கடந்த 20.9.2014 அன்று சுங்கை பட்டாணி நகரின் சிந்தா சாயாங் கிளப் (Cinta Sayang Club) மண்டபத்தில் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ சிறுவர் நாவல் வெளியீடு கண்டது. அந்நிகழ்வு மலேசிய தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனிச்சிறப்பு மிக்கதாககவும் அமைந்தது. வழக்கமாக நாட்டில் வெளியிடப்படும் தமிழ் நாவல்களை விட இந்நாவல் வெளியீடு வேறுபடக்காரணம் சிறுவர்களை வாசகர்களாக கோரும் முதல் நாவல் என்னும் தகுதியை இந்நாவல் பெற்றிருப்பதுதான்.
மலேசியாவில் தமிழில் சிறுவர் நாவல் எழுதுவதும் அதை நூலாக வெளியிடுவதும் மிகவும் புதிய முயற்சியாகும். நாம் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இந்த அறிய முயற்சியை பாராட்டி வரவேற்கும் அதே சமயம் சிறார் இலக்கியம் குறித்த தெளிவையும் அதன் தேவையையும் அறிந்திருப்பதும் அவசியம்.
சிறார் இலக்கியம் என்பது உண்மையில் நமக்கு புதிது அல்ல. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி இலக்கியங்களும், பஞ்சதந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற புனைவு இலக்கியங்களும் நமக்கு மிகவும் பழக்கமானவையே. பொதுவாக, ‘பாட்டி கதைகள்’ என்று நாம் குறிப்பிடும் கதைகள் அனைத்துமே பெரும்பாலும் சிறுவர்களுக்காக வாய்மொழியாக சொல்லப்படும் இலக்கிய வடிவங்கள்தான். பாரதி பாடிய பாப்பா பாட்டும் சிறுவர் இலக்கிய வடிவமேயாகும். ஆனால், அவை மரபானவை. அதாவது சிறுவர்களை மையமாக காட்டி ஒரு நன்னெறியை மக்கள் மனதில் குடியேற்றும் முகமாக அவை படைக்கப்பட்டன.
மரபான சிறார் இலக்கியம் என்பதற்கும் தற்போது நாம் குறிப்பிடும் சிறார் இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நாம் பஞ்சதந்திர கதைகள் முதற்கொண்டு பாட்டி கதைகள் வரை பல கதைகளையும் ஆய்ந்து பார்த்தால் அவற்றின் கதைப்போக்கின் நோக்கம் ஒரு நன்னெறி கூற்றை அல்லது ஒரு படிப்பினையை மையமாக கொண்டனவையாக இருப்பதைக் காணலாம். ஒரு கதையின் இறுதியில், வாசகனுக்கு இக்கதையில் உள்ள நன்னெறி பண்பு இதுதான் என்ற பதிவை மட்டுமே அவை விட்டுச்செல்கின்றன. கதை முடிவில் கதைச்சுவையும் வாசிப்பு அனுபவமும் முற்றாக மறைந்து நன்னெறிக் கூறு மட்டுமே இளம் வாசகனுக்கு மனதில் பதியவைக்கப்படுகிறது. இதன் வழி, இலக்கியம் கற்பது, அல்லது படைப்பிலக்கியங்களை வாசிப்பது என்பது நன்னெறி அல்லது நீதி நெறிகளை இலகுவாக புரியவைக்கப் பயன்படும் ஒரு கருவியாகவே தேங்கிவிடுவதைக் காணமுடிகிறது.
மேலும் ஒரு நன்னெறி கருத்தைச் சிறுவர்களின் மனதில் பதிவிடும் நோக்கோடு சொல்லப்படும் கதைகள் பெரியோர்கள் சிறுவர் மேல் செலுத்தும் அதிகாரத்தின் அழகிய வடிவமாகவே அமைந்து விடுகிறது. மேலிருந்து கீழ் நோக்கி ஆளுமையைச் செலுத்தி தங்கள் அதிகாரத்தை நிறுவ முனையும் மனித மனத்தின் வெளிப்பாடாக மரபான சிறுவர் இலக்கியம் செயல்படுகிறது. இச்சூழல் சிறுவர்களின் அக உலகுக்கும் புற உலகுக்கும் முன்னுரிமை தராததால் ஏற்பட்ட விளைவே. இருபதாம் நூற்றாண்டு மத்தியில் மனோவியல் ஆய்வுகள் சிறுவர்களின் அக உலக பிரமாண்டங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கின. சிறுவர்களின் மனம் எந்நேரமும் கட்டுக்கடங்கா கற்பனைகளைச் சுரந்துகொண்டிருக்கக் கூடியவை. அவர்களின் கற்பனைகள் எல்லாவித தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டவை. புதிது புதிதாக உதயமாகிக் கொண்டே இருக்கக் கூடியவை. அதற்கேற்ப மேற்குலக இலக்கியமும் குழந்தைகளின் கற்பனை வளர்ச்சிக்கும் அறிவு பசிக்கும் தீனி போடும் விதமாக வெளிவர தொடங்கின. இதுவே பின்னர் வளர்ந்து சிறார் இலக்கியம் என்று நிலை பெற்றது.
நம் வீட்டின் சிறுவர்களின் கையில் இருக்கும் சிறு காலித் தீப்பெட்டி, என்னென்ன வடிவங்கள் எடுத்து மறைகின்றன என்பதை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. நமக்கு அது வெறும் காலித் தீப்பெட்டிதான். ஆனால் சிறுவர்களுக்கு அந்த காலித் தீப்பெட்டி ஒரு வாகனமாகவோ, ஒரு கட்டிடமாகவோ அல்லது ஒரு இயந்திர மனிதனாகவோ நொடிப்பொழுதில் மாறக்கூடும். காரணம் நாம் தர்க்க ரீதியாக பிரச்சனைகளை அணுகுகிறோம். ஆனால் சிறுவர்கள் கற்பனை உலக வாசிகள். அவர்கள் கைவசம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே கற்பனையின் வழி மிகப்பெரிய சாம்ராஜியங்களை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
ஆகவே சமகால சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களின் மன உலகத்தைக் காட்டக் கூடியதாகவும் அவர்களின் கற்பனைக்கு தீனி போடக் கூடியதாகவும் அமையவேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு புனைவில் முன்வைக்கப்படும் சம்பவங்களும், திருப்பங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விட்ட ஒரு நன்னெறி கருத்தை நோக்கமாக கொண்டிருத்தல் சிறுவர்களின் உளமார்ந்த தேடலுக்குத் தடையாக இருந்துவிடக்கூடும். நன்னெறி கூறுகள் என்று துருத்திக் கொண்டு காட்டாமல் அவை காட்சியிலும் கதையிலும் இயல்பாக பயின்று வருதல் நலம். மேலும் தெளிவாக கூறுவதென்றால், நன்னெறி கருத்துக்காக கதை கூறுதல் மாற்றப்பட்டு கதைக்குள் நன்னெறி கூறுகள் இருப்பதே சிறப்பு.
அவ்வகையில் ‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ நாவல் சமகால சிறார் இலக்கியத்தின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அதன் கதை போக்கும் திருப்பங்களும் கதைமாந்தர் உரையாடல்களும் சிறுவர்களுக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ளது. சிறுவர்களின் கற்பனைகள் எல்லை இல்லாதவை என்பதால் அவர்களின் தேடல்கள் நீண்டு கொண்டே போகும் வண்ணம் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகம் முடிவிலும் புதிதாக ஒரு மர்ம முடிச்சு போடப்பட்டு இருப்பது வாசிப்பை துரிதப்படுத்த உதவுவதோடு ஆர்வத்தையும் தூண்டும் வண்ணம் உள்ளது
பொதுவாக இன்றைய சமுதாயத்தின் சவால்கள் பல. அதிலும் பெற்றோருக்கு பிள்ளைகளை நலமுடன் வளர்த்தெடுப்பதில் உள்ள சவால்கள் எண்ணில் அடங்கா. இந்த சவால் மிகு சூழலில் பெரும்பாலும் நாம் பலி கொடுப்பது வாசிப்பு பழக்கத்தையே. பொதுவாக வாசிக்கும் நேரம் தொலைக்காட்சியிலும் தொலைத்தொடர்பு சாதனங்களாலும் பாழாகிறது. ஒரு மாதத்தில் ஒரு நூலைக் கூட வாசிக்காதவரிடம் நாம் கேட்கும் போது அவர் முன்வைக்கும் வழக்கமான சமாதானம் “ நேரம் இல்லை” என்பதே. ஆனால் அவரிடம் நாம் அந்த மாதத்தில் தொலைக்காட்சியிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் செலவிட்ட நேரத்தைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும். தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நாடகங்களை ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமோ 1 மணி நேரமோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் பலர்தான் வாசிக்க நேரம் இல்லை என்று கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால், வாசிப்பின் சுவையையும் அதன் அவசியத்தையும் உணர்ந்தவர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை வாசிப்பை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கின்றனர். வாசிப்பு பழக்கத்தால் ஒரு மனிதனின் வாழ்க்கை பாழானது என்னும் வரலாறு கிடையாது என்பது தெரிந்தும் நாம் இன்னும் வாசிக்கத் தயங்கிறோம்.
யூபிஎஸ்ஆர், பிதி3, எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு வினாக்களின் வடிவம் இப்போது பெருமளவில் மாற்றம் கண்டு விட்டது. கட்டுரை எழுதும் பணியோடு கதை எழுதும் பணியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் சிறுகதைகளையோ நாவலையோ வாசித்தறியாமல் தேர்வில் நல்ல விதமாக எழுத முடியாது. கற்பனை ஆற்றலும் எழுத்தாற்றலும் வாசிப்பின் வழியே வளரக்கூடியவை. அதற்கு ‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ போன்ற சுவையான நாவல் வாசிப்பு மிக அவசியம்.
வாசிப்பு பழக்கத்தைச் சிறுவர்கள் மத்தியில் தூண்டி விடுவது பெற்றோர் கடமை. வாசிப்பு என்பது பள்ளியோடும் அரசாங்கத் தேர்வோடும் மட்டும் தொடர்புடையது என்று நம்மில் பலர் எண்ணுவதால்தான், பல்கலைக்கழகம் வரை சென்று விட்ட மாணவனும் அவன் வாழ்நாளில் ஒரு நாவலைக் கூட வாசித்தறியாத அவலம் தொடர்கிறது. அப்படியே வாசித்திருந்தாலும் பள்ளித் தேர்வு வாரியம் நிர்ணயித்த தேர்வுக்குறிய நாவலாக மட்டுமே அது இருப்பது கண்கூடு.
தமிழர்களின் பண்டைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்ததாக நமது வரலாறு கூறுகிறது. கடந்த 1000 ஆண்டுகளாக அது மெல்ல நலிவுற்று இன்று பலவேறு போராட்டங்களுக்கு மத்தியில் தத்தலிக்கும் ஒரு இனக்குழுவாக மாறிப்போக எது காரணம் என்று சிந்திக்கும் போது பல காரணங்கள் வரிசை பிடித்து நிற்கின்றன. அவற்றில், அறிவு நூல்களை வாசிக்கும் பழக்கம் நம்மிடம் மெல்ல மறைந்து போனது மிக முக்கியமானதாகும். திருக்குறள் போன்ற அறிவுக் கழஞ்சியங்கள் மக்கள் வாசிப்பில் இருந்து விலகி சென்றுவிட்டன. அடுத்து, அன்றாட வயிற்றுப் பாட்டைக் கவனிப்பதே பெரும் போராட்டமானதால் தமிழ் மக்களின் கற்பனை ஆற்றலில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சங்ககால தமிழனின் கற்பனையும் காப்பியகால தமிழனின் கற்பனையும் இன்றும் நம்மை வியக்கச்செய்கின்றன. ஆனால் அந்த நிலை தொடராதது நமது துயரமாகும்.
ஆகவே, நாம் நம் இளைய சமுதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல அவர்களிடம் சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தையும் கற்பனையாற்றலையும் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். அவ்வகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளமான எதிர்காலத்திற்கு நல்ல துவக்கமாக கே.பாலமுருகனின் இந்தச் சிறுவர் மர்ம நாவல் அமையும் என்றே சொல்லலாம்.
எழுத்தாளர் கே.பாலமுருகன் சிறுவர்களுக்கான மிகச் சரியான மொழியை இந்த நாவலின் வழி கண்டடைந்துள்ளார். அதுவே சிறார் இலக்கியத்திற்குத் தேவையான ஒன்று.
சிறுவர் நாவலைப் பெற விரும்புபவர்கள் கே.பாலமுருகனை (0164806241) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.