கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.
எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்குள்ள கல்வி சூழல் குறித்து அறியும் ஆவலில் பேசத்தொடங்கினேன். சுதந்திரமான கல்வி முறை. கற்பனை ஆற்றலை வளர்க்கும் பாடத்திட்டம். திறனை மையப்படுத்தியப் பள்ளிகள் என கவர்ச்சிகரமான கல்விச்சூழலை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது. அவர் பேச பேச எனக்கு Tetsuko Kuroyanagi எழுதிய ‘Totto-chan, The Little Girl at the Window’ எனும் நூல் ஞாபகத்துக்கு வரத் தொடங்கியது.
ஜப்பானிய தொலைக்காட்சியில் தோன்றும் புகழ்ப்பெற்ற நடிகை மற்றும் அறிவிப்பாளரான Tetsuko Kuroyanagi எழுதிய குழந்தைகளுக்கான இந்நூல் முதல் ஆண்டிலேயே 45,00,000 விற்பனையானது. ஒருவகையில் இது Tetsuko Kuroyanagi அவர்களின் அனுபவக் கதை. திரு.கோபயாஷி என்பவரின் சுய முயற்சியில் உருவான ‘டோமோயி’ எனும் பள்ளியைப் பற்றியும் அப்பள்ளியில் தான் பயின்ற அனுபவம் குறித்தும் இந்நூல் சுவாரசியமாக விவரிக்கிறது.
டோட்டோ – சான் ஒரு பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறாள். அதற்குப் பள்ளி நிர்வாகத்திடம் சில காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், அவள் அடிக்கடி மேசை டிராயரை இழுத்து மூடுகிறாள். அது மற்ற மாணவர்களுக்குத் தொல்லையாக இருக்கிறது. இரண்டாவது காரணம், அவள் அடிக்கடி எழுந்து சன்னலின் ஓரம் சென்று விடுகிறாள். அங்கு செல்லும் வீதி இசைக்கலைஞர்களை அழைக்கிறாள். இந்தக் காரணங்கள் அவளை பள்ளியிலிருந்து நீக்க போதுமான காரணங்களாகின்றன. அவள் தாய் அவளிடம் அவள் செய்கைக்கான காரணம் கேட்கிறாள். டோட்டோவிடம் காரணம் இல்லாமல் இல்லை.
“வீட்டிலுள்ள என் மேஜையை நீ இழுப்பியே, அதில டிராயர்தான் இருக்கு… ஆனால் ஸ்கூல்ல உள்ள மேஜையின் மேல் பகுதியை நீ தூக்கி விடலாம். அந்த மேஜையே ஒரு பெட்டி மாதிரி இருக்கு. அதை திறந்து மூட நல்லா இருக்கு,” என தனது நியாயத்தைக் கூறுகிறாள். அதோடு இல்லாமல், புதிதாக அவள் சேரப்போகும் பள்ளிக்கு ‘இசைக்கலைஞர்கள் வருவார்களா?’ என ஆவல் பொங்க பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட வலி தெரியாமல் கேட்கிறாள். அம்மாவுக்குதான் வருத்தம். அவள் குணத்துக்கு ஏற்ற ஒரு பள்ளியைக் கண்டடைகிறாள். அதுதான் ‘டோமோயி’.
‘டோமோயி’ என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. சுதந்திரமான பாடத் திட்டம், சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகளும் பங்குபெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரட்டியாக கற்பிக்கும் முறை, கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என திரு.கோபயாஷின் முழு கற்பனையில் குழந்தைகளுக்குக் குதூகலம் கொடுக்கவே அப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
திரு.கோபயாஷிக்கும் டோட்டோ- சானை மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. அவளை பேச விட்டு கேட்கிறார். அது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவளை அவ்வளவு பேசவிட்டுக் கேட்ட முதல் ஆசிரியர் அவர்தான். அதனாலேயே அவள் ஆர்வமாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறாள். தனதுஒவ்வொரு தவறுகளின் விளைவுகளை அறிந்து , அந்த அனுபவங்கள் மூலமே அதை திருத்தும் வகை செய்கிறார் திரு. கோபயாஷி.
முடிவில்லாத பயணத்தைத் தொடர்வது போல அந்த ரயில் பெட்டி வகுப்பறை மாணவர்களுக்கு காட்சி கொடுக்கிறது. பக்கத்து ஜன்னல் ஓரம் காற்றில் அசையும் செடிகள் மாணவர்களை அவ்வாறு யோசிக்க வைக்கிறது. மாணவர்கள் விரும்பிய இடத்தில் அமரலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆசிரியர் அன்று படிக்க வேண்டிய பாடங்களைப் பட்டியலிட முதல் பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொடங்கலாம். அதோடு மாணவர்கள் நீச்சல் குளத்தில் முழு நிர்வாணமாக நீந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உடல்கூறு வித்தியாசம் கொடுக்கும் ஆர்வத்தை அகற்றும் திட்டத்திற்காகக் கோபயாஷி இந்த நீச்சல் நேரத்தைப் பயன்படுத்துகிறார். குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காத பள்ளியாக அதை மாற்றுகிறார். பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டு காத்திருக்க வைக்கிறார்.
‘டோமோயி’ குறித்தும் கோபயாஷி குறித்தும் மிகப்பெரிய ஆர்வம் நம் மனதில் இந்நூலின் மூலம் வளர்ந்துகொண்டே போக, இரண்டாம் உலகப் போரில் பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசி பள்ளியை அழிந்தது. கோபயாஷி தன் பள்ளி எரிவதை அமைதியாகப் பார்க்கிறார். போர் சூழலால், டோட்டோ – சான் வேறு ஊருக்குக் குடும்பத்துடன் செல்கிறாள். கோபயாஷி அவளை வழியனுப்புகிறார். அப்போதும் டோட்டோ-சானுக்கு அவர் முன்பு சொன்ன சொற்கள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது…
“உனக்குத் தெரியுமா? நீ உண்மையிலேயே நல்லப் பெண்.”
***
உலகக் கல்விச் சூழலோடு மலேசிய கல்வி முறையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இறுகிப்போன பாடத்திட்டம். கோப்புகளில் தலை புதைக்கும் ஆசிரியர்கள். எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் அமைச்சு. சோதனையை மையமிட்ட கற்றல் முறை. காகிதங்கள் தீர்மானிக்கப்படும் திறமை. வாழ்வுடன் ஒட்டாத போதனை. மெதுநிலை மாணவர்களை எட்டாத அணுகுமுறை என பல்வேறு சிக்கல்களுக்கிடையில் நமது தலைவர்கள் பல்கலைக்கழகம் உருவாக்கி செய்யும் நாடகங்கள் யாருக்காக என்பதே இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது.
கோபாஷி போன்ற ஆசிரியர்கள் நம் பள்ளிகளில் இருந்தாலும் டோட்டோ சான் போன்ற மாணவிகள் ஆர்வம் பிதுங்க அவர்களை நாடிச்சென்றாலும் கல்வித்திட்டம் எதற்கும் வழிவிட்டதாக இல்லை. காகிகதங்களை நம்பி தீர்மானிக்கப்படும் மாணவனின் திறன் தொடரும் வரை டோமாயிகள் நம் நாட்டில் குண்டுகள் விழாமலேயே உயிரற்றே போகின்றன.
குறிப்பு: தமிழில் (டோட்டோ – சான் ஜன்னலின் ஓரம் சிறுமி) – நேஷனல் புக் டிரஸ்ட்
http://www.teachersofindia.org/ta/ebook/டோட்டோ-சான்-ஜன்னலில்-சின்னஞ்சிறுமி
நூலை இங்கே படிக்கலாம்.