பேய் வீடு

00000அண்மையில் வல்லினம் குழுவினர் ஏற்பாட்டில் ‘பேய் வீடு’ ஒன்று மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 பேய்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அந்த வீட்டில் நுழைந்த பலரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான பேய் வீடுகளுக்குள் நுழைந்துள்ள அனுபவத்தில் அதன் பலவீனங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பேய் வீட்டை நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் துணையுடன் உருவாக்கினேன்.

பேய்வீட்டின் இருளைக்கண்டவுடனேயே பலர் அலரத்தொடங்கினர். பக்கத்தில் இருப்பவர்கள் முகம் தெரியாத அளவுக்கு கும்மிருட்டாக அறையை உருமாற்றியிருந்தோம். ஒவ்வொரு வளைவிலும் பலவிதமான பேய்கள். பலவிதமான ஓசைகள். எப்போது இருண்ட பாதை ஒரு முடிவுக்கு வரும் என்ற தவிப்பு பலரது உதடுகளில் ஒலித்தாலும் உள்ளே நுழையும் கூட்டத்தினரின் எண்ணிக்கைக்குக் குறைவில்லை. உண்மையில் எல்லோருக்கும் பேய்களின் மீது அதீத ஆர்வம் இருந்தது.

***

பேய்கள் குறித்து பலரைப் போலவும் எனக்கும் சின்ன வயதில் நிறைய கற்பனைகள் இருந்தன. பேய்கள் இருக்கும் என நம்பியதாலேயே சாமியையும் அதிகம் பிடித்துப்போனது. எனது எட்டாவது வயதில் குடியேறிய கம்பம் ஒரு சின்னஞ்சிறிய வனப்பகுதி. அபூர்வமான பறவைகள் ஒலியும் மாதம் தவறாமல் பாம்புகளின் வருகையும் நிலைத்திருக்கும் நிலம். செங்கற்களின் துவாரத்தில்கூட குட்டிப்பாம்புகள் சுருண்டிருக்கும் . காலையில் பள்ளிக்குச் செல்லும் போது கீரிப்பிள்ளை அல்லது மூசாங் பூனை என ஏதாவது ஒன்றின் முகத்தில் விழித்தே தீரவேண்டும். ஏதோ ஒரு பறவை கொத்தி மிச்சம் வைத்த பழங்கள்தான் பெரும்பாலும் கிடைக்கும். அது விலங்குகளின் தேசம்.

இரவுகள் அப்போது சீக்கிரமே வந்துவிடும் எங்களுக்கு. சூரியன் அடங்கியதும் பூச்சிகள் ஓசை மூர்க்கமாகக் கேட்கும். என் கட்டைவிரலைவிட அளவில் பெரிய வண்டுகள் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கதவுகளை அடைத்து வீட்டுக்குள் அடங்கிவிடுவோம். அப்பா அப்போதெல்லாம் சிங்கப்பூரில் வேலை செய்ததால் அம்மாவும் ஆத்தாவும்தான் வீட்டுக்குக் காவல். அப்போதெல்லாம் பேய்கள் குறித்த பயம் மனம் முழுவதும் அப்பியிருக்கும். இரவில் சிறுநீர் கழிக்கும் போதுகூட அவ்வப்போது பின்னே திரும்பி திரும்பி பார்த்து முன்னே ‘குறி’யைத் தவறவிட்டதுண்டு. (இங்கு குறி என்பதை இலக்கு எனப் பொருள் கொள்க)

அதெல்லாம் கொஞ்ச நாள்கள்தான். மீசை அரும்பத்தொடங்கியதும் பேய் பயம் இருந்தாலும் எதிர்ப்பட்டால் மோதிப்பார்ப்பது என முடிவில் இருந்தேன். உடம்பின் திமிர் ஏறியிருந்த வயது அது. வெறித்தனமாகத் தின்பேன். பேய் கிடைத்தாலும் கடித்துவிட வேண்டும் என மூர்க்கம் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் முதன்முறையாக பேய் வீட்டுக்குள் போகும் வாய்ப்பு வந்தது. அது பேராக் மாநிலத்தில் இருந்த ஒரு கேளிக்கை மையத்தில் அமைந்திருந்தது. உள்ளே குடும்பத்தோடு நுழைந்ததும் இருள். பயங்கர கதறல் ஒலி. கால்களை, கைகளை ஏதேதோ உரசியதாக ஞாபகம். நான் கத்தவில்லை. ஆனால் அச்சம் சூழ்ந்திருந்தது. அவ்வனுபவத்திற்குப் பின் சில விடயங்களை உறுதி செய்துக்கொண்டேன். அதில் உறுதியானதும் பிரதானமானதும் ஒன்றுதான்: பேய்களுக்கு இருளில் கண்கள் தெரியும். எனவே அதனுடன் என்னால் சண்டையிடமுடியாது.

இருள் கொடுத்த அச்சம் தீரும் முன்பே எனது நண்பன் ஒருவன் சொன்ன கதை பேய்கள் மீது மேலும் பயத்தைக் கூட்டியது. அவன் கிருத்துவ நண்பன். தனது வீட்டில் பேய் நுழைந்துவிட்டதாகவும் ஏசுவின் சக்தியால் அவர்கள் அப்பேயை விரட்டி அடித்தனர் எனவும் கூறினான். அவன் சொன்னப்பேய் மிகக் கொடூரமாக இருந்தது. உடலில்லாமல் தலை மட்டும் அந்தரத்தில் பறந்தது. நான் அக்கதையால் அச்சம் அடைகிறேன் என உறுதிப்படுத்தியப்பின் என்னை கிருத்துவ மதத்தில் இணையும்படி வற்புறுத்தினான். அதனால் என்னாலும் எந்தப் பேய்களின் தொல்லையிலிருந்தும் தப்பிக்க முடியும் என்றான். எனக்கு நண்பனின் உக்தி புரிந்தது. எளிய மக்களின் அச்சங்களை எவ்வாறு மதம் பயன்படுத்திக்கொள்கிறது என அந்த வயதிலேயே புரியவைத்தது அவன்தான். கொஞ்ச நாள்களில் நான் அந்த பயத்தில் இருந்து மீண்டேன். சாத்தான்களை அடையாளமாகக் கொண்டு இயங்கும் இசை ஆர்வளர்களுடன் நெருக்கம் ஏற்பட்டதெல்லாம் அப்போதுதான்.

எனக்கு அதற்கு முன் இசை என்பது மென்மையானது என்றும் இறைத்தன்மைக் கொண்டது என்றுமே அறிமுகம். சங்கீதம் பயிலும் தோழிகள் இருந்ததால் இசை குறித்த சில முன்முடிவுகள் இருந்தன. ஆனால் பள்ளியில் பயின்ற சில மலாய் நண்பர்கள் மண்டையோடுகளை பலவிதமாக வரைந்திருந்த இசை ஆல்பங்களைக் கேட்பதில் மும்முறமாய் இருந்தனர். இரைச்சலான இசை அது. பாடகர்களும் நீண்ட முடியுடன் கறுப்பு உடையுடன் காணப்பட்டனர். அவர்கள் கழுத்தில் பெரிய பெரிய முரட்டு சங்கிலிகள். காலணிகளில் முள்கள். முகத்தில் ஏதேதோ வரைந்திருந்தனர். அந்த இசைக்கலாச்சாரத்தை ஏற்க கொஞ்சம் சிரமமாக இருந்த காலக்கட்டத்தில்தான் ‘தி கீய்ஸ்’ வெளிவந்து மலேசியத் தமிழர்களைத் திணரடித்தது. மக்கள் எளிதாக அதை ஏற்றுக்கொண்டனர். இரைச்சலான, வரிகள் விளங்காத, அர்த்தமற்ற ஒரு வெடிப்பை ரசிக்க அனைவருக்குமே தெரிந்திருந்தது. அது மனிதனுக்குள் இருக்கும் இருண்ட பகுதி. சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து ஒடுங்கி இருந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இருண்ட பகுதியை இசை உள்ளிட்ட இதர கலைகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர் என்றே இன்றுதோன்றுகிறது. அது ஒரு பாணி என்பதைவிட புனிதமாக்கப்பட்ட கலையை உடைத்து வெளியேறும் மூர்க்கம் என மட்டுமே சிந்திக்க முடிகிறது. எந்தக் கலையும் ஒரு தரப்பினருக்கு மட்டுமல்ல அது அனைவருக்குமே வெவ்வேறு வடிவங்களில் வசப்படுகிறது. மென்மை ஒரு இசை ரகம் என்றால் வன்மையும் இசைதான். ஒளி வாழ்வின் பகுதியென்றால் இருளும் அதன் பகுதிதான். இறைத்தன்மை மனதின் ஓர் அம்சம் என்றால் சாத்தானின் தன்மையும் அதன் மற்றுமொரு அம்சம்தான்.

நானும் அக்காலக்கட்டத்தில் கறுப்பு உடைகளையே அதிகம் அணிந்தேன். குறிப்பாக மண்டை ஓடு வைத்த சட்டை அணிவதில் ஆர்வம் அதிகம் இருந்தது. முடியை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினேன். பேயாகத் திரிவதில் கௌரவம் இருந்தது அப்போது. ‘கீய்ஸ்’ குழுவினரின் அத்தனைப்பாடல்களும் அத்துப்படி. நான் எதிர்மறையின் நிழலாகத் திரிந்தேன்.

***

கம்பத்தில் இருந்தபோதும் பின்னர் கல்லூரிக்குச் சென்றபோதும் பேய்கள் குறித்த பேச்சு வருமே தவிர நான் எந்தப் பேயையும் பார்த்ததே இல்லை. கல்லூரியில் ஒரு நண்பருக்கு பேயெல்லாம் பிடித்து அலரிக்கொண்டிருந்தபோது கூட எனக்கு எதிலுமே ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஓஷோவை வாசித்துக்கொண்டிருந்த காலம் என்பதால் எல்லாமே பகடிக்குறியதாகத் தெரிந்தது. அந்த வயதில் நான் கடவுளை நம்பாததைப் போல பேயையும் நம்பாமல் இருந்தேன்.

கல்லூரியில் பேய் பிடிப்பது படு சுவாரசியம். எல்லோரும் விழித்துக்கொண்டிருப்பார்கள். முகங்களில் கலவரம் இருக்கும். நெஞ்சை நிமிர்த்தி நடந்த ஆண்சிங்கள் எல்லாம் இரவு எட்டுக்குப் பின் பெட்டிப்பாம்பாகி விடுவார்கள். பேய் என்ற சொல்லுக்கு இருக்கும் சக்தி ஆச்சரியமானது.

மன்னன் இதழில் இணைந்திருந்தபோது ரய்லி என்பவர் தொடர்ச்சியாக பேய்க்கதைகள் எழுதுவார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஒருமுறை அவரைச் சந்தித்தபோதுதான் அவருக்கு அவ்விதழின் ஆசிரியர் தலைப்பைக் கொடுப்பதும் அதற்கு ஏற்ப அவர் பேய்க்கதை எழுதுவதும் தெரிந்தது. எனக்கு பேய்கள் மேலுள்ள ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்தொடங்கிய காலம் அது. ஆனால் எங்கள் வீட்டில் பேய் நுழையும் என அப்போது நான் எதிர்ப்பார்க்கவில்லை.

முதலில் அந்தப் பேய் வீட்டில் புகுந்து திருடியது ஒரு கைத்தொலைப்பேசியை. என் அம்மாவில் கைத்தொலைப்பேசி அது. வீடு முழுக்கத்தேடியும் கிடைக்கவில்லை. அப்போது நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் இருந்ததால் அத்தை, ஜின் ரக பேயெல்லாம் இது போல ஏவிவிடப்பட்டு பொருள்களைத் திருடும் என்றார். அதற்கேற்ப சில மர்மங்களும் வீட்டில் நடக்கத்தொடங்கியது. வீட்டில் இருந்த அத்தை மகனான 10 வயது சிறுவனுக்கு சில வினோத உருவங்கள் கண்ணில் படத்தொடங்கின. அவன் பயந்தவனாக இருந்தான். அடுத்தடுத்த வாரத்தில் எனது பணப்பை எங்கோ ஓர் இருட்டில் விழுந்துகிடந்ததாலும் வீட்டில் இருந்த மற்றுமொரு கைத்தொலைப்பேசி வெளியே சாக்கடையில் கிடக்கவும் வீடே ஆட்டங்கண்டது. அத்தைதான் யாரோ போமோவைப் பார்த்துவிட்டு வந்தார். வீட்டில் ஒரு பேய் உலாவுவதை அவர் உறுதி செய்திருந்தார். அவர் ஆலோசனைப்படி வீடு முழுக்க அரிசி தூவப்பட்டது. பேய் நடந்தால் அதன் பாத அச்சு தெரியும் எனக் காத்திருந்தோம்.

மூன்று நாள்களின் முடிவு தெரிந்துவிடும் என்றார்கள். எந்தக் காலடியையும் காணவில்லை. ஆனால் அந்த மூன்று நாள்கள் வீடே பதற்றமாக இருந்தது. பேயுள்ள வீடு சதா விழித்துக்கொண்டே இருக்கிறது. அது மௌனத்தைக்கூட சத்தமாக அனுஷ்டிக்கிறது. மூன்று நாள்களுக்குப் பின் வீடு கழுவப்பட்டது. எனக்கு மட்டும் ஒரு பொரி மண்டையில் பறந்துகொண்டே இருந்தது. அத்தை மகனான பத்துவயது சிறுவனை அழைத்து என் நவீன ரக கைத்தொலைப்பேசியில் உள்ள சிம் கார்ட்டை கலற்றி உதவும் படி கூறினேன். ஒரிரு வினாடியில் அதை மிக லாவகமாகச் செய்யவும் அவனை இறுக்கப்பிடித்தேன். காணாமல் போன கைத்தொலைப்பேசி எங்கே என விட்டேன் ஒரு அறை. அவன் திணரிவிட்டான். அலமாரிக்குப் பின் ஒளித்து வைத்திருந்த கைத்தொலைப்பேசியை எடுத்து வந்தான்.

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் யார் முதலில் குசு விடுகிறார்களோ, அவர்கள் தங்கள் மேல் சந்தேகம் வராமல் இருக்க முதல் ஆளாக நாற்றம் அடிப்பதாக மூக்கை மூடிக்கொள்வது வழக்கம். யார் கண்ணுக்கும் தெரியாத உருவம் அவன் கண்ணுக்குத் தெரிவது முதலில் எனக்கு அவன் மேல் சந்தேகத்தைக் கிழப்பியது. 10 வயதில் கைத்தொலைப்பேசியைக் கலற்றி பூட்ட முடிவதால் அவனுக்குக் கைத்தொலைபேசி பழக்கமான ஒரு பொருளே என முடிவெடுத்தேன். (இப்போது இதுபோன்ற சிறுவர்கள் ஏராளம் உள்ளனர். நான் சொல்லும் சம்பவம் ஏழெட்டு வருடத்துக்கு முந்தையது)அம்மாவுக்குத் தெரியாமல் யாரோ நண்பனுக்கு அழைக்க எடுத்தவன் ஆள் வந்தவுடன் கைத்தொலைபேசியைச் சுக்குநூறாகக் கழற்றி அலமாரிக்குப் பின் புறம் வீசியுள்ளான். 10 வயது சிறுவன் கைத்தொலைப்பேசியை இயக்கமுடிவது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த நாளே வீட்டில் பேய் பயம் ஓடியது. நிச்சயமாக எங்கள் வீட்டில் பேய் இருக்கிறது என கூறிய போமோவின் மீது வீடே கோபப்பட்டது. பேய் ஒரு வணிகர்களின் கற்பனை என மனதில் பதிந்து போனது.

பல இடங்களிலும் அதற்குப்பின் அமைப்பக்கப்பட்டிருக்கும் பேய் வீடுகளுக்குள் நுழைந்து பார்த்ததுண்டு. ஒரு முறையேனும் சின்ன திடுக்கிடல் கூட ஏற்பட்டதில்லை. மனம் அவர்கள் மனிதர்கள் என உறுதியாக நம்பிவிடுகிறது. அதையும் மீறி பேயின் மீதான பயம் எவ்வாறு மனிதர்களை ஆக்கிரமிக்கிறது என நாங்கள் உருவாக்கிய பேய்வீட்டின் மூலமே கவனிக்க முடிந்தது.

***

பேய்கள் குறித்த இரண்டு கதைகளை என்னால் மறக்க முடியாது. இப்போதும் நான் நினைத்தபோதெல்லாம் சிரிப்பு வரும் சம்பவங்கள் அவை. முதலாவது மன்னன் ஆசிரியர் அருண் சொன்னது.

சின்ன வயதில் அவர் தம்பிக்கு சிறுநீர் வருகிறது எனச்சொல்ல இவர் இரவில் காட்டுப்பக்கமாக தம்பியை அழைத்துச்சென்றிருக்கிறார். தம்பி சிறுநீர் கழிக்கத் தயாராக இவர் ‘சிறுநீர் கழி’ என்பதற்கு ‘பேய்’ என்றிருக்கிறார். அவ்வளவுதான். தம்பி அலரியடித்துக்கொண்டு உள்ளே ஓட… அண்ணன் பயங்காட்டினார் என்ற புகாரின் கீழ் அருணுக்கு அடி விழுந்திருக்கிறது.

இரண்டாவது சம்பவம் கவிஞர் அகிலன் சொன்னது. அவரும் அவர் நண்பர்களும் சின்ன வயதில் தோட்டத்தில் இருந்த ஆசிரியர் வீட்டில் கூடி படிப்பார்களாம். ஒருநாள் ஆசிரியர் இவர்களை வீட்டில் விட்டுவிட்டு அவசரமாக வெளியேற இவர்கள் வெள்ளைப்போர்வையைப் போர்த்திக்கொண்டு சாலையில் வருவோர் போவோரிடம் பேய் பயம் காட்ட திட்டமிட்டுள்ளனர். சிலர் பயந்து பின்வாங்கிப்போக உற்சாகமானவர்கள் தொலைவில் வரும் மோட்டார் சைக்கிளோட்டியை பயங்காட்ட வெள்ளைப்போர்வையுடன் சாலையில் பாய்ந்துள்ளனர். மோட்டார் சைக்கிளோட்டி பயந்து கீழே விழ அது தங்கள் ஆசிரியர்தான் என அப்போதுதான் புரிந்திருக்கிறது. போர்வையுடனே “சார்..சார்…சோரி சார்” என அவர்களை நெருங்க பயத்திலிருந்து மீளாத அவர் ஓட்டம் எடுத்து பின் சுதாகரித்து அவர்களைத் திட்டியிருக்கிறார்.

***

மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வைக் கொண்டுள்ள மனிதன் எனும் ஜீவராசிக்குத்தான் தனது உணர்வுகளைத் தானே சீண்டிப்பார்ப்பதில் எத்தனை ஆனந்தம். மீண்டும் மீண்டும் ஒரேவிதமான அனுபவங்களில் தொய்ந்துள்ள மனித மனம் சதா சவால்களை அனுபவிக்கவும் காணவும் ஏங்குகிறது. முகநூல் , வாட்சப் போன்ற பொது ஊடங்களில் அபத்தக் காட்சிகளை பரவலாகப் பகிர்வது இதன் தேவையினால்தானோ என்று எண்ணவே தோன்றுகிறது.

‘பேய்’ மனிதன் வெளிச்சத்தைக் கண்டுப்பிடித்தப்பின்புதான் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு முன் இரவு இரவாகவும் பகல் பகலாகவுமே இருந்துள்ளது. மனிதன் வாழ்வை பேய்கள் சுவாரசியப்படுத்துகின்றன. தனது கற்பனைக்கு எட்டியவரை மனிதன் பேய்களின் உருவங்களை உருவாக்குகிறான். அவற்றிற்கு சக்தியைக் கொடுக்கிறான். பின்னர் அவனே அதற்கு பயப்படுகிறான்.

வழக்கமாக நகரும் வாழ்வில் ஏதோ ஒரு மர்மம் இருப்பது வாழ்வை சட்டென சுவாரசியப்படுத்திவிடுகிறது. கோயில் சிலையின் மேல் பாம்பு ஊர்வது, பிள்ளையார் பால் குடிப்பது என எப்போதுமே அதியங்கள் நடக்க துடிக்கிறோம். பேசுவதற்கு வாழ்வற்ற நிலையில் புதிது புதிதான நன்மை தீமைகளைக் கண்டடைந்து சாதா அது குறித்து அங்கலாய்க்கிறோம். நமக்கு பேச செய்திகள் வேண்டும். தொல்மனிதன் குகைகளில் கோடுகளைக் கிறுக்கியதின் எச்சம் நம்முள் இன்றும் இருக்கிறது போல.

பள்ளியில் நடந்த விழாவில் வேறெந்த விளையாட்டுகளை விடவும் பேய்வீட்டில் வரிசை நீண்டிருந்ததும்; அச்சத்தில் அலறிய பலரும் மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து பயந்து விழுந்ததும் மனித மனதின் ஆழத்தை அறியவே வாய்ப்பாக இருந்தது. அவர்கள் உண்மையில் எந்த இருளுக்குள் நுழைகிறார்கள் என்றும் எந்தப் பேயைக்கண்டு அலறுகிறார்கள் என்றும் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. அதற்கு ஒரு நாளைக்கு முன் கல்வி கற்கும் வகுப்பாக இருந்த அறை இருளானப்பின் ஏன் அவர்களுக்கு அத்தனை சுவாரசியமாகவும் திகிலாகவும் மாறுகிறது என யோசிக்க வேண்டியுள்ளது.

ஓஷோ சொல்வார், நாம் கதறி அழும்போது நமக்குள் இன்னொரு மனம் சிரிக்கவும் தயாராக இருக்குமாம். அழுகை ஒரு பாவனை மட்டுமே என்கிறார். பயமும் அப்படித்தான் போல.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...