எங்கே போகிறது மஇகா? இந்தியர்கள் என்பவர்கள் யார்?

MIC-logo2அரசியல் கட்சிகள் நடத்துவோர் யாரும் தங்களுக்குள் நடைபெறும் சண்டையென்றும் பிணக்கு என்றும் மோதல் என்றும் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு சுழன்று வர முடியாது. காரணம், பொதுத் தேர்தலில் பல்லின மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஒருபுறம் இருந்தாலும் அதிலும் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியத்திற்கு இயல்பாக முன் தள்ளப்பட்டிருப்பதால், சண்டைகளைச் சச்சரவுகளை அரசியல் கட்சிகளின் வட்டத்திற்குரியது என்று சொல்லி யாரும் தொடர்ந்து வட்டமடித்து கொண்டு வரமுடியாது.

 

மோதுவது இயல்புதான்!

அரசியலில் பதவிக்காக மோதுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையென்றலும், தங்களுக்குரிய நாற்காலிகளை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தமும் தேவையென்று கருதினாலும் அதற்காகக் கட்சியை சீர்குலைப்பதும், அதன் உறுப்பினர்களை சிதறடிப்பதும், ஒட்டு மொத்தமாக இந்திய சமுதாயத்தின் அவநம்பிக்கையைப் பெறுவதுமான நிலைபாட்டில் யாருக்கும் எந்த நபருக்கும் பயணம் செய்ய உரிமை கிடையது.

மஇகாவில் ஓட்டை!

மலேசிய இந்தியர்களின் நூறு ஆண்டுகால அரசியல் துவக்கத்தில் மஇகாவுக்கு தனியொரு மதிப்பீடு உண்டு. அதில் 68 ஆண்டுகள் அக்கட்சிக்குரிய நெடிய காலக் கணக்கில், அக்கட்சி 2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மிகவும் பலவீனமாக அதனுடைய கட்டமைப்பு அமைந்துவிட்டது.

2008இன் தேர்தலில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7 பேரை இழந்துவிட்டதைத் தொடர்ந்து 2013இல் எதிர்நோக்கிய பொதுத் தேர்தலிலும் அதே 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இழக்க வேண்டியதாயிற்று.

அதுவும் கேமரன்மலையில் பெரும் தடுமாற்றத்துடன் மோதியே அத்தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதே போன்ற நிலைப்பாட்டில்தான் சிலாங்கூர்- பேராக் – பினாங்கு- கெடா – பகாங் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டமன்றத் தொகுதியைக்கூட தக்கவைத்துக் கொள்ளமுடியாத அபாயகரமான சூழ்நிலைக்கு கட்சி பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டு விட்டது.

வாக்காளர் நிலைபாடு!

ஓர் அரசியல் கட்சியின் உயிர் மக்கள் என்பதும் அதுவும் மக்களோடு மக்களாகக் கலந்து உறவாடி, மக்களின் உணர்வுகளையும் அவர்கள் எதிர்நோக்கும் உண்மையான இழப்புகளையும் கண்காணித்து அதற்குரிய தீர்வுகளுக்காக அரசியலில் காயை நகர்த்த வேண்டிய பொறுப்பு அதில் ஈடுபடுபவர்களுக்கு உண்டு.

அதவது இதில் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ, எந்தக் களமாக இருந்தாலும் அந்தக் களத்தில் நிற்க வைக்க வேண்டிய மிகப் பெரிய ஜனநாயக பார்வை மக்களுக்குத்தான் உண்டு. எனவே, அரசியல் கட்சிகள் வெறும் வெற்று அறிக்கைகளிலும் வீண் விவாதங்களிலும், அர்த்தமற்ற சர்ச்சைகளிலும் பெருமளவு பெயர் பெற்றிட முடியாது. ஆர்ப்பரிப்பு, ஆர்ப்பாட்டம் அரசியலில் ஓளரவு களம் போலத் தெரிந்தாலும் அதற்கு மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது ஒன்றே தொடர் அரசியலுக்கு அடித்தளமக இருக்க முடியும்.

யார் பொறுப்பு / யார் குற்றவாளி?

அண்மைய காலமாக மஇகாவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு யார் காரணம் என்பதற்குரிய சர்ச்சை தீர்ந்தபாடில்லை. ஒரு தலைமைத்துவம் சரியான குறிக்கோளை தவறவிடுமேயானால், பெரும் தடுமாற்றத்தால் நிலைகுலையவே செய்யும். ஒருவர் மீது மற்றொருவர் சாட்டுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு அணி பிரிந்தாலும் அத்தனை அரசியல் விளையாட்டாளர்களும் ஒவ்வொரு நியாயத்தை தங்களுக்குள் புதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதற்குரிய தீர்வும், தீர்ப்பும், நியாயமும், சரியான கட்டமைப்புக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமே அல்ல!

பலகட்சிகள் உருவாக்கம்!

அதனால் இன்றைக்கு பல குழப்பங்களை எதிர்நோக்கியிருக்கும் மஇகா ஏற்கனவே ஏற்பட்ட குழப்பங்களாலும், பிளவுகளாலும் பல்வேறு கட்சிகள் உருவெடுத்துள்ளதை எண்ணிப்பார்ப்பது நல்லது.

பிபிபி கட்சி பெரும் ஆளுமைக்குரிய கட்சியாக டி. ஆர் – எஸ். பி. சீனிவாசகம் சகோதரர்கள் காலத்தில் இருந்தாலும், அக்கட்சி அவர்கள் மறைவுக்குப் பிறகு மிகவும் பலவீனமாக இருந்த சூழ்நிலையில், டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் பெருமளவு ஏற்றம் பெற, மஇகாவின் பலவீனமே காரணமாக அமைந்தது. மஇகாவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட உறுப்பினர்கள் பிபிபி கட்சியில் சேர்ந்தார்கள். அது போன்றே ஐபிஎப்பும் உருவெடுத்தது. டத்தோ நல்லாவுக்கு ஏற்பட்ட பல்வேறு தேவைகளுக்காக ...க கட்சி உருவெடுத்தது. ஹிண்ட்ராப்பின் வெளிப்பாட்டால் டத்தோ தனேந்திரன் தலைமையில் மக்கள் சக்தி உருவெடுத்தது. தற்போது டத்தோஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் மலேசிய இந்திய நீதி கட்சி உருவெடுத்துள்ளது.

இவற்றிற்கிடையே ஏற்கனவே உருவெடுத்த கிம்மா, இந்திய முஸ்லீம் சமுதாயத்தை தனியாக பிரித்து தனித்துவமான ஓர் அரசியல் அடையாளத்தை முன்னிறுத்தியுள்ளது.

இப்படி இந்திய சமுதாயத்தின் பல்வேறு கூற்றுகளுக்கு குறைகளுக்கு குற்றங்களுக்கு மஇகாவே பெருங்காரணம் என்கிற பலமான, பரவலான கருத்துக்களுக்கிடையே மேலும் மஇகா பலவீனம் அடைய வேண்டுமா என்பது குறித்து அதன் தலைமை எண்ணிப்பார்ப்பது நல்லது.

எதிர்க்கட்சியில் நமது நிலைபாடு!

இவற்றிற்கிடையில் எதிர்க்கட்சியில் நமது நிலைபாடு என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.   பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்திய வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கணிசமான வெற்றியை அடைய வழி வகுத்திருந்தாலும், அதனால் பெருமளவு இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ வருவதில்லை, நுழைவதில்லை.

அதற்குக் காரணம், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை இன விகிதாச்சார நுழைவுதான்! அதனால் எதிர்க்கட்சிகளின் அரசியலில் 10-12 உறுப்பினர்களுக்கு மேல் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாத நிலை!

அதே போன்றுதான் எல்லா மாநில சட்டமன்றங்களிலும் மொத்தமாக, சுத்தமாக 15 பேருக்கு மேல் நுழைய முடியாத சூழ்நிலை உருவெடுத்துள்ளது.

ஆனால் ஆளும் தேசிய முன்னணியை ஆதரிக்கிற இந்திய கட்சிகளால் பெருமளவு இந்திய வாக்காளர்களை கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஈர்க்கமுடியாத காரணத்தால் அவ்வாக்குகள் பெருமளவு எதிர்க்கட்சிகளின் – சீன – மலாய் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியிருக்கிறது.

தேசிய அரசியலில் விபத்துகள்!

தேசிய அரசியலில் இதுபோன்ற அரசியல் விபத்துக்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், நாம் எங்கே இருக்கிறோம்! எங்கேதான் போகப் போகிறோம்! என்பதைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் .

எனவே, மலேசிய அரசியலில் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் பயணத்தை மேற்கொண்டாலும்,இந்தியர்களின் நிலைபாட்டில் சரியான வெற்றிக்குரிய இலக்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.

அரசியல் என்பதற்காக யார் யாருக்காக முதுகைக் கொடுப்பதும், தோளைக் கொடுப்பதுமாக தொடர்ந்து இருந்து வருமேயானால், இறுதியில் நமது முதுகெலும்பை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும்.

எனவே, மலேசிய இந்தியர் அரசியல் வரலாற்றில், குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம் என்ற கேள்விக்கும் கேலிக்கும் உரியதாக உருவெடுக்க வேண்டுமா என்பதை மஇகா தீர்க்கமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் இந்திய சமுதாயத்தின் நிலைபாட்டை தற்போதைய தேசிய முன்னணி தேர்தலுக்காக ஒரு வேலைக்காரனாக பணியாளனாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது சில தலைவர்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் கையாள்களுக்காகவும் பயன்படப் போகிறதா? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அல்லது இன்றைய தலைமுறையின் வாழ்வுக்காகவும் அடுத்த தலைமுறையின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் திட்டமிட்டு செயல்பட போகிறது? என்பதற்குரிய இடைவெளியில் கேள்வி எதிர்த்து நிற்கிறது! என்பதை உணரப் போகிறது?

நமது பலவீனங்களால்…

பல்வேறு இடைவெளிக்குப்பிறகு, இடையிடையே காணப்படும் இடை செருகல் என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பை அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் உணரவும். அதில் குறிப்பாக மஇகாவுக்கு சற்று அதிகமாகவே பொறுப்பு இருக்கிறது.

இந்திய சமுதாயம் என்றால் என்ன?

அதற்கு தனிமொழி உண்டா?

தனி பண்பாடுதான் உண்டா?

இப்படி எதுவும் இல்லாததற்கு எப்படி தனித்துவம் இருக்க முடியும், தன்னுணர்வைத் தாக்கிப்பிடிக்க முடியும்? இந்திய நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியர்கள் என்று ஓர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறுவகையான பண்பாட்டுப் பின்னணி எதுவும் கிடையாது.

யார் இந்தியர்கள்?

இந்தியாவிலிருந்து வந்தவர்கள் யார்-யார்?

  • தமிழர்கள்
  • தெலுங்கர்கள்
  • மலையாளிகள்
  • கன்னடர்கள்
  • குஜராத்திரியர்கள்
  • பஞ்சாபியர்கள்

இப்படி இன்னும் பல பிரிவினர்கள் இருப்பினும் இவர்களுக்கு இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்களில் உண்டு! ஆட்சி அதிகாரமும் அவரவர் மாநிலத்தில் உண்டு!

இத்தகைய கட்டமைப்பில் இருந்தவர்கள் இருப்பவர்கள், மலேசியாவில் இந்தியர்கள் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறோம். அவ்வளவுதான் இதில் நமக்குரிய வடிவம் என்ன?

அப்படி அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் இங்கும் மொழிவாரியாகவும் இனவாரியாகவும் தமிழர்களைத் தவிர மற்றவர்கள் தனி இயக்கம் கண்டு சுயமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார அடிப்படையிலும், வளமான வாழ்விலும் அவர்கள் தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்கிறார்கள்.

இவர்களைப் போலவே தமிழர்களை ஒரு குடையின் கீழ் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் அகில மலாயாத் தமிழர் சங்கம் நிறுவப்பட்டு, அச்சங்கம் எழுச்சி பெற்று வளரும் வேளையில், அதனுடைய மூச்சி முடிவுக்கு வந்தது.

தமிழர்களிடையே எழுந்த பதவி சண்டையாலும் சாதியின் ஆதிக்க வெறியாலும், அச்சங்கம் முடங்கிப்போனது. அதனால் இதற்கெல்லாம் முன்மாதிரியாக மற்ற இனத்தவர்களின் இன இயக்கங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி   பெற்றன. தமிழர்கள் முகத்தில் கரியைப் பூசியும் கொண்டிருக்கின்றன.

மது பலவீனத்தில் சில பகுதிகள்!

எனவே, இதிலிருந்து அடிப்படையாகத் தெரிகிற உண்மை! இந்தியர்களாக மற்றவர்கள் இருப்பதில்லை. அவர்கள் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழர்கள் மட்டும் இன்னும் இந்தியர்களாக இருக்கிறார்கள். அல்லது அப்படி இருக்க விரும்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இந்தியர்கள் என்று அடையாளமிட்டவர்கள் எல்லாம் தங்களுக்குரிய இடம் எதுவென்று தேடி தனிக்குடித்தனம் நடத்துவதை நடப்பில் பார்க்கும்போது, தமிழர்கள் மட்டும் இன்னும் தங்களுக்குரிய தனி அடையாளத்தை யாருக்காகவோ தொலைத்து இருக்கிறார்கள் என்பது வியப்பிற்குரியதே!

இந்துக்கள் என்பவர்கள் யார்?

சரி! அதே இந்தியர்களில் பெரும் பகுதியினர் இந்துக்கள் என்று மத அடிப்படையில் அடையாளமிட்டிருக்கிறார்கள். இதில் இந்துக்கள் என்பவர்கள் யார்? அவரவர் மொழிவாரியாகவும் இனவாரியாகவும் உள்ள அடையாளத்தைத் தவிர்த்து விட்டு, சைவர்கள் – வைணவர்கள் – சமணர்கள் – அடுத்து பௌத்தவர்கள் என்கிற தனி தனி மதவழி அடையாளத்தை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

இந்துக்கள் என்கிற அடிப்படையில் மதத்தை நோக்கி நுழைந்தாலும், ஒவ்வொரு மதத்திற்குரிய வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த இந்துக்கள் என்கிற கூட்டுக்குள் அடைபட முடியாத நிர்ப்பந்தமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமளவு பார்ப்பனர்கள் ஆதிக்க செயல்பட்டின் அடிப்படையில் ஆலயங்களிலும், வழிப்பாட்டுத் தளங்களிலும் தங்களின் ஆதிக்கத்தால் கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் இந்துக்கள் ஒன்றுபட முடியாத அளவுக்கு அச்சம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தியர்கள் என்ற வீட்டிற்குள் அழைத்துப் பார்க்க நினைக்கிற ஒவ்வொரு இனத்திற்கும். ஒவ்வொரு பெருநாளும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதுமட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் தனி தனி புத்தாண்டு முத்திரைகளும் முந்தி வலுச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு தான் கிறிஸ்துவத்தை ஏற்ற மக்களுக்கும், முஸ்லீம் மதத்தை ஏற்ற மக்களுக்கும் இன்னும் பிற மதங்களை ஏற்ற மக்களுக்கும் மத அடிப்படையில் இருக்கிற ஒற்றுமை, ஒருமைப்பாடு, இந்துக்கள் என்று அடையாளமிட்டிருக்கிற மக்களிடையே வலு பெறாமல் இருக்கிறது.

எனவே! இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் இந்துக்கள் என்ற அடிப்படையிலும் ஓர் உடனபாட்டை ஒருமைப்பாட்டை அணுக்கமான இணக்கத்தை இதுவரை காணமுடியாத மக்களிடையே, அரசியல் ஒருமைப்பாட்டை காண்பது மிகவும் கடினமானதுதான் என்பதை தனித்து விளங்கிக் கொள்ளமுடியும்.

அதனால்தான் நிறைய அரசியல் கட்சிகள் பிறக்கவும், அதேவேளை வாசகர் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் நிறைய தினசரி பத்திரிகைகளும் முளைக்க காரணமாகிவிட்டன.

அதுமட்டுமல்ல! அரசியல் கட்சிகளின் நல்ல தலைமைத்துவத்தை வழங்கமுடியாத நிலையிலும், ஏகப்பட்ட மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள் என பல உருவெடுக்கவும் காரணமாகிவிட்டன.

மேலும், நாட்டில் பரவலாக இருக்கும் ஒவ்வொரு ஆலயங்களிலும் கோஷ்டி சண்டைகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகி, சங்கங்களின் பதிவகம் மிரட்டிவைக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன என்பதற்கான காரணங்கள் பின் தொடரவே செய்கின்றன.

தமிழர்கள் மீதான தாக்குதல்!

இவற்றிற்கிடையேதான் நாம் இந்தியர்கள், இந்துக்கள் என்கிற வட்டத்தை சுற்றி வந்த போதுதான் அதை அடுத்து வேறுபட்டவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். அதாவது தமிழர்கள் என்பவர்கள் யார்? இதேபோன்ற கேள்விகளை நாம் மலையாளிகளிடம் இன்னும் பிற இனத்தவரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களிடம் பல்வேறு பிரிவினைகள் இருந்தாலும், தெலுங்கர்கள் என்பதிலோ மலையாளிகள், பஞ்சாபியர்கள், என்பதிலோ பெருமளவு சாதி உள்சண்டைகள் கிளம்புவது மிக மிக குறைவாகவே இருக்கிறது. அப்படியே கிளம்பினாலும் அது பெரிய மோதலுக்கும் பகிரங்க விவாதத்திற்கும் வருவது கிடையாது.

சாதி தமிழர்கள்!

ஆனால் இதில் தமிழர்கள் பெருமளவு சாதி தமிழர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு சாதி சங்கங்களின் வழிகாட்டுதலும் தொடராக இருக்கின்றன. இதேபோன்ற நிலைபாட்டில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திரிகள் இருப்பதில்லை.

இங்கேதான் தமிழர்கள் என்பவர்கள் யார்? யாராக இருக்க முடியும்? ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு சாதியின் அடையாளம் மாட்டப்பட்டிருக்கும் பொது, பல சாதிகள் கொண்டவர்கள் தமிழர்களா? பல சாதிகள் கொண்டவர்கள் தமிழர்கள் என்றால், தமிழர் என்ற ஓர் இனத்தின் அடையாளம் எதுவாகயிருக்க முடியும்?

எனவே, மலேசியாவிற்கு வந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் இனவாரியாகவும், மொழிவாரியாகவும் தனி தனி சங்கம் தங்களுக்கென கண்ட பிறகு, அதனுள்ளே தனி தனி சாதிகளாக அவர்கள் காண்பதைத் தவிர்த்து விட்டார்கள்.

ஆனால் நமது நிலையோ இனவாரியாக அமைக்கப்பட்ட அகில மலாயாத் தமிழர் சங்கத்தை குழித்தோண்டி புதைத்து விட்டு, இன்று ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சங்கம் கண்டு, அதை நேரடியாக அரசியலில் புகுத்த எண்ணுவது, அல்லது அப்படியொரு பயணத்திற்கு உட்படுத்துவதும் எப்படிப்பட்ட ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும். அந்த வழியில் எப்படித்தான் தொடர்ந்து குளிர் காய முடியும்?

இங்குதான் மஇகா ஒட்டுமொத்தமான பதிலுக்கும் காத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்தியர் கட்சி என்ற அடையாளத்தை அக்கட்சி பெற்றிருந்தாலும் அப்படி இந்தியர்கள் என்கிற அடிப்படையில் அதற்குரிய சாதி அடையாளம் காட்டப்படும் நிலையில் உள்ளது.

இதில் தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறவர்கள்தான் சாதியின் அடையாளத்தை உள்கட்சி விவகாரத்தில் நுழைக்கிறார்கள் என்றால் மஇகா யாருக்குரிய கட்சி? என்ற கேள்வி பிறக்க நியாயம் இருக்கவே   செய்கிறது.

எனவே, மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வுக்குரிய கட்சியில், தமிழர்களின் அதிக எண்ணிக்கையால் சாதியின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் என்றால், அந்த பயணம் யாருக்கும் பயன்பட போவதில்லை.

சாதியின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய இந்தியாவின் நிலை என்ன? குறிப்பாக தமிழகத்தின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்த்தால் வளர்ச்சியை நோக்கியா நாம் பயணமாகப் போகிறோம்?

எனவே, தேசிய அரசியலில் இனவாத போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணுகிற நோக்கம் வலுப்பெற வேண்டிய நேரத்தில், அதுகுறித்து சிந்தனைகள் வலுபெற வேண்டிய இலக்கில், நாம் இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் வெளிப்படையாக புதைந்து போன சாதியின் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கத் துவங்கினால், இனியும் ஆயுதங்கள் நம்மை வீழ்த்த பொது விரோதிகளிடம் இருந்து வரவேண்டியதில்லை. நமக்குள் இருக்கும் சாதி என்கிற ஆயுதமே போதும் நம்மை வீழ்த்திக்காட்ட என்பதை நினைவில் கொண்டு அனைவரின் அரசியல் பார்வையிலும் பெரும் மாற்றம் நிகழ வேண்டியது அவசியமாகும்!

1 comment for “எங்கே போகிறது மஇகா? இந்தியர்கள் என்பவர்கள் யார்?

  1. Pon Rangan( Tamilavan)
    February 12, 2015 at 10:57 am

    “மலேசியத தமிழர் காங்கரசுக்கு” காலம் கனிந்து விட்டது.
    ____________________________________________________
    ம இ கா எனும் மலேசியன் இந்தியன் காங்கரஸ் முதன் முதலில் தமிழர் காங்கரஸ் என்ற பேரில்தான் முன் மொழியப்பட்டு பேசப்பட்டதாம். பிறகு சீக்கியர் ஆங்கில ஆளுமையில் இந்தியன் என்ற முனைப்பை தந்து மாற்றினார் என்று என் அப்பா சொன்ன கதையை நினைவு படுத்த ஆசைப்படுகிறேன்.
    எதற்கும் ஒரு அடிப்படை வரலாறு வேண்டும் ஆதலால் …என் தந்தை 1908 திண்டிவன் செஞ்சியில் பிறந்தவர். 1920 சஞ்சியில் மலாயா வந்தார். சயாமில் காடுவெட்டி மேடு தட்டி ரோடு போட்டு தப்பித்து தாய்லாந்த்தில் மறைந்து என் தாய் மாமனோடு எப்படியோ கோல சிலாங்கூர் வந்தார்.
    தமிழின தளபதிகள் தலைவர் கணபதி ,வீர சேனாவோடு பழகி தோட்ட தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி 1940 களில் ஆற்று வழியாக சபாக் பெர்ணம் தாண்டி சுங்கை பெர்ணம் தோட்டம் பிறகு குரங்காட்டி தோட்டம் உலு பெர்ணம் என்று 1984ல் இயற்கை அடைந்தார். இவர் ஒரு தொழில் சங்கவாதியாக இருந்தமையால் தமிழர்கள் சார்ந்த பல கதைகளை கூறினார். அதில் ஒன்றுதான் ம இ கா வரலாறு.
    1984ல் தமிழ் நேசனின் 60தாம் ஆண்டு மணிவிழாவில் கலந்துக்கொள்ள கோலா லம்பூர் வந்த என் தந்தை அந்த விழா முடிந்து மறைந்தார் ..அவர் விட்டு சென்ற அந்த மணிவிழா மலர் மட்டும் பத்திரமாக வைத்துள்ளேன். அதோடு சயாம் மரண இரயில் எனும் ஐயா ஆர் .சண்முகம் எழுதிய புத்தகத்தையும் ஐயா தமிழியம் மு மணிவெள்ளையன் இதழையும், உலகத தமிழர் பண்பாட்டு இயக்கத தலைவர் ஐயா ஆசிரியர் இர .ந . வீரப்பனார் வெளியிட்ட 3வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு இதழையும் இந்த கட்டுரைக்கு துணையாக எடுத்துக்கொண்டேன்.
    இந்த நினைவு முயற்சிக்குக காரணம் சமீபத்தில் 9 வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முனைவர் சுபாஷினி அவர்கள் சொன்ன நமது சொந்த கதைகளையும் ஆவணப்படுத்தினால் நமது வரலாற்று பதிவுகளை நமது பிரதிநிதிகள் பயன் படுத்த இயல்பாக இருக்கும் என்ற புத்தியில் மலேசியத தமிழர்களின் அரசியல் எங்கு கோளாரானது என்று பதிவு செய்ய வ்ரும்புகிறேன்.
    “திங்களோடும் செளும்பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்களோடும்
    மங்கு கடல் இவற்றோடும் பிறந்த
    தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”
    சத்தியமா ….அவர் ரஜூலா கப்பலில் வந்த பாடல் காட்சி கதை என்று நினைத்தேன்
    என்று என் அப்பா சொல்லும்போதெல்லாம் என் அம்மா “இவருக்கு வேற வேலை இல்லை” என்பார் ..பிறகுதான் இது பாவேந்தர் பாடல் என்று அதன் தமிழ் வில்லங்கத்தை சொன்னார்.
    இது எங்க அந்த அப்போதைய ம இ கா சிங்குகக்கு விளங்க போவுது ?இந்தியன் என்று ம இ கா மாநாடுகளை தமிழர்களை வைத்து ஆங்கில அரங்கேற்றங்கள் நடந்த ,இருந்த, இருண்டககாலங்கள் துன் சம்பந்தனுக்கு பிறகுதான் தமிழ் ஒலிக்கவும் ,ஒளிக்கவும் மாறியதாம்.ஆனால் தமிழர்கள் அதிகம் இருந்த ம இ கா களத்தில் இந்த தமிழர் காங்கரஸ் முயற்சி எழவே இல்லை என்பதுதான் நமது தமிழர்களின் ஏமாளித்தனம்.
    சம்பந்தன் முடித்து மணிக்கா அதன் பின் சாமிவேலு வந்தும் கட்சியின் தலைவர்கள்தான் தமிழர்கள் ஆனால் பிற பதவிகள் எல்லாம் இதரவ்ர்கள் கொட்டமும் கூட்டமும் ஈயாய், பேயாய் சுத்த தமிழர்கள் வெறும் ஓட்டுப்போட மட்டும் பசுக்களாக மாறினார்கள். இன்றும் இதர ஜல்லி கட்டு இன காலைகள்தாம் ம இ கா வை ஆட்சி ஆளுது. உயர் பதவிகளும் அப்படித்தான் போனது. போகிறது.
    இன்றைய தலைவர் கூட யார் என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு கமுக்க நிலையில் இன ஆதிக்கம் இந்தியன் போர்வையில் புதையல் நாடகம் நடக்கிறது.
    இன்று மலேசியத் தமிழர்களை ஏழு கட்சிகளில் இடரச்செய்த சிறுமை சாமிவேலு காலததில்தான் நடந்தது என்றால் அவரே அதை ஒத்துக்கொள்வார் ! இதில் பல மரபுக்கதைகள் உண்டு. புதுக்கவிதைகளில் இன்று ம இ கா வில் பல சீரியல்கள் ஓடினாலும் சாதிமையும், இனமும் பட்டாம் பூச்சிகலாக மின்னியல் அறையில் ஆளுமை வேட்டை நடக்கிறது.
    ம இ கா வின் 6 லட்சம் உறுபினர்களில் 95 % சகிதம் தமிழர்களின் உரிமையை வெறும் 2000 பேராளர்கள் கொத்தி குதறும் பேராண்மை மாநாடு மீண்டும் கூடபபோகிறது.
    மறுமலர்ச்சி என்று 30 ஆண்டுகளை விழுங்கிய சாமி வேலுவின் அரசியல் இறுதி காலம் வரை தமிழர்களை வளர்க்க வில்லை. ஆனால் தமிழர்களின் பொருளாதார முதலீடுகள் இந்த தமிழரல்லாத இதரவர்களின் உறவியல், குடும்பவியல் பூங்காவை பூஞ்சோலையாக்கி உள்ளதை மறுக்க முடியாது.
    மலேசியாவில் பல மாநாடுகளை கண்டுவிட்ட தலைவர்கள் தமிழன் வாழ்வியல் அல்லது அரசியல் “தரமதை” இன்னும் அடையவில்லை.!
    உலகத் தமிழ்ப்பண்பாடு மாநாட்டு மலரில் சாமிவேலு தமிழர்கள் பிறரை நம்பி கையேந்தி நிற்காமல் “சுயவுதவியில் வாழ்வோம் ” என்ற வார்த்தையை பாவித்துள்ளார். ஆனால்… நாட்டில் தமிழர்களுக்கு என்ன நடந்தது? இதில் இந்தியன் என்ற இதரவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். குறிப்பா மைக்காவை போர்த்திய இந்தியனான ஞாலிங்கம் , டோனி , நிஜம் சிங் இன்னும் பலரை பதிக்கலாம். இதில் சாமியும் ஏமாளிதான் அந்த அளவுக்கு தமிழன் என்பவர்கள் இந்தியனால் நம்பி கெட்டார்கள்.
    சரி விடியலுக்குள் புகுவோம்…இன்று மலேசியாவில் இந்தியன் பாசறையில் தமிழர்கள் ,தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற மூன்று முக்கியஸ்தர்கள் இருந்தாலும் பின்னவர்கள் இருவரும் அவரவர் இயக்கம் வைத்து அரசியல் இன ஆளுமையில் இருப்பதுபோல தமிழர்கள் இல்லை, அல்லது இருக்க இவர்கள் விடுவதில்லை என்பது புதிய வெளிச்சம்.
    இது இன பாகு பாட்டை பிரிக்க எழுதும் காகிதமல்ல கிழித்து பட்டமிட விச காற்றுமல்ல ..தமிழர்கள் தமிழனாக “அரசியல்” உணரும் காலம் கனிந்து விட்டது. அது ஒரு ராஜாங்கம். இனி ஜிங் ஜாங் போட நேரமில்லை. புதிய பொருளாதார் 60 ஆண்டுகள் 2020 முப்பது ஆண்டுகள் முடிய இன்னும் ஐந்தே ஆண்டுகள் மலேசியத தமிழர்களின் வாழ்வாதாரம் மேல்தரம் நோக்கி நடைபோட அரசியல் நகர்வில் நகருங்கள் தமிழர்களே ! நான் இன வாதி அல்ல என் இனத்தில் உரிமை விதி செய்ய உதவுபவன்.
    அவர்கள் சங்கங்கள் வைத்து அரசியல் அமுக்கு நிலை வைத்து நமது ஓட்டில் நிமிர்ந்து நிமித்திகொண்டடனர் ! ம இ கா இவர்களுக்கு திறந்த பூங்கா பூத்ததை பறித்து, காய்ந்த இலைகளை தமிழர்கள் முட்டிக்கொள்ள மூட்டம் போடுவார்கள்.
    தமிழ் நேசன் 60 ஆண்டு விழா மலரில் வந்த ஒரு கட்டுரை இப்படி எழுதுது: ” ம இ கா என்றால் இது இந்திய பேராயக்கட்சியாகவே இங்கு காலூன்றி தறிகெட்டு கிடக்கிறது. தமிழர் நெறி இழந்து சாதிகளை புணர்ந்து கிளைகளை பரப்பிக்கொண்டு “தனிததலைவா” என்று சாதி உறவு வட்டத்தில் வாழ்கிறது. இது உடைத்தெறிந்து தமிழன் என்ற இன மான உறவில் இந்த கட்சியில் தமிழர்கள் மட்டும் மனமாற்றம் உருமாற்றம் பெற வேண்டும்.
    இன்று இ காவில் இருக்கும் மதவாதிகளிடம் தமிழாக்கம் இல்லை. ஆன்மிகம என்றால் இந்தத தமிழன் அடங்குவான் என்ற பிரம மந்திரம் நம்மை ஏமாற்ற போடும் வேஷம்.தமிழனை ஒழித்தால் தானும் தன் உறவுகளும் வாழும் என்ற அழித்தல் நாடகம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமிழனல்லா தலைவர்களின் சிண்டுபிடி பணத்துவேசம் வேலை தமிழர்கள் உணர்ந்து பிணக்குகளை அகற்றி ஆளும் மதிய அரசு கட்சிகள் தமிழனை மதிக்கும் நிலையில் 2018 தேர்தலில் களம் இறங்க முன்வர வேண்டும்.
    திராவிடம் ,இந்தியம் ,இந்துமயம் பேசும் முக்கோண பித்தர்களிடம் தமிழர்கள் ம இ காவில் “தமிழன் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு முதிர்ச்சிப்பெற வேண்டுகிறோம்.
    கட்சிக்கு மலேசியத தமிழர் காங்ரெசு என்று பெயரிட்டு பாகாத்தானில் இழந்த தமிழர்களை மீடடு எடுங்கள் …”முன்னணி” உங்களை முதலில் தமிழனாகா பார்க்கும். இதுவே நமது இறுதி வாக்குமூலம். தமிழராய் எழுவோம். வரும் ஜூலை மாத ம இ கா தேர்தலில் தமிழர் பேராள பெருந் தலைவர்களை தேடுங்கள், வெல்லுங்கள் !

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...