1.
ஒரு தவித்த பொழுதில்
தனித்திருக்கையில்
என் காலத்தைத் தின்று தீர்ப்பதைப் போல்
பிறந்தேவிட்டது என் கவிதை…
எப்போதும் ஒரு வலியென அது வெடித்து வெளியேறும்
ஒரு பஞ்சு விதை வெடிப்பதைப் போல…
ஒரு மென்கோது கொண்ட முட்டை
சட்டென கைத்தவறி விழுவதைப் போல…
என் கவிதை ஒரு போதும்
என்னைத் தவிர வேறொன்றைப் பார்க்காது…
என்னிலேயே தன்னிறைவு கொண்டது அது…
மனம் பிறழும் ஒரு புள்ளியில் அது விழித்தெழும்…
பஞ்சு விதை ஒன்றும் வெடிக்கத் தொடங்கலாம்
அதே பொழுதில்…
2
எல்லா இடங்களையும்
என்னைப் போன்ற ஒன்றை ஏக்கத்துடன்
தேடுகிறது கவிதை…
இரைச்சலின் சதை கிழித்து
அது மௌனத்தைப் பாடுகிறது…
பிரிதலின் கண்ணீர் வாங்கி அது
காதலைக் கொண்டாடுகிறது…
இறந்தகாலங்களைக் அது கொன்று புதைத்திருக்கிறது…
நிகழ்காலத்தை வார்த்தையில்
தின்றபடி
எதிர்காலம் குறித்த பிரக்ஞை ஏதுமின்றி
அது புன்னகை புரிகிறது…
ஒரு கவிதை பிறக்கிறது வாழ்கிறது
மரணத்தின் சாயலின்றி…
3
இப்போதுதான் பிறந்த இக்கவிதை
இனி எப்போதும் பிறக்கவே முடியாத இந்த கவிதை
அமைதியாக தன் போக்கில் கிடக்கிறது
நமக்கு முன் இறந்த எல்லாரையும் போல…
4
சில சொற்களுக்கிடையில்
சொல்ல முடியாத சொற்கள்
கவிதை…
5.
ஒரு மழைக்காலத்தின் முடிவு நாள் இன்று
மேகங்களைக் காணவில்லை
வானத்தின் பாதங்களுக்கு கீழே
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறது வானவில்…
எங்கோ தூரத்தில் அஸ்தமனத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது
என் கவிதை….
6.
ஒரு கவிதை
சில சொற்களாலும் பல எழுத்துகளாலும்
ஆனது…
ஒரு கவிதை
சில மௌனங்களாலும் பல பேரிரைச்சல்களாலும்
ஆனது…
ஒரு கவிதை சில கொலைகளாலும்
பல தற்கொலைகளாலும் ஆனது…
இந்தக் கவிதை என்பது மட்டும் ஏன்
உன்னாலும் என்னாலும் ஆனதாக
இருக்கக் கூடாது…