் செல்லும்வரை எங்கள் இருவரிடமும் விட்டகுறை தொட்டகுறை பழக்கம் இருந்துகொண்டே இருந்தது.

    என்னைவிட அதிவேகமாக வேலைகளைக் கற்றுக்கொண்டார் மாதவி. பேச்சுத்திறன், ஆங்கிலம், தமிழ், மலாய் என உச்சரிப்புப் பிழையில்லாமல் தெளிவாகப் பேசக்கூடியவர். வேலைகளை வெகு விரைவாக உள் வாங்கிக்கொண்டு `சபாஷ்’ பெற்றுவிடும் திறமைசாலி அவர். எது எப்படி இருப்பினும், தாம் ஒரு தமிழ் சார்ந்த துறையில்தான் வேலை செய்யவேண்டும். தமிழ் பள்ளி ஆசிரியராக வரவேண்டும், என்று சதா சொல்லிக்கொண்டே இருப்பார். `இதெல்லாம் என்ன வேலை.? தமிழுக்காக உழைக்கவேண்டும்,’ என்பார். பேசுகையில் ஆங்கிலம் கலக்காமல் தெளிவாகப் பேசுவார். நான் பேசுகிற எழுதுகிற தமிழைத் திருத்தித் தருவார். நல்ல குணவதி.

    சம்பள உயர்வு, பதவி உயர்வு என கொடுத்து நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கியும், தமிழுக்காக பணி செய்து கிடப்பதே அடியேனின் கடமை, என்று வசனமெல்லாம் பேசி, வேலையை ராஜினாமா செய்தார். நானும் ஷா ஆலமிற்கு வீடு மாற்றலாகி அங்கேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு `செட்டல்’ ஆகிவிட்டேன். இருவருக்கும் இடையே தொலைப்பேசி தொடர்பு இருந்தது, அதுவும் காலப்போக்கியில் இல்லாமல் போனது.

    கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஓரு நிகழ்வின் போது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப்பிறகு மீண்டும் இருவரும் சந்தித்து ஆரத்தழுவி நலவிசாரிப்பு செய்துகொண்டோம். அதே அன்போடு, உரிமையோடு, `ஏண்டா..இல்லேடா.. ஆமாண்டாம்மா..’ என அன்பாகப்பேசினார். தாம் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதையும், ஒரு தமிழ் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் சொன்னார். எண்பதுகளில் நான் பார்த்த அதே மாதவி.. அதே அறிவுடன், அதே கற்றல் திறனுடனும், அதே சிந்தனையுடனும், கொஞ்சம் கூட வளர்ச்சியடையாத மாதவியை நான் கண்டேன். தமிழ் பத்திரிகைகள் அங்கே பணிபுரிபவரக்ளை கிணற்றுத்தவளையாகவே வைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. கார் மோட்டார் வாகனம் ஓட்டுவதிலும் அவருக்கு நடுக்கம், பயம். தனி மனுஷியாக இருந்த அவர், அவருக்கென்று வாகனமோ, வீடோ இல்லாமல் ஒரு அறையில் வாடகைக்குத் தங்கி வாழ்த்துவந்துள்ளார்.

    `இன்னுமாலா நீ வீடு வாங்கல.. கார் வாங்கல..? பேச்சலர் லைஃப், எவ்வளவு ஜாலியாக இருக்கலாம்.. என்னாலா நீ.? என்று நான் சொன்னதிற்கு.. `ஐய்யோ, பத்திரிகை துறையில் எங்கே’லா சம்பளம் வருது..! சாப்பிட்டுக்கே போதாது.. அதனால் நான் இப்போ ஒரு வியாபாரம் செய்றேன்.. எனக்கு நாடு முழுக்க பொருளை விற்பதற்கு ஆள் தேவைப்படுது. வறியா? என்றார். அன்றிலிருந்து அவரின் நம்பர் என் கைப்பேசியில் சிணுங்கினால், எடுப்பதில்லை. எனக்கு டைரஃக்ட் சேல்ஸ் என்றால் அலர்ஜி.

    மன்னிக்கவும், மறைந்த மாதவியை மாசுமடுத்தவில்லை ஆனால் அவர் பணிபுரிந்த துறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. மருத்துவச்செலவு, பணியாள் இன்ஷுரன்ஸ், இபிஎஃப், சொஃக்சொ, தீராத வியாதி என்றால் மெடிகல் போர்ட், முறையான சம்பள உயர்வு, வருட போனஸ், உழியர் பாதுகாப்பு, கார் அலவன்ஸ், வீடு அலவன்ஸ், என எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கின்றதா அங்கே.(!?) என்று தெரியவில்லை. அதுவே நாங்கள் முன்பு பணிபுரிந்த இடத்திலேயே அவர் வேலை செய்திருந்தால், கம்பனி மூடுவிழா காண்கிறபோது, ஒவ்வொரு ஊழியருக்கும் வேலை செய்த வருடத்தைக் கணக்கில் கொண்டு தலா நூறாயிரம் ரிங்கிட் வரை சன்மானம் வழங்கியிருந்தார்கள்.

    பணம்தான் வாழ்க்கையா என்று கேட்டால்…?

    ஆம்..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...