மாப்பஸானின் குதிரை

110dசிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம் அதுபோன்ற படைப்புகள் வாசகர்களிடையே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம். பொதுவாகவே படைப்பிலக்கியங்கள் ஓர் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து அதன் சட்டகத்திற்குள் பயணிப்பதில்லை. படைப்புகளே புதிய இலக்கணங்களை உருவாக்குகின்றன. அதற்குமுன் நடப்பில் இருந்த கட்டமைப்பை உடைத்து மறுநிர்மாணிப்பு செய்கின்றன. எனவே நிலையான படைப்பிலக்கணம் என ஒன்று இருக்க சாத்தியம் இல்லை.

அந்த வகையில்  சம்பவத்தை, சம்பவங்களின் கோர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் அமைப்பை மாற்றியவர்களில் ஒருவராக (Guy De Maupassant) மாப்பஸானைச் சொல்லலாம் . வெறும் புற சம்வங்களை மட்டுமே கருத்தில் கொண்டு கவனிக்காமல், நடைபெறும் சம்பவங்களின் காரணிகளை (ஏன் நடந்தது?), அச்சம்பவங்களை நிகழ்த்துபவனுக்கு ஏற்படும்  தூண்டும் மனநிலைகளை (உளவியல்), அந்த  மனநிலைகளை உருவாக்கும் சூழ்நிலைகளை (புறத்தூண்டுதல்) முன்னிலைப்படுத்தும் ஒரு கூறுமுறையை மாப்பசான் உலக முழுவதுமுள்ள சிறுகதை எழுத்தாளர்களில் தனது பாதிப்பாக இன்றும் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

மாப்பஸானின் புகழ்ப்பெற்ற  ‘நான் பைத்தியக்காரனா?’ என்ற சிறுகதையின் மூலமாகவே  இந்த நுட்பத்தை அறிய முற்படலாம். மிக சிறிய சிறுகதையாக இருந்தாலும் பல கோணங்களில் விவாதிக்கும் படியான உள் அடுக்குகளை கொண்டிருக்கிறது.

சிறுகதையில் தொடக்கமே இப்படி ஆரம்பிக்கிறது. “நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா?” என அவன் புலம்புகிறான். இந்தக்கதையின் பாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை. அவன்  அவள், அது என்றே நகர்கிறது.

ஒருவன் அடங்காத காதலில் இருக்கிறான். அவன் காதலி அவனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கருதுகிறான். உண்மையில் அவன்தான் அவள் அழகில் கட்டுண்டு இருக்கிறான். பெண்மை என்ற உடல் அவனுக்குத் தோதானதாகவும் பெண்ணின் மனம் கொடிய மிருகம் போலவும் தோன்றுகிறது. அந்த மிருகத்தைக் கொல்லத்துடிக்கிறான். அவனுக்கு அவ்வாறு தோன்ற காரணம் அவள் அவன்மீது காட்டும் சலிப்புதான். அதை அவனால் தாள முடியவில்லை. தன்னைக்காட்டிலும் வேறொருவன் மீது அவளுக்கு ஆர்வம் வந்துவிட்டதாகத் தோன்றும் கனம் நெருப்பு தன்னுள் கனல்வதாக உணர்கிறான்.

ஆண்களின் மீதே வெறுப்பிருப்பதாக காட்டும் அவளிடம் அவன் புதிய உற்சாகத்தைப் பார்க்கிறான். அதற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறான். தன் பொறாமைக்கு மூலமாக இருக்கும் ஒன்றை ரகசியமாகத் தேடுகிறான். இறுதியில் அவன் அதை கண்டடைகிறான். ஆம் அது ஒரு குதிரை. அவள் ஒவ்வொரு நாளும் காலையில் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பித்துப்பிடித்தவள் குதிரை சவாரி செய்தாள்.

சூழலை சுதாகரித்து அவன் அவளுக்கு குதிரையிலிருந்து இறங்க உதவச்சென்றால் குதிரை முட்ட வருகிறது. அவள் குதிரைக்கு முத்தமிடுகிறாள். உதடையும் துடைத்துக்கொள்வதில்லை. அவன் பொறமை அதிகரிக்க ஒருநாள் அவள் சவாரி செய்துவரும் பாதையில் கயிரைக்கட்டி குதிரையை வீழ்த்துகிறான். காதலியை விழாமல் தாங்கி பிடிக்கிறான். பின்னர் மனிதனைச் சுடுவது போல குதிரையில் தலையில் தோட்டாவைப் பதித்து சாகடிக்கிறான். காதலி அவனை குதிரை சவுக்கால் அடித்து தொடர்ந்து தாக்கவர அவளையும் சுடுகிறான்.

கதையின் இறுதியில் வாசகர்களை நோக்கி கேட்கிறான்..

“சொல்லுங்கள், நான் பைத்தியக்காரனா?”

இக்கதையில் மொத்த கதாபாத்திரங்களே மூன்றுதான். அதில் ஒன்று குதிரை. இந்தக் கதை ஒரு சம்பவத்தைதான் சொல்கிறது. ஒரு கொலை சம்பவம். ஆனால் இந்தக் கதையின் நோக்கம் கொலையைச் சொல்வதல்ல. அந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கும் உளவியலை பேசுவது.

ஓயாத மனித உறவுகளின் சிக்கல்களை பெரும்பாலான இலக்கியங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஆணுக்கும். பெண்ணுக்குமான உறவுக்கு மத்தியில் அன்பும் காதலும் எப்போதுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு அதன் அசல்தன்மை எல்லா இலக்கியங்களிலும் ஆராயப்பட்டே வருகிறது. இந்தக் கதையில் தன் காதலி தன்னால் மகிழ்ந்திருக்கும்போது அவளைக் குறித்து  அவனுக்கு எவ்வித புகார்களும் இல்லை.அவள் அவனுக்கு சுவாரசியமானவளாக இருக்கிறாள். ஆனால், அவள் கவனம் விலகும்போது அவள் குறித்த அவனது சித்தரிப்புகள் மனப் பேதலிப்பாக மாறுகிறது. இந்த பேதலிப்புக்காரணம் அவளது வெறுப்பல்ல. அவனில்லாத அவளடையும் மகிழ்ச்சியே.

இவ்விடத்தில் ஒவ்வொரு ஆணும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, ஒரு பெண்ணின் சோகத்தை, கோவத்தை, வெறுப்பை என அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் நாம் அவள் நாமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு எது காரணமாக இருக்கிறது. ஏன் அதனால் பதற்றமடைகிறோம்? (இந்த உளவியல் சிக்கல் பெண்களுக்கும் நடப்பதுண்டு என்பதை மறுப்பதற்கில்லை). ஆனால், அதை அழிக்க ஏன் அவ்வளவு சிரமம் எடுக்கிறோம். ஆண் மகிழ்ச்சி கொள்ளும் எத்தனையோ காரணங்களில் பெண்ணும் ஒன்று என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பெண் மகிழ்ச்சியடையும் காரணங்களில் ஆணும் ஒன்று என்பது மட்டும் நமக்கு ஏன் கசக்கிறது?

மொத்தத்தில் இந்தச் சிறுகதை இந்த நுட்பமான கேள்விகளையே நம்மீது திணித்துச்செல்கிறது. அதற்கான பதிலைச் சொல்வது ஒரு நல்ல சிறுகதையில் வேலையல்ல. அதன் வாசகன் அந்தப் பதிலைத் தேடி பயணிப்பதிலும் மனித உளவியலைப் புரிந்துகொண்டு உறவுகளை வழுப்படுத்துவதிலுமே ஒரு சிறுகதையின்  வெற்றி அடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...