இரண்டாம் பாகம்
தமிழ்த் தேசியம்
தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது தமிழ்நாட்டு அரசியல் சூழலை மாற்றி அமைக்கவே முனைப்புகாட்டுகிறது. பெரியார் காலத்தில் தமிழனை ஆரியன் மோசம் செய்தான்; ஏமாற்றினான் என்று ஒரு திராவிட கருத்து முன்வைக்கப்பட்டு மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை சுயசிந்தனையை அடமானம் வைத்தல் என்று கூறும் தமிழ்த்தேசியம் தமிழனை வடுகனும் வந்தேரிகளும் ஏமாற்றிப் பிழைப்பதாக வாதிடுகிறது. தமிழனை எத்தனை பேர்தான் ஏமாற்றுவார்கள்? எத்தனைப் பேரிடம் அவன் ஏமாறுவான்? தமிழனுக்கு சொந்த புத்தி மழுங்கிப் போனதேன்? வருவோன் போவோன் எல்லாரிடமும் ஏமாறும் ஒரு இனக்குழு எப்படி உலகில் சிறந்த இனமாக வாழ்ந்திருக்கும் என்றே நமக்கு சிந்திக்கத் தோன்றுகிறது.
மேலும் தமிழ்த் தேசியம் என்று பொதுவாகப் பலரும் பேசினாலும் அவர்களிடையே பல கருத்து முரண்களும் வெவ்வேறான நோக்கங்களும் உள்ளன. ஆகவே விடுபட்ட இடங்களை நிறைவு செய்யும் விதமாக நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். அதன் வழி தமிழ் தேசிய கட்டமைப்பையும் அதன் குழப்பங்களையும் தேவைகளையும் போதாமைகளையும் புரிந்துகொள்ள முடியும்.
திராவிட அரசியல் பொய்த்துப் போன இடத்தில் இருந்து முளைத்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் வியூகம் என்பது தெளிவு. தமிழ்த் தேசியம் பெரியார் முன்வைத்த திராவிட இனமரபு கொள்கைக்கு எதிரானது என்றாலும் அது ஒரு சமுதாய புரட்சியோ அறிவு புரட்சியோ அல்ல. அது ஒர் அரசியல் வியூகம் மட்டுமே. ‘தமிழ் நாடு தமிழனுக்கே’ என்னும் பழைய முழக்கத்தை அதன் அசலான பொருளில் மீண்டும் முன்னிருத்தும் ஒர் அரசியல் அசைவு. ஆனால் மற்ற அரசியல் வியூகங்கள் போன்றே இதுவும் மக்களின் மனோநிலை, சமூக கண்ணோட்டம், வரலாறு ஆகியவற்றில் சலனங்களை உண்டாக்கி அவர்களை தனது நோக்கத்திற்கு தயார் செய்கிறது. பெரியார் சமூக அவலங்களையும் முரண்பாடுகளையும் பேசுவதன் வழி மக்களை அரசியல் விழிப்புணர்ச்சிக்கு கொண்டு சென்றார். ஆனால் தமிழ்த் தேசியம் நேரடியாக இன அரசியல் பேசுவதன் வழி சமுதாயத்தில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறது.
ஆயினும், பெரியாரின் அரசியல் பார்வையை மட்டுமே தமிழ்த் தேசியம் முறியடிக்கிறதே அன்றி அவரின் மொத்த போராட்டங்களையும் அதனால் வென்றெடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். உதாரணமாக, தமிழனை பார்ப்பன ஆதிகத்திற்கும் ஆட்படுத்தாமல் திராவிட ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் தனித்தமிழ் இனமாக மீட்டெடுக்க வேண்டும் என்னும் சில தமிழ்த்தேசியவாதிகளின் குரல் நமக்கு பார்ப்பன அதிக்கம் என்பது உண்மையில் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்பதையே நன்கு புலப்படுத்துகிறது. அதோடு, தமிழ்த் தேசியம், சமகால அரசியல் தளத்தில் தமிழினத்தின் பொருளாதார இருப்பு,மொழி உரிமைகள், கல்வி, அரசு உரிமைகள் ஆகியவற்றை மட்டுமே சிறப்பாக கவனப்படுத்துகிறது. சமூக ஏற்ற தாழ்வுகள், பண்பாட்டு கூறுகள், மத பின்னடைவுகள், அறிவார்ந்த சிந்தனைகள் போன்ற பிற சமுதாய மேம்பாட்டு சிந்தனைகளில் அது அடக்கிவாசிப்பதும் தெளிவு. ஆகவே தமிழ்த் தேசியம் ஒரு சமுதாய பேரியக்கமாக இயங்காமல் சில குறிப்பிட்ட குழுக்களின் சிந்தனை போக்கிற்கு ஏற்ப நகர்ந்து கொண்டிருக்கிறது.
திராவிட அரசியல் அமுக்கமாக சில உள்திட்டங்களின் வழி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்ற ஏமாற்ற உணர்வாலும், தன் சொந்த மண்ணில் தாங்கள் பிற இனத்தவரால் சுரண்டப்படுகிறோம் என்ற உரிமை உணர்வாலும் இன்று பல தமிழர்கள்தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.அதிலும் “உன் வீட்டில் அரிசி இல்லாததற்கு வந்தேரிகளே காரணம்”, “உனக்கு வேலை கிடைக்காததற்கும் வந்தேரி அரசியலே காரணம்” என்பன போன்ற மிக எளிய மனோவியல் தாக்குதல்களின் வழி பாமர இளையோர்களைக் கவரும் பணியைத் தமிழ்த்தேசியம் சுறுசுறுப்பாக செய்துவருகிறது. இன்றைய தமிழ்த் தேசியத்தின் மைய கோரிக்கை எது என்பது தெளிவில்லாமல் இருந்தாலும், அதன் முக்கிய தேவைகளில் ஒன்று, தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்பதாக இருக்கிறது. (அண்ணாதுரை, பக்தவட்சலம், காமராஜர் போன்றவர்கள் பிறப்பால் தமிழர்கள் என்றாலும், தமிழ் உணர்வற்றவர்கள் என்பது தமிழ்ந்தேசியவாதிகளின் கருத்து!).
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனித்தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமாகவே இருந்தது. இந்திய துணைகண்டத்தில் இருந்து தமிழ்நாட்டு நிலப்பரப்பை பிரித்து சுதந்திர நாடாக்க வேண்டும் என்னும் கோரிக்கையாகவே அது ஒலித்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டு தமிழினத்தை பொருளாதார அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் மற்றவர் சுரண்டிப்பிழைக்காவண்ணம் வலுவான சட்டதிட்டங்கள் கொண்ட ஒரு இந்திய மாநிலமாகவே இருத்தலை அதிகாரப்படுத்தும் இயக்கமாக பரிணமித்துள்ளது. காவிரி நதிநீர் சிக்கல், முல்லைபெரியாறு நதிநீர் போராட்டம் போன்ற வாழ்வாதார போராட்டங்கள் தமிழ் மக்களைத் தங்கள் அரசியல் செயல்பாடுகள் குறித்த மறு மதிப்பீட்டுச் சிந்தனைக்கு நகர்த்துகின்றன. தொப்புள் கொடி உறவுகள் வாழும் ஈழத்தில் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த துயரும் அதற்கு ஆக்ககரமாக தீர்வு காண முன்வராத தமிழ் நாட்டு அரசியல் போக்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் சித்தாந்ததில் மாற்றங்களை நிகழ்த்துவதும் மறுப்பதற்கில்லை. ‘தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியலை தமிழருக்கான அரசியல் என்று சொல்ல முடியாது. தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அரசியல்தான் இங்கு ஆதிக்கத்தில் இருக்கிறது’ என்னும் கோவை ஞானியின் கருத்துகள் இச்சூழலைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆகவே தமிழ் தேசியம் சார்பு ரீதியாக திராவிட அரசியல் மூடிய கதவுகளை திறந்து விட்டு; திராவிட அரசியல் திறந்து வைத்த கதவுகளை மூடும் வேலையை செய்ய முணைந்திருக்கிறது என்பது உண்மை.
ஆயினும், தமிழ்த் தேசியம் என்னும் கருத்தாக்கம் இன்று சிலரால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு இனவெறியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்தையும் நாம் பார்க்க முடிகிறது. அதுபோலவே மண் உரிமை சார்ந்த ஒரு அரசியல் சட்டப் பிரச்சனைக்குத் தீர்வுகான பொருத்தமான அரசியல் களத்தை நாடாமல் பொதுமக்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வன்முறை செயல்பாடுகளையும் தமிழ்த் தேசியம் என்ற பெயரால் சிலர் முன்னெடுக்க முயல்கின்ற அவலத்தையும் கவனிக்க முடிகிறது.
ஆகவே, தமிழ்த் தேசியம் என்னும் இனம் சார்ந்த அரசியல் உணர்வலையை சரியான பாதையில் வழி நடத்த அதன் வரலாற்றிலிருந்தும் கவனிக்கப்படாத மக்களின் தேவைகளில் இருந்தும் மீட்டுணருவது அவசியம்.
தமிழ்த் தேசியம் அடிப்படையில் தமிழ் இன அரசியல் மீட்சிச் சிந்தனையைக் கொண்டது என்றாலும் அதன் அசைவுகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
தமிழ் தேசியத்தின் முன்னோடிகள்
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணத்தை தமிழ் நாட்டுடன் இறுத்தி வைப்பதில் தன் போராட்டத்தை தொடங்கினார் ம.பொ.சிவஞானம். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டு எல்லைகளை முடிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பங்களின் போது பல போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி கண்டார். ம.பொ.சி தமிழரசு என்னும் கட்சியை தொடங்கி நடத்தினார். இவரை எல்லைக்காவலர் என்றே புகழ்வதும் உண்டு. தமிழ் நாட்டில் ஈ. வெ. ரா வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தாலும் இவர் திராவிட சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிர சைவரான இவர் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து செயல்பட்டார். ஆகவே பெரியாரோடு முரண்பட்டே தன் இயக்கங்களை நடத்தினார். தமிழ் நாட்டு எல்லை (மண்) என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியவர் என்பதால் இவரை தமிழ் தேசியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம். ஆயினும் ம.பொ.சியின் தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு எல்லைகளை உறுதிபடுத்துதல் என்ற அளவிலேயே இருந்தது.
இதே போன்று 1956-ஆம் ஆண்டு தமிழகத்தின் தென்மூலையில் உள்ள குமரி மாவட்டத்தை கேரளா, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரித்து தமிழ் நாட்டுடன் இணைத்த நேசமணியும் குறிப்பிடத்தக்கவர். மக்களுக்கு தமிழ் நாட்டு எல்லை என்ற தெளிவையும் இன உரிமை என்ற ஊக்கத்தையும் கொடுத்த முன்னோடியாக இவர் இருக்கிறார்.
அதே காலகட்டத்தில் பெரியார் தனித் தமிழ் நாடு என்னும் முழக்கத்தை முன்வைத்தாலும் பின்னர் அதை தனித் திராவிட நாடு என்னும் முழக்கமாக மாற்றினார். அவரின் கோரிக்கை வெற்றி பெறாததால் இந்திய சுதந்திர தினத்தை ‘துக்க நாளாக’ அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அண்ணா தனித்தமிழ் நாட்டு முழக்கத்தை கையிலெடுத்தார். “கடைசித் தமிழன் இருக்கும் வரை தனித்தமிழ் நாடு கோரிக்கை தொடரும்” என்று பேசினார். ஆனால் இந்திய அரசு 1972-ல் பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததும் அக்கோரிக்கையை மீட்டுக் கொண்டார்.
அடுத்து, பாவலரேறு பெருஞ்சித்தனார் முன்னெடுத்த தமிழ் தேசியம் என்பது சற்றே தீவிரமானதாக இருந்தது. மறைமலைஅடிகள், பாவாணர்போன்றவர்களின் தமிழிய உணர்வில் வளர்ந்தவரான இவர் தன் அரசியல் பார்வையில் அவர்களிடம் இருந்து வேறுபட்டார். தமிழ் நாடு என்னும் நிலப்பகுதியை இந்திய துணைகண்டத்தில் இருந்து பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்னும் முழக்கத்தை அவர் முன்னிருத்தினார். ஆரிய, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தும் இந்து மதச் சிந்தனை கட்டுகளில் இருந்தும் தமிழனை பிரித்தெடுக்க ஒரே மார்க்கம் தமிழ் நாட்டு பிரிவினைப் போராட்டந்தான் என்பது அவரது கருத்து. தனது தேன்சிட்டு இதழில் தன் கருத்துகளைத் தொடர்ந்து எழுதினார். பல முறை சிறைவாசம் சென்றார்.
மேற்கண்ட வரலாற்று தகவல்களை தமிழ்த் தேசியத்தின் முதல் கட்டமாக குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு இயக்கமாகவே செயல்பட்டது. திராவிட கருத்தாக்கங்களில் இருந்து அன்றைய தமிழ் தேசியம் இறையியல், மதம் போன்ற கருத்துகளிலேயே அதிகம் வேறுபட்டதாக இருந்தது. தலைவர்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர இனஅரசியல் கொள்கை மோதல்கள் இல்லை என்றே கூறலாம்.
தமிழ் தேசியப்போக்கின் மாற்றம்
ஆனால் பின்னர் வந்த தமிழ்த் தேசியம் தன் பாதையை வேறு திசைகளில் கொண்டு செல்லத் துவங்கியது. இக்காலகட்டத்தில் இரண்டு வகை தமிழ் தேசிய செயல்பாடுகளைக் காணமுடிகிறது. முதலாவது, இலங்கை அரசியலை பெரிதும் சார்ந்தே இருக்கும் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசியம். இது, தமிழ் நாட்டு அரசியலில் களமாடுவதை விட அதிகமாக இலங்கை போரையே மையமிட்டதாக அமைந்திருக்கிறது. வை.கோபால்சாமி, சீமான், பழ.நெடுமாறன் போன்றோரை இவ்வகையான தமிழ் தேசியவாதிகள் என்று குறிப்பிட முடியும்.
மேலும் இக்காலகட்ட தமிழ்த்தேசியவாதிகள் திராவிட அரசியலில் இருந்து பிரிந்து வந்தவர்களாகவோ, தேசிய அரசியலில் தோற்றுப் போனவர்களாகவோ இருந்தனர். சிறு சிறு இயக்கங்களையும் அரசியல் கட்சிகளின் வழியும் இவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டாலும் இவர்களின் நிலைப்பாடு உறுதியானதாக இல்லாமல் இருந்தது. ராமதாஸ், வை. கோபால்சாமி, திருமாவளவன் போன்ற பலர் இவ்வகையில் செயல்பட்டனர். அடிக்கடி கட்சி மாறுவது, கூட்டணிகளில் இடம் பெருவது, தேர்தலில் இடம் கிடைக்க பச்சையாக சாதீயம் பேசுவது அல்லது கொள்கை மாறுவது என்று பல அரசியல் நாடகங்களை இவர்கள் தொடர்ந்து அரகேற்றிவந்தனர்.
சீமான் பொதுவாக ஈழ ஆதரவாளராக செயல்பட்டாலும் அவரின் தமிழ்நாட்டு அரசியல், ஜெயலலிதா ஆதரவு அரசியலாகவே இருப்பது வெளிப்படையான முரண் மட்டும் அல்ல அவரின் போலி இனப்பற்றையும் காட்டுகின்றது. ஈழ மக்களின் அவலத்தை அனுதாப ஓட்டாக பெற முயலும் பல திராவிட அரசியல்வாதிகளில் இருந்து இவர் வேறுபட்டவர் அல்ல. தன் கட்சி கொள்கை அறிக்கையில் இனத்தூய்மைவாதத்தை தூக்கிப் பிடிக்கும் இவர் அது குறித்து வெளிப்படையாக பேசுவது இல்லை. மாறாக பெரியாரை தமிழ் இனத்தந்தை என்று பசப்பித் திரிகிறார் என்றே கூறமுடியும். இதை பசப்பல் எனச்சொல்ல காரணம் பெரியாரை ஒரு பக்கம் தூக்கிப்பிடித்து மற்றுமொரு பக்கம் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்வார். முத்துராமலிங்கதேவரை ஒரு சமுதாயப் போராளி என கற்பனைக் கதை கூறுபவர்கள் கே.ஜீவபாரதி தொகுத்துள்ள தேவரின் மேடைப்பேச்சுகள் கட்டுரைகள் போன்றவற்றைப் பார்த்தாலே அவரின் சாதிய வெறி புலப்படும்.
தமிழ்த் தேசிய உணர்வு தோன்றிய காலத்தில் இருந்து, பின்னர் பல வகையிலும் வேறுபட்டு அது தனி பாதை அமைத்துக் கொண்டிருப்பது உண்மை. வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனைப் பற்றிய பொதுவான சித்தரிப்பில் காணப்படும் மாற்றங்களை இதற்கு ஆதாரமாக கூறலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அவர்களால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாகவே கட்டபொம்பன் இருந்தான். அவனை கொள்ளைக்காரான் என்றே 18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வம்சமணிதீபிகை என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இது ஆங்கிலேய அரசின் சதிச் செயல் என்றும் கட்டபொம்மன் உண்மையில் தேசிய போராட்ட வீரன் என்றும் கட்டபொம்மனின் வரலாற்றை 20-ஆம் நூற்றாண்டில் மீள்வாசிப்பு செய்து அவனை இந்திய சுதந்திர போராட்ட முன்னோடி என்று நிறுவியவர் தமிழ்த் தேசிய முன்னோடியான ம.பொ.சிவஞானமாவார். கட்டபொம்மனைப் பற்றிய பல நூல்களையும் நாடகங்களையும் இவர் எழுதினார். தன் சொந்த முயற்சியில் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார். கட்டபொம்மன் விழா எடுத்தார். கட்டபொம்மு தெலுங்கு வம்சாவளிச்சார்ந்தவன் என்று தெரிந்தும் அவனை தமிழ்நாட்டில் தோன்றிய தேசிய போராட்டவீரனாக எந்த பிணக்கும் இன்றி முன்மொழிந்தார். அன்றைய தமிழறிஞர்கள் டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை,பன்மொழிப்புலவர்தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பலரும் வீரப்பாண்டியகட்ட பொம்மனை ஒரு மாவீரனாக போற்றினர். இதே ம.பொ.சி தான் பின்னர், சென்னையை ஆந்திரா வசம் போகாமல் போராட்டம் நடத்தி தடுத்தார். தெலுங்கு தேசத்திற்கு எதிராக, தமிழ் நாட்டு எல்லைப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவருக்கு இல்லாத இனக்காழ்ப்பு இன்றைய தமிழ்த் தேசியவாதிகளிடம் உண்டு என்பது வருத்தம் தரும் உண்மை. இனம் சார்ந்த அரசியல் போராட்டத்திற்கும் இனக்காழ்புக்கும் அவருக்கு தெரிந்த வேறுபாடு பின்னர் வந்த தமிழ்த் தேசியவாதிகளிடம் இல்லாமல் போனது வேதனை. 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீரபாண்டிய கட்டமொம்மனை தமிழ்த் தேசியவாதிகள் வடுக வந்தேரி (விஜயநகர அரசு விட்டுச் சென்ற மிச்சம்) என்றும் தமிழினத்தை சுரண்டித் தின்ற கூட்டத்தின் தலைவன் என்று மட்டுமே அடையாளப்படுத்துகின்றனர். ஆகவே ஆதியில் பேசப்பட்ட தமிழ்த் தேசியத்தினின்று மாறுபட்டு இன்றைய தமிழ்த் தேசியம் இனத்தாக்குதலுக்கு முக்கியத்துவம் தரும் போக்கை கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
வை. கோபால்சாமியும் தமிழ்த் தேசியம் என்று முழங்கினாலும் பெரியாரை ஏற்றுக் கொண்டவராகவே உள்ளார். ஆயினும் தமிழ் தேசியவாதிகளின் தீவிரப்போக்கு குழுவாக இயங்கும் தமிழர் களம், தமிழர் உலகம் போன்றவைகள் வை. கோபால்சாமியை தமிழர் போல நாடகமாடும் தெலுங்கர் என்றே ஒதுக்குகின்றனர்.
மேலும் சில பிரிவினர், தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பெரியாரே தமிழ்த் தேசியத் தந்தை என்ற கருத்தையும் துணிந்து முன்வைக்கின்றனர். பேரா. வீரபாண்டியன் போன்றோர் ‘திராவிட தமிழ்த் தேசியம்’ என்ற பெயரிலேயே இயக்கம் நடத்துவதும் குறிப்பிடத் தக்கது.
சுதந்திர தமிழீழமும் தமிழ் தேசியமும்
1980க்கு பின்னர் தோன்றிய தமிழ்த் தேசியவாதிகளும் இயக்கங்களும் புலிகள் தரப்பாக செயல்படுவதோடு இந்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரினவாத இலங்கை அரசை ஒடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கின்றனர். இவர்களின் பார்வையில் தமிழ்த் தேசியம் என்பது இலங்கையில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படப்போகும் சுதந்திர தமிழீழ அரசையே குறிக்கிறது. ஆனால் இந்தியாவின் இறையான்மைக்கு, காஸ்மீரிலோ, காலீஸ்தானிலோ ஆபத்து என்றதும் அதை வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தங்கள் அண்டை நாட்டின் இறையான்மையை உரசிப்பார்ப்பது முரணான செயலாகவே படுகிறது. இந்தியச் சட்டத்துக்குள் பிரிவினைவாதம் நிந்தனைக்குறிய குற்றம் என்பதை முழுதும் ஏற்றுக் கொண்டு அரசியல் செய்யும் இவர்கள் அண்டை நாட்டில் பிரிவிணையை ஆதரிப்பது வியப்பே. சுதந்திர ஈழ நாட்டு உதயத்திற்காக அரும்பாடுபடும் இவர்கள் சுதந்திர தமிழ்நாட்டு உதயத்திற்கு ஒரு சிறு அறிக்கையாவது ஒட்டுவார்கள் என்றால் இவர்களின் அரசியல் நேர்மைக்குச் சான்றாக அமையும்.
அவர்கள் ஈழ வெற்றி தோல்விகளையும் தமிழ்மக்களின் அவலங்களையும் கொண்டு தங்கள் அரசியல் காய்களை நகர்த்துவது தெளிவாக தெரிகிறது. அதன் காரணமாகவே விடுதலைப் புலி இயக்கத்தலைவர் பிரபாகரனை தமிழ்த் தேசிய தலைவன் என்று கூறுகின்றனர். ஆனால், பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் என்றுமே தமிழ் தேசியம் குறித்து பேசியதாக தெரியவில்லை. அவர் தன்னை தன் மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமான போராட்டவீரராகவே வரித்துக் கொண்டவர். மேலும் தமிழ்த் தேசியம் முன்வைக்கும் திராவிட விரோதம் எல்லாம் அவர் அறியாதது. எம். ஜி ராமச்சந்திரனிடம் அவர் நல்ல நட்பும் உதவியும் பெற்றுவந்தார் என்பது வரலாறு. ஆகவே பிரபாகரனை தமிழ் தேசியத்தோடு இணைக்க நினைப்பது அபத்தம்.
இனவாதமும் தமிழ் தேசியமும்
இரண்டாவது குழு, தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நிலையைச் சார்ந்ததாக இருக்கிறது. இளைஞர்களை அதிகம் கவர்ந்த இப்பிரிவு, தமிழ் நாட்டு தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களையும் பொருளாதார உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களையும் பிற இனத்தாரிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைக்கின்றது. திராவிட அரசியலை முற்றாக புறந்தள்ளும் இவர்கள் ஈ.வெ.ராவின் அரசியல் கொள்கைகளைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். தெலுங்கு, கன்னடர்களிடம் அரசியல் பலத்தையும், மார்வாடி வட இந்தியர்களிடம் பொருளாதார பலத்தையும், மலையாளிகளிடம் வியாபார பலத்தையும் இழந்து தமிழ்நாட்டுத் தமிழன் தன் சொந்தமண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற சூழலை இவர்கள் முன்னிலைப் படுத்துகின்றனர். இச்சூழலை அடிப்படையாகக் கொண்டே‘தமிழ்நாடு வந்தேரிகளின் வேட்டைக்காடாகி விட்டதாக’ பழ.நெடுமாறன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து கர்நாடக அரசும் கேரள அரசும் தமிழ் நாட்டின் மேல் காவிரி ஆறு இடைமறிப்பு, பாலாறு இடைமறிப்பு, பெரியாறு அணை நீர் மறுப்பு போன்ற தன்மூப்பான செயல்களின் வழி தொடுக்கும் நீர் முற்றுகையும் தமிழ்த்தேசியவாதிகளின் உரிமை மீட்பு போராட்டங்களுக்கு காரணமாகிறது. . தமிழ்நாட்டில் அனைத்து மக்களையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கும் நீர் தட்டுப்பாட்டுக்கு காரணமாக சக திராவிட சகோதர மாநிலங்களே இருப்பது இவர்களின் திராவிட வெறுப்புக்கு மேலும் வலுசேர்க்கிறது.
மேலும் இவர்கள் தமிழ் நாட்டில் பிழைக்க வந்த அன்னியர்களின் நிலையையும் தமிழ் நாட்டில் இருந்து பிழைப்புதேடி வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்களின் நிலையையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றனர். ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன அடிப்படையிலான பகுப்பு முறைகளும் ஒதுக்கல்களும் அவர்களை ஆவேசப்படுத்துகிறது. தமிழ் நாட்டிலும் அதே போன்ற கட்டுப்பாடுகள் வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் தருகின்றனர். தோழர் தியாகு ஒரு நேர்காணலில் தமிழக இளைஞர்களின் இத்தகைய போக்கை ஆதரித்தே பேசுகிறார். “ சொந்த மண்ணில் தன் உரிமைகளை இழக்கும் எல்லாருக்கும் பொதுவான குணம்தான் இது” என்றே அவர் கூறுகிறார்.
பெங்குளூர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்னும் நூல் புதியவர்கள் பலருக்கும் பெரியார் மீதும் திராவிட அரசியல் மீதும் வெறுப்பை உமிழ ஒரு தூண்டுதலாக இருந்தது. ஏற்கனவே பெரியார் மீது கசப்பு உள்ளவர்களுக்கு அப்புத்தகம் ஒரு அதிகாரத்துவ ஆவனமானது. ஆயினும் அந்நூல் மையமாக சொல்லும் அரசியல் மிக எளிமையானது.
“பேதைத் தமிழனோ, “எல்லாரும் நம்மவரே” என்று பட்டாங்கு படிப்பவன். “எல்லாருக்கும் நல்லவனாக இருந்து கெட்டவன். தெலுங்கன் தன்னுடைய மனதின் கதவை அடைத்துக் கொண்ட பின்னர், கன்னடனும் அதேபோல் தன் உள்ளத்தின் கதவை நன்றாய் இழுத்து மூடிக்கொண்ட பின்னர், மலையாளியும் தன் மனக்கதவைச் சாத்திக்கொண்ட பின்னர், தமிழன் மட்டுமே தன் திருவுளவாயை அகல விரியத் திறந்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பேதைமை! எதிரிக்கு எதிர் எதிர் ( -X – = +) தானே? எதிருக்கு நேர் எதிர்மறை ( – X + = – ) தானே? திராவிடர்கள் தமிழையும் தமிழரையும் நஞ்சென வெறுக்கின்றனர். ஆகவே, தமிழன் தனக்குத் தீங்கிழைத்த அந்தத் திராவிடரை முதலில் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தச் சின்னக் கணக்குக்கூட விளங்க வில்லையெனில், அவன் உருப்படவே மாட்டான்.” என்பதே பெங்குளூர் குணா முன்வைக்கும் அரசியல் கோட்பாடு.
தமிழர் களம் கறிமாவளவன், தமிழர் உலகம் குழுவினர் போன்றவர்கள் பெங்களூர் குணாவின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர்களாகவே தெரிகின்றனர். இன்னும் பல சிறு சிறு இளைஞர் குழுக்களும் இன உரிமையை இனதுவேச வார்த்தைகளால் வெற்றி கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நமது கேள்வியெல்லாம், ஒரு இனத்தின் தேசியத்தைக் கட்டமைக்க விரும்புபவர்கள் இனவெறுப்பு அரசியலை அதன் அடித்தளமாக கொண்டு செயல்படுவது எப்படிப்பட்ட எதிர்காலத்தை கொண்டுவரும் என்பதுதான். ஒரு இனம் ஆற்றல் பொருந்தியதாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும், போட்டி மிக்க சந்தை உலகில் சவால்விட்டு வளரும் அதே நேரம் தன் இனம் மொழி பண்பாடு, ஆன்மீகம் போன்ற கூறுகளையும் உடன் கொண்டு செல்ல பிற இனம் மீதான வெறுப்பை மூலதனமாக்க வேண்டும் என்று கூறுதல் பிழையான போதனையாகும். சீனர்கள் மேல் ஜப்பானியர்கள் கொண்ட வெறுப்பும், யூதர்கள் மேல் நாசீக்கள் கொண்ட வெறுப்பும் கொலைக் களத்தில் முடிந்த இரண்டு உலக இனவெறுப்பு அரசியலின் உதாரணங்கள். இலங்கைத் தீவில் இன்றும் தொடரும் தமிழின அழிப்புக்கு அடிப்படைக் காரணம் இனவெறுப்பை அந்நாட்டு அரசாங்கம் அரசியலாக்கியதுதான். பல்லினம் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் இன வெறுப்பை அரசியல் கொள்கையாக செயல்படுத்துதல் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. சீமான் போன்ற நாடகதாரிகள் கர்நாடகா பால்தாக்ரே (சிவசேனா) வை முன்னுதாரணம் காட்டுதல் அடிப்படையிலேயே மனிதம் அற்ற செயல். மனம் பிறழ்ந்த மனிதர்களின் வக்ரங்களை அரசியல் முன்னுதாரணமாக கொள்ள முடியாது.
இன்றைய தமிழ் நாட்டு அரசியல் நகர்சிகள் மற்ற மாநிலங்கள் போன்றே மத்திய அரசாங்கத்தின் பிடியிலேயே உள்ளது. மாநில அரசாங்கங்களின் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. “தமிழர்களைத் தமிழ் ஆள்வதற்கோ, தமிழக எல்லைகளைக் காப்பாற்றிக் கொடுப்பதற்கோ, தமிழகத்தில் சாதியொழிப்புக்கு வித்திடும் சட்டங்கள் இயற்றவோ, அயலார் நுழைவைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லாத அமைப்பே தமிழகச் சட்ட மன்றம் ஆகும். 234 தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தும் கச்சத்தீவைத் தூக்கி இலங்கைக்கு தில்லி கொடுத்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. சாதியில் பின்தங்கியவர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு சில இடங்களைப் பெற்றுத் தரக் கூடிய 69% இடஒதுக்கீட்டைக் கூட காப்பாற்றித் தர முடியாத சட்டமன்றம் இது என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இதற்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. இது இயற்றும் மசோதாக்களை இந்திய நாடாளுமன்றம் ஏற்றால்தான் அவை சட்டமாகும். எனவே இதனைத் தமிழ்நாடு மசோதா மன்றம் என்றும், அதன் உறுப்பினர்களை மசோதா மன்ற உறுப்பினர்கள் என்றும் கூறுவதே சாலப் பொருத்தம்’ என்று நலங்கிள்ளி எழுதுவது (ஏன் தேவை தமிழ்த் தேசியம்?) கவனிக்கத்தக்க கருத்து. ஆயினும் பெங்களூர் குணா இன்றைய தமிழக அரசியல் தோல்விகள் எல்லாவற்றுக்கும் பெரியாரையும் திராவிட அரசியலையும் காரணமாக காட்டினாலும் மத்திய அரசாங்கம் என்ற அதிகாரத்தைப் பற்றி வாய்திறக்காதது விந்தையாக உள்ளது.
பொதுவாக எல்லா சமுதாயங்களிலும் உள்கட்டமைபில் இன வெறுப்பு என்பது இருந்தே தீரும். போட்டிகளும் உரிமைப் போராட்டங்களும் மிக்க சமுதாய கட்டமைப்பில் பிற இனங்களைப் பற்றி தாழ்த்தி பேசுதல், குறை கூறுதல், அவதூறு செய்தல் போன்ற இனக்குழு குண இயல்புகள் எல்லா காலகட்டத்திலும் இருந்தே வந்துள்ளது. இவ்வகை மன அழுத்தங்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவோர் மத்தியதர வர்க்க மக்களேயாவர். உரிமை உள்ள மண்ணில் பிற இன மக்கள் வளமுடன் வாழ்தல் என்பது பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு வந்த இடையூராக அவர்கள் கருதுவதாலேயே இவ்வகை மனப்பாங்கு அமைகின்றது.
1940-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு செட்டியார்கள் பர்மாவில் குடியேறி வியாபாரம் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்ததும் சில ஆண்டுகளில் அங்குள்ள பூர்வீக குடிகள் தங்கள் நாட்டு உரிமையை வந்தேரிகளான செட்டியார்கள் அபகரித்துக்கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி அரசியல் கிளர்ச்சிகளை உண்டாக்கினர். பிழைப்பு தேடி பர்மாவிற்கு சென்ற தமிழர்கள் அகதிகள் போல் நாடு திரும்பினர். அந்த கிளர்ச்சிகள் பிறகு பெரும் அரசியல் மாற்றங்களை பர்மாவில் கொண்டுவந்தன. அமெரிக்கா, அஸ்திராலியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் சிறுபான்மையினர், வந்தேரிகள், ஆகியோருக்கு எதிராக பெரும்பான்மை மக்களின் மத்தியதர மக்கள் இழிச்சொற்களையும் அவதூறுகளையும் பேசுவது உண்டு. ஆனால் அது அந்நாட்டின் அரசியல் நிலைப்பாடு அல்ல. ஆனால் ஒரு இனத்தின் தேசிய அரசியலில் அவ்வகை மனப்பான்மையின் அல்லது குணங்களின் பங்கு எத்தகையது என்பது மிக முக்கிய விடையமாகும். ஒரு இனத்தின் தேசிய கட்டமைப்பு என்பது அந்த இனத்தின் அரசியல் இயல்புகளை மட்டும் இன்றி அதன் குண இயல்புகளையும் நிர்மாணிக்கும் பணியைச் செய்வதால் மாந்த பண்புகளில் மேலானவற்றின் மேலேயே அது நிறுவப்படவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
தோழர் குணாவின் கருத்து தமிழ் நாட்டு அரசியல் சூழலின் இயலாமையால் எழுந்த ஆதங்க வெறுப்பே அன்றி வேறில்லை என்பதே என் கருத்து. அந்நூலை ஆழ்ந்து வாசித்து அரசியல் உலகில் புறக்கணிக்கப்படும் தமிழர்தம் அக உலகின் இருண்ட பகுதிகளை புரிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த முடியுமே அன்றி தமிழ்த் தேசியத்தின் அடிப்படையாக கொள்ளுதல் தமிழ்த் தேசியம் என்னும் மாற்றுச் சிந்தனையை முலையிலேயே கருகவைக்கும் ஆபத்தையே கொண்டுவரும்.
ஆயினும், இன உரிமைப் போராட்டம் என்பது எப்போதும் கத்தி மேல் நடப்பது போன்றதுதான். இனப்பற்றுக்கும் இனவெறிக்கும் நூலாளவு வேறுபாடுதான் உள்ளது. ஒரு இனம் தன் புகழை மெச்சிக் கொள்வதற்கும் அளவு கடந்த மெச்சுதல், பாசீச வெறியாக மாறுவதற்கும் அதிக தூரம் இல்லை என்பதே உலக வரலாறுகள் உணர்த்தும் உண்மை. உணர்ச்சி பெருக்கில் பொங்கி எழும் மக்களைக் கட்டுப்படுத்தி நல்வழிகாட்ட ஒரு சிறந்த தலைவன் தேவை. ஆனால் தமிழ்த் தேசிய போராளிகளுக்கோ இன்று அப்படி ஒரு மகத்தான தலைவன் இல்லாதது மாபெரும் குறையாக உள்ளது. அதனினும் தமிழ்த்தேசிய போராளிகள் என்ற பெயரில் பல ஆபத்தான கருத்துகளை தமிழ் மக்கள் உள்ளங்களில் விதைக்கும் செயலும் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் முன் வைக்கப்பட்டதுமே தொடர்ந்து எழும் கேள்வி தமிழர் என்பவர் யார்? என்பதுதான். தமிழர்களுக்கு என்ற ஒரு நாடு இல்லாத சூழலில் அரசியல் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் நாம் தமிழினம் என்ற ஒரு இனக்குழுவை வகுக்க முடியாது. ஆகவே, இன்று நாம் தமிழன் எனறு கூற எது அடிப்படையாகிறது என்பது சிந்தனைக்குறிய வினா. தமிழனின் இன அடையாளத்திற்கு அடிப்படை, பேசும் மொழியா? பெற்றோரா? அல்லது வாழும் மண்ணா? என்னும் கேள்விக்கு தீவிர ஆய்வுகளின் வழி விடை தேடவேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியத்தார் பல பிரிவுகளாக செயல்படுவதால் இச்சிக்கலைக் களைய பல்வேறு அணுகுமுறைகளை முன் மொழிகின்றனர். அவற்றில் சில சிந்திக்கத் தக்கன என்றாலும் சில ஆபத்தானவை. அவற்றில் தமிழர்களம், தமிழர் உலகம் போன்ற அமைப்பினர் இரண்டு கட்டுப்பாடுகளின் கீழ் தமிழனை அடையாளப்படுத்தலாம் என்று கூறுகின்றனர். அவை, தமிழை வீட்டு மொழியாக பேசுகிறவர்களை தமிழர் என்று ஏற்றுக் கொள்வதும் தமிழர் நலனில் அக்கறை உள்ளவரை தமிழர் என்று ஏற்றுக் கொள்ளுதலும் ஆகும்.. இதன்படி வை. கோவை அவர்கள் தமிழர் அல்லாதவர் என்று ஒதுக்குகின்றனர். காரணம் அவர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுபவர் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதே சமயம் பிறப்பால் தமிழரான ப. சிதம்பரத்தையும் புறக்கணிக்கின்றனர். இவர் வீட்டில் தமிழ் பேசினாலும் அவர் தமிழர் நலச் சிந்தனை அற்றவர் என்பதே அவர்கள் முடிவு.
இதில் இரண்டு வகை பலகீனங்கள் உள்ளன. ஒன்று, வீட்டில் தமிழ் பேசாதவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரையும் அருந்ததியர், நரிக்குரவர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினரையும் வந்தேரிகள் அடையாளத்தை முன்வைத்து தமிழ்த் தேசியத்தில் இருந்து புறக்கணிப்பது இன துவேசச் செயலாகும். குறைந்தது ஐந்து தலைமுறைகளாக தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்து தமிழ் மண்ணோடு உரமாகி விட்ட ஒரு மனிதக் குழுவை, அவர்களின் தாய்மொழியை வீட்டில் பயன்படுத்துவதற்காக வந்தேரிகள் என்று ஓரங்கட்ட நினைப்பது அறம் அற்ற செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்து, ஒரு மனிதனின் செயலை அடிப்படையாக வைத்து அவனை ஒரு இனக் குழுவுடன் இணைப்பதோ அகற்றுவதோ மிகவும் சிரமம். அது பொருத்தமற்ற அளவுகோலாகவும் ஆகிவிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் கருத்து சுதந்திரம், அரசியல் பின்புல ஈர்ப்பு, பொருளாதார தத்துவ நம்பிக்கை என்று இருக்கும் போது, ஒருவனின் செயல் அந்த இனமக்களின் நலனை முன்னிருத்தியதா இல்லையா என்பதை அளவிட முடியாது என்பதே என் நிலைப்பாடுக. ஒரு கால கட்டத்தில் தன் இன நலனுக்காக போராட முற்பட்ட மனிதனின் செயல் வேறு ஒரு கால கட்டத்தில் அதே மக்களின் துயரங்களுக்கு காரணமாவது அரசியல் வாழ்க்கையில் மிகவும் இயல்பான ஒன்றே ஆகும். இதற்கு நல்ல உதாரணமாக பெரியாரையும் பிரபாகரனையும் நாம் காட்டலாம். ஆகவே ஒரு மனிதனின் செயல் இனநலன் உள்ளதா அல்லதா என்று யார் எப்படி முடிவு செய்யமுடியும்? என்ற வினா நம்முன் வந்து நிற்கிறது.
அடுத்து, தமிழ் நாட்டில் நீண்ட காலமாகவே பல்வேறு இன மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் யார் தூயத் தமிழர்? யார் அன்னியர் என்று கண்டறிய முணைவது ஆபத்தான முடிவுகளைக் கொண்டுவரக் கூடும். தமிழ் பேசி தமிழர்களாகவே வாழும் பல்லாயிரம் அன்னிய இனமக்கள் தமிழ் நாட்டில் வாழக் கூடும். அவர்களை தமிழர்கள் அல்ல என்று அடையாளப்படுத்துவதன் வழி தமிழ் இனம் எப்படி முன்னேற முடியும் என்பது புதிர். இந்தியச் சட்டத்தில் இட ஒதுகீடோ, அரசியல் வாய்ப்புகளோ தமிழன் என்ற அடிப்படியில் கொடுக்கப்பட்டாத சூழலில் தமிழ் அல்லாதவரை அடையாளமிடுவதனால் தமிழ் நாட்டில் இனப் பதற்றம் வளருவதைத் தவிர வேறு எந்தப் பலனும் இல்லை என்பதே உண்மை.
முற்காலத்தில் தூயத் தமிழ் இனம் ஒன்று தென்னாட்டு நிலப்பரப்பில் வாழ்திருந்த சாத்தியங்கள் இருந்தாலும், இன்றுவரை அவர்கள் ஓரினமாகவே வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணுவது சமூக அறிவியல் கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும். ‘தூயஇனம் என்று ஒன்று நெடுநாள் கலப்புறாமல் அவ்வாறே இருக்க முடியும் என்பதை உயிரியல் விஞ்ஞானம் மறுக்கிறது. இனக்கலப்பால் உலக முழுவதும் தூய இனங்கள் சுருங்கிவரும் போக்கை உயிரியல் ஆய்வுகள் காட்டுகின்றன.” என்கிறார் வரலாற்று பேராசிரியை டாக்டர் ரொமீலா தாப்பர்
மேலும், இச்சிக்கலைக் களைய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களிடையே சாதிய அடையாளத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்று கூறுவது மிக அபத்தமானது. “தமிழ்த் தேசியவாதிகள் இறுதியில் சாதிய களையத்துக்குள்ளேயே கையை விடுகின்றனர்” என்று பிரபஞ்சன் கூறுவது இதன் அடிப்படையிலேயே. இச்செயல் தமிழ் மக்களிடையே பிற்போக்குத் தனங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கக் கூடியதாகவே இருக்கும். இன்றைய நிலையில் வர்ணாஸ்ரம மனுதர்மமும் சாதிய கோட்பாடும் வேறு வேறானவை அல்ல. ஆகவே சாதியத்தை வெறும் அடையாளமாக (ஏற்ற தாழ்வு அற்றதாக) பயன்படுத்த முடியும் என்பது தோசையை அரிசியாக்க முயல்வது போன்றதேயாகும்.
சங்ககால தமிழனின் குடிபிறப்பு போன்றதல்ல இன்றைய சாதிய கட்டமைப்பு. பல்வேறு சாதி உட்பிரிவுகளும் கலப்புகளும் தொழில் அடிப்படையிலான சாதியமும் நிறைந்ததே இன்றைய சாதியம். இன்றைய சாதியத்தின் நோக்கம் சுயபெருமை பேசவும் இனக்குழுக்களாக தங்களை பிரித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது. இன்றும் தமிழர்சார்ந்த இயக்கங்களின் தலைமை பொறுப்பையும் கோயில் நிர்வாக பொறுப்பிலும் மேல்சாதிக்காரர்களின் ஆதிக்கமே வலுத்திருக்கும் சூழலில் சாதியத்தை இன அடையாளமாக பயன்படுத்தலாம் என்பது தமிழினத்தை முற்றும் அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும் என்பது தெளிவு. அன்மைய தர்மபுரி சம்பவங்களுக்குத் தீர்வு காணமுடியாத தமிழ்த்தேசியவாதிகள் தமிழனின் அடையாளம் என்ற பெயரில் சாதியத்தை வளர்க்க நினைப்பது அடித்தட்டு மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிச்செயல் என்றே கூறவேண்டி உள்ளது. இன்னொரு கோணத்தில், சமுதாய கட்டமைப்பில் உயர் நிலையில் இருக்கும் பார்ப்பனர்களை தமிழ்த் தேசியவாதிகள் தமிழர்களாகவே ஏற்றுக் கொள்வதும், கடைநிலை மக்களை தமிழன் அல்ல என்று ஒதுக்குவதும் தீண்டாமையின் நவீன வடிவங்களாகவே உள்ளது. ஆயினும் தமிழ்த்தேசியம் பெரும்பான்மை மத்திய சாதிகளின் நிலையை பாதிக்காததால் அவர்களின் நிலை சமுதாயத்தில் உச்ச சக்தியாக மாறும் என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆகவே தமிழ் நாட்டில் தமிழினம், ‘திராவிடன்’ என்கிற கருத்தாக்கத்தால் தங்கள் அசல் அடையாளத்தையும் உரிமைகளையும் இழந்து நிற்கிறது என்ற குற்றச்சாட்டையும் அதனின்று மீண்டு தங்களை (திராவிடன் அல்ல) தமிழன் என்று உணரும் பொருட்டும் இழந்த தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் பொருட்டும் தமிழ்த் தேசியம் முனைப்பாக செயல்படவேண்டியது அதன் அடிப்படை பணியாகும். ஆயினும் ஒரு தனி ஆளுமை இல்லாத ஆரம்பகட்ட திட்டங்களாலும், சுயநல அரசியல் திட்டங்களாலும், இன வெறி மேலன்மையாலும் அதன் வெளிப்பாடு சந்தேகத்துகுறியதாகவே உள்ளது. பொதுவாக இனவெறிக் கொள்கையை தேசிய கொள்கையாக கொள்வது மிகவும் ஆபத்தான முடிவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே திராவிட அரசியல் பல ஓட்டைகளை கொண்டிருப்பது தெளிவு என்றாலும் தமிழ் தேசியம் என்னும் கருத்து அறிவு தளத்தில் திடமாக கட்டமைக்கப்படாத, வெறும் மக்கள் உணர்ச்சியைத் தூண்டும் வாதங்களை மட்டுமே உள்ளடக்கி உள்ளது என்பதே அதன் இன்றைய நிலை.
மேலும் தமிழ்த் தேசியம் பெயரளவில் மட்டுமே இன்று உலக தமிழர்களை ஒன்றுபடுத்தக் கூடிய களமாக சித்தரிக்கப்படுகிறது. ஆயினும் அதன் உள் அடங்கல்கள் முற்றும் தமிழ்நாட்டு தமிழர்களின் இன்றைய அரசியல் குழப்பங்களுக்கு விடைகாணும் முகமாகவே செயல்படுகிறது. ஆயினும் ஈழ மக்களின் அரசியல் போராட்டங்களை முகவரியாக்கி தமிழ்த் தேசியம் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. ஈழ மக்களின் நிலையைத் தொட்டுப் பேசும்போது உலக தமிழ்மக்களின் கவனத்தை எளிதில் பெறமுடியும் என்பதே இதன் நடைமுறை எதார்த்தம்.
முடிவாக, தமிழ்த் தேசியம் என்னும் இயக்கம் உலகத்தமிழர்களுக்கு இன மான சிந்தனையை ஊட்டவல்லதாயும், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பாக ஆக்கவல்லதாயும் செயல்படமுடியுமா என்பதே நமது கேள்வி. மதம், சாதி, இன அரசியல் காழ்ப்புகள் கடந்து, போராட்டங்கள் மிகுந்த நவீன உலகில் தமிழ் மொழியையும் இன மேன்மையையும் அழுத்தமாக நிறுவக்கூடிய ஒரு எழுட்சியாக அது செயல்படவேண்டியது அவசியம். தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தாக்கங்களை தமிழ்த்தேசியம் முன்னெடுக்கவேண்டும். உலகப் போக்குக்கு உடன்படாத எந்த அரசியல் சித்தாந்தமும் இயல்பாகவே காலாவதியாகிவிடும் என்பதால் நடைமுறை பொருளாதார சூழலில் தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாட்டை தெளிவாக்கவேண்டும். மாறாக அது வடுகனுக்கும் வந்தேரிகளுக்கும் எதிரான ஒரு இனத்தீவிரவாத இயக்கமாக தன்னைக் சுறுக்கிக் கொள்ளக் கூடாது. அன்றி, குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பதாயும் தனிமனித சாடல்களைச் செய்து காலங்கடத்துவதாயும் இனவெறியையும் இனபதற்றத்தையும் பாமரத்தமிழர்கள் உள்ளத்தில் விதைக்க முற்படுவதாயும் செயல்படுமாயின் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாகவே இருக்கும். தூரநோக்கு சிந்தனை அற்று சந்தர்ப்பவாத அரசியல் செய்து ஐம்பது வருடங்களுக்குப்பின் தோல்வியின் விளிம்பில் நிற்கும் திராவிட அரசியலின் நிலை தமிழ்த் தேசியத்திற்கும் வராதிருக்க அர்ப்ப உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்து அறிவு பூர்வமான திட்டமிடல் தேவை.
மலேசியாவில் திராவிட அரசியலும் தமிழ்த் தேசியமும்
கடந்த காலங்களில் மலேசியாவில் தமிழ்த் தேசியம் குறித்த வெளிப்படையான பேச்சுகள் மிகக் குறைவாகவே நடைபெற்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அது பற்றிய தீவிர கருத்துகள் சில இயக்கங்களால் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக 2012-ல் சீமானின் மலேசிய வருகைக்குப் பின் இங்கு சில இளைஞர்கள் குழு அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். தலைநகரிலும் வட மாநிலங்களிலும் ‘நாம் தமிழர்’ இயக்கம் இயங்கத்தொடங்கி இருக்கிறது. மேலும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் தமிழ்த் தேசிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அறிகிறேன்.அரிமாவளவனின் முயற்சியில் மலேசிய தமிழர் களமும் தொடங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழ்த் தேசியத்தின் நிலை அல்லது தேவை குறித்து ஆராயும் முன்னர் கடந்த ஒரு நூற்றாண்டாக இங்கு புழக்கத்தில் இருக்கும் சமுதாய கட்டமைப்புகள், பிரிவுகள் குறித்த புரிதல் அவசியம். இதன் வாயிலாக மலேசியத் தமிழர் வாழ்வியலில் தமிழ்த் தேசியத்தின் நிலையை நேரடி அணுகுமுறையின் வழியும் ,ஒப்பீட்டு அணுகுமுறையின் வழியும் ஆராய இடமுண்டு என்பது தெளிவாகிறது
மலேசியாவில் தமிழ் தேசியம் குறித்த பார்வை மிகவும் தட்டையானதாகவும் நம்மை அறியாமலேயே இரட்டை அளவுகோல் கொண்டதாகவும் உள்ளது. அதோடு தமிழ்த் தேசியம் குறித்த எந்த தெளிவான புரிதலும் இன்றி உணர்ச்சிக் கூச்சலிடும் கூட்டமும் பெருகிவருகிறது. ஆகவே, மலேசியாவில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு முன் நாம் பல விடயங்களில் தெளிவு பெற்றவர்களாக இருப்பது அவசியம். மலேசியாவின் ஒரு நூற்றாண்டு வரலாற்று தெளிவும் இதுநாள்வரை இங்கு இந்திய சமூகம் எதிர்நோக்கிய பிரச்சனைகளும் அரசியல் உரிமை போராட்டங்கள் பற்றிய தெளிவும் வேண்டும். இவற்றோடு சமகால மலேசிய இந்தியர்களின் அரசியல் சமூக போராட்டங்களையும் உட்படுத்தப்படுத்தி சிந்திக்கவேண்டியது அவசியம்.
மலேசிய அரசியலில் இந்திய வழித்தோன்றல்களின் அதிகாரத்துவ அரசியல் அடையாளம் ‘இந்தியர்’ என்பதேயாகும். முன்பு இலங்கைத் தமிழர்கள் தம்மை ‘இலங்கைத் தமிழர்கள்’ என்று கொண்டிருந்த அடையாளம் 1980-ல் நீக்கப்பட்டது. தமிழர், தெலுங்கர், மலையாளி போன்ற தென்னாட்டவரையும் சிறுபான்மை வடநாட்டவரையும் உட்படுத்தியதே இந்தியர் என்ற அடையாளம். மலேசிய இந்தியர்களின் உட்பிரிவாக தமிழர்கள் 85.1%, பஞ்சாபியர் 3.5%, மலையாளிகள் 3.2%, தெலுங்கர்கள் 2.4%, சிங்களர்கள் 1.9% மற்றவர்கள் 3.9% என்ற விழுக்காட்டுப்படி வாழ்கின்றனர். (1981 கணக்கெடுப்பு) இந்திய வம்சாவளி மக்கள் மொழி, இனம், சமயம் ஆகிய அடிப்படைகளில் பிளவுபட்டவர்களாகவே வாழ்கிறார்கள். மலேசியர்களில் சிறுபான்மை இனமாக வாழும் இந்திய வம்சாவளி மக்கள் தங்களுக்குள் மிக நெகிழ்வான இணைப்பைக் கொண்டிருந்தாலும் பெரும்பான்மை தமிழர்களின் தாய்மொழியான தமிழையே தொடர்புமொழியாகப் பயன்படுத்திவருகின்றனர். அதிகார ஆவணங்களில் இந்தியர் என்று குறிக்கப்படும் எல்லாருமே ஓரளவேனும் தமிழ் பேசத் தெரிந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மலேசிய இந்தியர்களின் அதிகாரத்துவ அடையாளம் ‘இந்தியர்’ என்றிருந்தாலும் பேச்சு வழக்கில் ‘தமிழர்கள்’ என்றே உரைக்கப்படுகிறது.
மலேசியாவில் தமிழ் மொழி அரசு அதிகார மொழிகளில் ஒன்றாக நிலைப்பெற்று உள்ளது. தமிழ்க் கல்வி அரசு அனுமதியுடன் இயங்குகிறது. அதே நேரம் மலையாளம் தெலுங்கு போன்ற தாய்மொழிகளையும் வீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். (சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் தெலுங்கு ஆரம்பள்ளிகள் இயங்கின. ஆனால் மலேசிய கல்விச்சூழலின் மாற்றத்தாலும் தெலுங்கு மக்கள் தங்கள் தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காததனாலும் அவை மூடப்பட்டன) ஆகவே பிறப்புப்பத்திரம், அடையாள அட்டை போன்ற அதிகாரத்துவ ஆவணங்களில் இனம் ( BANGSA / RACE) என்ற பகுதியில் ‘இந்தியர்’ என்று குறிப்பிடுவதே வழக்கமாக இருந்துவருகிறது. முன்பு இனம் (BANGSA / KAUM) என்று குறிக்கப்பட்ட பிறப்புப்பதிவு இப்போது வழித்தோன்றல் (KETURUNAN) என்று மாற்றப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இனம் என்பதும் வழித்தோன்றல் என்பதும் வேறு வேறு பொருள் தருபவை. இனம் என்பது ஒரு இனக்குழுவாகவும் வழித்தோன்றல் என்பது இனக்குழுக்களின் தோற்றுவாயையும் குறிக்கின்றது. ஆகவே இங்கு வாழும் தமிழ், தெலுங்கு, மலையாள வட இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய வழித்தோன்றல்கள் என்ற ஒரு அடையாளத்தையே கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகளும் இந்தியப் பிரநிதித்துவ கட்சிகளாகவே செயல்படுகின்றன. அரசாங்க மானியங்களும் பிற ஒதுக்கீடுகளும் இந்தியர் என்ற அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது.
தமிழர் பெரும்பான்மையினராக இருந்த போதும் தமிழர்களுக்கு என்று தனி அரசியல் கட்சிகளோ தனி அரசாங்க ஒதுக்கீடுகளோ ஒதுக்கப்படுவதில்லை. இந்திய அரசியல் கட்சிகளாக இருந்தாலும் அதன் தலைவர்கள் தமிழர்களாகவே இருப்பது (பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெரும் பொருட்டு) ஒரு மரபாக உள்ளது. மலையாளிகள், தெலுங்கர்கள் ஆகிய இனமக்கள் அவ்வப்போது தங்கள் சங்க திட்டங்களுக்காக அரசாங்க மானியம் பெறுவது உண்டு என்றாலும் (குறிப்பாக நஜீப் பிரதமர் ஆன பின்பு) அது பிற அரசு சாரா இயக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போன்ற ஒன்றாகவே அமைகின்றது. உதாரணத்திற்கு ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு அரசாங்கம் சில கோடி வெள்ளிகளை மானியமாக வழங்கியது. அதேப் போல் தெலுங்கு சங்கம் தொடங்கி உள்ள கல்வி நிதி திட்டத்திற்கு அண்மையில் ஐந்து கோடிகளைக் கொடுத்துள்ளது. மற்றபடி உயர்கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் போன்ற சலுகைகளில் 10% க்கும் குறைவான அளவிலேயே இந்தியர்கள் அடக்கப்பட்டுவிடுகின்றனர். ஆகவே மலேசிய இந்தியர்கள் என்ற ஒரு ‘அடையாள குழு இனத்தையே’ மலேசிய அரசியல் அதிகாரப்படுத்துகிறது.
ஆயினும், நாடு சுதந்திரம் பெற்ற போது இந்தியர் என்ற வட்டத்துக்குள் இயங்கிய சீக்கியர்களும் இந்திய முஸ்லீம்களும் மெல்ல மெல்ல தங்களைத் தனித்துக் கொண்டுள்ளது மலேசிய இந்தியர் அரசியலில் ஒரு குறிப்பிடதக்க மாற்றம் ஆகும். சீக்கியர்கள் இன்று தனி இனமாக அடையாளம் பெரும் வேளையில் இந்திய முஸ்லீம்கள் தங்களை மலாய் இனத்தவரோடு கலந்துவிடுவதிலும் பூமிபுத்ரா தகுதி பெருவதிலும் குறியாய் உள்ளனர். முன்பு ம.இ.கா வில் இணைந்து பணியாற்றிய இந்திய முஸ்லீம்கள் இப்போது KIMMA என்னும் அரசியல் கட்சியை தொடங்கி அரசாங்க ஆதரவு கட்சியாக நடத்திவருகின்றனர். அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ சைட் இப்ராஹிம் பின் காதிர் மேலவை உறுப்பினராக தேர்வு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் மலேசிய இந்தியர்களின் அரசியல் தாய்கட்சியாக கருதப்படும் ம.இ.காவில் முஸ்லீம் தமிழர்களும், சீக்கியர்களும் இன்றும் தொடர்ந்து அங்கத்துவமும் பொறுப்புகளும் வகிக்கவே செய்கின்றனர்.
மலேசிய இந்தியர்கள் கோயில்கள் கட்டுவதையும் இந்து சமயத்தை இந்நாட்டில் நிலை நாட்டுவதையும் தங்கள் உரிமையாக கருத்துபவர்கள். தொடர்ந்து வளர்ந்துவரும் இஸ்லாமியமயமாக்களும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான மதமாற்றுச் சூழ்ச்சிகளும் மலேசிய இந்துக்களிடையே பதற்றத்தை உருவாக்கி தங்கள் மத அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்ள உந்துகிறது. உலகின் மிகப்பெரிய இந்து தெய்வ சிலைகளும், உயராமான கோபுரம் கொண்ட கோயில்களும், பல கோடி வெள்ளி செலவில் ஒவ்வொரு ஆண்டும் மலேசிய இந்தியர்களால் கட்டப்படுகின்றன. நாத்திகவாதத்தையோ சமய மறுப்பையோ அதிக பெரும்பான்மை மலேசிய இந்தியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை இதன்வழி அறியலாம்.
அரசாங்க பொதுவிடுமுறைகள் தைப்பூசம், தீபாவளிப்பண்டிகை ஆகிய இரு தினங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதால் மதச்சார்புஅரசாங்கத் தரப்பும் மலேசிய இந்தியர்களின் பொது அடையாளமாக மதத்தையே முன்னிருத்துவது தெளிவு. மேலும் மலேசியாவில் இந்தியர்களை ஒன்றுதிரட்டக்கூடிய ஆற்றல் இனத்தை விட மதத்துக்குதான் உள்ளது என்பது ஹிண்ராஃப் (HINDRAF) போராட்ட காலத்தில் (2007) தெளிவானது. தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க ‘இந்தியர் உரிமை’ என்று அடையாளப்படுத்தாமல் ‘இந்து உரிமை’ என்று அடையாளப்படுத்தியவர்கள் அவர்கள். ஆகவே தமிழினம் உட்பட வேறெந்த அடையாளத்துக்கும் இல்லாத வலிமையை மலேசியாவில் இந்து சமயம் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
மலேசியாவில் திராவிட கழகங்கள் மலேசிய இந்தியர்களின் அரசியல் தலைவிதியை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவை அல்ல. அவை சமய, பண்பாட்டு சீர்திருத்த இயக்கமாக மட்டுமே தங்கள் பணிகளைச் செய்கின்றன. திராவிடர் கழகங்கள் பெரியார் கொள்கைகளாக பகுத்தறிவுவாதம், சாதி எதிர்ப்பு, சமுதாய சீர்திருத்தம் போன்ற விடயங்களை அடிப்படையில் பேசினாலும் அவை மலேசிய மக்களின் வாழ்வியலோடு பொருந்தமுடியாமலும், நடைமுறை வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் நீர்த்துப் போய்விட்டன. மேலும் திராவிட கழகங்கள் திராவிட இனம் என்று குறிப்பிட்டாலும் ‘திராவிட இனம்’ என்பவர் யாவர் என்கிற குழப்பம் எல்லாருக்கும் உண்டு. தெலுங்கர்களும் மலையாளிகளும் ஒருநாளும் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள சம்மதியார்கள். ஆகவே தமிழர்களே திராவிடர் என்கிற வேறு பெயரில் அழைக்கப்படுவதாக நாம் பொருள் கொள்ளமுடியும். ஆயினும் சமூக அரசியல் தலைவர்கள், மேடைப் பேச்சுக்கு பெரியாரையும் அவரின் பகுத்தறிவு கருத்துக்கள் சிலவற்றையும் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றனர். தங்கள் மேல் சமூதாய சீர்திருத்தவாதி என்ற பிம்பம் விழும் பொருட்டு அவர்கள் அவ்வாறு செயல்படுவது உண்டு.
பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை நடைமுறைப் படுத்தும் சூழலில் மலேசியர்கள் இல்லை என்பதே உண்மை. பெரியாரின் மலேசிய வருகையின் போதுகூட அவர் மதத்தொடர்பான எதிர்கருத்துகருத்துகளையோ நாத்திக கருத்துகளையோ இங்கு பேசவில்லை என்றே அன்றைய குறிப்புகள் உணர்த்துகின்றன. (கவி: மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்) மலேசிய திராவிட கழக அமைப்பாளர்களும் இவ்வுண்மையை உணர்ந்து திராவிட கழக செயல்பாடுகளை ‘யார் மனமும் கோணாதவாறு’ நடத்தப் பழகிக் கொண்டுவிட்டனர். சாதிய ஒழிப்பில் மட்டும் ஓரளவு ஈடுபாடு கொண்டோர் இங்கு உள்ளனர். ஆகவே சாதிய கொடுமைகள் குறித்து கடந்த ஒரு நூற்றாண்டாக மீண்டும் மீண்டும் எழுதியும் பேசியும் வந்ததன் பயனாக, பெருவாரி பாமர மக்கள் சற்றே விழிப்படைந்து வெளிப்படையாக சாதியம் பேசுவது நவீன வாழ்வியலுக்கு அழகல்ல என்ற புரிதலோடு சாதியை மறைவாக பேசும் ‘நாகரீக’ வழக்கம் கொண்டுள்ளனர். திருமணங்களிலும் கட்சி தேர்தல்களிலும் மலேசிய இந்தியர்களின் சாதிப்பிடிப்பை நன்கு அறியலாம். ஆயினும் கடந்த இருபது ஆண்டுகளாக சில செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் படித்தறிந்தவர்களும் சாதிச் சங்கங்களை தமிழர் பண்பாட்டு உரிமை என்ற நிலைப்பாட்டுடன் நிர்வகித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
பெரியாரின் பகுத்தறிவுவாத கருத்துகள் மலேசியாவில் வளரவில்லை என்பது உண்மையானாலும் தமிழ் மொழி இந்நாட்டில் வேர் ஊன்றி வளர அவரின் செயல்பாடுகளும் மூல வித்தாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரியார் இரண்டு முறை மலேசியாவிற்கு (அப்போது மலாயா) வந்து சென்றுள்ளார். முதல் முறை 1929 லும் பிறகு 1954 திலும் அவர் வருகை தந்துள்ளார். அவரின் முதல் வருகையின் விளைவாக மலேசியாவில் பலர் சுயமரியாதை சிந்தனையை பெற்றனர் என்பதோடு தமிழ் மொழி மீதான பற்றையும் வளர்த்துக் கொண்டனர். நகரங்களிலும் தோட்டபுறங்களிலும் நூல் நிலையங்கள் பல தொடங்கப்பட்டதும் சுயமரியாதை கருத்துக்களின் தாக்கதின் வழிதான் என்பதை மறுக்க முடியாது.பெரியார் தமிழ் மொழியை சிறுமை படுத்தினார் என்ற வாதமெல்லாம் அன்று பேசப்படாத நிலையில் பலரும் தமிழ்ப்படிக்க பெரியாரும் ஒரு உந்துதலாக இருந்ததே வரலாற்று உண்மை. மலாயாவில் தமிழ் மொழி பற்றையும் இன உணர்வையும் அன்றைய பெரியார் தொண்டர்கள் ஒன்றாகவே கொண்டு சென்றனர். பெரியார் மலாயாவுக்கு வந்த போது இங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பிலும் அவர் ஆற்றிய உரைகளிலும் தமிழின உணர்வே மேலிட்டிருப்பதை அறிய முடிகிறது ஆயினும் இங்கு இனம் மதம் என்ற வேற்றுமை பாராமல் அவருக்கு சிறப்பு செய்துள்ளனர்.
மேலும் பெரியாரின் தாக்கத்தில் சமுதாய தொண்டாற்றுவதில் முனைப்பு காட்டிய கோ.சாரங்கபாணி, ச. அன்பானந்தன் போன்ற பலரும் தமிழ் மொழியை இந்நாடில் நிலைபெறச் செய்ய பாடாற்றினார்கள். அக்கால கட்டத்தில் தமிழுக்காக மலேசியாவில் உழைத்த பெரியவர்கள் எல்லாருமே பெரியார் தொண்டர்களாகவே தங்களை அறிவித்துக் கொண்டார்கள். ஆகவே மலேசியாவில் தமிழர்களுக்கு பெரியாரால் கிடைத்த மிகப்பெரிய நன்மை தமிழ் மொழியை தக்க இடத்தில் வைக்கமுடிந்ததாகும். பெரியாரின் தாக்கத்தால் இனமான உணர்ச்சி பெற்ற தமிழர்கள் கோ.சாவின் பின் ஒன்றுகூடி நின்றதனாலேயே மலாயா பல்கலைக்கழகத்தில் இன்றும் தமிழ் நிலைத்திருக்கிறது என்கிற வரலாற்று உண்மையை மலேசியாவில் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் உணரவேண்டும்.
மலேசிய வரலாற்றில் இந்தியர்கள் என்ற அடையாளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிய ஆதிக்க கொடுமைகள், சயாம் மரண ரயில் நிர்மாணிப்பு, மே இனக்கலவரம், கம்போங் மேடான் சம்பவம் போன்ற வரலாற்று இடர்கள் அனைத்திலும் மலேசிய இந்தியர்கள் என்ற பொது இனமாகவே நமக்கு பாதிப்புகள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஹின்ராஃப் போராட்டம் மட்டுமே இந்து என்ற புதிய அடையாளத்தில் செயல்பட்டது. வாரலாற்று காலந்தொட்டே அதிகார சக்திகள் மலேசிய இந்தியர்களை தமிழர், தெலுங்கர், மலையாளி என்று இன அடிப்படையில் வைத்து விணையாற்றியது இல்லை. தோட்டப்புறங்களில் சில நிர்வாகங்களிடம் தமிழர்களுக்கு எதிரான மலையாளிகள், யாழ்ப்பாணத்தமிழர்களின் இன ஆதிக்கப்போக்கு இருந்தது உண்மையென்றாலும் அது அரசியல் வடிவங்கொண்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே மலேசிய இந்தியர் அரசியலில் தமிழ்த்தேசியத்தின் இடம் என்னவாக இருக்கும் என்று ஆய்வது அவசியம். நேரடி அணுகுமுறையின் வழி சிந்தித்தால், அடிப்படையிலேயே, தமிழ்த் தேசியம் என்ற இயக்கம் நம் நாட்டு தமிழர் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் முதன்மை கோரிக்கையே திராவிட அரசியலில் இருந்து விடுபடுதல் என்பதுதான். நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வில் தனி அரசியல் களம் காண்பதே அவர்களின் நோக்கம். காரணம் அவர்கள் திராவிட சித்தாந்தங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலால் பாதிப்புற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அதன் அடிப்படியிலேயே தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்னும் இயக்கமும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் மலேசியாவில் நாம் அரசியல் அதிகாரத்தால் எந்நாளும் திராவிடர் என்று குறிப்பிடப்பட்டதே இல்லை. அதை நாமேதான் பேச்சு வழக்கில் வலிந்து கூறிக்கொள்கிறோம். உண்மையில் அப்படி ஒரு இனக்குழுவோ மக்களோ இங்கு இல்லை. ஒரு இயக்கத்தின் பெயர் என்ற அளவிலேயே ‘திராவிடத்தை’ இங்கு ஏற்றுக் கொண்டுள்ளோம். இங்கு வாழ்பவர்கள் இந்திய வம்சாவளி மக்களான தமிழர், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்றோர்தான். எல்லாருக்கும் சொந்த தாய்மொழி உண்டென்றாலும் பெரும்பான்மை தமிழ்மொழியே ஊடக மொழியாக உள்ளது என்பதே எதார்த்த உண்மை. இங்கு நாம் இந்தியர்கள் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் ஆளப்பட்டுவருகிறோம். இந்து சமயம் மலேசிய இந்தியர்களின் பேராதரவில் இயங்கும் சமயமாகும். இங்கு ஆரியர்-பார்ப்பனர் போன்ற வாதங்களுக்கும் முக்கியத்துவம் இல்லை. மேலும் ஒரு காலத்தில் மூட நம்பிக்கைகள் என்று பெரியார் சாடிய சடங்குகளும் வழக்கங்களும் இன்று மலேசிய இந்தியர்களால் அறிவியல் பின்புலம் கற்பிக்கப்பட்டு சந்தைப்படுத்தபடுகின்றன. இந்து சமய சடங்கு சம்பிரதாயங்கள் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்று பலரும் உறுதியாக நம்புவதோடு அதில் பெருமையும் கொள்கின்றனர். மலேசிய தமிழர்கள் திராவிட அரசியலாலோ திராவிட சீர்திருத்த கருத்துகளாலோ கட்டமைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதே உண்மை. அவர்கள் புராதன மதநம்பிக்கைகளாலும், பண்பாட்டு கூறுகளாலும் தங்களை மென்மேலும் நெருக்கிக் கொள்ளும் மக்களாகவே இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே மலேசியாவில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
மலேசியத் தமிழர்கள் வீழ்ந்ததாக வாதிட்டாலும் அது ‘இந்தியத்தாலோ’ ‘இந்துத்துத்துவத்தாலோ’ வாகத்தான் இருக்க முடியும். காரணம் அவைதான் மலேசியத் தமிழர்களை வழிநடத்தி வருகின்றன. இங்கு இயங்கும் அரசியல் கட்சிகள் இந்தியர் அரசியல் கட்சிகளாகும். நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மை ஆட்சி செய்பவர்கள் மலாய், சீனர் போன்ற பிற இனத்தார்தான். ஆகவே திராவிட அரசியலில் இருந்து விடுபடுதல் என்ற தமிழ்த் தேசியத்தின் முதன்மை கோரிக்கை இங்கு பொருளற்றதாகி விடுகின்றது.
அடுத்த நிலையில், தமிழ் நாட்டு பூர்வகுடிகளான தமிழர்களின் மண்ணையும் உரிமைகளையும் பிற இன வந்தேரிகள் அபகரித்துக் கொண்டார்கள் என்ற சீற்றம் தமிழ்த்தேசியம் அமைய இன்னொரு காரணம். அங்கு தமிழ்த்தேசியம் தொல்குடிகளின் உரிமைப் போராட்டமாகும். தமிழர்களை, பிழைக்க வந்த கூட்டம் சுரண்டி வாழ்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என்னும் பொருளாதார விழிப்புணர்வின் தீவிர வடிவமாகவும் நாம் தமிழ்த் தேசியத்தை கொள்ளலாம். அது தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டம். ஆகவே மலேசிய சூழலில் மேற்கண்ட தேவைகள் எதுவுமே பொருந்திவருவதாக இல்லை. இங்கு நம்மையே வந்தேறிகள் என்று மலாய்காரர்கள் தூற்றிக் கொண்டிருக்கையில் நாம் எந்த முகாந்திரத்தில் தமிழ் தேசியத்தை ஆதரித்து பேசுகிறோம் என்பது சிந்தனைக்குறியது. மேலும் வந்தேறி சிறுபான்மையை ஒரு தேசிய இனம் ஓரங்கட்டும் செயலை நாம் தமிழ்த் தேசியத்தின் ஊடாக ஆதரிக்க தலைப்படுகிறோம் என்றால், நாம் நம்மை அறியாமலேயே இந்நாட்டில் இப்ராஹிம் அலி (PERKASA) போன்ற இனவாதிகளின் செயலுக்கும் ISMA போன்ற இனவாத இயக்கங்களுக்கும் ஆதரவு கொடுகிறோம் என்றே பொருளாகிறது. பெர்காசா நமக்கு செய்ய நினைக்கும் அநீதிகளை நாம் இனவாதம் என்று பொங்கி எழும் அதே நேரம் தமிழ் நாட்டில் இருந்து சீமானோ, கரிமாவளவனோ வந்திருந்து ‘வடுகன் அயோக்கியன்’ என்று பேசும் போது நாம் கைத்தட்டி வரவேற்கிறோம்.
அதேப் போல் மலேசியாவில் தெலுங்கு சங்கமும், மலையாளிகள் சங்கமும் இரண்டு தலைமுறைகளாக மறக்கப்பட்டுவிட்ட தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்க முயலும் செயல்களை சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் தமிழில் பேசுவதை விட தங்கள் தாய்மொழியில் பேசுவதை அதிகப்படுத்தும் போது அது தமிழுக்கு வந்த அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. தெலுங்கு மொழி ஆரம்ப பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நஜீப்பிடம் மனு போட்டதும் பல தமிழ் ஆர்வாளர்களும் தொண்டர்களும் சோர்வுற்றதைக் கண்டேன். தமிழ்த் தேசிய கண்ணோட்டத்தில் இதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இதே நிலை தமிழர்க்கு மொரிசியஸ், மியன்மார், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டபோது, அதாவது அவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை மீட்டெடுக்க முயன்றபோது நமது செயல் எப்படி இருந்தது என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்பது நல்லது. சிறுபான்மையினரின் தாய்மொழிக் கல்வி என்பது இந்நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சட்டம் வழங்கும் உரிமையாகும். ஆகவே எந்த இனமாக இருந்தாலும் அது தன் தாய்மொழிக் கல்வியை வளர்க்க முயலும் போது அதை கேள்வி கேட்பது ஏற்புடையது அல்ல.
தற்போதைய நிலையில் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க் கல்வியும் முழு அதிகாரத்தோடு இயங்குகின்றன என்றாலும், அந்த வாய்ப்புகளை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஆய்வுக்கு உட்பட்டது. 2000 ஆண்டு கணக்கெடுப்புபடி மலேசிய தமிழர்களில் சுமார் 48.7% பேர்தான் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இப்போது இந்த விழுக்காடு மேலும் குறையக்கூடும். ‘தமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு” என்று இயக்கம் நடத்தி நாம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர் பதிவை அதிகரிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம். இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுக்கவே அலட்சியம் காட்டுகின்றனர். பெற்றோர்களே இவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது அவலம்.
SPM, STPM போன்ற தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்வோர் சில ஆயிரம் மாணவர்கள்தான். நாட்டில் தமிழ் நாளிதழ்கள் பல வெளிவந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பவர்களின் எண்ணிக்கை 40% பேர்தான். மலேசியாவில் வெளியிடப்படும் தமிழ் நூல்களை வாங்கி ஆதரவு தருவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுவதில்லை. வீட்டில் தமிழ்ப்பேசுவதால் தங்கள் பிள்ளைகளின் பிற மொழி அறிவு தடைபடும் என்று காரணம் கூறி பிள்ளைகளிடம் மலாயிலோ ஆங்கிலத்திலோ பேசும் தமிழர்கள் செய்யாத பாதகத்தையா பிற இனத்தார் தமிழுக்குச் செய்துவிடப் போகிறார்கள்?
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் மட்டுமே தமிழை நுகரும் தமிழர்களே இங்கு அதிகம். ஆகவே பிற சிறுப்பான்மையினரின் தாய்மொழி வளர்ச்சி தமிழ்மொழிக்கு அச்சுறுத்தல் என்பது நமது இயலாமைகளை மூடிமறைக்கும் மாயையாகும். தமிழுக்கு இன்று இந்நாட்டில் நம் மூதாதையர் போராடி பெற்றிருக்கும் வாய்ப்புகளைத் தமிழர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தமிழின் இடம் அசைக்க முடியாததாக இருக்கும்.
அடுத்து, இலங்கைப் இனப்படுகொலைகளுக்கு எதிராக மலேசியத் தமிழர்களாகிய நாம் வெகு நெடுங்காலமாகவே எதிர்ப்புகளை காட்டியே வந்துள்ளோம். அவ்வப்போது பல வழிகளில் ஈழ மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வந்துள்ளோம் என்பதும் உண்மையே. தமிழினம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது தார்மீகம் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆகவே தமிழீல மக்களுக்கான ஆதரவு நமக்கு தமிழ்த் தேசிய முழக்கத்தின் வழிதான் வரவேண்டும் என்ற சூழல் இல்லை.
இலங்கையில் இருந்து இங்கு அகதிகளாக வருவோரும் தமிழ்த் தேசிய முழக்கங்களை நம்மிடம் வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மண்சார்ந்த போராட்டத்துக்கு மொழி இன அடிப்படையில் ஆதரவுகேட்டு நிற்பதே இயல்பு. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் பேச்சாளர்கள்தான் இங்குள்ள பிரபாகரன் ஆதரவாளர்கள், ஈழ மக்களுக்கு உதவும் நன்நெஞ்சர்கள், மனிதாபிமான தமிழர்கள் அனைவரையும் தங்கள் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமாக திரட்டும் முயற்சிகளைச் செய்கின்றார்கள். தமிழ்த் தேசியத்தின் வழி ஈழமக்களுக்கு நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மலேசிய தமிழர்களும் குறிப்பாக இளைஞர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். உதாரணத்திற்கு சீமான்மலேசியாவில ஈழ மக்களின் துயர்களையும் ராஜபஷேவின் கொடுமைகளையும் உணர்ச்சியோடு பேசி ஆதரவு பெற்று இறுதியில் அவரது ‘நாம் தமிழர்’ இயக்கம் உதயமாக வழிதேடிக் கொண்டதைக் குறிப்பிடலாம். அண்மையில் பினாங்கில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் வை.கோவும் இதே பாணியில்தான் பேசினார். அவர்களின் பார்வையில் மலேசிய தமிழர்கள் மிக செழிப்பாக வாழ்வதாகவும் அவர்களின் ஆதரவை தங்கள் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசியல் சூழலை மூலதனமாக ஆக்குவதாகவுமே இருக்கிறது.
ஆக பலவகையிலும் நமக்கு (மலேசியாவில்) தமிழ்த் தேசியம் நேரடி தொடர்பற்றதாகவே உள்ளது. ஆகவே மலேசியாவில் தமிழ் தேசியம் பேசுவோர் தமிழ் நாட்டின் அதே அச்சில் நின்று பேசுவது பொருளற்ற செயல். அங்கு அதற்கு தேவை இருக்கும் பட்சத்தில் அதற்காக பலர் களம் இறங்குவது ஒப்புக்கொள்ளக் கூடியதே. ஆனால் நாம் தமிழ் நாட்டு பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு, அதை அப்படியே இங்கே ஒப்பித்துக் கொண்டு இருப்பது அறிவுடமை அன்று.
ஆகவே இன்று தமிழக மின்னூடகங்களின் வழி பரப்பப்படும் தமிழ்த்தேசியம் என்னும் அரசியல் அச்சு நேரடி மலேசியச் சூழலில் பொருந்தக்கூடியதாக இல்லை. ஆயினும் பல்வேறு சாக்குபோக்குக்களைக் கூறி அவற்றை இங்கு பொருத்திவிட சிலர் முயல்கின்றனர். தமிழ்த் தேசியத்தை முன்னிருத்தி இங்கு இயங்குதல் என்பது இப்போதைக்கு ‘இல்லாத எதிரியோடு போரிடும்’ குழப்பமான நிலைக்கு நம்மை கொண்டு சென்று விடும். காரணம் மலேசியத் தமிழர்கள் திராவிட அரசியலால் தோற்றார்கள் என்ற ஒரு நிலை அறவே பொருந்தாத நிலையில் திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியமும் பொருத்தமற்ற ஆயுதமாகவே இருக்கும். புலி வேட்டைக்கு தயார் செய்யப்பட்ட ஆயுதம் திமிங்கில வேட்டைக்குப் பொருந்தாது. தெளிவாகச் சொன்னால் இங்கு திராவிட அரசியல் இல்லை. ஆகவே திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியமும் தேவை இல்லை.
அடுத்து மலேசியாவில் தமிழ்த் தேசிய அரசியல் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது உறுதியானாலும் அது தமிழ்மக்களுக்கு சொல்லவரும் அடிப்படை செய்தியை புறக்கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணம் தமிழ்த் தேசியம் ‘தமிழர்கள்’ என்ற ஒற்றைச் சொல்லின் வழி உலகில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களோடு உரையாட முற்படும் தகவல்களை நாம் நமது சூழலுக்கு ஏற்ப கவனப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவே உணர்கிறேன். மலேசியாவில் சிலர் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து குரல் எழுப்பிக் கொண்டிருப்பதன் உளவியல் காரணம் இவ்வகை ஒப்பீட்டின் அடிப்படையிலேயே அமைவதாக கருதுகிறேன். அதாவது தமிழ் நாட்டிலும் தமிழர்கள் தெலுங்கர், மலையாளிகளுடன் வாழ்கிறார்கள். மலேசியாவிலும் தமிழர்கள் தெலுங்கர் மலையாளிகளுடன்தான் வாழ்கிறார்கள். ஆகவே அங்கு உள்ள நிலை இங்கும் நமக்கு வரும் என்ற பதற்றமான ஒப்பீடே அது. ஆகவே தமிழ்த் தேசியத்தை ஒப்பீட்டு முறையில் நம் சூழலோடு பொருத்தி ஆராய்வது நன்மை பயக்கும்
.
இந்தியர்களும் திராவிடமும்
தமிழகத்தில் திராவிடர் என்று குறிக்கப்படும் மரபினத்திற்குள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பேசும் மக்கள் அடக்கப்படுகிறார்கள். மலேசியாவில் இதே மொழி மக்கள் இந்தியர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அங்கு திராவிட அரசியல் கட்சிகளின் தலைமையில் இவர்கள் ஆளப்படுகிறார்கள். இங்கு இந்திய அரசியல் கட்சிகளின் தலைமையில் இவர்கள் ஆளப்படுகிறார்கள். ஆகவே அங்கு திராவிட அரசியலின் இடத்தை இங்கு இந்திய அரசியல் பிடித்திருக்கிறது. அங்கு திராவிடம்; இங்கு இந்தியர். இந்த அடிப்படை ஒற்றுமைகளைக் கொண்டு நாம் தமிழ்த் தேசியம் சொல்லும் இன அரசியலை ஓரளவு ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.
கடந்த 7.12.2014 அன்று நடந்து முடிந்த மலேசிய தெலுங்கு சங்க ஆண்டுக் கூட்டம் நமக்கு சில புதிய சிந்தனைகளையும் மலேசிய இந்தியர் அரசியலின் எதிர்காலம் குறித்த வினாக்களையும் முன்வைக்கின்றது. தமிழ் நாட்டில் திராவிட கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு தமிழ்த் தேசியம் தமிழர்களை வெளியேற்றும் பணியைச் செய்கிறது. மலேசியாவில் தெலுங்கு சங்கம் அதே வேலையை அதாவது இந்தியர் அரசியல் கூட்டமைப்பில் இருந்து தெலுங்கு மக்களை வெளியேற்றும் திட்டத்தில் இறங்கி உள்ளது தெளிவாகிறது. இதன் அடிப்படை வேலையே மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர். அட்சயகுமார் அரசாங்கத்திடம் முன்வைத்த தெலுங்கு மக்களின் தனி அடையாள கோரிக்கையாகும். பிறப்பு பத்திரத்தில் இனம் என்னும் விடயத்தில் இதுவரை பொதுவாக ‘இந்தியர்’ என்று குறிக்கப்படுவதை மாற்றி, ‘தெலுங்கு’ என்று குறிப்பிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தெலுங்கு என்பது ஒரு தனி இனமாகும். தெலுங்கு மக்களுக்கு தனி மொழியும் பண்பாடும் உண்டு என்று கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது (தினக்குரல் ப.1, மக்கள் ஓசை ப.16; 8.12.2014). இக்கூற்றுகளும் கோரிக்கைகளும் ஏற்புடையனவா என்பது சந்தேகத்திற்கு உரியன என்றாலும் நமது கவனம் அதுவல்ல. தங்கள் இன அடையாளங்கள் மறைந்து விடக் கூடாது என்கிற விழிப்பு உள்ள சிறுபான்மையினரிடம் உள்ள பதற்றமே டாக்டர் அட்ஷயகுமாரிடம் உள்ளது. ஆனால் அதை அவர் அரசியல் சட்டத்தின் வழி முன்னெடுக்க நினைப்பது ஆபத்தான பின்விளைவுகளையே மலேசிய இந்தியர் அரசியலில் ஏற்படுத்தும்.
உண்மையில் ஆழ்ந்து நோக்கினால் டாக்டர் அட்சயகுமார் பேசுவது மலேசிய சூழலுக்கான ‘தெலுங்கு தேசியமாகும்’. அதாவது தனி மொழியும் பண்பாடும் உள்ள ஒரு இனமான தெலுங்கர்கள் இனி இந்தியர் என்ற கூட்டு இன அடையாளத்தில் வாழ்வதை விரும்பவில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது. தங்களுகென்று ஒரு இன அடையாளம், கல்வி, வானொலி ஒலிபரப்பு என்னும் கோரிக்கைகள் ஒரு தேசிய இனமாக தங்களை இருத்திக் கொள்ளும் முயற்சியாகும். இதன் அடுத்த கட்டம் தனி தெலுங்கு அரசியல் கட்சி தொடங்குவதாக அமையக்கூடும்.
தமிழ் முஸ்லீம்கள் இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டாலும் அவர்கள் தமிழ் முஸ்லீம்கள் என்ற சிறப்பு அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. அவர்கள் இஸ்லாமிய/மலாய் கலப்புமணங்களின் வழி தங்களை பூமிபுத்ராக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் மலேசிய வரலாற்றில் இருந்து இஸ்லாமிய தமிழர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பது உறுதி.மிகச் சிறுபான்மை சீக்கியர்கள் தனி இனமாக மலேசிய சட்டத்தில் இடம் பிடித்து விட்டனர் என்பது உண்மை என்றாலும் அவர்கள் தமிழர்தம் பண்பாட்டு வாழ்வியலோடு ஒட்டு அற்றவர்கள் என்பதையும் மறுக்க முடியாது.
சாபாய் நாடாளுமன்ற உறுப்பினர் காமாட்சி இது குறித்து கூறும் போது “ நாம் மலேசிய இனமாகும், இந்தியா என்பது ஒரு நாட்டின் பெயர். இனத்தின் பெயரல்ல. ஆகவே மலேசியர்களாகிய நாம் நமது இனமாக தமிழ், தெலுங்கு மலையாளி என்று குறிக்கப்படுவதே முறை, ஆகவே டாக்டர் அட்சயகுமாரின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன்.” ( ம.ஓசை ப. 6 10.12.2014) என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் மலேசியாவில் தங்களின் இனம் என்று தமிழரோ தெலுங்கரோ மலையாளியோ தனி அரசியல் அடையாத்தைக் கோருவது மீண்டும் நம்மை தூய இன கண்டுபிடிப்பு சிக்கலுக்குள் கொண்டு போய்விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. யார் உண்மை தமிழன்?, யார் உண்மை தெலுங்கன்? என்று தேடி அலையும் அவலம் வரக்கூடும். ஆகவே, தாய்மொழி வளர்ச்சியில் நாம் காட்டும் அக்கரையே இனத்துக்கு செய்யும் உண்மையான சேவையாகும். எனவே, திட்டமிட்டோ அல்லது அதிகார ஆசையினாலோ டாக்டர் அட்ஷய குமார் தனி தெலுங்கு அடையாளத்தை கோரினாலும் அதை நாம் முற்றாக மறுக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். மலேசியாவில் தமிழன் என்றோ தெலுங்கன் என்றோ மலையாளி என்றோ தனித்து அரசியல் அடையாளம் தேடவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதே உண்மை. இங்கு இந்திய இனங்களுக்குள் ஒதுகீட்டு பிரச்சனைகளோ, பின் தள்ளப்படும் நிலைகளோ இல்லை. ஆகவே டாக்டர் அட்ஷய குமார் போன்றவர்கள் தங்களை இயக்கத்தில் உறுதிபடுத்திக் கொள்ளவும் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கவும் இதுபோன்ற பரப்புரை உத்திகளை செய்வது இயல்பு என்றே கொள்ளமுடியும். ஆனால் இவ்வகை ஆபத்தான உத்திகளினால் இதுவரை நாட்டில் தமிழ்த் தொண்டு ஆற்றியும் தமிழ் மொழி நிலைக்கவும் பாடுபட்ட அனைத்து பிற இன மக்களின் மீதும் கலங்கம் படிவதையும் அவர்கள் அறிய வேண்டும். சுயநல அரசியலை மையமாக கொண்டு சிலர் எடுக்கும் நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்களின் நலம் பாதிப்புறுவதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஆகவே, தமிழகத்தில் திராவிட அரசியல் ஆட்டம் கண்டிருப்பதுபோல் மலேசியாவில் இந்திய அரசியல் ஆட்டங்கான தொடங்கி உள்ளது தெளிவாகிறது. மலேசியாவில் தெலுங்கர்கள் தனி இனமாக அடையாளம் காண விரும்புவது இயல்பாகவே இந்தியர் என்ற ஒரே கூடாரத்தில் இருந்த தமிழர்களையும் மலையாளிகளையும் சிந்திக்கவைக்கும். எனவே தெலுங்கு சங்கத்தலைவர், இந்தியர் என்ற அடையாளத்தை மறுக்கத்துணிந்த நிகழ்வை காரணம் காட்டி தமிழ் நாட்டு பாணி தமிழ்த்தேசியம் பேசுவது இனக் கசப்பை மட்டுமே மேலோங்கச் செய்யமுடியும். நாம் இவ்விடயத்தில்தெலுங்கு சங்கத்தலைவர் டாக்டர் அட்ஷயகுமாரை மட்டுமே விமர்சனம் செய்வது முறையாகும். அவரின் பொறுப்பற்ற பேச்சையும் அதிகார சிந்தனையையும் விமர்சிக்கவேண்டியது நமது கடமையாகும். ஆனால் அவரை ஒரு இனத்தின் அடையாள குரலாக சித்தரிக்கவேண்டிய தேவை இல்லை. அதே போல் மலேசிய தெலுங்கு வழிதோன்றல்களையும் மொத்தமாக குற்றஞ்சாட்ட முடியாது. அதனால் யாருக்கும் பயன் ஒன்றும் இல்லை. ஊர் இரண்டுபட்ட பின்பு கொண்டாட்டம் போடப்போவது அரசியல்வாதிகள் மட்டுமே
ஆகவே மலேசியாவின் தமிழ்த் தேசியம் என்பது தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் அனைவரையும் இனம் மொழி சாதி பேதம் பாராமல் ஏற்று செயல்படும் இயக்கமாக இருப்பதே சிறப்பு. தமிழை இந்நாட்டில் வாழவைக்க பங்காற்றும் எல்லாருமே தமிழ்த்தேசியத்தால் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ்ப் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் தெலுங்கு மலையாளிகளைவிட மலாய்/சீன பள்ளிக்கு தன் பிள்ளையை அனுப்பும் ஒரு தமிழன் எந்தவகையிலும் சிறந்தவனாகிவிட முடியாது. இங்கு இந்தியர் அடையாளத்திற்குள் தமிழர்களாக நாம் வாழ்ந்தாலும் நமது மொழி, பண்பாடு என்ற அடிப்படைகளில் நம்மோடு கைகோர்க்க முன்வரும் எல்லாரையும் ஏற்று செயல்படக்கூடிய தெளிவே மலேசிய தமிழ்த் தேசிய வடிவமாக இருக்க முடியும். தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது வரலாற்று அடிப்படையில் பிராமனர் முதல் வடுகர் வரை அனைத்து தரப்பு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டது என்பதே உண்மை என்பதால் அந்த மரபு காக்கப்படவேண்டும். தமிழ்நாட்டு தமிழ்த் தேசியத்துக்கு இங்கிருந்தபடி ஆவேசப்படும் அன்பர்கள் இனி தங்கள் சிந்தனையை மலேசியச்சூழலை குழைக்காத மலேசிய தமிழ்த்தேசியம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
மிக முக்கியமாக மலேசியத் தமிழர்களுக்குச் சேர வேண்டிய கவனமும் கலைத்துறை வாய்ப்புகளும் வருமானமும் தமிழ்நாட்டுச் சினிமா சூழல் அபகரிப்பதையும் அதற்கு ஆஸ்ட்ரோ போன்ற காப்பிரெட் நிறுவனங்கள் வழியமைப்பதையும் மலேசிய வாழ்வியலுக்கு ஒவ்வாத தமிழ்நாட்டு வெகுசன இதழ்கள் நமது பொது வாசிப்புக்குள் வருவதையும் வானொலிகளில் 80% தமிழக பாடல்கள் நிறைவதையும் நமது அன்றாட உபயோகத்திற்கான சோப்பிலிருந்து அணியும் நகைகள் வரை தமிழக இறக்குமதி பொருளாக இருக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் உறுதி செய்வதையும் மீள் பரிசோதிக்க வேண்டியுள்ளது. கலை, கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் நாம் நமது பணத்தை தமிழகப் பொருள்களுக்குத் தாரைவார்க்கப் பழகியிருக்கிறோம். மலேசிய தமிழர்களின் உற்பத்திக்கும் அவர்களின் கலை சார்ந்த முயற்சிகளுக்கும் பாராமுகம் காட்டும் நாம் தமிழ்த் தேசியம் பேசுவது எந்த நியாயத்தில் என்பதே அவசியமான கேள்வி. மலேசிய தமிழர் பொருளாதாரம், கலை, இலக்கியம் , அரசியல் என நமது கவனம் இன்னும் கூர்மை பட வேண்டியுள்ளது. நாம் நம்மை தமிழ்நாட்டின் விழுதுகள் என கற்பனையில் இருக்கும் வரை வாழும் நாட்டின் சூழலுக்கு ஏற்ப ஆக்ககரமாகச் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.
ஆகவே, வழக்கமான உணர்ச்சி மேலீட்டில் வடுகன் என்றோ வந்தேரிகள் என்றோ, திராவிட அரம்பர்கள் என்றோ கொந்தளிப்பது சரிவராது. இங்கு அந்தச் சூழல் இல்லை. இங்கு நமக்கு சவால்விடவும் போட்டியிடவும் பல கோணத்தில் போட்டியாளர்கள் உள்ளனர். மலாய் சீன இனத்தவரோடு 10 ஆண்டுகளுக்கு முன் குடியேறி இன்று அடையாள அட்டையுடன் அலையும் வங்காளதேசியும் இந்தோனேசியர்களும் தமிழனுக்கு போட்டியாளர்கள் ஆவர். நாம் தமிழர் என்று கூறிக் கொண்டு கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் போர் புரியும் போலி மறம் இனி வேலைக்கு ஆகாது. இதே நாட்டில் இதே மண்ணில் எதிர்கால தமிழனின் நிலை எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியதே தமிழ்த் தேசியத்தின் பணியாக இருக்கும்.
முடிவு
ஆகவே, தமிழ்த் தேசியம் என்பது உலகத் தமிழர்களுக்கு எல்லாம் ஏற்ற ஒரே மேடையை அமைத்துக் கொடுக்கும் என்பது பொய்மைவாதமாகும். பல நாடுகளிலும் பிரிந்து வாழும் தமிழர்கள் அவர்களின் சூழலுக்கு ஏற்ற தமிழ்த் தேசியத்தை அவர்களே சுயமாக கண்டெடுக்க வேண்டும். ஆனால் அதை இன காழ்ப்பாகவோ பிறரை ஆதிக்கம் செய்யும் யந்திரமாகவோ மாற்றாமல் தமிழ் இன அடையாளத்தை வலிமை படுத்தும் பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு வாதிடுவதை விடுத்து யாரை கூட்டு சேர்த்து வெற்றிபெறமுடியும் என்று சிந்திப்பதே தமிழினத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்யும். ஆகவே தமிழ்த் தேசியம் என்பது இன்றைய சூழலில் நம் நாட்டை பொருத்தவரை ஒரு தமிழ் அணியாக, இயக்கமாக ஆக்ககரமான செயல்பாடுகளுடன் முன்னேறுவதே வரவேற்க தக்கது. மாறாக, தமிழ் நாட்டு ஆரவார தமிழ்த் தேசியத்தை பின்பற்றி இங்குள்ள, தெலுங்கரையும் மலையாளியையும் பாசீச வெறியோடு பேசுவதும் தூற்றுவதும் மலேசியத்தமிழர்களை உயர்த்திவிடப் போவதில்லை. நம் மொழியை, நம் பண்பாட்டுச் சிறப்புகளை, நம்முடன் ஒன்றற கலந்துவிட்ட சமயத்தை, தமிழின ஒற்றுமையை மேலும் மேலும் உயர்த்திக்காட்ட ஆகக் கூடிய காரியங்களில் நம் சக்தியை செலவழிப்பதே ஆக்கச்செயலாகும்.
உதவிய நூல்களும் ஆக்கங்களும்
1. திராவிடத்தால் வீழ்ந்தோம் –பெங்களூர் குணா
2. வரலாறும் வக்கிரங்களும்- டாக்டர் ரொமிலா தாப்பார்
3. பின் நவீனநிலை இலக்கியம் அரசியல் தேசியம்- அ. மார்க்ஸ்
4. மலேசிய இந்தியர்கள் ஓராய்வு –க.கலைமுத்து
5. சீமானின் ஜனரஞ்சக தமிழ்ப் பாசீசம் : ஒரு அபாயம் –குமரன்தாஸ் குவர்னிக்கா 41-இலக்கியச் சந்திப்பு மலர்-
6. பெரியார் என்ற கலகக்காரர் : மெல்ல முகிழ்க்கும் உரையாடல் –ம.மதிவாண்ணம்
7. குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்- அ. மார்க்ஸ், கோ.கேசவன்
8.ஏன்வேண்டும்தமிழ்த்தேசியம்- கோவை ஞானி
9. அறிபபடாத தமிழகம்- தோ.பரமசிவம்.
8. http://oviyaselvan1.blogspot.com/2014/08/blog-post_12.html
9. http://vinaiyaanathogai.wordpress.com
10.https://www.facebook.com/KarurMDMK/posts/314942605282233
11. http://www.aazham.in/?p=2001ஏன்தேவைதமிழ்த்தேசியம்? –நலங்கிள்ளி
12. http://namvaergall.blogspot.com/
13. https://www.facebook.com/pages/Thamizhar-Kalam
14.http://tamil.thehindu.com/opinion/columnsஎம்.எஸ்.எஸ். பாண்டியன் ‘தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம்’
15.மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் – தொகுப்பு கவி
வணக்கம்.
கட்டுரையின் தலைப்பு கட்டுரையுடன் பொருந்தவில்லை. பத்தாயிரத்திற்கும் கூடுதலான சொற்களைக் கொண்ட கட்டுரையில், 3,000 சொற்களை அடங்கிய கட்டுரையின் இறுதிப்பகுதியில் மட்டுமே மலேசியா ஒரு பின்னிணைப்புபோல் வந்து போகிறது. அதற்கு முன்னதாகவே, கட்டுரையே முடிந்துவிட்டதற்கு ஒப்பாக பின்வரும் பத்தியை நாம் காண்கிறோம் …
“முடிவாக, தமிழ்த் தேசியம் என்னும் இயக்கம் உலகத்தமிழர்களுக்கு இன மான சிந்தனையை ஊட்டவல்லதாயும், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பாக ஆக்கவல்லதாயும் செயல்படமுடியுமா என்பதே நமது கேள்வி. மதம், சாதி, இன அரசியல் காழ்ப்புகள் கடந்து, போராட்டங்கள் மிகுந்த நவீன உலகில் தமிழ் மொழியையும் இன மேன்மையையும் அழுத்தமாக நிறுவக்கூடிய ஒரு எழுட்சியாக அது செயல்படவேண்டியது அவசியம். தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தாக்கங்களை தமிழ்த்தேசியம் முன்னெடுக்கவேண்டும். உலகப் போக்குக்கு உடன்படாத எந்த அரசியல் சித்தாந்தமும் இயல்பாகவே காலாவதியாகிவிடும் என்பதால் நடைமுறை பொருளாதார சூழலில் தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாட்டை தெளிவாக்கவேண்டும். மாறாக அது வடுகனுக்கும் வந்தேரிகளுக்கும் எதிரான ஒரு இனத்தீவிரவாத இயக்கமாக தன்னைக் சுறுக்கிக் கொள்ளக் கூடாது. அன்றி, குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பதாயும் தனிமனித சாடல்களைச் செய்து காலங்கடத்துவதாயும் இனவெறியையும் இனபதற்றத்தையும் பாமரத்தமிழர்கள் உள்ளத்தில் விதைக்க முற்படுவதாயும் செயல்படுமாயின் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாகவே இருக்கும். தூரநோக்கு சிந்தனை அற்று சந்தர்ப்பவாத அரசியல் செய்து ஐம்பது வருடங்களுக்குப்பின் தோல்வியின் விளிம்பில் நிற்கும் திராவிட அரசியலின் நிலை தமிழ்த் தேசியத்திற்கும் வராதிருக்க அர்ப்ப உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்து அறிவு பூர்வமான திட்டமிடல் தேவை.”
கட்டுரையின் முடிவுரைபோல் அமைந்துள்ள இப்பத்தி, கட்டுரையின் தொடக்கப்புள்ளியாக இருந்திருந்தால் கட்டுரை இன்னும் இயல்பாக இருந்திருக்குமோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது…
வணக்கம் , உலக ஒன்பதாவது தமிழ் ஆராய்சி மாநாட்டுக்குப போகாமல் அங்கு என்ன நடக்கும் என்பதை வீட்டில் இருந்தே கணித்தேன்..ம நவீன் அவர்களின் கொந்தளிப்பில் உழன்று “மலேசியாவில் தமிழர் தேசியம் தேவையா?” என்ற மகஜீரை படித்ததும் மலேசியா என்ற நாட்டுக்குறிப்பை ஏந்தி வந்ததால் ஓகே என்ற முடிவை கண்டேன். மாநாட்டு ஆதங்கம் மறைந்தது.
இந்த உங்கள் ஆய்வே தமிழர் தேசியத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்ற நிஜத்தில் …தமிழக தமிழர் களம் அரிமாவளவன் என்று மாற்றிக்கொள்ளவும்.
தமிழகத்தின் தனித்தமிழ் இயக்கம் மறை மலையடிகளாரின் மலர்ச்சியும் வளர்ச்சியும் விடுபட்டு இருந்தன? சமூக விழிப்புக்கு தன்மான இயக்கங்கள் பல என்றால் மொழி விழிப்புக்கு தனித்தமிழ் இயக்க பன்முக பார்வையை கவனிக்கவும். இதை நான் ஆரம்பித்து ஒப்புவிக்க …பெருஞ்சித்தனார் வரை போக வேண்டும்.
உங்கள் ஆய்வுபசிப்படி தமிழகததமிழர் கலப்பு அரசியல் மிக்க தேசியத்தை விட்டுவிடுவோம். “இந்தியனிசம்” மான மலேசியாவில் தனியாக தமிழர் தேசியம் இதர திரவிட/திராவிட கொச்சையில் எடுபடாது என்கிறீர். திராவிடம் அரசியல் ரீதியால் இங்கு தோற்றும் உள்ளதை பதிவு செய்தமையும் சிறப்பு.
தமிழர்கள் 7 ஆளுமையில்லா அரசியல் கட்சிகளில் சுய நல அரசியல் நடத்துக்கின்றனர் இதுவும் சரியான பதிவுதான். கணக்கெடுப்பு படி இந்தியர்களில் 85 % தமிழர்களின் கடந்த 50 ஆண்டு கால வாழ்வாதாரம் ,இன உரிமை அடகு வைத்த நிலையில் மலேசியா தமிழர் தேசியம் என்ற இனக்காப்பு இனியாவது மலர நாம் தமிழர் மலேசியா , மலேசியத்தமிழர் களம் , மலேசியா தமிழர் இயக்கப்பேரவைகள் நகர்வில் உள்ளதை நினைவில் கொள்ள விழைகிறேன்.
உங்கள் ஆய்வுக்கு நன்றி பாராட்டுகள். பயன் மிக்கது.
நாளிதழ்களில் வெளி வர உதவுங்கள்.
இயக்குநர், உலகத தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா.
மலேசியாவில் தமிழர் தேசியம் தேவையா?
எனும் மேற்காணும் கட்டுரைக்கு இந்த குறிப்பு: 2009 ன் இலங்கை தமிழீழ அழிப்புக்குப்பின் தமிழக கோயம்புத்தூரில் முதலாம் உலகத் தமிழர் பாதுகாப்பு புதிய தமிழகம் கட்சி நடத்தியது. அதில் மலேசியாவிலிருந்து 89 பேராளர்கள் என் தலைமையில் கலந்துக்கொண்டோம். பிறகு இரண்டாவது மாநாட்டை மலேசியாவில் நடத்த அதற்கு 100 பேர் அடங்கிய (2/5/2011) மாநாடு எழுச்சி முகாம் பயிற்சி அரங்கம் நடத்தி மலேசியாவில் தமிழர் தேசியம் திட்ட நடவடிக்கை பதிவுகள் செய்து பதிவும் செய்தோம். பிறகு 29/12/212 ல் 1500 உலக நாடுகளின் பேராளர்களுடன் மாநாடும் நடத்தினோம். “தமிழராய் எழுவோம் தமிழர் நாடும் தமிழீழமும் நம் மண் உரிமை ” என்பது அதன் கருப்பொருள். அதன் திட்ட வரைவுகளை கீழ் காணவும்.: தமிழர் தேசியம் மலேசியாவில் மெல்ல நகர்கிறது.
இதில் இதரவர்களுக்கு இனி இடம் இல்லை “தாய் வழி தமிழன்
தமிழ் வழி தமிழன்” இதர மொழியான் அவர் அவன் மொழியை பார்க்கட்டும்.
உணர்வில் தமிழனாய் உயிரும் கொடுப்போம்
புணர்வின் செயலால் புரிவோம் தமிழ் பணி இணக்கம்.
இதோ எங்கள் இலக்கு !!
உலக அரங்கில் தமிழர் என்ற பழந்தமிழர் வார்த்தை இடம் பெற
பாதுகாப்பு வேண்டும்.
தமிழ் நாடு என்ற மொழிவாரி அழுத்தம் மாறி தமிழர் நாடு என்ற இனம் காக்கும் பாதுகாப்பு வேண்டும்
தமிழ் ஈழம் மலர தமிழர் நாடு மட்டுமே நம் இலக்கு
தமிழ் ஈழம் தமிழர்களை உலக நாடுகள் ஏற்று அவர்களுக்கு
அவரவர் வாழ் நாடுகளில் அகதிகள் நீக்கி பிரஜை உரிமை தரவேண்டும்
தமிழர் வாழும் அவரவர் நாடுகளில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிகள் தோற்றுவிக்க வேண்டும்.
12 கோடி தமிழர்கள் உலக தர வங்கி நடத்த தமிழ்த் தலைவன் உருவாக வேண்டும்
உலக தமிழர் தேசியம் எனும் கலாச்சார மையம் வேண்டும்
உலகில் தமிழன் தனி சிறப்பு பெற தமிழன் இண்டியன் பட்டியலில் இருந்து விடுபட வேண்டும்
தமிழ் நமது தாய் மொழி என்ற உலக விழா தொடுக்க வேண்டும்
தமிழ் உலக மொழி என்பதால்.உலக நாடுகள் அதன் பல்கலை கழக உரிமங்களில் தமிழ் பயிலும் ஆய்வுப்பிரிவுகள் நடத்திட வேண்டும் அதில் தமிழ் சென்செளர்கள் நியமனங்கள் இடம் பெற வேண்டும்
தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் இடைநிலை பள்ளிகள் அமைவதற்கான உருமாற்று திட்டங்கள் வேண்டும்
எல்லா ஜாதிகளையும் அழித்து தமிழன் என்ற ஒரே ஜாதியும் எம்மதமும் சம்மதம் எனும் சமய நெறியும் வளர்க்க வேண்டும்.
தமிழன் பிறப்பு பத்திரங்களில் தமிழன் என்ற பதிவு வேண்டும்
தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்
தமிழனுக்கு தனி தீவு தனி குடியரசு அமைக்க உலக நாடுகளை கேக்க வேண்டும்
தமிழன் என்ற தொலை காட்சி நிலையம் அமைக்க வேண்டும்.
களம் காலம் கருதி நேர நிர்ணய விசியத்தில் தமிழன் தமிழனாக எழ தன குடும்பத்தில் தமிழன் தமிழில் பேர் வைக்க வேண்டும்.
இந்த உன்னத நோக்கில் உலகதமிழர் பாதுகாப்பு இயக்கம் சேவை செயலாக்கம் பெற உணர்வாளர் தமிழர்களை பாதுக்காத்து வருகிறோம்.
*ஈராண்டுகளை தப்பாக கணக்கிடுபவன் பத்தாண்டுகளை எமந்திருப்பான் என்கிறார்கள், இப்படிதான் கடந்த 1000 ஆண்டுகளை உலக தமிழன் இழந்து அவனுக்கு என்று மண் இல்லாமல் இருந்ததை இழந்து உள்ளான். உலக நாடுகளில் புலம் பெயர்த்துள்ள தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் தமிழராய் எழுவோம் தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் முன் உரிமை. என சிறியோர்க்கு ஞாபகம் செய் சங்கே முழங்கு.
தமிழர் தேசியம்
உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம்
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
தமிழர் களம்
நாம் தமிழர் தமிழர் நாடு
நாம் தமிழர் மலேசியா
தமிழர் பணிப்படை
தமிழர் தேசியம்
தமிழ்த்தேசம்
மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்
-Pon Rangan
ammpon@gmail.com
தமிழர் களம்.
படித்தேன் ஐயா. அதில் கூறப்பட்டுள்ள மலேசியாவில் தமிழ் தேசியம் தொடர்பானமிகப் பெரும்பான்மையான கருத்துகள் படைப்பாளரின் எண்ணங்களாகவே எனக்குப்படுகிறது. தமிழ் தேசியம் என்பது தெலுங்கரையும், மலையாளிகளையும் புறந்தள்ளி அவர்களின் உரிமைகளை பெரும்பான்மையான தமிழர்கள் பறித்துக் கொள்ளக்கூடிய ஒரு கொடுங்கோண்மை ஏற்பட்டுவிடுமோ என்று கட்டுரை படைப்பாளர் அஞ்சுவது தெரிகிறது ! படைப்பாளரின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்! ஆனால் படைப்பாளர் சில கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். மலேசியாவில் இந்தியர்கள் என்ற பிரிவில் 80% -க்கும் மேலானவர்கள் தமிழர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று ‘இந்தியர்’ என்ற பிரிவில் பெருவாரியான இந்தத் தமிழர்களுக்குக் கிடத்திருக்க வேண்டிய உரிமைகளை யார் பறித்துக் கொண்டுள்ளார்கள் என்பதை சற்று ஆராய வேண்டும். எடுத்துக்காட்டாக , காடாகக் கிடந்த இந்த நாட்டை வளம் பொருந்திய நாடாக மாற்றிய ‘இந்திய’ உழப்பாளர்களில் எத்தனை விகிதம் தமிழர் அல்லாதவர் இருந்திருப்பார்கள் ? ஆனால் இன்று அந்த தொழிலாளர்களுக்கு உரிமையான தே,நி.நி. கூட்டுறவு சங்கம், தோ.தொ.சங்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பிலிருந்து முக்கியமான எல்லாப் பொறுப்புகளிலும் உள்ளவர்கள் யார் ? தமிழர்களா ? அரசியலில் அரங்கிலே ‘இண்ராப் ‘ பேரணிக்குப்பின் பல மாநிலங்களை வென்றுள்ள மக்கள் கூட்டணியிலே உள்ள ‘இந்தியர்’ என்ற வட்டத்தில் தலைவர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் ? அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் எத்தனை விகத்தினர் தமிழர் அல்லாதார் இருந்தனர் ? எனவே ‘தமிழர் தேசியம்’ என்பது பிறரின் உரிமைகளை பறிப்பதன்று ! கிடக்க வேண்டிய அனைத்தையும் சிறுபான்மையரிடம் ஏமாளித்தனத்தால் இழந்து நிற்கும் ‘தமிழர்’ என்ற இந்த இனத்திற்கு கிடக்க வேண்டிய உரிமைகளை அவர்கள் கிடக்கப்பெற வேண்டும் என்ற நோக்கம்தானே அன்று வேறு இல்லை ! பொதுவுடமை பேசிப் பேசி போக்கத்துப் போனது போதுமையா ! சிந்தித்து செயல்படுவோம். அடுத்த நமது தலைமுறைகளாவது அடுத்தவரிடம் கையேந்தி நிற்காமல் இருப்பதற்காக !
ஐயா இளஞ்செழியன், ஐயா பொன்ரங்கன் இருவருக்கும் நன்றி. உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். ஆனால் பொன்ரங்கன் மூன்றாவதாக பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர் விவாதத்திற்குறியவை. தே,நி.நி. கூட்டுறவு சங்கம் தமிழர் வசம் இல்லை என்பது உங்கள் மனக்குறையாக இருக்கிறது. ஆனால் தமிழர்களே தொடங்கிய பல கூட்டுறவு சங்கங்களின் நிலையை ஏன் பேச மறுக்கிறீர்கள். தே,நி.நி. கூட்டுறவு சங்கம்,பொதுவாக சிறப்பாக இயங்கும் ஒரு அமைப்பாகவும் அதன் உறுப்பினர்களுக்கு பேதம் இன்றி சலுகைகள் தரும் ஒரு கூட்டுறவு சங்கமாகவும் செயல்படுவதில் தவறியது இல்லையே. அது தமிழர் அல்லாதவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்பதைவிட அது தமிழருக்காகவே இயங்குகிறது என்னும் உண்மையில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். அச்சங்கம் இதுவரை செய்த தமிழ் சார்ந்த சேவைகளை நீங்கள் அறிவீர்கள் தானே. மலேசியாவில் தமிழன் என்ற பெயரில் எத்தனையோ சாதி சங்கங்களும் அச்சங்கங்களின் கூட்டுறவு அமைப்புகளும் தங்கள் சாதி மக்களுக்கு மட்டும் என்ற கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஈனத்தனம் தே,நி.நி. கூட்டுறவு சங்கத்தில் இல்லை என்பதால் நான் நிறைவு கொள்கிறேன்.
தோ.தொ.சங்கம் மளையாளிகள் வசம் ஏன் இருக்கிறது என்பதை அறிய நாம் மலேசிய தோட்ட தொழிற்சங்க வரலாற்றை அறிய வேண்டும். ஆங்கிலேய முதலாளிகளின் தலையீடு தொழிற்சங்கத்தில் எப்படி இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். பி.பி நாராயணன் எப்படி ஆங்கிலேயர்களால் அங்கீகரிகப்பட்டார் என்பதையும் கணபதி எப்படி பகையானார் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். இம்மாத ‘பறை’ இதழில ஜி.வி கந்தையாவின் பேட்டியை வாசித்தால் தெளிவு கிடைக்கும். நன்றி
முள்ளிவாய்க்காலில் செத்து விழுந்த அந்த இனத்தின் பிணத்தின் மீது முளைத்தது தமிழர் தேசியம்…மலேசியாவிலும் ஒரு நாள் செத்து விழுந்தால் தமிழர் தேசியம்
எழும் எங்கேயோ ஒரு மூலையில் ஒரு பச்சை தமிழச்சியின் வயிற்றில் பிறந்த தமிழ் மகனுக்கும்………………………………………..கரிமா வளவன்.
நிறைய எமுதி தான் எழுத தொடங்கிய தலைப்பிலிருந்து விலகிச்சென்றதை உணர்ந்தேன். அதையே ஐயா இளஞ்செழியனும் எழுதியதால் நான் எண்ணியதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
2 பகுதிகளாக எழுதப்பட்ட உங்களுடைய கட்டுரை ஒட்டு மொத்தமாக அறிஞர் குணாவை குறி வைத்து எழுதப்பட்டது. என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற ஒற்றை நூலை மட்டும் படித்துவிட்டு அதற்கு எதிராக எழுதிய அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை படித்ததால் நேர்ந்த ஓலமும் அவலமும் இது.
அறிஞர்குணாவின்’தமிழனமிட்சி’,’மண்ணுரிமை’,”தமிழர் வரலாறு’ போன்ற மற்ற நூல்களை படித்துவிட்டு நீங்கள் ஒரு நிலைக்கு வந்திருக்கலாம். இந்த நூல்களை. வாங்கி படிக்கவும். தெளிவு பிறக்கும்.
அறஞர் குணா,ஐயா அரிமாவளவன் போன்றோர் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைக்கலாம் தன் இனத்திற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்பபணித்தவர்கள்.
தமிழர் தேசியம் என்பது உடனடியாக கிடைப்பதன்று. இப்போதுதான் விதைக்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று தலைமுறை காத்திருக்க வேண்டும் ஓரு விடுதலை பெற்ற இனமாக வாழ.
உலகெங்கும் உள்ள தமிழினம் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தமிழர் தேசியத்தின் கொள்கை. நன்றி
மாசிலன்
திரு. மாசிலன் அவர்களுக்கு வணக்கம். தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாக்கத்தில் நிரம்ப குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. அவற்றுக்கு போதுமான விளக்கம் பெறாமல் தமிழ்த் தேசியத்துக்கு சார்பாகவோ மறுப்பாகவோ செயல்பட முடியாது. தமிழ்த் தேசியம் மீது ஏற்படும் அக்கறையின் காரணமாகவே அதனை நுணுக்கி அறிய வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு. ஆராய்ந்து அறிந்தவற்றை அறிவு தளத்தில் நின்று விரிவாக பேசவேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நீங்கள் நினைப்பது போல் குணா அவர்களின் ஒரே ஒரு நூலை வாசித்து அதற்கு எதிர்விணையாற்றும் முகமாக இக்கட்டுரை எழுதப்படவில்லை. அப்படி இருப்பின் அதை இவ்வளவு நீளமாக எழுதவேண்டிய தேவையும் இல்லை. இன்று தமிழ்த் தேசியத்தை உரக்க முழங்குவோரிடையே ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் நூலின் பாதிப்பே அதிகம் உள்ளதை உங்களால் மறுக்க முடியுமா? ஐயா குணாவின் மற்ற நூல்களைவிட ‘ திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் இன அரசியல் நூலே பொதுமக்களிடம் அதிகமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளதும் உணமை. ஆகவே அவரின் அந்நூலின் சாரம் மிக முக்கியமானது.
அறிவு தளத்தில் நின்று ஒரு கருத்தாக்கத்தை விரிவாக பேசும் செயலை ஓலம் என்றும் அவலம் என்று நகையாடி மிக எளிதாக கடந்து செல்லும் உங்கள் அறிவுப்பாங்கு என்னை வருத்துகிறது. தமிழ்த் தேசியம் என்னும் மூல கருத்தாக்கத்தை இன்றைக்கு தமிழர் தேசியம் என்று மிக நுட்பமாக மாற்றி பரப்புரை ஆற்றும் உங்கள் குழுவினரின் செயலை பொதுமக்களுக்கு விளக்க வேண்டியது எனது கடமை. ஆகவே இது ஓலம் அல்ல… மாறாக திராவிட அரசியலை ஒழிப்போம் என்று மலேசிய தமிழர்களை நோக்கி குரல் எழுப்புவதே அபத்த ஓலம்.
தமிழ்த் தேசியத்தின் நோக்கமும் ஊக்கமும் எங்கிருந்து தொடங்குகிறது என்பதிலேயே எவ்வளவு முரண். உங்களுக்கு முன் பின்னூட்டம் இட்டிருக்கும் தோழர் கரிமா வளவனின் கருத்துப்படி ஈழ இன ஒழிப்பே தமிழ்த் தேசியத்தின் ஆணிவேராகிறது. அது போன்ற ஒரு இன ஒழிப்பு மலேசியாவில் நடக்காமல் இருக்க நமக்கு தமிழ்த் தேசியம் தேவை என்கிறார். ஆனால் நீங்கள் தமிழக மண் சார்ந்த உரிமை போராட்டத்தைப் பற்றி குரல் எழுப்பும் ஐயா குணாவின் கண்ணோட்டத்தில் தமிழ்த் தேசியத்தை விளக்க முனைகிறீர்கள். உங்கள் இருவரின் கருத்தின் வேறுபாட்டையும் வரலாற்று அடிப்படையில் நிதானமாக சீர்த்துக்கிப்பார்ப்பதை நீங்கள் ஓலம் என்று நகைப்பீர்கள். அதே சமயம் ஆளுக்கொரு வியாக்கியானம் சொல்லி மக்களை குழப்புவதை நீங்கள் செய்யும் மக்கள் சேவையாக கூறிக்கொள்வீர்கள். அதே போல் மேற்கண்ட இரண்டு காரணங்களுக்கும் அடிப்படை இல்லாத மலேசிய சூழலில் உங்கள் தரப்பு முன்வைக்ககும் இன அரசியலை தமிழ் மக்கள் எந்த விசாரனையும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் உங்களிடம் உள்ளது. தமிழ்த் தேசியம் முழுமை அடையாத இன்னும் வளரவேண்டிய கருத்தாக்கம் என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால் வளரும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழியையும் மறப்பதற்கில்லை. திராவிட அரசியல் தோன்றிய காலத்திலும் இப்படி பல்வேறு மாற்று கருத்துகள் இருந்துள்ளன. அவற்றை பொருப்பாகவும் அறிவுபூர்வமாகவும் அன்று அணுக யாரும் முன்வராததனால்தன் 50 ஆண்டுகளின் அதன் அபத்தங்கள் மக்களை பாதிக்க தொடங்கின. ஆகவே, தமிழ்த் தேசியம் என்னும் கருத்து எப்போது தமிழர் தேசியமானது என்னும் கேள்வி உட்பட நான் கட்டுரையில் முன்வைக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு நீங்கள் உங்கள் ஞாயங்க்ளையும் கருத்துகளையும் முன்வைப்பதே சிறப்பு. நன்றி
அ.பாண்டியன்
தேவையா தேவையில்லையா என்று நம் இன்னும் பேசிக் கொண்டிருப்பதால் 12 கோடி தேசிய இனமான தமிழர் இனம், ஒரு கோடி சிங்களனிடம் தோற்றுப்போய் பல நாடுகளிலும் இரண்டாம் தர குடிமக்களாகவும் அகதிகளாகவும் நக்கிப் பிழைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்……………………….கரிமா வளவன்
வணக்கம்.
முதலில் பாண்டியன் அவர்களுக்கு எனது நன்றிகள். தமிழ் தேசியம் தொடர்பான புரிதலையும் அது மலேசியாவில் சாத்தியமா/தேவையா என்பது பற்றிய புரிதலை உங்கள் கட்டுரை கொடுத்துள்ளது. ‘தமிழ் தேசியம்’ என்பதைப்பற்றி படிக்கும்போதெல்லாம் அதன் தோற்றம் எங்கிருந்து கிளைத்திருக்கும், அதன் தற்போதைய செயல்பாடு என்ன, அது இந்நாட்டிலும் பரப்பப்படுவது சரியா என பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். இதற்கு விடை தெரியாத குழப்பம் ஒருபுறம் இருக்க, தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்கள் குறிப்பாக திரு. பொன் ரங்கன் போன்று பெரும் உணர்வு கொந்தளிப்பில் பேசுவதையும் வாக்கியங்களில்கூட அவசியமற்ற இடங்களிலெல்லாம் ஆச்சரியக் குறிகளைப் போட்டு உணர்வு கொந்தளிப்பை உண்டாக்கிவிடுவதும் மிகுந்த சளிப்பைக் கொடுத்துவிடும். உங்கள் கட்டுரையைக்கூட இதுவரை தொடாமல் இருந்தது இதனால்தான். உண்மையில் உங்களது கட்டுரை மிக எளிமையான முறையில் பெரியாரியம், திராவிடம், தமிழ் தேசியம் போன்றவற்றைப் பற்றிய அடிப்படையான புரிதலைக் கொடுத்தது. முழுமையான புரிதலுக்கு உங்கள் கட்டுரையின் வடிவம் துணையாக இருந்தது. என் தொடர் தேடலுக்காக துணைநூல் பட்டியலையும் கட்டுரையின் இறுதியில் கொடுத்தமைக்கு நன்றிகள்.
அன்பர்களே … “தமிழ் தேசியம்” என்னும் தொடருக்கு “த்” இட்டு புணறுவது தவறு காரணம் “தேசியம்” தமிழ் சொல்லல்ல. இக்கொள்கையை “தமிழரசியல்” என்று தொகைச்சொல்லாக்கி எழுதினால் அழகு என்பது என் கருத்து.
/* சீமான் பொதுவாக ஈழ ஆதரவாளராக செயல்பட்டாலும் அவரின் தமிழ்நாட்டு அரசியல், ஜெயலலிதா ஆதரவு அரசியலாகவே இருப்பது வெளிப்படையான முரண் மட்டும் அல்ல அவரின் போலி இனப்பற்றையும் காட்டுகின்றது. ஈழ மக்களின் அவலத்தை அனுதாப ஓட்டாக பெற முயலும் பல திராவிட அரசியல்வாதிகளில் இருந்து இவர் வேறுபட்டவர் அல்ல. தன் கட்சி கொள்கை அறிக்கையில் இனத்தூய்மைவாதத்தை தூக்கிப் பிடிக்கும் இவர் அது குறித்து வெளிப்படையாக பேசுவது இல்லை. மாறாக பெரியாரை தமிழ் இனத்தந்தை என்று பசப்பித் திரிகிறார் என்றே கூறமுடியும். இதை பசப்பல் எனச்சொல்ல காரணம் பெரியாரை ஒரு பக்கம் தூக்கிப்பிடித்து மற்றுமொரு பக்கம் தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்வார். முத்துராமலிங்கதேவரை ஒரு சமுதாயப் போராளி என கற்பனைக் கதை கூறுபவர்கள் கே.ஜீவபாரதி தொகுத்துள்ள தேவரின் மேடைப்பேச்சுகள் கட்டுரைகள் போன்றவற்றைப் பார்த்தாலே அவரின் சாதிய வெறி புலப்படும். */
/* தமிழ்த் தேசியம் என்னும் இயக்கம் உலகத்தமிழர்களுக்கு இன மான சிந்தனையை ஊட்டவல்லதாயும், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பாக ஆக்கவல்லதாயும் செயல்படமுடியுமா என்பதே நமது கேள்வி. */
/* தமிழ்த் தேசியம் என்பது உலகத் தமிழர்களுக்கு எல்லாம் ஏற்ற ஒரே மேடையை அமைத்துக் கொடுக்கும் என்பது பொய்மைவாதமாகும். */
/* அன்றாட உபயோகத்திற்கான சோப்பிலிருந்து அணியும் நகைகள் வரை தமிழக இறக்குமதி பொருளாக இருக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் உறுதி செய்வதையும் மீள் பரிசோதிக்க வேண்டியுள்ளது. */
– கட்டுரையாளரின் உண்மையான் நோக்கம் அறியாமல், என் வாழ்க்கையில் சுமார் இரண்டு மணி நேரம் இப்பதிவுகளை வாசித்ததில் விரயமாகிவிட்டது! இவர் மாதிரி நாலு பேர் இருந்தால் எங்குட்டு தமிழ் பண்பாடு, மொழி மீட்சி, தமிழ்ர் உரிமை மற்றும் ஒற்றுமை மண்ணாங்கட்டி எல்லாம்!
திரு.பிரஜாராமன், உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுதான் எனக்கும் ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்பது ஒரு கெட்ட வார்த்தைபோல கட்டுரையாளர் பாவித்துள்ளார். இது காயடிக்கப்பட்ட தமிழனை மேலும் காயடிக்கும் முயற்சியாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. மற்ற இனங்கள் எவ்வாறு தங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் வசதியாக மறந்துவிட்டிருக்கிறார். சீமான், மணியரசன் போன்றோர் இனதுவேஷம் பேசுவதாக கூறுவது சுத்த அபத்தம். அவர்களது போராட்டம் திராவிடம் என்ற பெயரில் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே தெலுங்கன்,மலையாளி, கன்னடனிடம் உரிமை இழந்து இருப்பதை மீட்கத்தான். அவர்களை நாட்கம் ஆடுகிறார்கள் என்று எழுதுவது சுத்த அயோக்கியத்தனம். மலேசியாவிலும் தமிழ் தேசியம் தழைத்தால்தான் கொஞ்சம் விழிப்புணர்வோடு வாழ முடியும்..